அத்தியாயம் 1

21.46k படித்தவர்கள்
17 கருத்துகள்

வண்டியின் கதிவேகத்தில் எதிர்வண்டிகள் மேலேயே சரிந்து விடும் போல் கடந்தன. மில்களின் ராக்ஷஸப் புகைப் போக்கிகள், மில் காம்பவுண்டில் நிலக்கரி மலைகள், ரயில் திடீரென இறங்கும் பள்ளத் தாக்குகள், உடனே தொத்திக் கொண்டு ஏறும் சரிவுகள், மலைகள், மலையைக் குடைந்து சுரங்கங்கள், சுரங்கத்துள் நுழைந்ததும் ஓட்டச் சத்தம் அன்றி மற்றனைத்தும் அதனுள் மூழ்கிப் போன காரிருள், சுரங்கத்தினின்றும் வெளிப்பட்டதும் கண்ணை உறுத்திக் கொண்டு பெருகும் ஒளி வீழ்ச்சி, அகன்ற மைதானங்கள், அடர்ந்த காடுகள், காடுகளில் மேயும் மான் கூட்டங்கள் தலை நிமிர்கையில் மேலே கிளை பிரிந்த கொம்புகள், கட்டான் கட்டானாய் வண்டி வேகத்தில் முகம் திரும்பும் வயல்களில் பயிர்களின் பச்சை நடுவில் சிவப்பும் மஞ்சளும் வெள்ளையும் உதாவுமாய் ஆண் பெண்களின் ஆடைகள், கூந்தல் முடிச்சுகள், கொண்டைகள், வானில் பகல் பூரா சூர்யசக்கரம் உழுது உருண்ட பாதையில் முளைத்துப் பழுத்துப் பல ரங்குகளில் சாய்ந்த ஒளிக்கதிர்கள், புலவியில் பூமியைக் கவ்விக் கடித்து மேல் கவிந்த வான்கவானில் சிந்திய விந்துவெனக் கட்டிய நக்ஷத்ரக் கூடுகள், நேரம் முதிர்ந்து எழுந்து தோப்புகளிடையே எங்களுடன் கூடவே குதித்து ஓடிவரும் நிலா திடீரெனக் கிளைகளின் சிக்கலினின்று விடுபெற்று ஆகாய வீதியில் உருண்டதும் பாலத்தடியில் உருவிவிட்ட ஜல ஜரிகையின் தகதகப்பு, 'திடும் திடும்' என அதிர்ந்து கொண்டு எங்களைக் கடக்கும் பாலங்களின் இரும்புத் தூலங்க -

- இத்தனையும் கோத்து ஊடுருவிய உள்சரடாய் வண்டியின் பெருமூச்சு; ஒரு சமயம் அதன் ஊதல் உவகையின் எக்காளம்; ஒரு சமயம் வேகத்தின் வெற்றிப் பிளிறு; மறுசமயம் அது இழுத்துச் செல்லும் சிறு உலகத்தின் சுமை கனத்தினின்று இழுத்த பாகாய், அது செல்லுமிடம் சேரும் வரை, அதன் கர்ப்பத்தில் தாங்கிய அத்தனை மக்களின் அவரவர் விதியின் தனித்தனி சஞ்சலங்கள், பிரிகள் ஒன்று திரித்த ஓலக்குரல் தீனக்குரல் -

சாவித்ரி முகம் பூரா விழிவட்டம்.

முந்தாநாளிரவிலிருந்தே பச்சைக் குழந்தை மாதிரி ஜன்னலோரத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டாள்.

அவளைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வருகிறது. அடக்கிக் கொள்கிறேன். வலது பொட்டில் அடை நரை தோய்ந்திருக்கிறது. (நரையை ஒப்புக் கொள்ள மாட்டாள். "பூசணிக்காய் நறுக்கிய கையோடு நினைவு மறதியா தொட்டுண்டுட்டேன்." இன்னொரு சமயம் அதுவே தேனைத் தொட்ட கையாக மாறிவிடும்.) கொஞ்ச நாளாகவே இடது கண்ணில் நீர் வடிகிறது. கண்ணாடி போட்டுக் கொள்ள மறுக்கிறாள். முகம் கெட்டு விடுமாம்.

"அப்படி ஒரு கண் அவிஞ்சு போனால் இன்னொண்ணு இருக்கு. அதுவும் போச்சுன்னா, கையைப் பிடிச்சு, அழைச்சுண்டு போய், 'இதுதாண்டி தாஜ்மஹால்', 'இதுதான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில்', 'இதுதான் அகண்ட காவேரி', 'இதுதான் நம் பூர்விகம், சொந்த மண்ணைத் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கோ, வாயில் கூட கொஞ்சம் அள்ளிப் போட்டுக்கோ'ன்னு அப்புறமாவது இடம் இடமா அழைச்சுண்டு போய்க் காண்பிக்க நீங்கள் இருக்கேள். இல்லையா? அப்படி ஒரு கொடுப்பினை இல்லாட்டாலும் போறது. காலடியில் கல் தடுக்கினால் பிடிச்சுக்க மாட்டேளா? ஏன் சும்மாயிருக்கேள்? 'ஆஹா அதுக்கென்ன?'ன்னு மெப்புக்கேனும் சொல்லக் கூட வாயடைச்சுப் போச்சா? புருஷாளே இப்படித்தான்" - என்று எங்கேனும் கொண்டு போய் முடித்து, மூக்கைச் சிந்தி, உறிஞ்சி, சிடுசிடுத்து அடுத்தாற்போல் சிரித்துத் தானே ஓய்ந்துவிடுவாள்.

