சிறுகதை

7.06k படித்தவர்கள்
73 கருத்துகள்

முகம் தெரியாத அந்தப் பெண் அவ்வளவு அழகாக இருந்தாள்.

எல்லாப் பெண்களும், தங்கள் வாழ்வின் ஏதாவது ஒரு தருணத்தில் தங்கள் அழகின் உச்சநிலையை அடைவார்கள். சில பெண்கள் வெள்ளிக்கிழமை ஈரக்கூந்தல் நுனியை துண்டால், “டப்… டப்…” என்று அடித்தபடி பேசும்போது அழகின் அதிகபட்சத்தை அடைவார்கள். சிலர் ஆற்று நீரில் கொலுசணிந்த வெற்றுக்காலை மேலோட்டமாக வைத்து ஜில்லிப்பை உணர்ந்து, “ஷ்” என்று வேகமாக காலை எடுக்கும் நொடியில் தங்கள் அழகின் சிகரத்தில் ஏறுவார்கள். வேறு சிலர்  மொபைலில் தனது காதலனுடன் -1 டெசிபலில் கிசுகிசுப்பாக, “சீ, எருமைமாடு” என்று செல்லத்துடன் கொஞ்சும் விநாடியில்  தங்கள் அழகின் உச்சத்தை அடைவார்கள்

கேரளா, ஆலப்புழை மாவட்டம், சர்ச்சுக்கு அருகிலிருந்த அந்த காயல் கரையில் நான் பார்த்துக்கொண்டிருந்த பெண், தனது அழகின் உச்சத்தில் இப்போது இருக்கக்கூடும். இத்தனைக்கும் அவள் முகம்கூட எனக்கு தெரியவில்லை. பிங்க் நிறத்தில் சுடிதார் அணிந்திருந்த அவள் நீரை நோக்கி குனிந்திருந்த விதம், ஒரு சிற்பம் போல் அவ்வளவு அழகாக, நேர்த்தியாக இருந்தது. சுடிதாருக்கு மேல் தெரிந்த பொன் மஞ்சள் நிற முதுகில் வெயில் பட்டு மின்னியது.

அவள் தனது நீளமான கூந்தலை, இடப் பக்க தோளில் சரித்து முன்பக்கம் விட்டிருந்ததால் முகம் தெரியவில்லை. அவளுடைய கூந்தல் நுனி காயல் நீரைத் தழுவி மிதந்துகொண்டிருந்தது. பின்னர் அவள் கூந்தல் நுனியை கையில் எடுத்து உதறியபோது நீர்த்துளிகள் சிதறிய நொடியில் அவள் அழகின் உச்சத்தை சர்வ நிச்சயமாக தொட்டிருந்தாள். இந்த 35 வயது வாழ்க்கையில் முகத்தைப் பார்க்காமலேயே எந்தப் பெண்ணையும் நான் இப்படி ரசித்ததில்லை. யாரிவள்?

இப்போது அந்தப் பெண் கூந்தலை தூக்கி பின்னால் போட்டுவிட்டு திரும்பியவுடன் ‘கடவுளே’ என்று அதிர்ந்தேன். அது, ஜெனிஃபர். கடவுள் எந்த வயதில், எங்கு, எப்போது, எவ்வளவு ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருப்பார் என்று யாருக்கும் தெரியாது. எனக்கு இந்த வயதில் இங்கு இவ்வாறு வைத்திருந்தார். ஜெனிஃபர் குனிந்து காயல் கரையிலிருந்த ஒரு கண்ணாடித் துண்டைத் எடுத்து காயல் நீரில் எறிந்துவிட்டு திரும்பியபோது என்னைப் பார்த்துவிட்டாள். அடுத்த விநாடியே அவளும் அதிர்ந்துபோய் நின்றுவிட்டாள்.

14 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையில் கோயம்புத்தூருக்கு வழியனுப்பி வைத்த பெண்ணை, இன்று கேரளாவில், ஜெனிஃபருடைய சொந்த ஊரில், எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யும் சாத்தியமுடைய ஒரு ஆகஸ்ட் மாத காலையில் சந்திக்கிறேன். ஜெனிஃபர் என்னை நெருங்க நெருங்க, எனது கால்கள் துவண்டுகொண்டேயிருந்தன.

என்னருகில் வந்த ஜெனிஃபர் விரிந்த கண்களுடன், “தி கிரேட்டஸ்ட் சர்ப்ரைஸ் இன் மை லைஃப்” என்று எங்களுடைய 14 ஆண்டுகளுக்கு பிந்தைய உரையாடலை ஆங்கிலத்தில் ஆரம்பித்ததை நான் ரசிக்கவில்லை. ஆனால் சில இனம்புரியாத உணர்வுகளை தாய்மொழியை விட ஆங்கிலத்தில் சுலபமாக கடத்தி விடமுடிகிறது.

சில விநாடிகள் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, “எப்படி இருக்க?” என்றாள்.

