அத்தியாயம் 1
வரப்பாளையம் ஊரானது மேக்கூர், கிழக்கூரென இரண்டாகப் பிரிந்திருந்தது. மேக்கூருக்கும் கிழக்கூருக்கும் நடுவாந்திரமாய் ஊர் மாரியம்மன் கோயில் இருந்தது. மார்கழி மாதத்தில் அதற்கு விஷேசம் வருடா வருடம் நடக்கும். ஒரு வாரகால சாட்டுடன் நடக்கும் திருவிழாவின் நோம்பி நாளில் ஊரிலிருக்கும் வீடுகள் அனைத்தும் சொந்த பந்த உறவுச்சனங்களால் நிறைந்து இருக்கும்.
காலையில் அம்மனுக்கு மாவிளக்கு பூஜையும், கெடா வெட்டும் இருக்கும். அடுத்த நாள் மஞ்சள் நீராட்டு விழாவில் சப்பாரத்தில் அம்மன் ஊர் முழுக்க வலம்வரும். அன்று மறுபூஜை மாலையில் நடந்து முடிந்ததும், திருவிழா முடிந்து கோயில் பூட்டப்படும். மற்றபடி அமாவாசை பூஜை மாதா மாதம் மதியம் நடக்கும்.
கோயிலையொட்டி கிழக்கே செல்வேந்திரன் மளிகைக்கடை வடக்குப் பார்த்து இருந்தது. ஊரினுள் இருக்கும் ஒரேயொரு மளிகைக்கடையும் அதுதான். கடையில் செல்வேந்திரன் இல்லாத சமயங்களில் அவன் மனைவி நின்றிருப்பாள். கோயிலின் வடபுறமாக பெரிய ஆலமரம் தார்ச்சாலைக்கு நிழலை வழங்கி நின்றிருந்தது.
எல்லா ஊரைப்போன்றே கோயிலின் கல்லுக்கட்டில் உள்ளூர் பெரியவர்கள் சிலர் காலையிலும் மாலையிலும் அமர்ந்து, உள்ளூர் விசயம் முதல் உலக விசயம் வரை பேசிக் கலைவார்கள். அவர்கள் பேச்சில் ஊகானில் பரவிய புதிய வியாதி பற்றியும் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில் வருபவர்களால் அது இந்தியாவிலும் பரவுவதாக நியூஸ் சேனலில் பார்த்து தெரிந்துகொண்டு வந்து அள்ளி வீசிக்கொண்டிருப்பார்கள்.
மேக்கூரில் முப்பது வீடுகளும் கிழக்கூரில் முப்பது வீடுகளும் அடங்கிய ஊர் வரப்பாளையம். பேருக்குத் தகுந்தது போன்றே மழையில்லா காலங்களில் புல்பூண்டுகள் காய்ந்து நில வெடிப்புகளோடு காடுகள் காய்ச்சலில் காந்திக் கிடக்கும். ஊரைச் சுற்றிலும் வேப்பைமரங்கள் சூழ்ந்த காடுகள்தான் நிரம்பியிருந்தன.
ஊர்க்காரர்கள் அனைவருக்குமே ஒரு ஏக்கராவிலிருந்து இரண்டு மூன்று ஏக்கராக்கள் நிலம், ஊரைச் சுற்றிலும் இருந்தது. மழைவரத்து குறைந்து போனதால் விவசாயம் இல்லாமல் ஆடு மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. முன்பாக விவசாயம் நடந்துவந்திருந்த காடுகளில் வறண்டுபோன கிணறுகள் அடையாளமாய் இருந்தன. அதனுள் டில்லிமுள் மரங்கள் குட்டானாய் படர்ந்திருந்தன. செம்பூத்துகளுக்கும் ஆந்தைகளுக்குமான இருப்பிடமாய் அது மாறிப்போயிற்று.
ஊரின் கிழக்கே நான்கு கிலோமீட்டர் தூரத்தில் பெருந்துறை சிப்காட் இயங்கிவந்தது. இன்னும் சற்று மேற்கே வந்திருந்தால், இவர்கள் நிலத்தையும் அரசாங்கம் சிப்காட்டுக்காட்டுக்காக எடுத்திருக்கும். ஆனால் தப்பிநின்றிருந்தது ஊர்.
