அத்தியாயம் 1

227.41k படித்தவர்கள்
42 கருத்துகள்

விழுங்க முடியாத தூக்க மாத்திரைப் போல தூரத்திலிருந்தது நிலா...

ஆனால், அதையே பார்த்தபடி படுத்திருந்தவளுக்கு உறக்கம் வருவது போலத்தான் இருந்தது.

ஆனால், கிட்டவந்ததை எட்ட நிறுத்தின மனதினுள் முட்டிய நினைவுகள்.

எத்தனை பெண்களின் வாழ்வில் இரண்டு ஆண்கள் வாய்த்திருப்பார்கள்?

அதுவும் அத்தனை வித்தியாசமான இருவர்?

எதைப் பார்த்தாலும் அந்த ஆண்களோடு மனசு அவற்றை சம்பந்தப்படுத்தி விடுகிறது... இந்த நிலா உட்பட!

நிலாவைப் போலவே பளிச்சிட்டுப் போகும் ஞாபகங்கள்...

இவள் கணவன் சாரதி இவளை நிலாவிற்கெல்லாம் ஒப்பிட்டதில்லை. இத்தனைக்கும் கல்யாணமான போது இவளுக்கு 18 தான் - பருவ வயது.

‘அமெரிக்கன்ஸ் நிலாவில் கால் பதித்ததாய் சொல்றது பொய் – இப்படி மறுப்பது ரஷ்யன்ஸ் மட்டுமல்ல, பலருந்தான். எல்லாம் ஒரு சயின்ஸ்-ட்ராமா.’

‘நிலாவின் வடிவம் வட்டமில்லை - முட்டை போலிருக்கும், நிஜத்தில்.’

‘ப்ளு-மூன்னா என்ன தெரியுமா, யமுனா?’

‘நீலமாய் நான் பார்த்ததேயில்லையே... வெள்ளி இல்ல தங்கத் தட்டாய்தான் தெரியும்’ – இவள் தீவிரமாய் பதிலளிப்பாள்.

‘ஒரே மாதத்தில் ரெண்டு பௌர்ணமி, வெகு அபூர்வம். அதைத்தான் Blue-moon என்பது.’

இவளுக்கு அந்தத் தகவல்களில் சுவாரஸ்யம் இல்லையென்றாலும் தலை சாய்த்து, கண்களைக் கொட்டியபடி அழகாய் கவனிப்பாள்.

தனது பின் இருபதுகளில் பரிச்சயமான தியாகராஜனோடு யமுனா சேர்ந்து வாழ ஆரம்பித்த போது, அவளுக்கு வாழ்க்கை சற்று புரிந்திருந்தது.

தன் அழகும் கூட பொலிவேறி இருந்ததாய் நினைத்தாள் – சுண்ட காய்ச்சிய பாலிற்குள் ஏறும் நிறமும் மணமும் போல!

இரண்டாவதாய் இணைந்த தியாகராஜனும் இந்த நிலாவை விட்டு விடவில்லை -

‘உன் நிறம் மட்டுமில்லை - பளபளப்பும் கூட இந்த நிலாக்குப் போட்டிதான் யமுனா. அதுவும் முகம் கழுவிட்டு சன்னமாய் சந்தன பவுடர் பூசிட்டு வர்ற பாரு - அடடா, அப்ப நீ வாசனை நிலா!’ கண் செருகி பாராட்டுவார்.

ஆனால், முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தவள், வெறுமே கண் சிமிட்டலுடன் கேட்டுக் கொண்டிராமல் பதிலுக்குப் பாராட்டப் படித்திருந்தாள்!

‘பெர்ரிய டைரக்டர் நீங்க... சினிமா வசனம் போலவே பளபளன்னு பேசறீங்க’ என்பாள் புன்னகையுடன்.

யமுனாவின் முதல் கணவர் சாரதி ஒரு விபத்தில் இறந்திருந்தார்...

அந்தக் கல்யாணமே ஒரு விபத்தெனலாம்.

