அத்தியாயம் 1

297.52k படித்தவர்கள்
231 கருத்துகள்

ரே நாளில் ஏராளமான இளம் தேவதைகளைச் சர்ச்சுக்கு கொண்டு வந்து சேர்ப்பதெற்கென்றே படைக்கப்பட்ட கிழமை… ஞாயிற்றுக்கிழமை. சாந்தோம் சர்ச்சில் மாலை ஆறு மணி மாஸ் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது கார்த்திக், பக்கத்து வரிசையில் நடிகை நித்யா மேனனைப் பார்த்தான். பார்த்தவுடன், ‘இதுதான் அழகு' என்று அவன் இவ்வளவு நாளும் வகுத்து வைத்திருந்த விதிகளை உடனே மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.  நித்யா மேனனின் பரம்பரையில் அழகாக இருந்தவர்களின் அத்தனை ஜீன்களும் ஒன்றாக அவளிடம் குடியேறியிருந்தது. தலையில் சந்தன நிற ஸ்கார்ஃபுடன் நித்யாமேனன் கண்களை மூடி “மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்த…” என்று அழகாக பாடியபோது கார்த்திக்கின் உடலில் இரண்டாம் உயிர் குடியேறியது.

கண்களைத் திறந்த நித்யா மேனன் யதார்த்தமாக திரும்பியபோது கார்த்திக் அவளைக் கவனிப்பதை பார்த்துவிட்டாள். உடனே முகத்தைத் திருப்பிக்கொண்டாள். சில விநாடிகள் கழித்து, `என்னைத்தான் பார்க்கிறாயா?' என்பது போல் திரும்பி கார்த்திக்கைப் பார்த்தாள். அவன், `ஆமாம்…' என்பது போல் அழுத்தமாகப் பார்த்தான். அப்படியே பார்வை விளையாட்டுகள் தொடர… நித்யாவின் கண்களில் முதலில் இருந்த முறைப்பு, பத்தாம் நிமிடத்தில் கனிவாகி, இருபதாம் நிமிடத்தில் ரகசிய வெளிச்சமானது.

நித்யா மேனன் இவனைக் கவனிக்காதபோது கார்த்திக் சட்டென்று எழுந்து வெளியே வந்துவிட்டான். சில விநாடிகளிலேயே வெளியே வந்த நித்யா மேனன், சுற்றிலும் தவிப்புடன் பார்த்தாள். கார்த்திக்கைத் தேடுகிறாள். சட்டென்று அவள் முன்பு தோன்றிய கார்த்திக், “என்னைத்தானே தேடுறீங்க…” என்றவுடன் நித்யா தடுமாறிவிட்டாள்.

“இல்லையே… ஒரு போன் பண்ண வந்தேன்.”

“பொய் சொல்லாதீங்க. சர்ச்சுக்குள்ளேயே நீங்க என்னைப் பாத்தீங்க.”

“சத்தியமா பாக்கல.”

“சர்ச் வாசல்ல இப்படிப் பொய் சொன்னா கர்த்தருக்கே அடுக்காதுங்க.  சரியா 6.40-க்கு ‘காணிக்கை தந்தோம் கர்த்தாவே’ன்னு பாடுறப்ப, ஸ்கார்ஃப சரிபண்ற மாதிரி ஒரு மாதிரி “மொய்ங் மொய்ங்’னு என்னைப் பாத்தீங்க. அப்புறம் சரியா 6.52-க்கு ஸ்கார்ஃப் முடிச்ச அவுத்து திருப்பிக் கட்டிகிட்டே அடிக்கண்ணுல, `நான் அவ்ளோ அழகாடா?'ங்கிற மாதிரி பாத்தீங்க. அப்புறம் சரியா 6.58-க்கு `ஏன்டா இப்படி என்னைக் கொல்ற?’ங்கற மாதிரி பாத்தீங்க.”

“ஆமாம். பாத்தேன். நீங்க திரும்பித் திரும்பி பாத்தீங்க. அதனால கோபமா பாத்தேன்.”

“இல்ல… கோபமா பாத்தா என்னை முறைச்சிருக்கணும். முணுமுணுன்னு திட்டியிருக்கணும்.”

“சரி… இப்ப முறைக்கிறேன். இப்ப திட்டுறேன்” என்ற நித்யா மேனன் சில விநாடிகள் அவனை முறைத்துவிட்டு,  முணுமுணுத்தவள் அடக்க முடியாமல் புன்னகைத்தாள்.

