அத்தியாயம் 1
ராஜேந்திர சோழனின் இயற்பெயர் மதுராந்தகன் என்பதாகும். கி.பி 907 – 953 ஆண்டுகளில் சோழ மண்டலத்தை ஆட்சி செய்த சோழ அரசன் பராந்தகன் (முப்பாட்டன்) நினைவாக, இப்பெயரை தனது மகனுக்குச் சூட்டுகிறார் ராஜராஜ சோழன். சோழ தேசத்தின் இளவரசனாக இருந்தவரை மதுராந்தகன் என்றழைக்கப்பட்டவர், பிற்காலத்தில் அரசனாக முடிசூடிக்கொண்ட பின்னர், ராஜேந்திர சோழன் என்று அழைக்கப்பட்டார்.
***
மார்கழித் திருவாதிரை - தில்லை ஆடவல்லான் ஆலயம்.
ராஜராஜ சோழனின் இருபத்து ஏழாம் ஆட்சியாண்டு.*
திருவாதிரைக் கொண்டாட்டத்தில் தில்லை நகரம் திளைத்துக் கொண்டிருந்தது. கடந்த ஒன்பது நாள்களும் கடும் பனியையும் பொருட்படுத்தாது தில்லை நடராஜர் கோயில் ஓதுவார்கள் பூசைகளில் ஈடுபட்டிருக்கின்றனர். இன்று பத்தாவது நாள். சோழ அரசர்களின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர் அதிகாலையில் கோயிலுக்குள் நுழைந்ததும், கோயில் பரபரப்பாகிவிட்டது. கோயிலை அடுத்த சதுர்வேதிமங்கலத்தில் குடியிருக்கும் நம்பியாண்டார் நம்பிக்குத் தகவல் சொல்ல இருவர் ஓடினர்.
சர்வசிவ பண்டிதர் முன் தலையை முழுவதுமாக மழித்துவிட்டிருந்தார். பின்தலையில் சிறு குடுமி. ஒற்றைத் துவர்த்தை இடையிலிருந்து கழுத்துவரை மேலாடையாக அணிந்திருந்தார். கோயிலுக்குள் வந்த பண்டிதர் எப்போதும் செல்வதுபோல நேராக ஆடவல்லான் சன்னதிக்குச் செல்லாமல், கோவிந்தராஜர் சன்னதிக்குச் சென்று அங்கு அமர்ந்துகொண்டார். உடன் வந்த சீடர்கள் சற்றுத் தள்ளி நின்றனர்.
கோயில் பரிசாரகர் பண்டிதரை நெருங்கினார். முன்நெற்றி கேசத்தைப் பின்னால் இழுத்து, பின்தலையில் சிறு குடுமியாகப் போட்டிருந்த பரிசாரகரின் இடையில், கால்முட்டி வரை தழுவி நின்ற வெண்பருத்தியாடை இருந்தது. கழுத்து முன்பக்கமாக நீண்டிருந்தது. கனத்த உடம்புடன் மூச்சிறைக்கப் பண்டிதரின் அருகில் சென்ற பரிசாரகரிடம், ‘நெருங்க வேண்டாம்’ என்று சீடர்கள் கண்களால் சாடை செய்தனர். பரிசாரகர் அவர்களைப் பொருட்படுத்தவில்லை.
“பண்டிதரே, திருவாதிரைக் களி தயாராக இருக்கிறது. குளிருக்கு இதமாக இருக்கும். சூரிய உதயத்திற்குள் கொஞ்சம் சாப்பிடுவது நல்லது. இல்லையென்றால் இரவு வரை வெறும் வயிற்றுடன் இருக்க வேண்டும். அதனால்தான்...” என்றார் ரகசியக் குரலில். சீடர்கள் அவரைக் கையமர்த்தினர்.
கோயில் பரிசாரகர் பேசியது சர்வசிவ பண்டிதருக்கு நன்றாகவே கேட்டது.
“பரிசாரகரே, உங்களுக்குச் சோழ மண்டலத்தின் இருப்பு புரியவில்லையா? சிவனின் திருநடனத்தைக் கண்ட ஊர், மார்கழித் திருவாதிரை நாளில் இந்த ஊர் இப்படியா இருக்கும்? தேவலோகத்தையே பெயர்த்தெடுத்துத் தில்லையில் வைத்ததுபோல் இருக்குமே. பத்து நாள்கள் கொண்டாட்டத்தில் ஊர், நடராஜரின் கால் பாதங்கள் போல் மின்னுமே? இன்றைக்குப் பாருங்கள், கோயிலின் தீபங்கள்கூட ஒளி குறைந்து உள்ளடங்கியது போல் எரிகின்றன. உங்களுக்கு வேறுபாடு தெரியவில்லையா? பூசை புனஸ்காரங்கள் எல்லாம் வழக்கம்விட்டுப் போய்விடக்கூடாதே என்பதற்காக, வெறும் சடங்காக நடக்கிறது என்பது புரிகிறதா? இந்த வருடம் தில்லையில் மனிதத் தலைகளையே காணோம்? மொத்தமாக வெளியேறித் தொலைந்தார்களோ?”