மேக்கூரில் இரண்டு தறிப்பட்டறைகள் ஓடிக்கொண்டிருக்கும். மற்றபடி உள்ளூர் ஆட்கள் பலர் விஜயமங்கலம் பகுதிக்குதான் தறிக்குடோனுக்கு வேலைக்குச் செல்கிறார்கள். பெண்கள் பெருந்துறை பனியன் கம்பெனிக்கு செல்கிறார்கள். காலையில் கம்பெனி வேன்கள் ஒன்றிரண்டு ஊருக்குள் நுழைந்து பெண்களை ஏற்றிக்கொண்டு செல்கிறது. பின்பாக, மாலையில் ஏழு மணியைப் போல ஊர் ஊராய் சுற்றி, கடைசியில் மீதமிருக்கும் உள்ளூர்ப் பெண்களை இறக்கிவிட்டு காலி வேன்கள் உறுமியபடி செல்கின்றன.
ஊருக்குள் இருந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டு வருடங்கள் ஆயிற்று. பதிலாக கான்வென்ட் வேன்கள் இரண்டு, பிள்ளைகளை அழைத்துச் செல்ல ஊருக்குள் வந்துபோகிறது. சிப்காட் வழியாக பெருந்துறை செல்லும் மினி பஸ் ஒன்று, ஒரு நாளைக்கு நான்கைந்து டிரிப் செல்கிறது. ஆலமரத்தின் கிழபக்கமாகப் பேருந்து நிறுத்த நிழற்கட்டிடம் நின்றிருந்தது.
அதனுள் பொன்னான் வீட்டு கருநாய் மணியான்தான் எந்த நேரமும் படுத்திருக்கும். அதற்காகவே அரசாங்கம் கட்டிடம் கட்டித் தந்திருப்பதாய் அதற்கொரு நினைப்பிருக்கலாம். வயிறு பசித்தால் மட்டும் கிழக்கூரின் முகப்பில் இருக்கும் தன் எஜமானன் வீடு சென்று, தன் குண்டாவினுள் பழைய சோறு இருக்கிறதாவெனப் பார்த்து, சட்டியைச் சுத்தமாய் காலி செய்துவிட்டு நேராக தன் இருப்பிடத்திற்கு வந்துவிடும்.
வரப்பாளையம் கிராமத்தில் எல்லார் வீட்டிலுமே எப்படியும் பத்திருபது கோழிகள் நின்றிருந்தன. இதனால் ஊருக்குள் கோழிச் சண்டைகள் அவ்வப்போது நடைபெறுவது வழக்கம்தான். அது குடுமிப்பிடி சண்டை வரை எப்போதும் செல்லாது. வாய் வார்த்தைகளோடு முற்றுப்பெற்றுவிடும்.
ஞாயிறு என்கிறபோது உள்ளூர் சலவைத் தொழிலாளி, ஆலமரத்தின் மேற்குப்புறமாக கறிக்கடை போட்டிருப்பான். துணைக்கு அவன் மனைவியும் நின்றிருப்பாள். பத்து கிலோ வரும்படி ஒரு ஆடுதான் அறுத்துத் தொங்க விட்டிருப்பான் அவன். போக, பண்ணையிலிருந்து பிடித்து வந்திருந்த கறிக்கோழிகளை உரித்து மஞ்சள் பூசி தொங்க விட்டிருப்பான்.
மற்ற ஊர் சிறுவர்களைப்போன்றே இந்த ஊர் பொடுசுகளும் அந்தக் கறிக்கோழிக் கறியை மட்டுமே ஆர்வமாய் உண்கிறார்கள். அவர்களுக்கு ஆட்டுக்கறியோ, நாட்டுக்கோழிக்கறியோ சுவையாக இருப்பதில்லை. முகத்தை சுழித்துக்கொண்டு பெற்றோரின் வலுக்கட்டாயத்தால் ஒன்றிரண்டு துண்டுகள் சாப்பிடுவதோடு சரி.
