அத்தியாயம் 1

371.47k படித்தவர்கள்
70 கருத்துகள்

ண்ண விளக்குகளால் குரோட்டன்ஸ் செடிகள் மின்னிக் கொண்டிருந்தன. வட்ட வடிவமான மேஜைகளும் அதைச் சுற்றி நான்கு சேர்களுமாய் தோட்டம் முழுவதும் போடப்பட்டிருந்தது. தோட்டத்தின் முகப்பில் அகன்றிருந்த போர்டிகோ முழுவதும் கார்கள் வந்து நிற்க ஆரம்பித்தன. மெல்ல மெல்ல விருந்தினரின் வருகையால் தோட்டம் முழுவதும் நிரம்பிவிட்டது.

வந்திருந்த விருந்தினரை வரவேற்றுக்கொண்டிருந்த ராமநாதன், கிரீம் கலரில் கோட்டும் சூட்டும் அணிந்திருந்தார். தலையில் முன்பக்கமும் காதோரமும் நரை தெரிந்தது. 

அவர் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த சுகன்யா கூந்தலை நாகரிகமாய் கொண்டையிட்டிருந்தாள். கொண்டையில் அலங்காரமாய் ஆங்காங்கே வெண் முத்துக்கள் செருகப்பட்டிருந்தன. வெளிர் நீலத்தில் பிரிண்டட் புடவை உடுத்தியிருந்தாள். சேலையிலேயே வெட்டி மிக நவீனமாய் தைக்கப்பட்டிருந்த ஜாக்கெட் அணிந்திருந்தாள். உள்ளங் கழுத்தில் வட்டமாய் மூன்று வரிசைகள் சேர்ந்து கோர்த்தது போலிருந்த வைரமாலை. காதுகளில் அதற்கு இணையாக வட்ட வடிவாய் கீழ்புறம் மட்டும் வரிசை கட்டப்பட்டிருந்த வைரக்கற்கள் பதிக்கப் பட்ட தோடுகள். வலது கையில் வைரமும், பிளாட்டினமும் சேர்ந்த வளையல்கள். இடது கையில் ராமநாதனுடன் சென்ற மாதம் ஸ்விட்சர்லாந்து போயிருந்தபோது வாங்கி வந்திருந்த வைரக்கற்களே முற்களாகவும், மணிகாட்டும் எண்களாகவும் பதிக்கப்பட்ட தங்க செயின் போட்ட கைக்கடிகாரம். அவளின் ஒவ்வொரு அசைவிலும் வைரக்கற்கள் ஒளியை அள்ளித் தெளித்தன.

ராமநாதனின் கையைக் குலுக்கிக்கொண்டிருந்த சம்பந்தம், "என்ன மிஸ்டர் ராமநாதன்... உங்களுக்குத்தான் வயது ஏறுகிறது. ஆனால், உங்கள் வொஃய்பிற்கு வயது குறைந்துகொண்டே போவது போலிருக்கிறதே… எப்படி?" என்றார்.

அவர் அருகில் நின்றுகொண்டிருந்த அவர் மனைவி அவரை முறைத்தாள். அதைக் கவனிக்காதது போல் நாசூக்காய் சிரித்த சுகன்யா, "தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமெண்ட்..." என்று சம்பந்தத்திடம் கூறினாள்.

'பக்கத்தில் நின்றுகொண்டிருக்கிற என்னைப் பார்த்து ஒரு வார்த்தை பேசுகிறாளா பார்' பொருமிக்கொண்டாள் சம்பந்தத்தின் மனைவி.

அவர்கள் இருவரும் நகர்ந்ததும்,

"எல்லோரும் உன் மேல் கண் போடுகிறார்கள் பார்..." என்றபடி மனைவியின் தோளைச் சுற்றிக் கை போட்டுக்கொண்டார் ராமநாதன்.

"என்ன மாதிரியான வார்த்தைகள் இது...? ஐ டோண்ட் லைக் திஸ்..." சுகன்யா முகம் சுளித்தாள்.

