சிறுகதை

1.5k படித்தவர்கள்
4 கருத்துகள்

“பொந்தியோ பிலாத்து அவர்களை நோக்கி; எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாஸையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ என்று கேட்டான்”

(மத்தேயு 27:18)

1

நீங்கள் சந்தியாப்புலத்திற்குப் போயிருக்கமாட்டீர்கள்! இப்போது சந்தியாப்புலத்தில் கடற்படையினர் மட்டுமேயிருக்கிறார்கள். உருக்கெட்டுக் கிடக்கும் சந்தியோகுமையர் தேவாலய மண்டபத்தில்தான் படையினரின் தலைமையகம் இயங்குகின்றது. சந்தியாப்புலத்தின் மணலில் மனிதர்களின் வெற்றுப் பாதங்கள் பதிந்து இருபத்தொரு வருடங்களாகின்றன. படையினரின் பூட்ஸ் தடயங்கள் மட்டுமே இப்போது அந்தக் கிராமத்தில் பதிந்திருக்கின்றன. கால்களால் நடந்து செல்லும் மிருகங்கள்கூட சந்தியாப்புலத்தில் கிடையாது. வயிற்றினால் ஊர்ந்து போகும் பாம்புகள், புழுக்களின் தடங்களே சந்தியாப்புலத்தின் மணலில் பதிந்துகிடக்கின்றன.

படையினர் சந்தியாப்புலத்தில் எந்தச் சண்டையையும் எதிர்கொண்டதில்லை. அவர்களுக்கே தாரைவார்த்துக் கொடுத்ததுபோல சந்தியாப்புலம் அவர்களிடம் அடங்கியே கிடக்கின்றது. இங்கிருக்கும் சிப்பாய்கள் அந்நிய மனிதர்களைப் பார்த்தே வெகுநாட்களாகின்றன. அவர்கள் போர் செய்வதையே கிட்டத்தட்ட மறந்துவிட்டார்கள். அவ்வப்போது மனநிலை பிறழும் ஒரு வீரன் தனது மேலதிகாரியையோ சகவீரனையோ போட்டுத் தள்ளுவதைத் தவிர வேறெந்த வெடிச் சத்தங்களும் சந்தியாப்புலத்தில் கேட்டதில்லை. இங்கே தற்கொலை செய்துகொள்ளும் எல்லா வீரர்களுமே ஒன்றில் பண்டிகை நாட்களுக்கு முதல்நாளில் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது பண்டிகைக்கு அடுத்த நாளில் தற்கொலை செய்கிறார்கள். இங்கே படையினரின் அன்றாட நடைமுறைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன. அவர்கள் காலையிலோ மாலையிலோ அணிவகுத்து நடப்பதில்லை. அவர்களின் தலைமுடிகள் கடல்நீரில் தொடர்ந்து குளித்ததால் நீளமாகச் செம்பட்டை பற்றிக் கிடந்தன. அவர்கள் சவரம் செய்து கொள்வதும் கிடையாது. அவர்கள் சீருடைகள் அணிவதும் கிடையாது. அவர்கள் வெறும் அரைக் கச்சைகளுடன் சந்தியாப்புலத்தில் சோர்வுடன் அலைந்துகொண்டிருந்தார்கள். ஆனால், முழங்கால்கள்வரை வரும் கனமான கறுப்பு இராணுவக் காலணிகளை மட்டும் அவர்கள் அணியத் தவறுவதேயில்லை. அவர்கள் தூங்கும்போதுகூடக் கால்களிலிருந்து காலணிகளை அகற்றினார்களில்லை.

மாதத்திற்கு ஒருதடவை காரைநகர் கடற்படை முகாமிலிருந்து சந்தியாப்புலம் கரைக்கு வரும் விசைப்படகு விஜிதாவை சந்தியாப்புலத்தில் இறக்கிவிட்டுப் போகும். விஜிதா கணுக்கால் தண்ணீரில் நடந்து கரைக்கு வரும்போது சிப்பாய்கள் அவள் அணிவதற்காக ஒருசோடி இராணுவக் காலணிகளைக் கரையில் தயாராக வைத்திருப்பார்கள். அந்தக் காலணிகளை அணிந்து அவளால் சரிவர நடக்க முடியாது. அவள் காலணிகளுக்குள் தன் பருத்த கால்களை நுழைத்துக்கொண்டு சேலையைத் தொடைகள்வரை தூக்கிப் பிடித்துக்கொண்டு கால்களை அகட்டி அகட்டி நடப்பாள். அவள் சிப்பாய்களுடன் முயங்கும்போது நாட்கணக்கில் சந்தியாப்புலத்தின் சுடுநிலத்தில் முதுகு கருக நிர்வாணியாய்க் கிடப்பாள். ஆனால் அப்போதும் அவளின் கால்களில் பூட்ஸுகள் கிடக்கும்

உங்களுக்குக் ‘காந்தியம்’ டேவிட் அய்யாவையோ அல்லது தனிநாயகம் அடிகளையாரோ தெரிந்திருக்கும். இல்லாவிட்டால்தான் என்ன உங்களுக்குக் கண்டிப்பாக ஏ.ஜே.கனரட்ணாவையோ தெரிந்துதானிருக்கும். இவர்கள் பிறந்த கரம்பொன் கிராமத்திலிருந்து வடக்கு நோக்கி நீங்கள் பற்றை வெளியூடாக நடந்து சென்றால் பதினைந்து நிமிட நடைதூரத்தில் பூமி கரையத் தொடங்குவதைக் காண்பீர்கள். கற்பூமி களிமண்ணாகித் தரவையாகிக் குறுமணலாகிச் சொரிமணலாய்க் கிடக்கும் சிறிய நிலப்பரப்பை இப்போது நீங்கள் வந்தடைந்திருப்பீர்கள். தம்பாட்டிக் கடலோரத்தில் கிடக்கும் அந்தக் குறிச்சிக்குத்தான் சந்தியாப்புலம் என்று பெயர்.

முன்பு குறிச்சியின் நடுவே சந்தியோகுமையர் தேவாலயமிருந்தது. முன்பு குறிச்சியின் கிழக்குத் தெருவில் கூட்டுறவுச் சங்கத்தின் கடையிருந்தது. முன்பு தேவாலயத்தை ஒட்டி ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையிருந்தது. முன்பு குறிச்சியின் கடலோரமாகக் கள்ளுத் தவறணையிருந்தது. முன்பு சந்தியாப்புலத்தின் மக்கள் கடும் இறைவிசுவாசிகளாயும் சோம்பேறிகளுமாயிருந்தனர்.