"ஆமாம், நான் இப்படியெல்லாம் இல்லாட்டா நீங்கள் எனக்குக் கட்டியிருக்கும் அசட்டுப் பட்டத்தை எப்படி நிலை நாட்டிக்கறது?"

பாவம், அவள் ஆத்திரப்படுவதில் ஆச்சர்யமில்லை. நானாவது வியாபார நிமித்தமாய் சுற்று வட்டாரம் போய் மீள்வதுண்டு. பிரயாணத்துக்கே அவளுக்கு வாய்ப்பில்லை. எங்களுக்கு உறவுகள், வேண்டியவர் வேண்டாதவர் எல்லோரும் எங்களைச் சுற்றியே இருந்துவிட்டார்கள். அத்தனை பேரும் அவளைச் சார்ந்தவர்களே. பிழைப்பைத் தேடி தூரதேசம் வந்துவிட்ட இடத்தில் எனக்கென்று தனியாகத் தாயாதிகளை முளைக்க வைக்க முடியுமா?

கண்டதே காக்ஷி

கொண்டதே கோலம்

வந்ததே லாபம்

இன்று இப்படிப் போச்சா?

நாளை என்னவாகுமோ?

என நேரத்தைக் காசாக எண்ணி எண்ணிக் கழித்த அந்நாளில் :

"அதோ அந்த வீட்டில் இன்று சமாராதனை"

"இந்தக் கோவிலில் உச்சி வேளைக்கு உண்டைக் கட்டி"

என்று எனக்குக் கைஜாடையாகவே வயிற்றுக்கு வழிகாட்டியவன் எவனாயினும் அவன் வயதுக்கு என் வயது ஏற்ப என் அண்ணனோ தம்பியோ; தாகத்துக்குத் தவிக்கையில் ஏந்திய கையில் கிண்டி மூக்கு வழியோ குடத்து வாய் வழியோ ஜலம் வார்த்தவள் என் தங்கையோ, தாயோ.

போன புதிதில் நாட்கள் இப்படிக் கழிந்த ஒரு வாரத்துள் ஒரு நாள் வயிற்றில் ஈரத்துணி, கண்ணில் உசிரை வைத்துக் கொண்டு சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து, கூரை விட்டத்தில், என் கண்ணுக்குத் தெரியாமல், கண்ணில் நிற்கும் உசிருக்கு மட்டும் தெரியும் என் விதியேட்டைப் படித்துக் கொண்டிருக்கையில், மெனக்கெட்டு காரை நிறுத்தியிறங்கி என்னிடம் வந்து:

"யாரப்பா நீ? முகத்தில் காவேரித் தண் தெளிந்து நிக்கறதே!" என்று தானே பேச்சுத் தொடுத்து, விவரம் வாங்கிக் கொண்டு, "சரி சரி - இதோ என் பிஸினெஸ் விலாசம்; நாளைக் காலை பத்து மணிக்கு வந்து சேர்" என்று உத்தியோகம் தந்தவன் கடவுள்.

முதலாளி சொற்படி வரவுசெலவுக்கு இரண்டு கணக்கு எழுதினாலும் என் கணக்கு இரண்டுமே அவருக்குப் பிடித்திருந்தது.

சுருட்டினது போக, சுரண்டினது போக, எஞ்சியது அசலுக்கு லாபம் என்கிற கணக்கில் லாபம் பெருகி, நாளடைவில் லாபம், முதலை விழுங்கிய பின், லாபத்திற்கு லாபம் திகட்டல் தட்டின பிறகு, நஷ்டமென்பது லாபத்தில் நஷ்டம்தான்.

ஆனால் அந்த மனுஷன் தொட்டதெல்லாம் பொன். செல்வமும் இருக்குமிடத்தில் தான் சேர்ந்து கொண்டிருக்கும் என்பது அனுபவ ருசு. அவருக்குக் குறைவில்லை. அதனால் எனக்கும் குறையில்லை.

ஒரொரு சமயம் எனக்குத் தோன்றுவதுண்டு, அன்று பட்டினியில் சத்திரத்துத் திண்ணையில் அண்ணாந்து படுத்து விட்டத்தில் என் விதியேட்டைச் சரியாகத்தான், என்னை அறியாமலே படித்திருக்கிறேன்.

விளக்குக்கு ஏற்றினால் வெளிச்சம்.

ஆனால் விடிவு என்னவோ வேளையில் தான்.