"ஸாரி… ஸாரி… எல்லோருக்கும் என்மேல் பொறாமை. என் மேல் கண் போடுகிறார்கள்... போதுமா..." ராமநாதன் சிரித்தார்.

"உங்கள் மேல் பொறாமைப்படாமல் என்ன செய்வார்கள்? பெரிய பிஸினெஸ்மேன்... தொட்டதெல்லாம் சக்ஸஸ் ஆகிறது. மற்றவர்கள் உங்களைப் பார்த்துப் பொறாமைப்படுவதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது?" சுகன்யா பெருமையுடன் கணவனைப் பார்த்தாள்.

"அதற்கு மட்டும் பொறாமைப்பட்டால் பரவாயில்லையே... பொண்டாட்டி, பிள்ளையைப் பார்த்தும் பொறாமைப்படுகிறார்களே..." ராமநாதன் கண் சிமிட்டினார்.

"போதுமே... என்னைக் கிண்டல் பண்ணுவதென்றால் உங்களுக்கு அல்வா சாப்பிட்டது மாதிரியாயிற்றே..." சுகன்யா சிணுங்கினாள்.

"உன்னைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அல்வா சாப்பிட்டது மாதிரிதான். ஆனால், கிண்டல் பண்ணுகிறேன்னு மட்டும் சொல்லாதே. இந்த வயதிலும் இவ்வளவு அழகாய் நீ இருக்கிறதைப் பார்த்து எனக்கு எவ்வளவு பெருமை தெரியுமா? உன்னையும் ஹரியையும் பார்ப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா...?"

"என்ன சொல்கிறார்களாம்?"

"அக்கா, தம்பியென்று சொல்கிறார்களாம்..."

"என் பிள்ளை… என் பிள்ளைதான்... நான் அவனுக்கு அம்மாவாக இருப்பதில்தான் எனக்குப் பெருமை. அக்காவென்று விளையாட்டுக்குக் கூடச் சொல்லாதீர்கள்."

சுகன்யாவின் முகம் கோபத்தில் சிவந்தது. அப்போது வந்து ராமநாதனுடன் கைகுலுக்கிய அவரது நண்பர் ஒருவர்,

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

"என்ன மிஸஸ் ராமநாதன்... கோபமாய் இருக்கிறீர்கள் போல. பட்… கோபத்திலும் நீங்கள் அழகுதான். வயது குறையும் வரம் வாங்கி வந்திருக்கிறீர்களா? யு ஆர் ஸோ லக்கி ராமநாதன்..." என்று கூறிவிட்டுப் போக, ராமநாதன் நமுட்டுச் சிரிப்புடன் மனைவியைப் பார்த்தார். செய்வதறியாது அவள் முகம் திருப்பிக்கொண்டாள்.

மேடை நாகரிகம் என்பதைப் போல இந்த மாதிரியான அசட்டுப் பாராட்டுக்களை கண்டுகொள்ளாமல் சிரிக்க வேண்டியது 'பார்ட்டி நாகரிகம்.' மேல்தட்டு மக்களின் பார்ட்டிகளில் இதுபோன்ற பாராட்டுகள் சகஜம். அதைப் பெரிது பண்ணாமல் சிரித்துக்கொண்டே போய்விட வேண்டும்.

சுகன்யா மற்ற நாள்களாய் இருந்தால் அப்படிப் போயிருப்பாள்தான். ஆனால், இன்று அவள் வாழ்க்கையிலேயே அதிமுக்கியமான நாள். அவர்களது ஒரே மகன் ஹரிஹரனின் திருமண நிச்சயதார்த்த விழா நடக்கப் போகும் நாள். மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கனகசபாரத்தினத்தின் ஒரே மகள் தீபாவை, ஹரிஹரனுக்கு மணம் செய்விக்கப் போவதை உறவினர், நண்பர்கள் வட்டாராத்தில் அறிவிக்கப் போகும் நாள்.