தனக்கு 12 வயது மூத்த ஒரு சிவில் என்ஜினியரின் மேல் பதினெட்டு வயது மக்குப் பெண் மையல் கொண்டது வேறென்ன?

எதிர்வீட்டிற்கு ஒரு மாத கோர்ஸ் ஒன்றிற்காய் வந்த சாரதியை இவளுக்குப் பார்த்ததுமே தடுமாற்றந்தான்.

தன் பெரியம்மா வீட்டில் தங்கினவன் பெரும்பாலும் புத்தகத்துடன்தான் கழித்தான். மற்றபடி நூலகத்திற்கு ஒரு நடை.

‘எப்படி ரெண்டு மலை நடுவேல்லாம் பாலம் கட்டறீங்க?' , 'டேம்’ (Dam) கட்டறது பெரிய ரிஸ்க் இல்ல – இந்த டெக்னிக் எல்லாம் எப்படித்தான் உங்களுக்குப் புரியறதோ?’ என்று பிரமிப்பான கேள்விகளுடன் தன்னைச் சுற்றி வந்த யமுனாவிடம் ஏதோ ஒன்று அந்த இளைஞனையும் ஈர்த்தது போலும்.

இதைக் கவனித்த யமுனாவின் அப்பா, வெளிப்படையாகவே மகளிடம் பேசினார்.

‘வயது வித்யாசம் ஜாஸ்தி - தவிர உங்களிடையே பலது ஒத்து வராதுடா... அந்த தம்பி சதா வாசிக்க, நீ உன் பாட புஸ்தகத்தையே புரட்டறதில்ல! உனக்கு சதா பாடணும் - அதோட அலங்காரப் ப்ரியை. அவருக்கு காட்டுப் பகுதி, மலைப் பிரதேசங்களுக்கு அடிக்கடி ட்ரான்ஸ்ஃபர் ஆகும். அங்கே உன் பாட்டுக்கு, மேடையோ மைக்கோ இருக்காது - கேட்பாரும் இல்லாமல் நொந்து போயிடுவ.’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

அப்பாவின் பேச்சு தன்னலமாய் பட்டது மகளுக்கு அன்று..!

தன்னை அருகிலேயே வைத்துக்கொள்ள தன்னைப் பெற்றவர் செய்யும் சதிப் போராட்டமாய் தெரிந்தது.

சாரதியின் விசாலமான நெற்றியும், யோசனையில் மிதக்கும் கண்களும் இவளை காந்தமாய் இழுத்தன.

ஆனால், திருமணத்திற்குப் பிறகு குடித்தனம் பண்ண வாய்த்த, காட்டுப் பகுதிகளில், பூச்சிகளின் இரைச்சலினூடே தூக்கமின்றி புரண்ட இரவுகளில் அப்பா பெரும் ஞானியாய் தெரிந்தார் மகளுக்கு!

அனுபவம் என்பதுதான் ஞானமா?

தீர்க்கதரிசி போல அத்தனை துல்லியமாய் கணித்து அப்பா சொன்னதை தான் மீறியது முட்டாள்தனம் என்று குமுறிய நாட்கள் பல.

கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட அப்பா இவளிடம் எச்சரிப்பாய் சொன்னார் -

‘இது கற்பூரக் காதல்டா...’

மருதாணியில் சிவந்த விரல் நுனிகளை மொட்டு போல குவித்து, விரித்து, அழகு பார்த்திருந்தவள் ஆர்வமாய் நிமிர்ந்தாள்.

‘கற்பூர புத்தி உடனே பற்றிக் கொள்ளும் – ஆனால், நீடித்து நிலைக்காது. சாரதி ஊர் போன ஒரு மாசத்தில் நீயும் அவரை மறந்திருப்பே. அந்தப் பையனும் இதற்கு உடன்பட்டது எனக்குப் புரியலை. விதிங்கறது எனக்குமாய் விளையாட்டு காட்டுது போல...’