“நீங்க ஸ்மைல் பண்றப்ப ஒரு ஃபேமிலி பேக் ஐஸ்க்ரீம முழுசா ஒரே வாய்ல முழுங்கின மாதிரி உடம்பெல்லாம் சில்லுன்னு ஆயிடுச்சு.”

“இந்த மாதிரில்லாம் பேசுனா மயங்கிடுவேன்னு நினைக்காதீங்க.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“வேறு எந்த மாதிரி பேசினா மயங்குவீங்க?” என்றவுடன் அடுத்து என்ன பேசுவது என்று புரியாமல், “ஹலோ…. உங்களுக்கு என்ன வேணும்?” என்றாள்.

“உங்களை இந்த மாதிரி தூரத்துல இருந்து பாக்குறது… சிரிக்கிறதெல்லாம் சரவணா ஸ்டோர் வாசல்ல நின்னுகிட்டு, ஏஸி காத்து வாங்குற மாதிரி இருக்கு. எனக்கு சரவணா ஸ்டோர்க்குள்ள வரணும்.”

“வா…” என்ற நித்யா மேனனின் முகத்தில் வெட்கம்.

அப்போது, “டேய், கார்த்தி” என்று கார்த்திக்கின் 18 வயது தங்கை அர்ச்சனா அவன் தோளைப் பிடித்து உலுக்கினாள். சட்டென்று நிஜ உலகுக்கு திரும்பிய கார்த்திக் திருதிருவென்று விழித்தான். சென்னை, மந்தைவெளியில் அவன் வீட்டு அறையில்தான் நாற்காலியில் அமர்ந்திருந்தான். வெளியே ஜன்னலுக்கு வெளியே தெரிந்த வானத்தைப் பார்த்தபடி அவன் பகல் கனவில் ஆழ்ந்திருந்தான்.

அர்ச்சனா, “சாயங்காலம் ஆறு மணிக்கு முழிச்சுகிட்டே என்னடா கனவு காண்ற?” என்றவுடன் பாதியில் பகல் கனவு கலைந்த கடுப்பில், கார்த்திக்,

“என்னடி?” என்றான்.

“அப்பா கூப்பிடுறாரு…”

“வர்றேன் போ...” என்று அனுப்பிவிட்டு, “பகல் கனவுலயாச்சும் ஒருத்தன நிம்மதியா காதலிக்க விடுறாங்களா?” என்று முணுமுணுத்த கார்த்திக்கின் வயது 28. கார்த்திக் சென்னை, இஸபெல்லா மருத்துவமனையில் எட்டு மாதத்திலேயே அர்ஜென்ட்டாக பிறந்தபோதும் அழாமல், பக்கத்து படுக்கையில் இரண்டு நிமிடங்களுக்கு முன் பிறந்திருந்த பெண் குழந்தையைப் பார்த்து  ரொமான்டிக்காக புன்னகைத்ததாக மருத்துமனை ஆவணங்கள்(?) தெரிவிக்கின்றன.

வளர்ந்து சுமாராக படித்த கார்த்திக், அப்பாவின் வற்புறுத்தலால் பி.இ.-யைக் கடனேயென்று படித்தான். அதில் ஏழு சப்ஜெக்ட்களில் ஃபெயிலாகி, தற்போது ராயப்பேட்டையில் ஒரு இன்டர்நெட் சென்டரை நடத்திக்கொண்டிருக்கிறான். நான்காண்டுகளுக்கு முன்பு வரை அமோகமாக ஓடிக்கொண்டிருந்த சென்டர், தற்போதைய ஜியோ யுகத்தில் தனது இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது.

இப்போது பெரும்பாலும் சில அறுபது ப்ளஸ் ஆண்கள் மட்டும் பலான சைட்டுகளைப் பார்ப்பதற்காக வந்து, “என்னது… எக்ஸ் வீடியோஸ தடை பண்ணிட்டாங்களா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

கார்த்திக்கின் ஜனன ஜாதகத்தில் பெண் கிரகங்களும், சந்திரனும் வலுவாக இருந்ததால் பெண்களின் ஆதரவையும், அன்பையும் அமோகமாகப் பெற்று, ப்ளஸ் டூ படிக்கும்போதே எதிர்வீட்டுக்கு மதுரையிலிருந்து புதிதாக குடிவந்த நந்தினியைக் காதலித்தான். அவளும் காதலித்தாள். வெறும் தூரத்துப் புன்னகை… மொபைல் மெசேஜ் பரிமாற்றங்களோடு நின்றிருந்தால் அந்தக் காதல் கொஞ்ச நாள் பிழைத்திருந்திருக்கும்.

