அத்தியாயம் 1

83.22k படித்தவர்கள்
5 கருத்துகள்

“எந்தா அம்மாவோ, இன்னைக்கி ஏது துணைக்கறி வைக்கணும்ன்னு சொல்லிட்டீங்கன்னா, காய்கறியை நறுக்கிக்கிட்டிருப்பேன்லா. அப்புறம் நீங்க உங்க பாட்டுக்கு பொஸ்தகம் படியுங்களேன், யாராக்கும் வேண்டாம்ங்க” ஹரினாட்சிப் பாட்டியின் குரல் கேட்டு, ஆனந்தி அந்த டயரியை மூடி வைத்தாள்.

ஹரினாட்சி என்கிற ஹரிப்பாட்டியின் தமிழும் மலையாளமும் கலந்த குரல் லேசான சுருட்டு வாசனையோடு படுக்கையறையின் வாசலில் நின்றது. பெரும்பாலும் குரலில்தான் மலையாள வாடை வீசும். வார்த்தைகள் எல்லாம் தமிழ்தான். அவள் குடும்பம் இங்கே வந்தது பல தலைமுறைகளுக்கு முன்பே. ஆனாலும் எரிச்சல், கோபத்தில் எல்லோரையும் போல தாய்மொழிதானே முந்தும். “இந்தா வந்துட்டேன் பாட்டி” என்று படுக்கையிலிருந்து இறங்கி சேலையைச் சரி செய்தவாறே வந்தாள். அவள் மனதுள், ‘இந்த நாட்குறிப்பைப் படிப்பவர்கள் நரகத்தில் தலைகீழாகத் தொங்குவார்கள்’ என்று ‘நைலான் கயிறு’ கதையில் சுஜாதா எழுதிய வரிகள் ஓடின. இதை டயரி என்று சொல்ல முடியாது. ஒரு குயர் நோட்டுபோல ஒன்று. கவிதைக்கான குறிப்புகள்போலவும் நிகழ்வுகளை எழுதியிருக்கிறான். இரண்டு மூன்று நோட்டுகளை ஏன் சுமந்து திரிகிறான் என்று புரியவில்லை. முத்துக்குமார் அவசரமாகப் புறப்பட்டுப் போகும்போது மறந்து விட்டுவிட்டான்.

தேதி வாரியாக இல்லாவிட்டாலும், எழுதின தேதியைக் குறிப்பிட்டிருக்கிறான். அதன் அருகே வரிசையாக அன்றன்று என்ன நடந்தது என்று எழுதி வைத்திருந்தான். அன்றைக்கு, காலையில் விழித்ததிலிருந்து யார் அல்லது எதன் குரல் முதலில் கேட்டது என்று ஆரம்பித்து தூங்கும் வரை நடந்ததை அப்படியே, அநேகமாக இரவில் படுக்கப் போகும் முன் எழுதியிருக்கிறான்போல. ஏனென்றால் அவனுக்கு அவனே அல்லது அவனது பிரியமான பெண்ணுக்கு குட் நைட் சொல்லியிருக்கிறான்.

ஒருநாள் இரவில் எழுதாமல், மறுநாள் காலையில் எழுதியிருந்தால் முந்தைய இரவில் யார் கனவில் வந்தாள், அது என்ன மாதிரியான கனவு என்றெல்லாம் வர்ணித்திருக்கிறான். சில இடங்களில் ‘இன்று மகராசியக்கா வந்த அடல்ட்ஸ் ஒன்லி கனவு. கனவின் முடிவில் wash out.’ யார் அந்த மகராசியக்கா என்று கேட்க வேண்டும். எப்படிக் கேட்பது? உன் டயரியில் இருக்கிற மகராசியக்கா யார் என்றா? wash out என்றால் என்னது என்றா? அதுதான் புரிகிறதே. அதை எப்படிக் கேட்பது? கேட்டால் என்ன சொல்லுவான், எப்படி வளைந்து நெளிந்து நிற்பான்? ‘மகராசியின் மேலுதட்டு மருகூடச் சந்தனம்’ என்று எழுதியிருக்கிறான். எனக்கும்கூட மேல் உதட்டையொட்டி ஒரு மரு இருக்கிறது. திருட்டுப்பயல் அதைப் பார்த்ததும் என்ன நினைத்திருப்பான், நினைக்க நினைக்க மெலிதான வெட்கத்தோடு சிரிப்பு வந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஹரினாட்சி மீண்டும், “அம்மா ஒரு சீனிப் பலாக்கா கிடக்கு. அதைத் துவரன் பண்ணட்டா, சொல்லிட்டு சிரிங்களேன்” என்றாள்.

அவள் குரலின் அவசரம் ஆனந்திக்குப் பிடிக்கவில்லை. “பாட்டி இப்ப என்ன சுருட்டுப் பிடிச்சீங்களா? நாத்தம் குடலைப் பிடுங்குது. பின்னாடி போய் அருவியில நல்லா சோப்புப் போட்டு கை கழுவிக் குளிச்சிட்டு வாங்க. இந்தக் கையோட பிலாக்காவைச் சீவினா வாசனைக்குக் கேக்கவே வேண்டாம். நானே பாத்துக்கறேன். போங்க. நம்ம ரெண்டு பேருக்கும்தானே. உலை வச்சிட்டிங்கள்ளா? நானே வடிச்சுக்கறேன். நீங்க குளிச்சு முடிச்சு சாப்பிட மட்டும் வாங்க” குரலில் சற்றே கோபம் தொனித்தது.