கோயில் பரிசாரகர் பண்டிதரின் கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என்று பதில் கொடுக்காது அமைதி காத்தார். மார்கழித் திருவாதிரையில் பத்து நாள்களும் சக்கரவர்த்தி ராஜராஜன் தில்லையில்தான் இருப்பார். சக்கரவர்த்தி ராஜராஜன் தில்லையில் இருக்கிறார் என்பதாலும், இளவரசன் ராஜேந்திரனின் திருநாள் உத்சவம் என்பதாலும் மார்கழி மாதத்தில் கொண்டாட்டத்திற்கு அளவே இருக்காது. இரவா, பகலா எனப் பிரித்தறிய முடியாமல் ஊர் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.
சோழ சாம்ராஜ்யத்திலேயே இதுவரை இல்லாத வகையில் தஞ்சை ராஜராஜேச்சுவரம் கட்டி முடிக்கப்பட்டதால், பெரிய கோயிலை விட்டுச் சக்கரவர்த்தி தில்லை வரவில்லை.
“புதியது பெரியதாகிவிட்டது. பழையது சிறியதாகிவிட்டது”முணங்கினார் பண்டிதர். தன் எண்ணத்தின் தொடர்ச்சியாகப் பண்டிதர் சொன்ன வார்த்தையைக் கேட்டதும் பரிசாரகரின் உடல் அதிர்ந்தது. பண்டிதரைப் பார்த்து இரு கரங்கள் குவித்துத் தொழுதார்.
“சரிதான் பரிசாரகரே, கலிகாலம் வந்துவிட்டதில்லையா? தேவாரப் பதிகங்களை உங்கள் சக்கரவர்த்தி இந்தக் கோயிலில் இருந்துதானே கண்டெடுத்தார்? எல்லாம் மறந்து போனதா? தேவாரத்தை ஒழுங்கு செய்து, தொகுத்துக் கொடுத்த நம்பியாண்டார் நம்பி இன்றும் இந்த ஊரில்தானே இருக்கிறார்?”
“இல்லை சுவாமி. அவர் நேற்று தஞ்சைக்குக் கிளம்பி விட்டாராம். எனக்குத் தகவல் கிடைத்தது. இந்தச் செய்தி கோயிலுக்குள் பலருக்குத் தெரியாது.”
பண்டிதரின் முகம் மாறிவிட்டது. முகத்தில் சிந்தனை படர்ந்தது. சிந்தனையில் இருந்து விடுபடாமலேயே, பொக்கணம் வைத்திருந்த சீடனைக் கண்களால் அழைத்தார். பொக்கணத்திலிருந்து திருநீற்றை அள்ளிப் பரிசாரகரிடம் நீட்டினார். அவர் பண்டிதரின் கால்களில் விழுந்தார். பண்டிதர் கால்களை இழுத்துக்கொண்டார். பரிசாரகர், பண்டிதர் பாதங்கள் இருந்த இடத்தை இரு கைகளாலும் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார். இடது உள்ளங்கை கீழாகவும், வலது உள்ளங்கை மேலாகவும் வைத்து, இரு கைகளையும் ஒன்று சேர்த்து முன் நீட்டி, பண்டிதர் கொடுத்த திருநீற்றை வாங்கிக்கொண்டார்.
சர்வசிவ பண்டிதரைப் பரிசாரகர் பார்த்துக்கொண்டே நின்றார்.
“கேளு, ஏன் கேட்க நினைப்பதைக் கேட்காமல் நிற்கிறாய்?”
“பண்டிதரே, தஞ்சாவூர் பெரிய கோயில் கட்டிய பிறகு பல சிவாலயங்கள் தடுமாற்றத்தில் இருக்கின்றன. பல கோயில்களுக்கு வழங்கப்பட்ட தேவதான நிலங்கள், கோயில் வருமானம் எல்லாம் தஞ்சாவூர் கோயிலுக்குப் போய்விட்டன. நம் தில்லைக் கோயிலோடு சேர்த்து நாற்பதுக்கும் மேற்பட்ட சிவாலயங்களிலிருந்த தேவரடியார்கள் தஞ்சாவூரில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டு விட்டனர். சிவனடியார்கள் கூட்டம் கூட்டமாகத் தஞ்சாவூர் செல்கிறார்கள். சொல்வதற்குச் சங்கடமாக இருக்கிறது. சென்ற ஆண்டு திருவாதிரை அன்று செலவான இனிப்புக் கிழங்கு, சாமை அரிசி, வழுதுணங்காய், ஏலக்காய், வாழைக்காய், நெய், வெல்லத்தில் பாதிகூட இந்த ஆண்டு செலவாகவில்லை. ஒவ்வோர் ஆண்டும் பொருள்களைத் தானம் கொடுக்கும் உபயதாரர்களிடம் பாதியை மட்டும் பெற்றுக்கொண்டு மீதியைக் கொடுத்துவிட்டோம்.”
“இது எதற்கான அறிகுறி என்று உங்களுக்குத் தெரிய வேண்டுமா?”