ஒரு நாள் நள்ளிரவில் நந்தினி வீட்டு மொட்டை மாடியில், இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் தீவிரமாக காதலைப் பரிமாறிக்கொண்டிருந்தனர்(?). காற்று போதவில்லை என்று மொட்டை மாடிக்கு படுக்க வந்த ஹவுஸ் ஓனர் பாட்டி இவர்களைப் பார்த்து அரண்டுபோய் ஊரைக் கூட்ட... அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் மந்தைவெளி வரலாற்றின் மர்ம பக்கங்கள்.

இரண்டே வாரத்தில் நந்தினியின் அப்பா மதுரைக்கு மாற்றல் வாங்கிக்கொண்டு செல்ல… நந்தினியுடன் டச் (எவ்வளவு சரியான வார்த்தை?) விட்டுப்போனது. நந்தினி கடந்த ஆண்டு புருஷனோடும், இரண்டு குழந்தைகளோடும் மயிலாப்பூர் அறுபத்திமூவர் உற்வசத்திற்கு வந்திருந்தாள்.

அப்போது கிழக்கு மாடவீதி ஈசானி மூலையில் மல்லாரி வாசித்துக்கொண்டிருந்தபோது கார்த்திக்கை எதேச்சையாக பார்த்தாள். தற்போது நன்கு குண்டடித்திருக்கும் நந்தினி,

“நல்லாருக்கீங்களா கார்த்தி? நாங்க மந்தைவெளில இருந்தப்ப எங்க எதிர்வீட்டுல இருந்தாங்க” என்று கணவனிடம் அறிமுகப்படுத்தியவளின் கண்களில் அந்தக் காதலும், மொட்டை மாடி இரவும் சுத்தமாக இல்லை.

நந்தினிக்கு பிறகு கார்த்திக் பி.இ படித்தபோது  உடன் படித்த ஸ்ருதியைக்  காதலித்தான்.  அவளுக்கு கேம்பஸில்  வேலை கிடைத்தபோது, அவன் ஏழு அரியர்ஸுடன் இருந்தான்.

அவன் உருப்படப்போவதில்லை என்று யூகித்துவிட்ட ஸ்ருதி, தன் வீட்டில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்று திடீரென்று கண்டுபிடித்து, ஒரு மே மாத கடற்கரை மணலில், “ஐயம் ஸாரி கார்த்தி. என்ன மறந்துடு” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இதனால் பெண் இனத்தையே வெறுத்த கார்த்திக், அடுத்த 22 நிமிடங்கள் வரை வேறு எந்தப் பெண்ணையும் ஏறெடுத்துப் பார்க்காமல் இருந்தான். பிறகு, அவன் பார்த்தாலும், பெண்கள் அவனைப் பார்க்காததால், இப்போது வீட்டில் அவனுக்கு திருமணம் செய்ய பெண் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஒன்றும் சரிவர அமையாமல் இன்று வரையிலும் சிங்கிள் ஸ்டேட்டஸிலேயே இருக்கிறான். சரி… யாரையாவது பிக்அப் செய்யலாம் என்று டின்டர், டேன்டேன் என்று அத்தனை டேட்டிங் ஆப்களிலும் இறங்கிப் பார்த்தான். ம்ஹ்ம்….. பலன் 000000.

இந்த வெறுமையான காலத்தில் கார்த்திக்கின் முதன்மையான பொழுதுபோக்கு… பகல் கனவுகள். ஆளில்லாத இன்டர்நெட் சென்டரில் பகல் கனவு காண உட்கார்ந்தால், அரை மணி நேரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷைக் காதலித்து, எதேச்சையாக சிக்னலில் கார்த்திக்கைப் பார்த்த இயக்குநர் மணிரத்னம் அவனை ஹீரோவாக அறிமுகப்படுத்த… அந்தப் படம் சூப்பர் ஹிட்டாகி, அவன் 2021-ல் முதலமைச்சராகி, “கார்த்திக்காகிய நான்…” என்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டிருக்கும்போது, “தம்பி… ஆதார் கார்டுல அட்ரஸ் மாத்தணும்” என்று யாராச்சும் பெருசு கனவைக் கலைத்துவிடும்.

நேற்றிரவு பிரைம் வீடியோவில் ‘ஓ… காதல் கண்மணி” படத்தை எழுபதாவது தடவையாக பார்த்ததை அடுத்து இந்தப் புதிய பகல் கனவு.

