அத்தியாயம் 1

100.59k படித்தவர்கள்
76 கருத்துகள்

விஸ்வம் அண்ணாச்சி காலம்பர அஞ்சு மணிக்கே எழுந்து குளித்து, காஃபியைக் குடித்துவிட்டுப் பெரிய கோயிலுக்கு வந்துவிட்டார். வழக்கமாகப் பொற்றாமரைக் குளத்தில் கால் கழுவி, கொடிமரத்தருகே எட்டு அங்கமும் தரையில் பட விழுந்து கும்பிட்டு, வழிபாட்டு முறைகள் ஒன்றுகூடக் குறையாமல் செய்து, காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாட்டில் ஒன்றையோ, அபிராமி அந்தாதியில் ஒன்றிரண்டையோ முணுமுணுத்தபடி அம்மையைக் கும்பிடுவார். அம்மன் சன்னதியில் பெரிதாக எழுதிப் போட்டிருக்கும் காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் பாடலை, அன்றைய அவசரத்தைப் பொறுத்து வேகமாகவும், சாவகாசத்தைப் பொறுத்து அனுபவித்தும் வாசிப்பார்.

எப்படின்னாலும், ''பிரியமுடன் ஒக்கலையில் வைத்துத் தேரார் வீதி வளங்காட்டேன், செய்யக் கனிவாய் முத்தமிடேன், திகழும் மணிக்கட்டிலில் ஏற்றி திருக்கண் வளரச் சீராட்டேன், தாரார் இமவான் தடமார்பில் தவழுங்குழந்தாய் வருகவே, சாலிப்பதிவாழ் காந்திமதித் தாயே வருக வருகவே” என்பதில் ’ஒக்கலையில் வைத்து…’ என்ற வார்த்தையை அனுபவித்துச் சொல்வார். என்னவோ அம்மையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்து தேரோடும் வீதியை வேடிக்கை காட்டுவதாக நினைப்பு ஓடும்.

அம்மையைக் கும்பிட்டு முடித்து, சாமி கோயிலுக்கு வருவார். வந்து சாமி தரிசனமெல்லாம் முடிந்த பிறகு, நந்தி மண்டபத்திலிருக்கும் சுதைச் சிலையான பெரிய மாக்காளையைப் பார்த்தபடி, அதுக்கு இடது பக்கமா உட்கார்ந்து எதையாவது யோசித்துக்கொண்டிருப்பார். அவருக்கு மாக்காளை மூக்கை நக்குவது போலிருப்பதை எவ்வளவு தரம் பார்த்தாலும் சலிக்காது. அதுவும் மையெழுதின அதோட கண்ணு அவ்வளவு அழகு. அது தினந்தோறும் வளந்துக்கிட்டே இருக்கும்ன்னும், அது கோயில் கூரையைத் தொடும்போது உலகமே அழிஞ்சு போயிரும்ன்னெல்லாம் ஒரு கதை உண்டு. சின்னப் புள்ளையில அப்படி வளந்திருக்கான்னு பாக்கறதுக்கே கோயிலுக்கு சேக்காளிகளோடு தினமும் வருவாரு. ''ஆமாலே, கொஞ்சம் வளந்திருக்கு’’ம்ப்பான் ஒருத்தன். ''எங்கலே அதெல்லாம் டூப்புலே’’ம்பான் இன்னொருத்தான்.

