சிறுகதை

4.15k படித்தவர்கள்
31 கருத்துகள்

ன்று வியாழக்கிழமை. நல்லவேளை ஞாபகம் வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டான் குமார். கடைக்கு நான்கைந்து பேர் வந்திருந்தனர்.

“ரெண்டு டீ குடுப்பா.”

“ஆட்டின் பீடி ரெண்டு குடு.”

“காஜா பீடி ஒரு ரூபாய்க்குத் தாப்பா.”

“இந்த வாழைப்பழம் என்ன விலைப்பா?”

“சிஸர் பில்டர் ஒண்ணு.”

“ப்ளூபேர்டு சிகரெட் ஒண்ணு.”

“50 காசு பர்பி ஒண்ணு குடுடா தம்பி.”

என்று எதிரே நிற்பவர்களின் கதம்பமான குரல்களைத் தாண்டி இந்த வியாழன் நினைவு அவனுக்குள் தனி மகிழ்ச்சியை அளித்தது.

கேட்கிறவர்களுக்கு சரசரவெனப் பொருட்களைக் கொடுத்து விட்டு, வாழைப்பழ விலையும் சொல்லிவிட்டு கேனில் இருந்த தம் டீயை இரண்டு க்ளாஸ்களில் பிடித்துக் கொடுத்தான். டீ குடிப்பவர்கள் கடைக்கு உள்ளே இருக்கும் பெஞ்சில் அமர்ந்து விடுவார்கள். பீடி சிகரெட் வாங்குபவர்கள் எதிரே நின்று வாங்கிக்கொண்டு சென்று விடுவார்கள்.

திருச்சி அரியமங்கலம் எஸ்ஐஇடி கல்லூரி எதிரில்தான் அந்தக் கடை இருந்தது. அது ஒரு பெட்டிக்கடைதான். தம் டீ உண்டு. பிஸ்கட் வகையறாக்கள், கூல்ட்ரிங்ஸ், சிகரெட் வகைகள்தான் பிரதான விற்பனைப் பொருள்கள். அங்கே படிக்கும் மாணவர்கள் வந்து டீ, பன், சம்சா, பிரெட், கேக், சிகரெட் என்று வாங்குவார்கள். வியாபாரத்தைவிட மாணவர்களிடம் அரட்டைகள் அதிகம் இருக்கும்.

அந்தக் கடைக்கு குமார் வேலைக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. எனவே அந்தக் கூட்டம் பழகிவிட்டது. ஒரே நேரத்தில் பத்து பேர் வந்தாலும் அவன் சமாளிப்பான். கடகடவென பொருட்களைக் கொடுத்து பணம் வாங்கி மீதிச் சில்லறை கொடுக்கப் பழகிவிட்டான். அன்று வாடிக்கையாளர் சலசலப்புகள் இருந்தாலும் அவனது மனம் அந்த சாயங்கால சந்தோஷத்தை நினைத்துக்கொண்டிருந்தது.

அந்த வியாழக்கிழமைக்காகத்தான் வாரம் பூராவும் ஓர் எதிர்பார்ப்பு. ஏதோ தவம்போல ஒரே நினைப்பு. நினைத்தால் அவனுக்கே அவமான வெட்கம் வரும். அந்த எதிர்பார்ப்பும் ஆசையும் அவனைச் சில நேரம் கழிவிரக்கம் கொள்ளச் செய்யும். அவலமாக நினைக்கத் தோன்றும். இழிவாகவும் நிறுத்திப் பார்க்கும். அந்த ஆசையை விட்டுவிடு என்று புத்தி கூறினாலும் மனம் கேட்காது. சில நேரம் திங்கள், செவ்வாயன்றே அந்த நினைப்பு வந்துவிடும். இன்னும் சில நாட்கள் செல்ல வேண்டுமென்று அதை மறந்து கொண்டிருப்பான். அன்று காலையிலேயே நினைவு வந்துவிட்டது. நினைக்கும்போதே ஒரு மகிழ்ச்சி.

ஒன்பதாம் வகுப்புடன் படிப்பை முடித்துக்கொண்ட குமாருக்கு 15 வயது ஆகியிருந்தது. படிப்பில் ஆர்வம்தான். குடும்பச் சூழல் மேலே படிக்க இடம் தரவில்லை.

