சிறுகதை

8.13k படித்தவர்கள்
90 கருத்துகள்

'சென்னையிலிருந்து ஆஸ்திரேலியா செல்லும் சிட்னி விமானம் இன்னும் சற்று நேரத்தில் தன் ஓடுபாதையிலிருந்து புறப்படும்.' - இப்போதுதான் கேட்டாற் போலிருந்தது. அதற்குள் அலுப்பில்லாமல் ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கில் பயணம் வந்தாகிவிட்டது. உலோகப் பறவையின் உடலின் கம்பீரத்தில் அந்த அதிகாலையில் வானமகள் வெட்கத்துடன் மேகப்பொதிகளைத் தூது அனுப்பினாள். அவ்வெட்கத்தை விமானக் கண்ணாடித் தடுப்புகளின் வழியே ரசிக்கும் சுகம் அலாதியானது. 

அதை சில பயணிகள் ரசித்தார்கள். சிலர் பலவந்தமாய் வெளிச்சத்தைக் கருப்புத்துணி கொண்டு விரட்டினார்கள். சிலர் வயிற்றுக்கு ஏதாவது கிடைக்குமா என்ற ஆராய்ச்சியிலும், குட்டைப் பாவாடை அணிந்த லிப்ஸ்டிக் குறையாத பெண்களை ரகசியமாக ரசித்தபடியும் இருந்தார்கள். ரஞ்சன் வெளியே தென்பட்ட அந்தக் காட்சியை ஆர்வமாய் நோட்டமிட்டான்.

ராணுவத்தில் பணிபுரிந்து விடுமுறைக்காக ஆஸ்திரேலியா செல்லும் அவனையும் சேர்த்து அந்த விமானத்தில் குடும்பமாக, இளஞ்ஜோடிகளாக, பணிநிமித்தம் என்று மொத்தமுள்ள 186 பயணிகளில் ஆளுங்கட்சியில் அடுத்த சிஎம் என்று பெயர் அடிபடும் ஒரு பிரபல அரசியல்வாதியும் அடக்கம். ஏதோ கான்பிரன்ஸ்க்காகப் போவதாக வெல்கம் செய்த பெண்ணிடம் ஜொல்லினார். ஸாரி சொல்லினார்.

ராணுவத்தில் பணிபுரியும் ரஞ்சனுக்கு விமானப் பயணம் அத்தனை புதிது அல்ல. தந்தை ஒரு விமானி என்பதால் அந்த உலோகப் பறவையை அவன் அடிக்கடி கண்டுகளித்திருக்கிறான். பழைய பிஸ்டன் என்ஜின் பொருத்தப்பட்ட விமானமும் சரி, இந்த ஜெட் விமானமும் சரி அவன் வரையில் ஒன்றுதான்.

அவனுடைய பெட் டைம் ஸ்டோரியே அப்பாவின் சாகஸக் கதைகள்தான். ஒருமுறை விபத்து ஏற்படயிருந்து கடைசி நிமிடத்தில் அதைத் தன் திறமையாலும் சமயோசித புத்தியாலும் சீர் செய்ததற்காகப் பாராட்டும் தண்டனையும் ஒரே நேரத்தில் பெற்றவர்.

காற்றைக் கிழித்துக்கொண்டு பயணித்தது சிட்னி விமானம். காதுக்குள் இரைச்சல் இல்லாமல் சீராக, “யூ வாண்ட் எனிதிங்க் ஸார்” என்று பக்கவாட்டில் கேட்ட இனிப்பான குரலை அலட்சியம் செய்யவும் மனமில்லாமல் கண்ணாடிக்கு வெளியே தெரியும் இயற்கையிலிருந்து திரும்பவும் மனதில்லாமல், “சம் வாட்டர் ப்ளீஸ்” என்று சொல்லித் திரும்பினான்.

டாஸ்மேனியன் தீவை இன்னும் சில நிமிடங்களில் விமானம் அடைந்துவிடும். விமானம் தற்போது 700 அடி உயரத்தில் பயணிக்கிறது. மெல்லிய குரலில் அறிவிப்பு இசையோடு வழிந்தது. 

தூரத்தில் வெண் சாம்பல் நிறத்தில் ஒரே நேர்கோட்டில், காற்றை விடவும் வேகமாய்க் கூட்டம் கூட்டமாக ஏதோ வருகின்றன. என்ன அது! புள்ளியாய்த் தெரிந்தது. அருகே வரவர முழுவுருவம் பெற்றது. அவை ஹெக்ரான் பறவைகள். 