கோயிலுக்குள் நுழைஞ்சதும், இப்படி மகா பெரிய நந்தியை தனி மண்டபம் கட்டி உண்டாக்கி வைக்கிறது நாயக்க மன்னர்களோட ஆட்சியில்தான் வந்திருக்கு. தஞ்சாவூர் கோயில்களைப் பார்த்து, இங்கேயும் சிவந்தியப்ப நாயக்கர்ன்னு, ஒருத்தர் நந்தி செய்வித்து, அதற்கு வழுவழுவென்று சுண்ணாம்புப் பாலை தேய்த்துக் குழைத்துப் பூசி, மாக்காளையா செஞ்சு வச்சிருக்கார். இன்றைக்கு அதுக்கு முன்னால் உக்காந்து, அதைப் பார்த்து இப்படிப் பழசையெல்லாம் அசை போட, எப்பவும் போல அவ்வளவு அவகாசமில்லை. வேகமாக அவ்வளவையும் முடித்துவிட்டு, நந்தியைப் பார்த்தபடி ரெண்டு நிமிசம் உக்காருவோம். நின்ன காலோடயே கோயிலைவிட்டுப் போகக்கூடாதுன்னு உட்கார்ந்தார். மனசை சும்மா இரு என்றா சொல்ல முடியும்? மறுபடியும் அது ஓட ஆரம்பிச்சிட்டு.

இன்னைக்கி என்னவோ வென்னி போட்டுக் குடுத்தா புண்ணியவதி வேம்பு. இல்லைன்னா, ''வீட்டுக்குள்ள இருக்கற குடத்துத் தண்ணி வெதுவெதுன்னுதான் இருக்கு. ரெண்டு குடம் ஊத்திட்டுப் போங்க. எனக்கு தலைக்கு மேல வேலை கிடக்கு. இதுல ஓலையைப் போட்டு வென்னி வைக்கவா நேரமிருக்கு’’ன்னு கத்துவா.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இன்னைக்கித் தீபாவளி வேலை தலைக்கு மேல கிடந்தாலும், தனக்கும் போட்டு அவருக்கும் வென்னி போட்டு வச்சிருக்கா. குளிக்கறதுக்கு கோவணத்தோட குளியலறையில நிக்கும்போது ஓடிவந்து, ''இந்தாங்க, இங்க வாங்க. இம்புட்டு நல்லெண்ணை தலையில வச்சுக்கிடுங்க’’ன்னு குச்சு வீட்டு வாசலில நின்னு, ஒரு ஈயக் கிண்ணத்தை நீட்டினா.

''ஏளா என்னத்த, அங்கன வந்து எண்ணெய் வைக்க. ஒரு செம்புத் தண்ணிய தோளுக்கு விட்டாச்சே’’ன்னு சலிக்கும்போது, அவளே பக்கத்துல வந்து ஒரு கை எண்ணெய்யைத் தலையில வச்சு விட்டுட்டு, என்னத்தையோ கண்டாப்பில தானா சிரிச்சுக்கிட்டா. அப்புறம் பார்த்தா கோவணம் கொஞ்சூண்டு விலகியிருக்கு. வெள்ளையா ஒண்ணு ரெண்டு முடிக எட்டிப் பாக்கு. ''ஆமா இப்ப என்ன, நீதான நிக்கற. வேற யாருமா இருக்காங்க’’ன்னாரு.

''உங்களுக்கு வெக்கமே கிடையாதா? புள்ளை வள்ளி எந்திரிச்சுருவா, சீக்கிரம் குளியுங்க.’’ விளையாட்டா கோவிச்சுக்கிட்டா. வேம்பு எண்ணெய் தேய்க்கையில, ஊறின கடலைப் பருப்போட பச்சை வாசம் மூக்கை நெருடிச்சு. ஆம வடைக்கு உரலில அரைச்சு வழிச்ச கை போல. குளிச்சதும் கோயிலுக்குப் போய்ட்டு வந்துருவோம். எட்டு மணிக்கி மொத காட்சின்னு சொன்னா. ஏழு மணிக்கி ஸ்டாலில நிக்கணும்பாரு மேனேஜரு. ரெண்டு மணிக்குப் படுத்துட்டு, அஞ்சு மணிக்கு நாமளா எங்க எழுந்திரிக்க? நல்லவேளை, வெடிகளைப் போட்டுக் கொளுத்தி எழுப்பி விட்டுட்டானுக.