நான், “நல்லாருக்கேன். நீ” என்றபோது, “ம்” என்றவள், சில விநாடிகள் ஒன்றும் பேசத் தோன்றாமல் எனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். முகத்தில் இன்னதென்று சொல்லமுடியாத கலவையான உணர்ச்சிகள்.

“நான் ஊட்டி போறப்பல்லாம் கோயம்புத்தூர்ல எங்கயாச்சும் கண்ணுல படுறியான்னு பஸ்லருந்து பாத்துகிட்டே போவேன்” என்றேன்.

இப்போது லேசாக சிரித்த ஜெனிஃபர், “நானும் எப்பவாவது சென்னை வர்றப்பல்லாம் எங்கயாச்சும் நீ கண்ணுல படுவியான்னு பாப்பேன். தமிழ்நாட்டுல எல்லாம் விட்டுட்டு, இங்க கேரளால நம்ம பாக்கணும்ன்னு இருக்கு” என்றாள்.

“அதுவும் உங்க ஊர்ல பாக்கணும்ன்னு இருக்கு” என்றேன்.

மலையாளியான ஜெனிஃபரின் சொந்த ஊர் இதுதான். இங்கு ஏற்கனவே ஒருமுறை நாங்கள் வந்திருக்கிறோம்.

தொடர்ந்து நான், “ஆலப்புழால நடக்கிற ஒரு தொடர்கதைக்கு படம் வரையணும். ரெஃபரன்ஸ்க்கு ஒரு காயல் கரை ஊரப் பாக்கணும். எனக்கு உடனே உங்க ஊரு ஞாபகம்தான் வந்துச்சு. வந்துட்டேன். மேகஸின்ஸ்ல என்னோட ட்ராயிங்ஸ எல்லாம் பாக்குறியா?” என்றேன்.

“உன் படங்கள மட்டும்தான் பாக்குறேன்” என்றபோது அவள் கண்களில் ஒரு வெளிச்சம்.

“உங்க ஊரு ரொம்ப மாறிடுச்சு. நம்ப வந்தப்ப இங்க ஒரு ஆல மரம் இருந்துச்சுல்ல?”

“ஆமாம். லாஸ்ட் இயர் மழைல அது விழுந்துடுச்சு” என்றாள்.

“நான் இங்க வரணும்ன்னு முடிவு பண்ணப்பகூட, உன்னைய இங்க பாப்பன்னு எதிர்பாக்கல. உனக்கு கல்யாணமாயி கோயம்புத்தூர்லதான் இருக்கன்னு கேள்விப்பட்டேன்.”

“அங்கதான் இருக்கேன். இங்க எங்க பெரியப்பா ஒருத்தர் கொஞ்சம் சீரியஸா இருக்காரு. அவரப் பாக்கலாம்ன்னு வந்தேன். சர்ச்சுக்கு வந்து  ரொம்ப நாளாச்சுன்னு வந்தேன்.

“சர்ச்சுக்கு போயிட்டு வந்துட்டியா?”

“இல்ல. இனிமேல்தான் போகணும்.”

“போலாமா?” என்று நான் கேட்டவுடன் பழைய நினைவில் அவள் கண்களில் சட்டென்று ஒரு மெழுகுவர்த்தி எரிந்தது. நாங்கள் சர்ச்சை நோக்கி நடந்தோம்.

அந்த சிறிய அழகிய சர்ச்சை சுற்றி மதில் சுவர் எல்லாம் இல்லை. ஆனால் மதில் சுவர் போல் வரிசையாக தென்னை மரங்களை நட்டு வைத்திருந்தது, அந்த சர்ச்சுக்கு தனி அழகைத் தந்தது.

சர்ச்சுக்கு அருகில் நெருங்கியவுடன் நான் திரும்பி ஜெனிஃபரை பார்த்தேன். ஜெனிஃபரின் கண்களில் அலை அலையாய் பழைய உணர்வுகள் பொங்கி வழிந்தன.

பல ஆண்டுகளுக்கு முன்பு நான் இதே சர்ச்சை பார்த்துவிட்டு, இதன் அழகில் பிரமித்துப்போய் சிறுகுழந்தை போல் கன்னங்களில் கை வைத்துக் கொண்டு, “கடவுளே” என்று கூவியது இன்னும் என் நினைவில் உள்ளது. அன்று எனக்கு இருபது வயது.

*****

2003, ஜுன் மாதத்தில்தான் முதன்முதலாக நான் ஜெனிஃபரைப் பார்த்தேன்.

சென்னை ஓவியக் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் சுற்றிலும் ஆர்வத்துடன் பார்த்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

அப்போது பின்னாலிருந்து, “எக்ஸ்க்யூஸ் மீ, இங்க ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் எங்க?” என்று கேட்டபோது திரும்பிய நான் அசந்துபோனேன். பார்த்த வினாடியில் என் உள்ளுக்குள் அவள் உறைந்துவிட்டாள். உலகின் தலைச்சிறந்த ஓவியன் ஒருவன் வரைந்த, அவனுடைய மிகச்சிறந்த ஓவியம் போல் இருந்தாள்.

