அத்தியாயம் 1

16.11k படித்தவர்கள்
10 கருத்துகள்

ஜூலை 2019

மதர் கேர் ஹாஸ்பிட்டல்

சென்னை.

தன் மரணத்தை எதிர்பார்த்து விடை பெற்றுக் கொண்டிருக்கும் ஓர் உயிர் முன்பின் தெரியாத ஒரு நபரால் கிண்டியில் உள்ள மதர் கேர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறது. அந்த உயிர் வேண்டுவது அதனின் இறப்பை மட்டுமே. இரண்டு செவிலியர்களுடன் அந்த மருத்துவமனைக்கு வந்துள்ள பலரும் கூட்டம் கூடி அந்த உயிரையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு செவிலியர் மட்டும் அங்கிருந்து வேகமாக மருத்துவரின் அறைக்கு ஓடி பணியில் இருந்த ஒரு மருத்துவரிடம் தகவலைத் தெரிவித்தார்.

‘டாக்டர்... எமர்ஜென்சி... ஒரு சூசைட் கேஸ்...’

‘யாருக்கு...? எமர்ஜென்சி ரூம்க்குக் கொண்டு போய்டாங்களா?’

‘இல்ல டாக்டர்... ரிஷப்ஷன்லையே படுக்க வச்சிருக்காங்க...’

‘வாட்? என்ன பண்ணிட்டு இருக்கீங்க?’

‘ஸாரி டாக்டர்... அது...’

‘அங்க என்ன இவ்ளோ கூட்டம் இருக்கு... நகர சொல்லுங்க எல்லாரையும். போயிட்டு ஜீவா டாக்டர்க்கு இன்பார்ம் பண்ணுங்க ஒருத்தர்.’

‘போறேன் டாக்டர். டாக்டர்...?’

‘என்னம்மா?’

‘ஜீவா டாக்டர் எங்க இருக்காங்க?’

‘இன் பேஷன்ட்ஸ் பார்க்க ரவுண்ட்ஸ் போயிருக்காங்க. பர்ஸ்ட் ப்ளோர் போங்க... என்ன தான் பண்ணிட்டு இருக்கிங்களோ...’

‘எமர்ஜென்சி ஸ்டாஃப்ஸ் எங்க போனாங்க?’

‘இங்க தான் இருக்கோம் டாக்டர்...’

‘என்ன நின்னுட்டு இருக்கீங்க? க்ரவுட் கிளியர் பண்ணிட்டு... உடனே எமர்ஜென்சி ரூம் கொண்டு போங்க. பாஸ்ட்...’

அங்கு கூடி இருந்த கூட்டத்தை விலகச் செய்துவிட்டு அந்த உயிரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அறைக்குக் கொண்டு சென்றனர். முதல் தளத்தில் இருந்த மூத்தப் பெண் மருத்துவரான ஜீவாவிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அந்த உயிர் தாமதிக்காமல் சிகிச்சை கொடுக்கப்பட்டு ஐ.சி.யூ. அறைக்கு மாற்றப்பட்டது.

சிகிச்சை முடிந்த பின் மருத்துவர் ஜீவா (ஜீவரத்தினம் – மூத்த பெண் மருத்துவர்) அங்கிருந்த செவிலியரை மருத்துவ அறிக்கைகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய அறைக்கு வருமாறு கூறிவிட்டு, அங்கிருந்து கிளம்பி சென்றார். மருத்துவ அறிக்கைகள் தயார் ஆனவுடன் செவிலியர் ஒருவர் ஜீவா மருத்துவரின் அறைக்கு அதனை கொண்டுச் சென்றார்.

‘மே ஐ கமின் டாக்டர்...?’

‘உள்ள வாங்க...’

‘டாக்டர்... இப்ப அட்மிட் ஆனா பேஷண்ட் ஓட கேஸ் சீட்.’

‘ஹ்ம்ம்... கொடுங்க. பேஷண்ட் கூட வந்தவங்க எங்க இருக்காங்க?’

‘அவங்க கூட யாரும் வரல டாக்டர்...’

‘யாரும் வரலையா? யார் அட்மிட் பண்ணது?’