இந்தக் கிராமத்தில்தான் இருபத்தொரு வருடங்களிற்கு முன்பு வில்லியம் என்ற திருடன் இருந்தான்.

***

2

ள்ளக் கபிரியல் சாகும்போது அநாதையாகத்தான் இறந்தார். அப்போது சந்தியாப்புலமே ஆறாத சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. கிராம மக்கள் மிகுந்த அக்கறையுடன் கள்ளக் கபிரியேலின் இறுதிச் சடங்குகளைச் செய்தார்கள். சின்னமடுவிலிருந்து இரண்டு கூட்டம் பறைமேளங்கள் வரவழைக்கப்பட்டன. பாடல்களைப் பாடுவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து சுதிமரியான் கொண்டுவரப்பட்டார். சுதிமரியான் தனது எக்கோர்டியனை இசைத்தவாறே, “கெட்டுப் போனோம், பாவியானோம் சிலுவைசெய் நாதனே” என்று கட்டைக் குரலெடுத்துப் பாடிக்கொண்டிருக்கக் கோடித் துணியுடுத்து அலங்கரிக்கப்பட்ட தோம்புவில் ஏற்றி ஒரு கடவுளைப்போல கிராமத்து மக்கள் கபிரியலை ஊர்வலமாகச் சவக்காலைக்கு எடுத்துச் சென்றனர்.

சந்தியாப்புலம் இரவு எட்டு மணிக்கெல்லாம் அடங்கிவிடும். வருடம் முழுவதுமே இரவு பகலாகத் தகிக்கும் வெம்மையால் ஆண்கள் வீட்டின் முற்றங்களில்தான் படுத்துக் கிடப்பார்கள். அமாவாசையை ஒட்டிய நாட்களில் ஒருநாள் சந்தியாப்புலத்தின் தெருக்களில் திடீர் திடீரெனக் குதிரைக் குளம்பொலிகளின் சத்தம் கேட்கும். அந்தத் தருணங்களில் மட்டும் முற்றங்களில் படுத்திருப்பவர்கள் அமைதியாக எழுந்து சென்று வீடுகளுக்குள் முடங்கிவிடுவார்கள். அவர்களுக்குத் தெரியும், சந்தியோகுமையர் புரவியில் ஆரோகணித்துச் சந்தியாப்புலம் வீதிகளில் ரோந்து செல்கிறார். அறுபது வருடங்களிற்கு முன்பு பிரப்பம்தாழ்வு என்றழைக்கப்பட்ட இந்தக் கிராமத்தில் பெத்லேம் இஸ்ரேல் பாதிரியால் சந்தியோகுமையர் தேவாலயம் அமைக்கப்பட்ட நாளிலிருந்து மாதத்திற்கு ஓரிரு தடவைகள் சந்தியோகுமையர் இவ்வாறாக நடுநிசியில் வீதிவலம் போய்க்கொண்டுதானிருக்கிறார்.

சந்தியோகுமையர் வீதிவலம் வந்தவொரு இரவில் விதானையின் தோட்டத்தில் பழுத்துக் கிடந்த மிளகாய்கள் களவாடப்பட்டிருந்தன. யார் திருடியிருப்பார்கள் என்பது விதானைக்கும் ஊர்ச் சனங்களுக்கும் நிரூபணமாகத் தெரியும். ஆனாலும் அவர்கள் வழமைபோலவே காலடி பார்க்கும் எப்பாஸ்தம்பிக்கு அதிகாலையிலேயே தகவல் அனுப்பினார்கள். கிராம மக்கள் விதானையின் தோட்டத்தில் எப்பாஸ்தம்பியை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருந்தார்கள். அவர்கள் தோட்டத்து மணலில் பதிந்திருந்த திருடனின் காலடித் தடங்களைச் சுற்றி மணலில் விரல்களால் வட்டங்களை வரைந்துவிட்டு எப்பாஸ்தம்பி வரும்வரைக்கும் அந்தக் காலடித் தடங்கள் கலைந்தவிடாதவாறு கண்ணும் கருத்துமாய் பாதுகாத்ததார்கள்.

எட்டு மணியளவில் எப்பாஸ்தம்பி தோட்டத்திற்கு வந்தார். எப்பாஸ்தம்பி காலடித் தடங்களைப் பரிசோதித்துவிட்டு என்ன சொல்லப் போகிறார் என்பதைச் சனங்கள் அறிந்தேயிருந்தார்கள். எனினும் அவர்கள் எப்பாஸ்தம்பியின் சொல்லுக்காக அமைதியாகக் காத்திருந்தார்கள். அவர்களில் பலரும் எப்பாஸ்தம்பி சொல்லப்போவது குறித்துத் தமக்கு எவ்வித முன்முடிவுகளுமில்லை என்ற தோரணையைத் தங்களது முகங்களில் கொண்டுவருவதற்காகப் பெரும் பிரயத்தனங்களைச் செய்துகொண்டிருந்தார்கள். திருடன் யாராயிருப்பான் என அவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தபோதிலும் அவர்களில் எவராவது ஒரு யூகமாகவாவது தாங்கள் அறிந்திருந்த திருடனின் பெயரை உச்சரித்தார்களில்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

எப்பாஸ்தம்பி நிலத்தில் குந்தியிருந்து திருடனின் முதலாவது காலடித் தடத்தை உற்றுப் பார்த்தவாறேயிருந்தார். முதலாவது காலடித் தடத்தை ஆராய மட்டும் அவர் பத்து நிமிடங்களைச் செலவிட்டார். பின் மெதுவாக எழுந்து திருடனின் தடத்தை அவர் பின்தொடர்ந்தார். சனங்கள் அவரின் பின்னாலேயே தொடர்ந்து வந்தார்கள். தோட்டத்தின் எல்லைக்கு வந்ததும் எப்பாஸ்தம்பி அமைதியாக மடியிலிருந்த புகையிலையை எடுத்து நுணுக்கமாகக் கிழித்துச் சுற்றிக்கொண்டே விதானையிடம், “எனக்கு ஆர் ஆளெண்டு விளங்குது” என்று சொல்லிவிட்டு சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டு வடக்கு முன்னாக தனது வளைந்துபோன காலை இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தார். வழமைபோலவே இம்முறையும் சனங்கள் தோட்டத்துடனேயே நின்றுவிட களவு கொடுத்தவன் மட்டும் எப்பாஸ்தம்பியைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான்.