“ஆம் பண்டிதரே, சிவதாண்டவம் நடந்த புண்ணிய பூமி. இன்றைக்கு எழுப்பப்பட்ட தஞ்சை பெரிய கோயில், தில்லையைவிட முக்கியமானதாகிவிட்டது.”
“பரிசாரகரே, உலக நடைமுறைகளைக் குறைசொல்ல ஒன்றுமில்லை. வலுத்தது வாழ்கிறது. அதை விட்டுவிடுங்கள். இந்த ஆண்டு மார்கழித் திருவாதிரைக்குச் சிவபாதசேகரன் என்று தன்னை வழங்கிக் கொள்ளும் சக்கரவர்த்தி ராஜராஜன்தான் வரவில்லை. சக்கரவர்த்தியின் அரசிகள், அமைச்சர்கள், தளபதி கிருஷ்ணன் ராமன் இவர்களில் யாராவது ஒருவராவது இங்கு வந்திருக்கலாமே? ஒருவரும் தஞ்சாவூரை விட்டு நகரவில்லையே?”
பரிசாரகருக்குப் புரிந்துவிட்டது. சர்வசிவ பண்டிதர் விரக்தியிலிருக்கிறார். ஆடவல்லானின் தீவிரமான அடியாரான பண்டிதர் ஆடவல்லானுக்காக எவரையும் எதிர்க்கத் துணிந்துவிட்டார். கருவூர்த் தேவருக்கும், பண்டிதருக்கும் கருத்து வேறுபாடு அதிகம் என்பது சோழ மண்டலத்துக்கே தெரியும். அந்தச் செய்தியை உறுதிப்படுத்தப் பரிசாரகர் நினைத்தார்.
“கருவூர்த் தேவர் மந்தாரச் செடியைத் தஞ்சாவூர்க் கோயிலில் வைத்து, அதைத் தல விருட்சம் என்று சொல்கிறாராமே, பண்டிதரே?”
கருவூர்த் தேவர் பெயரைக் கேட்டவுடன் பண்டிதரின் முகத்தில் கோபத்தின் குறி தெரிந்தது.
“கருவூர்த் தேவர்தானே? அவர் வைத்ததுதான் இன்று சோழ தேசத்தின் அரசாணையாக இருக்கிறது. எந்த ஆகமத்திலும் சொல்லப்படாத மந்தாரச் செடியைத் தல விருட்சம் என்கிறார். பெரிய கோயிலுக்குள் மந்தாரச் செடியையும், வில்வ மரத்தையும் அதிகம் வைத்திருக்கிறாராம். சிவலிங்கத்திற்குப் பின்புறம் மந்தாரச் செடி. சிவலிங்கத்திற்கு வலதுபுறம் வில்வ மரம்.”
“மந்தாரச் செடி, மரமாகும் என்கிறாராமே?”
“சொல்லுவார். அவர் சொல்லுவது நடந்தாலும் நடக்கும். அவர் சொல்லித்தானே சிவனுக்குச் சோழ மண்டலத்திலேயே மிகப் பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது? ஆறு வருடங்கள், தஞ்சையில் உளி சத்தம் கேட்காத நாழிகையில்லையே. நாளும் கிழமையும் இரவும் பகலும், ஒரு பொழுதும் ஓய்வில்லை. எழுப்பி விட்டார்களே அவ்வளவு பெரிய கோயிலை. அவர் நினைத்தால், நடக்காதது எல்லாம் நடக்கும். இன்னொன்று கேள்விப்பட்டீரா? எங்குமே இல்லாத அளவு பெரிய சிவலிங்கமாம். எந்த தேசத்திலும் இல்லாத அளவு பெரிய ஒற்றைக்கல் ஆவுடையாராம். கலை நுணுக்கம் நிரம்பிய நந்தியாம். இருந்துவிட்டுப் போகட்டுமே? மூர்த்தி பெரிதாக இருந்து என்ன புண்ணியம்? நம் தில்லைநாதனைப்போல் கீர்த்தி பெரிதாக உடைய ஆண்டவன் உண்டோ?”
“பிரம்மாண்டம் என்றால் தஞ்சைக் கோயில்தான் என்கிறாராம். நம் பழைய முதலமைச்சர் பெரியவர் அனிருத்திய பிரம்ம ராயர்.”
“ஆகா. நம் சக்கரவர்த்தியின் தகப்பனார் சுந்தர சோழனின் அமைச்சர் அனிருத்திய பிரம்மராயர். அவர் இன்னும் நடமாட்டத்தில்தான் இருக்கிறாரா?”
“ஆம் பண்டிதரே. சுந்தரச் சோழனுக்கு மட்டுமல்ல, உத்தம சோழனுக்கும், நம் சக்கரவர்த்திக்கும் அவர் நெருக்கமான முதலமைச்சர்தானே. தற்போது உடல் தளர்ந்துவிட்டது. வயோதிகத்தால் அயர்ச்சி தென்படுகிறதாம். மற்றபடி அன்பில் கிராமத்தில் சுறுசுறுப்பாகத்தான் இருக்கிறார்.”
“அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எப்படி அவர் தஞ்சாவூர் கோயில்தான் பிரம்மாண்டம் என்று தீர்ப்பு வழங்கலாம்? தஞ்சைப் பெரிய கோயிலைவிட பிரம்மாண்டமான கோயிலை உருவாக்க முடியாதா என்ன? தில்லைக் கோயிலைவிட, தில்லை சிவலிங்கத்தைவிட பெரிதாக ஒரு கோயில் வரும் என்று சென்ற வருடம் வரை நாம் நினைத்தோமா? இன்று முளைத்திருக்கிறதே? நாளை தஞ்சையை மிஞ்சவும் ஒரு கோயில் கட்டப்படலாம். நம் சக்கரவர்த்திக்குப் பின்பு வருபவர்கள் ஒருவேளை அந்த முயற்சியை முன்னெடுத்தால்?”
“நம் சக்கரவர்த்தியை மீறியவர்கள் யார் இருக்கப் போகிறார்கள், பண்டிதரே?”
“சோழ தேசத்துச் சக்கரவர்த்திக்குத்தான் இளவரசன் மதுராந்தகன் நினைவில் இல்லை என்று நினைத்திருந்தேன். உங்களுக்கும் நினைவில் இல்லையா பரிசாரகரே? தில்லையை விட்டு நீங்களும் கிளம்பும் நேரம் வந்துவிட்டது.”
பரிசாரகர் அதிர்ந்து போனார். கனத்த சரீரம் அதிர, சட்டென்று பண்டிதரின் காலில் விழுந்தார்.
“சாமி, மன்னியுங்கள் என்னை. என் ஆன்மா உடலை விட்டுப் போனாலும் தில்லையை விட்டுப் போகாதே? என்னிடம் இவ்வளவு பெரிய சுடுசொல் எதற்குப் பண்டிதரே, நான் செய்த தவறென்ன?” குரல் தழுதழுத்தது பரிசாரகருக்கு.
சர்வசிவ பண்டிதர் குரலைத் தணித்தார்.
பரிசாரகர் பேச வாயெடுத்தார்.
“பேச வேண்டாம்” என்றார். சீடர்கள் குறிப்பறிந்து விலகி நின்றனர். பண்டிதரும் பரிசாரகரும் தனித்து விடப்பட்டனர்.
“மன்னியுங்கள் பண்டிதரே, நம் இளவரசரை மறந்து என் கேள்வி வரவில்லை. தவறான புரிதலைத் தரும் வார்த்தைகள் என் கேள்விக்குள் வந்துவிட்டன. மீண்டும் என் மன்னிப்பைக் கோருகிறேன். சொல்லுங்கள். மதுராந்தகன் எங்கு இருக்கிறார்? ஏன் அமைதியாக இருக்கிறார்? மதுராந்தகனுக்கு ஐம்பது வயதாகி விட்டது. மனித வாழ்வில் சரி பாதி வயது. சோழ குடிகளின் அன்பைப் பெற்ற மதுராந்தகனை இளவரசனாக, சக்கரவர்த்தி இன்னும் மகுடாபிஷேகம் செய்து வைக்கவில்லையே?”
பண்டிதர் அமைதியாக இருந்தார்.
“அரசாங்க அதிகாரிகள் எல்லோருமே இப்பொழுது வெளிப்படையாக முணுமுணுக்கிறார்கள். சக்கரவர்த்தி ஆணையிட்டால் படை நடத்திச் செல்வதற்கும், எதிரிகளை அடக்கி, சோழ தேசத்தில் அமைதியை உண்டாக்குவதற்கும் மட்டும்தான் நம் இளவரசரா? இப்பணிகளைச் செய்யப் படைத்தளபதி போதுமே? தலைநகரம் பக்கமே வராமல், இன்னும் கச்சிப்பேடு (காஞ்சிபுரம்) பொன்மாளிகையில் எத்தனை காலத்திற்குதான் இருக்க முடியும் மதுராந்தகனால்? சோழ தேசத்தின் தலைநகரத்தில் இல்லாமல், இளவரசன் நாட்டின் எல்லையில், படைவீடுகள் நிரந்தரமாக இருக்கும் கச்சிப்பேட்டில் ஒரு வீரனைப் போல் தங்கியிருப்பது, எதிரிகளை அச்சுறுத்தப் பயன்படலாம். தேசத்தின் நிர்வாகத்தில் இளவரசன் எப்பொழுதுதான் பங்கெடுப்பது?”