‘மை காட்…! அது விமானத்தின் மீது மோதினால்?!’ ரஞ்சன் அவசரமாக காக்பிட்டை நோக்கிச் செல்ல, 

“எஸ் ஸார். வாட் டூ யூ வாண்ட்?” வழி மறித்தாள் ஒரு ஆப்பிள் நிறப் பெண்.

மற்ற நேரமாக இருந்திருந்தால் அவளின் அழகையும் ஆங்கிலம் பேசும் நேர்த்தியையும் ரசித்திருப்பான் ரஞ்சன். ஆனால், இப்போது விமானியை எச்சரித்தாக வேண்டுமே என்ற பரபரப்பு அவனிடம் தொற்றிக்கொண்டது. 

“இட்ஸ் எமர்ஜென்ஸி. நான் விமானியை உடனே பார்க்க வேண்டும்” என்றான் பதற்றத்துடன். ‘இவன் யாராக இருக்கும், ஒருவேளை பிளைட்டை ஹைஜாக் செய்யும் நோக்கம் உள்ள தீவிரவாதியா?’ ரஞ்சனின் பக்கம் நம்பிக்கையில்லாத பார்வை ஒன்றை நீட்டியவள்,

“ஃபார் வாட் பர்ப்பஸ்?” என்றாள் அவள்.

“மேம், பறவைகள் கூட்டம் ஒன்று விமானத்தை நோக்கிப் பறந்து வருகிறது” என்று ஜன்னல் வழியாக விரல் நீட்டிட, சற்றே தூக்கம் கலைந்த பயணிகளின் பார்வை ஜன்னலை நோக்கிச் சென்றது.

அதற்குள் 'தட் தட்' என்ற சப்தம் விமானத்தின் மேல் பகுதியில். எல்லோருக்குள்ளும் ஒரு பயப் பந்து உருண்டது.

“என்னாச்சு...வாட்?” என்று ஆளாளுக்கு அவளைக் கேள்விகளால் துளைக்க அந்த நொடியைப் பயன்படுத்தி காக்பிட்டினுள் நுழைந்தான் ரஞ்சன்.

விமானி ஒருவர், “நீங்க?” என்றார்.

தன் அடையாள அட்டையை அவரிடம் காண்பித்துவிட்டு நிலைமையைச் சுருக்கமாக விவரிக்க, ஃப்ரண்ட் மிரரில் வந்து மோதிய பறவைக் கூட்டத்தைக் கண்டார்கள். 

“மை காட், இத்தனை பேர்ட்ஸ்ஸா... ஃப்ரண்ட் மிரரில் பறவையோட ரத்தமும் அதோட சிறகுகளும் இருக்கு. என்னாலே விஷன் சரியா ஸ்கேன் பண்ண முடியலை” என்று பதற்றத்துடன் சொன்னான்.

“இஸ் திஸ் ஹெட்குவார்ட்டர்ஸ்... நாங்க சிட்னி பிளைட்லருந்து பேசறோம். பிளைட்டை பறவைகள் தாக்கியிருக்கு. நாங்க கட்டுப்பாட்டை இழந்துகிட்டு வர்றோம்.” சொல்லும்போது கனெக்ஷன் கட்டானது. 

“என்ஜினில் பறவைகள் நுழைந்திருக்கலான்னு நினைக்கிறேன். அங்கிருந்து தீப்பிழம்புகள் வெளியே வருது.”

“கடவுளே!” என்ற வார்த்தை அவர் உதட்டில் பொருந்தியது. பயணிகளிடம் வந்தான் ரஞ்சன். 

“யாரும் பயப்பட வேண்டாம். பறவைகள் கூட்டம் ஒன்று விமானத்தைச் சூழ்ந்திருக்கிறது. ஆனால், விமானம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ப்ளீஸ் வியர் யுவர் சீட் பெல்ட்ஸ்” என்று பொய்யுரைத்தபடி இருந்தாள், முகம் வெளிறியிருந்த அந்தப் பெண்.

