அத்தியாயம் 1

129.14k படித்தவர்கள்
149 கருத்துகள்

1. நான் ஒரு சூனியன்

நான் ஒரு சூனியன். நீங்கள் சாத்தான் என்பீர்கள். சிலர் சைத்தான் என்பார்கள். சித்திரக்கதைப் புத்தகங்களில் என் இனத்தைச் சார்ந்தவர்களைக் கெட்ட சக்தி என்று கூசாமல் குறிப்பிடுவார்கள். அதெல்லாம் உண்மையில் அபாண்டம். சூனியன் என்று சொல்லுங்கள். அதுதான் சரி. பூரணத்தில் இருந்து பூரணத்தை எடுத்தால் நான் எஞ்சியிருப்பேன். சூனியத்தில் இருந்து பூரணத்தை எடுத்தாலும் நானேதான் மிச்சம் இருப்பேன். ஆனால், பூரணத்தில் இருந்து ஒருபோதும் என்னைப் பிரித்தெடுக்க முடியாது. ஏனெனில், சூனியமற்ற பூரணம் என்ற ஒன்று கிடையாது. தமஸோமா ஜோதிர்கமய. ஒளிரும் சுடரின் அடியில் கருகும் திரியின் நுனியைத் தியானம் செய்யுங்கள். இன்று எனக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவிருக்கிறது. மனிதர்களின் மரணம் வேறு. எங்கள் உலகில் மரணம் என்ற சொல்லுக்குப் பொருள் வேறு. இல்லாமல் போவதல்ல. இல்லாமல் போவதை உணர முடிவதுதான் உண்மையான மரணம். நான் செய்ய ஒன்றுமில்லை. எதிர்க்கவோ வாதாடவோ வழியில்லை. நியாயத் தீர்ப்பின்படி நான் குற்றவாளி ஆக்கப்பட்டுவிட்டேன்.  மனமோ ஆன்மாவோ அற்ற சூனியர்களின் வாழ்வில் இருளோ ஒளியோ கிடையாது. ஒலிகளால் மட்டுமே ஆனது எங்கள் வாழ்க்கை. வெறும் ஒலிதான். மொழியல்ல. இசையல்ல. மூச்சுக் காற்றின் ஒலி. சுவாசத்தின் மாத்திரை அளவீடுகளைக் கொண்டு நாங்கள் தகவல் பரிமாறிக்கொள்வது வழக்கம். தேவைப்பட்டால் மனிதர்கள் அல்லது மிருகங்களின் மொழியினுள் ஊடுருவ முடியும். அதன் வழியாகவே அவர்கள் அல்லது அவற்றின் சிந்தனைக்குள் சென்று பதுங்கிக்கொள்வோம். ஜீவராசிகளைக் கொண்டு நாங்கள் காரியம் சாதிப்பதெல்லாம் இப்படித்தான். கண்ணுக்குத் தெரியாத ஒரு கிருமி எனத் தோன்றுகிறதா? நான் கிருமியல்ல. நாங்கள் சூனியர்கள்.

