சிறுகதை

2.02k படித்தவர்கள்
11 கருத்துகள்

காலையில் அம்மா இறுக்கமாகக் கட்டிவிட்ட ரெட்டைஜடை ரிப்பன்கள் தளர்ந்து, நீளமாக இரண்டு ஜடைகளையும் இணைத்தவாறு வைத்து அனுப்பிய கனகாம்பரம் காய்ந்து தொங்க, மிதிவண்டியின் பின்கம்பியில் பள்ளிப்பையை வைத்துக்கொண்டு கைப்பிடியில் சாப்பாட்டுக் கூடையை மாட்டியபடி லாவண்யாவும் தீபிகாவும் வேகவேகமாக அவரவர் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். ஊரின் வீதி நெடுகிலும் இருபுறமும் குடிசை வீடுகளும் ஆங்காங்கே ஆலமரமும் புளியமரமும் வேப்பமரமுமாக நின்றுகொண்டு காற்றில் இதமாக அசைந்தாட அதன் கிளைகளில் அமர்ந்திருந்த காக்கைகளும் குருவிகளும் பறந்து வானத்தை ரம்யமாகவும் அடர்த்தியாகவும் ஆக்கின.

சகோதரிகள் இருவரும் வீட்டை நெருங்கும்போதே கங்கையம்மன் கோயில் வாசலில் சிறுவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே சென்றனர். வீட்டை அடைந்ததும் பைகளை ஓரமாகப் போட்டுவிட்டு சீருடையை மாற்றிக்கொண்டு பாவாடை சட்டையுடன் இருவரும் கோயிலை நோக்கி ஓடினர்.

வழக்கமாக வரும் பானு, நேதாஜி, வீரப்பன், பிரகாஷ், கீர்த்தனா என அனைவரும் வந்து சேர்ந்தனர். தீபிகாவும் லாவண்யாவும் சென்றதும் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து குழுக்களைப் பிரிக்கத் தொடங்கினர். அவர்கள் விளையாட்டைத் தொடங்கும் முன் நடைபெறும் இக்கட்டான தருணம் இந்தக் குழு பிரித்தல்.

குழுத் தலைவர்கள் என இருவர் ஓர் இடத்தில் இருப்பர். லாவண்யாவும் நேதாஜியும்தான் எப்போதும் அந்தப் பதவியில் இருந்தனர். அடுத்து மற்ற அனைத்து சிறுவர்களையும் கிட்டத்தட்ட சமமான திறனுடைய இரண்டு இரண்டு நபர்களாகப் பிரித்து ஏதேனும் ஒரு பொதுவான பெயர், அதாவது பூக்கள், பழங்கள், சினிமா நடிகர்கள் என அவர்களுக்கு அறிவித்து அனுப்புவார்கள். அவர்களும் முன்பு பிரித்ததுபோல இரண்டு இரண்டு நபர்களாகத் தனியே சென்று ரகசியமாக அவர்களுக்குள் ஆளுக்கொரு பெயரை வைத்துக்கொண்டு குழுத் தலைவர்களிடம் வருவார்கள். வந்து அவர்கள் வைத்துக்கொண்ட ரகசியப் பெயர்களைச் சொல்வார்கள். தலைவர்களில் யாராவது ஒருவர் இரண்டில் ஒரு பெயரைக் கூற அதற்கேற்ப சிறுவர்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நிற்பர்.

கோ-கோ, நொண்டி, கல்பாரி எனத் தினமும் மாலை வேளையில் ஊர் மத்தியில் இருக்கும் கங்கையம்மன் கோயில் வாசலில் சிறுவர்களின் இரைச்சலும் ஓட்டமும் இரவு வரை நீடித்திருக்கும். சுற்றுச்சுவருடன் கூடிய அந்தக் கோயிலின் உள்புறம் அரளிச் செடியும் நந்தியாவட்டைச் செடியும் அண்டிக்கிடக்கும். வாயில் ஓரங்களில் நின்றிருக்கும் வேப்பமரத்திலும் கோயில் கோபுரத்திலும் குடியிருக்கும் காக்கைக் குருவிகளின் எச்சங்களும் அவற்றின் கூட்டிலிருந்து தவறி விழுந்த முட்டைகளும் வாசலை நிரப்பியிருக்கும். 

அன்று எல்லோரும் சேர்ந்து நொண்டி விளையாடலாம் என முடிவெடுத்தனர். லாவண்யாவும் நேதாஜியும் கோயில் படிக்கட்டில் அமர்ந்திருக்க மற்ற அனைவரும் பூக்களின் பெயரை இட்டுவரச் சென்றனர். முதலில் பானுவும் தீபிகாவும் வந்தனர்.

“ம்ம்… சொல்லு” என நேதாஜி கேட்டான்.

“சாமந்தி, டிசம்பர்.” 

“எனக்கு டிசம்பர்.”

உடனே பானு லாவண்யா பக்கமும் தீபிகா நேதாஜி பக்கமும் பிரிந்து நின்றனர். 

அடுத்து பிரகாஷும் வீரப்பனும் வந்தனர். இது லாவண்யாவின் முறை.

“சொல்லுங்க.”