பிறகு ஒரு நாள் மாலை, என்னை அவர் வீட்டுக்குக் கூட்டிப் போய், ஊஞ்சலில் தனக்குச் சரியாக உட்கார வைத்துக் கொண்டு:

"சாவித்ரீ! டிபன் கொண்டு வா!" என்று அழைத்து அவள் வந்ததும்:

"சாவித்ரீ, நமஸ்காரம் பண்ணு. பின்னால் இவன் உனக்குத் தோப்புக் கரணம் போட்டால் அது இவன் தலையெழுத்து. இப்போ நீ நமஸ்காரம் பண்ணுவதுதான் முறை. என்னப்பா, உனக்கு 'ஷாக்'கா? நான் 'பிஸினெஸ்' பண்றதே இப்படித்தான். சம்பந்தம் பண்றது ஒரு பெரிய 'பிஸினெஸ் டீல்' தான். உன் குலம், கோத்ரம் உன்னைக் கேட்டு நான் தெரிஞ்சுக்க வேண்டாம். என் பெண்ணை உனக்குக் கொடுக்க இந்த ரெண்டு வருஷமா உன்னைப் பற்றி எனக்குத் தெரிஞ்சது போதும். எல்லாமே தெரிந்த வரைக்கும் தானே! மிச்சமெல்லாம் துணிச்சல்தான். வாழ்க்கையின் நியதியே துணிச்சல் தான். என் பெண்ணுக்குத் தாயில்லாக் குறை ஒன்று தவிர வேறு பெருங்குறை யாரும் சொல்லிவிட முடியாது. பணக்காரப் பெண்ணுக்கு, பரிசாரகன் போட்டுக் கொடுத்த காப்பியை வெள்ளி டம்ளரில் ஆற்றிக் கொடுக்கத்தான் தெரியும், வேறொண்ணும் தெரியாது என்று நீ எண்ணாதே. வற்றல் குழம்பு, நாக்கு ஒட்டிக்கச் செவக்க, உணக்கையா சாவித்ரி நன்னா பண்ணுவாள். வற்றல் குழம்பும் சுட்ட அப்பளாமும் நம் சீமைக் குலதெய்வம். விருந்து சாப்பாட்டையெல்லாம் அதன் காலில் கட்டியடிக்க வேண்டும். எல்லா விருந்துக்கும் மருந்து அதுவே விருந்து. என்ன சொல்கிறாய்?"

"இன்னிக்கும் வத்தல் குழம்புதான்!" சாவித்ரி கை கொட்டிச் சிரித்தாள். அவள் சிரிப்பு விளிம்பு உடைந்த சிரிப்பு. அவள் பற்கள் பளீரிட்டன. ("சாதாரண நெல் உமியைச் சுட்டுக் கரிப்பொடி தான். ஆண்கள் நீங்கள் கொண்டாடும் பேஸ்ட் அல்ல. பேஸ்ட்டுக்கு எனக்குப் பொறுமை கிடையாது.") சிரிக்கையில் புருவ நடுவில் மூக்குத் தண்டு சுருங்கிற்று.

"உங்கள் மாப்பிள்ளை வரப்போறார்னு என்னிடம் ஒரு வார்த்தை முன் கூட்டிச் சொன்னேளா? இதோ ஒரு நிமிஷம் பொறுத்துக்கோங்கோ. நாம் பேசிண்டிருக்கற நேரத்துக்கு சர்க்கரையும் சாதமும் நிமிஷமா கரைஞ்சுடும். வீட்டுக்குப் பெண்ணும் நானே, பெண்ணைப் பெத்தவளும் நானேன்னு இருக்கு; நான் என்ன பண்ண முடியும்? அப்பாவே எப்பவுமே இப்படித்தான்! ஆனால் நான் தனியா சொல்ல என்ன இருக்கு? அவர் சுபாவம் இத்தனை நாளில் உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே!"

மனம்விட்ட அவள் சிரிப்பில், என்னுடன் அவள் உடனே நேரிடையாகக் கொண்ட சகஜத்தில், எனக்குத் தன் சம்மதத்தைத் தெரிவித்த முறையில், அவள் பெண்மைக்குப் பங்கம் கற்பிக்கும் படியில்லை. அவள் சொன்னபடி, அவள் சூழ்நிலை அப்படி.

ஆனால் சாவித்ரி ஒன்றும் சோடையில்லை. அவள் தனியழகு ஏதும் செய்து கொள்ளவில்லை.

ஆனால் செல்வத்துக்கே ஒரு களையுண்டு.

பிறவியிலேயே வளத்துக்கு ஒரு தோரணை உண்டு.

உத்யோகம் தந்தவன் கடவுள்.

பெண்ணைத் தந்தவன் மாமனார்.

மாமனாரானதோடல்லாமல், அந்தச் சுருக்கில், அதே சாக்கில், பாட்டாளியிலிருந்து வியாபாரத்தில் என்னைத் தன்னோடு கூட்டாளியாகவும் ஆக்கிக் கொண்ட பின், எங்களுக்குக் கண் மறைவாக, ஆனால் தவறாமல் எங்கள் காது படும்படி எனக்கு double event என, சிப்பந்திகளிடையே பேர் வழங்கலாயிற்று. முதலாளிக்கு மாப்பிள்ளை, சொத்துக்கும் தத்து.

ஆனால் அவர்கள் ஆத்திரத்தில் ஆச்சரியமில்லை. என் அதிர்ஷ்டம் எனக்கே பிரமிப்பாயிருக்கிறதே! கண் கூடாக நடப்பது கொண்டே கதை எழுதியாகிறதென்றாலும் கதையில் படிப்பது அனுபவமாக நிகழ்ந்திடில், அது சமாதானமாவதில்லை. அதில் கதையின் இன்பமில்லை. ஒரு தினுசான பீதிதான் தெரிகிறது. எந்தச் சமயம் கனவு கலைந்து எப்போ நனவில் விழிப்போ எனக் கனவு கலையும் சமயத்திற்கஞ்சி நனவை நானே எதிர்கொள்ளக் கண்ணைக் கசக்கிக் கொள்கிறேன். ஆனால் நான் காண்பதாக நினைத்துக் கொள்ளும் கனவேதான் நான் கண்விழித்த நனவு எனத் தெளியத் தெளியக் குழப்பம் தான் கூடுகிறது.

