அத்தியாயம் 1
கல்லூரியின் முதல் மணி அடிக்க இன்னும் நேரமிருந்தது. கிட்டத்தட்ட அரைமணி நேரமாவது இருக்கும். அதற்குள் பேசி முடித்துவிடலாம் என்று பி.ஏ.எகனாமிக்ஸ்-பி செக்ஷன் மாணவிகள் பத்துப் பேர் கல்லூரியின் பின்பக்கம் காண்டீனுக்கருகில் கூட்டமாகக் கூடினர். அந்தச் சிறிய கூட்டத்திற்குத் தலைமை ஷைலஜா. பி.ஏ., எகனாமிக்ஸ் பொறுத்தவரை எதுவானாலும் ஷைலஜா, ஷைலஜா, ஷைலஜாதான்.
அனைத்துக் கல்லூரிப் போட்டியா - ஷைலஜா
அவர்கள் கல்லூரிப் போட்டியா - ஷைலஜா
பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, மாறு வேடப் போட்டி- ஷைலஜா
கல்லூரிக் கலைவிழா - ஷைலஜா.
கல்சுரல் செகரெட்டரி- ஷைலஜா.
அழகு - ஷைலஜா.
படிப்பில் முதல் மார்க்- ஷைலஜா.
ஆகவே அந்த வகுப்பின் முடிசூடாத ராணி ஷைலஜாதான். இந்த மாதிரி கூட்டம், பேச்சு எல்லாமே ஒப்புக்குத்தான். ஷைலஜா என்ன சொல்கிறாளோ அதுதான் முடிவு. ஆனாலும் கூட்டம் மட்டும் தவறாமல் கூட்டப்படும். அபிப்பிராயங்கள் சொல்லப்படும். மனதிருந்தால் ஷைலஜா கேட்பாள். இல்லாவிட்டால் தன் முடிவை மட்டும் சொல்வாள். ஏற்றுக்கொண்டு கூட்டம் கலையும்.
அவளது முடிவை மாற்றுகிற தைரியமும் புத்திசாலித்தனமும் யாரிடம் இருந்தாலும் அதை ஓரம் கட்டுகிற வித்தை தெரியும் ஷைலஜாவிற்கு. இவர்கள் என்ன சொல்வது நாமென்ன கேட்பது என்பது பார்வையில் தெறிக்கும். சாமர்த்தியமும், சாதிக்கிற குணமும் முகத்தில் பளபளபக்கும். சில சமயம் பேச்சிலும் கொட்டும். பிறிதொரு சமயம், ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்றிருக்கும். ‘ஐயோ பாவம்’ என்கிறாற்போல் கூடத் தோன்றும். அத்தனை தத்ரூபமாக வைத்துக் கொள்வாள். கேட்டால்,
“அப்படித்தாண்டி இருக்கனும், அப்போதான் இந்த உலகத்தில் பிழைக்க முடியும்” என்பாள்.
அன்றைக்கும் அதே மாதிரி குழந்தை முகத்தோடு கூட்டத்தில் உட்கார்ந்திருந்தாள். நாளைய மறுநாள் அவர்கள் வகுப்புத் தோழி சங்கீதாவின் கல்யாணம். அதற்கு என்ன பரிசு வாங்கலாம் என்பதைத் தீர்மானிக்கக் கூட்டம்.
ஆளுக்குப் பணம் போட்டு கணிசமாக சேர்த்திருந்தார்கள். அதற்கு என்ன கிடைக்கும் என்பதைப் பட்டியல் போட்டு வைத்திருந்தார்கள். என்ன வாங்குவது எங்கே வாங்குவது என்பதைத் தீர்மானிக்கவே கூட்டம்.
“டின்னர்செட் மாதிரி ஏதாவது வாங்கலாமா?”
“கல்யாணம்தானே பண்ணிக்கறா, உடனே அவளை மாமியாக்கி சமையலுக்கும், சாப்பாட்டுக்கும்தான் லாயக்குன்னு காட்டணுமா?”
“சரி. வேணாம். நல்லதாக சுடிதார் செட் வாங்குவோம்.”