பெண்களுக்கு 17 வயது என்பது, இளமையின் முதல் படிக்கட்டு. அழகின் உச்ச படிக்கட்டு. முகத்தில் இன்னும் கொஞ்சம் குழந்தைத்தனம் மிச்சமிருக்கும் வயது அது. அந்தக் குழந்தைத்தனம், இளமை முகத்துடன் இணையும்போது பிறக்கும் அபூர்வ அழகுடன் இருந்தாள்.

அவளை வெறுமனே தங்க நிறம் என்று சொல்வது அவள் நிறத்துக்கு இழைக்கப்படும் அநீதி. தங்கக்கட்டியில் வெயில் பட்டு மின்னுவது போல் அவள் மின்னிக்கொண்டிருந்தாள். மாசு மருவற்ற முகத்துக்கு நடுவே நட்சத்திரத்தைப் பொருத்தியது போல் அழகான புன்னகை. கழுத்தில் சிலுவை.

அவளுடைய அழகு தந்த பிரமிப்பிலிருந்து மெல்ல விடுபட்டு, “உங்க பேரு?” என்றேன்.

“ஜெனிஃபர், சுருக்கமா ஜென்னின்னு கூப்பிடுவாங்க. உங்க பேரு?” என்றாள்.

“வினோத்குமார். சுருக்கமா வினோ.”

அன்று அவ்வளவுதான் பேசினோம். ஆனால் அதன் பிறகு வந்த நாட்களில் நிறைய பேசினோம். ஜெனிஃபர் மலையாள கிறிஸ்டியன். ஜெனிஃபரின் தந்தை மத்திய அரசுப் பணியில் இருந்ததால், பிறந்ததிலிருந்து கோயம்புத்தூர்தான். எனவே மலையாள வாடையின்றி தமிழில் பேசுவாள். தமிழில் எழுதப் படிக்கவும் தெரியும்.

தினந்தோறும் பேசிப்பேசி நட்பை வளர்த்தோம்.

“உனக்கு ஏன் ஜெனிஃபர்ன்னு பேர் வச்சாங்க?”

“கடலோரக் கவிதைகள்’ படம் 1986 ஜுலை 5ஆம் தேதி ரிலீஸாச்சு. அந்த மாசக் கடைசிலதான் நான் பிறந்தேன். அப்பாவுக்கு ‘கடலோரக் கவிதைகள்’ படம் ரொம்பப் பிடிக்கும். ஜெனிஃபர்ங்கிற பேரும் அவருக்கு பிடிச்சிருந்துச்சு. அதையே எனக்கு வச்சிட்டாரு.”

*****

“பெண்கள் ஓவியக் கல்லூரில படிக்கிறது ரொம்ப ரேர்” என்றேன்.

“ஆண்களே ரேர்தான்” என்றாள்.

“ஆமாம்.”

“எங்கப்பா வேண்டாம்ன்னாரு. நான்தான் பிடிவாதமா சேர்ந்தேன்.”

“எங்க வீட்டுலயும் வேண்டாம்ன்னுதான் சொன்னாங்க. பி.ஈ. படிக்கணும்ன்னு ஒரே தகராறு. மூணு நாள் வீட்டுல சாப்பிடாம அடம் பிடிச்சு இதுல சேர்ந்தேன்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“அய்யோ, மூணு நாள் எப்படி சாப்பிடாம இருந்த?”

“மூணு நாள்ல வீட்லதான் சாப்பிடாம இருந்தேன். வெளிய போறப்ப திருட்டுத்தனமா ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு வந்துருவேன்” என்றபோது சிரித்த ஜெனிஃபர், “உன்கிட்ட ஒரு ரகசியம் சொல்லட்டுமா?” என்றாள்.

“சொல்லு.”

“ஓவியக் கல்லூரில நுழைஞ்சா எல்லாரும் ஜோல்னாப்பை, ஜிப்பா, தாடியோட சுத்திட்டிருப்பாங்கன்னு நினைச்சேன். இங்க வந்து பேண்ட் சட்டைல எல்லாரையும் பாத்தவுடனே காலேஜ் மாறி வந்துட்டோமான்னு டவுட்டாயிடுச்சு.”

சத்தமாகச் சிரித்த நான், “தமிழ் சினிமாவோட தாக்கம். எழுத்தாளருங்களுக்கும் சினிமால இதே ட்ரெஸ்தான்” என்றேன்.

*****

டுத்த ஓராண்டில் நாங்கள் நெருங்கிப் பழகி ஒரு ஆழமான நட்பு வேர் விட்டு, உள்ளுக்குள் ஜெனிஃபர் மீது எனக்கு காதலான போது நாங்கள் இரண்டாம் ஆண்டு வந்திருந்தோம். வீட்டில் தனித்திருந்த சமயங்களில்  ஒரு பெரிய ட்ராயிங் நோட்டில் ‘இல்லஸ்ட்ரேஷன்’ வகையில் ஜெனிஃபர் பேனாவை வாயில் கடித்தபடி அமர்ந்திருப்பது போல், கலர் பாக்ஸில் கலரைத் தேடுவதுபோல், ஒரு ரூபாய் காயினை தூக்கிப் போட்டுப் பிடிப்பது போல் என்று பலவிதமாக அவளை ஓவியங்களாக  வரைந்து கொண்டிருந்தேன்.