மணமான புதிதில் சாவித்ரி என்னையடையத் தான் தான் அதிர்ஷ்டசாலி என்று சொல்லிக் கொள்ளும் போது எனக்கு ஒரு கேள்வி. அவள் பேச்சில் உபசாரம் எவ்வளவு, உண்மை எவ்வளவு?

உண்மையில் கேலியா?

உண்மையே கேலிதானா?

ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை, என்றும் அவன் பிரஜைதான்.

இப்படி எனக்குத் தோன்றக் காரணம் என் சந்தேக மனப்பான்மைதானோ, அல்லது ராணியை மணக்கும் உச்சத்துக்கு உயர்ந்த பின் அதனாலேயே நேர்ந்த உச்சக்குலைவோ, அல்ல என் வறுமை நினைவுகளிலிருந்து முற்றிலும் எனக்கு விடுதலையில்லையோ, அல்ல என் சிப்பந்திகளின் மறைமுகமான ஏளனமோ - இவையெல்லாமே சேர்ந்ததோ - நிச்சயமாகத் தெரியாது. ஆனால் ஒன்று புரிந்தது. நாளடைவில், எங்கோ நினைப்பின் அடிவாரத்தில் மனம் கசந்தது.

என் வாழ்க்கை குறுக்குசந்தில் நுழைந்து தன் பாட்டை தப்பி விட்டது.

முதலாளி மகளை மணந்த மூலம், எங்கோ, ஏதோ முறையில், என் நாணயம் பறிபோன உணர்வு.

குளிக்கப் போன இடத்தில், குளத்தில் மூழ்கின சமயத்தில், விரலிலிருந்து மோதிரம் நழுவி விட்டாற்போல்.

பிடிபடாத தாது இந்தக் கசப்பு, புரியாத கோபம், இனம் தெரியாத ஏக்கம், காரணம் காட்டாது ஏய்க்க ஏய்க்க, அதன் மூட்டம் மட்டும் எங்கள் உறவில் கவிந்தது.

அற்ப விஷயத்தில் தான் ஆரம்பிக்கும். அடியெடுத்துக் கொடுத்தவன் நானாவேயிருப்பேன். ஒரு சொல்லுக்கு எதிர்ச் சொல் ஒன்பது சொல்; படிப்படியாக ஏறும் வார்த்தைத் தடிப்பில், சண்டையின் காரணம் மறந்து போய் வெற்றிக் கொடி கடைசி வார்த்தை யாருக்கு எனும் வீறாப்புத்தான் மிச்சம்.

ஆனால் சாவித்ரியிடம் ஒரு குணம். அவள் கசப்பற்றவள். அவள் don't care மாஸ்டர். வார்த்தைகளைக் கொட்டிவிட்டு கோபத்திலிருந்து விடுதலை கண்டு, நேர்ந்ததை நிமிஷமாக மறந்து உடனே கலகலப்பாகி விடுவாள். மறதி அவள் வெற்றி. அவள் உயர்ந்த சரக்குத்தான் எனும் இந்த உள்ளுணர்வே என் வேதனை. கடித்த பற்களிடையில் சொல்லத்தகாத வார்த்தைகள் நாக்கு நுனியில் எனக்குத் தவிக்கும்.

இடியும் மின்னலும் அடுத்துத் தடதடவென மழை. சண்டைப் போலவே சமரஸத்திலும் அவள் தான் முதல். ஆனால் பாம்புக்குப் படம் படுத்ததால் அதன் கோபம் தணிந்ததென்று அர்த்தமில்லை. சீற்றத்தின் வாலில் தொத்தி வந்த எங்கள் சமாதானமும் மூர்க்கம்தான். உண்மையில் அது சமாதானம் அன்று. வெட்கம் கெட்ட இளமை வெறி. அப்பட்டமான சுயநலத்தின் சிகரம். சண்டை வழி நிறைவு காணாத வஞ்சம் சதைமூலம் தேடும் வடிகால். ஊன்வெறி தணிந்ததும் மறுபடியும் தலைகாட்டுவது அவரவர் தனித்தனி எனும் உண்மைதான். தெளிந்ததனாலாய பயன் கசப்புத்தான்.

ஒரு கூட்டில் இரு புலிகள் வளையவந்தன. ஒன்றையொன்று கவ்விக் கிழித்துக் கொண்டு ஒன்றில் ஒன்று புதைந்து ஒரு பந்தாகி உருள்கையில் எந்த சமயம் சண்டையிலிருந்து சமாதானம், சமாதானத்திலிருந்து சண்டையென்று அவைகளே அறியா. மூலக் குரூரத்தின் இரு விள்ளல்கள்.

இம்மாதிரி முரட்டு வேளைகளின் அசதியின் இன்ப மயக்கத்தில் முனகுவாள்.

"ஒரு குழந்தையிருந்தால் நமக்குள் இவ்வளவு வேற்றுமை யிருக்குமா?"

"அது ஒண்ணுதான் குறைச்சல். எங்களால் முடியாமல் உங்களால் முடிந்தது இந்தக் குழந்தை பெறுதல் ஒன்றுதானே!"