ஊர்க்காரர் ஒருவர் வந்து “உங்க மகனை திருச்சியில் ஒரு கடையில வேலையில் சேர்த்து விடறேன். பிள்ளை மாதிரி பார்த்துக்குவாங்க. சாப்பாடு போட்டு மாதம் 45 ரூபாய்” என்று அப்பா அம்மாவிடம் நைச்சியமாகப் பேசி சம்மதம் வாங்கி விட்டார். அவர்தான் அழைத்து வந்து இங்கே விட்டார். திருச்சியை ஏதோ மெட்ராஸ், பம்பாய் மாதிரி நினைத்திருந்தான்.

முதலாளி இலகுவானவர். நல்ல சுபாவம்தான். ஆனால், அவரது மனைவி அவருக்கு நேர் எதிர். ஒவ்வோர் அசைவிலும் கர்வம் தொனிக்கும். சாப்பாடு போடுகிறார்கள்தான். அதற்காக பிள்ளை மாதிரி வைத்துக் கொள்கிறார்கள் என்று அர்த்தமில்லை. போன ஒரு வாரத்திலேயே அதைத் தெரிந்துகொண்டான் குமார். அவனை ஒரு வேலைக்காரனாகத்தான் நடத்தினார்கள்.

முதலாளி அவனிடம் சகஜமாகப் பேசுவார், ஆனால், அவரது மனைவியைப் பார்க்கும்போது உற்சாகம் அணைந்துவிடும். ஏனென்றால் நடத்துவது அப்படி இருக்கும். காலையில் சாப்பிடுவதற்கு மட்டும் முதலாளியின் வீட்டுக்குச் செல்வான். அது அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. சாப்பிடச் செல்லும்போது பலசரக்கு கடைக்குச் செல்ல வேண்டும். காய்கறி போல வேண்டியதை வாங்கிவர வேண்டும். சிறிது தூரம் வெளியே சென்று நான்கைந்து குடங்களில் தண்ணீர் பிடித்துக் கொண்டுவர வேண்டும். அவரது மனைவி அவனுக்குச் சாப்பாடு போடும்போது எந்திரம்போல போடுவாள்.

அக்கம்பக்கம் உள்ள கம்பெனிகளுக்கு அவ்வப்போது ட்ரேயில் டீ கொண்டு செல்வான். மற்றபடி அவன் வேலை பார்த்த கடையை விட்டுப் பெரிதாக வெளியே எங்கும் சென்றதில்லை.

குமாருக்கு அங்கே வேலை செய்யும் இடத்தில் மூன்றே மூன்று சந்தோஷங்கள் இருந்தன.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

ஒன்று ரேடியோ, திருச்சி விவிதபாரதியில் பாடல்கள் கேட்பான். ஊரில் இருக்கும்போது கரகரப்பாக இருக்கும் திருச்சி வானொலி அங்கே தெளிவாகக் கேட்டது, அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவன் ஊரில் இலங்கை வானொலி நன்றாக எடுக்கும். அதுநாள் வரை வானொலிதான் அவனுக்கு ஒரு சொர்க்கமாக இருந்தது. சினிமாப் பாடல்கள் பலவற்றையும் படம், பாடகர் பெயர் சொன்னாலே பாடலைச் சொல்லிவிடுவான். அந்த அளவுக்குப் பாடல்களில் பரிச்சயம் உண்டு.

அடுத்த சந்தோஷம், மாதம் இரண்டு நாள் சினிமாவுக்குச் செல்வான். அருகில் இருந்த சரோஜா தியேட்டருக்குத்தான் வழக்கமாகச் செல்வான். அங்கேதான் ஒரு டிக்கெட் 50 காசு. அவனுக்குள் ஒரு கனவு இருந்தது. திருச்சி மாரீஸ் தியேட்டரில் ஒரு படம் பார்க்க வேண்டுமென்று.