ஹாலிலிருந்து அப்பா, “டேய், கார்த்தி…” என்று சத்தமாக அழைக்க… “இதோ வர்றேன்...” என்று போகாமல் மொபைலில் டின்டரை ஓப்பன் செய்தான். தனது போட்டோவுக்கு பெண்கள் யாராவது லைக் கொடுத்திருக்கிறார்களா என்று நோட்டிஃபிகேஷனில் பார்த்தான்.

ம்ஹ்ம்… வெறுத்துப்போய் இன்ஸ்டாவை ஓப்பன் செய்து,  ஹாலிவுட் நடிகை மார்கோ ராபியின் நான்கு போட்டோக்களை பாராட்டி கமென்ட் போட்டான்.

கார்த்திக் ஹாலுக்கு வந்தபோது, அவன் அப்பா திருஞானம் டி.வி-யில் செய்தி பார்த்துக்கொண்டிருந்தார். அப்பா மாநில அரசு ஊழியர். பிரிட்டிஷ் இந்தியாவின் சென்னை கவர்னர் ஆர்தர் ஆஸ்வால்டு காலத்தில் கட்டப்பட்டு, ஒரு சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இன்னும் இடிந்துவிடாமலிருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில்  சூப்பரின்டென்டென்ட். ஓய்வு பெற இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளன.

திருஞானம் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கிளார்க்காக சேர்ந்தபோது தன்னுடன் பணியாற்றிய டைப்பிஸ்ட் சுகந்தியைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான நாள் முதல் இருவரும் ஒரே அலுவலகத்திற்கு ஒன்றாகவே சென்று வருவதால், வேறு எந்தப் பெண்ணிடமும் வழியவோ, கடலை போடவோ முடியாமல் போய், சின்னவீடு சாத்தியங்களின் வழிகள் அடைபட்டுவிட்ட ஆத்திரத்தில் `காதல் என்பது பொய்' என்று கூறிக்கொண்டிருக்கிறார்.

கார்த்திக்கைப் பார்த்தவுடன் அப்பா, “டேய்… இன்டர்நெட் சென்டர்ல சும்மா ஈ ஓட்டிக்கிட்டுதானே உக்காந்துருக்க. டிஎன்பிஎஸ்ஸி க்ரூப் ஃபோர் கால்ஃபர் பண்ணியிருக்காங்க. எஸ்.எஸ்.எல்.ஸி-தான் குவாலிஃபிகேஷன். அப்ளை பண்ணி படிக்கலாம்ல்ல?” என்றார்.

“பண்றேன்… பண்றேன்...” என்ற கார்த்திக் டி.வி-யில் செய்தி வாசிக்கும் கண்மணி சேகரைப் பார்த்தான். கண்மணி வாசிக்கும் எல்லா செய்தியும் அவனைப் பொறுத்தவரையில் பிரேக்கிங் நியூஸ்தான் என்பதால், சோஃபாவில் அமர்ந்திருந்த தன் அம்மாவின் அருகில் உட்கார்ந்தான்.

செய்தியில், “கன்னியாகுமரி முதல் புதுடெல்லி வரையிலான தனியார் ரயில் வழித்தடத்தை இயக்க அனுமதி பெற்றுள்ள குப்தா நிறுவனம், இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சீனாவில் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்காக சோங்கிங் நகரத்திலிருந்து, க்யான்ஜியாங் நகரம் வரை ஆண்டுக்கொரு முறை காதல் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல் குப்தா நிறுவனம், கன்னியாகுமரி - புதுடெல்லி வழித்தடத்தில் விரைவில் ‘லவ் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயிலை இயக்கவுள்ளது” என்று சொன்னதைக் கேட்டவுடன் கார்த்திக் அசந்துபோனான்.

தொடர்ந்து கண்மணி, “குப்தா நிறுவனம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், வீட்டில் ஏற்பாடு செய்யப்படும் திருமணங்களில் தற்கால இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக இருப்பதால், பலரும் முப்பது வயதுக்கு மேலாகியும் திருமணமாகாமல் உள்ளனர். எனவே, அவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையைக் கண்டறிந்து காதலிக்க உதவி செய்வதற்காக இந்த ‘லவ் எக்ஸ்பிரஸ்’ ரயிலில் திருமணமாகாத ஆண்கள் மட்டும் பெண்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்திய ரயில்வே வாரியத்தின் அனுமதி கிடைத்தவுடன் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும்” என்று முடிக்க… கார்த்திக் அடுத்த விநாடியே அந்த ரயிலில் பயணம் செய்வது என்ற முடிவுக்கு வந்தான்.

- தொடரும்