தினமும் என்னை ஜெனிஃபர் காலையில் பார்க்கும்போது, அவள் முகத்தில் ஒரு பிரத்யேக வெளிச்சம் தெரிந்தது. வகுப்பில் அவ்வப்போது அவள் திரும்பிப் பார்க்கும் பார்வையில் ஒரு பிரத்யேக பிரியம் தெரிந்தது. அவள் கோயம்புத்தூர் சென்ற தினங்களில் தவிப்புடன் எனக்கு அடிக்கடி ஃபோன் செய்வாள். ஆனாலும் என் காதலைச் சொல்லவிடாமல் அவளுடைய மதம் தடுத்தது.

ஜெனிஃபரின் அப்பாவும், அம்மாவும் அவர்களுடைய உறவினர்களில் யாராவது, வேற்று மதத்தினரை காதலித்து திருமணம் செய்துகொண்டால் அந்த திருமணங்களுக்கு செல்ல மாட்டார்களாம். அதன் பிறகு அவர்களின் உறவையே துண்டித்துவிடுவார்களாம். இந்தச் சூழ்நிலையில் ஜெனிஃபர், இந்துவான எனது காதலை ஏற்றுக்கொள்வாளா என்ற சந்தேகம் இருந்ததால் எனது காதலை அவளிடம் சொல்லவேயில்லை. நான் சொல்லி அவள் எனது காதலை ஏற்காவிட்டால், அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தி எனக்கில்லை. எனவே இப்போது சொல்லலாம், பிறகு சொல்லலாம் என்று நாட்கள் ஓடிக்கொண்டேயிருந்தன.

இரண்டாம் ஆண்டு ஃபீல்டு விசிட்டிற்கு எந்த ஊருக்குச் செல்லலாம் என்று வகுப்பில் டிஸ்கஷன் நடந்தது. பலரும் தஞ்சை பெரிய கோயிலைச் சொல்ல, ஜெனிஃபர் கேரளாவில் ஆலப்புழை மாவட்டத்திலிருக்கும், அவளுடைய சொந்த கிராமத்திற்குச் செல்லலாம் என்றவுடன் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டோம்.

*****

2004, செப்டம்பர்.

ஃபீல்டு விஸிட்டாக நாங்கள் ஆலப்புழை வந்த இரண்டாம் நாள், இந்த சர்ச்சுக்கு வந்தோம். நாங்கள் சர்ச்சுக்கு முன்பக்கம் நின்றுகொண்டு, அந்த போர்ச்சுகீசியர் காலத்து சர்ச்சை வரைந்து கொண்டிருந்தோம்.

சர்ச்சுக்கு வெளியே இருந்த தென்னை மரங்களுக்கு அருகே, புல்வெளியில் கண்ணைக் கட்டியபடி நடக்கும் ஒரு சிறுமியைப் பார்த்தவுடன் ஜெனிஃபரிடம், “அந்தப் பொண்ணு ஏன் கண்ணக் கட்டிக்கிட்டு நடக்குது?” என்றேன்.

“சொல்றேன்” என்று திரும்பிப் பார்த்த ஜெனிஃபரின் கன்னத்தில் லேசாக தீற்றலாகத் தெரிந்த பச்சை வண்ணம் அவள் அழகை கூடுதலாகக் காட்டியது.

“அம்மா, கரெக்டாப் போறனா?” என்றாள் அந்தச் சிறுமி, மலையாளத்தில் தனது அம்மாவிடம்.

“ம். நட” என்று அந்தப் பெண்மணி கூறியபோதே சிறுமி கோணலாக திரும்பி நாங்கள் இருக்கும் திசையை நோக்கி கைகளை நீட்டியபடி வந்தாள். அந்தப் பெண்மணி எங்களைப் பார்த்து வாயில் விரலை வைத்து, “உஷ்” என்பது போல் காண்பித்தாள். எங்கள் மீது மோதுவது போல் வந்த அந்தப் பெண் மீண்டும் திசைமாறி நடந்து சர்ச் முன்பிருந்த மெழுகுவத்தி பீடத்தில் மோதி நிற்க, அந்த அம்மாள் சிரித்தாள். சிறுமி தனது கண்களைக் கட்டியிருந்த கைக்குட்டையை அகற்றிப் பார்த்தாள்.

“என்னம்மா, நீ சொல்லவேண்டியதுதானே” என்று சிணுங்கினாள்.

“அதெப்படி சொல்லமுடியும்? நீயாதான் நடந்துபோகணும்” என்று கூறிவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றாள்.

“இதென்ன விளையாட்டு?” என்றேன், ஜெனிஃபரிடம்.

“விளையாட்டில்ல. இது எங்க ஊர் வேண்டுதல்.”

“வேண்டுதலா?”

“ஆமாம். வா” என்று ஸ்டேண்டில் பிரஸ்ஸை வைத்துவிட்டு ஜெனிஃபர் என்னை புல்வெளிக்கு அழைத்துச் சென்றாள்.

