சிறுகதை

5.18k படித்தவர்கள்
92 கருத்துகள்

தான் உண்டாகிவிட்டோமோ என்று வினோதினிக்குச் சந்தேகமாக இருந்தது.

கணவன் மாதவ் முன்னால் வந்து நின்றாள்.

“என் கிட்டே சேஞ்ச் ஏதாவது தெரியுதா?”

“தெரியல்லே”

“சேஞ்ச் இருக்குங்க. வாங்க. டாக்டர்கிட்டே போலாம்”

“சேஞ்ச் இருந்தா டவுன் பஸ்ல போ. டாக்டர் கிட்டே ஏன் போறே?”

“இது லேடீஸ் சம்பந்தப்பட்டது”

“லேடீஸ்க்கு பஸ்ல டிக்கெட்டே இல்லே. சேஞ்ச்கூட வேணாம்”

“குறுக்க குறுக்கப் பேசாதீங்க. நான் கொஞ்சமா கர்ப்பம் ஆயிட்டேனோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு”

“டாக்டர் கிட்டே போய் கொஞ்ச நஞ்ச சந்தேகத்தைத் தீர்க்கணும். அப்படித்தானே?  வா. போலாம்”

காரில் போகும் போது ப்ளம் கேக் சாப்பிட்டுக் கொண்டே வந்தாள்.

“ஆனாலும் நீ ஓவராத் திங்கறே. உடம்பு எப்படி ஊதிப் போய் இருக்கு பாரு”

“அய்யே. இது கர்ப்பமா இருக்கறதால வந்த உப்பல்”

“கல்யாணத்துக்கு முன்னாலயும் கர்ப்பமா இருந்தியா?”

வினோதினி முறைத்தாள்.

கார் அந்த பிரசவ ஆஸ்பத்திரியை அடைந்தது.

“என்னங்க..பெரியம்மா பிரசவ ஆஸ்பத்திரின்னு போர்டு போட்டிருக்கு?” என்றாள் வினோதினி.

“நல்லாப் பாரு. அது பிரம்மா பிரசவ ஆஸ்பத்திரி. பிரம்மான்னா நான்முகன். இந்த ஆஸ்பத்திரிக்கு நாலு ப்ராஞ்ச் இருக்கு இந்த ஊர்ல”

”பிரம்மாங்கற பேர் புதுசா இருக்கே?”

“பிரம்மா தானே படைக்கறாரு. அதனால இருக்கலாம்”

ஆஸ்பத்திரியின் உள்ளே நுழைந்தார்கள். பிரம்மாண்டமாய் இருந்தது வரவேற்பறை.

“என்ன விஷயம்” என்றாள் ரிசப்ஷனில் இருந்த பெண். ‘கற்பகம்’ என்று நேம் பேட்ஜ் குத்தியிருந்தாள்.

“என்ன விஷயம்” என்றாள் மறுபடியும்.

“என் ஒய்ப் திடீர்னு கர்ப்பமாயிட்டாங்க. நேத்து ராத்திரி கூட நார்மலா இருந்தா”

“இப்போ உங்களப் பார்த்தா தான் நார்மலா இல்லாத மாதிரி இருக்கு”

“நான் அர்ஜெண்டா டாக்டரைப் பாக்கணும்” என்றான் மாதவ்.

“பாஸ்டன் பிரம்மாவையா?”

“பாஸ்டன் பிரம்மாவா? பரலோகத்துலதானே பிரம்மா இருப்பாரு?”

“அமெரிக்கால இருக்கற பாஸ்டன் ஆஸ்பத்திரில வேலை செஞ்சவரு பிரம்மா. அதனால பாஸ்டன் பிரம்மா. இப்போ யாருக்கு கன்சல்டிங் செய்யணும்?”

“இவளுக்குத்தான். பேர் வினோதினி”

சாக்லேட் சாப்பிட்டுக் கொண்டிருந்த வினோதினியைப் பார்த்தாள் கற்பகம். இவளுக்கு பெருந்தீனி என்று பெயர் வைத்திருக்கலாமோ என நினைத்தாள்.

பதினேழாம் நம்பர் டோக்கன் எடுத்துக் கொடுத்தாள். அதை வினோதினி கையில் கொடுத்தான் மாதவ்.  