அவள் எழுந்து உட்காருவாள். மறுபடியும் எங்களைச் சூழ்ந்த அந்தரம் சிலிர்க்கும்.

"எங்கள் வர்க்கத்தை நீங்கள் பழிப்பதன் அர்த்தம் என்ன? உங்கள் அம்மாயில்லாமல் உலகத்தில் நீங்கள் நேராவே entryயா? அவதார புருஷனாக்கும்!"

பதில் பேச இயலாமல் எனக்கு வாயடைத்துவிடும்.

என் தாயை நான் அறியேன். தோய்ப்பதற்குத் துணியைச் சுருட்டிக் கொண்டு வாய்க்காலுக்குச் சென்றவள் உச்சிவேளை தாண்டியும் திரும்பவில்லை.

ஊரெல்லாம் தேடிவிட்டு, பிறகு கழனிக்காட்டில் துரவு கிணற்றில் கண்டெடுத்து உடலைத் தூக்கிக் கொண்டு வந்தார்களாம்.

எங்கள் ஊரில் பெண்கள் கேணியில் இறங்கிக் குளிப்பதுண்டு.

ஆனால் என் தாய்க்குப் பழக்கமில்லை. அவளுக்கு நீச்சலும் தெரியாது.

நாலு பேர் நாலு விதமாகப் பேசிக் கொண்டனர்.

வயிற்றில் நான் நாலு மாதப் பூச்சியாயிருக்கையில், நடுநிசியில் எல்லோரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கையில் அம்மாவின் கை வளையலைக் கழற்றிக் கொண்டு ஓடிவிட்ட என் அப்பன், நான் பிறந்து மாதம் பத்தாகியும் இன்னும் திரும்பவில்லை.

"தாம்பூலம் மாற்றிக்கு முன் என்னை ஒரு வார்த்தை கலந்திருந்தால் நான் தடுத்திருப்பேனே" எனத் தவித்தவர் எத்தனை பேர்!

"எல்லாம் சொல்லிக்க வேண்டியதுதான்! ஏழை சொல் அம்பலத்திலேறுமா?" என்று ஒரு பொருமல்.

"நமக்கேன் பாடு! ஆயிரம் பொய்யைச் சொல்லியேனும் ஒரு கலியாணத்தைப் பண்ணுன்னு சாஸ்திரமே கட்டளையிட்டிருக்கு!" இப்படி ஒரு சுக்ஷி தருமம் பேசிற்று.

"எப்பவுமே இப்படியே இருக்குமா? ஒரு முடிச்சைப் போட்டு வெச்சால் பையன் திருந்திடுவான்னு பார்த்தோம். மறைச்சு வெச்சுப் பண்ணிட்டோம்னு எங்களைக் குத்தம் சொல்ற நாக்கு அழுகித்தான் போகணும். பையன் இதுவரை எங்கள் கண்ணெதிரிலாவது உலாவிண்டிருந்தான். பொண்ணு எங்கள் வீட்டைக் கால் மிதிச்ச வேளை முதலுக்கே மோசம் வந்தாச்சு" என்று பிள்ளை வீட்டார் புலம்பினர்.

"இல்லாட்டா உங்கள் அந்தஸ்துக்கு இதுக்கு மேல் ஒஸ்தி என்ன எதிர்பார்த்தேள் சொல்லுங்களேன்! கேட்டுத்தான் தெரிஞ்சுக்கறேனே!" என நேருக்கு நேரே சவால் சிலர்.

"இந்தா நீ ரெண்டு மாதம் வெச்சுக்கோ. அப்புறம் கூடப் பிறந்த தோஷம் ஒரு மாஸம் என்கிட்டே இருக்கட்டும். அப்புறம் கடைக்குட்டி நம்மைவிடப் பச்சையா வாழறான். அவன் ஆறுமாஸம் போடட்டுமே! அப்புறம் வருஷம் முடியறதுக்குள் மறு சுத்துக்கு நம்மிடம் வந்துடப் போறாள்! சும்மாவா போடப் போறான்? அவனுக்கு வாய்ச்சவள் லேசுப்பட்டவளா 'டேப்பா!' விழி நரம்பிலிருந்து நார் உரிச்சுத்தானே தன் குழந்தை குட்டிகளுக்குச் சட்டை கவுனிலிருந்து தெறிச்சுப் போன பொத்தானைத் தைப்பாள்!"

உடன்பிறந்தான்மார்கள் இப்படி இட்ட பிச்சையும் விட்ட ஏலமுமாய் பிழைப்பு ஆனபின்னர், என்னதான் சதைத்தடிப்பானாலும் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் எந்தச் சொல் - எந்தத் தோளிடிப்பு - எந்த ஏளனப் புன்னகை எப்படித் தைத்ததோ? ஏற்கெனவே விளிம்பில் நடுங்கிக் கொண்டிருக்கும் கனத்தை இப்புறமோ அப்புறமோ தள்ளிவிட 'பூ' என்று வாயால் ஒரு ஊதலே போதும்.

நாலு பேர் நாலு விதமாகச் சொல்லிக் கொண்டனர்.

பழசு நினைவில் படமெடுக்கையில் காரணமற்ற கோபத்தில் காரணமிழப்பேன்.

"என் தாயை நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை!" சீறுவேன்.