“சமையல், டிரஸ், அதைவிட்டால் நகைகள். இதைத் தவிர வேறு விதமாகத்தான் யோசியுங்களேன்.”
“நீதானே யோசிக்கிறவ. நீயே சொல்லு.”
“அழகான கலைப் பொருள் ஒண்ணு வாங்கினால் என்ன?”
“வெரிகுட் ஐடியா ஷைலு, பூம்புகார், காதி கிராமோத் யோக் பவன் போய் நல்லதாக ஏதாவது வாங்குவோம்.”
“ஏன், விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் போய் வாங்கினால் என்ன?”
“அங்கே கொஞ்சம் விலை அதிகமாக இருக்காது?”
“இருந்தால் என்ன? தினமும் சாப்பிடும் உடுப்பி ஓட்டல் இல்லைன்னால் ஒரு நாளாவது ஃபைவ் ஸ்டார் ஓட்டல்ல சாப்பிடற மாதிரித்தான வாழ்க்கையில் வித்தியாசமே வேணாமா? வி.டி.ஐ-ல வாங்கினால் ஒரு மதிப்பு, கெளரவம்.”
“ஷைலுவே சொன்னதற்கு அப்புறம் நோ அப்ஜெக்ஷன்ப்பா. சாயந்திரம் காலேஜ் விட்டதும் நேராக மவுண்ட்ரோடு போய்விடலாம்!”
“மவுண்ட்ரோடு எதுக்குப் போகணும்?”
“ஏய் தூத்துக்குடி, உன்னை மாதிரி ஹாஸ்டல், பார், ஊர், ஹாஸ்டல்னு இருந்தால் வெளியிடமெல்லாம் தெரியாமல் போய் விடும். மவுண்ட்ரோடுலதான் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் இருக்கு.”
“அதில்லைப்பா. ஷைலு வி.டி.ஐ-ன்னு சொல்றா. நீ பெரிசா ஏதோ பேர் சொல்ற? எந்தக் கடைல வாங்கப் போறோம்?”
“விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட்டை சுருக்கினால் வி.டி.ஐ. கர்மம், இதுகூட தெரிஞ்சுக்காமல் நீயெல்லாம் ஏண்டி மெட்ராசுக்குப் படிக்க வர்ற?”
“நானாவது தூத்துக்குடி, முத்து எடுக்கிற இடத்துலேர்ந்து வரேன். வெறும் பருத்தி காட்டுலேர்ந்து நீ வந்திருக்கியே, அதுக்கு என்ன சொல்ல?”
“வந்து நான் சும்மா இல்லை, மெட்ராஸ் முழுசும் தெரிஞ்சுக்கிட்டிருக்கேன்.”
“நான் வந்தது படிக்க, உன்ன மாதிரி பார் சுற்ற இல்லை.”
“ஐயோ. போறும். நிறுத்துங்க, எப்பவும் சண்டை போட்டுக்கிட்டு. ஆமாம், அத்தனை பேருமா போகணும்?”
“சீ… என்ன காணும் பொங்கலுக்கா போறோம்? நானும், நித்தியும் மட்டும் போய் வாங்கிட்டு வரோம். என்ன நித்தி?”
“ஓ.கே. ஷைலு.”
“இன்னிக்கு சாயந்திரம் வேணாம். நாளைக்கு சனிக்கிழமை. காலேஜ் கிடையாது. காலைல பத்து மணிக்கெல்லாம் நான் உன் வீட்டுக்கு வரேன். உன் கார்லேயே போயிடலாம். என்ன?”
“சரி, ஷைலு.”
*****
மறுநாள் காலை பத்தரை மணிக்கெல்லாம் அவர்கள் விக்டோரியா டெக்னிகல் இன்ஸ்டிட்யூட் என்ற அந்த சிலைப் பொருள் கடைக்குள் நுழைந்தார்கள். கடையின் கீழ்த்தளம் முழுதும் அலசினார்கள். மாடிக்குப் போனார்கள். அங்கிருந்த மரப் பொருட்களைத் துழாவி எதுவும் பிடிக்காமல் கீழே இறங்கி வந்தார்கள்.