விமானத்தின் உடலில் பெரும் இரைச்சல், தன் கண்ணாடிகளில் பறவைகளின் இறக்கைகளையும், ரத்தத்தையும், சிலவற்றில் கூர்மையான அலகுடைய அதன் மூர்க்கமான பார்வைகளையும் கண்ட பயணிகள் அலறினார்கள்.

காக்பிட்டிற்குள் விரைந்தான் ரஞ்சன். “இப்போ நிலைமை எப்படியிருக்கு?” அவன் கேட்கும்போது பறவைகள் ஒவ்வொன்றாய் வந்து மோதின. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“இப்போ எங்கே பறந்துகொண்டு இருக்கிறோம்?”

“டாஸ்மேனியா தீவில்.”

“அங்கே லேண்ட் பண்ண முடியுமா?” 

“லேண்டிங் ஃபெசிலிட்டி இப்போதைக்கு இல்லை. ஏதாவது ஒரு இடத்தில் அதுவா விழுந்து நொறுங்குவதைக் காட்டிலும் நானே இறக்கிடறேன்.” விமானி தன் சமயோசித புத்தியால் விமானத்தை இறக்கினார்.

விமானம் தன் வால்பகுதியில் தீப்பற்றிக்கொண்ட அனுமாரைப் போல கீழே இறங்கியது. கூடவே எஞ்சியிருந்த பறவைகளும். சட் சட் என்று மோதி அவர்களுக்கு முன்பாகவே நிலத்தை அடைந்தன. ஒரு பாறையின் மேல் மோதி தன் பின்பக்கத்தை சிதைத்துக்கொண்டது. பயணிகளை வெளியே எடுக்கும் முயற்சி தீவிரமானது. கைக்கு அகப்பட்ட பொருட்களை எடுத்தபடி, விமானம் விழுந்த அதிர்வில் பட்ட சிராய்ப்பு, அடி எதையும் பொருட்படுத்தாமல் குதித்தார்கள் பயணிகள். 

***

ஸ்திரேலியா சென்ற சிட்னி விமானம் பறவைகள் வந்து மோதியதால் தன் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் ஆளுங்கட்சி எம்எல்ஏ பரமன் பயணித்திருக்கும் நிலையில் விமானத்திற்கு என்னவானது என்பது கேள்விக்குறியாகி உள்ளது. எல்இடியை அணைத்துவிட்டு விக்டரை அழைத்தார் ஆளுங்கட்சியான இசிமுக கட்சியின் செயலாளர் மணிசேகரன்.

“விக்டர் ஹியர்” என்றது மறுமுனை.

“நியூஸ் பார்த்தியா? விமானம் விபத்துக்குள்ளாகி இருக்குன்னு...”

“இதெல்லாம் போன்லே பேச வேண்டிய விஷயம் இல்லை மிஸ்டர்.” விக்டரின் குரலில் அநேக எச்சரிக்கைத்தனம். “பத்து மணிக்கு ரிசார்ட்டுக்கு வாங்க” என்று போனைக் கத்திரித்துவிட்டு, தன்னை அனைத்திருந்த பெண்ணிடமிருந்து தன்னைப் பிய்த்துக்கொண்டு எழுந்தான் விக்டர். 

“தேங்க்ஸ் பார் யுவர் கம்பெனி” என்றான்.

“ஒன் மோர்?”

“நோ பேபி. நாட் திஸ் நைட்” என்றவன் பர்ஸைத் திறந்து ரூபாய்த் தாள்களை வீசிவிட்டு, சோபாவில் அமர்ந்தான். அவளுக்குப் பதிலாக இப்போது அவன் கரங்களில் மொபைல் முளைத்திருந்தது.

விக்டரின் முன்னாலேயே தன் உடைகளை அணிந்துகொண்டு, செல்லமாய் அவன் கன்னத்தில் தட்டி, “பை பேபி” என்று கதவிற்கு அப்பால் நகர்ந்தாள் அவள். பண்ணை வீட்டுக்கு வெளியே தயாராக இருந்த மணிசேகரனின் ஆள் அவளைப் பார்வையாலேயே விழுங்கிவிட்டு காரைக் கிளப்பினான். வாட்ஸ்அப்பைத் திறந்த விக்டர், ‘ப்ளான் சக்ஸஸ். பட் பேர்ட்ஸ் சேப்’ என்ற தகவலைக் கண்டு தன் கை முஷ்டியைக் குத்திக்கொண்டான். 

