அத்தியாயம் 1

10.09k படித்தவர்கள்
0 கருத்துகள்

பிரகாரம், கொடிக்கம்பம், பலிபீடம், கருவறை என்று ஆகம விதிப்படி அமைந்த ஆலயமல்ல, என்றாலும் ஆத்மார்ந்த விதிப்படி அமைக்கப்பட்டது போல ஜீவகளை சொட்டும் சிறு கோவில். தனிப்பெரும் ஜோதியான அருட்பெரும் ஜோதியே, அங்கே மூன்று பக்கம் மலையாகவும் முன்பக்கம் அருவியாகவும், ஒரு பக்கம் சமவெளிக்கு இட்டுச்செல்லும் மலைச்சரிவுப் பாதை யாகவும், மரம் செடி கொடிகளாகவும், மண்மேல் முகிழ்த்த தாவர சங்கமமாகவும், விண்மேல் முளைத்த வெள்ளிகளாகவும், ஒன்றில் பலதாய், பலதில் ஒன்றாய், தோன்றுவது அறியாத தோற்றங்காட்டி நிற்பது போல, நடப்பதுபோல, நிலையின்றி தாவுதல் போல, ஆட்சி செலுத்துவதாய் தோன்றும். 

இயல்பாக ஏற்பட்ட அந்த மலைக்குகையில் உள்ள லிங்கம், எப்போது ஸ்தாபிக்கப்பட்டது என்பது யாருக்கும் தெரியாது. மாடு, ‘ம்மா’ என்று கூப்பிடும்போது எப்படி வாயைத் திறந்து வைத்திருக்குமோ அப்படி இருந்தது அந்தக் குகை. மத்தியில் லிங்கம். குகைவாய் முனையில், கல்லால் செதுக்கப்பட்ட நடராஜர் சிலை லிங்கத்திற்குப் பின்னால், குகையின் பின்புறச் சுவரில் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் திரிசூலம்; குன்றின் முனைப்பில் நந்தி, ஆவுடையாரை ஒட்டி ஒரு சதுரக்கல். அந்தக் கல்லின் மேல் விபூதி சிதறிய சிறிய தட்டு. இவைதான் கோவிலாகவும், கோவிலைச் சார்ந்த சொத்துக்களாகவும் உருவமானவை.

நடுநிசி வேளை.

புல்லில் படர்ந்த பனி, லிங்க வடிவுகளாகத் தோற்றம் காட்டின. குகைக்குக் கிழக்குப் பக்கத்தில் துவார பாலகன் போலிருந்த தூங்குமூஞ்சி மரம், “நான் ஒன்றும் தூங்கும் மரமல்ல” என்று சொல்வதுபோல், இரண்டு மூன்று கிளைகள், மூன்று மூன்று கம்புகளாகப் பிரிந்து, முடிந்து, திரிசூலம் போல் தோன்ற, அந்த மரத்தின் இலை தழைகளுக்கு ஊடே உற்றுப்பார்த்தால், ஆகாயம் பல்வேறு ஸ்படிக லிங்கங்களாகத் தெரியும். பிரபஞ்ச வெளியில், லிங்க வடிவுக்கு ஒத்துவராத பகுதிகளை மரத்தின் சின்னஞ்சிறு இலைதழைகள் மறைத்து, ஊனக் கண்ணுக்கு ஞான ஒளி பாய்ச்சிக் கொண்டிருந்தன. 

குகைக் கோவிலுக்கு எதிர்ப்புறத்திலுள்ள குன்றிற்கு மேலே சஞ்சரித்த மேகம், விஸ்வரூப லிங்கமாகத் தோன்றியது. அரூபத்தில் தான், மனதிற்கேற்ற ரூபங்களைப் படைக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டுவது போல, ரூப மற்றவை ரூபங்களாயின. மனமே பிரம்மாகவும், பிரம்மமே மனமாகவும் ஐக்கியப்பட்ட சதாசிவ நிலை நீ சதா... சிவம்... இதனால்தான் நாங்களும் சும்மா இருக்கிறோம் என்று உரைப்பது போல் காட்டு மிருகங்கள் கூட கண்ணயர்ந்தும், மரங்களில் துயில் கொண்ட பறவைகள், இறக்கைகளைப் பறக்கும் நிலையில் வைத்துக் கொண்டும் இருந்தன. 