"இதுக்கே உங்களுக்கு இப்படிப் பொத்துக்கறதே! என் வயிற்றில் பிறக்கப் போகும் பிள்ளைக்கும் அவன் தாயாரை நீங்கள் பழித்தால் அப்படித்தானே இருக்கும்!"

ஆச்சரியத்துடன் எழுந்து உட்கார்ந்தேன். என் கண்களில் தோன்றிய வினாவுக்குப் பதிலாய்:

"பிறந்தால் - என்று அர்த்தம்" என்பாள். அதில் என்ன திருப்தியோ?

இரண்டு வழியிலும் விருத்தியிலாத வம்சம்.

ஜன்னல் வழி உள்வழிந்த நிலவொளியில் ஆள் உயரப் படத்தினின்று அவள் தந்தை முகம் என்னைக் கடுக்கும். எனக்கு உடல், மண்டையெல்லாம் குறுகுறுக்கும். ஆள் போயும், படத்திலிருந்து என்னைக் கண்காணிப்பு.

படத்தை எங்கள் அறையிலிருந்து அப்புறப்படுத்த அவள் அடியோடு மறுத்து விட்டாள்.

"உங்களை அவர் என்ன செய்தார்? ஏன், தன் பெண், பங்கு, சொத்து எல்லாத்தையும் உங்களுக்கே கொடுத்து விட்டுப் போன குத்தமா?"

"ஏன், முடிந்தால் தன்னோடு எடுத்துக் கொண்டு போகட்டுமே!"

"இந்த மட்டும் கண்டுபிடிச்சு சொல்லிட்டேளே! நன்றியென்று ஒன்று நம்மிருவருக்குமே இருக்கட்டும்."

"நல்லெண்ணங்கள், உணர்வுகள் எல்லாமே உனக்குத் தானே பிறவியிலேயே சாஸனம், எனக்கேது? அப்பா மேல் பக்தியில் கால்வாசி, கொண்டவன் மேல் இருந்தால் நம் வாழ்க்கை எப்பவோ உருப்பட்டிருக்கும்."

"ஏன் இப்படி விஷமா கக்கறேள்? பக்தியென்று என்னிடம் என்ன எதிர்பார்க்கறேள்? என் தந்தையை நான் மறுத்து விட்டால் உங்களிடம் பக்தி கூடிவிட்டதா?"

உடனே மறுபடியும் சண்டை.

பேச்சுக்குப் பேச்சு பதிலுக்கு என் வாயை அடைக்கும் கேள்விகள் அவளிடம் எப்பவுமிருந்தது தான் என் புழுக்கம்.

புயல் கடைந்த கடலில் கட்டுமரம் அலையுச்சியின் நுரை கக்கலின் மேல் சவாரி செய்தால் என்ன, அலையிறங்கி மிதந்தால் என்ன? அலை ஓய்வது என்பதில்லை.

அடக்கி அடக்கித் திமிறத் தவித்த என் சீற்றத்தின் எதிரொலியாய், தாழ்வாரத்தில் மழைச்சாரல் சாட்டை வீசுகிறது. ஜன்னல் கண்ணாடியில் தாரை வழிந்த வண்ணம்தான். வெய்யில் பார்த்து நாள் மூணாயிற்று. அறையில் சுவர்கள் ஒட்டிய மூலைகளில் பகலிலேயே இருள் தேக்கத்தில் அவரவர் மனநிலைக்கேற்ப, உருவங்கள், முகங்கள், பெரும் வாய்கள், முழுவிழிகள், வீக்கங்கள் திரண்டு தம் ரஹஸ்யங்கள், அவஸ்தைகள் ஏதேதோ தம் ஊமையில் வெளியிட முயன்றன. அவைகளின் காலம் கடந்த ஏக்கம் நெஞ்சில் வண்டல் இறங்குகையில் தாளொணா அடிப்பாரம் மார்பை அழுத்துகிறது.

ஜன்னலுக்கு வெளியே, இன்னும் ஒரு பெரும் உடைப்புக்கு முஸ்திப்பாய் ஒரு மேகத்திரள் குமைகிறது. இந்தப் பக்கமே இடைநிலையென்பதே கிடையாது. மழை பெய்தால் ப்ரளயம். வெய்யில் காய்ந்தால் sunstrokeதான்.

மெழுகுவர்த்தியுடன் சாவித்ரி அறையுள் வருகிறாள். நேற்றிரவே மின்சாரம் தோற்றுவிட்டது.

என் புருவங்களின் கீழிருந்து அவளை நோக்குகிறேன். அவள் கையில் பிடித்த மெழுகுவர்த்தியின் சுடரில் அவள் முகம் ரோஜாவின் செவ்விதழில் ஏற்றிக் கொண்டிருக்கிறது. எடுப்பான மூக்கின் கீழ், உதடுகள் சிற்பச் செதுக்கலில் அமைதியாக உறங்குகின்றன. நடு வகிடிலிருந்து கூந்தல் வங்கி வங்கியாய், நீர்வீழ்ச்சி போல் இருமருங்கிலும் இறங்குகிறது. அவள் உடுத்திய மஞ்சள் 'ஸேட்டின்' சேலை, அங்கத்திரட்சிகள் மேல் பாயும் அலைகளில், இந்த முக்கால் இருள், மிச்சம் கால் ஒளியாட்டத்தில் புலிக்கோடுகள் பிறந்து விளையாடுகின்றன.