***

டைந்து கிடந்த விமானத்தின் மேல் திரும்பியது ரஞ்சனின் பார்வை. நல்லவேளை உயிர்ச்சேதம் இல்லை. என்ஜினில் பற்றிய தீ இப்போது புகையாக மாறி வெகு நிதானமாக சிட்னியின் உடலில் பரவத் தொடங்கியது. அதற்குள் எஞ்சியிருந்த உணவுப் பொருட்களைச் சேகரித்தார்கள். தன்னுடைய தகவல் தொழில்நுட்பக் கருவியை சோதித்தபடி இருந்த விமானியை நோக்கி நடந்தான் ரஞ்சன்.

ஒரே நேரத்தில் இடம் தெரியாத தீவில் அகதிகளைப் போல் ஆக்கப்பட்டோமோ என்று தவித்தபடி இருந்தார்கள் பயணிகள். அவர்களை ஏதேதோ சொல்லி சமாளித்து வந்த பணிப் பெண்களுக்கும் அடுத்தது என்ன என்ற கேள்வி முளைத்திருந்தது.

வெள்ளையும் பார்டர் சிகப்புமாய் இருந்த விமானம் முழுக்க ஆங்காங்கே தீற்றல்களாய் பறவையின் காற்பதிவுகளும், இறக்கைகளும், ரத்தத்தீற்றல்களும். காலையில் எத்தனை ஆசையாய் இதன் முன்னே நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டான், அந்தத் தலைமைப் பயணி. இது அவரின் 100ஆவது பயணம். 

“வெரிகுட் ஜாப் ஸார். யாருக்கும் எந்த சேதமும் இல்லாம காப்பாத்திட்டீங்க.” தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் ரஞ்சன்.

“நாம இப்போ இருக்கிறது ஆஸ்திரேலியாவிற்கு தென்கிழக்குப் பகுதி. சுற்றிலும் தனித்து விடப்பட்ட தீவு. இன்னமும் 200 மீட்டர் தள்ளி ஒரு கிராமம் இருக்கு. அங்கே போனா ஏதாவது தகவல் தெரிவிக்கலாம். ஆனா, எப்படிப் போறது?” என்று அவர் கவலை தொனித்த குரலில் கூற, பயணிகள் பக்கமிருந்து ‘வீல்’ என்று ஒரு அலறல் கேட்டது. அலறல் வந்த திசையை நோக்கி ஓடினார்கள் மூவரும்.

விமானத்தில் மோதிச் சிதறிய பறவைகளின் எச்சங்களை, சிறிய நாய் அளவில் கரிய நிறமும் கூரிய பற்களையும் கொண்டிருந்த மூர்க்கமான அந்த விலங்கு சுவைத்தபடி இருக்க, ரத்த நிறத்தில் இருந்த அதன் கண்கள் சற்று தள்ளி இயற்கை உபாதைக்கென ஒதுங்கப்போன பெண்ணின் மீது பட்டு, பாயவர அவள்தான் அலறியிருக்கிறாள். அவள் பயணிகளை நோக்கி ஓடி வரவும் அவ்விலங்கும் அவளைப் பின்தொடர்ந்து வந்தது. பயங்கரமான சப்தத்தை எழுப்பி பின் தீயின் பிழம்பினைக் கண்டு அது பயந்து ஓடியது. ரஞ்சனின் உதடுகள், ‘டாஸ்மேனியன் டெவில்’ என்று உரைத்தன.

அந்தப் பெண் நடுங்கினாள். 

“தனியே எங்கேயும் போக வேண்டாம். கூடுமானவரையில் கும்பலாகவே இருங்க. இந்தத் தீவுகளில் வாழும் பென்குயின்களை வேட்டையாட டாஸ்மேனியன் டெவில் என்ற விலங்கு அவ்வப்போது வரும்” என்று சொல்லிவிட்டு அவ்விலங்கு ஓடிய இடத்தை நோக்கி நகர்ந்தான். விமானத்தில் மோதிய ஹெக்ரான் பறவைகள் கும்பலாக உயிரற்று விழுந்திருந்தன.

தன் இறகுகளையெல்லாம் இழந்த நிலையில், குற்றுயிராய் இருந்த ஒரு ஹெக்ரான் அந்நேரத்திலும் மூர்க்கமாய் ரஞ்சனை முறைத்தது. அதன் நீண்ட கழுத்தின் வளைவில் சிகப்பாய் ஓர் ஒற்றைப் புள்ளி.