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘நீ ஆடுகின்ற அரசன். சுழற்சி வேகத்தின் உச்சகட்டமே - அசைவுகளின் பேரசைவே - தாண்டவம். பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அது நிற்பதுபோல் தோன்றுவது மாதிரி, உன் இயக்க வேகத்தால் ஏற்படும் ஸ்தம்பன மாயையை, இந்த பறவைகளும் மிருகங்களும் ‘சும்மா இருத்தல்’ என்று தவறாகப் புரிந்திருக்கின்றன. ஆனால் நான் அப்படி இல்லை. என் வேலை உன்னைப் போல், உன்னருளாலே சதா இயங்குவதே’ என்று, குகைக்குத் தென் பக்கம் விழுந்து கொண்டிருந்த அருவி, தன் இரைச்சலால் பேசிக் கொண்டிருந்தது. நிலவொளியில் அந்த அருவி மலையில் உலர்த்திப் போட்டிருக்கும் வெள்ளாடைபோல் தெரிந்தது.

அருவி சொல்லாமல் சொல்வதை தான் செய்யாமல் இருந்ததற்கு பிராயச்சித்தம் செய்வதுபோல், குகைக்கு எதிர்த்தாற் போலிருந்த குன்றின் சரிவில் உள்ள குடிசைக் கதவு, சத்தத்தை எழுப்பிக் கொண்டு திறக்கிறது. கதவை இழுத்துத் திறந்ததால், அதில் ஏற்பட்ட அதிர்வுகள சப்த அலைகளாகி அருவியோசையின் அலைகளோடு, இரண்டறக் கலந்து பிரபஞ்ச அசைவிற்கு தாள லயமாய் லயிக்கின்றன.

குடிசைக்கு வெளியே வந்த, காவி வேட்டி கட்டிய சாமியார், கதவைச் சாத்துவதற்கு முன்னதாக, கண்ணுக்கு எதிரே உள்ள சுவரில் தொங்கிய தன் குருநாதரின் காவி வேட்டியையும், மேலங்கியையும் விழியாடாது பார்த்துக் கொண்டு நின்றுவிட்டு, கரங்குவித்து, தலையை லேசாகத் தாழ்த்தி பிறகு உயர்த்திவிட்டு, குகைக் கோவிலைப் பார்த்து மட மடவென்று நடந்தார். 

அப்படி நடக்கும்போது, இரண்டு கால் பெரு விரல்களுக்கு மேலே, அவற்றிற்கு அடுத்த விரல்களை மடக்கிப் போட்டுக்கொண்டே நடந்தார். குருநாதர் சொல்லிக் கொடுத்தது. பழைய காலத்து சாமியார்களைப் போல், காலில் கட்டைகளைப் போடாமல் விரல் மடித்து நடந்தாலும், இருந்தாலும் இச்சா சக்தி குறிப்பாக பாலுணர்வு போய்விடும் என்று அவர் சொன்ன உபதேசத்தின்படி நடந்து நடந்து பழகியவர்; இப்போது அந்தப் பழக்கமே, தன்னையறியாத ஒரு வழக்கமாக, தன் பாட்டுக்கு செய்து கொண்டிருப்பவர்.

சாமியார் கோவில் முன்னால் வந்து, இடுப்பில் செருகியிருந்த விபூதிப் பையை எடுத்து, திருநீரை இரண்டு தோளுக்குப் பக்கமாகவும், தலையிலும் போட்டுவிட்டு,‘சிவாய நம...’ என்று தனக்குள்ளேயே கூவிக்கொண்டு பிறகு திருநீரை எடுத்து நெற்றி நிறைய பூசிக்கொண்டே, அருவியைப் பார்த்துப் போனார். 

ஆடைகளைக் களைந்துவிட்டு, லங்கோட்டுடன் அருவியில் இறங்கி அப்படியே உட்கார்ந்தார். “ஓ குருநாதா... ஓம் நமச்சிவாய நமக... ஓம்சிவாய நமக...” என்று அவர் சொல்லச் சொல்ல, அப்படி அவர் சொல்வது தடைபடக் கூடாது என்பதுபோல், தலையில் விழுந்த அருவி நீர், அவர் வாய்க்குள் போகாமல் தோளிலும், மார்பிலுமாகச் சிதறியது.

குளித்து முடித்த சாமியார் கோவிலுக்கு முன்னால் வந்து சிறிது நேரம் நடராஜர் சிலையையே உற்றுப் பார்த்துவிட்டு, நந்தியையும் வணங்கிவிட்டு மீண்டும் விபூதியைப் பூசிக்கொண்டு, லிங்கத்திற்கு அருகே இருந்த சதுரக்கல்லில் பத்மாசனம் போட்டு உட்கார்ந்தார். இரண்டு கைகளையும் மார்புடன் சேர்த்து வளைத்து, ஒன்றின் மேல் ஒன்றாக இருந்த உள்ளங்கைகளை அடிவயிற்றில் வைத்தபடி லேசாகக் கண்ணை மூடினார். 