அடுத்த சந்தோஷம், வாராவாரம் அவன் சாப்பிடும் ரொட்டித்தூள். அவனைப் பொறுத்தவரை அது தூள் ரொட்டி. வாராவாரம் பொன்மலை ஜிஆர் பேக்கரியிலிருந்து ராமு வருவான். அவனுக்கு வயது 25 இருக்கும். உயரமான கருப்பான ஒடிசலான தோற்றம். துறுதுறுப்பான குணம். பேக்கரியிலிருந்து சரக்கு கொண்டு வந்து நிரப்புவான். பிளம் கேக், ஐஸ் கேக், ஹனி கேக், ப்ளைன் கேக், தேங்காய் பன், பட்டர் பிஸ்கட் வகைகள் என்று பல தின்பண்ட வகைகளை ஜாடிகளில் நிரப்புவான். அவன் சைக்கிள் கேரியரில் பெரிய தகரப் பெட்டியைக் கட்டிக்கொண்டு வருவான். அவன் வந்து பெட்டியைத் திறந்ததுமே வாசனை மண்டையை உடைக்கும். விதவிதமான இனிப்பு வகைகளின் நெய் வாசனை. குமார் தொலைவிலிருந்து அவற்றை மூக்கினால் ருசிப்பான். அதில் ஓர் ஆசை தணியும் உணர்வை அடைவான். சைக்கிள் பெட்டியிலிருந்து ஒவ்வொரு ட்ரேயாக எடுத்து வைப்பான். பேக்கரியில் வேக வைக்கப்பட்ட அதே ட்ரே அப்படியே வந்து சேரும். சில நேரம் தொட்டால் சூடாகக்கூட இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்து பிஸ்கட், கேக் வகைகளை அடுக்குவான்.

கேக் வெந்து மலர்ந்து அடிப்பாகம் ஒட்டி இருக்கும். அவற்றின் கீழாகக் கத்தியைக் கொண்டு தளர்த்தி ஒவ்வொன்றாக எடுத்து கண்ணாடி ஜாடிகளில் அடுக்கி வைப்பான். ஓரங்களிலும் அடியிலும் கேக்கின் பிசிறுகள் ஒட்டியிருக்கும். சில முறுகல், கருகல் வாசனையுடன் இருக்கும். முன்பெல்லாம் ராமு அவசரமாக முரட்டுத்தனமாக அவற்றை அடுக்கி விட்டு மீதமுள்ளதைச் சுரண்டி வெளியே தூக்கி வீசிவிட்டு சென்றுவிடுவான். முதலாளி அருகில் இருந்தால் ஏதாவது நினைத்துக் கொள்வார் என்று ஆரம்பத்தில் குமார்கூட அப்படி சுரண்டி வெளியே வீசியதுண்டு. அப்போது அவனது உள் மனம் ஏக்கத்தில் சுருண்டு கொள்ளும்.

ஒருநாள் குமார் அதை ஏக்கத்தோடு பார்த்ததை ராமு கண்டு கொண்டுவிட்டான். அது முதல் அந்த மிச்ச மீதியை சுரண்டிச் சேகரித்து அவனுக்குக் கொடுத்துவிட்டுச் செல்வான். முதலாளி பார்ப்பார் என்று தயக்கத்தோடு அவரை குமார் பார்க்கும்போது இவனது சங்கடத்தை ராமு புரிந்துகொண்டான். அதனால் அவர் கண்படாமல் அவற்றைக் கொடுப்பான். அப்போது ஒரு நட்பிரக்கப் புன்னகையையும் ராமு உதிர்ப்பான். அதனால் ராமு மீது அலாதியான ஒரு பாசம் பரவத் தொடங்கியிருந்தது. 
 
சில நாள் கேக்குகள் முனை உடைந்து உதிரிகள் நிறைய சேர்ந்திருக்கும். அவற்றைச் சேகரித்து ராமு கொடுக்கும்போதே குமார் கை நிறைய வாங்கிக் கொள்வான். மனமும் நிறையும். அப்போது யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று நாற்புறமும் கண்களால் நோட்டம் விடுவான்.