“நீ கேட்பது சரிதான். குடிமக்களாகிய நமக்கே இந்த நியாய அநியாயங்கள் தெரியும்போது, நம்மை ஆளும் அரசனுக்குப் புரியாதா என்ன? சக்கரவர்த்தியின் பெயரால் சோழ தேசத்தின் வெற்றியெல்லாம் கொண்டு வந்தவர் நம் இளவரசன் மதுராந்தகன். அவரை இளவரசனாக்க நம் சக்கரவர்த்திக்கு என்ன தயக்கம்? உடனிருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் கருவூர்த் தேவருக்குக் கூடவா இந்த நியாயம் புரியவில்லை? நான்தான் மதுராந்தகனைத் தூண்டிவிடுகிறேன் என்று சக்கரவர்த்திக்குத் தகவல் சொல்லிக் கொண்டிருப்பதும் அவர்தாம். சக்கரவர்த்தி மீது வருத்தப்படுவதற்குத் தனிப்பட்ட விதத்தில் எனக்கு என்ன காரணம் இருக்கிறது? மதுராந்தகரின் மகன்களுக்கே திருமணமாகிவிட்டது. அவர்களுக்கு முன்னால், தந்தைக்கு அங்கீகாரம் வேண்டுமல்லவா?”
“மதுராந்தகனின் மூத்த மகன் ஜெயம்கொண்டான் இன்று உயிரோடு இருந்தால், அவருக்கே இளவரசு பட்டம் சூட்டும் வயதாகியிருக்குமே?”
“ஆமாம். ஜெயம்கொண்டான் பிறக்கும்போது நம் இளவரசனைப் போலவே இருந்தவன். சாளுக்கியர்களுடான போரில் கொல்லப்பட்டான்.”
சூரியனின் இளம் மஞ்சள் கதிரொளி கோயிலுக்குள் விழ ஆரம்பித்தது. சூரியனின் குளிர்ந்த முதல் கதிர் தன்மேல் விழுந்ததும், பண்டிதர் எழுந்தார். இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திச் சூரியனை வணங்கியபடி சூரிய மந்திரத்தை முணுமுணுத்தார்.
“உயிர்களைத் தழைக்கச் செய்யும் ஆதியும் அந்தமுமான நெருப்புக் கடவுளே, நீயே இந்த வாழ்வின் ஆதாரம்” என்றபடி நின்ற இடத்தில் சர்வங்கமும் தரையில் பட, சூரியக் கடவுளை வணங்கினார்.
பரிசாரகர் திருவாதிரைக் களி பற்றி நினைவூட்டினார்.
“என் அப்பன் அக்னி பகவானின் முதல் கதிரை உடல் முழுக்கத் தழைக்கவிட்ட பிறகு உணவெதற்கு! அச்சிறு நெருப்பில் நாள் முழுக்க இந்தச் சிறு வயிறு குளிர்ந்து கிடக்கும். இன்று சூரியனின் கடைசிக் கதிரொளி மறையும் வரை ஒரு வாய் உணவும் கிடையாது.”
“அதற்குதான் நான் சொல்லிக் கொண்டிருந்தேன் குருநாதரே, பிரசாதம் மட்டுமாவது சாப்பிடுங்கள் என்று.”
“இருக்கட்டும், இருக்கட்டும். உணவிலா நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? பரிசாரகரே, உங்களுக்குக் கிள்ளை கடலோடிகளுடன் தொடர்பு உண்டுதானே? கிள்ளையின் கடலோடிகள் மதுராந்தகனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள். நீங்களும் அந்தப் பகுதிக்காரர்தாமே? என்னிடம் எதையும் மறைக்க வேண்டாம். நான் பலமுறை சூசகமாகவும், சிலமுறை நேரடியாகவும் மதுராந்தகனிடம் சொல்லிவிட்டேன். சோழ சைன்யம் மொத்தமும் மதுராந்தகனுக்குக் கட்டுப்பட்டது. சக்கரவர்த்தி ராஜராஜன் படை நடத்தி இருபது வருடங்களுக்குமேல் ஆகிறது. சக்கரவர்த்திக்கு இளம் தளபதிகளோடு நேரடி அறிமுகம் இல்லை. பட்டத்தரசி லோக மாதேவியோடு விசலூரில் பிள்ளை வரம் கேட்டுத் தங்கக் கட்டிகளை வைத்துத் துலாபாரம் செய்கிறார். அவருடைய பட்டத்தரசியோ தங்கத்தில் செய்த பசுவின் பிறப்புறுப்பு வழியாக வெளியேறி, இரண்ய கர்ப்பம் செய்கிறார். பசுவின் கர்ப்பத்தில் இருந்து பிறந்ததால் புதுப் பிறவி ஆகிவிடுவாராம். புதுப் பிறவி எடுத்தவுடன் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார் லோக மாதேவி.