ஞாயிறு மதியம் பன்னிரெண்டு மணிவரை அவன் கறிக்கடையில் நின்றிருப்பான். ஏனைய நாட்களில் சிப்காட்டில் ஒரு கம்பெனியில் பகல் ஷிப்டில் லோடு ஏற்றும் பணியாளாக வேலை பார்த்து வந்தான். ஊரில் சும்மா இருப்பதற்கு வயதான ஆட்கள் மட்டுமேயிருந்தார்கள். அவர்களும் ஏதாவது ஒரு வியாதிக்கு மூன்று வேளையும் மாத்திரை வில்லைகளை விழுங்கி, உயிரைக் காப்பாற்றிக் கொள்பவர்களாக இருந்தார்கள். கொஞ்சம் விரசல் உள்ளவர்கள் பத்து ஆடுகளை ஓட்டிக்கொண்டு காடுகளில் விட்டுவிட்டு, வேப்பை நிழலில் படுத்து எழுந்து வந்துகொண்டிருந்தார்கள்.
அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக படுக்கையிலிருந்து எழுந்திருந்த கீதா, தன் வீட்டின் முன்பிருந்த வேப்பை மரத்தினடியில் நின்றபடி பிரஷ்ஸால் பல் துலக்கிக்கொண்டிருந்தாள். அவள் வீடு கோயிலையொட்டி தெற்கே செல்லும் காங்கிரீட் பாதையில், இரண்டாவது சந்தில் கிழக்கே ஐந்தாவது வீடு. இவள் வீட்டுக்கும் கிழக்கே இரண்டு வீடுகள் கடைசியாக இருந்தன.
கிராமங்களில் அருகாமை வீட்டார்கள் சண்டைக்காரர்களாகத்தான் இருப்பார்கள் என்பது இவர்கள் வீட்டுக்கும் பொருந்தும். பக்கத்து வீட்டாரிடம் இவள் அம்மாவுக்கு சண்டை என்பதால், அவர்கள் வீட்டிலிருந்து யாரும் இவர்களிடம் பேசுவதில்லை. பார்த்தால் முகத்தை வேறுபுறமாக திருப்பிக்கொண்டு செல்வார்கள். கீதாவின் தங்கை லதா படுக்கையிலிருந்து இன்னமும் எழுந்திருக்கவில்லை. இவள் அண்ணன் முத்துச்சாமியின் எக்ஸெல் சூப்பர் வீட்டு வாசலில் காணவில்லை.
வேப்பை மரத்தையொட்டி ஆட்டுப்பட்டியினுள் ஆடுகள் சாவுகாசமாய் படுத்திருந்தன. அவற்றின் வாய் அசை போட்டபடியிருந்தது. இவள் எழுந்து வருகையில் அம்மா அடுப்படியில் நின்றிருந்தது. கறிக்குழம்பின் வாசனை வீட்டை நிறைத்திருந்தது. அம்மா எலும்புக் குழம்பு செய்வதில் கைதேர்ந்தவள். ஞாயிறு என்றால், எப்போதும் வரப்பாளையம் முழு ஊருமே கறிக்குழம்பு வாசனையில்தான் மிதக்கும்.
கீதா பல் துலக்கிக்கொண்டிருக்கும்போது கண்ணாள் கறிப்பையோடு வந்தவள், ‘’இன்னைக்கி லீவா? அதான் பத்து மணிக்காட்ட எந்திரிச்சி பல்லை புடுங்கீட்டு நிக்கியா?’’ என்று போகிற போக்கில் பேசிச் சென்றாள். இவள் அந்தக்காவுக்கு பதிலெதையும் சொல்லாமல் பாத்ரூமிற்குள் சென்று முகம் அலம்பினாள். கீதா வீட்டினுள் சென்றபோது, லதா காஃபி டம்ளரோடு டிவியை வெறித்துப் பார்த்தபடி சேரில் அமர்ந்திருந்தாள்.
லதாவுக்கு வரும் வைகாசி பிறந்தால் பதினெட்டு வயது பூர்த்தியாகிறது. ஐந்தாவதோடு படிப்பை நிறுத்திக்கொண்டவள். இரண்டு வருடத்திற்கும் முன்பாக பூப்பெய்தியவள். இன்னமும் குழந்தை என்ற நினைப்பிலேயே இருப்பாள். விரல்சூப்பும் பழக்கமும் படுக்கையை ராக்காலங்களில் நனைத்துவிடும் பழக்கமும் இன்னமுமிருந்தது. இரண்டு வருடமாக அக்கா கீதாவோடு அவள் கம்பெனி வேனிலேயே பெருந்துறை பனியன் கம்பெனிக்கு சென்று வருகிறாள். கீதா மாநிறம்தான். ஆனால் லதா சிவந்த மேனிக்காரி.