வாங்கும்போது மனமகிழ்ச்சி அடைந்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். அவனது பரவசம் மற்றவர்களுக்குக் கேலிக்குரியதாகிவிடும் என்று நினைப்பான். உள்மனம் விரிய மகிழ்ந்தபடி வாங்கிக் கொள்வான். ஒருநாள் முதலாளி இல்லாதபோது கொடுத்ததை உண்ணும்போது இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவமானமும் குற்றவுணர்வும் இல்லாமல் சுதந்திரமாக ருசித்த உணர்வு. அவன் ஆவலோடு அவசரத்துடன் கைகளை நீட்டுவதைப் பார்த்து ராமு அவனது ஏக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டான். ஏழையின் வலியும் ஏக்கமும் இன்னோர் ஏழைக்குத்தான் தெரியும் போலும். ஏனென்றால் ராமுவும் ஒரு தொழிலாளிதானே என்று குமார் நினைப்பதுண்டு.

வழக்கமாக மாலை ஏழு மணியிலிருந்து எட்டு மணிக்குள்தான் ராமு வருவான். அந்த நேரத்தில்தான் கூட்டமும் குறைந்திருக்கும். கல்லூரி மாணவர்கள் மாலையே வீட்டுக்குச் சென்றிருப்பார்கள். வியாபாரம் சுறுசுறுப்பு குறைந்து இருக்கும். அந்த நேரத்தில்தான் ராமு வந்து சரக்குகளை நிரப்புவான். ஏதாவது அவசரத் தேவை என்றால் மட்டும்தான் பகல் நேரத்தில் வருவான்.

குமார், அது நாள் வரை ஒரு கேக்கூட முழுதாகச் சாப்பிட்டதில்லை. ஆனால் தூள்கள் மூலம் அவற்றின் நிறம், மணம், ருசி தெரியும் அவனுக்கு.

ஊருக்குப் போகும் முன்பு ஒரு நாளாவது வேறு ஏதாவது ஒரு கடையில் வாங்கி ஆசை தீரத் தின்று பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வான். அந்த ஆவல் அவனுக்குள் இருந்து கொண்டே இருந்தது. இது அவனுக்குப் பலமுறை கனவாகவே வந்துள்ளது.

குமார் வந்து வியாபாரத்தைக் கவனிப்பதைப் பழகிக்கொண்ட பின்னர் முதலாளி பல நேரம் வெளியேதான் இருப்பார். நம்பிக்கை வந்துவிட்டதால் குமாரைத் தனியே விட்டுவிட்டு அடிக்கடி வெளியே செல்வார். போகப்போக அவர் அதிகம் வெளியே செல்ல ஆரம்பித்தார். கடையில் தனியாக இருந்தாலும் அவன் எதையும் எடுத்து ஒருநாளும் சாப்பிட்டதில்லை.

அவன் அம்மா வேலைக்கு அனுப்புவது என்று தீர்மானித்த பிறகு நிறைய புத்திமதிகள் சொன்னாள்.

“ஒருநாளும் கடையில் உள்ளதை எடுத்துத் திங்கக் கூடாது. ஒருநாளு தப்பு செஞ்சாலும் பலநாள் செஞ்சதா உன்மேல பழி வரும். அந்த அவமானத்தை நம்மால தாங்கிக்க முடியாது. ஏழைகளுக்கு ஆசைகள் இருக்கப்படாது. அதுக்குக் கடைசி வரைக்கும் இதுக்கெல்லாம் எடம் குடுக்காம இருக்குறதுதான் பொழைக்கிற வழி” என்று சொல்லியிருந்தாள்.

“ஏழை சொல் அம்பலம் ஏறாதுப்பா. நாம சொல்றதை எவனும் கேக்க மாட்டான். ஒரு நிமிஷத்துல திருட்டுப் பட்டம் கட்டி விடுவாங்க. அப்படி எல்லாம் எந்த சபல எண்ணமும் இருக்கப்படாது” என்றும், “வேலைபார்க்கிற வீட்டுல பொருள் எதுனா காணாமப் போனாக்கூட முதலில் வேலைக்காரங்க மேலதான் சந்தேகப்படுவாங்க. நாமதான் நல்ல புத்தியோட இருக்கணும்” என்றும் சொல்லி இருந்தாள். அதனால் அந்த ஆசை அவனுக்கு இல்லாமல் இருந்தது.