“ரோஜா, செம்பருத்தி.”

“எனக்கு ரோஜா.” 

வீரப்பன் லாவண்யா பக்கமும் பிரகாஷ் நேதாஜி பக்கமும் பிரிந்து நிற்க, லாவண்யா முகத்தில் சிரிப்பும் நேதாஜி முகத்தில் கடுகடுப்பும் தோன்றின. வீரப்பன் பிரகாஷைவிடத் திறமையாக விளையாடக் கூடியவன்.

குழுவுக்கு நான்கு பேராகப் பிரிந்து அந்தச் சிமென்ட் ரோட்டில் செங்கல்லால் எல்லைக்கோடுகள் கிழித்து விளையாடத் தொடங்கினர். ஓடும் வேகத்திலும் பிடிப்பவர்களால் எல்லைக்கோடுகளுக்கு அருகில் மாட்டிக்கொண்டு லாகவமாகத் தப்பித்து திரும்பும்போதும் தினமும் யாராவது ஒருவர் முட்டியைச் சிராய்த்துக் கொண்டு சில்லறைகளுடன் வீடு சேர்வார்கள்.

அன்று இருட்டியதும் அனைவரும் வீட்டிற்குச் சென்று இரவு உணவு முடித்து மீண்டும் விளையாடலாம் என்று சொல்லிவிட்டு அவரவர் வீட்டிற்குச் சென்றனர். 

லாவண்யாவும் தீபிகாவும் வீட்டிற்குள் நுழையும் நேரம் தொலைக்காட்சியில் கோலங்கள் நெடுந்தொடரின் தலைப்புப் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. அவர்கள் தம்பி பாயில் குப்புறப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தான். லாவண்யாவின் தந்தை வெளியே புறப்பட்டார்.

“நா போய் காரவட கெழவன்கிட்ட பேசிட்டு வரேன்.”

சிறுமிகள் இருவரும் தட்டுடன் சாப்பிட அமர்ந்தனர். வழக்கமாக அந்த நேரத்திற்கு நான்கு வீடு தள்ளி இருக்கும் தேவி, நெடுந்தொடர் காண வருவாள். அன்று அவள் வீட்டிலிருந்து அவித்த வேர்க்கடலையுடன் வந்து தொலைக்காட்சியின் முன் அமர்ந்தாள்.

“இந்தாக்கா.”

“என்னடி?”

“வேச்ச மல்லாட்ட. எங்க மாமாவக் காணோம்?”

“காரவடையப் பாக்கப் போயிருக்காரு. அம்பது சிமெண்ட் மூட்ட வேற இருக்கு. இவர்தான் தெனம் அங்க ராத்திரி பாத்துக்குறாரு.”

நெடுந்தொடரின் தலைப்புப் பாடல் முடிந்தது. இவர்களும் பேச்சை நிறுத்திவிட்டு கண்களைத் தொலைக்காட்சியில் பதித்தனர். ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு விளம்பர இடைவெளியில், விட்ட இடத்திலிருந்து பேச்சு தொடர்ந்தது.

“ஏன் கெழவனுக்கு என்ன ஆச்சு. அவுர்தான இவ்வளவு நாளா அங்க இருந்தாரு.”

“என்னவோ… உடம்பு சரியில்லன்னு ரெண்டு நாளா வீட்லேதான் இருக்காரு. அங்க போகல. இவருதான் வேலைக்குப் போய்ட்டுவந்து பத்து மணிக்குப் போறாரு.”

“அப்ப யாரு சாயங்காலம் வெளக்கு போடுறது.” 

“ரெண்டு நாளா அப்டேதான்டி இருக்கு.”

“என்னக்கா… கடகால் போட்டுட்டு வீட்ல வெளக்கு போடாம இருக்கக் கூடாது. யாரையாவது தெனம் போய்ப் போடச் சொல்லுங்க.”

இவர்கள் பேசிக்கொண்டிருக்க அவசர அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு தேவி கொண்டு வந்த அவித்த வேர்க்கடலையைக் கை நிறைய அள்ளிக்கொண்டு இரண்டு சிறுமிகளும் மீண்டும் விளையாடச் சென்றனர். 

“ம்… பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் இதுங்களத்தான் அனுப்பணும்.”

அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் ஊரைத் தாண்டி பிரதான சாலையை அடுத்து இருக்கும் இடத்தில் வீட்டு மனைகள் வாங்கினர். லாவண்யா வீட்டிலும் அங்கே ஒரு மனை வாங்கி வீடு கட்டிக்கொண்டிருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வருடமாகக் கைக்குப் பணம் வரும்போது கட்டட வேலை நடக்கும். மற்ற தினங்களில் வேலை நடக்காமல் கிடப்பில் இருக்கும். தற்போது கம்பிகள் கட்டப்பட்டு சுவர்கள் எழுந்த நிலையில் லாவண்யாவின் புது வீடு, அந்த நீண்ட வீதியில் ஆங்காங்கே நின்றிருக்கும் ஐந்து வீடுகளுடன் ஆறாவது வீடாக எழுப்பப்பட்டுக் கொண்டிருந்தது.