புல்வெளிக்கு நடுவே, கோடு இழுத்து ஐந்தடி அகலத்தில் நேராக ஒரு புல்வெளிப் பாதை இருந்தது.

“இந்தப் புல்வெளி பாதை எங்க முடியுதுன்னு பாரேன்” என்றாள் ஜெனிஃபர்.

நான் நிமிர்ந்து பார்த்தேன். ஏறத்தாழ நூறடி தள்ளி, அந்தப் பாதை முடியும் இடத்தில் பெரிதாக, கிட்டத்தட்ட முப்பதடி உயரத்தில் ஒரு பெரிய கறுப்புக் கல் சிலுவை தெரிந்தது.

“இந்த ஊருல எங்களுக்கு ஒரு பழக்கம். எதாச்சும் வேண்டிகிட்டு, கண்ணக் கட்டிக்கிட்டு இந்தப் பாதைல நேரா நடந்து போகணும். கடைசி வரைக்கும் பாதை மாறாம போய் சிலுவையத் தொட்டுட்டா,  எங்க வேண்டுதல் பலிக்கும்ன்னு நம்பிக்கை.”

“நீயும் இந்த மாதிரி செய்வியா?”

“ம். நிறைய வேண்டியிருக்கேன்.”

“பலிச்சிருக்கா?”

“முதல்ல சரியா நடக்கணுமே, முக்காவாசி தடவை தப்பா போயிடுவேன். ஆனா ஒண்ணு ரெண்டு முறை கரெக்டா நடந்து போயி பலிச்சிருக்கு” என்றாள்.

“நிஜமாவா?”

“ம். ப்ளஸ் டூ லீவுக்கு வந்திருந்தப்ப, சென்னை ஓவியக் கல்லூரில சீட் வேணும்ன்னு வேண்டிக்கிட்டு நடந்தேன். கரெக்டா நடந்து போய் சிலுவையத் தொட்டேன். வேண்டுதல் பலிச்சிருச்சு. அதுலருந்து நம்பிக்கை அதிகமாயிடுச்சு” என்றவுடன் சட்டென்று எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.

“கிறிஸ்டியன் மட்டும்தான் இப்படி வேண்டிக்கலாமா? நான் வேண்டக்கூடாதா?”

“கர்த்தருக்கு முன்னாடி எல்லாரும் ஒண்ணுதான்.”

“அப்பன்னா, நான் ஒண்ணு வேண்டிக்கப்போறேன்” என்று எனது பாக்கெட்டிலிருந்து கர்ச்சீப்பை எடுத்தேன்.

“என்ன வேண்டுதல்?”

“கரெக்டா நடந்துட்டன்னா சொல்றன்” என்று நான் ஜெனிஃபரின்  கண்களை உற்றுப் பார்த்தபடி சொல்ல, அவளுக்கு லேசாக புரிவது போல் இருந்தது.

“இந்தா, இந்தக் கர்ச்சீப்ப கட்டிவிடு” என்று கர்ச்சீப்பை அவளிடம் நீட்டினேன். கர்ச்சீப்பை கட்டிவிட்ட ஜெனிஃபர், “நான் இப்ப உன் கண்ணு முன்னாடி என் விரல நீட்டியிருக்கேன். இது எத்தனை?” என்றாள். எனக்கு ஒன்றும் தெரியவில்லை. கும்மிருட்டாக இருந்தது.

“ஒண்ணும் தெரியல” என்றேன்.

“சரி, நட” என்றாள், உற்சாகத்துடன்.

நான் மனத்திற்குள், “ஏசுவே, இன்னைக்கி நான் ஜென்னிகிட்ட என் காதல சொல்லப்போறேன். நான் கடைசி வரைக்கும் கரெக்டா நடந்துட்டன்னா ஜென்னி என் காதல ஏத்துப்பான்னு அர்த்தம்” என்று வேண்டிக் கொண்டேன்.

“ம். நட.”

“இரு, வேண்டணும்ல்ல?” என்று சிலுவையைப் போட்டுக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்.

ஒரு நிமிடம்கூட நடந்திருக்கமாட்டேன். அருகிலேயே கொலுசுச் சத்தம் ஒலிக்க வந்த ஜெனிஃபர், “போச்சு போச்சு, நில்லு” என்று கத்தினாள். நான் கர்ச்சீப்பை அவிழ்த்தேன். நான் இருபதடி தூரம் வருவதற்குள்ளேயே  பாதையிலிருந்து விலகியிருந்தேன்.

“சை” என்றேன், ஏமாற்றத்துடன்.

“பரவால்ல. என்ன வேண்டுதல்?” என்றாள்.

“அப்புறம் சொல்றேன். வா, போலாம்” என்றேன்.

ஆனால் ஜெனிஃபர் நடக்காமல் அந்த சிலுவையையும், என்னையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

“என்ன பாக்குற ஜென்னி?”