“முன்னால இருக்கற பதினாறு பேர் கர்ப்பம் ஆயாச்சுன்னா பதினேழா நீ கர்ப்பம் ஆயிடலாம்” என்றான் மாதவ்.

வினோதினி முறைத்தாள்.

இருவரும் காத்திருந்தார்கள். நேரம் ஓடிக் கொண்டிருந்தது.

“வினோ. குழந்தை வயித்துல எட்டி உதைக்குதா?”

“என்ன உளர்றீங்க?”

“இல்லே. ரொம்ப நேரமா வெயிட் பண்ணிக்கிட்டிருக்கோம். அதான் கேட்டேன்”

வினோதினி கையில் இருந்த டோக்கனையே பார்த்துக் கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள்.

பக்கத்தில் இருந்த  பெண் மெதுவாக அவளிடம் பேச ஆரம்பித்தாள்.

“எனக்கு மூணு மாசம் ஆகுது” என்றாள்.  வினோதினி காதில் அது விழவில்லை.

“எனக்கு மூணு” என்றாள், அந்தப் பெண் மறுபடியும்.

“எனக்குப் பதினேழு” என்றாள் வினோதினி. அந்தப் பெண் பயந்து விட்டாள்.

ஒரு மணி நேரத்தில் “டோக்கன் பதினேழு” என்று அழைத்தாள் பென்சில் மாதிரி இருந்த ஒரு பெண். இருவரும் டாக்டர் அறைக்குள் நுழைந்தார்கள்.

தொலைக்காட்சி விளம்பரப் படத்தில் வரும் டாக்டர் போல் குறுந்தாடியுடன் ஒருவர் இருந்தார்.

அநேகமாக அவர்தான் பிரம்மாவாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தான் மாதவ். அவர் அருகே அஞ்சலி தேவி மாதிரி ஒரு பெண் இருந்தார். அவரும் வெள்ளைக் கோட் போட்டிருந்தார்.

“சொல்லுங்க” என்றார் பாஸ்டன் பிரம்மா. அந்த ‘சொல்லுங்க’வில் ஐம்பது ரூபாய் பீஸ் செலவானது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“தான் உண்டாயிட்டான்னு இவ சொல்றா. அது உண்டா இல்லயான்னு நீங்க சொல்லணும்”

வினோதினியைப் பார்த்தார் பிரம்மா.

“கைய நீட்டுங்க” என்றார்.

இவர் பிரசவம் பார்க்கும் டாக்டரா அல்லது பெசண்ட் நகர் பீச்சில் கை ரேகை பார்க்கும் நபரா என ஒரு நிமிடம் குழம்பிப் போனான் மாதவ்.

“கை ரொம்ப ஷேக் ஆகுதே” என்றார் பிரம்மா.

“கைல போன் இல்லேன்னா அவளுக்கு அப்படித்தான் ஷேக் ஆகும். போன் கைல கொடுத்தா நார்மல் ஆயிடுவா”

பிரம்மா சிறிது நேரம் யோசித்தார். பிறகு தன்னருகே இருக்கும் அஞ்சலிதேவியை அறிமுகப்படுத்தினார்.

“இவங்க என் ஒய்ப். சிகாகோ ஷீலா. சிகாகோலேர்ந்து வர்ராங்க”

வினோதினியைப் பார்த்தார், சிகாகோ ஷீலா.

“நீங்க என்கூட வாங்க”

“சிகாகோவுக்கா டாக்டர்?”

“அடுத்த ரூமுக்கு வாங்க. செக் செய்யணும்”

வினோதினி உள்ளே போனாள். சற்று நேரத்தில் இருவரும் வெளியே வந்தார்கள்.

வினோதினிக்குக் கை கொடுத்தார் ஷீலா.

“கன்பர்ம் ஆயிடுச்சு. நீங்க அம்மா ஆகப் போறீங்க”

“தாங்க்ஸ்” என்றாள் வினோதினி.

மாதவ்விடம் கையைக் கொடுத்தார் ஷீலா.

“கன்க்ராட்ஸ். நீங்க அப்பா ஆகப் போறீங்க”

“நீங்க பிரசவம் பாக்கப் போறீங்க” என்று ஷீலாவுக்குக் கை கொடுத்தான் மாதவ்.