எப்பாஸ்தம்பி இழுத்து இழுத்துக் கள்ளுத் தவறணைக்கு வந்தபோது தவறணையைத் திறந்துகொண்டிருந்தார்கள். சீவல் தொழிலாளிகள் முட்டிகளில் பொங்கிக்கிடந்த கள்ளை அளந்து அளந்து தவறணையின் பீப்பாவில் நிரப்பிக்கொண்டிருந்தார்கள். தவறணையின் முன்னிருந்த கொட்டிலில் மணலைக் குவித்து எப்பாஸ்தம்பி உட்கார்ந்துகொண்டார். விதானை ஒரு புளாவில் பவுத்திரமாக கள்ளை ஏந்திவந்து எப்பாஸ்தம்பியிடம் கொடுத்தான். புளாவில் வாயை வைத்து ஒரு இழுவை இழுத்த எப்பாஸ்தம்பி விதானையிடம், “உவன் கள்ளக் கபிரியல்தான் செய்திருக்கிறான்” என்றார். இந்தத் துப்பை எதிர்பார்த்தேயிருக்காதவன் போல விதானை மூஞ்சியை விரித்தவாறே “இதென்ன சந்தியோம்மையாரே, உந்த அமாவாசை இருட்டுக்க என்னெண்டு அந்தக் கிழவன் ஒரு காய் விடாம ஆய்ஞ்சுகொண்டு போனவன்!” என்று தன் வாயைக் கைகளால் பொத்திக்கொண்டான்.

கபிரியலுக்கு எழுபது வயதிருக்கும். நல்ல வாட்டசாட்டமான உடலும் தீர்க்கமான கண்களும் கம்பீரமான நடையும் வெண்ணிறத் தாடியுமாக ஆள் பார்ப்பதற்கு சுந்தர ராமசாமி போலவேயிருப்பார். ஆனால், கபிரியல் கிழவர் நிறம் குறைவு. கபிரியலுக்குப் பெண்சாதி பிள்ளைகள் கிடையாது. அவர் தொடர்ந்து அறுபது வருடங்களாகச் சந்தியாப்புலத்தில் திருடி வருகிறார். பழைய துணிகள், சட்டிபானைகள், கோழிகள், ஆடுகள், சைக்கிள்கள், தோட்டங்களில் மிளகாய்கள், தக்காளிகள் என மதிப்புள்ளவை மதிப்பற்றவை என்ற பேதங்களில்லாது அவர் எல்லாவற்றிலும் கைவைப்பார். அவர் இதுவரை திருடியவற்றில் உச்ச மதிப்புள்ள பொருள் ஒரு நீர் இறைக்கும் இயந்திரம்தான்.

கபிரியல் அதைப் பத்து வருடங்களிற்கு முன்பு திருச்செல்வத்தின் வீட்டிலிருந்து திருடிச் சென்றார். அப்போதும் எப்பாஸ்தம்பி திருச்செல்வத்தின் வளவில் பதிந்திருந்த காலடிகளைப் பார்த்து அத்தடங்கள் கபிரியலுடையவையே எனக் கண்டுபிடித்தார். சபினாரின் மகன் திருச்செல்வம் ஊரறிந்த முரடன். நான்கு நாட்கள் கழித்து திருச்செல்வம் பனை தறித்துவிட்டுத் தோளில் கோடரியுடன் வரும் போது கபிரியல் தெருவில் அவனுக்கு எதிர்ப்பட்டபோது திருச்செல்வம் கையில் கோடரியுடன் கபிரியலைத் துரத்த ஆரம்பித்துவிட்டான். தெருவில் கபிரியலும் திருச்செல்வமும்ம் ‘ரேஸ்’ ஓடினார்கள். வாசிகசாலை முன்றலில் வைத்துத் திருச்செல்வம் கிழவரை நெருங்கிவிட்டான். முன்றலில் கூடிநின்ற சனங்களின் மத்தியில் இருவரும் சண்டைக் கோழிகள் மாதிரி ஒருவரை ஒருவர் முறைத்துப் பார்த்தவாறே நின்றனர்.

இப்போது கபிரியலின் மடியிலிருந்த சிறிய கிறிஸ் கத்தி அவரின் கையிலிருந்தது. திருச்செல்வம் கிழவரின் கையிலிருந்த கத்தியையே முறைத்துப் பார்த்தவாறு நின்றிருந்தான். மோதலுக்குக் கிழவர்தான் முன்கையெடுத்தார். கிழவர் தனது கையிலிருந்த கத்தியைத் திருச்செல்வத்தின் காலடியில் மணலில் வீசியெறிந்துவிட்டு “செல்வம் நான் கிறிஸைப் போட்டுட்டன், நீயும் கோடலியக் கீழ போட்டுட்டு என்னோட கையால அடிபட வாவன்” என்று கிழவர் சவால் விட்டார். அந்தக் கணமே திருச்செல்வம் தன்னுடைய கோடரியைத் தூக்கிக் கபிரியலுக்கு முன்னால் வீசியெறிந்தான். அவ்வளவுதான், ஒரு பாய்ச்சலில் குனிந்து திருச்செல்வம் வீசியெறிந்த கோடரியைக் கையில் எடுத்த கிழவர் மறுபாய்ச்சலில் கோடரியால் திருச்செல்வத்தின் கால்களில் வெட்டினார். அன்று திருச்செல்வம் கால்களில் இரத்தம் ஒழுக ஒழுக ஓடித் தப்பினான்.