“எனக்கும் ஒரு வேண்டுதல் இருக்கு” என்றபடி என் முகத்தை உற்றுப் பார்க்க, நான் அரண்டுவிட்டேன். அந்தப் பார்வையில் இதுவரையிலும் இல்லாத ஒரு தீவிரமான பிரியமும், காதலும் தெரிந்தது. அவள் என்ன வேண்டப்போகிறாள் என்று எனக்குத் தெரிந்துவிட்டது.

‘ஒருவேளை அவள் வேண்டுதலும் நிறைவேறாவிட்டால்’ என்று நினைக்கும்போதே பயமாக இருந்தது. ‘ஆனால் ஒருவேளை சரியாக நடந்துவிட்டால், அவள் தனது காதலைச் சொல்வாள் அல்லவா’ என்று தோன்ற, “சரி” என்றேன்.

எனது கர்ச்சீப்பை வாங்கிக் கட்டிக்கொண்ட ஜெனிஃபர் உதடுகளை முணுமுணுத்து வேண்டிக்கொண்டாள். அதில், ‘வினோத்’ என்ற உச்சரிப்பை என்னால் தெளிவாக அறிந்துகொள்ளமுடிந்தது.

ஜெனிஃபர் மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். நான், “ஜென்னி, என்ன வேண்டுதல்ன்னு சொல்லமாட்டியா?” என்றேன்.

“ம்ஹும். வேண்டுதல வெளியச் சொன்னா பலிக்காது. நீ பேச்சு கொடுக்காம இரு” என்ற ஜெனிஃபர் ஒவ்வோர் அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்தாள். சிறிது தூரம் நடந்தவள், “வினோ, எவ்ளோ தூரம் வந்துருக்கேன்?” என்றாள்.

“பாதி  வந்துருக்க.”

“அவ்ளோதானா?” என்ற ஜெனிஃபர் கவனமாக நடந்தாள். ஜெனிஃபர் சீக்கிரமே பாதையை விட்டு விலகிவிடுவாள் என்று நினைத்தேன். ஆனால் ஜெனிஃபர் வெகு கவனமாக ஓர் இயந்திரம் போல் ஒவ்வோர் அடியாக எடுத்து வைத்தாள். அவள்  முக்கால்வாசி தூரத்தைக் கடந்தவுடன் எனக்குள் திடீரென்று ஒரு பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பெண்மணியும், சிறுமியும் வேகமாக எங்களை நோக்கி வந்தனர்.

அந்தச் சிறுமி, “சேச்சி, சூப்பர்” என்று கைதட்டி உற்சாகப்படுத்தினாள். ஜெனிஃபர் சந்தோஷத்துடன் சிரித்தாள். அடுத்த கணமே அவள் முகம் மிகவும் சீரியஸானது. மெல்ல நடந்து சிலுவைக்கு இருபதடி தொலைவில் வந்தவுடன் நானும் மிகவும் சீரியஸாகிவிட்டேன். அவள் சரியாக நடந்து சிலுவையைத் தொட்டுவிட்டால், நிச்சயம் என்னிடம் காதலைச் சொல்லிவிடுவாள் என்று நினைத்தபோதே உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.

இன்னும் சிறிது தூரம்தான். சிலுவைக்கு இன்னும் நான்கைந்து அடி தூரம்தான் இருந்தது. அந்தக் குழந்தை தனது இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்து, ‘ஆ’வென்று பார்த்தது. அப்போது ஜெனிஃபர் திடீரென்று லேசாக கோணலாக நடக்க, எனக்கு ‘பக்’கென்றது. தொடர்ந்து அவள் சிலுவையிலிருந்து விலகிவிலகிச் செல்ல, அது வரையிலும் ஒரு ஜுரம் போல் என் உடம்பில் ஏறியிருந்த சூடு மெல்ல இறங்க ஆரம்பித்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அடுத்த 30 விநாடிகளில் அவள் முற்றிலும் அந்தப் பாதையை விட்டு வெளியே வந்து சிலுவையைத் தாண்டிச் செல்ல, அந்தக் குழந்தை, “அவுட்” என்றது. ஜெனிஃபர் வேகமாக கர்ச்சீப் துணியைக் கழட்டினாள். சிலுவைக்கு மிக அருகில் வந்திருந்ததைப் பார்த்தவுடன் ஜெனிஃபர் முகம் மாறியது. “சை” என்று தரையில் காலை உதைத்துக்கொண்டாள். கண்கள் லேசாகக் கலங்கிவிட்டன.

அந்தச் சிறுமியின் அம்மா, “இவ்ளோ தூரம் வந்து நான் யாரையும் பாத்ததில்ல. கடைசில விட்டுட்டீயேம்மா” என்று மலையாளத்தில் கூற, ஜெனிஃபரின் முகம் அழுவது போல் மாறியது. அவர்கள் சென்றவுடன், “ஏய், பரவால்ல விடு. என்ன வேண்டுதல்?” என்றேன். “வேண்டாம். வேண்டுதல் பலிக்கல” என்ற ஜெனிஃபர் வேகமாக திரும்பி என்னைத் தாண்டி நடந்து சென்றாள். அவள் கண்களைத் துடைத்துக்கொள்வது தெரிந்தது.