திருமண நிச்சயதார்த்தத்தை ஒவ்வொருவரும் அவரவர் வழக்கப்படியும், முறைப்படியும் செய்வார்கள். பாண்டிச்சேரியில் ராம் கிரானைட் எக்ஸ்போர்ட் கம்பெனியும், சென்னையில் ஹரி இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் கம்பெனியும் வைத்திருக்கும்... பாண்டிச்சேரியில் மிகப்பெரிய மாளிகையைக் கடலோரமாய் கட்டி வசிக்கும் ராமநாதனது குடும்பம் நிச்சயம் செய்யும் முறை வேறானது.

எல்லோரையும் விருந்துக்கு அழைத்து தோட்டத்து மூலையில் சிறு மேடை போட்டு, அதில் மைக்கில் விவரம் சொல்லி... ஹரிஹரன், தீபாவின் கையில் வைர மோதிரம் போட வேண்டும். அதற்காகத்தான் விருந்தினர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். ராமநாதனும் சுகன்யாவும் வரவேற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நன்னாளின்போது அவர்களது மகன், வருங்கால மருமகளின் அழகைப் புகழ்வதைவிட்டு விட்டு, சுகன்யாவின் அழகைப் புகழ்ந்தால் அவளுக்கு கோபம் வராமல் என்ன செய்யும்...?

"ஈஸி டார்லிங்... இன்றைக்கு நம் பிள்ளையின் மேரேஜ் என்கேஜ்மெண்ட். இன்றைக்கு போய் முகம் வாடி நிற்கலாமா? சிரித்த முகமாய் இரு... பெண்களின் அழகைப் புகழ்ந்தால் அவர்கள் சந்தோசம்தானே பட வேண்டும்? முகத்தை ஏன் தூக்கி வைத்துக்கொள்ள வேண்டும்?" ராமநாதன் மனைவியைச் சமாதானம் செய்ய முயன்றார்.

"ச்சு... இந்த டெக்னிக்கையே இன்னும் எத்தனை நாள் ஃபாலோ பண்ணப் போகிறீர்கள்? பெண்களெல்லாம் ஆண் குலத்திடம் வந்து எங்கள் அழகை புகழுங்களென்று கேட்டோமா? அது என்ன சொல்லி வைத்தது போல் எல்லோரும் என் வயதைக் குறைத்தே சொல்கிறீர்கள்? வயது ஆனால் என்ன..? கிழவியாக வேண்டி வந்தால் ஆகிவிட வேண்டியதுதானே… அதனால் எங்களுக்கு என்ன குறை வந்துவிடப் போகிறது? நூறு வயதானாலும் மனதில் இளமையுணர்வுடன் ஆண்களால் இருக்க முடிகின்றபோது பெண்களால் முடியாதா? அந்தந்த வயதுக்கேற்ற முறையில் பாராட்டக் கற்றுக்கொள்ளுங்கள். இந்த வயதிலும் எவ்வளவு ஆக்டிவாக இருக்கிறீர்கள் என்று பாராட்டினால் ஏற்றுக்கொள்ளலாம். ஐம்பது வயதுப் பெண்ணிடம் போய் நீங்கள் பதினாறு வயதுப் பெண்போல் இருக்கிறீர்கள் என்று சொன்னால் அவள் மகிழ்ந்துவிடுவாள் என்று எந்தக் கணக்கில் சொல்கிறீர்கள்? ஐ டோண்ட் லைக் இட்…"

"ஓகே… ஓகே... ஐ அக்ரி வித் யுவர் வோர்ட்ஸ். நம் வருங்கால மருமகளும் அவளுடைய பேரண்ட்ஸும் வந்துவிட்டார்கள் பார். வா... அவர்களை ரிஸீவ் பண்ணப் போகலாம்..."

மிக விலையுயர்ந்த வெளிநாட்டு கார் ஒன்று வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. அதன் கதவு திறந்து ராமநாதனின் வயதுடைய மனிதரும்... அவருடைய மனைவியும் இறங்கினார்கள்.