ஒருநாளும் இல்லாத திருநாளா, இந்தத் தீபாவளிக்கு அஞ்சு ஷோ போடறதுக்கு பெர்மிஷன் வாங்கிட்டாக முதலாளி. எல்லாத்துக்கும் ரிசர்வேசனும் ஆயிப்போச்சு. நேத்து தீபாவளி கடைசி யாவாரம். சாயங்காலத்திலே இருந்தே ரத வீதி பூராக் கூட்டம் நெறி பறியா ஜேஜேன்னு கிடந்தது. அதுவும் ராத்திரி ஒண்ணரை மணிக்குமாய்யா இப்படி சனக்கூட்டம் ரத வீதியில் நிக்கும். அதுவுஞ் சரிதான். நம்மளைப் போலொத்தவனுக்கு இப்பத்தான் நல்ல நாளு வந்திருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டாரு.

இன்னைக்கித்தான் புதுப் படம் ரிலீஸ். நேத்து பப்படமா ஒரு பாடாவதிப் படம்தான் போட்டிருந்துது. அதுக்கும் நூறு பேரு வந்தான். அஞ்சு ரூவாய்க்கி பீடி வித்தது, பத்து ரூவாய்க்கி முறுக்கு வித்தது. இந்த எளவு யாவாரத்துக்கு மூணு மணி நேரமும் நின்னு நின்னு, வக்காளி காலுப் புண்ணுதான் விண் விண்ணுன்னு ’குத்தல்’ எடுத்துட்டு. அது என்னய்யா சின்னப் பரு மாதிரித்தான் வந்துது. இப்ப பொந்து மாதிரி ஆயிட்டு. வெதனமும் வீக்கமும் குறைவானேங்க. என்ன எழவெல்லாமோ போட்டுப் பாத்தாச்சு. செகண்ட் ஷோ படமே முடிஞ்சாச்சு. அதுக்கப்புறம் மாப்பிளை முதலாளி வந்து, கூப்பிட்டுவிட்டு ஒரு வேட்டியும் துண்டும் அம்பது ரூபாயும் தந்தாரு. படம் ஓடும்போது எவனோ அஞ்சு ரூபா குடுத்துட்டு ரெண்டு முறுக்கு வாங்குனான்.

''என்னப்பா பத்து பைசாவுக்கு அஞ்சு ரூவா குடுக்கே. சரி, படம் விட்டுப் போகும்போது வாங்கிக்க’’ன்னு மிச்ச ரூவாயை எடுத்தெல்லாம் வச்சிருந்தேனே. என்னத்தையோ குடிச்சிருப்பாம்போல. முறுக்கை வாங்காமலையே, ஏதோ ஓங்கரிச்சிகிட்டு கக்கூஸ் பக்கமா ஓடுனான். அம்புட்டுத்தான், படம் விட்டு லைட்டெல்லாம் அணைச்ச பிறகும் ஆளு வரலை. அது ஒரு அஞ்சு ரூவா இருக்கு. அதையெல்லாம் கொண்டுக்கிட்டு பஜாருக்கு வந்தாத்தான், அம்புட்டுக் கூட்டம். பெரிய கடைல்லாம்கூடத் திறந்திருந்துது. ஆனா, பாவம் வேலைக்கு நிக்கறவங்கதான் கை காலெல்லாம் அசந்துபோய் நின்னாங்க. போனமா வந்தமான்னு ஒரு சீலையை மாத்திரம் எடுத்துட்டு வந்தேன். அதுக்குமே, `இப்ப என்ன இப்படி இருவது ரூவாயைக் காலி பண்ணிட்டு வந்து நிக்கீக. கொலுவுக்குப் போனப்போ ராமா ஃபிலிம்ஸ் மாமி வீட்டில சேலை குடுத்தது இருக்கே’’ன்னா.

அதுவும் சரிதான். ஆனா, அங்க போய்ட்டு வந்த அன்னைக்கி, ''அங்க நம்மளை எவ மதிக்கா. இனம் இனத்தோடன்னு அவங்க தெரிஞ்ச ஆளுகளுக்கா கொடுக்காங்க. நமக்குத் தருவாகளான்னு ஆயிட்டுது’’ன்னு புலம்பிக்கிட்டு இருந்தா.