'கிளம்பலாம். உன் நேரம் நெருங்கிவிட்டது' என்று காவலாளி வந்து சொன்னான். என்னை ஒரு ராட்சச நிலக்கடலையின் ஓட்டுக்குள் சிறை வைத்திருந்தார்கள். பன்னெடுங்காலமாக என்னை அடைத்து வைத்திருந்த நிலக்கடலை ஓட்டினை எப்போதும் எரிந்துகொண்டிருக்கும் ஒரு பெரிய அடுப்பினுள் வைத்திருந்தார்கள். அப்படி ஒரு அடுப்பினை நீங்கள் கற்பனையில் காண்பது இயலாத காரியம். அடுப்பு என்றும் நெருப்பு என்றும் மனிதர்கள் அறிந்ததினின்று முற்றிலும் வேறுபட்டது இது. இந்த அடுப்பின் சுற்றளவு சுமார் முந்நூறு சதுர மைல்கள். முற்றிலும் இரும்பினால் செய்யப்பட்டது. காற்றுப்புகாத ஓர் இரும்புக் கோளம். ஆனால், ஒரு தாளைக் காட்டிலும், தக்கையைக் காட்டிலும் மெலிதானது. மிதக்கும் தன்மை கொண்டது. அண்டவெளியில் இந்த அடுப்பு மிதந்துகொண்டிருக்கும். எப்போதாவது பூமிக்கு நெருக்கமாக இது வரும்போது பறக்கும் தட்டு என்றும் வேற்று கிரகவாசிகளின் உளவு ராக்கெட் என்றும் செய்தித் தாள்களில் வரும். உண்மையில் அது ஒரு சிறைக்கூடம். குற்றம்சாட்டப்பட்ட சூனியர்களை வேர்க்கடலை ஓட்டுக்குள் அடைத்து மூடி, இந்த சிறைச்சாலையில் தள்ளிவிடுவார்கள். சூரியனின் வெப்பக் கதிர்களை மொத்தமாக ஒரு கால்வாயின் வழியே இதன்மீது பாய்ச்ச ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பூமியில் வசிக்கும் மனிதர்களும் பிற உயிரினங்களும் அறிந்த சூரிய வெப்பம் என்பது இந்த சிறைச்சாலை ஏந்தி அனுப்பும் வெப்பத்தின் மிச்சம்தான்.

ஆறு தினங்களுக்கு முன்பு என்னை இறுதி விசாரணைக்காக வீரர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சிறைச்சாலையில் இருந்து நான் வெளியே வந்து அப்போது இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. வெப்பம் மட்டுமே பழகியிருந்ததால் சட்டென்று ஒளியைக் கண்டதும் திகிலடைந்தேன். என் சுவாசம் கட்டுப்பாடில்லாமல் அலையடித்தது. ஒளி ஒரு கடவுளைப் போல அருவருப்பூட்டியது. மிகவும் குமட்டியது. அதில் இருந்து தப்பித்து மீண்டும் சிறைச்சாலைக்கே சென்றுவிட முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால், என்னை நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
முந்தைய முறை நான் விசாரணைக்காகச் சென்றிருந்தபோது நியாயக் கோமான்களாக ஆறு பேர் அமர்ந்திருந்தார்கள். ஆனால், இம்முறை ஒருவர்தான். நீதிமன்றப் பேரேட்டாளர் என்னை அவருக்கும் அவரை எனக்கும் முறைப்படி அறிமுகம் செய்து வைத்தார். அவர் தனது பெயர் யூதாஸ் என்று சொன்னார். நான் அவருக்கு வணக்கம் சொன்னேன்.

'உன் குற்றத்தின் மீதான விசாரணைகள் முடிந்துவிட்டன. நீ சொல்வதற்கு ஏதேனும் இருந்தால் சொல்லலாம்' என்று யூதாஸ் சொன்னார்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஐயா, நான் குற்றவாளி அல்ல. ஆனால், சந்தர்ப்ப சாட்சிகள் எனக்கு எதிராக அமைந்துவிட்டன.

'இதனை நீ பலமுறை சொல்லிவிட்டாய். புதிதாக ஏதாவது உள்ளதா?'

நான் என்ன சொல்ல? தண்டிப்பது என்று முடிவு செய்துவிட்ட பின்பு விசாரணை தேவையற்றது. எனக்குத் தெரியும். நான் இங்கே பலருக்கு இடையூறாக இருந்தவன். பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சியாளர்களை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியவன். எனது வினாக்களின் உள்ளார்ந்த சத்தியத்தின் தகிப்பு அவர்களால் எப்போதுமே தாங்க முடியாததாக இருந்து வந்திருக்கிறது. கடவுளால் படைக்கப்பட்ட மனித குலத்தில் தொடர்ந்து குழப்பங்களை விளைவித்துக்கொண்டிருப்பது எங்கள் குல தருமம். கடவுளை அழிக்க முடியாத சூழ்நிலையில் அவனது முதன்மைப் படைப்பை நிர்மூலமாக்குவதே நாங்கள் செய்யக்கூடியது. அது எங்களால் முடியும். எங்களது எந்த ஒரு முயற்சியும் இதுவரை தோற்றதாகச் சரித்திரம் இல்லை. கடவுளின் மீதான எங்களுடைய எளிய வெற்றி அது ஒன்றுதான்.