‘தெரியல டாக்டர். வித்யா சிஸ்டர் தான் ரிஷப்ஷன்ல இருந்தாங்க. பேஷண்ட்டோட காலேஜ் ஐ.டி. இது... செயின்ட் ஸ்டீப்பன்ஸ் யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்...’

‘சரி, ரிஷப்ஷன்ல சொல்லி, அவங்க காலேஜ்க்குக் கான்டேக்ட் பண்ணி பேசண்ட்டோட பேரன்ட்ஸ்க்கு இன்பார்ம் பண்ணுங்க. அவங்களுக்குக் கொடுக்க வேண்டிய நெக்ஸ்ட் செட் ஆப் மெடிசன்ஸ் டிலே பண்ணாம கொடுங்க. அவங்க பேரன்ட்ஸ் வந்ததும் நாளைக்கு மார்னிங் அவங்களுக்கு தனி ரூம் அலாட் பண்ணி ஐ.சி.யூல இருந்து ஷிப்ட் பண்ணிடுங்க. நான் மார்னிங் வந்து பேசுறேன் அவங்ககிட்ட.’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘ஒகே டாக்டர்.’

தன்னுடைய பணி நேரம் முடிந்தவுடன் மருத்துவர் ஜீவா மருத்துவமனையில் இருந்து தன்னுடைய வீட்டிற்குப் புறப்பட்டார். அவரை அழைப்பதற்காக அவருடைய மகன் ‘அகில்’ வழக்கம் போல மருத்துவமனையின் முன்புறம் வந்து காரில் காத்திருந்தான். சூழ்நிலையின் தீர்மானத்தால் வாழ்க்கையில் அவன் எடுத்த ஒரு முடிவு அவனையும் அவனுடைய அம்மா மருத்துவர் ஜீவாவையும் நான்கு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்தும் பிரித்து வைத்திருந்தது. நான்கு வருடங்களுக்கு மேலாக இருவருக்குள்ளும் எந்த ஒரு உரையாடலும் இல்லை என்றாலும் தன்னுடைய அம்மாவை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து விடுவதையும் நேரத்திற்கு அழைத்துச் செல்வதையும் அகில் வழக்கமாக வைத்திருந்தான். தனக்கு விருப்பம் இல்லாமல் அகில் அவனுடைய வாழ்வில் எடுத்த முடிவினை அவன் மாற்றிக்கொள்ளாமல் அவரும் அவனிடம் பேசப் போவதில்லை என்பதில் உறுதியாய் இருந்தார். இருவரும் வழக்கம் போல உரையாடல்கள் ஏதுமின்றி வீட்டிற்குச் சென்றனர்.

மறுநாள்

மருத்துவர் ஜீவா தன் பணி நேரமான காலை 10.30மணிக்கு வழக்கம் போல் மதர் கேர் மருத்துவமனைக்கு வந்தடைந்தார். தனது அறைக்கு சென்றவுடன், ஹாஸ்பிட்டல் ரிசப்ஷனிற்குப் போன் செய்தார்.

‘ஜீவா டாக்டர் பேசுறேன்...’

‘குட் மார்னிங் டாக்டர்.’

‘ஐ.சி.யூ-ல நைட் டியூட்டி பார்த்த நர்ஸ் யாராது ஒருத்தர என் ரூம்க்கு வர சொல்லுங்க உடனே.’

‘ம்ம்ம்... ஒகே டாக்டர்.’

‘ம்ம்ம்...’

ஐ.சி.யூ. வார்டில் இரவு பணி செய்த செவிலியர், மருத்துவர் ஜீவாவை சந்திக்க அவருடைய அறைக்குச் சென்றார்.

‘மே ஐ கமின் டாக்டர்...?’

‘உள்ள வாங்க.’

‘குட் மார்னிங் டாக்டர்.’

‘குட் மார்னிங்...’

‘வர சொல்லிருந்திங்க...’

‘நேத்து சூசைட் கேஸ்ல அட்மிட் ஆனா பேசன்ட் எப்படி இருக்காங்க இப்போ?’

‘குட் நவ் டாக்டர்.’

‘நைட் நல்லா தூங்குனாங்களா?’

‘தூங்குனாங்க. இப்போதான் எழுந்து, ப்ரேக்பாஸ்ட் சாப்டாங்க.’

‘இன்டிவிட்ஜுவல்லா ரூம் அலாட் பண்ணி ஷிப்ட் பண்ண சொன்னேன். பண்ணிடிங்களா?’