விதானையின் தோட்டத்தில் திருடியது கபிரியல் கிழவர்தான் என்று எப்பாஸ்தம்பி உறுதிசெய்த அரைமணி நேரத்தில் கிராமத்தினர் கிழவரின் குடிசையைச் சுற்றி வளைத்தனர். கிழவர் கடும் போதையிலிருந்தார். அவரால் நடக்கவே முடியவில்லை. கிராமத்தினர் கிழவரின் கைகளைப் பற்றிச் சுடுமணலுக்குள்ளால் விதானையின் வீடுவரை கொற இழுவையில் கிழவரைக் கொண்டு வந்தனர். விதானை தனது விசாரணையைத் தொடங்கினான். “அப்பு, எனக்கு உண்மையைச் சொல்லிப்போட வேணும்! எங்க மிளகாய்ச் சாக்கை ஒளிச்சு வைச்சிருக்கிறியிள்?” அரை மயக்கத்தில் கிடந்த கிழவர் தனது இடக்கையைத் தூக்கி விரல்களை விரித்துத் தனது வலக்கையால் இடது உள்ளங்கையில் ஒரு குத்துவிட்டு, “எனக்கு வழியில்லாமலோ தூமைச்சீலை உன்னட்ட களவெடுக்க வந்தனான்” என்று உறுமினார். இளைஞர்கள் மறுபடியும் சென்று தேடியதில் கிழவரின் குடிசையைச் சூழவரவிருந்த நொச்சிப் புதர்களிடையே மிளகாய்ச் சாக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

விதானை ஆங்காரத்துடன் மிளகாய்ச் சாக்கைத் தூக்கி கிழவருக்கு முன்னால் வைத்துவிட்டு, “எண அப்பு, இது என்ன?” என்று கேட்டான். கிழவர் கண்களை மூடியவாறே, “இது நான் விசுவமடுவிலயிருந்து கொண்டுவந்தது” என்றார். கிழவரைச் சுற்றி நின்றவர்கள் ஆளை ஆள் பார்த்து இளித்துக்கொண்டனர். கிழவர் மெல்ல எழுந்து நின்றார். அவரின் முகத்தில் சினம் பற்றியிருந்தது. அவர் சுற்றும் முற்றும் பார்த்துத் தலையை ஆட்டியவாறே சாரத்தைத் தூக்கிச் சண்டிக்கட்டாகக் கட்டிக்கொண்டு வெளியே நடக்கத் தொடங்கினார். அப்போது விதானையின் பெண்சாதி கிழவரைத் துரத்திக்கொண்டே ஓடிவந்து ஓர் ஓலைப்பெட்டியைக் கிழவருக்கு முன் நீட்டினாள். அந்தப் பெட்டி நிறையப் பழுத்த மிளகாய்கள் கிடந்தன. ஏதோ காணிக்கை கொடுப்பதைப்போல அவள் கிழவரின் முன்னால் மிளகாய்களை ஏந்தியவாறே நின்றிருந்தாள். கிழவர் தனது நீண்ட கையை விசிறி அந்தப் பெட்டியைத் தட்டிவிட்டுத் தன்னாராவாரம் நடந்துபோனார்.

கிழவர் இறந்தபோது இனி கிராமத்தில் திருட்டே நடக்காது என மக்கள் நினைத்துக்கொண்டனர். கிழவர் இறந்த நாளிலிருந்தே சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் வருவதும் நின்று போயிருந்தது. கிழவர் இறந்துபோன மூன்றாவது அமாவாசையில் ரீத்தம்மாக் கிழவியின் வீட்டில் உடுபுடவைகள் களவு போயின. அன்று அதிகாலையில் சந்தியாப்புலத்தின் தெருக்களில் குதிரையின் குளம்பொலிகளை மக்கள் மறுபடியும் கேட்கலாயினர்.

ரீத்தம்மாவின் வளவில் பதிந்திருந்த திருடனின் காலடிகளை எப்பாஸ்தம்பி நுணுக்கமாக ஆராய்ந்துகொண்டிருந்தார். மணலில் ஒரு பந்து துள்ளிச் சென்றதைப்போல அந்தக்காலடிகள் மங்கலாயும் திருத்தமில்லாமலும் கிடந்தன. திருடனின் காலடிகளைச் சுற்றி நின்ற மக்கள் திருடன் செருப்புகளை அணிந்துகொண்டு வந்திருப்பானோ என்று சந்தேகப்பட்டனர். ரீத்தம்மாவின் மகன் தயங்கித் தயங்கி அதை எப்பாஸ்தம்பியிடம் கேட்டே விட்டான். அப்போது எப்பாஸ்தம்பி குந்தியிருந்து மணலைத் தனது கைகளில் அள்ளிக் கீழே துளித் துளியாய் உதிர்த்துக்கொண்டேயிருந்தார். பின் அவர் எழுந்துநின்று ரீத்தம்மாவின் மகனிடம், “எனக்கு ஆளை விளங்குது” என்று சொல்லிவிட்டு தனது வளைந்த கால்களை இழுத்தக்கொண்டே நடக்கத் தொடங்கினார். அவர் கள்ளுத் தவறணையில் வைத்து ரீத்தம்மாவின் மகனிடம் திருடனின் பெயரை வெளியிட்டார். சபினாரின் மகன் வில்லியம் திருடனாயிருந்தான்.

இதை அறிந்ததும் கிராமத்து மக்கள் தங்களின் மார்புகளில் கைகளால் சிலுவைக் குறிகளைப் போட்டுக்கொண்டனர். அவர்களின் முகங்களில் அடையாளமில்லாத ஒளி தொற்றிற்று. கடந்த மூன்று மாதங்களில் அவர்கள் எல்லோருமே தங்களின் வீடுகளுக்குள்ளும் தோட்டங்களிலும் ஆலயத்திலும் முடங்கிக் கிடந்திருந்தார்கள். இன்று ஒரு திருடனின் பொருட்டு அவர்கள் ஒன்றாகக் கூடியிருக்கிறார்கள். கிராம மக்களிடம் சந்தியோகுமையர் ஆலய கொடியேற்ற காலங்களில் மட்டுமே இன்றுள்ளது போன்ற உற்சாகமும் சகோதரத்துவமும் காணக் கிடைக்கும்.

அந்தக் கிராமத்திலேயே ‘சென்ற் பற்றிக்ஸ்’ பாடசாலையில் படித்தவன் வில்லியம் மட்டுமே. அந்தக் காலத்திலேயே ஒரு மாணவனுக்கு இடம் கொடுப்பதற்கு பற்றிக்ஸில் அய்நூறு ரூபாய்கள் அறவிட்டார்கள். காலையிலும் மாலையிலும் இரண்டு மணிநேரங்கள் பயணம் செய்து வில்லியம் நகரத்திற்குச் சென்று படித்து வந்தான். பத்தாவதோடு அவன் படிப்பு நின்றுவிட்டது. ஆலயப் பலிப் பூசையின்போது சன்னமான குரலில் ஏற்ற இறக்கங்களுடன் ஒன்றிப்போய் விவிலியப் புத்தகத்தை வில்லியம் வாசிக்கும்போது பெண்கள் கண்ணீர் விடுவார்கள்.