எனவே தின்பண்டங்களையெல்லாம் ஏதோ ஒரு ஜடப்பொருள் பார்ப்பதுபோலவே நினைத்துக் கொண்டு அவன் மற்றவர்களுக்கு எடுத்துக் கொடுப்பான். அவை நமக்கானது அல்ல என்பது அவன் அடிமனதில் ஆழமாக உறைந்திருந்தது.

அன்று மணி எட்டாகி இருந்தது. விவித்பாரதியில் பாடல்களுக்கு இடையிடையே ‘தீ’ படத்தின் விளம்பரங்கள் ஒலித்தன. ‘வாரே வா ராஜா இது இந்திரலோகம்’, ‘ஐயாவுக்கு மனசிருக்கு அம்மாவுக்கு வயசிருக்கு’ பாடல்கள் அடிக்கடி ஒலித்தது, அவனுக்கு கிளர்ச்சியூட்டியது.

‘தீ’ படம் பேலஸ் தியேட்டரில் வெளியாகியிருக்கிறது. அதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். ஒரு வாரத்து சம்பளம் போய்விடுமே என்று நினைத்தபோது அந்த ஆசை ஆவியாகிவிட்டது.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மாரீஸ் தியேட்டர் பற்றி பிரபலமாகப் பேசிக்கொள்கிறார்கள். அதில் படம் பார்க்காவிட்டாலும் கட்டடத்தையாவது பார்த்துவிட்டு வர வேண்டும் என்று நினைத்துக் கொள்வான்.

அன்று ராமுவை நினைத்து நினைத்து மறந்துவிட்டிருந்தான். எதிர்பார்த்து இருந்தால் அன்று மட்டும் ராமு தாமதமாகவே வருவான். எனவே மறந்ததுபோல் தன் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். தம் டீ இருந்த கேனை க்ளீனிங் பவுடர் போட்டுத் தேய்த்து கழுவ ஆரம்பித்து முடித்தேவிட்டான். அப்போது கடையில் முதலாளியும் இருந்தார்.

அன்று ஏறக்குறைய எல்லா தின்பண்ட ஜாடிகளும் காலியாக இருந்தன. ராமு சரக்கு அடுக்கத் தோதாக ஜாடிகளுக்குள் துணியால் துடைத்து சுத்தம் செய்து வைத்திருந்தான் குமார்.

எதிர்பாராத தருணத்தில் ராமு வந்துவிட்டான். குமாரின் மனம் மலர்ந்தது. உள்ளே ஒரு துள்ளல்.

ராமு முதலில் பட்டர் பிஸ்கட் போன்ற பிஸ்கட் வகையறாக்களை ஜாடிகளில் அடுக்கினான். அடுத்து கேக் தட்டுகளை எடுத்தான். நான்கைந்து ட்ரேக்கள்.

வழக்கம்போல கத்தியால் நாலா பக்கமும் பெயர்த்து மெல்ல அசைத்து ஒவ்வொன்றாக எடுத்து அடுக்க ஆரம்பித்தான். முதல் ட்ரேயின் ஓரங்களிலும் கேக் தூள்கள் ஒட்டியிருந்தன. அப்போது வாடிக்கையாளர்கள் சிலர் வந்து பொருள் வாங்கினார்கள். இருந்தாலும் குமாரின் கவனம் அந்தப் பிசுறுகள் மீது இருந்தது. இன்று கணிசமாகத் தேறும் என்று நினைத்தபோது உள்ளுக்குள் உமிழ்நீர் சுரந்தது.

முதலாளியுடன் ராமுவின் வாய் பேசிக்கொண்டிருந்தாலும் வேலையில் கை தீவிரமாக இருந்தது. ஒவ்வொரு ட்ரேயாகக் காலி செய்து ஜாடிகளில் அடுக்கிவிட்டான். கடைசியில் முதலாளி கவனம் படாதவாறு ட்ரேயில் உள்ளதைச் சுரண்டி ஒரு ட்ரேயில் கொட்டி ஓரமாக ஒதுக்கினான்.