“கரெக்ட்” என்றார் பிரம்மா.

“எங்க ஆஸ்பத்திரிலயே டெலிவரி வைச்சிக்குங்க”

“எதுக்குச் சொல்றீங்க டாக்டர்?”

“பொதுவா வயித்துல இருக்கற குழந்தை அதுவா இஷ்டம் போல வளரும். ஆனா எங்க ஆஸ்பத்திரில அட்மிட் ஆனா நாங்க சொல்றபடி வளரும். குழந்தையோட எதிர்காலத்தை கருவுலயே முடிவு செஞ்சிடலாம். உங்களுக்கு எந்த மாதிரி குழந்தை வேணும்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி இப்பவே மருந்து மாத்திரை கொடுக்க ஆரம்பிச்சிடலாம்”

“புரியல்லே” 

“பிற்காலத்துல உங்க குழந்தை என்னவா ஆகணும்னு நீங்க பிரியப்படறீங்களோ அதை இப்பவே அம்மாவோட வயித்துல இருக்கறப்பவே முடிவு பண்ணிடலாம்”

“எப்படி டாக்டர்?”

“அதுதான் என் ஆராய்ச்சி. பல வருஷம் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சிருக்கேன். அடுத்த வாரம் உங்க மனைவிக்கு ஒரு ஊசி போடுவோம். அதுக்கப்புறம் ரெண்டு மாசம் ஆஸ்பத்திரில தங்கணும். பல டெஸ்டுகள் எடுப்போம். மருந்துகள் கொடுப்போம். குழந்தை நல்லபடியா பிறக்கும். நீங்க நினைச்ச மாதிரியே வளரும். சுருக்கமா சொன்னா குழந்தையை நாங்க டிசைன் பண்ணுவோம். டிசைனர் பேபி”

“இதெல்லாம் நடக்குமா?”

“நடக்கும். உங்க குழந்தை எஞ்சினீயரிங் படிக்கணுமா... டாக்டருக்கு படிக்கணுமா... விஷுவல் கம்யூனிகேஷன் படிக்கணுமான்னு இப்பவே முடிவு பண்ணிடலாம். அது கொஞ்சம் கூட மாறாம நடக்கும். நான் நூறு சதவிகிதம் கியாரண்டி தர்ரேன்”

“பயமா இருக்கு டாக்டர்”

“பயப்பட வேணாம். நாலு வருஷமா இதைச் செஞ்சிக்கிட்டு வர்ரேன். இதுவரைக்கும் நூத்துக்கணக்கானவங்க பலன் அடைஞ்சிருக்காங்க. அது மட்டும் இல்லே. இந்தக் கண்டுபிடிப்பை நான் இலவசமா மத்த ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கிக்கிட்டு வர்றேன். இன்னும் இருபது வருஷம் கழிச்சு ஊர் முழுக்க டிசைனர் பேபிதான் இருக்கும்”

“நிஜமாவா டாக்டர்? என் பையன் கிரிக்கெட் ப்ளேயர் ஆகணும்னா கூட அதே மாதிரி ஊசி போட்டுடுவீங்களா?”

“ஆமா... எத்தனை செஞ்சுரி அடிக்கணும்னு இப்பவே சொல்லிட்டீங்கன்னா அதுக்குத் தகுந்த மாதிரி ஊசி போட்டுடுவோம். கடைசி பால்ல சிக்ஸர் அடிக்கணும்னா அதுக்கு ஸ்பெஷல் சிரிஞ்ச் இருக்கு. ஆனா ஊசியை உங்க மனைவிக்கு சரியான இடத்துல போடணும். கொஞ்சம் விலகிப் போனாலும் பிறக்கற பையன் வைட் பாலா போலிங் போட்டுக்கிட்டிருப்பான்”

மாதவ், வினோதினி பக்கம் திரும்பினான்.

“உனக்கு கிரிக்கெட் ப்ளேயர் ஊசி போட்டுடலாமா?”

“வேணாம். அப்புறம் ஏதாவது மாடல் அழகி மாட்டுப் பொண்ணா வந்துடுவா” என்றவள், திடீரென சந்தேகத்துடன் கேட்டாள்.