வில்லியம் தனது பத்தொன்பதாவது வயதில் எங்கிருந்தோ கறுப்பியைச் அழைத்துவந்தான். கறுப்பி பூநகரியாள் என்றும் நெடுந்தீவாள் என்றும் வெவ்வேறு தகவல்கள் உள்ளன. கறுப்பிக்கு அப்போது பதினேழு வயதிருக்கும். கடற்கரையில் ஈச்சம் பற்றைகளை வெட்டி அகற்றி அங்கே ஒரு கொட்டிலை இணக்கிக்கொண்டு வில்லியமும் கறுப்பியும் சீவித்தார்கள். பின்னிரவுகளில் கடற்கரையை ஒட்டிய ஈச்சம் செடிகளில் கறுப்பி பழங்கள் சேகரிப்பதைச் சிலர் கண்டிருக்கிறார்கள். அதைத் தவிர்த்துக் கறுப்பி பகலில் அந்தக் கொட்டிலை விட்டு வெளியே வந்ததேயில்லை.

வில்லியமும் காலையிலேயே நகரத்திற்குப் போய்விடுவான். அவன் எப்போதும் தூய்மையான வெள்ளைச் சாரமும் வெள்ளை முழுக்கைச் சட்டையும் அணிந்திருப்பான். அந்தக் கிராமத்தில் பெரும்பாலானோர்க்கு செருப்புகள் அணியும் பழக்கம் கிடையாது. அந்த மணற்பூமியில் செருப்புடன் நடப்பது நீரின் மேல் நடப்பதைப் போலச் சிரமமானது. வில்லியம் தன் கைகளில் வெண்ணிறச் செருப்புக்களைத் தூக்கிப்பிடித்தவாறே மணலில் நடந்து வருவான். சிவந்த மெல்லிய உடலுடன் கன்னங்களில் புரளும் சுருட்டை முடியுடனும் முட்டைக் கண்களுடனும் சிவந்த உதடுகளுடனும் வில்லியம் அந்த வெள்ளுடையில் ஒரு சம்மனசைப் போலயிருப்பான். அவன் நகரத்தில் என்ன செய்கிறான் என யாருக்கும் தெரியாது. அவன் காலையிலிருந்து மாலைவரை நகரத்து பஸ் நிலையத்திலேயே நின்றிருப்பதை அவதானித்திருப்பதாகச் சிலர் பேசிக்கொண்டார்கள்.

சபினாருக்கு இப்படியாரு பிள்ளையா வாய்த்திருக்க வேண்டுமென்று அவர்கள் சலித்துக்கொண்டார்கள். கிராம மக்கள் முதலில் சபினாரிடம்தான் போனார்கள். “அவன் கள்ளனெண்டா அவனை நீங்கள் அடிச்சுக் கொல்லுங்கோ, எனக்கும் அவனுக்கும் தேப்பன் பிள்ளை உறவு முடிஞ்சு வரியம் ஒண்டாச்சு” என்று சபினார் படலையை அடித்துச் சாத்திவிட்டார். கிராமத்து இளைஞர்கள் வில்லியத்தைத் தேடி அவனின் கொட்டிலுக்குப் போனபோது அங்கே கறுப்பி தனது கைக்குழந்தையுடன் குடிசை முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவளிடம் இளைஞர்கள் வில்லியம் எங்கேயென்று கேட்டார்கள். அவள் ஒன்றும் பறையாமல் விறுக்கென கொட்டிலுக்குள் போய்விட்டாள்.

செக்கலில் வில்லியம் சந்தியாப்புலம் எல்லையில் தட்டி வானில் வந்து இறங்கியபோது இளைஞர்கள் அவனைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அவனின் கைகளைக் கயிற்றால் பிணைத்து அவனை ரீத்தம்மாவின் வீட்டுக்கு இழுத்துச் சென்றார்கள். ரீத்தம்மாவின் வீட்டின் முன்னால் நின்ற ஒல்லி வேம்புடன் அவன் இறுகக் கட்டப்பட்டான். ரீத்தம்மாவின் மகன் வில்லியத்தின் நீளமான சுருள் முடிகளைப் பற்றி விட்ட முதல் அறையிலேயே வில்லியத்தின் உதடுகள் வெடித்தன. வில்லியம் ஒரு கண்ணாடிச்சிலை போலயிருந்தான். எந்த இடத்தில் தட்டினாலும் அவனின் உடல் வெடித்து இரத்தம் கசியலாயிற்று. வில்லியத்தின் வெண்ணிற உடையில் இரத்தப் பொட்டுகள் தெறித்தன.

வில்லியம் முதல் அடியிலேயே திருடன் அவன்தான் என்பதை ஒத்துக்கொண்டான். திருடிய துணிகளை அவன் யாழ்ப்பாணத்தில் விற்றுவிட்டானாம். வில்லியம் தனது சட்டைப்பையில் எழுபது ரூபாய்கள் இருப்பதாகவும் அவற்றை எடுத்துக்கொண்டு தன்னை விட்டுவிடுமாறும் அவர்களிடம் மன்றாடினான். கிராமத்தினர் வில்லியத்தைச் சுற்றி முகங்களில் குழப்ப ரேகைகளுடன் நின்றிருந்தனர். அவர்களிடையே வில்லியத்தின் அண்ணன் திருச்செல்வமும் நின்றிருந்தான். அவனின் வெற்றுத் தோளில் அப்போதும் அவனது கோடரி தொங்கிக் கிடந்தது. விதானை இரண்டு இளைஞர்களைத் தனியாகக் கூப்பிட்டு திருச்செல்வம் கோடரியால் வில்லியத்தைக் கொத்தக்கூடும் என்றும், எதற்கும் திருச்செல்வத்தின் அருகிலேயே இளைஞர்களை அவதானமாக நிற்கவும் சொன்னான். அன்று இரவு முழுவதும் ரீத்தம்மா வீட்டு வேப்பமரத்தில் வில்லியம் கட்டப்பட்டிருந்தான். அதிகாலையிலே சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் வரும் சத்தத்தை வில்லியம் கேட்டான்.