அவள் வேண்டுதலில் தோற்றுவிட்டாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை. நிச்சயமாக அவள் என்னைக் காதலிக்கிறாள். கூடிய சீக்கிரம் அவளிடம் எனது காதலைச் சொல்லிவிடவேண்டும்.

ஆனால் கல்லூரிப் படிப்பு முடிந்து, அவளைக் கடைசியாக சென்ட்ரலில் ரயில் ஏற்றிவிட்ட நிமிடம் வரையிலும் சொல்லவே இல்லை.

*****

சரியாக 15 ஆண்டுகளுக்கு பிறகு, இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணமாகி, குழந்தைகள் எல்லாம் பிறந்த பிறகு இப்போதுதான் சந்திக்கிறோம்.

வானம் நன்கு இருட்டிக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் போலிருந்தது.

நான் ஜெனிஃபரிடம், “அன்னைக்கி கண்ணக் கட்டிக்கிட்டு நடந்தோமே, ஞாபகம் இருக்கா?” என்றேன்.

“ம்” என்ற ஜெனிஃபரின் முகத்தில் மெல்லிய சிரிப்பு.

அப்போது திடீரென்று அந்த எண்ணம் தோன்ற, நான், “இன்னைக்கி மறுபடியும் நடக்கலாமான்னு பாக்குறேன்” என்றவுடன் ஜெனிஃபரின் முகம் மாறியது.

“ஏய், இப்ப எதுக்கு?” என்ற ஜெனிஃபரின் வார்த்தைகளும், கண்களும் தடுமாறியது.

“அன்னைக்கிதான் வேண்டுதல் பலிக்கல. இன்னைக்காச்சும் பலிக்குதான்னு பாக்கலாம்” என்றேன்.

“என்ன வேண்டுதல்?”

“அன்னைக்கி வேண்டுனதுதான்.”

“ஏய், வேண்டாம்ப்பா” என்றாள்.

“இல்ல, மறுபடியும் உன்னை எப்ப பாப்பேனோ?” என்ற நான் என் பேண்ட் பாக்கெட்டிலிருந்த கர்ச்சீப்பை எடுத்து என் கண்களைக் கட்டிக்கொண்டேன்.

“ஆரம்பிக்கட்டுமா?” என்றேன்.

“ஒன் செகண்ட்” என்றாள் ஜெனிஃபர்

“என்ன?”

“நானும் கண்ணக் கட்டிக்கிட்டு வரேன். ரெண்டு பேரும் சேந்த மாதிரி நடக்கலாம்” என்றவுடன் நான் வேகமாக கர்ச்சீப்பைக் கழற்றினேன்.

“ஜெனிஃபர்” என்று அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். அவள் கண்கள் லேசாக கலங்கியது போல் இருந்தன.

“எதுக்கு ஜெனிஃபர்?” என்று இழுத்தேன்.

“பாப்போம்” என்ற ஜெனிஃபர் தனது துப்பட்டாவை எடுத்து கண்களைக் கட்டிக்கொண்டாள்.

“ஒன், டூ, த்ரீ” என்று சொல்லி நாங்கள் முதலடியை எடுத்து வைக்கவும், லேசாக மழை தூறவும் சரியாக இருந்தது.

நான், “ஜென்னி, பீ சீரியஸ். எவ்ளோ மழை பெஞ்சாலும் நிக்காத. ஸ்டெப்ப வேகமா எடுத்து வைக்காம, அடிப்பிரதட்சணம் மாதிரி ஒவ்வொரு அடியா எடுத்து வை” என்று கூற கொலுசுச் சத்தம் நகர்ந்தது. நானும் மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். ஜெனிஃபரின் தோள்கள் என் மீது உரசி அல்லது என் தோள்கள் அவள் மீது உரசி விலகின. நாங்கள் நடக்க நடக்க, மழை வேகமெடுத்தது. சில விநாடிகளுக்குள் மழை உக்கிரமாக பெய்ய ஆரம்பித்தது. நாங்கள் தொப்பலாக நனைந்திருந்தோம்.

“வினோ, பயங்கர மழையா இருக்கு. மழை நின்னவுடனே நடப்போமா?” என்றாள் ஜெனிஃபர்.

“நோ.”

இப்போது காலடியில் மழைநீர் ஓடுவதை என்னால் உணரமுடிந்தது. அப்போது பெரும் இடிச்சத்தம் கேட்க, “வினோ” என்று என் கையை ஜெனிஃபர் பிடித்துக்கொண்டாள். நானும் அவள் கையை இறுகப் பிடிக்க…. இருவரும் அப்படியே நின்றுவிட்டோம். தொடர்ந்து காற்று சத்தம் பயங்கரமாக கேட்க, இருவரும் ஒருவர் கையை ஒருவர் அழுத்தியபடி சில விநாடிகள் நின்றோம். பின்னர் மீண்டும் நடக்க ஆரம்பித்தோம்.