அடுத்த நாள் காலை பரபரப்புடன் குளித்துவிட்டு பள்ளிச் சீருடையில் தலையைப் பின்னிக்கொள்வதற்காக அவள் அம்மாவின் முன் அமர்ந்தாள் தீபிகா.

“ரிப்பன் எடுத்துட்டு வா. சும்மா நேரத்த வளக்காத.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அவர்கள் படிக்கும் அரசு மகளிர் பள்ளியில் வகுப்பிற்கு ஒரு நிறமாக ரிப்பன் அணிய வேண்டும். ஆறாம் வகுப்பு படிக்கும் தீபிகா வேகமாக ஓடிச்சென்று எதிரில் இருக்கும் தென்னங்கீற்று குளியலறைக் கழியில் கட்டியிருந்த பச்சை நிற ரிப்பனை உருவிக்கொண்டு வந்து அமர்ந்தாள்.

லாவண்யா எட்டாம் வகுப்பு மாணவிகளுக்கான சிவப்பு நிற ரிப்பனைக் கொண்டு தானாகத் தலைமுடியை மடித்து சுங்கு போட்டுக்கொண்டிருந்தாள்.

“சாயங்காலம் வந்ததும் சைக்கிள்ள போய் புது வீட்ல லைட் போட்டுட்டுவா.”

திண்ணையில் அமர்ந்தபடி தீபிகாவின் முடியை சிக்கெடுத்துக்கொண்டு லாவண்யாவைப் பார்த்துச் சொன்னாள்.

“பே… நாலான் போ மாட்டேன். அப்பாவப் போய்ப் போடச் சொல்லு.”

“அவுர் அந்தப்பக்கம் போனா அவுரே போட மாட்டாரா. வேற எடத்துல வேல நடக்குது.”

“அப்போ காலைல யார் நிறுத்றது? அவுங்களப் போடச் சொல்லு.”

“ஒரு ரெண்டு நாளைக்குப் போய்ப் போடுன்னா போடு. சும்மா கூடக்கூடப் பேசாத.”

அதற்கு மேல் எதுவும் பேசாமல் முகத்தைத் தொங்கவிட்டபடி லாவண்யா பள்ளிக்குப் புறப்பட்டாள். பதினைந்து நிமிட நேர மிதிவண்டிப் பயணத்தில் சென்று தன் புது வீட்டிற்கு மின்விளக்கு போடுவது பற்றி அவளுக்கு எந்தச் சிரமமுமில்லை. மாலை நேர விளையாட்டில் அரைமணி நேரம் பறிபோய்விடும் என்பதே அவளுடைய பெரிய வருத்தம். 

அதேபோல அன்று மாலை வீடு சேர்ந்ததும் அவள் அம்மாவிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் உடையை மாற்றிக்கொண்டு தேநீர் குடித்துவிட்டு புது வீட்டிற்குப் புறப்பட்டாள் லாவண்யா.

“ரோட்டப் பாத்து தாண்டு. பெராக்கு பாத்துட்டுப் போவாத” என்று அவள் அம்மா முணுமுணுத்தாள்.

ஊரைத் தாண்டி சாலையைக் கடந்து இன்னும் சில மாதங்களில் குடிபெயரப்போகும் தன் வீதியினுள் நுழைந்தாள். வீதியின் தொடக்கத்தில் இடப்புறம் ஒரு வீடு இருந்தது, அதைக் கடந்து சற்று தொலைவு சென்றதும் வலப்புறம் மற்றொரு வீடு தென்பட்டது. அந்த வீட்டின் எதிரில் இருக்கும் இடம் காலியாக இருக்க, அதனருகில் இன்னும் முழுமைபெறாத தன் வீட்டின் முன் மிதிவண்டியை நிறுத்தினாள். உள்ளே சென்று மின்விளக்கைப் போட்டுவிட்டு வெளியே வந்து சுற்றிப் பார்த்தாள். அந்த நீண்ட வீதியில் இவள் வீட்டைத் தாண்டி வலப்புறமொன்றும் கடைசியில் இடப்புறம் இரண்டு வீடுகள் மட்டுமே இருந்தன. மற்ற இடங்கள் அனைத்தும் முள்மரங்களால் அண்டிக்கிடந்தன. இந்த நிலத்திலெல்லாம் ஒரு காலத்தில் விவசாயம் பார்க்கப்பட்டது என அவள் அப்பா ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறாள். அதற்கு மேல் அவர்களின் விளையாட்டு ஞாபகம் வர வேகமாக மிதிவண்டியைத் திருப்பிக்கொண்டு ஊரை நோக்கி விரைந்தாள். 

வார தினங்களில் மாலை நேரத்தில் செல்வதோடு வார இறுதிகளிலும் விடுமுறை தினங்களிலும் காலையிலேயே குடும்பத்தோடு சென்று செங்கற்கள் அடுக்கி, சிமெண்ட் மணல் கலவையில் பூசப்பட்ட அந்த சொரசொரப்பான சுவர்கள் திடம் பெற நீர் தெளிப்பதும் மணல் சலிப்பதும் செங்கற்களை அடுக்குவதும் போன்ற சில்லறை வேலைகளை மேற்கொண்டனர்.