அப்போது பெருமூச்சு விட்ட அப்பா, யமுனா தன் பொருட்களோடு, மூன்று வயது மகளோடு மறுபடி தன் வீட்டிற்கு திரும்பின போதும் -

‘சொன்னேனே... அதே போலாச்சா இல்லியா’ என்ற ரீதியில் ஒரு பார்வை கூட பார்க்கவில்லை.

எத்தனை கருணையானவர்...

‘குழந்தையை ஸ்கூல்ல சேர்க்கணும்ப்பா’ என்றவள் மறுபடி கணவனிடம் திரும்பும் பேச்செடுக்காதது போல, சாரதியும் இவளைத் தேடி வரவில்லை.

பதினைந்து மாதங்கள் கழித்து வந்தது, சாரதி ஒரு கட்டுமான விபத்தில் இறந்த சேதிதான்.

‘குழந்தைக்கு பள்ளிக்கூட வசதியில்ல அங்கே - அதான்’ என்று அண்டை, அயலாரை அதுவரை சமாளித்திருந்த அப்பா, பிறகு துக்கம் விசாரித்தவர்களிடம்,

‘அருமையான பையன். எங்களுக்குக் கொடுத்து வைக்கலை’ என்றதோடு முடித்துக் கொண்டார்.

குடித்தனத்தில் இவள் திணறியதைக் கண்ட சாரதி –

‘யமுனை ஆறு கடலில் கலப்பதில்ல – தெரியுமா? அதுபோல நீயும் கல்யாணம், குடும்பம்னு இணையறவளில்லை’ என்று ஒரு தரம் தன்னிடம் சொன்னதைப் பிடித்துக் கொண்ட யமுனா,

‘என்னால பாடாமல், சாதகம் பண்ணாமல் முடியலை. இந்தக் குழந்தைக்கு படிப்பும் கூடயில்ல வாய்க்காமல் போகும் போல?’ என்று அனத்தி கிளம்பிவிட்டாள்.

கட்டியவனுக்கும் தான் அலுத்து விட்டது புரிந்தது. சற்று விட்டுப் பிடித்தால் சரிவரலாம் என்றவன் நினைத்ததை காலம் நிறைவேற விடவில்லை.

அப்பா நல்ல பாட்டு வாத்தியார்களைக் கூட்டி வந்து, அல்லது யமுனாவை அவர்களிடம் இட்டுச் சென்று, சங்கீதத்தை அவள் வாழ்வின் ஒரு அங்கமாக்கினார்.

‘ஓரளவு நமக்கு வசதி உண்டுடா. ஆனா, பொழுதை சும்மா கழிக்கக் கூடாது. அது பிரச்சனையாயிடும். புதுசு புதுசாய் வர்ணம், கீர்த்தனை கத்துக்கோ... விடாமல் சாதகம் பண்ணு. குரல் வளமாகி, இசை வசப்பட்டதும் கச்சேரி ஏற்பாடு பண்ணலாம்.’

அப்படி அப்பா தந்த ஆரம்பம், பிறகு ஏறுமுகமானது.

இயற்கையில் அமைந்த கூரான குரலோடு ஆர்வம் விதையாக, அப்பா அதை தகுந்தபடி பராமரித்து விளைய வைத்தார்.

ஆனால், இசையை, அதன் இனிமை, நுணுக்கம், சாகசங்களை விட யமுனாவிற்கு பிடித்தது, வந்த பாராட்டுகள்தான்! ஆங்காங்கே தலை காட்டின அவற்றை முகர்ந்து மயங்கினாள்.

பல சமயம் அது அவள் வித்தைக்காய் மட்டும் என்பதை மீறி, அவள் அழகிற்காய், உடுத்திய புடவைக்காய், தாளத்திற்கு ஏற்ப அசைந்த ஜிமிக்கிகளுக்காய் என்றாலும் கூட அவளுக்கது இதமாய் இருந்தது.

சிறு கச்சேரிகளுக்காய் பெரிய கடைகளில் ஏறி இறங்கினாள்.