“டாக்டர். நீங்க சொல்றதெல்லாம் நல்லாத்தான் இருக்கு. இதுக்கெல்லாம் எங்கே ஆதாரம்?”

“இருக்கே” என்றார் பிரம்மா.

“சில விலாசங்கள் தர்றேன். போய் நீங்களே செக் பண்ணிப் பாக்கலாம்”

டாக்டர் கொடுத்த முதல் விலாசத்துக்கு போனார்கள்.  ஓர்  ஆண் குழந்தை. மூன்று வயதிருக்கும். ஒரு மிக்ஸியை தலைகீழாகப் போட்டு ஏதோ குடைந்து கொண்டிருந்தது.

“மில்கி பார் சாக்லேட் சாப்பிட வேண்டிய குழந்தை ஏன் மிக்ஸியைக் குடையுது” என்று கேட்டான் மாதவ்.

“இது மிராக்கிள் குழந்தை. மிக்ஸி மட்டுமா? நேத்து எங்க அபார்ட்மெண்ட் ஜெனரேட்டரையே ரிப்பேர் பண்ணிடுச்சு”

“எப்படிங்க இந்த வயசுல?”

“பாஸ்டன் பிரம்மா க்ளினிக்ல எஞ்சினீயர் ஊசி போட்டு பிறந்த குழந்தை இது. இன் ஃபாக்ட், அந்த ஆஸ்பத்திரில இப்போ  நாலாவது மாடி கட்டறாங்க இல்லே. அதுக்கு  எலெக்ட்ரிகல் ஒயரிங் காண்டிராக்ட் இந்தக் குழந்தைதான் எடுத்திருக்கு”

“எதுக்கும் புது பார்லிமெண்ட் கட்டற காண்டிராக்ட்டும் குழந்தைக்குக் கிடைக்குமான்னு பாருங்க” – கூறிவிட்டு வெளியே வந்தான் மாதவ்.

அவனுக்கு எதையுமே நம்பமுடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை.

அடுத்த விலாசத்துக்குப் போனார்கள்.

ஒரு குழந்தையின் பொருட்களை ஓர் அறையிலிருந்து அடுத்த அறைக்கு மாற்றிக் கொண்டிருந்தார்கள்.

“என்ன சார் செய்யறீங்க?” என்றாள் வினோதினி.

“குழந்தை ரூமை மாத்தறோம்”

‘“ஏன்?”

‘“அதை ஏன் கேக்கறீங்க? இது வரைக்கும் நாலு ரூம் மாத்தியாச்சு. மூணு மாசத்துக்கு ஒரு ரூம் மாறிக்கிட்டே இருக்கு”

“அதான் எதுக்குன்னு கேட்டேன்?”

“இந்தக் குழந்தைக்கு ஐ.ஏ.எஸ். ஊசி போட்டிருக்கு. எதிர்காலத்துல ஐ.ஏ.எஸ். ஆபிசர் ஆகப் போகுது. இப்போலேந்து அடிக்கடி டிரான்ஸ்பர் ஆகிட்டிருக்கு”

அடுத்த வீட்டுக்குப் போனார்கள். வாசலிலேயே ஒரு பெண் குழந்தை இருந்தது. அவர்களைப் பார்த்ததும் கை கூப்பி வணங்கியது.

“உல்லே வாருங்கல்” என்றது. வினோதினி விழித்தாள்.

“நழ்வறவு” என்றது, மீண்டும் குழந்தை.

“புரிஞ்சு போச்சு. இந்தக் குழந்தை டி.வி. அறிவிப்பாளர் ஆகப் போகுது” என்று கிளம்பினான் மாதவ்.

இருவரும் மறுபடியும் டாக்டரிடம் போனார்கள்.

“டாக்டர். மூணு வீட்ல போய் பார்த்தோம். உங்க ப்ராஜெக்ட் சரியா வேலை செய்யுது. இப்போ நாங்க என்ன செய்யணும்?”