"வெல்கம் மிஸ்டர் சபாரத்தினம் அண்ட் மிஸஸ் சபாரத்தினம். வேர் இஸ் அவர் டாட்டர் இன் லா...?"

இறங்கிய கனகசபாரத்தினத்தின் இரு கரங்களையும் பிடித்து வரவேற்ற ராமநாதன் வினவினார்.

சுகன்யா மரியாதையோடு கனகசபாராத்தினத்தின் மனைவி மேகலாவை கரம் பிடித்து வரவேற்றாள்.

கார் கதவு திறந்தது. ஒய்யாரமாய் ஒருமுறை எல்லோரின் மீதும் பார்வையைச் சுழல விட்டபடி ஏதோ தேசத்தின் இளவரசி போல் தீபா இறங்கினாள்.

கனகசபாரத்தினம் வெந்நிறத்தில் கோட் சூட் அணிந்திருக்க, மேகலா காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் வைரங்களோடு ஒளிர்ந்தாள்.

அன்றைய விழாவின் கதாநாயகியான தீபா, பொன்நிறம் கலந்த உடைத்த பாசிப்பருப்பின் வண்ணத்தில் பொடியாய் வெள்ளைக் கற்கள் வைத்துத் தைக்கப்பட்டிருந்த சல்வாரில் இருந்தாள்.

கூந்தலை இன்றைய நாகரிகப்படி விரித்து விட்டிந்தாள். கழுத்தில் ஒளிர்ந்த பட்டையான வைர நெக்லஸின் ஒளி கண்களைக் கவர்ந்தது. கைகளில் வைரங்களும், பிளாட்டினமும் கலந்த வளையல்கள், பார்வைக்கு இந்திப் பட ஹீரோயின் காத்ரீனா கைப்பைப் போல் ஜாடையில் இளமையாக அழகாக இருந்தாள். அவள் கண்களில் ஓர் கர்வம் பிரதிபலித்தது. அது கடலளவு சொத்துக்களையுடைய கனகசபாரத்தினத்தின் ஒரே வாரிசு என்பதால் இருக்கலாம். அவளது அழகால் இருக்கலாம்… எதுவாக இருந்தாலும் அவளது நடையுடை பாவனைகள் அனைத்திலும் ஓர் அலட்சியம் தென்பட்டது. எவரையும் பொருட்டாக நினைக்காத மனோபாவம் வெளிப்பட்டது.

"ஹாய் தீபா..." என்று இருகரம் விரித்த சுகன்யாவிடமிருந்து நாசுக்காய் விலகி விருந்தினர் கூட்டத்தை நோக்கி நடந்தாள் அவள்.

சுகன்யாவின் முகம் அடிபட்டது போல் கன்றிவிட்டது. உயிருக்குயிரான ஒரே மகனின் வருங்கால மனைவி… அவளது வருங்கால மருமகள் என்ற பாசத்துடன் மகளில்லாத குறையைத் தீர்க்க வந்திருக்கும் மருமகள் என்று ஆசையுடன் அழைத்தால் அவள் இப்படி விலகிப் போகிறாளே...!

கலக்கத்துடன் கணவனை ஏறிட்டுப் பார்த்தாள். இமைகளை மூடித் திறந்து சங்கேதமாய் மனைவியை அமைதிப்படுத்தினார் ராமநாதன்.

மகளின் செயலைக் கவனிக்காதவர்கள் போல் கனகசபாரத்தினம் தம்பதிகள் ராமநாதனுடனும், மேகலாவுடனும் பேச ஆரம்பித்தனர். வேறு வழியின்றி நாகரீகம் கருதி அவர்களுடன் பேசியபடி அவர்களை அழைத்துச் சென்று அமரவைத்தனர் ராமநாதன் தம்பதிகள்.

"டாட்… வேர் இஸ் ஹரி...?" தீபா, கனகசபாரத்தினத்திடம் வினவினாள்.