ரஞ்சனின் பார்வை அந்த ஒற்றைப் புள்ளியை நோக்கிச் செல்ல, “என்ன இது?” என்றார் தலைமை விமானி.

“இது... ஒரு நானோ மைக்ரோ சிப்... ஐ திங்க் நியூரலிங்கின் 4N1.”

“அப்படின்னா?!” அவரின் முகத்தில் ஒரு புரியாத்தன்மை. கூடவே கவலையும் எட்டிப் பார்த்தது. 

“என் கெஸ்படி இந்தப் பறவைகளின் தாக்குதல் யதேச்சையாய் நடந்தது இல்லை. இது ஒரு பக்கா பிளான். வெளியிலே யாருக்கும் சந்தேகம் வராம இந்த பிளைட்டை விபத்துக்குள்ளாக்குவதுதான் திட்டமிட்டவங்களோட நோக்கம். இம்மாதிரி சிப்கள் பக்கவாதம், ஞாபக மறதி, மூளை பாதிப்பு ஏற்படறவங்களுக்கு நிவாரணம் தர 2016-ல் ஈலோன் மஸ்கின் நியூரோலிங்க்ன்னு ஒரு கம்பெனி தயார் செய்தது. சுமார் 19 மிருகங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. இந்த வருடம் மனிதர்கள் மீது இந்த சிப்களை பரிசோதிக்க FDA அங்கீகாரம் கொடுத்திருக்கு.” 

“அது எப்படி இந்தப் பறவைகளுக்குள்? இந்த பிளைட் ஆக்ஸிடெண்ட்டால் என்ன லாபம் இருக்க முடியும்?”

“அதை இனிமேல்தான் கண்டுபிடிக்கணும். இந்த மைக்ரோசிப்பைக் கொண்டு பறவைகளை வேகமாய் பறக்கவும், தாக்கவும் ட்யூன் செய்திருக்காங்க. இங்கே இருக்கிற ஒவ்வொரு பறவையின் கழுத்திலும் இது பொருத்தப்பட்டு இருக்கும். குவிக். முதல்ல இந்த மாதிரி கழுத்துப் பக்கம் சேதம் ஆகாம இருக்கிற பறவைகளைக் கண்டுபிடிங்க.”

ரஞ்சனின் பார்வை பயணிகளின் பக்கம் பரபரவென சுழன்று சற்று தள்ளி ஓரமாய் அமர்ந்திருந்த மந்திரி பரமனின் மேல் விழுந்தது. இசிமுக கட்சியின் முக்கியப் பிரமுகர். கட்சியின் செல்வாக்கு மிகுந்த அவருக்கு எதிரிகளும் அதிகம். 'அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்?' என்று அவரின் பதவிக்கு ஆசைப்படும் அன்புத் தம்பிகள் அதிகம் என்று அவரே ஒரு டிவி பேட்டியில் சொல்லியிருக்கிறார். வரும் தேர்தலில் எப்படியும் சிஎம் போஸ்ட் கன்பார்ம் என்று கட்டம் கட்டி பத்திரிகைகள் செய்தி எழுதிவரும் நிலையில், இவருக்காக இந்தத் தாக்குதல் ஒரு விபத்தைப் போல் செட் செய்யப்பட்டு இருக்குமா என்று ரஞ்சனின் மூளை யோசித்தது.

விமானிகளின் கைகளில் இப்போது சில பறவைகள். அவற்றை ரஞ்சனிடம் தந்துவிட்டு, “இதை எப்படிக் கண்டுபிடிச்சீங்க?” என்ற கேள்வியில் ஆர்வம் தொக்கி நின்றது.

“ராணுவத்தில் சில நேரங்களில் இந்த மாதிரி சிப் சுமந்த உளவுப்பறவைகள் சிக்கும். அவற்றை செயலிழக்க வைப்பதுதான் என் வேலை. இந்தப் பறவைகளின் கனெக்ட்டிங் டிவைஸ் வைச்சு நாம கன்டோண்ட்மெண்டுக்கு தகவல் தரலாம்.”