விடுமுறை தின முழுநேர விளையாட்டின் தியாகத்திற்கு ஈடாக நாராயணசாமி தாத்தாவின் கதைகள் அமைந்தன. முன்பு குறிப்பிட்ட காரவடக் கிழவனின் உண்மையான பெயர் நாராயணசாமி. அறுபதுகளின் பிற்பகுதியோ எழுபதுகளின் முற்பகுதியோ வயதுடைய நாராயணசாமி, லாவண்யாவின் புது வீட்டிற்குக் காவலராக இருக்கிறார். வழக்கமாக, புதிதாகக் கட்டும் வீட்டுக்கு அருகில் ஒரு சிறு கீத்துக்கொட்டாய் அமைத்து அதில் கட்டட வேலைக்கான பொருட்களும் அவ்வப்போது வந்திறங்கும் சிமெண்ட் மூட்டைகளும் வைக்கப்படும். கூடவே அனைத்திற்கும் காவலாக, குறிப்பாக இரவு நேரக் காவலுக்காக ஒருவர் அந்தக் குடிசையிலேயே தங்கிக் கொள்வதுண்டு. அதுபோன்றதொரு காவலராகக் காரவடக் கிழவன் என்று அழைக்கப்படும் நாராயணசாமி தாத்தா அமர்த்தப்பட்டுள்ளார்.

வேலைகளுக்கு இடையில் மதிய உணவிற்குப் பின் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு மீண்டும் வேலையைத் தொடர்வார்கள். அந்த ஓய்வு நேரங்களில் லாவண்யாவையும் தீபிகாவையும் அருகில் அமரவைத்துக்கொண்டு காரவடக் கிழவன் அவருக்கே உரிய பாணியில் கண்களை விரித்தும் கைகளை அசைத்தும் கதைகள் சொல்வார். ‘வண்டுக்குள் ஒளிந்திருக்கும் முனிவரின் உயிர்,’ ‘இரவு நேரத்தில் ஏற்றம் இறைக்கும் மோகினி’, ‘ராஜாவின் கைவிரல் வெட்டப்பட்டதற்கு எல்லாம் நன்மைக்குத்தான் என்று சொல்லி சிறை தண்டனை பெற்ற தெனாலிராமன்’ போன்ற கதைகள் அந்தக் கிழவன் இறந்த பிறகும் அவர்கள் மனதில் பதிந்திருந்தன.

இன்னும் சுற்றுச்சுவர் எழுப்பப்படாமலும் மாடிப்படிக் கம்பிகள் சரியாகப் பொறுத்தப்படாமலும் இருக்கும் புது வீட்டிற்குக் குடிபெயர்ந்துவிடலாம் என லாவண்யாவின் அம்மாவும் அப்பாவும் முடிவெடுத்தனர்.

வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீடு சேர்ந்தவுடன் கங்கையம்மன் கோயிலுக்குப் புறப்பட்ட தன் அக்காக்களின் சட்டை நுனியைப் பிடித்துக்கொண்டு தானும் விளையாட வருவதாக இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் தியாகு அடம்பிடித்தான்.

“நானுந்தான் வருவேன்.”

“ச்சு... போடா போய் சரண்ராஜ்கூட விளாடு.”

“நானுந்தான் வருவேன்.”

“உனக்குளான் செட்டுக்கு அங்க யாருமில்ல. அவன்கூடப் போய் மணல்ல விளாடு.”

“நானுந்தான் வருவேன்.”

இவர்கள் விளையாடுவதை அடிக்கடி வேடிக்கை பார்க்கும் த்யாகு நீண்ட நாட்களாகக் கேட்க நினைத்து இன்று கேட்டுவிட்டதைப் போல அதே வரியைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருந்தான்.

“சரி, கூட்டு வா. உப்புக்குச் சப்பானிய வச்சிக்கலான்” என லாவண்யா முன்னே செல்ல, தீபிகாவின் கையைப் பிடித்துக்கொண்டு த்யாகு குதித்துக்கொண்டே சென்றான்.

கோ-கோ விளையாட்டிலோ, நொண்டி விளையாட்டிலோ, எதிர் அணியினர் மற்றவர்களைப் பிடிப்பதில் காட்டிய ஆர்வமும் வேகமும் தன்னைப் பிடிப்பதில் இல்லை என்றும், தன்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றும் உணர்ந்து அங்கேயே அழுது புரண்டான் த்யாகு. அங்கு நடக்கும் பஞ்சாயத்து லாவண்யாவின் அம்மா காதுக்கு எட்ட அவள் வேகமாக சிறுவர்கள் விளையாடும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.

“ஏன்டி, புள்ளையக் கூட சேத்துக்கிட்டா என்ன?” என்று போலியான அதட்டல் தொனியில் கேட்டாள். அம்மா அவனை சமாதானப்படுத்தி அழைத்துச் செல்லட்டும் என அவர்கள் அமைதியாக நின்றிருந்தனர். தன் முந்தானையால் த்யாகுவின் கண்களைத் துடைத்துக் கொண்டு, 

“நீ வா, நாம கடைக்குப் போலாம். அவுங்க யாருக்கும் கெடையாது. உனக்கு மட்டும் மீன்பன் வாங்கித்தரேன்” என்று தீபிகாவைப் பார்த்து கண்களைச் சிமிட்டியபடி த்யாகுவை அழைத்துக்கொண்டு புறப்பட்டாள். சற்று தொலைவு சென்றதும் அம்மா சொன்ன சில வார்த்தைகள் அவர்கள் காதில் விழுந்து இதயத்தை கனக்கச் செய்தன.