என்னை போன்று சோழ சாம்ராஜ்யத்தின் நலம் விரும்பிகள் கொதிப்படைந்துள்ளனர். எழுபது வயதில் சக்கரவர்த்தி குழந்தை வரம் வேண்டிக்கொண்டிருக்கிறார். ஐம்பது வயதைக் கடந்துவிட்டார் இளவரசர். அவருக்கு இளவரசராக மகுடாபிஷேகம் செய்யும் எண்ணமே இன்றி தனக்குப் பிள்ளை வரம் வேண்டுகிறார். படை நடத்த, கோயில் கட்ட, பொன், பொருள் கொடுக்க மட்டும் மதுராந்தகன் வேண்டும். விசலூர்க் கோயிலில் ஆட்சிக் கட்டிலுக்குப் புதிய வாரிசுக்கான வேண்டுதலா? வெளிப்படையாக நான் இதையெல்லாம் பேசினால் மதுராந்தகன் பேச்சை மாற்றிவிடுகிறார். செய்து வைத்ததுபோல் அழகான கை, கால்கள், அழகிய முகம், பல் வரிசை, பரந்து விரிந்த தோள்கள், பிடரி வரை தொங்கும் கறுப்பு கேசம் என்று மன்மதனின் பூலோக மாற்றுபோல நடை பயிலும் மதுராந்தகன் இளவரசன் ஆவதற்குக்கூட தகுதியில்லையா? தன்னுடைய நாற்பத்தைந்து வயதில் சக்கரவர்த்தி முழு அதிகாரத்திற்கு வந்துவிட்டார். ஐம்பது வயதிலும் அரசரின் அங்கீகாரத்திற்குக் காத்திருக்கும் மதுராந்தகனின் நிலையை எப்படிச் சொல்வது?”
“பேரரசர் ராஜராஜன் இருபத்து அய்ந்து வயதில் சுந்தர சோழனின் இளவரசராகப் பதவிக்கு வந்தார். ராஜராஜனின் முப்பது வயதில் தந்தை சுந்தர சோழன் இறந்துவிட்டார். ராஜராஜனால் அரசனாக முடியவில்லை. சுந்தர சோழனின் பெரியப்பா கண்டராதித்தனின் மகன் என்ற முறையில் உத்தம சோழனுக்கு அரசனாகும் வாய்ப்புக் கிடைத்தாலும், அவர் அரசராக நியமிக்கப்பட்ட அன்றைய தேதியிலேயே ராஜராஜன் இளவரசர் என்று அறிவிக்கப்படவில்லையா? பதினைந்து ஆண்டுகள் உத்தம சோழனிடம் இளவரசனாகவும் இணை ஆட்சியாளனாகவும் இருந்துவிட்டுப் பதினைந்தாவது வருடம் உத்தம சோழன் பதவி விலகியவுடன் ராஜராஜன் அரசராகவில்லையா? மதுராந்தகன் மீது ஏன் இந்தப் பாராமுகம்? மதுராந்தகனுக்குப் பொறுமை அதிகம். நமக்குப் பொறுமையில்லை. இன்று மார்கழித் திருவாதிரை. மதுராந்தகனின் திருநாள். இன்று இந்தக் கோயிலில் நாம் செய்யப் போகும் ஒரு காரியம் சக்கரவர்த்தியின் காதுகளுக்குச் செல்ல வேண்டும்.”
பரிசாரகருக்கு அதிர்ச்சி. பண்டிதரின் முடிவு தேசத்திற்கு நல்லது செய்யுமா என்பது ஒருபக்கம். அரசருக்குத் தெரிந்தால் தங்களின் நிலை என்னாகுமோ என்ற அச்சமும். இதனால் மதுராந்தகனுக்கு அவப்பெயர் உண்டானால் என்ன செய்வது என்று குழப்பம்.
காலைச் சந்தி பூசை முடிந்து, இறைவனுக்குத் திருஆராத்தி நடைபெறுவதைக் கோயிலின் மணி ஓசை சொன்னது. திருக்கோயிலில் திருஆராத்தி நேரத்தில் பரவும் இதமான உணர்வைக் கடந்து மெல்லிய வெப்பம் பரவிக் கொண்டிருப்பதைப் பரிசாரகர் உணர்ந்தார்.
“பண்டிதரே, மதுராந்தகனுக்குத் தெரிந்தால் நம் மீது வருத்தப்பட மாட்டாரா?”
“நம்மை ஆள்வது தில்லை அரசன் மட்டுமே. எம்பெருமானுக்கு மட்டுமே நாம் கட்டுப்பட்டவர்கள். எம்பெருமான்தான் என்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறார். ராஜராஜனுக்கு உடல்நிலை சரியில்லை என்று மதுராந்தகனுக்குத் தெரியும். தஞ்சாவூர்க் கோயில் கட்டுமானத்தை மேற்பார்வையிடும்போது இருமுறை சக்கரவர்த்தி மயங்கி விழுந்தது நமக்கே தெரியும்போது மதுராந்தகனுக்குத் தகப்பனின் உடல்நிலை பற்றி தெரியாதா? இளவரசருக்கு ஒவ்வொரு தேசத்திற்கும் பெரும் சைன்யத்துடன் செல்ல வேண்டும். வெற்றி பெற வேண்டும். வெற்றி பெற்ற நாடுகூட வேண்டியதில்லை. தோற்கடிக்கப்பட்ட ஆட்சியாளரிடமே நாட்டைக் கொடுத்துவிட்டு, அடுத்த நாட்டுக்குச் செல்ல வேண்டும். போர்க்களத்திலேயே வாழ்நாளின் சரிபாதியைக் கடந்துவிட்ட இளவரசனுக்கு ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் குறைந்து விட்டது. போரில் வென்று தலைநகர் திரும்பும்போது இளம் பெண்கள் இடுப்பில் கட்டிய கிண்கிணி மணிகள் சிணுங்க வரவேற்புக் கொடுத்தால் போதும், மகிழ்ந்துவிடுவார். மதுராந்தகன் செய்ய வேண்டிய பணிகளுக்காகக் காலம் காத்துக் கொண்டிருக்கிறது. அவர் வலப்புறத் தோளில் உள்ள சங்கு, சக்கரம் அவரைத் திருமாலின் அம்சம் என்கிறது. அதனால்தான் அவரின் திருநாளில் கோவிந்தராஜப் பெருமாளின் சன்னதியில் வந்து உட்கார்ந்துவிட்டேன். இன்று இரவு தில்லைக் கோயிலில் சிவ பூசையை நிறுத்துங்கள்.”