கூட்டுறவுச் சங்கக்கடையின் ஓடுகள் பிரிக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டிருந்தன. எப்பாஸ்தம்பி அடி பார்த்துத் தடங்கள் வில்லியத்தினுடையவை என்று சொல்லிவிட்டார். சங்கக்கடை மனேச்சருக்கு வேறு வழியில்லை. அவன் களவுபோனதை ஊறாத்துறை தலைமைச் சங்கத்திற்கு அறிவித்துவிட்டான். மதியத்தில் சந்தியாப்புலத்திற்குள் பொலிஸ்ஜீப் வந்தது. ஜீப்பைக் கண்டதும் கிராமத்தினர் செத்த நாயிலிருந்து உண்ணி கழன்றதுபோல மெதுவாகச் சங்கக்கடையிலிருந்து நழுவலாயினர். மெதுமெதுவாய் நடந்து சென்ற இளைஞர்கள் வீதியிலிருந்து இறங்கியதும் வேலிகளைப் பாய்ந்து தலைதெறிக்க ஓடலானார்கள். இந்தச் சந்தியாப்புலத்து மணலில் கபிரியல் கிழவரோ அல்லது வில்லியமோ கூட இந்த அச்சத்துடனும் வேகத்துடனும் இதுவரை ஓடியதில்லை.

சங்கக் கடையின் முன்னால் வந்துநின்ற ஜீப்பிலிருந்து சார்ஜன் அரியநாயகமும் இன்னும் இரண்டு பொலிஸ்காரர்களும் இறங்கினார்கள். அரியநாயகம் இறங்கியபோது அவனிற்கு முன்னால் சிறுவன் அன்ரனி நின்றிருந்தான். அன்ரனி அந்தப் பச்சைநிற ஜீப்பையே ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான். அரியநாயகத்தின் மிடுக்கையும் அவனின் சீருடைகளையும் தொப்பியையும் அந்தச் சிறுவன் அச்சத்துடன் ஓரக்கண்ணால் கவனித்தான். அன்ரனியை எட்டிப்பிடித்த சார்ஜன் அரியநாயகம், “என்ன புண்டையா பாக்கிறாய்?” என்றவாறே அன்ரனியின் தலையில் ஓங்கிக் கொட்டிவிட்டுச் சங்கக்கடைக் கிணற்றிலிருந்து தண்ணீர் அள்ளிவந்து ஜீப்பைக் கழுவுமாறு அன்ரனிக்குக் கட்டளையிட்டான். சிறுவன் தூக்க முடியாமல் தண்ணீர் வாளியைத் தூக்கிவந்து வாயை மூடி விம்மியவாறே ஜீப்பைக் கழுவத் தொடங்கினான்.

சார்ஜன் விசாரணையைத் தொடங்கலானான். அவன் சந்தியாப்புலத்திலிருந்த ஒவ்வொருவரையும் திருடன் என்ற கோணத்திலேயே விசாரித்தான். இதற்குள் ஊருக்குள் சென்ற பொலிஸ்காரர்கள் இருவரும் ஊரிலிருந்த ஆண்கள் எல்லோரையும் சங்கக்கடைக்குச் சாய்த்துக்கொண்டு வந்தார்கள். கிராமத்தினர் சார்ஜனின் முன்பு தலைகுனிந்து நின்றிருந்தார்கள். அன்றைய விசாரணையில் எப்பாஸ்தம்பி உட்பட நான்குபேர் சார்ஜனின் பூட்ஸ் கால்களால் உதைபட்டார்கள்.

மதியச் சாப்பாடும் சாராயமும் பொலிஸாருக்கு விதானையின் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது. சாப்பிட்டுவிட்டு விதானையின் முற்றத்து மரநிழலில் சாய்வுநாற்காலியில் சட்டையைக் கழற்றி விட்டு சார்ஜன் தூங்கிக்கொண்டிருக்க அந்த இடைவெளியில் இரண்டு பொலிஸ்காரர்களும் குடிமனைகளுக்குள் புகுந்து மாம்பழங்கள், மிளகாய்கள், பனங்கிழங்குகள் ஆகியவற்றைச் சேகரித்து ஜீப்பில் ஏற்றினார்கள். மாலையில் விதானை, சார்ஜனிடம் பக்குவமாக, “ஐயா, களவெடுத்தவன் வில்லியம்தான், அவனைத் தேடிப் பார்த்தாச்சு, ஆள் ஊரில இல்லை” என்று சொன்னான். மாலையில் வில்லியத்தின் தகப்பன் சபினாரையும் சகோதரன் திருச்செல்வத்தையும் ஏற்றிக்கொண்டு பொலிஸ் ஜீப் சந்தியாப்புலத்திருந்து புறப்படலாயிற்று. சார்ஜனின் கைகளுக்குள் சங்கக்கடை மனேச்சர் நூறு ரூபாயை வைத்தான். அப்போது சிறுவன் அன்ரனி ஜீப்பை பாதிதான் கழுவி முடித்திருந்தான்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

நீக்கிலாப்பிள்ளையின் பட்டியில் வெள்ளாடு களவுபோனபோது ஊறாத்துறைப் படகுத்துறையில் வில்லியம் ஆட்டுடன் பொலிஸாரிடம் அகப்பட்டான். இரண்டு பொலிஸ்காரர்கள் அவனையும் ஆட்டையும் லைன்வானில் ஏற்றிச் சந்தியாப்புலத்திற்குக் கொண்டுவந்தார்கள். நீக்கிலாப்பிள்ளையின் ஆட்டுப்பட்டியில் கட்டிவைத்துப் பொலிசுக்காரர்கள் வில்லியத்தின் தோலையுரித்தார்கள். அவன், “சேர் ப்ளிஸ் அடிக்காதையுங்கோ, சேர் ப்ளிஸ் அடிக்காதையங்கோ” என்று கையெடுத்துக் கும்பிட்டு அலறிக்கொண்டிருந்தான். கிராமத்தினர் துயரத்துடன் வில்லியத்தின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர். இடையே ஒரு தடவை வில்லியம், “ஐயோ நான் சென் பற்றிக்ஸில படிச்சனான்” எனக் கூவியழுதான். பின் நீக்கிலாப்பிள்ளையைப் பார்த்து, “மாமா, நான் செய்தது பிழைதான். என்ன மன்னிச்சுக்கொள்ளுங்க” என்று கேவினான்.

இந்தப் பத்து வருடத்தில் சந்தியாப்புலத்தில் வில்லியம் கைவைக்காத வீடுகளேயில்லை. மூன்று மூன்று மாதங்களாக இரண்டு தடவைகள் மறியலுக்கும் போய் வந்துவிட்டான். அந்தக் கிராமத்திலிருந்து முதன்முதலில் மறியலுக்குப் போனவனும் வில்லியம்தான். வில்லியம் முதல் முறையாகச் சிறையிலிருந்து விடுதலையாகி வரும்போது அவனின் கையிலிருந்த பையில் அன்று காலை சிறையில் கொடுத்த அச்சுப்பாணும் சம்பலுமிருந்தன. அவன் அந்தப் பாணைப் பிய்த்துத் துண்டுகளை கறுப்பிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்தான். அப்போது வயிற்றில் கறுப்பிக்கு மூன்றாவது குழந்தையிருந்தது.