‘இல்ல டாக்டர் இன்னும். அவங்க பேரன்ட்ஸ் சைட் இருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லாதனால இன்னும் ஷிப்ட் பன்னால.’

‘எந்த ரெஸ்பான்ஸும் இல்லையா?’

‘யெஸ் டாக்டர், காலேஜ்க்கு கான்டேக்ட் பண்ணப்ப அவங்க பேரன்ட்ஸ் நம்பர் கொடுத்து கான்டேக்ட் பண்ண சொன்னாங்க. கால் பண்ணப்போ அவங்க பேரன்ட்ஸ் சைட் இருந்து ரெஸ்பான்ஸ் பண்ண மாட்றாங்க டாக்டர்.’

‘சரி, நீங்க அவங்களுக்குத் தனி ரூம் அலாட் பண்ணி ஷிப்ட் பண்ணுங்க. நான் வந்து பார்க்குறேன்.’

‘ஆனா, டாக்டர் இன்னும் அவங்களுக்கான எந்த மெடிக்கல் பீசும் கட்டாம இருக்கு.’

‘நீங்க ஷிப்ட் பண்ணுங்க இப்போ. பில்லிங் செக்சன்ல இருந்து என்ன வந்து லஞ்ச்ல மீட் பண்ண சொல்லுங்க.’

‘ஒகே டாக்டர்’

தன்னுடைய அம்மாவை அழைப்பதற்காக அகில் வழக்கம் போல மருத்துவமனையின் வெளியில் காத்திருந்தான். வழக்கமாக வரும் நேரத்தில் இருந்து தாமதமாக ஒரு மணி நேரம் கழித்து அவனுடைய அம்மா ஜீவா பணி முடிந்து வந்தார். இருவரும் வழக்கம் போல் வார்த்தைகள் ஏதுமின்றி அங்கிருந்து தங்களுடைய வீட்டிற்குக் கிளம்பினர். தன்னுடைய அம்மாவின் முகத்தில் புதியதாய் ஒரு கவலை தொற்றியிருப்பதை அகில் கவனித்தான். எதைப் பற்றியோ ஆழ்ந்து யோசித்தவாறே அவனுடைய அம்மா அமர்ந்திருந்தார். யாரைப் பற்றிய கவலை? எதைப் பற்றிய யோசனை என்று அவனுக்குக் கேட்க வேண்டும் என்று தோன்றியது. எப்படியும் பதில் கிடைக்காது என்பதால் எதுவும் கேட்காமல் அமைதியாகவே இருந்தான். வீட்டிற்கு வந்தவுடன் சாப்பிட்டு விட்டு தன் அறைக்குச் செல்வதை வழக்கமாக வைத்திருந்த அவனுடைய அம்மா அன்று சாப்பிடுவதை கூட மறந்து அவருடைய அறைக்குள் சென்று கதவை சாத்தியது அவனுடைய அம்மாவின் கவலையை உறுதிப்படுத்தியது. அவருடைய அறையின் கதவை பார்த்த வண்ணமே அகில் இரவு உணவை உண்டு விட்டு வீட்டினுடைய மாடிக்குச் சென்றான். உயரமான மாடி என்பதால் அங்கிருந்து பார்த்தால் சாலைகளில் வாகனங்கள் ஒன்றின் பின் ஒன்றாக நகர்ந்து செல்வது நன்றாக தெரியும். தன்னுடைய கைப்பேசியில் இருக்கும் புகைப்படம் ஒன்றைப் பார்த்தபடி சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். தன் பின்னே ஒருவர் நடந்து வரும் காலடியின் சத்தம் கேட்பதை உணர்ந்த அகில் பின்புறம் திரும்பி பார்த்தான். அவனுடைய அம்மா ஜீவா அவனுடைய இடது கையின் பக்கம் வந்து அவன் அருகில் நின்றார். நான்கு வருடங்களாக நேருக்கு நேராக கூட பார்க்காமல் இருந்த தன் அம்மா அவனுடைய அருகில் வந்து நின்றது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவனுடைய ஆச்சரியம் குறைவதற்குள்ளே அவனுடைய அம்மா, அவனிடம் பேச தொடங்கினார்.