இதுபற்றி தன் அம்மாவிடம் பலமுறை வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறாள் கீதா. ‘’இவளை மட்டும் எப்படி நீயி உன்னோட கலர்ல பெத்தெடுத்தே? அண்ணனையும் உன்னோட கலர்ல பெத்தெடுத்திருக்கே? என்னை மட்டும் ஏன் மாநிறமா பெத்தெடுத்தே?’’ என்று. அதற்கு அவள் அம்மா சொல்லும் பதில் ஒன்றுதான். ‘’செத்துப்போன உங்கொப்பனைப் போயிக் கேளு போடி!’’
கீதாவுக்கு இருபத்திமூன்று வயதாகிவிட்டது. இவள் அண்ணன் முத்துச்சாமி இரண்டு வயது மூத்தவன். உள்ளூரில் தறிப்பட்டறைக்கு ஏழு வருடமாக சென்றுவருகிறான். ஊரினுள் தொழில் பழகிய இவனையொத்தவர்கள் விஜயமங்கலம், கள்ளியம்புதூர் என பட்டறைகளுக்கு சென்றுவிட, இவன் ஒருவன் மட்டுமே பழகிய இடத்திலேயே இருந்துவிட்டான். ஷிப்டுக்கு நூறு ரூபாய் அதிகம் தருகிறார்கள் என்று கூட இவன் உள்ளூர் ஆட்கள் இவனை இழுத்துப் போகப் பார்த்தார்கள். ஆனாலும் இவனுக்கு அங்கு செல்ல மனமில்லை.
முத்துச்சாமியின் மனதில் விஜயமங்கலம் வீதியில் ஏதேனும் கடைவைத்து ஓனராய் அமரும் எண்ணம் நான்கைந்து வருடமாய் இருந்து வருகிறது. என்ன தொழில் செய்வது? அதைப்பற்றி யோசித்தால் செல்போன் ரீசார்ஜ் கடை யோசனை வரும். அது வீதிக்கு இரண்டு மூன்று இருக்கிறது. போக, இவன் படிப்பும் ஆறாவதுதான். செருப்புக் கடை போட்டு அமரலாம் என்றால் அதையெல்லாம் தான் செய்யலாமா என்று மனதை குத்துகிறது.
இப்படி தினமும் அதே யோசனையில் இருப்பவன், அதுபற்றி தன் அம்மாவிடம் கூட ஒரு நாளிலும் சொன்னதுமில்லை. இருந்தும் அவன் விஜயமங்கலம் யூனியன் பேங்கில் அக்கெளண்ட் ஆரம்பித்து, தொகையைச் சேகரித்துக் கொண்டுதான் வருகிறான். இவனைப் போன்றில்லாமல் இரண்டு தங்கைகள் இவனுக்கு மாற்றுதான்.
இருவருமே செலவாளிகள். வாங்கும் சம்பளத்தை செருப்பு வாங்குவதிலிருந்து, துணிமணி எடுத்துக் குவிப்பது வரை இருவருக்கும் போட்டிதான். பிள்ளைகள் மீது பெருத்த கவலைகள் கொண்டிராத அம்மா, தானுண்டு தன் ஆடுகள் உண்டு என்றிருப்பாள். அவள் அந்தக் காலத்து மனுஷி. மெதுவாக வேலைகளை முடித்து படுக்கப்போகையில் டிவியில் நாடகம் பார்த்து அழும் ரகம்.
முத்துச்சாமிக்கு நெருங்கிய நண்பர்கள் என்று உள்ளூரில் கூட யாருமில்லை. ஆனால், யாரிடமும் இவனுக்கு பிணக்குகளும் இல்லை. இவன் போக்கு தெரிந்தவர்கள் இவன் தலை தென்பட்டால் சின்ன விசாரிப்போடு சென்றுவிடுவார்கள். ஊருக்குள் முத்துச்சாமி என்கிறவன் இருக்கிறான் என்கிற கணக்கெடுப்பில் மட்டும் வருபவன்.