மற்ற நாட்களையெல்லாம்விட தூள் அன்று அதிகமாக இருந்தது. அதை யாரும் அறியாதவாறு குமார் ஓரக்கண்களால் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். அவன் மனதில் மகிழ்ச்சி பெருகிக்கொண்டிருந்தது.

அவற்றின் மணம் அவனுக்குள் மூக்கு வழியே நுழைந்து மனக்கிளர்ச்சி தந்து கொண்டிருந்தது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தூள்களை ஒரு ட்ரேயில் கொட்டி குவித்துக் கொண்டிருந்தான் ராமு. தானாக அருகில் செல்லக் கூடாது என்றும், அலைவதாக ராமு நினைத்துக் கொள்வான் என்றும் எண்ணி மனதை அவனிடம் கழற்றி வைத்துவிட்டு பாராததுபோல வேறு பக்கமாக நின்று கொண்டிருந்தான் குமார்.

ராமு அழைப்பான் என்று உடம்பெல்லாம் காது வளர்த்துக் காத்துக் கொண்டிருந்தான்.

முதலாளி எதிரே இருந்த பெஞ்சில் அமர்ந்து பக்கத்து சிக்கரி கம்பெனிக்காரருடன் பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு நண்பர்கள் அதிகம். அவர்களுடன் மாலை நேரங்களில் அரசியல் பேசிக்கொண்டிருப்பார்.

காலையில் சரக்கு போட்டவர்கள். பணம் வாங்க மாலையில் வருவார்கள். பால்காரர், வாழைப்பழக்காரர், சிகரெட்காரர், கடைகளுக்கு வட்டிக்கு விடுபவர் என்று பலரும் வருவார்கள். அவர்களிடமும் அரட்டை தொடரும். அன்றும் அப்படி பேச்சில் மும்முரமாக இருந்தார். அதனால் அவரது கவனம் அந்தப் பக்கம் இருந்ததால் சற்று ஆறுதலாக இருந்தது குமாருக்கு.

“குமாரு” என்றான் ராமு தணிந்த குரலில்.

“அண்ணே” என்று மன வேகத்தைக் காட்டாமல் மெதுவாக நகர்ந்து சென்றான் அங்கே. அன்றைக்கு நிறையவே இருந்தது பிஸ்கட், கேக் தூள்கள். மனம் ஆச்சரியத்தில் மலர்ந்தது.

“ஒரு பேப்பர் கொடு” என்றான். குமார் எடுத்துக் கொடுத்தான். அதில் அவற்றைப் போட்டுவிட்டு “இன்னைக்கு நிறையவே இருக்கு, திருப்தியா சாப்பிடு” என்றான்.

மனம் பரபரக்க படபடக்கும் கைகளின் அதிர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு இருகைகளையும் நீட்டினான். ராமு அந்தக் காகிதம் நிறைய ரொட்டித்தூளைக் குமாரிடம் கொடுத்தான். ராமு மெல்ல முன்னால் வந்து முதலாளியிடம், “என்னண்ணே, யாவாரம் எப்படி போய்கிட்டு இருக்கு?” என்று வலிய பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தான்.

அது தனக்காகத்தான் என்பது குமாருக்குத் தெரியும். பதற்றம் இல்லாமல் யாருக்கும் தெரியாமல் தின்பதற்காக அந்தப் பெட்டிக்கடையின் பெட்டிக்குப் பின்னால் வாகாக நின்று மறைந்து கொண்டான். அந்த நேரத்தில் வாடிக்கையாளர் யாரும் வரக் கூடாது என நினைத்துக் கொண்டான்.

மனம் விரிய குழிவான இடது கையில் இருந்த ரொட்டித்தூள் காகிதத்திலிருந்து ஆசையாய் ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்டான். அந்த ஒரே விள்ளலில் பலவிதமான கேக்குகளின், ரொட்டிகளின் மணம் உள்ளே இறங்கியது. அவனைப் பொறுத்தவரை அதுதான் ஜுகல் பந்தி, ராகமாலிகா, சொர்க்கம் எல்லாமே. அவை கொடுக்கும் சந்தோஷத்தை அந்த ஒரு வாய் துகள்கள் கொடுத்தன. அவன் ஒன்றும் திருடிச் சாப்பிடவில்லை. இருந்தாலும் ஒரு பதற்றத்தோடு மென்று விழுங்கினான். ஏன் இப்படி தனக்கு ஆகிறது என்று நினைத்துக்கொண்டான். இது இழிவான காரியமா, அதனால்தான் இப்படித் தோன்றுகிறதா என நினைத்தபோது கண்ணோரம் நீர்க்கசிவு வந்துவிட்டது. துடைத்துக்கொண்டான்.

