அத்தியாயம் 1

9.53k படித்தவர்கள்
0 கருத்துகள்

காளியம்மனுக்கு ‘கால் நாட்டு பூஜை’ - அதாவது பெரிய கோயில்களில் கொடியேற்றுவது மாதிரியான முதல் கட்ட விழா. பழனிச்சாமி, ராமசுப்பு, குள்ளக் கத்தரிக்காய், நாட்டு வக்கீல் போன்ற முக்கியப் பிரமுகர்கள் அம்மனையே பார்த்தபடி நிற்க, கால் நடுவதற்குத் தோண்டப்பட்ட குழிகளில் இருந்து சிலர் மண்ணை வெளியில் எடுத்துப் போட்டார்கள். இரும்புக் கம்பியால் குத்தக் குத்த, மண், மண்வெட்டியால் அகற்றப்பட்டது. இங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கே சுடலைமாடன்வாசிகள் முகங்களைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தார்கள். “சீக்கிரம் சீக்கிரம்” என்றார் குள்ளக் கத்தரிக்காய்.

மாடக்கண்ணு வெட்டிய குழியில், ராமசுப்பு ஒரு பூவரசு மரக்கம்பை நட்டார். சாமியாடி தாத்தா, ஒரு கொப்பு அரச இலைகளிலும் அதன் காம்புகளிலும் சந்தனமிட்டு, குங்குமம் வைத்தார். பின்னர், அதைப் பழனிச்சாமியிடம் நீட்டினார். பழனிச்சாமி, அதைப் பயபக்தியுடன் வாங்கி, அம்மனிடம் அந்தப் பணிவோடு காட்டிவிட்டுப் பூவரசுக் கம்பில் எக்கி நின்று, அந்த அரச இலைகளை கட்டப் போனார்... பிறகு, “கம்புக்கும் சந்தனம் வைங்கடா... குங்குமம் பூசுங்கடா” என்றார். கம்பு, மஞ்சள் குங்குமமாய் மங்களமானபோது, பழனிச்சாமி, அரச இலைகளை அதில் கட்டினார். உடனே மேளச்சத்தம் பலமாய் ஒலித்தது. நாதஸ்வரம் உச்சிக் குரலுக்குப் போனது. சாமியாடி தாத்தா, வெட்டு வந்தவர் போல் தரையில் அங்குமிங்கும் புரண்டு எழுந்தார். எழுந்தவர் அப்படியே ஆடாமல் நின்றார். இப்படி கால்நடும்போது மேளம் கெட்டியாக ஒலிக்க வேண்டும்... ஒலித்தது... ஆனால் அப்படி ஒலித்தது அருகே நின்ற ‘சுடரொளிவு’ மேளமல்ல... சுடலைமாடன் கோவிலில் உள்ள ‘கணேச மேளம்’. அங்கேயும் கால் நடப்பட்டது... பழனிச்சாமியின் தம்பி அருணாசலம் கத்தினார்...

“யோவ் சாமியாடி பெரிய்யா... இந்த மேளத்துக்கும் அந்த மேளத்துக்கும் வித்தியாசம் தெரியாட்டா நீரு என்னய்யா சாமியாடி? ஏல சுடரொளிவு, கால் நட்டாச்சுல்ல... ஏமூல சும்மா இருக்க... தட்டேமுல...”

“எவ்வளவு ரூபாய் தரப் போறாகளோ... ஈரங்கிப் பய மவனுவ” என்று யோசித்துக் கொண்டிருந்த சுடரொளிவு, பீப்பி ஊத, அவன் தம்பி, தலை தவிடு பொடியாக்கப் போவது போல் அடித்தான்... மேளம் அடிப்பதற்கு முன்பே ஊத வேண்டியன் ‘ஊமைக் குழலை’ சுடரொளியின் மச்சான் இப்போது தான் சாவகாசமாகத் துடைத்தான்... சாமியாடி தாத்தா, திடீரென்று நின்ற இடத்தில் நின்றபடியே குதித்தார்... பிறகு மேளச் சத்தத்திற்கு ஏற்ப ‘டங்டங்’ என்று ஆடினார். அந்த ஆலமரத்திற்கு அப்பால், அதனால் மறைபட முடியாதபடி உள்ள அம்மன் கட்டிடத்திற்கும் கால் நாட்டப்பட்ட இடத்திற்கும் இடையே, தாத்தா ஆடினார்... தள்ளாமையில் பாதியாட்டம்... தானாக பாதியாட்டம்...