அவனுக்கு இந்த ஆறுமாத காலத்தில் ஒரு நண்பன் விஜமங்கலத்தில் இருக்கிறான் என்றால் அது ’அம்மாயி ஃபேன்ஸி கடை’ கணேசன் தான். கணேசன் இவனைவிட இரண்டு வயது மூத்தவன். அவனது ஃபேன்ஸி கடையில் எல்லாப் பொருள்களையும் வைத்திருக்கிறான். பத்துக்கு இருபது அளவுள்ள கடையினுள், செருப்பு ஐட்டத்திலிருந்து ஸ்கூல் பேக், ஜெராக்ஸ், செல்போன்கள், பெண்களுக்கான அழகு சாதனங்கள் என்று குவித்திருக்கிறான்.
கடையில் மூன்று பேர் பணியிலிருந்தார்கள். அதில் இரண்டு பேர் இவன் வயதையொத்தவர்கள். இன்னொருத்தி பெண். அந்தப் பெண்ணின் கண்களை முத்துச்சாமிக்கு நிரம்பவும் பிடிக்கும். வட்டவடிவ முகத்தில் கண்கள் அவளுக்கு இரண்டும் பெரிதானவைகள். ‘மொடாக்கண்ணி’ என்று பட்டப்பெயர் அவளுக்கு இருக்கலாம். ஆனால், இவனுக்கு மட்டும் ஹார்மோன்கள் தூண்ட, அடிக்கடி ஏதேனும் ஒரு பொருள் வாங்க விஜயமங்கலம் செல்ல ஆரம்பித்துவிட்டான் முத்துச்சாமி.
கடையின் முதலாளியான கணேசன் சில நேரங்களில்தான் கல்லாவின் முன்பாக அமர்ந்திருப்பான். அவனுக்கு திங்களூரிலும் ஒரு ஃபேன்ஸி கடை இருப்பதாய் பின்னாளில் தெரிந்துவைத்திருந்தான் முத்துச்சாமி. மற்றபடி அடிக்கடி அவனைக் கண்டு பேசிப் பழக, இருவருக்கும் நட்பானது மெதுவாய் கிளை விரித்து புதுக் கொளுந்துவிட்டு வளரத் துவங்கிற்று.
கீதாவுக்கு ஒரு டம்ளர் குழம்புச்சாறு கொண்டுவந்து கொடுத்தாள் அம்மா. சின்ன வயதிலிருந்தே இது அவளுக்குப் பழக்கம்தான். டம்ளர் ரொம்ப சூடாய் இருக்கவே கீழே அதை வைத்துவிட்டு, மின்விசிறியைப் போட்டுவிட்டு வந்தமர்ந்தாள் சேரில். முத்துச்சாமியின் எக்ஸெல் சூப்பர் சப்தம் வாசலில் கேட்டது. வீட்டினுள் அவன் வருவதற்கும் கீதா இரண்டு தும்மல் போடுவதற்கும் சரியாய் இருந்தது.
”பாரும்மா! தும்மல் போடுறா பாரு! அவன்கூட சுத்திச் சுத்தி அவன் சளியையும் வாங்கீட்டு வந்துட்டாளாட்டதான் இருக்குது! ஆரம்பத்துலயே பாத்துடணும் பெரிய டாக்டருகிட்ட கூட்டிப்போயாச்சிம்!” என்றான்.
“டேய், நீ சித்த கம்முனிருடா! எப்போப் பாரு அவளை அவனோட சேர்த்திச் சேர்த்தி பேசுறதையே வழக்கமா வச்சிருக்கே நீயி! என் தங்கம் அப்படியெல்லாம் ஏமாந்தபுடி நாச்சியில்லே! ஞாயித்துக்கிழமை ஒருநாள்தான் வீட்டுல இருக்கா அவ. சண்டைய ஆரம்பிச்சு வெச்சுட்டீன்னா பொழுதுக்கும் மூக்கைச் சிந்தீட்டே இருப்பா! என்னால பாக்கமுடியாது சாமி!”