ஜன்னல் கட்டைமேல் மெழுகின் உருக்கை இரண்டு சொட்டு சொட்டி அதன் மேல் வத்தியை நட்டுவிட்டு நகர்கிறாள். அவள் நிழல் பெரிதாய்ச் சுவரை ஆள்கிறது. சாவித்ரியின் உடல்வாகும் சற்று வாளிப்புத்தான்.

என் காலடியில் தரையில் அமர்கிறாள்.

புலி.

கையை எடுக்காது வரைந்த ஒரே கோட்டின் வளைவு நெளியான ஓட்டம்போல் அவள் உருவம், எனக்கு விட்டுச் சொல்ல இயலா ஏதோ முறையில், மெழுகுவர்த்திச் சுடரொளியில் இந்த அறையின் தோற்றத்துடன் - ஏன், இந்த வேனிலோடேயே இழைந்திருக்கிறது. நாங்களே இந்த சமயத்தின் ஓவியத்தின் வண்ணக் குழைவில் கலந்து, ஓவியம் உயிருடன் மிளிர்வதாய்த் தோன்றிற்று. அபூர்வமான அமைதி எங்கள் மேல் இறங்கிற்று. அதன் இதவை ஸ்பரிச பூர்வமாகவே உணரமுடியும் போல் அத்தனை மெத்து. புலியும் ஆடும், பாம்பும் இரையும், சாவித்ரியும் நானும் இந்த சமயத்துக்கு சமாதானம்.

சோகச் சாயை படர்ந்து கவித்வம் நிறைந்து நெஞ்சில் பாயும் இந்த அருவியின் கரையில் எத்தனை நேரம் இப்படியே அமர்ந்திருந்தோமோ!

புயலின் மையம் அமைதி.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஜன்னல் கண்ணாடிமேல் மழை தாரை வழிந்த வண்ணமிருந்தது.

சகுந்தலையின் கண்ணீர்.

"பளிச்" "பளிச்" மின்னல் போல் வலி கொடிபிரிந்து மார்புள் பாய்ந்தது. மாரைப் பிடித்துக் கொண்டேன். ப்ராணன் போய்விடும் வலி. ப்ராணன் போய்விடாதா?

"என்ன யோசனை?" சாவித்ரியின் குரல் எங்கிருந்தோ வந்தது. "என்ன என்னவோ போலிருக்கேள்? எதை நினைச்சுண்டிருக்கேள்?"

"கரடிமலை" என்றேன். தொண்டை கம்மிற்று. வார்த்தை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு வந்தது.

"கரடிமலையா?" அவள் புருவங்கள் கேள்வியில் நெறிந்தன.

"நான் எங்கிருந்து இங்கு வந்தேனோ அந்த இடம்" சுதாரித்துக் கொண்டேன். எனக்கே ஆச்சரியமாயிருந்தது. என் புது வாழ்வைப் பற்றிக் கொள்ளும்பாடில், பற்றிய பின் மேல் படர்ந்த பாசியில், எத்தனை வருடங்களின் புதைவின் அடியினின்று கரடிமலை இப்போது எழுந்தது!

"கரடிமலை என்பது ஒரு குன்று. குன்றின் பெயரே ஊருக்கு. கரடி நின்று கொண்டிருப்பது போல் குன்றின் உருவம்."

"ஓ!"

கரடிமலையின் நினைப்புடன் சாவித்ரியைப் பார்க்கையில் யாரோ அன்னியளைப் பார்ப்பது போல் இருந்தது. தூக்கத்திலேயே நடந்து வந்து திக்குத் தெரியா இடத்தில் விழித்துக் கொண்டாற் போல். யார் இவள்? ஓ, குறுக்கே முளைத்த மனைவியல்லவா?

"ஏன் ஒரு மாதிரியா இருக்கேள்?"

"இருக்கேனா என்ன?"

திடீரென என் பக்கமாய்ச் சாய்ந்து என் கால்களை அணைத்துக் கொண்டாள்.

"இந்த சமயம் நீங்கள் ரொம்ப அழகாயிருக்கேள்." பேச்சு மூச்சாய் எரிந்தது. "சில சமயங்களில் நீங்கள் ரொம்ப நன்னாயிருக்கேள். திடீர்னு வயசில் பாதியுதிர்ந்து சட்டையுரிச்சாப் போல். புருவம் மட்டும் நரைக்காமல் இருந்தால் இன்னும் நன்னாயிருப்பேள். நீங்களா மாட்டேள். நான் மையைத் தீட்டி விடட்டுமா?"

"புருவம் நரைக்காமல் இருந்தால் நன்னாயிருப்பேன்."

"தலை நரைக்காமல் இருந்தால் ரொம்ப நன்னாயிருப்பேன்."

"நெற்றியில் கோடு விழாமல் இருந்தால் ரொம்ப ரொம்ப நன்றாகயிருப்பேன்."

என்னுடன் ஆமோதனையில் தலையைப் பலமாக ஆட்டினாள்.

"இன்னும் சற்று சதைப்பிடிப்பாயிருந்தால் - கழுத்து இவ்வளவு நீளமாக இல்லாமலிருந்தால்-"

தலைநிமிர்ந்து என்னைச் சந்தேகத்துடன் நோக்கினாள். நான் கேலி பண்ணுவது இப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது.