அம்மன் கோவில், ஒரு சின்ன அரண்மனை மாதிரி இருந்தது... கல் கட்டிடம்... பன்னிரண்டு படிகளேறினால் அம்மனின் முகப்பு அறைக்குப் போகலாம். அம்மன் அதற்கும் உள்ளே, மூன்றடி உயரப் பீடத்தில் இருந்தாள். மண்சிலைதான். ஆனால் வெண்கலத்தை விடக் கெட்டியான சிலை. சிலைக்கு கீழே அறுகோணத் தகடு. சட்டமிட்டுக் கண்ணாடிக்குள் வைக்கப்பட்டது. அம்மனுக்கு ஆறு கைகள்... ஒன்றில்அரிவாள், இன்னொன்றில் திரிசூலம், மற்றொன்றில் சுதர்சன சக்கரம். நான்காவது கையில் பாராங்குசம். இதர இரண்டு கரங்களும் பின்பக்கமாய் இருப்பதால் அவற்றில் என்ன உள்ளன என்பது தெரியவில்லை. இந்த ஆயுதங்கள் அனைத்தும் அசல் மண்ணாலானவைதான். ஆனால், அம்மனை கொத்திதிரி, சூலத்தி, கோணத்தி பயங்கரியாகக் காட்டுபவை. அம்மன் காலடியில் அசல் வெட்டரிவாள்... இரும்புத் திரிசூலம்... ஒரு மூலையில் கம்பீரம் காட்டியது. ஆகாயத்தில் இருந்து தொங்குவதுபோல் இரும்புக் கம்பியில் தொங்கிய இரண்டு விளக்குகள் எரி நட்சத்திரங்களாய் ஜொலித்தன.

சாமியாடி தாத்தா இன்னும் ஆடுவதை நிறுத்தவில்லை. திருமலை அவர் முன்னால் போய் நின்று ஆடினான்.

“நம்ம கால்தூசிக்குப் பொறாதவன்... இந்த செம்பட்டையான் பயலுவ... துள்ளோ துள்ளுன்னு துள்ளுதான். அவங்க அம்மன் கொடைய தடுக்க துப்புல்ல... காளியாத்தாவுக்கு ஆட்டமாம் பெரிய ஆட்டம்...”

சாமியாடி ஆடியபடியே உத்திரவு சொன்னார்...

“கவலைப்படாதே... என் மவனே... அவன் கொடை நடக்காது. என் மவன் சுடலைகிட்ட சொல்லிட்டேன். தாய்க்குப் பின்தான் தனயன்...”

“அதோ பாரு காளி... அங்கே நாலுபேரு எப்படி ஆடுறாங்கன்னு... அரச இலய எவ்வளவு உயரமா கட்டியிருக்காங்கன்னு... டேய் மாயாண்டி... நம்ம இலயயும் அவங்க கட்டுன உயரத்திற்கு கட்டுடா...”

“அச்சப்படாதடா மகனே... அவனுவ பரிதவிச்சு நிக்கப் போறானுவ பாரு... அவனுவள பாதாள சிறையில அடைக்கப் போறேன் பாரு...”

“சரி... சரி... நீரு அடைச்சது போதும்... இப்போ நிறைய வேல இருக்கு. ஆடுறத நிறுத்தும்... நீரு இப்போ ஆடுறதோட சரி கொடையில ஒம்ம பேரன்தான் ஆடணும்...”

சாமியாடி, கற்பூரத்தட்டில் உள்ள திருநீறையும், குங்குமத்தையும் எல்லோருக்கும் வெறுப்போடு இட்டுக் கொண்டிருந்தார். நெற்றியென்று திருநீறை உதட்டில் தேய்த்தார். நெற்றிப் பொட்டென்று குங்குமத்தைக் கண்ணில் தேய்த்தார்... ஒரே கத்தல். பீடி ஏசெண்ட், பயபக்தியுடன் விபூதி வாங்கினான்.