“இப்ப உன் பையனுக்கு என்ன வேணுமாம்? நான் தும்மல் போட்டா அதுக்கொரு கதை சொல்றான்!” என்ற கீதா கீழே வைத்திருந்த டம்ளரை எடுத்து ஊதிக் குடித்தாள்.
“அம்மா, இன்னிக்கி மத்தியானம் என் நண்பரை மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு கூப்பிட்டிருக்கேன்மா!”
“அதாரு வீட்டுக்கு கூப்புடற அளவுக்கு உனக்கு நண்பன்?” என்றாள் கீதா.
“விஜயமங்கலத்துல அம்மாயி ஃபேன்ஸி கடை வச்சிருக்காப்லைல்ல…”
“எனக்குத் தெரியாது! புதுசு புதுசா வீட்டுக்குள்ள பண்றே நீயி இப்ப! நீ எத்தனை வீட்டுக்கு நண்பன்னு சொல்லீட்டு சாப்பிட போயிருக்கே இத்தனை வருசத்துல? உள்ளூர்க்காரங்க கல்யாணத்துக்கு போறதுக்கே சாமத்துல போயிட்டு முகூர்த்தத்துக்கு போக மாட்டே. உனக்கு வாய்ச்ச ஃபிரண்டும் அப்படித்தான இருப்பான்!”
“இதபாரு கீதா, அவன் இவன்னு யாரையும் பேசாதே! என்னையப் பேசு அதுக்கு உனக்கு உரிமை இருக்குது. முன்னப்பின்ன பாக்காத ஒரு மனுசனைப்பத்தி ஏன் இப்படி கூசாமப் பேசுறே?”
“சரி நான் பேசலை சாமி. நீயாச்சு உன் நண்பராச்சு. அவரு வர்றப்ப நான் எங்காச்சிம் ஊருக்குள்ள யாரு வீட்டுக்காச்சிம் போயிடணுமா?”
“நீ எங்கியும் போக வேண்டாம். இங்கயே இரு. கொஞ்சம் பரட்டைத் தலையோட இல்லாம சீவி அடக்கமா இருந்தீன்னா போதும்.”
“நான் என் சவுரீத்துக்குத்தான் இருப்பேன். நீயென்ன மாப்பிள்ளையா கூட்டீட்டு வர்றே, நான் சீவி சிங்காரிச்சு வீட்டுல உட்கார்ந்துட்டு இருக்குறதுக்கு?”
“அட! இந்த ஐடியா கூட நல்லா இருக்குதே!”
“இருக்கும் உனக்கு? என்னைய உட்ரு சாமி! எனக்கு கல்யாணமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். யாரையும் கட்டிக்கிறதா இல்லை நானு. பாரு லதாக்கு வேணா புடிச்சு யாரை வேணாலும் கட்டி வெய்யி! நீயும் கட்டிக்கோ ஒரு பிள்ளையை! எல்லாரும் சந்தோசமா இருங்க!”
“ஏன் கீதா உனக்கு கல்யாணம் வேண்டாம்?” டிவி பார்த்துக்கொண்டிருந்த லதா இப்போது முகத்தை இவள் புறமாகத் திருப்பிக் கேட்டாள்.
“எனக்கு ஒரு லட்சம் காரணம் இருக்குது. வரிசையா ஒண்ணு ஒண்ணா கேட்கறியா? சொல்லட்டுமா!”
“நீயொரு லூசு அக்கான்றதை ஒருநாள் விடாம நிரூபிச்சிட்டே இருக்கே. அண்ணனோட நண்பர் சாப்பிட வர்றாப்டி. அதுக்குப்போய் ஊருக்குள்ள போயிடட்டான்னு அண்ணங்கிட்ட சொல்லீட்டு இருக்கே! அண்ணனே ஒருத்தரு கூட நண்பரா பழகறான்னா அவரும் நல்லவராத்தான இருப்பாரு! இது கூடத் தெரியாது உனக்கு!”
”சூப்பர்” என்று வலது கையை லதாவிடம் முத்துச்சாமி நீட்ட, அவளும் தன் வலது கையால் ஒரு தட்டு தட்டி இருவரும் மெச்சிக்கொண்டார்கள். கீதா முகத்தை சுழித்து பழிப்புக் காட்டினாள் இருவருக்கும்.
(தொடரும்...)