"உன் நிபந்தனைகள் இனி சாத்யமில்லை. அன்று, முதன் முதலாய் உன்னைப் பார்க்க இந்த அரண்மனைக்கு உன் தகப்பனார் என்னை அழைத்து வந்த போதே தோன்றியிருக்க வேண்டும். தவிர-"

"ஏன் நான் வாயைத் திறந்தாலே என்னை வெட்டிக் கிணற்றில் போடக் காத்துண்டிருக்கேள்?"

அவள் இடைமறிப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமலே அதே மூச்சில் பேசிக் கொண்டே போனேன். எனக்கு லேசாய்த் திணறிற்று.

"-தவிர, இந்த 'கண்டிஷன்கள்' எல்லாம் எங்களுக்குத்தான். உங்களுக்குத்தான் ஒரு வயதுக்கப்புறம் வயது முழங்காலுக்குக் கீழ் நின்றுவிடுமே!"

அவளுக்குச் சிரிப்பு பீறிட்டது.

"ஆமாம், உனக்குச் சிரிப்பாய்த்தானிருக்கும்!" எனக்கு ஏன் இவ்வளவு எரிச்சல்? அவளைப் பார்க்கவே திடீரென்று வெறுப்பாயிருந்தது. மொழுமொழுவென்று அந்த உடல், பெரிதாய், சற்று மேட்டு விழிகள், சிரிப்பில் பளீரிடும் பல் வரிசை, மோவாய்க்குழியில் இயல்பாய் ஒரு மறு, மோவாய்க் கடியில் லேசாய் உருப்படர்ந்து கொண்டிருக்கும் இன்னொரு மோவாய் - கன்னக் கதுப்புகள் - அங்கங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகக் கண்ணைக் கரித்தன.

"இல்லை, நீங்கள் சொல்ற தினுசு வேடிக்கையாயிருக்கு."

அவள் பக்கமாகச் சட்டென்று குனிந்தேன்.

"இதெல்லாம் எதற்குப் பீடிகை? சமாதானம் பண்ணிக் கொள்கிறாய் என்று அர்த்தமா?"

"ஆமாம்! சமாதானம்! வெற்றி!" உதட்டைப் பிதுக்கினாள். "என்ன அர்த்தமற்ற வார்த்தைகள்!"

"என்ன, ஞானோதயமோ?"

அவளுக்குக் கோபம் வரவில்லை. எங்கோ நினைப்பாய் என் பாதங்களை வருடினாள். "அலுப்புன்னு வெச்சுக்கோங்கோளேன்! உங்கள் வெற்றியை விட என் தோல்விதானே உங்களுக்கு முக்கியம்! அப்படியேதானிருந்துவிட்டுப் போகட்டுமே!"

நான் அசதியுடன் தலைசாய்ந்தேன். எனக்குத் திருப்தியில்லை. தன் தோல்வியை அவள் தானே என்னிடம் தாம்பூலத் தட்டில் தந்தது, அதுவே அவள் வெற்றியாய்த் திரிந்து என் தொண்டையடியில் கசந்தது. இப்படித் தணிந்து, அவளை அவள் இயற்கைக்கு விரோதமாய்ப் பார்க்கவும் பிடிக்கவில்லை. ஒருவருக்கொருவர் ஒருவரிடமிருந்து ஒருவர் என்ன தான் வேண்டுகிறோம்? வாழ்க்கையில் இதற்குள்ளேயே இவ்வளவு தெவிட்டல். பாக்கி நாள் கழிப்பதெப்படி?

ஒரு பெரும் இடி தூரத்தில் பிறந்து உருண்டு கொண்டே நெருங்கி வந்து தலைமேலேயே போல் நொறுங்கியது. யாக குண்டத்திலிருந்து எழுந்த அக்னிதேவன் கையில் ஏந்திய வெள்ளிப் பாயஸக் கிண்ணம் போல், அறை ஒரு வினாடி மின்னலில் பளீரிட்டு, அறையில் முன்னிலும் காரிருள் கவிந்து சூழ்ந்து கொண்டது. பலத்த மழை மறுபடியும் பிடித்துக் கொண்டது. மரங்கள், ஒப்பாரியில் தலைவிரி கோலத்திலாடின. இலைகளின் சந்து வழி, காற்று கத்தியே தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வது போல் ஊளையிட்டது.

பக்கத்து அறையில் ஜன்னல் கதவுகளும் வாசற்கதவுகளும் 'பட்பட்'டென்று அடித்துக் கொண்டன.

சமையலறையில் ஏதோ சாமான் உருண்டது.

சாவித்ரி கவனிக்க எழுந்து சென்றாள்.

இத்தனை அமர்க்களத்தினிடையே ஜன்னல் கண்ணாடி மேல் மழை தாரை ஒன்றன்பின் ஒன்று இடையறாது வழிந்த வண்ணமிருந்தது.

மௌனக் கண்ணீர்.

சகுந்தலை இப்படித்தானிருப்பாள்.

மோனதாரை கழுவக் கழுவ கண்ணாடியே துல்லியமான மிருதுவாகிக் கொண்டிருப்பது போல் தோன்றிற்று.

இத்தனை பெருக்கின் மூலக்காரணம் ஜலத்துளியின் முதற் கசிவிடம் போல் புஷ்பாஞ்சலியில் நெகிழ்ந்த இறைவனின் இதயம் இப்படித் தானிருக்குமோ?