பழனிச்சாமி, அரச இலைகளை அவிழ்த்து மேலே கட்டப்போன மாயாண்டியைக் கையாட்டி நிறுத்தினார். பிறகு, கோவிலைச் சுற்றி நடைபெறும் வேலைகளில் கண்களைச் சுழல வைத்துப் பார்த்தார். அம்மன் சிலைக்கு, ‘வர்ணம்’ தீட்டுவதற்காக ஒரு குயவர் கோயிலுக்குள் போய் ஒரு கும்புடு போட்டுவிட்டு, திரைச்சீலையை இழுத்துப் போட்டார். கோவிலுக்கு எதிரே ஆலமரத்தைத் தாண்டி, ஒரு செவ்வகக் கட்டிடம். முப்பதடி உயர தகரக் கதவு போடப்பட்ட படாதி கட்டிடம். அங்கிருந்து சப்பரம். இழுத்து வெளியே கொண்டு வரப்பட்டது.

நான்கு பக்கமும் வண்டிப் பைதாக்கள் அவற்றுக்கு மேல் சதுரமான தேக்குப் பரப்பு. அதிலே ஒரு மூன்றடி உயரப்பீடம். பீடத்தின் மேல் அம்மனின் வெண்கல அவதாரம். அதற்கு மேலே விதவிதமான புராணப் பொம்மைகள். சப்பரத்தின் முன்பக்கம் இரண்டு மண்குதிரைகள். அவற்றை நிசக் குதிரைகளாய் நம்ப வைப்பதுபோல் இருபுறமும் கட்டப்பட்டு முக்கோணம் போல் ஒன்று பட்ட குறுக்குச் சங்கிலி வடம். அதைப் பிடித்துத்தான் சப்பரத்தை இழுக்கவேண்டும். இந்தச் சப்பர, சக்கரக் கம்புகளைத் தச்சர்களும் இரும்பு பட்டைகளைக் கொல்லர்களும் தட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஒருவர் இதற்குள் டிராலி மாதிரி ஒரு வண்டியைக் கொண்டு வந்தார். அதன்மேல் நெருக்கமாக நான்கு இரும்புக் குழாய்கள். அவற்றில் கருமருந்தை இட்டு நிரப்பினார். பிறகு ஒரு கயிற்றில் பிடித்த நெருப்பை ஒரு குழாயில் பற்றவைத்து விட்டு ஓடினார். அவர் ஓடுவதற்குள் பயங்கர சத்தம். டப்டப்பு என்று சத்தம். நாட்டு வக்கீல் நாராயணன் அங்கலாய்த்தார்.

“இது பழைய வேட்டு... பழைய சத்தம்... தொலவுல கேட்கிறவர்களுக்கு நம்ம கோவில் வேட்டா, அந்தப் பயலுவ கோயில் வேட்டான்னு தெரியாது. அங்க பாருங்க...”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எல்லோரும் பார்த்தார்கள்... சுடலைமாடன் கோவிலுக்கு மேல் வாணங்கள் ஆகாயச் சுடர்களாய்ப் பறந்தன. சத்தம் போட்டபடியே ஒளியிட்டன... ஒளியிட்டபடியே வளைந்தன... விதவிதமான நிறங்களில் கலர்கலரான வாணங்கள்... சுடலைக்கு பூ மாலை சொறிவதுபோல் நட்சத்திரப் பொறிகளாக கீழே விழுந்தன. ஒன்று விழும்போது, இன்னொன்று எழுந்து வானமே வாணமாகியது.

கரும்பட்டையான்கள் சோர்ந்து போனார்கள். ‘கால் நாட்டு’ விசேஷத்தில் தோற்றாலும் கதாநாயக நாளில் கெலிச்சாகணும். ஏதாவது பெரிசா செய்தாகணும் என்று அருணாசலம் நாட்டு வக்கீலைப் பார்த்துக் கேட்டார்.