இரண்டாவது வாய் தின்பதற்காக வலது கையைக் குவித்து பிஸ்கட் தூளை அள்ளியபோது குபீரென எங்கிருந்தோ ஒரு தேரை அவன் கையில் குதித்தது. தன் நீளமான கால்களை நீட்டிக்கொண்டு கை முழுவதும் பரவி ஆக்கிரமித்திருந்தது. அது ஒருகணம்தான். ஒரு வினாடியில் 10-இல் ஒன்றுக்கும் குறைவான நேரம்தான். பதறிப்போய் கைகளை உதறித் தேரையை வீசி எறிந்துவிட்டான். கையில் இருந்த காகிதம் கீழே விழுந்து ரொட்டித்தூள்கள் சிதறிப் பறந்தன. உடல் முழுக்க ஒரு மின் அதிர்வுபோல உணர்ந்தான். தேரை மீது ஆவேசமும் கோபமும் வந்தது.

ஒரு கணம் அதிர்ச்சியில், ரொட்டித் தூள்களையே பார்த்துக் கொண்டிருந்தான். ஓடிப்போன தேரையை மறந்துவிட்டான். தூள்களில் இடையிடையே முந்திரி, பாதாம் பருப்பு, செர்ரி துகள்களும் கிடந்தன. அடுத்த கணம் திடுக்கென அருவருப்படைந்தவன், அவசர அவசரமாகக் கடையின் பின்பக்கம் ஓடிப்போய்க் கைகளைக் கழுவிக்கொண்டான்.

மீண்டும் வந்தவன் நிலைகுத்தி உறைந்து நின்றுகொண்டிருந்தான்.

உள்ளே வந்த ராமு எட்டிப் பார்த்தான். “என்னாச்சுடா?” என்றான்.

“சனியன் புடிச்ச தேரை, எங்கிருந்தோ வந்து விழுந்துட்டுதுண்ணே” என்றான். முகத்தில் ஏமாற்றமும் அவமானமும் ஒழுகின.

குமாருக்குள் எரிந்துகொண்டிருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்ட உணர்வு. அவன் முகத்தில் ஏதோ அருவருப்பாக கசிந்து உருகி வழிவதுபோல் தோன்றியது. வெளியே பேசாவிட்டாலும்கூட தன் முகம் விகாரமாக மாறுவதுபோல் உணர்ந்தான். குமாரின் ஆசை நீர்க்குமிழிபோல உடைந்து போனதை ராமு புரிந்துகொண்டான்.

“ஒண்ணும் நினைச்சுக்காதே. அடுத்த முறை தரேன்” என்று சொன்னபடி அவற்றை அப்படியே தாளோடு கூட்டிப் பெருக்கி அள்ளி மடித்து குப்பைத்தொட்டியில் போட்டான். அருகில் வந்த ராமு அவனை அனுதாபமாகப் பார்த்தான். ஆதரவாகவும் ஆறுதலாகவும் தோளில் கை வைத்தான்.

அந்த வார சந்தோஷம் அஸ்தமனம் ஆகிவிட்டது. நடந்தது, ராமு கூறியது எல்லாம் மாறிமாறி மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தன.

வாரா வாரம் வந்துபோகும் ஒருவன் தனது ஏக்கத்தை இவ்வளவு சரியாகப் புரிந்து இருக்கிறானே என்று உணர்ந்தபோது மேலும் சுருங்கிப் போனான் குமார். ரொட்டித்தூள் கிடைக்காத ஏமாற்றத்தைவிட அனுதாபத்துடன் ராமு ஆறுதல் சொன்னது ஏனோ குமாருக்கு அதிகமாக வலித்தது.