என் வழக்கில் நியாயக் கோமானாக  அமர்ந்திருந்த யூதாஸை நான் அறிவேன். கடவுளுக்கு எதிரான எங்கள் யுத்தத்தின் முதல் தலைமுறை வீரர். நியாயஸ்தலத்தின் மைய மண்டப வடக்கு மூலையில், இருட்குகை ஒன்றினுள் பாறையில் செதுக்கிய பிரமாண்டமான புடைப்புச் சிற்பம் போல அவர் அசையாது அமர்ந்திருந்தார். அவரது தலைமுடியும் தாடியும் ஆண்டுக்கு எட்டு தோரை அளவில் வளர்ந்து ஒரு கானகமாகியிருந்தன. முகம் சுருங்கி உருக் கலைந்திருக்க வேண்டும். ஆயினும் புலப்படவில்லை. அடர்ந்த, ஆழம் புலப்படாத சுருள் முடிக் குவியல்களின் ஊடே உற்றுப் பார்த்தால் அவரது மிகச் சிறிய கண்கள் மட்டும் கருஞ்சிவப்பு ரத்தக் கசிவுடன் பொலிந்துகொண்டிருப்பது புலப்பட்டது. நாங்கள் முகச் சவரம் செய்வதில்லை. மாதமொரு முறை ஒளிச்சவரம் செய்துகொள்வது எங்கள் வழக்கம். தீக்கங்குகளைக் கொண்டு கண்களுக்குள்ளும் சிந்தனைக்குள்ளும் சுத்தம் செய்வதை ஒளிச்சவரம் என்பார்கள். இத்தீக்காயம் புரையோடத் தொடங்கும்போது மீண்டும் சவரம் செய்து ரத்தக் கசிவை உருவாக்கிக்கொள்வோம்.

யூதாஸ் எனக்கு இறுதித் தீர்ப்பு வழங்க அமர்ந்திருந்தார். வழக்கின் விவரங்கள் அவருக்கு ஏற்கெனவே சொல்லப்பட்டிருந்தன. ஒரு சிறிய இனக்குழுவினரின் சிந்தனையில் குடியேறி மாபெரும் சமூகப் புரட்சியை உண்டாக்கி, ஒருவரையொருவர் தாக்கி அழித்துக்கொண்டு பத்து லட்சம் பேர் மடிந்தொழியும்படிச் செய்வதற்காக நான் அரசாங்கத்தால் நியமித்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தேன். இது ஹிட்லர் செய்ததைப் போன்றதல்ல. ஈழத்தில் நிகழ்ந்ததைப் போன்றதும் அல்ல. அவை மாற்று இனத்தவரின் மீதான அரசுத் தாக்குதல்கள். எனக்கு விதித்திருந்த கடமை வேறு. புறத் தாக்குதல்கள் ஏதுமின்றி ஓர் இனக்குழு தன்னைத்தானே வதைத்துக்கொண்டு இல்லாமல் போவது. இதற்கு மக்களைக் குறி வைக்கக்கூடாது. ஆட்சியாளர்களை இலக்காக்கிக் கொள்ள வேண்டும். மக்களிடம் இருந்து அவர்களைப் பிரித்துக் கடத்திக்கொண்டு சென்று வேறு இடத்தில் மறைத்து வைத்துவிட வேண்டும். தலைவர்களைத் தேடிச் சலித்துப் போகும் மக்கள் அப்போது விரக்தியில் ஆத்திரமடையத் தொடங்குவார்கள். முதலில் சொற்கள் மெல்ல மெல்ல இறுகி எலும்புகளாகும். பிறகு அதையே இன்னும் கூர்தீட்டி விஷ நாகங்களின் பற்களாக்கி எடுத்துக்கொண்டு அலையத் தொடங்குவார்கள். சர்ப்பங்கள் பசி தாங்கும். ஆனால், அவற்றின் விடமேறிய பற்கள் தாங்காது. அவற்றுக்கு அவ்வப்போது தின்னத் தரவேண்டும். ஒரு மரம் வெட்டி, வேலை முடித்துத் தனது கோடரியை ஒரு மரத்தின் தண்டின்மீது சொருகி வைப்பது போல சர்ப்பத்தின் பற்களை ஏதேனும் ஒரு தேகத்தின் மீதுதான் குத்தி வைக்க வேண்டும். ஆயிரம் பற்கள். பத்தாயிரம் தேகங்கள். பத்தாயிரம் பற்கள். லட்சம் தேகங்கள். லட்சம் பற்கள். பத்து லட்சம் தேகங்கள்.