“அம்மன் கொடையோட அவங்க வீடியோ படத்த ஏதோ செய்யப் போறதாய் சொன்னியே... என்னடா அது?...”

“இப்போ சொல்லமாட்டேன்... ஆனால் செய்வேன்...”

“சொல்லேமில பேய்ப்பயலே... இன்னும் மூணு நாள் தான் இருக்கு... அந்தத் தட்டிப்பயலுவ வாணவேடிக்கை காட்டி நம்மள சிறிசாக்கிட்டானுவ... நாமும் பெரிசா செய்யணும் பாரு... சொல்லு... இதுக்கு மேலயும் பவுசு செய்தா நீ எதையுமே செய்யாண்டாம்...”

“சொல்லுதேன்... ஆனால் இது வெளியில போயிட்டா வீணாயிடும். நான் தென்காசில கொஞ்ச நாளு சினிமா ஆப்பரேட்டரா இருந்தனா...”

“ஆமா... அப்புறம்... ஏதோ திருடிட்டேன்னு துரத்திட்டாங்கல்லா?”

“நாக்குக்கு எலும்பு இல்லன்னு அதுக்காவ அது எப்படின்னாலும் புரளப்படாது...”

“சரி... தப்புதான்... சொல்லுடா...”

“சொல்லுதேன்... சொல்லுதேன்... அந்தப் பயலுவ டிவி பெட்டில சின்னதா சினிமாப்படம் போடுதான். நான் பதினாறு எம்.எம். அதுதான் பாவாடையை பிரிச்சி விரிச்சால் எவ்வளவு பெரிசா இருக்குமோ அவ்வளவு பெரிய திரையில சினிமா காட்டப்போறேன்... ஒண்ணுல்ல... ரெண்டு படம்... ரொம்ப பெரிசா தெரியும்...”

“நல்ல யோசனைதான்... படம் பெரிசா தெரிஞ்சா இந்த முட்டாப் பய மவனுவ கூட்டம் சுடலைமாடன் சாமி ஆட்டத்த அந்த கோவிலுல இருந்தபடியே ஒரு கண்ணால பார்த்துக்கிட்டே மறுகண்ணால நம்ம படத்தையும் பார்த்துடப்படாது பாரு... படம் ரொம்ப பெரிசுன்னா அங்க இருந்தே பாக்கலாம் பாரு...”

“நீயே ஊர்க்காரனுக்கு சொல்லிக் கொடுப்பே போலிருக்கே...”

பழனிச்சாமி எதுவும் பேசாமல், அவர்கள் பேசுவதைக் கேட்காதது மாதிரி கேட்டு ரசித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், வெயிலை மறைப்பதுபோல் பீடித்தட்டை தலைக்கு மேல் பிடித்துக் கொண்டு வாடாப்பூ நடந்தாள். அதைப் பார்த்த பீடி ஏசெண்டு, அவள் அப்பா மாயாண்டியை உசுப்பினார்.

“பாரும் மாமா... ஒங்களுக்காவ நான் செம்பட்டையான் பொண்ணுவள நிறுத்தினேன். கையில காசு நடமாடாட்டால் சுடலை மாடனுக்கு மாலை எடுத்துப் போட முடியாது. ஒரு கோழி வெட்ட முடியாம அவஸ்தப்படட்டுமுன்னு. ஒம்ம மகள் என்னடான்னா, அந்த ரஞ்சிதம் பேச்சக் கேட்டு செம்பட்டையான் பொண்ணுவசுட சேந்துக்கிட்டு முருகன் கோவில் பக்கத்துல குட்டாம்பட்டி பீடிய சுத்துறாள். எனக்கு ஏன் கெட்ட பேரு... இவளே செம்பட்டையான் பொம்புளைகளோட சேர்ந்ததால் நானும் பழையபடி செம்பட்டையான் பொண்ணுவள என் கடைக்குப் கூப்பிடப் போறேன்... பாரும் ஒம்ம மகள் எப்படி தரை குலுங்க நடக்கான்னு... அன்னைக்கு என்னடான்னா... அப்படிப் பேசினாள்... அதோ பாரும்...”