“ஆமா, இங்க பொங்குமாங்கடல்ல புழை பொங்கி விழுந்து நிறைஞ்சு அருவி கொட்டுது. அதில குளிக்கலைன்னாலும், வயித்துப் பொருமலா இருக்கு. வெளிக்கி வர்ற மாதிரி இருக்கு. வர மாட்டேங்கு. நான் படற அவஸ்தை எனக்குத்தான் தெரியும், ஒரு சுருட்டுப் புடிச்சா வயிறு பாரம் குறையும்ன்னு, பாதிச் சுருட்டை இரண்டு இழுப்பு இழுத்தேன். அது உன் குடைமிளகா மூக்குக்கு எட்டிட்டா.” புலம்பிக்கொண்டே போனாள்.

வீட்டுக்குப் பின்னால் பரந்த தோட்டம். அதன் முடிவில் ஐந்தருவியிலிருந்து விழுகிற தண்ணீர் ஒரு மைல் தூரம் மெலிந்து ஓடையாகவும் அகன்று ஆறாகவும் ஓடி, தோட்டத்திற்குள்ளும் வந்துபோகிறது. அதில் நாகராஜனின் அப்பா வேல்சாமியோ அல்லது அவரது அப்பா தங்கப்பாண்டியன் என்கிற பாண்டித் தாத்தாவோ தண்ணீர் மூன்றடி உயரத்திலிருந்து விழுகிற இடத்தில் கல்லில் ஓர் அணை மாதிரி கட்டி வைத்திருக்கிறார். அதில் ஐந்தாறு பேர் உட்கார்ந்து குளிக்கலாம். ஒருத்தர் அல்லது இரண்டு பேர் அணையில் லேசாக நீந்திக் குளிக்க வசதியாயும் இருக்கும். வெள்ளம் வருகிறபோது பாதித் தோட்டம் வரை தண்ணீர் வந்துவிடும். தண்ணீரோடு பாம்புகளும். ஆனால் பாம்பு ஏற முடியாதபடி வீடு உயரமான மேட்டுப் பகுதியிலேயே இருக்கிறது. படி இறங்கித்தான் தோட்டத்திற்குள் போக வேண்டும். அது தோட்டம் இல்லை பெரிய தோப்பு.

ஹரினாட்சிக்கு அந்தப் படிகளில் இறங்கி அவ்வளவு தூரம் நடந்துபோய்க் குளிக்கச் சோம்பல். அவளுக்கான தகரப் பிறை வீட்டிலேயே குளித்துக்கொள்வாள். அது குளிக்கவும், அவ்வப்போது மனம்போல சுருட்டுப் பிடிக்கவும்தான். சீஸன் வரும் சமயம் என்றால், பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணித் தைலம் காய்ச்சுவாள். ஜாதிக்காய் ஊறுகாய் தயாரித்து இரண்டையும் பாட்டிலில் அடைத்து பஜாரில் தெரிந்த, மண்டபத்துக் கடையில் விற்கக் கொண்டுபோய்க் கொடுப்பாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அங்கே ஓட்டல் நடத்துகிற செம்பகம் பிள்ளை ஒரு காலத்தில் அவளின் தோஸ்த் என்று அரசல்புரசலாக ஒரு பேச்சு உண்டு. அவருக்கு இப்படி எத்தனையோ தோஸ்த். அவரும் நொடித்துப் போய்விட்டார். அவள் அப்படியே ஓடையில் குளித்தாலும் சாயந்தரமாகவே குளிப்பாள். அதுதான், அப்படிக் குளுந்த சமயம்தான் குளிக்கிற நேரம் என்பாள். உச்சி வெயிலில் கழுதைதான் குளிக்கும் என்பாள். அவள் நல்ல உயரம். உட்கார்ந்தால் கழுத்து வரை மறைகிற ஆழத்திற்குப் போய் சேலை சட்டை எல்லாம் களைந்து, ஒரு பாறையில் வைத்துவிட்டு அதே பாறையின் மறைவில் குளிப்பாள்.

குளிப்பாள் என்றால் ஒரு மணிநேரம் வாழைத்தண்டு மிதப்பதுபோலக் கிடப்பாள். அங்கே தண்ணீர் சற்றே அடர்த்தியும் இருட்டுமாக இருக்கும். அவளது கெண்டைக்கால் வரையிலான வெள்ளை முடியை அப்படிப் பண்டுவமாக அலசுவாள். குளித்து முடித்து தோப்பு வழியாக அந்தி வெயில் அவளது லேசாகச் சுருக்கு விழுந்த வெண்ணிற மேனியிலும் நீளமும் அடர்த்தியுமான வெள்ளி முடியிலும் பட்டு மினுமினுக்கும். அவள் முடியை முன்னும் பின்னும் உலர்த்தி விரித்துப் போட்டிருப்பது, மார்பு தொடங்கி முழங்கால் வரையிலாகத் தட்டுச் சுற்றாகக் கட்டியிருக்கும் சேலையை மறைத்துவிடும்.

ஆடையணியாத இசக்கியம்மன் மாதிரி வெள்ளிப் பிசாசாக வருவாள்.

- தொடரும்