“என்ன ஷைலு. எதுவுமேவா பிடிக்கலை?”
“ம்ஹூம்” என்று திரும்பிய ஷைலஜாவின் பார்வையில் பில் போடும் கெளண்டரில் வைத்திருந்த கண்ணாடியில் செய்த நிர்வாணப் பெண்ணின் உருவம் மனதைக் கவர்ந்தது. நித்யாவின் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு கெளண்டர் அருகில் போனாள். கௌண்டரில் இருந்தவர் அவளைப் பார்த்து, “எஸ் மேடம்?” என்றார்.
“இந்தக் கண்ணாடிச் சிலை ரொம்ப அழகாக இருக்கு.” சொன்னபோது ஷைலஜாவின் கண்களும் முகமும் மலர்ந்து கிடந்தன.
“எஸ் மேடம்” என்றார் கௌண்டரில் இருந்தவர்.
“இதப் பார் நித்தி. இது ரொம்ப அழகாக இருக்கு. புதுசா கல்யாணம் பண்ணிக்கிறவங்களுக்கு ஐடியல் பிராண்ட் சங்கீதாவுக்கும் பிடிக்கும். அவ வீட்டுக்காரருக்கும் பிடிக்கும். வாங்கிடலாமா?”
“வேணாம்னு சொன்னால் நீ விடவா போற? வாங்கு.”
ஷைலஜா விலை கேட்டதும் கௌண்டரில் இருந்தவர் சட்டென்று மறுத்தார்.
“ஸாரி மேடம், இதை இவர் வாங்கிட்டாரு.”
கௌண்டருக்குப் பக்கத்தில் நின்றிருந்த பணக்காரக் களை சொட்டும் இளைஞன் அவளைப் பார்த்து மிக அழகாகச் சிரித்தான்.
“ஐயம் ஸாரி. நான் ஏற்கெனவே வாங்கிட்டேன். பில் போட்டுக்கிட்டிருக்காங்க.”
“ஓ...” ஷைலஜாவும் அதே மாதிரி அழகான சிரிப்போடு அவனைப் பார்த்தாள்.
“உங்களுக்கு நல்ல ரசனை. அதனால்தான் இதைத் தேர்ந்தெடுத்து வாங்கியிருக்கீங்க.”
“தாங்க்யூ. அதேபோல் உங்களுக்கும் நல்ல ரசனைதான். அதனால்தான் இதையே கேட்கறீங்க. இந்த மாதிரி இன்னொரு கண்ணாடிச் சிலை இருந்தால் அவங்களுக்குத் தாங்களேன் சார்.”
கௌண்டரில் இருந்தவர் விற்பனைப் பகுதியில் இருந்த பெண்ணைக் கூப்பிட்டு விசாரித்தார்.
“ஸாரி சார். ஸாரி மேடம். இந்த ஒரு பீஸ்தான் இருக்காம்.”
“பரவாயில்லை” என்ற ஷைலஜா, தலை சாய்ந்து பணக்காரத் தோரணை இளைஞனை கெஞ்சுகிற மாதிரி பார்த்துக் கேட்டாள்.
“நான் இந்தச் சிலையை ஒரு தரம் கையில் எடுத்துப் பார்த்துவிட்டுத் தரலாமா மிஸ்டர்...”
“விஸ்வநாதன். விச்சுன்னு கூப்பிடுவாங்க.”
“என் பேர் ஷைலஜா. இவ என் கிளாஸ்மேட் நித்யா.”
“எங்கே படிக்கிறீங்க?”
கல்லூரி பெயர் சொன்னாள்.
“என்ன படிக்கிறீங்க?”
“பி.ஏ. எகனாமிக்ஸ்”
“ஓ... நானும் லயோலாவில் பி.ஏ. எகனாமிக்ஸ்தான் பண்ணினேன்.”
“இப்போ?”
“அப்பாகூட பிஸினஸ் பார்த்துக்கிட்டிருக்கேன். டெக்ஸ்டைல் பிஸினஸ்.”