மொத்தம் இருபது முப்பது பறவைகள் கிடைக்க, அந்த டிவைஸின் அலைவரிசைகளைக் குறித்துக்கொண்டு அதனை டீஆக்டிவேட் செய்தவன், விமானி கொண்டுவந்த பெட்டியில் இருந்த தகவல் தொடர்பில் கனெக்ட் செய்தான். இப்போது அந்தப் பெட்டி உயிர்பெற்றது. மூவர் முகத்திலும் சந்தோஷம்.

***

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ணிசேகரன் தன் தொண்டையைக் கனைத்தார்.

“மூளைக்காரன்யா நீ! பாம் போடலை, ஹைஜாக் பண்ணலை, துப்பாக்கி வெடிக்கலை, தம்மாத்தூண்டு பறவையை வைச்சிட்டு, காரியத்தையே முடிச்சிட்டியே! அவனவன் பிளைட்டுக்கு என்னாச்சு? பரமனுக்கு என்னாச்சின்னு மண்டையைப் பிச்சிக்கிறான்.”

அவர் தன் கையோடு கொண்டு வந்திருந்த பொன்னிநிற திரவ பாட்டிலைத் திறந்தார். வெற்றியைக் கொண்டாட என்று அவனுக்கும் ஒரு கிளாஸ் ஊற்றினார்.

“அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு ஸார்? பேமெண்டை செட்டில் செய்திட்டா நான் கிளம்பிட்டே இருப்பேன்.” தன் முன் நீட்டப்பட்ட கிளாஸை வாங்கியவன் “உங்களுக்கு?” என்றான்.

“அட, நீ வேறப்பா, உடம்பு பூரா வியாதி இருக்கு. கட்டுப்பாடு இல்லைன்னா பரலோகம் போக வேண்டியதுதான். அப்பறம் என் சிஎம் கனவு என்னாகிறது!” அவன் சிரித்தவாறு ஒரு மிடறு அருந்தினான்.

“அதுயென்னவோ ஒரு பேரு சொன்னான் பொக்ரானோ எக்ரானோ?”

“ஹெக்ரான். கொக்குகளின் வகையைச் சேர்ந்தது.” தன் கைக்குள் அடக்கியிருந்த சின்ன சிப்பைக் காட்டினான். 

“இதுதான் என்னோட கைங்கரியம். இந்த டிவைஸ்க்கு மொத்தம் 200 சிப் ரெடி செய்திருக்கிறேன். அத்தனையும் அந்த ஹெக்ரான் பறவையோட கழுத்துப் பகுதியின் வளைவில். என்னோட பண்ணையின் முக்கியப் பறவையே இந்த ஹெக்ரான்தான்.” 

“இதுக்குப் பொதுவாகவே இரையை வேட்டையாடும் மூர்க்க குணம் இருக்கு. இந்த சிப் மூலமா அதோட மைண்டை கன்ட்ரோல் பண்ணியிருக்கேன். விமானத்தோட தரையிறங்குற நேரத்தைக் கணக்கிட்டு இந்தப் பறவையை அதன் மேல மோத ஏற்பாடு செய்தேன். அவ்வளவுதான். ஏன் பிளைட்டை மோதினேன்னு பறவை மேல யாரும் கேஸ் போடப்போறதில்லை.”

“உங்க எதிரியும் காலி, எனக்கும்...” சொல்லும்போதே விக்டரின் நெஞ்சுக்கூடு எரிந்தது.

***

தே நேரம் ரஞ்சன் வெற்றியின் சின்னமெனக் கைகளை உயர்த்தினான்.

“சிக்னல் கிடைச்சாச்சு, நம்மை மீட்க ஆஸ்திரேலியாலருந்து ஒரு விமானம் வருது.”

பயணிகளிடம் சந்தோஷம் பரவியது. ஒரு பாறையைத் தன் இருக்கையாக்கி இருந்த பரமன், எழுந்து வந்து ரஞ்சனின் கைகளைப் பற்றிக்கொண்டார். இந்த ஒரு மனிதருக்காக எத்தனை உயிர்கள் பலியாகக் காத்திருந்தன என்பதைச் சொன்னால் இவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்று தோன்றியது ரஞ்சனுக்கு. 