இப்போதெல்லாம் வில்லியம் சந்தியாப்புலத்திற்குள் பகலில் வருவதேயில்லை. பத்துத் தடவைகள் திருடினால் அவன் பதினொரு தடவைகள் பிடிபட்டான். அடிவாங்கி அடிவாங்கி அவனின் தேகம் மரத்துப் போய்விட்டது. முப்பது வயதிலேயே அவனுக்குத் தலைமுடி முற்றாக நரைத்துவிட்டது. முன்வாய்ப் பற்களில் மூன்றைப் பொலிஸ்காரர்கள் உடைத்துவிட்டார்கள். அவனின் தேகத்தில் அடிவிழும் முன்பே அவனின் கண்களில் கண்ணீரும் வாயில் எச்சிலும் சுரக்கத் தொடங்கிவிடும்.

சந்தியாப்புலத்தின் ரோமன் கத்தோலிக்கத் தமிழ்க் கலவன் பாடசாலையின் அலுவலக அறை ஓர் இரவில் உடைக்கப் பட்டபோது எப்பாஸ்தம்பி காலடித் தடம் பார்த்து அந்தத் தடங்கள் வில்லியத்தினுடையவை என்றார். சந்தியாப்புலம் ஐக்கிய வாலிபர் சங்கத்தினர் இதைக்கேட்டுத் தலையைப் பிய்த்துக்கொண்டனர். பாடசாலை அலுவலகத்தில் என்னயிருக்கிறது என்று வில்லியம் திருடப் போனான்? ஐக்கிய வாலிபர் சங்க இளைஞர்கள் நான்கு நாட்கள் கழித்து யாழ்ப்பாண பஸ்நிலையத்தில் வில்லியத்தை தற்செயலாகக் கண்டபோது அவர்கள் ஒரு வாடகைக் காரைப் பிடித்து அதில் வில்லியத்தை ஏற்றிச் சந்தியாப்புலத்திற்குக் கொண்டுவந்தனர். வண்டி ஓடும்போதே வண்டிக்குள் வைத்து வில்லியத்தைத் துவைத்தெடுத்தனர். ஐக்கிய வாலிபர் சங்கக் கட்டடத்துக்குள் இரவு முழுவதும் வில்லியத்தை முழந்தாளில் நிறுத்தி வைத்தார்கள். காலையில் இளைஞர்கள் வில்லியத்தை உட்காரவைத்து நீண்ட அறிவுரைகளை வழங்கினார்கள். அவனின் குழந்தைகள் வளர்ந்து வருவதாகவும் திருடர்களின் குழந்தைகள் என்ற அவப்பெயருடன் அவர்கள் வளரக்கூடாது என்றும் வில்லியத்திற்குப் புத்திமதிகள் சொன்னார்கள். வில்லியம் சிந்தனை தோய்ந்த முகத்துடன் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்தான். இடையிடையே, “ஓ யேஸ், ஓ யேஸ்” என்று தலையாட்டினான். அவனை வீட்டிற்கு அனுப்பும்போது இளைஞர்கள் அவனுக்கு ஐம்பது ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்கள்.

அடுத்த நாள் காலையில் சந்தியாப்புலத்தின் வீதிகளில் கறுப்பி கைக்குழந்தையை இடுப்பில் வைத்தவாறு நடந்து வருவதைக் கிராமத்தினர் கண்டனர். அவள் நேராக ஐக்கிய வாலிபர் சங்கக் கட்டடத்திற்குப் போய் அங்கிருந்த இளைஞர்களிடம், “அவர் உங்களிட்ட காசு வாங்கிக்கொண்டுவரச் சொன்னவர்” என்றாள்.

***

3

ந்தியாப்புலத்தையும் கரம்பொன் கிராமத்தையும் பிரித்து வைத்திருக்கும் பிரதான வீதியில் பஸ்ஸிற்காகக் காத்திருந்த கரம்பொன் பெண்ணொருத்தியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை வெள்ளை வேட்டியும் வெள்ளைச் சட்டையும் அணிந்திருந்த ஒரு திருடன் அறுத்துக்கொண்டு சந்தியாப்புலத்திற்குள் ஓடிவிட்டானாம். அவன் ஓடும்போது அவனது செருப்புக்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடினானாம் என்ற வழக்கு இயக்கத்திடம் வந்தபோது இயக்கம் வெள்ளைவானில் சந்தியாப்புலத்திற்கு வந்தது. கிராம மக்கள் முதலில் திருடனின் காலடித் தடங்களை அடையாளம் காண வேண்டும் என இயக்கப் பொடியளிடம் வாதிட்டார்கள். இயக்கப் பொடியள் அதைக்கேட்டுச் சிரித்தார்கள். இயக்கப் பொடியளிடம் எல்லாத் தகவல்களும் இருந்தன. அவர்கள் வாகனத்தை வில்லியத்தின் வீட்டுக்குச் செலுத்தினார்கள். அவர்கள் கறுப்பியையும் நான்கு குழந்தைகளையும் வெளியே வரச் சொல்லிவிட்டுக் குடிசைக்குள் புகுந்து தேடினார்கள். குடிசையிலிருந்த சட்டி பானைகளிலிருந்து பவுடர் பேணிவரை அவர்கள் தட்டிக்கொட்டிச் சங்கிலியைத் தேடினார்கள். அன்று முழுவதும் தேடியும் இயக்கத்திடம் சங்கிலியும் அகப்படவில்லை, வில்லியமும் அகப்படவில்லை. இரவு சந்தியோகுமையர் குதிரையில் வீதிவலம் போனார்.