“இந்தப் பொம்மையைக் கையில் எடுத்துப் பார்த்துட்டுத் தரலாமான்னு கேட்டேனே?”
“ஓ... எஸ். வித் பிளெஷர். தாராளமாக எடுத்துப் பாருங்க. இதுக்கு எதுக்கு பர்மிஷன் எல்லாம் கேட்கறீங்க?”
ஷைலஜா கையில் எடுத்தாள். ஒருமுறை தடவிக் கொடுத்து சொன்னாள்.
“பாரு நித்தி. எவ்வளவு அழகாக இருக்கு?”
பார்த்துவிட்டு மீண்டும் கௌண்டருக்குள் வைக்கப்போன போது சட்டென்று கை நழுவிற்று. கண்ணாடிச் சிலை சிலீர் என்று தரையில் விழுந்து நொறுங்கிற்று. நிர்வாணப் பெண் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்ட மாதிரி இருந்தது. கண்ணாடி விழுந்த சத்தத்தில் கடை முழுதும் திரும்பிப் பார்த்தது.
பதறிப் போனாள் ஷைலஜா. விஸ்வநாதனின் முகத்தில் வருத்தமும் ஏமாற்றமும் பரவுவதைப் பார்த்து திரும்பத் திரும்ப, ஸாரி சொன்னாள்.
“ஐயம் ஸாரி சார். எப்படி கை நழுவிச்சுன்னே தெரியலை. மன்னிச்சிடுங்க சார். நீங்க ரொம்ப ஆசையாக வாங்கினதை நான் உடைச்சுட்டேன்.”
“நண்பன் ஒருத்தனுக்கு நாளைக்குப் பிறந்த நாள். அதுக்காகத்தான் வாங்கினேன்.”
“எத்தனை முறை வேணும்னாலும் மன்னிப்பு கேட்டுக்கறேன். இது என்ன விலையோ அதை நானே கொடுத்துடறேன்.”
“ஓ... நோ, வேணாம். கை தவறி விழுந்ததற்கு நீங்க என்ன செய்ய முடியும்? நிர்வாணப் பெண் கிடைக்க என் நண்பன் கொடுத்து வைக்கவில்லை.”
அவனுடன் சேர்ந்து ஷைலஜாவும் சிரிக்க முயன்றாள். மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்டாள்.
“பரவாயில்லைன்னு சொல்லிட்டேனில்ல, திரும்பத் திரும்ப ஏன் மன்னிப்பு கேட்கறீங்க? வாழ்க்கைல தவற்ரது சகஜம்தானே?”
“உங்களுக்கு சகஜமாக இருக்கலாம். ஆனால் இதுவரை நான் எதையும் தவறவிட்டதில்லை.”
“இனிமேலும் தவற விடாதிருக்க என் வாழ்த்துகள்.”
“தாங்க்யூ மிஸ்டர் விஸ்வநாதன். அப்போ நாங்க வரோம்.”
விடைபெற்று வெளியில் வந்து காரில் ஏறிக் கொண்டதும் நித்யா அவளைப் பார்த்தாள்.
“என்ன நித்தி?”
“பாவம் ஷைலு அந்த ஆளு. எத்தனை ஆசையாக அந்தக் கண்ணாடிச் சிலையை வாங்கினான். அநியாயமாகக் கைதவற விட்டுட்டியே?”
“யாரு கை தவறவிட்டது?”
“நீதான்.”
“கை தவறிடுச்சின்னு யார் சொன்னது?”
“பின்ன?”
“வேணும்னேதான் தவறவிட்டேன். நான் ஆசைப்பட்டதை அவன் எப்படி வாங்கலாம்? எனக்குக் கிடைக்காதது அந்த விஸ்வநாதனுக்கு மட்டும் எப்படி கிடைக்கலாம்?”
‘இப்படியும் ஒரு பெண்ணா?’
மெல்லத் தன் பார்வையை வெளியில் திருப்பி வேகமாகக் கடக்கும் கட்டடங்களில் பதிய வைக்க முயன்றாள் நித்யா.
- தொடரும்