''ஏட்டி, அதெல்லாமும் பாவப்பட்டதுகதாம்’’ன்னு சொன்னா, ''ஆமா, அது வாஸ்தவம்தான். ஆனா, கவுரதையை விட்டுக் குடுக்குதுகளா…’’ அப்படீன்னா.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

''நீ மட்டும் குறைச்சலா? சங்கிலி இல்லைன்னு எத்தனை விசேஷத்துக்கு வரமாட்டேன்னுருக்கே’’ன்னு சொன்னதுதான் தாமதம், அந்தானிக்கிப் புடிச்சிக்கிட்டா, ''அதான சொல்லுதேன். இந்தப் புள்ளை வள்ளிக்காவது என்னமும் தோடு, மூக்குத்தி, மோதிரம்ன்னு பொட்டுப் பொட்டாவது சேத்துவைக்கலாம்லா’’ன்னு ஆரம்பிச்சிட்டா.

''இங்க உண்டானதுக்கே லொண்டா போடுது. இதில எங்க நகை வாங்கி சேர்த்துவைக்க? கடன் வாங்காம கழிச்சாலே போதும்ன்னிருக்கேன் நான். அப்படியும் அர்பன் பேங்கு கடனுக்கு வட்டி கட்டலைன்னு பேங்கு பியூனு பழனி, ஆத்தில வச்சு அந்தக் கேள்வி கேக்கான். அதுவும் எழவு காரியமா சுடுகாட்டில நிக்கையில கேக்கான். இவ்வளவுக்கும் எனக்கு நாலு கிளாசு குறைச்சலாப் படிச்சவன்.’’ பழைய ஞாவகமும் புது ஞாவகமும் ரத வீதி சுத்திட்டு நிலையத்துக்கு வந்து நிக்கற தேர் மாதிரி திரும்பவும் மாக்காளைப் பக்கத்துக்கே வந்துது.

மாக்காளை வழக்கம்போல காதை அசைக்காமல் கேட்டுக்கொண்டிருந்தது. இதுக்காவது காது இருக்கு. உள்ளே இருக்கானே நெல்லையப்பன், அவருக்கு அதுவும் இல்லாம லிங்கமா அடிச்சு வச்சிருக்கான். யோசனையை நிறுத்தி சினிமா கொட்டகையில பெல் அடிக்கிற மாதிரி, “அண்ணாச்சி, என்ன அஞ்சு ஷோ போட்ருக்கே, இன்னமுமா போகலை? எங்க கொட்டகையிலயும் இன்னைக்கி அஞ்சு காட்சிகள் போட்டாச்சுல்லா. ஆனா, அங்க வருத கூட்டம் எங்க கொட்டகைக்கு வராது. இன்னைக்கி கணேசன் படமே ரெண்டு வருது. நான் போறேன், எங்க அய்யரு ஏற்கெனவே குணம் விசேஷம். இன்னைக்கி ஏகப் பதட்டத்திலே இருப்பாரு. நான் போறேன்’’னு உசுக்காட்டிட்டு பக்கத்துக் கொட்டகையில் டிக்கெட் கிழிக்கிற பாப்பு வேகமாகப் போனான்.

அவன் போகிற போக்கிலையும், ''இந்தப் புள்ளை முழிக்கிற முழி சரியில்லையே. ஒருவேளை செவ்வா தோசமா இருக்குமோ? இன்னைக்கி அங்காரகன் முன்னால் நின்னு கும்பிடுதாளோ, ஆளு பழம் மாதிரி இருக்காளே, என்ன தோசம் இருந்தா என்ன?”ன்னு அங்க நவக்கிரகம் சுத்திவந்த ஒரு பொம்பளையப் பாத்துச் சொல்லிக்கிட்டே வெளியே வெரசலாப் போனான்.

- தொடரும்