இது துவாபர யுகத்தில் யாதவர்கள் அடித்துக்கொண்டு செத்தொழிந்ததைப் போன்றதொரு செயல்பாடு. யாதவர்களின் மீது என்ன பிழை? அவர்களது அரசன் ஒரு அயோக்கியனாக இருந்தான். தனது சொந்த சாகச நாட்டத்தில் இந்திரப்பிரஸ்தத்தின் அரசியலுக்குள் தலையிட்டு அங்கு வீசிய புயலின் மையக்கண் ஆனான். அவன் தனது சொந்த தேசத்தில் இல்லாத காரணத்தால்தான் அவனது குடிகள் மொத்தமும் அடித்துக்கொண்டு அழிந்தார்கள். சூனியர்களின் திட்ட வரையறை வல்லுநர்கள் எப்போதும் சுட்டிக்காட்டும் சம்பவம் இது. துவாரகையை எண்ணிப் பார். யாதவர்கள் அழிந்ததை தியானம் செய்து உணர்.

எனக்கும் அத்தகையதொரு இலக்கே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. நான் அதைச் சரியாகவும் செய்தேன். ஆனால், சூழ்ச்சியாளர்கள் என்னைத் துரோகி என்று அரசாங்கத்துக்குச் சொல்லிவிட்டார்கள். அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமானவர்கள். அபிப்பிராயங்களை ஊடுருவிக் கலைத்துப்போட வல்லவர்கள். நல்லது. சரித்திரமெங்கும் துரோகிகள் இப்படியாகவும் கட்டமைக்கப்படுவது வழக்கம்தான். ஆனால், நான் துரோகியல்ல. இந்த சத்தியத்தினை நான் புரியவைப்பேன். அதற்கு முன்னால் இந்த நியாயத் தீர்ப்பு நாளைக் கடந்தாக வேண்டும்.
நான் சொன்னேன், 'நியாய சூனியரே, உங்களுக்கும் எனக்கும் மாறுபாடு ஒன்றுமில்லை.  உங்கள் செயலை மனிதர்கள் பிழை என்றுதான் சொன்னார்கள். ஆயினும் இயேசுவின் பெயரால் ஒரு மாபெரும் மதமும் மக்கள் கூட்டமும் திரண்டெழ நீங்கள் வழி செய்து தந்தீர்கள். இன்றுவரை பெருவாரியான மனிதர்கள் அந்தக் குழுவில்தான் உள்ளார்கள். கடவுளின் பாதையில் மனிதர்களை ஒன்று திரட்டுவது ஒரு சூனியரின் பணியா? அது குற்றமில்லை என்றால் நானும் குற்றவாளியல்ல. நீங்கள் நியாயக் கோமானாகவே இருக்கத் தகுதி படைத்தவர் என்றால், சூனியர் உலகில் நான் ஒரு சராசரிக் குடிமகனாக வாழவாவது தகுதி கொண்டவனாவேன்.'