***

ன்ன விக்டரு... எரியுதுன்னு பார்க்கிறியா? நான்தான் சரக்குலே கொஞ்சமா பாய்சன் கலந்தேன். வேலை முடிஞ்சிதும் கூலியைக் கொடுத்து செட்டில் செய்யறா மாதிரிதான் இதுவும். என் ஸ்டைல் செட்டில்மெண்ட். எனக்கு எதையும் மிச்சம் வச்சிப் பழக்கம் இல்லை. கர்நாடகாவிலே பசவப்பாவை நீ இப்பவரைக்கும் ஆட்டிப் படைக்கிறது எனக்குத் தெரியும். நானும் அந்த வலையிலே மாட்டிக்கக் கூடாது, இல்லையா? அதான். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.”

விக்டர் சரிந்தான். கண்கள் நிலைகுத்தி உதட்டில் ஒரு ரத்தக்கோடு உடனடியாக உற்பத்தியாக, “டேய்...” என்ற குரலுக்காக காத்திருந்தவனைப் போல ஓடிவந்த மணிசேகரனின் ஆள் விக்டரை அப்புறப்படுத்தினான். 

“இந்தா செகரெட்டரி. என் பரம விரோதி பரமன் விமான விபத்துலே செத்துட்டான். நாளைக்குக் காலையிலே இரங்கல் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யணும். சின்னது பெரிசுன்னு எல்லாப் பத்திரிகையையும் கூப்பிடு. முக்கியமா அந்த சுதந்திரம் பத்திரிகையை விடாதே. அவன்தான் இசிமுக கட்சியிலே சிஎம்க்குத் தகுதியான கேன்டிடேட் பரமன்னு நாலு பக்கத்துக்கு இந்திரன் சந்திரன்னு வர்ணிச்சு கவர் ஸ்டோரி போட்டுருந்தான். மணி நாலரை ஆயிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில விடிஞ்சிடும். நான் போய் குளிச்சிட்டு வந்திடறேன்” என்று தன் அறையை நோக்கி உற்சாகமாக நகரும் அவரைக் குழப்பமாய்ப் பார்த்தான், அந்த செகரெட்டரி.

‘பரமன் செத்துட்டாரா? இவருக்கு யாரு சொன்னாங்க? ஒருவேளை...’ எந்த யோசனைக்கும் இடம் கொடுக்கவிடாமல், வாசலில் சப்தம்.

பத்திரிகைகாரர்களும், சொற்பமாய்க் கட்சியாட்களும் வெளியே நிற்க, இவர்களுக்கு நடுநாயகமாய் கமிஷனர். “அய்யா... என்ன இது?” என்று இழுத்தான்.

“மணிசேகரன் எங்கே?” கனைப்பாய் வெளிவந்த கமிஷனர் குரலில், ‘அய்யா இல்லையா?’ என்ற குழைவு போயிருக்க செகரெட்டரியின் வயிற்றில் ஒரு கலக்கம்.

“அட, ஏன்யா ஆந்தை மாதிரி முழிக்கிறே? போய் டிவியைப் போட்டுப் பாரு.. அந்தாளு வண்டவாளம் எல்லாம் தெரியும். உங்க அய்யாவை அடிப்படை உறுப்பினர் பதவியிலருந்துகூட நீக்கியாச்சு.”

45 இஞ்ச் ஸ்கீரினில் பண்ணை வீட்டில் விக்டருடன் மணிசேகரன் செய்த சதித்திட்டமும் விக்டரின் கொலையும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது, சுதந்திரம் பத்திரிகை ரிப்போர்ட்டரின் துணிகரச் செயல் என்ற தலைப்பில். செகரெட்டரி தலை தெறிக்க ஓடினான்.

“அய்யா...” என்று குளியலறை நோக்கி ஓடினான் செகரெட்டரி. “மேகம் கருக்குது மின்னல் அடிக்குது...” என்று பாடியபடியே குளித்துக் கொண்டிருந்த மணிசேகரனுக்கு அவருடைய அரசியல் வாழ்க்கையே கருத்துப் போனது தெரிய இன்னும் சில நிமிடங்கள் ஆகும்.

யார் கண்டது? மணிசேகரன் கீழே இறங்கி வரும்போது ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் விபத்திலிருந்து தப்பிவிட்டோம் என்று சந்தோஷமாக மீடியாக்களுக்கு பரமன் பேட்டி கொடுக்க ஆயத்தமாகியிருப்பதுகூட சேட்டிலைட் வழியாக அவரின் கண்களுக்கு விருந்தாகலாம். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.