பரிசாரகருக்குப் பின்னிருந்து யாரோ ஓங்கித் தலையில் அடித்ததுபோல் இருந்தது. அருகில் இருந்த தூணைப் பிடித்துக் கொண்டார். “பண்டிதரே! என்ன இது? உங்கள் வாயில் இந்த வார்த்தை வரலாமா? உங்களை நடமாடும் சிவன் என்றும், நீங்கள் இருக்குமிடத்தில் குடியிருக்க விரும்பி, சிவன் கோயிலிலிருந்து கிளம்பி உங்களோடு தங்குவதற்கு வந்துவிட்டார் என்றும் மதுராந்தகன் சொல்லுவதைக் கேட்டிருக்கிறேனே? நீங்களே சிவ பூசையை நிறுத்தச் சொல்வது தகுமா?”
“பரிசாரகரே, இதுவே சிவ விருப்பமாக இருந்தால் என்ன சொல்வீர்கள்? சக்கரவர்த்தியை நாம் இப்படித்தான் நிர்ப்பந்திக்க முடியும். மதுராந்தகனுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறவில்லையென்பதை அமைச்சர்களும், அதிகாரிகளும் மறந்தே போய்விட்டார்கள். மதுராந்தகனுக்குக் கவலைப்படுவதற்குக்கூட நேரமில்லை. தந்தையின் ஆணைகளை நிறைவேற்றுவதற்காகப் போர்க்களங்களுக்கு ஓடிக்கொண்டிருக்கிறார். நாமே சக்கரவர்த்திக்கு நினைவுபடுத்த வேண்டிய நிலையில் உள்ளோம். கிள்ளையிலிருந்து நாளை இலங்கை செல்லவிருக்கும் படையைப் பிரம்ம தேசத்தவன் மூவேந்த வேளான் தலைமை ஏற்று வழி நடத்தப் போகிறான். இலங்கைக்குச் செல்லும் சைன்யம், இலங்கைச் செல்ல மறுத்துக் கலகத்தில் ஈடுபடட்டும். மூவேந்த வேளான் என் உத்தரவுக்காகக் காத்திருப்பான். நாளும் நேரமும் சொல்லிவிட்டால் போதும், அவன் கலகத்தில் ஈடுபடுவான். அவன் நிகழ்த்தும் கலவரம் சக்கரவர்த்தியின் காதுக்குச் செல்லும். அதேநேரத்தில் தில்லை கோயில் ஓதுவார்கள் மார்கழித் திருவாதிரை பூசையை நிறுத்தினர் என்ற தகவலும் போய்ச் சேர வேண்டும். சக்கரவர்த்தி நம் கோரிக்கைக்குச் செவி சாய்ப்பார். மதுராந்தகனை இணை ஆட்சியாளனாக நியமிப்பார்.”
“நம் மீது நடவடிக்கை எடுத்தால்? பிரம்மதேசன் மூவேந்த வேளானைக் கைது செய்யச் சொல்லி சக்கரவர்த்தி தனக்கு நெருக்கமான கைக்கோளப் படைக்கு உத்தரவு இட்டால்?”
“நீ சொல்வது சரிதான். சக்கரவர்த்திக்கு எதிராக நடப்பவர்களுக்குக் கைக்கோளப் படையினரால் ஆபத்து நிச்சயம். அந்த இடத்திலேயே மரண தண்டனையை நிறைவேற்றிவிடுவார்கள். ஆனால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. தில்லை திருக்கோயில் ஓதுவார்களுக்கும், கிள்ளையிலிருக்கும் சைன்யத்திற்கும், சைன்யத்தை நடத்தும் மூவேந்த வேளானுக்கும், ஏன் எனக்கும், உங்களுக்கும் கைக்கோளப் படையால் அழிவு வருகிறது என்றால் வந்துவிட்டுப் போகட்டும்.”
“நான் அதிகமாகப் பேசுகிறேன் என்று பண்டிதர் நினைத்துக் கொள்ளக்கூடாது. நமது நோக்கம் சக்கரவர்த்திக்கு அழுத்தம் கொடுத்து மதுராந்தகனுக்குப் பதவி கொடுக்க வைப்பதா? அல்லது மதுராந்தகன் தனது முக்கியத்துவத்தைச் சக்கரவர்த்திக்கு உணர்த்தி அவருக்கான அதிகாரத்தைப் பெற வைப்பதா?”