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

இந்தப் பதில் அவரைத் திடுக்கிடச் செய்திருக்க வேண்டும். அவர் கண்ணைத் திறந்து என்னைப் பார்த்தார். வழிந்துகொண்டிருந்த குருதியின் ஒரு சொட்டு அவரது புறங்கையில் பட்டு என்மீது தெறித்தது. அது சூடாக இருந்தது. நான் குனிந்து அதனை முத்தமிட்டேன். அது என் உதட்டில் படர்ந்து கருநீலமாகிப் போனது. இதற்குள் நான் நியாயமன்றக் கோமானை அவமரியாதை செய்கிறேன் என்றெண்ணிய காவல் படைத் தலைவர் என்னைக் கூரிய முள் கம்பிகள் பதிக்கப்பட்ட சாட்டையால் தாக்கத் தொடங்கினார். என் கதறலுக்கு அங்கே ஆதரவுக் குரல் தர யாருமில்லை.
'இவனை எதற்குப் பேச அனுமதிக்கிறீர்கள்? தண்டனையை அறிவித்து அனுப்பிவிடுங்கள்' என்று நான்கைந்து பேர் சொன்னார்கள். யூதாஸ் அவர்களை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு மீண்டும் என்னைப் பார்த்துப் பேசினார். 'ஒரு தனி மனிதனைக் கொலை செய்யவே நான் அனுப்பிவைக்கப்பட்டேன். அதை நான் செய்து முடித்தேன். உனக்கு விதிக்கப்பட்ட இலக்கும் அதுவும் ஒன்றல்ல.'

நான் என்ன பேச? 'நீங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள்' என்று சொன்னேன். எதிர்பார்த்ததைப் போலவே எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு துரோகியாக முத்திரை குத்தப்பட்டு, என் நெற்றியில் வாளால் கோடிழுத்து, உச்சந்தலையில் ஆணி அடித்தார்கள். பிறகு என்னைச் சங்கிலிகளால் பிணைத்துப் பிசாசுப் படையினரிடம் ஒப்படைத்தார்கள். வெப்பத்தை உண்டு வாழும் சூனியர்களால் சகிக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது கடுங்குளிர். எங்கள் உலக வழக்கப்படி, பிசாசுப் படையினர் என்னை ஏழு லட்சம் நாழிகை வழித் தொலைவில் உள்ள சனிக் கோளத்துக்குக் கொண்டு செல்ல ஆயத்தமானார்கள்.

எனக்குத் தாங்க முடியாத துக்கம் உண்டானது. நான் தோற்றிருக்கிறேன் என்பதை என்னால் ஏற்க இயலவில்லை. ஒரு துரோகியாக அடையாளம் பெற்று இல்லாமல் போவதினும் கொடுந்தண்டனை வேறில்லை. அந்தக் கணம் நான் நியாயக் கோமான் யூதாஸின் முகத்தை மனத்தில் கொண்டு நிறுத்திக் காறித் துப்பினேன். அவருக்கு முன்னால் என் வழக்கை விசாரித்த ஒவ்வொரு நியாயக் கோமானையும் நினைவுகூர்ந்து சபித்தேன். அரசாங்கத்தைக் கெட்ட வார்த்தைகளால் வைதேன். நான் தவறிழைத்திருக்க மாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு சூனியன்கூட என் பக்கம் இல்லாத அவலத்தைச் சபித்தேன். இந்தச் சூனிய குலத்தையே வேரறுக்கும் விதமாக ஒரு பெருஞ்செயலைச் செய்துவிட்டு இறக்க முடிந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

தப்பித்துவிடலாம் என்று நினைத்தது அப்போதுதான். 

- தொடரும்