அவர் மேனியை வியாபித்த காவியாடை நிலவொளியில் கிட்டத்தட்ட மரப்பட்டைபோல் தோன்றியது. இன்னொரு விதத்தில் ஆசனம் போட்ட கால்களே ஆவுடையாராகவும், முதுகுலிங்கமாகவும் தெரிந்தது. சாமியாருக்கு நாற்பத்தைந்து வயதிருக்கும். உள்நோக்கிப் பாய்ந்த வயிறு. வெளி நோக்கி நிமிர்ந்த தோள்கள். நுனி சிவந்த மூக்கு. இரும்புத் தூணுக்கு சிவப்பு வர்ணம் திட்டியது போன்ற கழுத்து. குருநாதரின் ஆக்ஞையில் மேற்கொண்ட ஆசனப் பயிற்சிகள், அவர் தன் உடம்பை தானே உணர முடியாத நிலையில், உடம்புக் கூடு வேறு, அதில் உறையும் ஆன்மா வேறு என்று அவரே மிக மெல்லியதாய் அறியும் நிலையில் வைத்திருந்தன.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கண்களை மூடிக்கொண்ட சாமியார் காதுகளிலும், அந்த காதுகள் வழியாக நெஞ்சுக்குள்ளும், எஸ் பி. பாலசுப்பிரமணியம் பாடிய சிவதோததிரப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன அந்தப் பாடல்களின் ஒவ்வொரு வரியும், அவரை மேலே மேலே உயர்த்திக் கொண்டிருந்தது. ஆன்மா உடம்பை விட்டு விலகி, அருகே உள்ள லிங்கத்தைச் சுற்றிச் சுற்றி சுழல்வது போன்ற ஆனந்தப் பரவசம். சவத்தை விட்டு சிவத்திடம் போனது போன்ற மெய்யானந்தம், தான் வேறு, ஈசன் வேறல்ல என்ற பரசிவ நிலை. சிவதோத்திரப் பாடல்கள் காதுகளில் கச்சிதமாக ஒலித்தன.

“பிரம்ம முராரிஸு ரார்சித லிங்கம்
நிர்மல பாஸித சோபித லிங்கம்
ஜன்மஜதுக்க வினாஸக லிங்கம்
ததப்ரண மாமி சதாசிவ லிங்கம்”
‘அருட்ஜோதி தெய்வம், எனை ஆண்டு கொண்ட தெய்வம்’ என்ற வடலூர் வள்ளலாரின் பாடலையும், அருணகிரி நாதரின் ‘நாதவிந்துகலாதி நமோ நமோ’ என்ற பாடலையும், வானொலியில் கேட்கும்போதெல்லாம், அப்போது சென்னையில் ஓர் அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காக இருந்த ராமையா அப்படியே மெய் சிலிர்த்துப் போயிருக்கிறார். 

சாமியாராய் மாறிய பிறகு இந்த பாடல்களைக் கேட்கப் பல தடவை ஏங்கியுமிருக்கிறார். ஒரு தடவை கோவிலுக்கு வந்த ஒருவரிடம், தன் அபிலாஷையை சிறு குழந்தையைப் போல் தெரியப் படுத்தினார். எங்கேயாவது தன்னை கூட்டிக்கொண்டு போய் இந்தப் பாடல்களை தான் கேட்கும்படி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அந்த பக்தர், சிரித்துக் கொண்டே போனார். 

ஒரு வாரத்தில், ஒரு டேப் ரிக்கார்டையும், இரண்டு டேப்புக்களையும் கொண்டு வந்து சாமியாரிடம் பயபக்தியோடு கொடுத்தார். ஏற்கெனவே டேப் ரிக்கார்டர் இயங்கும் விதத்தை சென்னையிலேயே தெரிந்து வைத்திருந்த சாமியார், அதைக் கொடுத்தவரை, இயக்கச்சொல்லி, நன்றாகத் தெரிந்து கொண்டார். 

கோவிலுக்குள் இருக்கும் போதும், குடிசைக்குள் முடங்கும்போதும், சதா இந்தப் பாடல்களைப் போட்டுக் கொண்டிருந்தார். இதனால், இதர நாமாவளிப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் கூட அவர் மரபுப்படி முணங்கவில்லை. அதற்காக வருத்தப்படவும் இல்லை. அல்லும் பகலும், இந்தப் பாடல்களைப் போட்டுப் போட்டுக் கேட்பதில், டேப்புக்கள் மட்டுமல்ல, டேப் ரிக்கார்டர் கூட தேய்ந்துவிட்டது. இன்றும் அவை ஒலிக்கும் நிலையிலேயே இருந்தாலும், சாமியாருக்கு அவை தேவைப்படவில்லை.

- தொடரும்