“புது வீட்டுக்குப் போன அப்புறம் யார்கூட விளையாடுதுங்கனு பாக்றேன்.”

பின் ஒரு மாதம் கடந்து தை இருபத்தி ஒன்பதாம் தேதி விடியற்காலை நான்கு மணி அளவில் பசு மாட்டை வீட்டிற்குள் நுழையச் செய்து, வீட்டின் மத்தியில் நெருப்பு மூட்டி மொத்த இடமும் புகையால் சூழ, வீட்டின் வெளியே ஒரு சுவர் ஓரத்தில் மொத்த குடும்பமும் நிற்க, அதே பக்கம் மொட்டைமாடியிலிருந்து ஐயர் மந்திரங்கள் சொல்லி, மேலிருந்து அவர்கள் மேல் நீர் தெளித்து முடிக்க லாவண்யாவின் புதுமனைப் புகுவிழா நடந்தேறியது.

பிறந்ததிலிருந்து நான்கு சுவர்களால் அமைந்த அந்த அறையிலேயே வளர்ந்தவர்களுக்கு இரண்டு படுக்கையறையும், பூஜைக்கும் சமையலுக்கும் தனித்தனியாக இரண்டு அறைகளும், குளியலறை, கழிப்பறை என அனைத்தும் அவர்களுக்கு சற்று பிரம்மாண்டமான ஓர் உணர்வைத் தந்தன.

குடிவந்து ஒரு வாரம் ஆன பின்பும் ஆங்காங்கே இருக்கும் அந்த ஐந்து வீடுகளில் யார் இருக்கிறார்கள், தங்கள் வயதை ஒத்த உடன் விளையாடக்கூடிய சிறுவர்கள் உள்ளார்களா என எதுவும் தெரியவில்லை. ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த லாவண்யாவும் தீபிகாவும் சற்று நேரம் ஊருக்குள் சென்று தங்கள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வர அம்மாவிடம் அனுமதி கேட்டனர்.

“இருட்றதுக்கு முன்னாடி சீக்ரம் வரணும். ரோட்ட பாத்து தாண்டிப் போங்க.”

மிதிவண்டியின் கறுப்பு இருக்கையில் லாவண்யா அமர்ந்து மிதிக்க, பின்னே கம்பிகளாலான இருக்கையில் தீபிகா அமர்ந்துகொள்ள அவர்கள் நாள் முழுவதும் எதிர்பார்த்திருந்த கங்கையம்மன் கோயில் வாசலின் மாலைநேர விளையாட்டில் இணைந்தனர்.

அவ்வளவு அழுத்தம் திருத்தமாக, தெளிவாகச் சொல்லி அனுப்பியும் சகோதரிகள் இருவரும் இரவு ஏழரை மணிக்கு, இருட்டிய பிறகே வீட்டை அடைந்தனர். அவர்களின் அம்மா வாசலிலேயே நின்றிருந்தாள். இருவரும் மெளனமாக உள்ளே சென்றனர்.

“அவ்ளோதான், இனிமே வீட்டுக்கு வந்தா ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருங்க. எங்கயும் போகக் கூடாது.”

அவளுடைய கண்டிப்பான பார்வை அவர்களை மீண்டும் விளையாடுவதற்கு ஊருக்குள் செல்ல விடவில்லை.

ஒரு மாலை வேளையில் வீட்டுப்பாடங்களை முடித்துவிட்டு லாவண்யாவும் தீபிகாவும் அவர்கள் வீட்டின் முன் இருக்கும் காலியான இடத்தில் நொண்டி விளையாடிக்கொண்டிருந்தனர். அதற்கு முன்னர் அரை மணிநேரம் அந்த இடத்தின் முட்களையும் கற்களையும் பொருக்கி சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அவர்கள் விளையாடிக்கொண்டிருக்கையில் பக்கத்து வீட்டிலிருந்து இரண்டு பெண்களும் பக்கத்து தெருவில் இருக்கும் வீட்டிலிருந்து இரண்டு பசங்களும் அங்கே வந்தனர். அனைவரும் ஏறத்தாழ ஒரே வயதினராக இருந்தனர். ஒருவரையொருவர் பெயர்களைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்ளும் முன்னர் என்ன விளையாடலாம் என்று ஒருவர் கேட்க ஆறு பேரும், “சா… பூ… த்ரி” போட்டு “லாக் & கீ” விளையாடத் தொடங்கினர். எட்டு மணியளவில் லாவண்யா, தீபிகா, முரளி, தினேஷ், மாலதி, சுதா அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றனர். 