நான் மழைநீர் உதடுகளில் வழிய, “ஜென்னி, ரொம்ப நேரமாக எதுலயும் மோதிக்காம நடந்துகிட்டிருக்கோம்” என்றேன்.

“கரெக்டா நடக்கிறோமா?” என்றாள்.

“தெரியல, பாக்கலாம்” என்ற நான் அவள் கைகளை இறுகப் பிடிக்க, அவள் எனது கைவிரல்களுக்குள் தனது விரல்களைக் கோர்த்துக்கொண்டாள். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இப்போது உடம்பு தொப்பலாக நனைந்து உடம்பெல்லாம் ஜில்லிட்டுக்கொண்டிருந்தது.

“வினோ, நம்ம சரியாதான் நடக்கிறோமா?”

“தெரியல, வா” என்று நான் நடையை இன்னும் மெதுவாக்கினேன்.

இப்போது முன்பைவிட சத்தமாக இடிஇடிக்க, “வினோ” என்று கத்திய ஜெனிஃபர் சட்டென்று என் தோள் மீது சாய்ந்துகொண்டாள். அவள் தோளை ஆறுதலாக அழுத்திய நான் மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். ஜெனிஃபர் மீண்டும் தன் கையை என் கையோடு கோர்த்துக்கொண்டாள்.

காற்று வீசும் சத்தமும், மழைச்சத்தமும், தென்னை மரங்கள் காற்றில் ஆடும் சத்தமும் இணைந்து காதில் உக்கிரமாக ஒலிக்க, நாங்கள் தொடர்ந்து நடந்தோம். வினாடிகள் செல்ல செல்ல, எங்களின் நடை வேகம் குறைந்தது. ஒரு முறை ஜெனிஃபர் லேசாக வேறு திசையில் செல்ல, நான் அவள் கையைப் பிடித்து இழுத்து எனது நடையோடு இணைத்துக் கொண்டேன். அடுத்து வந்த ஒவ்வொரு நொடியும் மகா நீளமாகத் தோன்ற, சட்டென்று ஒரு கல்லில் மோதி நின்றேன். ஜெனிஃபரும் சட்டென்று நின்று, “வினோ, கால்ல ஏதோ இடிக்குது” என்றாள்.

“ஆமாம். கண்ணு கட்ட அவுப்போமா?” என்றேன்.

“ம். வினோ, எனக்கு பயமா இருக்கு” என்றாள்.

“எனக்கும்தான். பரவால்ல அவுரு” என்று கூறியபடி கர்ச்சீப்பை அவிழ்த்த நான் அதிர்ந்தேன். நாங்கள் சரியாக சிலுவையில் மோதி நின்று கொண்டிருந்தோம். பரவசத்தில் எனது உடலே வெடவெடவென்று நடுங்கியது. நான் பரபரப்புடன், “ஜென்னி” என்று திரும்பினேன். தனது இரண்டு கைகளையும் நீட்டி சிலுவையைத் தொட்டிருந்த ஜெனிஃபர், வேகமாக தனது கண்ணில் கட்டியிருந்த துப்பட்டாவை அவிழ்த்தாள். அப்போது பளீரென்று ஒரு மின்னல் அடிக்க, மின்னல் வெளிச்சத்தில் ஜெனிஃபர் தேவதை போல் தெரிந்தாள்.

தன் முன்பு சிலுவையைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியாக சிலுவையைப் பார்த்த ஜெனிஃபர், சட்டென்று தனது வாயைப் பொத்தி அழுகையை அடக்கியபடி என்னைப் பார்த்தாள். அவள் கண்களில் இந்த உலகத்தில் உள்ள அத்தனைப் பெண்களின் காதலும் தெரிந்தது. எனது கைகளை இறுகப் பிடித்தபடி, “வினோ” என்ற ஜெனிஃபர் சட்டென்று உடைந்து சத்தமாக அழ ஆரம்பித்துவிட்டாள்.

“இப்ப போய் யாருக்கும் பிரயோஜனமில்லாம, ஏன்டா நம்ம வேண்டுதல் பலிச்சது” என்ற ஜெனிஃபர் கதறிக் கதறி அழுதாள்.

“ஜென்னி, அழாத ஜென்னி” என்ற நானும் அழ, எனது கண்ணீர் மழை நீரோடு கலந்து கன்னத்தில் ஓடி, உதட்டில் வழிந்தது. ஜெனிஃபர் அப்படியே முழங்காலை மடித்து சிலுவையைப் பார்த்தாற்போல் அமர்ந்து, சிலுவையில் சாய்ந்து கதறிக் கதறி அழுதுகொண்டிருந்தாள்.

*****

ன்று இரவு ரயிலில் நான் அங்கிருந்து புறப்பட்டபோது, ஒரு பக்கம் வேதனையாகத்தான் இருந்தது. இருப்பினும் இனிமேல் எங்கள் வாழ்வில் இணைய முடியாவிட்டாலும், “ஐ லவ் யூ” என்று சொல்லாமலே, எங்கள் காதலைப் பகிர்ந்துகொண்டது, அடிமனதில் தித்தித்துக்கொண்டேயிருந்தது.

*****