முன்னே அவசியத்திற்கேனும் சமையலறைக்குப் போய் வந்த யமுனா பிறகு அந்தப் பக்கமே திரும்பவில்லை. அந்த சூடு தன் சௌந்தர்யத்தை சிதைத்துவிடுமென்ற தன் சந்தேகத்தை,

‘கிளம்பற அடுப்புப் புகையில் தொண்டை கமறுதுப்பா – மறுபடி லேசில் சரியாகறதுமில்லை’ என்ற பொய்யினால் மூட, அப்பா வீட்டில் பழகின உதவியாளரை சமையலுக்கென வைத்து, மேல் வேலைக்கு மற்றொரு பெண்ணை நியமித்தார்.

ஒரு குவளையைக் கூட கழுவாத தன் விரல்கள், தாளத்திற்காய் தன் தொடையில் தட்டி வீசும் போது அம்சமாயிருப்பதில் பெரும் திருப்தி.

ஆனால், ஒரு நாள் கச்சேரி ஒன்றை முடித்து விட்டு, வீடேறிய யமுனா திகைத்து போனாள்.

சாரதியின் விசால நெற்றியும், கனவு கண்களுமாய் கூடத்தில் அமர்ந்து தன் அப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த பெண்மணியை பேயைக் கண்டது போல வெறித்தவளுக்கு வியர்த்தது.

‘வாம்மா - இவங்க மாப்பிள்ளையோட அக்கா - ஒண்ணுவிட்ட சகோதரி – பேரு விமலா.’

ஓங்கி தாளம் தட்டும் யமுனாவின் விரல்கள் நடுக்கத்துடன் குவிந்தன.

‘கல்யாணத்தப்ப பார்த்தது’ – என்றவருக்கு வயது ஐம்பது இருந்திருக்கும். ஒடிசலான உடம்பில் பருத்திப் புடவை. ஆங்காங்கே சன்னமான தங்க நகைகள். கண்ணாடியின் பின்னேயிருந்த விழிகளின் பார்வையில் குன்றிய யமுனா -

‘வாங்க - டிரஸ் மாத்திட்டு வர்றேன்’ என்றபடி உள்ளே நழுவினாள்.

குளிரூட்டப்பட்ட சபையில்தான் கச்சேரி என்றாலும் சேர்ந்த கசகசப்பைக் கழுவிவிட்டு, தானும் ஒரு பருத்திப் புடவையைச் சுற்றியபடி உணவிற்கு வந்த போது, நல்லவேளை அப்பெண் அப்பாவுடனில்லை. 

‘என்னப்பா இது திடீர்னு? இவங்களை எங்கே பார்த்தீங்க? இங்கே ஏன் கூட்டிட்டு வந்தீங்க?’

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

தாழ்ந்த குரலில் கேள்விகளை அடுக்கினாள்.

‘நான் மட்டும் எத்தனை நாள் உனக்குத் துணையா இருக்க முடியும்டா, யமுனா? யாரையும் காலம் கல்லால் அடிச்சு நிறுத்தலியே - உன் கூட ஒரு பெரியவங்க, பெண்ணாய் இருந்தால் பாதுகாப்பு...’

‘இங்கயே தங்கப் போறாங்களா?’

‘எல்லாம் யோசிட்டுதான் இவங்களை மாப்பிளை ஊருக்குப் போய் பார்த்து பேசினேன்.’

‘எப்போப்பா? எங்கிட்ட வார்த்தை விடலை.’ மகளின் தொனி சிடுசிடுத்தது.

‘நம்ப சமையல்காரம்மா தான் பேத்தியோடு போயிருக்கப் போறதாய் சொல்லிட்டே இருக்காங்க. அது உங்காதை எட்டியிராது. வேறு நல்ல, பொறுப்பானவங்க கிடைச்சு நம்ப வீட்டோடு இருந்துட்டால், சின்னவளுக்கும் துணையாகும்ன்ற எண்ணம்.’

மகள் திகைப்புடன் இருக்க, அப்பா தொடர்ந்தார்.