அடுத்தடுத்த தினங்களில் மணியடித்தாற்போல ஐந்து மணிக்கு ஆறு பேரும் அந்த இடத்தில் கூடினர். ஓடியாடி விளையாடினர். வார இறுதி விடுமுறை நாட்களில் நண்பகல் உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாமல் வியர்வை ஒழுக விளையாடித் தீர்த்தனர்.

அவர்களின் விளையாட்டுத்திடலை ஒட்டியுள்ள வீட்டுக்காரர் மேல்தளம் எழுப்புவதற்காக இரண்டு மாட்டுவண்டி மணலைக் குவியலாக அங்கு கொட்டிவைத்திருந்தார். இன்னும் வேலை ஆரம்பிக்காத நிலையில் சிறுவர்கள் அவ்வபோது அதன்மேல் அமர்ந்து அதில் குழிதோண்டி கால்களைப் புதைத்து விளையாடுவதுண்டு. நாட்கள் செல்ல மணற்குவியலின் உயரம் சற்று குறைந்தது. முதலில் லேசாக அதட்டிப்பார்த்த வீட்டுக்காரர், சிறுவர்கள் அதைப் பொருட்படுத்தாததை அடுத்து பெரிய பெரிய முள்மரக் கிளைகளை அதன் மேல் போட்டுப் பாதுகாக்க முயன்றார். ஒரு வாரத்திற்குப் பிறகு வந்த பெரும் மழையும் காற்றும் மணற்குவியலைக் கரைத்து திடல் முழுக்கப் பரப்பிவிட்டது. கரடுமுரடான தரைக்குப் பதிலாக இந்த மணல்பரப்பு விளையாடுவதற்கு மிகவும் இலகுவாக இருந்தது. 

வழக்கமாகக் காலாண்டு அரையாண்டு முழு ஆண்டுத் தேர்வுகளின்போது எப்போதும் விளையாடுவதைவிடக் குறைந்த நேரமே விளையாட அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இந்த வருடம் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதப்போகும் முரளியும் மாலதியும் தேர்வுக்கு ஒரு மாதம் முன்னிருந்தே வீட்டிற்குள் அடைக்கப்பட்டனர். அந்த நாட்களில் மீதமுள்ள நால்வரும் த்யாகுவைச் சேர்த்துக்கொண்டு விளையாடத் தொடங்கினர். 

பொதுத் தேர்வு தொடங்கியது. வருடம் முழுக்க மெல்ல மெல்லப் படித்திருக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மூன்று தினங்களில் மூளைக்குள் ஏற்றும் முயற்சியில் அனைவரும் ஈடுபட்டனர். குறிப்பாக, மாலதியின் முகம் அவள் பதற்றத்தை வெளிப்படுத்திக்கொண்டே இருந்தது. முரளியோ அவனுடைய இயல்பு நிலை தவறாது நடமாடிக்கொண்டிருந்தான். அந்த மணல்பரப்பு சிறுவர்களின் காலடி படாமல் சமநிலையில் நீண்ட நாட்களாகத் தனித்திருந்தது.

மாணவர்களுக்குத் திகிலூட்டக்கூடிய பொதுத்தேர்வு நடந்து முடிந்தது. கடைசித் தேர்வின் மாலை வேளை கூட வீணடிக்கப்படவில்லை. பன்னிரண்டு கால்களும் மணலில் சுற்றித் திரிந்தன.

சித்திரை மாதப் பள்ளி விடுமுறை அவர்களின் கொண்டாட்டத்தின் உச்சம். உணவு நேரமும் தூங்கும் நேரமும் மட்டிலுமே அவர்களுக்கு வீடு தேவைப்பட்டது. மற்ற நேரம் முழுக்க சித்திரை வெய்யிலையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாது துள்ளித்திரிந்தன அவர்கள் கால்கள். 

முழு ஆண்டு விடுமுறையின்போது பாட்டி வீடு, பெரியம்மா வீடு, மாமா வீடு என உறவினர் வீடுகளுக்கு வருகை புரியும் பழக்கங்கள் உயிர்ப்புடன் இருந்த காலம். லாவண்யாவின் அத்தை மகள் வந்து இரண்டு வாரம் தங்கிவிட்டுச் சென்றாள். லாவண்யாவைக் காட்டிலும் ஒரு வயது மூத்தவள். அவள் தங்கியிருந்த நாட்களில் அவர்கள் ஊரில் விளையாடும் விளையாட்டுகளை இவர்களுக்கு அறிமுகப்படுத்தினாள். அதில் மிகவும் கவனமாகவும் சற்று திகிலுடனும் இதயம் படபடவெனத் துடித்துக்கொண்டே இருக்கச் செய்யும் உப்பாரி விளையாட்டு இவர்களை மிகவும் மகிழச்செய்தது.

அன்று காலை பத்துமணி லாவண்யாவும் தீபிகாவும் முதலில் சென்று மணலில் அமர்ந்தனர். இப்போதெல்லாம் த்யாகுவும் இவர்களுடன் விளையாடத் தயாராகியிருந்தான். 