“என்கூட வாங்க. நான் ஒவ்வொரு வார்டா காட்டறேன். நீங்க தேர்ந்தெடுக்கற வார்டுல ரெண்டு மாசம் உங்க மனைவி படுத்திருந்து சிகிச்சை எடுத்துக்கிட்டா போதும்”

ஆஸ்பத்திரியை சுற்றிப் பார்த்தார்கள். எஞ்சினீயர், கல்லூரிப் பேராசிரியர், அரசு அதிகாரி, வக்கீல், டாக்டர், பைலட் என் பல வார்டுகள் இருந்தன. அரசியல்வாதிகள் என்றும் ஒரு வார்டும் இருந்தது.

“என்ன டாக்டர்? இந்த வார்டுக்குக் கதவே இல்லே”

“இருக்கே. நல்லாப் பாருங்க. பின்பக்கமா இருக்கு”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இன்னோர் அறைக்குப் போனார்கள். அந்த  அறையில் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள்.

“இது என்ன அறை டாக்டர்?”

“இது நோய் எதிர்ப்பு சக்தி வார்டு. இந்த வார்டுல பிறக்கற குழந்தைகளுக்கு உடம்புல இம்யூனிட்டி பவர் அதிகமா இருக்கும். எதிர்காலத்துல எந்த நோயும் வராது”

“அவ்வளவுதானா? வேற எதுவும் பெருசா ஸ்பெஷல் திறமைகள் இருக்காதா?”

“நோ”

உதட்டைப் பிதுக்கிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் இருவரும்.

மறுபடியும் டாக்டர் அறைக்கு வந்தார்கள்.

“டாக்டர். ஒரு சந்தேகம். இப்போ ஐ.ஏ.எஸ். ஆகணும்னா பரிட்சை பாஸ் பண்ணனும். டாக்டர் படிக்கணும்னா நீட் பரிட்சை எழுதணும். இதெல்லாம் வேணாமா?”

“வேணாம். இங்கே ஊசி போட்ட சர்டிபிகேட் இருந்தா போதும்”

“ஓ... தேவயானி ஒரே பாட்டுல கலெக்டர் ஆனதுகூட உங்க இஞ்செக்ஷனாலதானா டாக்டர்?”

டாக்டர் ஒரு விண்ணப்பத்தைக் கொடுத்தார். 

“இதுல எந்தத் துறை வேணும்னு நீங்க பூர்த்தி செஞ்சு கொண்டு வாங்க. யோசிக்க ஒரு வாரம் அவகாசம் இருக்கு. அதுக்கு மேல டிலே செஞ்சா மருந்து வேலை செய்யாது. அதுக்கப்புறம் குழந்தை இஷ்டத்துக்கு வளரும். நாய் படாத பாடுபடும். ஏதாவது மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ் ஆயிடும். எவனாவது உருப்படாதவன் முன்னால உக்காந்து இளியும்”

“டாக்டர், நான்கூட மார்க்கெட்டிங் எக்ஸ்கியூட்டிவ்தான்”

டாக்டர் முகத்தைத் துடைத்துக் கொண்டார்.

இருவரும் வீட்டுக்கு வந்தார்கள்.

“இப்போ என்னங்க செய்யறது? நம்ம குழந்தையை என்னவாக்கலாம்? என் அம்மாவுக்குப் போன் பண்ணிக் கேக்கட்டுமா?”

அம்மாவுக்குப் போன் செய்தாள் வினோதினி.

“அம்மா ஒரு குட் நியூஸ். நான் உண்டாகியிருக்கேன்”

“சந்தோஷம். நல்லா மகாலட்சுமி மாதிரி ஒரு குழந்தையைப் பெத்துக்கோ”

“அம்மா, அந்த ஆஸ்பத்திரில மகாலட்சுமி வார்டு எல்லாம் இல்லேம்மா. மெக்கானிக்கல் எஞ்சினீயர் வார்டுதான் இருக்கு. சொல்லும்மா. குழந்தையை எந்த மாதிரி செய்யணும்?”

“குழந்தையைச் செய்யறதா? என்னடி குழிப்பணியாரம் செய்யற மாதிரி சொல்றே!”

“அம்மா, இந்த டாக்டர் ஒரு விஞ்ஞான டாக்டர். நமக்கு வேணும்கற மாதிரி செஞ்சு கொடுப்பாரு. ஒரே ஒரு ஊசி. அடுத்து ரெண்டு மாசம் ட்ரீட்மெண்ட்”

“அப்படியா? சே... என் காலத்துல இந்த மாதிரி ஊசி இல்லாமப் போயிடுச்சே”

“ஏம்மா?”