‘சாப்டியா அகி...?’

தான் அதிக முறையில் பேச முயற்சி செய்தும் தன்னிடம் பேசாமல் தவிர்த்த அவனுடைய அம்மா அவனிடம் தானாக வந்து பேசியது சிறிதும் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. அவன் எந்த பதிலும் பேசாமல் அவரையே பார்க்க, அவரே மீண்டும் அவனிடம் பேச தொடங்கினார்.

‘சாப்டியான்னு கேட்டேன் அகி...’

‘ம்ம்ம்... சாப்டேன் மா. தூங்கலையா நீங்க இன்னும்?

‘தூக்கம் இல்ல...’

‘என்ன ஆச்சி? டின்னர் கூட சாப்புடாம ரூம் போய்டிங்க?’

‘நேத்து ஒரு சூசைட் கேஸ் அட்டன் பண்ணேன்’

‘என்ன ஆச்சி?’

‘செயின்ட் ஸ்டீப்பன்ஸ் யூனிவர்சிட்டி ஸ்டுடென்ட்...’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

‘செயின்ட் ஸ்டீப்பன்ஸ்ஸா?

‘ம்ம்ம்...’

‘எந்த இயர் பையன்?’

‘பையன் இல்ல...’

‘பொண்ணா?’

‘ம்ம்ம்... அவ பேர் அபர்ணா. அந்த பொண்ணு ட்ரான்ஸ் ஜென்டர்...’

‘ட்ரான்ஸ் ஜென்டர்? காலேஜ்ல எதும் ரேகிங் ப்ராப்ளமா? இஸ் ஷி ஓகே நவ்?’

‘நல்லா இருக்கா இப்போ... ஆனா, அந்த பொண்ண தான் பார்க்க அவ வீட்ல இருந்து இன்னும் யாருமே வரல.’

‘இன்பார்ம் பண்ணிடிங்களா?’

‘இன்பார்ம் பண்ண ட்ரை பண்ணி அவங்க பேரன்ட்ஸ் சைட் எந்த ரெஸ்பான்ஸும் இல்ல. அந்த பொண்ணுக்கிட்ட பேசலாம்ன்னு அவள பார்க்க அவ ரூம்க்கு போனேன்...’

மதர் கேர் ஹாஸ்பிட்டல்

அபர்ணாவை தனி அறைக்கு மாற்றி விட்டதாக செவிலியர், மருத்துவர் ஜீவாவிடம் வந்து தகவலை தெரிவித்தார். அபர்ணாவை பார்க்க அவருடைய அறைக்கு அங்கிருந்து மருத்துவர் ஜீவா சென்றார்.

‘ஹலோ... குட் மார்னிங்.’

‘குட் மார்னிங் டாக்டர்...’

‘நைட் நல்லா ரெஸ்ட் எடுத்திங்களா? பெய்ன் அதிகமா இருந்ததா?’

‘நல்லாவே தூக்கம் வந்தது. இப்போதான் எழுந்தேன் டாக்டர். ரொம்பவே பரவால்ல இப்போ.’

‘குட்... அபர்ணா, அது... உங்க வீட்டுக்கு இன்பார்ம் பண்ண ட்ரைப் பண்ணோம். அவங்க சைட் இருந்து எந்த ரெஸ்பான்ஸூம் பன்னல இன்னும்...’

‘அது என்னோட நம்பர் தான் டாக்டர். நான் மட்டும் தான் வீட்ல...’

‘அப்பா, அம்மாலாம்...?’

‘அப்பா, அம்மான்னு எல்லாருமே இருக்காங்க... ஆனா, எனக்கு அப்பா, அம்மாவா அவங்க இல்ல.’

‘ஸாரி... காரணமே இருந்தாலும் இது முட்டாள் தனமான முடிவு தான். இப்படி ஒரு டெசிஸன் எடுக்குற அளவுக்கு அபர்ணாவுக்கு என்ன நடந்துச்சி? அப்பாவும், அம்மாவும் அபர்ணாவ ஏத்துக்குல அப்படின்னா...’