மாயாண்டி பார்த்தார். வேக வேகமாய் நடந்தார். வாடாப்பூவுக்கு பின்னால் போய் அவள் சடையைப் பிடித்து இழுத்தார். மல்லாக்க தன் மார்பில் சாய்ந்தவளைத் தோளில் போட்டபடியே அவள் கையில் இருந்த பீடித்தட்டை இரண்டாக வளைத்து, சிதைத்துச் சின்னா பின்னப்படுத்தினார். பீடித் தூள்களை எடுத்து ஆகாயத்தை நோக்கி எறிந்தார். அந்தத் தூள்கள் தன் தலையிலேயே விழ, மகளை, தலையிலும் இடுப்பிலுமாகக் காலால் இடறினார். இதற்குள் பழனிச்சாமி ஒடிவந்து மாயாண்டியின் முதுகில் பலமாக அடித்தார்.

“முட்டாப்பயல... அவள் நம்ம பொண்ணா இருக்கலாம்... அதுக்காவ நடுத்தெருவுல அடிக்க நமக்கு உரிமை இல்ல... ஒனக்கும் இது ஆகாதுழா... நம்ம கரும்பட்டையான் குடும்பத்த தலை குனிய வைக்க நீ ஒருத்தியே போதும் போலுக்கே...”

மாயாண்டி, மகளை இழுத்துக் கொண்டே வீட்டைப் பார்த்து நடந்தார். “இனிமேல் நீ பீடி சுத்துனது போதும்... வீட்லயே கிட” என்று சொன்னபடியே மாட்டை இழுப்பதுபோல் இழுத்துக் கொண்டு போனார்... இதைப் பார்த்த ஏசெண்டு சிரித்தபோது, அத்தனை அடியிலும் இழுவையில் கத்தினாள் வாடாப்பூ.

“ஏல பொந்துப் பயலே... கோள் சொல்லி... லேசா சிரில... இல்லன்னா அப்புறம் பலமா அழப்போறே...”

மகளை இழுத்துப்போன மாயாண்டி, மீண்டும் அவளை அடித்தார். அடித்தபடியே இழுத்துக் கொண்டு போனார்.பீடி ஏசெண்டுக்கு அதற்குமேல் அங்கிருக்கப் பிடிக்கவில்லை. இந்த வாடாப்பூ இப்படிப் பேசுறதுக்கு அவள் அப்பாதான் அடிக்காரே தவிர, இந்த கரும்பட்டையான்கள் அவளைப் போய் அடிக்கல... அவள் இப்டி திட்டிட்டுப் போனாலும்... அவள அதட்டல... நம்ம சொல்லு விழலுக்கு இரச்ச நீர்... காட்ல பெய்த மழை... தூள் இல்லாத பீடி...

ஏசெண்டு வெறுப்போடு நடந்தான். சுடலைமாடன் கோயிலை ஓரங்கட்டிப் பார்த்தபடியே நடந்தான்... ஒருவேளை, அந்தக் கோயிலில் கூடி நிற்கும் செம்பட்டையான்கள் அவர்கள் பெண்களை கடையில் இருந்து விலக்கியதற்காக அடிக்க வருவார்களோ என்று பயந்தான். அவர்களோ அவனைப் பார்த்தாலும் பார்க்காதது மாதிரி தங்களுக்குள்ளே சிரித்தார்கள். அதுதான் அவனுக்குச் சங்கடமாக இருந்தது.

ஏசெண்டு புளியந்தோப்பு வழியாக நடந்தான். ரஞ்சிதம் போட்டி பீடிக்கடையைக் கொண்டு வருவாள் போலுக்கு... அப்டி வந்துட்டால் காத்துக் கருப்பிகளை குடும்பத்துக்காரன் என்ற முறையில்கூட விரட்ட முடியாது. ஒவ்வொருத்தியும் ஒரு வாடாப்பூவாய் ஆயிடுவாளுவ...