சற்று நேரத்தில் முரளி வீட்டுப் பின்பக்கக் கதவு திறக்கப்பட்டது. கண்களைக் கசக்கியபடி முரளி மலங்க மலங்கப் பார்த்ததிலிருந்து அப்போதுதான் படுக்கையிலிருந்து எழுந்திருக்கிறான் எனத் தெரிந்தது. பத்து நிமிடத்தில் வந்து விடுவதாக சைகை காட்டினான். அதற்குள் சுதா வந்து சேர்ந்தாள்.

“மாலதி எங்க?” என்று லாவண்யா கேட்க, அதே நேரம் தன் அம்மாவும் மற்றொரு வீட்டுப் பெண்மணியும் சிரித்துக்கொண்டே மாலதி வீட்டுக்குச் செல்வதைக் கவனித்தாள். 

“இன்னும் ஒன்பது நாளுக்கு அக்கா வெளிய வராதான்.”

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

சுதா சொல்லி முடித்ததும் முரளியும் தினேஷும் வந்து சேர்ந்தனர். 

“மாலதி எங்க வர்லயா?” என்று கேட்டுவிட்டு அனைவரையும் பார்த்தான் முரளி. மூன்று பேரும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தனர். மாலதி வீட்டில் கேட்கும் பேச்சு சத்தத்தைக் கொண்டு முரளி புரிந்துகொண்டான். அதற்கு மேல் எதுவும் பேசாமல் உப்பாரி விளையாடுவதற்குக் கோடு போடப்பட்டது.

சுதா சொன்ன ஒன்பது நாள் கணக்கைத் தாண்டியும் மாலதி விளையாட வரவில்லை. எப்போதாவது வந்து வேடிக்கை பார்த்துவிட்டு சிறிது நேரம் பேசிவிட்டுச் சென்றாள். மாலதிக்கு ஈடாக அவள் இடத்தை நிரப்ப அவர்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. த்யாகுவைக் கொண்டு சமாளித்து வந்தனர். நாளடைவில் அது அவர்களுக்குப் பழகிப்போனது. 

சில நாட்கள் அவனுக்கு ஏதாவது காரணம் சொல்லி ஓரங்கட்டிவிட்டு ஐந்து நபர்கள் கொண்டு விளையாடப்படும் கல்பாரி விளையாட்டு சூடு பிடித்தது. கிட்டத்தட்ட ஒரே வயது ஒரே வேகம் கொண்ட அந்த ஐந்து நபர்களுக்கு கல்பாரி பொருத்தமாக இருந்தது.

சில தினங்களாக முரளியின் பள்ளி நண்பர்கள் மூன்று பேர் மிதிவண்டியை மிதித்துக்கொண்டு அடிக்கடி அங்கே சுற்றித் திரிந்தனர். முரளி விளையாட்டுக்கு இடைவெளி விட்டு அவர்களிடம் சென்று சில நிமிடங்கள் பேசிவிட்டு வந்தான். ஏதோ மிகவும் சிக்கலான தீர்க்க முடியாத பிரச்சினைக்கு வழிவகுப்பவர்களைப் போல் தீவிரமாகக் கூடிப் பேசினர். 

ஒருநாள் காலை லாவண்யாவும் தீபிகாவும் வெளியே வரும் நேரம் முரளியின் அம்மா அப்பா இருவரும் பட்டுப்புடவை, வேட்டி சட்டை என ஏதோ உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்குச் செல்லும் தோரணையில் இருச்சக்கர வாகனத்தில் சென்றனர். அவர்கள் வெளியே புறப்பட்டதைக் கொண்டு முரளி, தினேஷ் இருவரும் இந்நேரம் மணலில் இருக்கக்கூடும் என லாவண்யாவும் தீபிகாவும் வேகவேகமாகச் சென்றனர். பின்னாலே த்யாகுவும் வந்தான். 

ஆனால் இன்னும் அவர்கள் வந்து சேரவில்லை. பின்கதவு சாத்தியபடியே இருந்தது. அரைமணி நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, 

“டேய், அவுனுங்க என்ன பண்றாங்கன்னு பாத்துட்டு வா. எல்லாரும் வந்துட்டோம்னு சொல்லு” என்று லாவண்யா த்யாகுவிடம் சொல்லி அனுப்பினாள். அந்த நேரம் சுதா வந்து சேர்ந்தாள். 

“மாலதி வருமா? வராதா?”

“அவ்ளோதான். இனிமே விட மாட்டாங்க போலருக்கு.”

முரளி வீட்டை த்யாகு அடைந்த அதே சமயம் முரளியின் பள்ளி நண்பர்கள் மூவரும் வந்திருந்தனர். அதில் ஒருவன் பள்ளிப் பையுடன் வந்தான். அவர்கள் உள்ளே செல்ல, பின்தொடர்ந்து த்யாகுவும் சென்றான். வீடு முழுக்க விளக்குகள் அணைக்கப்பட்டு சன்னல் கதவுகள் அனைத்தும் தாழிடப்பட்டு சன்னல் கண்ணாடியின் வழியே வரும் மெல்லிய ஒளி அறையின் இருளோடு கலந்து ஒருவித மயக்கத்தை உண்டாக்கியது. த்யாகு உள்ளே நுழைந்தான். 

“என்னடா?”

அந்த நேரத்தில் த்யாகுவை எதிர்பார்க்காத முரளியும் தினேஷும் ஒரே குரலில் சத்தமாகக் கேட்டனர்.