‘என்ன போல இருக்கவங்கள அப்பாவும், அம்மாவும் ஏத்துகிட்டா தான் இருக்க முடியும்ன்னா இன்னைக்கு எந்த அபர்ணாவும் இங்க உயிரோட இருக்க மாட்டாங்க டாக்டர். எத்தன பேர், எத்தன தடவ தான் சொல்றது, நாங்களும் உங்க எல்லார போல ஒரு சராசரியான மனுஷங்க தான்னு... ஸ்டார்ட்டிங்ல தோனுச்சி... நம்மள எல்லாரும் ஏத்துப்பாங்களான்னு... ஆனா, இப்போ அப்படி இல்ல. சுத்தி இருக்க எல்லாரும் பேசுறத வச்சி, சொல்றத வச்சி நான் என்ன அசிங்கம்ன்னு நெனைக்காம, இது தான் அபர்ணா நீன்னு... இந்த பிறப்பு உனக்கு இது தான்னு என்ன நான் ஏத்துகிட்டா போதும். இப்போ? இங்க யாரும் ஆணா பிறந்ததுக்கோ... பெண்ணா பிறந்ததுக்கோ அத அவங்க எந்த அசிங்கமாவும் அவமானமாவும் நினைக்குறது இல்லையே... சொல்ல போனா எல்லாருக்கும் அவங்க ஆணா... பெண்ணான்னு உறுப்புகள் தான் தீர்மானிக்குது. எங்களுக்கு உணர்வுகள் தீர்மானிக்குது அவ்ளோ தான். என்ன? அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சின்னு ஒரு குடும்பமா வாழ்ந்துட்டு... திடீர்ன்னு ஒரு நாள் நீ வீட்ட விட்டு போய்டு... நாங்க எல்லாரும் ஒரு குடும்பம்... நீ மட்டும் அனாதைன்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்...? வெளி உலகமன்னா என்னனே தெரியாத ஒரு வயசுல வீட்ட விட்டு வெளிய வந்துட்டு பசிக்குதுன்னா சாப்பாடு போட்டு கொடுக்க அதுவரைக்கும் இருந்த அம்மா இருக்க மாட்டங்க... இது பண்ணு, இது பண்ணாதன்னு சரியா வழி நடத்த அப்பான்னு ஒருத்தர் இருக்க மாட்டாரு... நம்ம கூட விளையாட தம்பி தங்கச்சின்னு யாரும் இருக்க மாட்டாங்க... யாருமே இல்லாம தனியா நான் நிக்கும் போது என் முன்னாடி நிறைய கட்டமைப்புகளோட சமுகம்ன்னு ஒன்னு நின்னுட்டு இருந்தது. இந்தச் சமுகம் இருக்குல டாக்டர்... அது மனுஷங்ககிட்ட இருந்து என்ன போல உயிர் வாழ்ந்துட்டு இருக்கவங்கள தான் பிரிச்சி வச்சிருக்குன்னு பார்த்தா... அவங்களுக்குல்லையே ஜாதி, மதம், கெளரவம் வெங்காயம்ன்னு என்ன என்னத்தையோ பிரிச்சி வச்சிருக்கு... ஒவ்வொன்னா எல்லாத்தையும் அனுபவபட்டு, புரிஞ்சி தனியா போராடி உயிர் வாழுறதுக்குல்ல... முடியல டாக்டர்...’

‘ஹ!ஹ! போதும் போதும்... அதனாலயா இந்த முடிவு?’

‘அட இல்ல டாக்டர்... என்ன விடுங்க, என்னோட இந்த ஏஜ்ல ஒரு பொண்ணோ, இல்ல பையனோ இப்படி ஒரு முடிவு எடுத்தா முக்கியமா என்ன காரணமா இருக்கும்ன்னு நினைக்குறீங்க?’

‘காதலா...?’

‘உண்மைய சொல்லுங்க... எனக்கும் அதே தான்னு நானும் சொன்னா கேக்குற இவங்க எல்லாரும் இவளுக்குலாம் ஒரு காதலா? இவள யாரு காதலிப்பான்னு தானே சிரிப்பாங்க. ஆனா, இந்த பூமில எனக்காகவும் ஒருத்தன் இருந்தான்... என்ன சாப்டியான்னு கேக்க ஒருத்தன் இருந்தான்... என் வாழ்க்கைய சரியா வழி நடத்த ஒருத்தன் இருந்தான்... எனக்கு எல்லாமுமா ஒருத்தன் இருந்தான்.’

(தொடரும்...)