“இருந்திருந்தா உன்னை இப்படி பெத்தே இருக்க மாட்டேன்”

“அம்மா...சொல்லும்மா... உன் பேரக் குழந்தை எப்படி வளரணும்? என்னவா ஆகணும்?”

“நம்ம குடும்பத்துல யாருமே டாக்டர் இல்லே. அதனால டாக்டரா செய்யச் சொல்லு.”

“எம்.எஸ்., ஓ.கே.வா?”

“எம்.எஸ். சுப்புலட்சுமி ஆக்கப்போறியா? தினமும் குளிர்ல ஏந்திரிச்சு திருப்பதில சுப்ரபாதம் சொல்லணுமே. முடியுமா?”

“அம்மா, எம்.பி.பி.எஸ். போதுமா? எம்.எஸ். வேணுமான்னு கேட்டேன். எம்.எஸ்.னா சர்ஜன். அப்பாவுக்கு பைல்ஸ் ஆபரேஷன் செஞ்சாரே. அந்த மாதிரி சர்ஜனா ஆக்கிடலாம்”

“என்னடீ சொல்றே. அப்போ உங்க அப்பாவுக்கு இன்னொரு தடவை பைல்ஸ் வருமா?”

“அடச்சீ”  என்று போனை வைத்தாள் வினோதினி.

“என்னங்க, நம்ம குழந்தைய டாக்டர் ஆக்கிடலாம். நீட் பரிட்சை இல்லாமலே டாக்டர் ஆகறதுன்னா எவ்வளவு பெரிய விஷயம்? யாருங்க அந்த நுழைவுத் தேர்வெல்லாம் எழுதறது. காதுல கம்மல் கழட்டணும். சட்டையக் கிழிச்சு விட்டுக்கணும்”

பலத்த ஆலோசனைக்குப் பிறகு டாக்டர் ஆக்குவது என்றே முடிவெடுத்தார்கள்.  டாக்டர் பாஸ்டன் பிரம்மாவிடம் போனார்கள்.

“டாக்டர், முடிவெடுத்துட்டோம். குழந்தையை டாக்டர் ஆக்கிடலாம்”

டாக்டர் யோசித்தார்.

“பதில் சொல்லுங்க டாக்டர்”

“எதுவும் நாற்பத்தெட்டு மணி நேரம் கழிச்சுத்தான் சொல்ல முடியும்” - இரண்டு நாள் சினிமா டாக்டர் போல் பேசினார் அவர்.

இரண்டு நாட்கள் கழித்து இருவரும் டாக்டர் பிரம்மாவிடம் போனார்கள்.

“டாக்டர், வினோதினிக்கு டாக்டர் வார்டுல அட்மிஷன் போட்டுடுங்க. எவ்வளவு செலவானாலும் கொடுத்திடறேன்”

“ஓ.கே. இந்தப் படிவத்துல கையெழுத்துப் போடுங்க. எக்காரணத்தை முன்னிட்டும் இடைல வார்டு மாத்த முடியாது”

“சரி டாக்டர்” 

இரண்டு மாதங்கள் வினோதினி டாக்டர் வார்டில் இருந்தாள். டிஸ்சார்ஜ் ஆகிப் போகும் போது பிரம்மா கூப்பிட்டனுப்பினார்.

“இந்தாங்க. என்னோட உறுதி மொழிப் பத்திரம். பிறக்கப் போற குழந்தை கண்டிப்பா டாக்டர் ஆகும்”

“ரொம்ப நன்றி சார்”

“அப்புறம் ஒரு சின்ன விஷயம்” என்றார் பிரம்மா.

“சொல்லுங்க டாக்டர்”

“இந்தக் குழந்தை வளர்ந்து பெருசாகி டாக்டர் ஆகிடும். ஆனா அப்போ பேஷண்டுதான் யாரும் இருக்க மாட்டாங்க. இப்போ அட்மிட் ஆகற எல்லாரும் நோய் எதிர்ப்பு சக்தி வேணும்கற இம்யூனிட்டி பூஸ்டர் வார்டுலதான் சேர்ந்திருக்காங்க!”