“விளையாட வர்லையா?”

“இல்ல. இன்னைக்கு வர்ல. நாளைக்கு வரோம்.”

முரளி அங்குமிங்கும் நடந்துவிட்டு, தொலைக்காட்சியின் பின்புறம் அதன் இணைப்புக் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தான். வாசற்படியிலேயே நின்றிருந்த த்யாகு வீட்டிற்குள் நுழைய, அந்த சமயம் பள்ளிப்பையுடன் வந்திருந்தவன் பையைத் திறந்து எதையோ எடுக்க முயல, குறுந்தகடு ஒன்று தவறி கீழே விழுந்தது. சட்டென த்யாகு குனிந்து எடுத்தான். அதன் மேல் ‘அன்பே சிவம்’ என எழுதப்பட்டிருந்தது. அடுத்த நொடி வெடுக்கென அவனிடமிருந்து வாங்கி தினேஷிடம் கொடுத்தான், பையைப் பிடித்திருந்தவன்.

“நீங்க விளையாடுங்க. நாளைக்கு வரோம்” என்றான் தினேஷ். 

“படம் பாக்கப் போறிங்களா?”

“இல்லடா. அம்மா அப்பா மாமா வீட்டுக் கல்யாணத்துக்குப் போறாங்க. எங்கள வீட்லயே இருக்கச் சொன்னாங்க.”

த்யாகு ஒன்று கேட்க, தொலைக்காட்சியின் பின்புறமிருந்து முரளி சம்மந்தமில்லாமல் ஏதோ உளறினான். ஐந்து பேருமே இயல்பில் இல்லாததுபோல் இருந்தது. ஒருவிதப் பதற்றமும் வேகமும் அவர்களிடையே தென்பட்டன. குறுந்தகடு இயக்கியின் பின்புறம் ஒரே கம்பியில் மூன்று பிரிவுகளாக வெவ்வேறு வண்ணங்களில் இருந்த கம்பிகளை அதில் பொருத்திக் கொண்டிருக்கையில் முரளியின் கைகள் லேசாக நடுங்கிக்கொண்டிருந்ததை த்யாகு கவனித்தான்.

“பேய்ப் படம் பாக்கப் போறிங்களா. நானு வரேன்” என்று த்யாகு தொலைக்காட்சியின் முன் சம்மணிட்டு அமர்ந்துவிட்டான். அனைவருக்கும் அவனை இழுத்து வெளியே தள்ள வேண்டும் போலிருந்தது. அவனை எப்படித் துரத்துவது என யோசித்துக் கொண்டிருக்கையில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது.

“ச்சு… மணி என்ன?” என்று தினேஷைப் பார்த்துக் கேட்டான் முரளி.

“ஒன்பது.”

“அவ்ளோதான், இன்னைக்கு ஏரியா கட். சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் கரண்ட் வரும்” என்று தினேஷைப் பார்த்து ரகசியமாகக் கண்ணிமைத்தான்.

“ச்சு... போச்சா. நீ போய் விளையாடுடா. நாம சாயங்காலம் படம் பாக்லாம்.”

“நீங்க வரலையா?”

“அட, நாங்க வர்ல. கெளம்புடா நீ.”

த்யாகு வெளியே வந்த உடனே வாசல் கதவும் சாத்தப்பட்டது. சில நொடிகள் த்யாகு வெளியில் நின்றிருக்கையில் அவர்களுக்குள் கிசுகிசுவெனப் பேசும் சத்தம் கேட்டது. ஆனால், எதுவும் தெளிவாகப் புரியவில்லை. சற்று நேரத்தில் மயான அமைதி நிலவியது. அதைத் தொடர்ந்து மின்விசிறி சுழலும் சத்தமும் பின் குறுந்தகடு சுழலும் சத்தமும், மிகவும் கூர்ந்து கவனித்ததால் த்யாகுவுக்குக் கேட்டன. அடுத்து சில நொடிகள் பேச்சுக்குரலும் ஏதோ ‘முனகல்’ சத்தமும் கேட்கவே எதுவும் சரிவரப் புரியாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டான். 

மணல்பரப்பில் இருந்த மூவரும் அமர்ந்துகொண்டு அவர்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

“என்ன, அவுங்க வர்லயா?”

“இல்ல. அவுங்க அப்பா அம்மா வெளில போயிருக்காங்களான்.”

“அதுக்கென்ன?”

“இவுங்கள வீட்லே இருக்கச் சொல்லிட்டுப் போனாங்களான்.”

“என்னது?”

லாவண்யா குழப்பமாக, த்யாகுவைப் பார்த்தாள். அவன் அங்கு நடந்த வழக்கத்துக்கு மாறான காட்சிகளையும், குறிப்பாக அந்த ‘முனகல்’ ஒலியையும் விளக்கிச் சொல்லத் தெரியாமல் விழித்தான். ஏற்கெனவே மாலதி விளையாட வராமல் போனதில் கடுப்பான லாவண்யா, “என்ன இப்போ இவுனுங்களும் வயசுக்கு வந்துட்டானுங்களா?” என்றாள்.