“அடடே... அலங்காரி மயினியா... என்ன இந்தப் பக்கம்?”

“நீ வாரன்னுதான் போக்குக் காட்டி வாறேன்... நீ புதுச் சினேகத்துல பழைய சினேகிதத்த மறந்துட்டே... என்னாலதான் மறக்க முடியல...”

“நம்ம சினேகிதத்த மறந்தா... ஒங்களக் கூப்புடுவனா... சோளத் தோட்டம் பக்கமா போகலாம் மயினி... போயி ரொம்ப நாளாச்சு...”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“நீ ஒருத்தன் எதுக்குவே எங்க குடும்பத்து பொம்புள பிள்ளியள துரத்திட்டே...”

“ஏதோ புத்திகெட்ட தனமாப் பண்ணிட்டேன்...”

“என் பொழப்புல வேற மண்ணள்ளிப் போட்டுட்டே...”

“நீங்க பீடி சுத்திதான் என்கிட்ட காசு வாங்கணுமா... ஒங்களுக்கு இல்லாத பணம் எனக்கு இருந்தென்ன... இல்லாட்டா என்ன...”

“போவட்டும்... அம்மன் கொடைக்கு நாங்க வீடியோ... அவங்க என்னவாம்...”

“என்கிட்டே அதெல்லாம் கேட்கப்படாது...”

அலங்காரி, ஏசெண்டின் விரல்களைப் பிடித்து, சொடக்குப் போட்டாள். பெருவிரலை அழுத்தினாள். ஏசெண்டு, அலங்காரியின் ஏசெண்டாக சுருண்டான்.

“பதினாறு எம்மம்மாம்... பெரிய துணி கட்டுவாங்களாம்... நீங்க வெறும் வீடியோ... அவங்க பதினாறு எம்.எம். படுதா...”

“அப்படியா... பதினாறுக்கு மேலயும் ஏதாவது இல்லாமலா இருக்கும்? நல்ல சமயத்துல சொல்லிட்ட... ஆமாம் கொழுந்தா... ஒங்க குடும்பத்துக்காரன்களை ஊர்ல என்ன சொல்லுதாங்க தெரியுமா... கோலவடிவுக்காக கரும்பட்டையான் கூட்டத்துல நாயி மாதிரி காத்துக் கிடக்கியளாம்...”

“அப்படித்தான் ஆயிப்போச்சு...”

“அப்படி ஆகப்படாது... கரும்பட்டையான் கூட்டம் அம்மன் கொடை முடிஞ்சதும், கோலவடிவ மெட்ராஸ்ல கொடுக்கப் போறாங்க... அப்படி கொடுத்துட்டா ஒங்க காத்துக் கருப்பன் குடும்பத்தை பொண்ணுக்கு வீங்கின்னு சொல்லப் போறனுவ... தேங்காய உருட்டிக்கிட்டு ஓடுன நாயின்னு ஆகிடாதிய...”

“நீங்க சொல்றதும் சரிதான்... எல்லாம், பற்குணத்தால வந்த வினை... இப்போ என்ன செய்யலாம்...”

“இப்பவும் லேட்டுடல்ல... அம்மன் கொடைக்கு முன்னயே கோலவடிவுதான் பொண்ணு... அக்கினிராசாதான் மாப்பிள்ளன்னு ஒரு ஏற்பாடு செய்துடுங்க. இல்லாட்டா ஊரு ஒங்கள இளப்பமாய் நெனைக்கும்...”

“வேணுமுன்னால் பாருங்க மயினி... ஒரு நாள் மட்டும் பொறுங்க... நாளைக்கே தெரியும்... கோலவடிவு பொண்ணு... அக்கினிராசா மாப்பிள்ள... இந்த ஆடில ஏற்பாடு... வார ஆவணில கல்யாணம்... இப்பவே போயி பற்குணத்தையும், ராமய்யாவையும் உலுக்குறேன் பாருங்க...”

“நல்ல காரியம் நடந்தா சரிதான்...”

அலங்காரி, குலவையிட்டாள் - கொக்கரக்கோ என்பது மாதிரி.

-----------

__தொடரும்....