"யெஸ்... நானே கேட்க வேண்டுமென்று நினைத்தேன். வேர் இஸ் யுவர் சன்?" கனகசபாரத்தினம் ராமநாதனிடம் வினவினார்.

"ஹி வில் கம்..." ராமநாதன் சங்கடத்துடன் பங்களா வாசலைப் பார்த்தபடி சொன்னார்.

"ம்ம்… திஸ் இஸ் ஹிஸ் மேரேஜ் எங்கேஜ்மெண்ட் பங்சன். இதற்கு வராமல் இதைவிட அப்படியென்ன முக்கிய வேலையில் இருக்கிறார்?" கனகசபாரத்தினத்தின் குத்தலான கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் ராமநாதன் கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.

'இதைவிட வேறென்ன முக்கிய வேலை?'

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

*****

ங்கேயென்று வினவப்பட்ட ஹரிஹரன், அப்போது பாண்டிச்சேரியின் அழகிய கடற்கரையோரம் உயரமாய் போடப்பட்டிருந்த கற்களின் மேல் நின்றுகொண்டு கடலை வெறித்துக் கொண்டிருந்தான்.

அவனது செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். ராமநாதனின் எண் ஒளிர்ந்தது. பேசினான்.

"யெஸ் டாட்..."

"வேர் ஆர் யு?"

"இன் திஸ் வோர்ல்டு..."

"ச்சு… அபத்தமாய் பேசாதே ஹரி. இன்றைக்கு என்ன நாள் என்பது தெரியுமா? உன் மேரேஜ் என்கேஜ்மெண்ட் நடக்கப் போகும் நாள்."

"ஸோ வாட்?"

"என்னடா ஹரி இப்படிக் கேட்கிறாய்? இங்கே உன்னைக் காணோமென்று கேள்வி கேட்பவர்களுக்குப் பதில் சொல்லி முடியவில்லை. உன் அம்மா கவலைப்படுகிறாள். ப்ளீஸ் கம் இம்மீடியட்லி மை டியர் சன்..."

"எதற்காக வரவேண்டும்?"

"உன் திருமணத்தை நிச்சயம் செய்ய..."

"அதற்கு நான் எதற்கு? நீங்களும் பெண்ணைப் பெற்றவர்களும்தானே மேரேஜை முடிவு பண்ணினீர்கள்? நிச்சயத்தையும் நீங்களே பண்ணி முடியுங்கள். என்னை ஏன் கூப்பிடுகிறீர்கள்? எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்லை. வர முடியாது..."

"டோண்ட் டாக் ரப்பிஷ் ஹரி... சபாரத்தினம் மும்பையில் கொடிகட்டிப் பறக்கிற பிஸினஸ் மேன். உன் பாரின் எக்ஸ்போர்ட் பிஸினெஸிற்கு இந்தக் கல்யாணம் மிக உதவி செய்யும்."

"ஸோ... நீங்கள் கல்யாணம் பேசி முடிக்கவில்லை. பிஸினஸ் பேசி முடித்திருக்கிறீர்கள்..."

"எதுவாக இருந்தாலும் இப்போது நீ இங்கே வரவேண்டியது மிகவும் முக்கியம் ஹரி. எங்களின் மரியாதை இப்போது உன் கையில்தான் இருக்கிறது."

தொடர்ந்து அவர் பேச முடியாமல் தன் செல்போனை அணைத்தான் ஹரிஹரன்.

கரையேறத் துடித்து ஓடிவந்து கரை கடக்க முடியாமல் கற்களில் மோதிச் சிதறித் திரும்பும் அலைகளையே பார்த்தான். மீண்டும் போன் ஒலிக்க, செல்போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி பாக்கெட்டில் போட்டவன் கரையோரக் கற்களின் மீது வேகமாய் கோபத்தோடு பூட்ஸ் காலால் உதைத்தான்.

(தொடரும்…)