“இரண்டும் ஒன்றுதான்.”
“மன்னியுங்கள் பண்டிதரே, அருள்கூர்ந்து நான் சொல்வதைப் பரிசீலியுங்கள். மதுராந்தகன் தந்தையை எதிர்க்கத் துணிந்துவிட்டான் என்றால் சோழ தேசத்திற்கு நல்லதில்லை. சக்கரவர்த்திக்கும் மகன் மதுராந்தகன் மீது அன்பும், மதிப்பும் இருக்கிறது. அங்கீகாரம் தரத்தான் ஏனோ மனம் இல்லை. பண்டிதரே! இன்று மார்கழித் திருவாதிரை பூசை நடக்கட்டும். நாளை இலங்கை செல்லும் படை கிள்ளையிலிருந்து கிளம்பட்டும். தில்லை நகருக்கு மதுராந்தகன் இன்று வரட்டும். இரவு நடக்க இருக்கும் மார்கழித் திருவாதிரை உற்சவத்தில் கலந்துகொண்டு தனது திருநாளில் அவர் தான தர்மங்கள் வழங்கட்டும். அருளாளரும், வாழும் சிவனுமாகிய தாங்கள் மதுராந்தகன் சிரசு மீது மலர் தூவி வாழ்த்துங்கள். மதுராந்தகன் இரண்டு நாளில் பொங்கி எழுவார்.”
“என்னப்பா சொல்லுகிறாய்? எனது அறிவுரைக்குக் கட்டுப்படாத மதுராந்தகன் எப்படி இரண்டு நாளில் பொங்கி எழுவார்? பட்டறிவுக்குப் புலனாகாத ஒரு செய்தியைச் சொல்லுகிறாயே?”
“நீங்கள் லௌகீக வாழ்க்கையை விட்டுத் தவ வாழ்க்கை வாழ்பவர். உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அன்பான பெண் ஆயிரம் யானை பலம் உடையவள்.”
பரிசாரகர் எந்தப் பெண்ணைச் சொல்லுகிறார் என்று பண்டிதர் யோசித்தார்.
“யார் அந்த ஆயிரம் பலம்கொண்ட பெண்? மதுராந்தகனுடன் இருக்கும் பெண்களில் யாரைக் குறிப்பிடுகிறாய்? சமீபத்தில் போர் எதுவும் நடைபெறவில்லையே? அந்நிய தேசத்தில் இருந்து பெண்கள் யாரும் புதிதாக வந்திருக்கிறார்களா? மதுராந்தகனின் மகள் அம்மங்கையா, சகோதரி குந்தவையா அல்லது மதுராந்தகனின் தாய் திருபுவன மாதேவியா? யார் மூலம் மதுராந்தகன் பொங்கி எழப் போகிறார்?”
“இவர்கள் யாரும் இல்லை. மதுராந்தகனின் மகள், மனைவி, சகோதரி, தாய் என்று யார் மூலமும் அவரை வசப்படுத்த முடியாது.”
“பின்பு?”
“நீங்கள் சொன்ன உறவுமுறை எல்லாவற்றையும் ஒன்றாகக் கொண்டவள்.”
“எந்த நாட்டு இளவரசி?”
“இளவரசியெல்லாம் இல்லை. நீங்கள் சொன்னீர்களே, கிள்ளையிலிருந்து இலங்கைக்குச் செல்லும் சைன்யத்தைத் தலைமையேற்று நடத்தப் போகும் மூவேந்த வேளான், அவனின் சகோதரி. எண்ணாயிரம் பள்ளியில் படித்தவள்.”
“அப்பெண்ணை மதுராந்தகன் எங்கு பார்த்தார்?”
“இளவரசனாக முடியாத வருத்தத்தில், மதுராந்தகன்தான் கல்விப் பணியும் கலைப் பணியும் செய்யக் கிளம்பிவிட்டாரே? பாதி நாள் திருவாரூரில் இருப்பார். இப்பொழுது திருவாரூர் பக்கமும் செல்வதில்லை. இப்பெண்ணோடுதான் இருக்கிறார்.”
“நான் அவளைப் பார்க்க வேண்டும்.”
“அவளைத் தேடி எங்கும் போக வேண்டாம். இன்று இரவு மதுராந்தகனின் திருநாள் பூசையின்போது ஆடவல்லானைத் தரிசிக்க அந்தப் பெண் வருவாள்.”
“இன்று மதுராந்தகனுடன்தான் இருக்கிறாளா?”
“இன்று மட்டும் இல்லை. என்றும், எப்பொழுதும், ஒரு நாழிகையும் பிரிவதில்லை.”
“அப்படியா? அவள் ஊர்?”
“பிரம்மதேசம்.”
“பெயர்?”
“வீரமா தேவி.”
- தொடரும்
*ஆட்சியாண்டு: அரசன் பதவியேற்ற நாள் முதல் கணக்கிடப்படும் வருடக் கணக்கு