‘எதிர் வீட்டில் முன்பிருந்த மாப்பிள்ளை சாரதியின் உறவுக்காரங்க சமீபமாய் இந்த பக்கம், வந்தப்போ என்னையும் பார்த்து பேசினாங்க - சம்பந்தம் பண்ணவங்க இல்லையா - அந்தப் பரிவு. அப்போ விமலாம்மாவைப் பற்றி குறிப்பிட்டு,

‘குழந்தை பிறக்காததால் இவங்களை தள்ளி வச்சுட்டு, அந்தாளு வேறு கல்யாணம் பண்ணிக்க, விமலா இங்கேயும் அங்கேயுமாய் அல்லாட்டமாய் வாழ்ந்தாச்சு. ஐம்பதைக் கூட நெருங்காதவங்களை எந்த இல்லத்துல போய் சேர்க்கறது? அமைதியானவங்க, வீட்டு வேலை, சமையல் எல்லாம் துல்லியமாய் இருக்கும்னு சொல்ல, எனக்கு இது கடவுளின் வரம்னு தோணுச்சுடா.’

‘எங்கிட்ட ஏன் எதுவுமே சொல்லலைப்பா? முதல்ல போய் பார்த்துட்டு, பிறகு போய் கூட்டிட்டு வந்திருக்கீங்க – ஆக இது ‘திடீர்’ முடிவில்லை.’

‘இல்லைதாம்மா... மேடையில் அலங்காரமாய் போயிருந்து பாடறே நீ – தப்பாய் யாரும் பேசிடக் கூடாதில்லையா? மாப்பிள்ளையோட உறவுக்காரங்க நம்ப வீட்டுல இருந்தால் அது தனி கௌரவம். இந்தம்மாவுக்கும் நிம்மதி. அப்பா சகலமும் யோசிச்சுதாண்டா செய்வேன். உனக்குத் தெரியாதா?’

அதை மகளுக்கு மறுக்கத் தோன்றவில்லைதான் – அப்பா ஞானி என்று பலமுறை மனதுள் சிலாகித்தவளாயிற்றே!

சாரதியின் சாயலிருந்த பெண்மணியை, யமுனாவும் மரியாதையாகவே நடத்த, வீடு முன்பை விட தொல்லையின்றி நடந்தது.

விமலா பேசுவதேயில்லை என்பதால் பிரச்சனையேதும் தலை நீட்டவில்லை.

பாடிப் பழக பழக, சுகமாய் வளைந்து கொடுத்தது யமுனாவின் குரல்.

அலங்காரமாய் போயமர்ந்து பாடிய சபைகளில் கூட்டத்திற்கும் குறைவில்லை.

‘யமுனா சாரதி – நன்னாத்தான் பாடறா.’

‘அட்டகாசமா உடுத்திக்கறா வேற!’

‘குங்குமம் இட்டுக்கலை கவனிச்சயா? சின்ன திலகந்தான்.’

‘அவ விடோதான் – விசாரிச்சுட்டேன். பெரிய என்ஜினியரைக் கட்டினா போல – அல்பாயுசுல போய்ட்டான்.’

‘அடடா... இத்தனை அழகும் வீணாகுதே.’

‘அதான் நாமெல்லாம் பார்த்து, கேட்டு, தலையாட்டி, கையுந்தட்டறோமே?’

‘ஆம்படையான் இல்லாட்டியும், ஒரு பொண் குழந்தை இருக்காப் போல... ஏதோ ஒரு துணை.’

ஆனால், யமுனாவிற்கு மகள் மட்டும் போதவில்லை.

அதுவும் தன் தந்தை இறந்ததும் முழுக்க ஒடிந்து கிடந்தாள்.

தகப்பனின் பரிவும் பாதுகாப்பும் எத்தனை பலம் என்பது பலவீனப்பட்ட நேரம் புரிந்தது –

சமயம் பார்த்து விதி தன் கையை ஓங்கியது...

-தொடரும்