அடுத்தநாள் விடிந்தபோது மறுபடியும் வில்லியத்தின் குடிசைக்கு இயக்கப் பொடியள் வந்தார்கள். குடிசைக்குள் அரவம் ஏதுமில்லாததால் ஒரு பொடியன் குடிசைக்குள் நுழைந்து பார்த்தான். குடிசைக்குள் வில்லியமும் கறுப்பியும் நான்கு குழந்தைகளும் விரித்த பாய்களில் பேச்சுமூச்சில்லாமல் விறைத்துக் கிடந்தார்கள். அவர்களின் வாய்களில் வாந்தியும் இரத்தமும் உறைந்து கிடந்தன. “அய்யோ என்ர அம்மா” எனக் கூச்சலிட்டுக்கொண்டே இயக்கப்பொடியன் வெளியே ஓடிவந்தான். இயக்கப் பொடியள் ஆறு உடல்களையும் தூக்கிக்கொண்டுபோய் வாகனத்தில் ஏற்றினார்கள். அந்த இயக்கப் பொடியன் இப்போது கண்கள் சிவக்க உதடுகளை இறுக மடித்து வாகனத்தில் சாய்ந்து நின்றான். அவனின் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

மதியம் ஊறாத்துறை ஆஸ்பத்திரியிலிருந்து கறுப்பியினதும் குழந்தைகளினதும் உடல்களை இயக்கம் திரும்பவும் சந்தியாப்புலத்திற்கு கொண்டுவந்து சேர்த்தது. அவர்கள் அரளி விதைகளைத் தின்று செத்திருக்கிறார்கள். வில்லியத்தின் உடலில் உயிர் ஒட்டிக்கிடந்தது. வில்லியம் மயங்கிய நிலையிலேயே யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரிக்கு இயக்கத்தால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தான். வில்லியத்தின் குடிசையின் முன்பு கிராம மக்கள் அமைத்திருந்த தறப்பாள் பந்தலுக்குள் சடலங்கள் அடுக்கப்பட்டன. சவப்பெட்டிகளை வாங்குவதற்கு சபினார் பணம் கொடுத்தார். மற்றைய செலவுகளிற்காக இயக்கமும் ஆயிரம்ரூபா கொடுத்தது. செக்கலில் கறுப்பியினதும் குழந்தைகளினதும் உடல்கள் புதைக்கப்பட்டன.

மூன்று நாட்கள் கழித்துக் கடற்கரையோரமாக நடந்து வில்லியம் சந்தியாப்புலத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் அப்போதும் தூய்மையான ஆடைகளைத்தான் அணிந்திருந்தான். அவனின் கையில் செருப்புகளிருந்தன. சபினார் தனது மகனைக் கட்டிப்படித்து அழுதபோது வில்லியம் நிலத்தைப் பார்த்தவாறே நின்றிருந்தான். கிராமத்தினர் அவனுக்கு ஆறுதல் சொன்னபோது அவன் அவர்களைப் பார்த்து இதழ் பிரியப் புன்னகைத்தான்.

கிராமத்தினர் அங்கேயிருக்கும்போதே வில்லியம் தனது குடிசையைப் பிரித்து அடுக்க ஆரம்பித்தான். அந்தக் குடிசையிலிருந்த தட்டுமுட்டுச் சாமான்களை ஓரிடத்தில் குவித்தான். “குடிசைத் தடிகளையும் மரங்களையும் தட்டுமுட்டுச் சாமான்களையும் யாராவது விலைக்கு வாங்கிக்கொள்கிறீர்களா” என வில்லியம் தணிந்த குரலில் கிராமத்தினரிடம் கேட்டான். “இவற்றை விற்றுவிட்டு நீ எங்கே போகப்போகிறாய்?” எனக் கிராமத்தினர் கேட்டபோது அவன் மவுனமாயிருந்தான். கடைசியில் அய்நூறுரூபா கூடப் பெறாத அந்தப் பொருட்களை விதானை பாவப்பட்டு எழுநூறுரூபா கொடுத்து வாங்கினான். அன்று மாலையே கடற்கரையோரமாக நடந்து வில்லியம் என்ற அந்தத் திருடன் சந்தியாப்புலத்திலிருந்து வெளியேறினான். சந்தியாப்புலத்தில் இனி திருட்டே நடக்காது எனக் கிராமத்தினர்கள் நம்பினார்கள்.

ஆனால், மறுநாள் காலை விடிந்தபோது சந்தியோகுமையர் ஆலயத்தின் பிரமாண்டமான வாயில் கதவு இரண்டாகப் பிளந்து கிடந்தது. ஆலயத்திலிருந்த வெள்ளியாலான திருவிருந்துப் பேழையும் காணாமல் போயிருந்தது. கிராமத்தினர் திகைத்துப் போய் நின்றிருந்தனர். கோயிலிலிருந்து திருடனின் தடங்கள் கடற்கரையை நோக்கிச் சென்றன. கிராமத்தினர் அந்தத் தடங்களைச் சுற்றி மணலில் வட்டங்களை வரைந்துவிட்டு எப்பாஸ்தம்பியை அழைத்துவர ஆள் அனுப்பினார்கள். ஆனால், எப்பாஸ்தம்பி சினத்துடன், ‘நீங்கள் இயக்கத்திடமே போங்கள். அவர்கள் வந்து கண்டுபிடிப்பார்கள்’ என்று வந்த ஆளை விரட்டிவிட்டார். இப்போது விதானை முதற்கொண்டு எல்லோரும் வந்து கெஞ்சியும் எப்பாஸ்தம்பி அவர்களுடன் போக மறுத்துவிட்டார்.

உச்சி வேளையில் எப்பாஸ்தம்பி தனது வளைந்த கால்களை வேகமாக இழுத்து வைத்தவாறே சந்தியோகுமையர் ஆலயத்திற்கு வந்தார். ஆலயத்தின் முன்றிலில் வெள்ளைவானிற்குள் இயக்கத்துப் பொடியளுடன் விதானை பேசிக்கொண்டிருந்தான். கிராமத்தினர் இயக்கத்தினரின் வாகனத்தைச் சூழவர நின்றிருந்தனர். எப்பாஸ்தம்பி தனியாக ஆலயத்திலிருந்து கடற்கரைவரை நீண்டிருந்த திருடனின் தடங்களைத் தொடர்ந்தார். பூமியை உற்றுப்பார்த்தவாறே நடந்தவரின் கால்கள் பின்னத் தொடங்கின. கடற்கரைக்கு வந்தவர் கீழே குந்தியிருந்து அந்தத் தடத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அந்தத் தடங்கள் கடலுக்குள் சென்று மறையும் இடம்வரை அவர் நடந்து சென்று கடலைப் பார்த்தவாறு வெகுநேரமாக நின்றிருந்தார். பின்பு மார்பில் சிலுவைக்குறி போட்டவாறே வேதனையுடன் முகத்தைச் சுழித்தார். அந்தத் தடங்கள் ஒரு குதிரையின் குளம்படிகள் என்பதை எப்பாஸ்தம்பி கண்டுபிடித்திருந்தார்.

(நன்றி: ‘காலம்’ ஜுன் 2007)