அத்தியாயம் 1

11.12k படித்தவர்கள்
7 கருத்துகள்

வத்ஸலையின் வாழ்க்கை

த்மா நதியின் பளிங்கு போன்ற நீரோட்டத்தில் சந்திரிகையின் பிரதிபிம்பம் ஸ்வச்சமாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. ஆடி அசைந்து சென்றுகொண்டிருந்த கப்பலின் அடித்தளத்திலிருந்த கீழ்வகுப்புப் பிரயாணிகள் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். மேல் தளத்தில் இருந்த மேல்வகுப்புப் பிரயாணிகளும் சுக நித்திரையில் ஆழ்ந்திருந்தார்கள். கப்பல் பிரயாணிகளின் வசதிக்காகக் கப்பலுக்குள்ளேயே அமைக்கப்பட்டிருந்த தேநீர்க் கடையிலிருந்து மட்டும் அவ்வப்போது சிறிது சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. 'கரம் சா’வைக் கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஆற்றும் சப்தமும், அலுமினிய ஸ்பூனால் 'கடக் கடக்'கென்று சுழற்றும் ஓசையும், இடையிடையே ஹிந்துஸ்தானி பாஷையில் “ஏக் ஆனா, சாடே தீன் ஆனா” போன்ற வியாபார சம்பந்தமான வார்த்தைகளும் வந்துகொண்டிருந்தன. மற்றபடி வேறு எங்கிருந்தும் எவ்விதமான சப்தமும் கிடையாது.

அந்த நிசப்தமான நள்ளிரவில் மேற்படி கப்பலில் பிரயாணம் செய்துகொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். மேல்வகுப்பு அறை ஒன்றில் எப்படியோ இடம் பிடித்து நவகாளியிலிருந்து கல்கத்தாவை நோக்கிப் பிரயாணம் செய்துகொண்டிருந்தேன். எனக்கு கப்பல் பிரயாணம் புதிது. கப்பல் வாசனையை நான் அதுவரை அனுபவித்ததில்லை. குப்பைக்கூளங்களின் துர்க்கந்தமும் 'சா'க் கடையிலிருந்து வந்த மாமிச வாசனையும் சேர்ந்து குடலைப் புரட்டி எடுத்தன. இந்த அருவருப்பான சூழ்நிலையில் எனக்குச் சற்றும் தூக்கம் வரவில்லை. எனவே, வெளித்தாழ்வாரத்திற்கு எழுந்து சென்று சற்று நேரம் தளத்தின் கைப்பிடிக் கம்பிகளைப் பிடித்தவாறு, நீல வானத்தின் அழகையும், சந்திரிகையின் குளிர்ந்த கிரணங்களையும் அனுபவிக்க விரும்பினேன். அறைக்கதவைத் திறந்துகொண்டு மேற்குப் பக்கத்தில் இருந்த தாழ்வாரத்திற்குச் சென்றேன். மேற்குத் தாழ்வாரம் சற்று ஒதுக்குப் புறமாகவும் ஜன நடமாட்டமில்லாத இடமாகவும் இருந்தது. மேற்படி தாழ்வாரத்தை அடைந்தபோது, எனக்கு முன்பாகவே ஒரு பெண் உருவம் அங்கே நின்றுகொண்டிருந்தது. பால்போல் வீசிக்கொண்டிருந்த நிலவொளியில் அந்த உருவத்தின் சௌந்தர்யத்தைக் கண்டபோது சட்டென்று ஒரு கணம் பிரமிப்புற்றேன். உடையெல்லாம் நனைந்து உடலெல்லாம் நனைந்து காணப்பட்ட அந்த ஸ்திரீ உருவத்தைக் கண்டதும், ஜலமோகினி என்று அடிக்கடி கேள்விப்படுகிறோமே, ஒருவேளை அந்த ஜலமோகினிதான் இப்படி இந்த வழியாக ஜலத்திலிருந்து ஏறிக் கப்பலுக்குள் வருகிறாளோ என்று ஐயுற்றேன். பிறகு என்னை நானே திடப்படுத்திக்கொண்டு, மெதுவாக அந்த மோகினியின் அருகில் சென்று நின்றேன். அவள் உடல் வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தது. அது பயத்தினாலா, குளிரினாலா என்று கண்டுபிடிக்க முடியவில்லை. முகம் முழுதும் ஒரே ஜலமாயிருந்ததால் அவள் அழுகிறாளா இல்லையா என்பதையும் அறிந்துகொள்ள இயலவில்லை. சட்டென்று ஓடிப்போய் ஒரு துணியைக் கொண்டு வந்து அவளிடம் கொடுத்தேன். அவள் அதைப் பெற்றுக்கொண்டு அருகிலிருந்த ஸ்நான அறைக்குள் சென்று உடம்பைத் துவட்டிக்கொண்டு வந்தாள். வந்தவள் என்னை கை ஜாடை காண்பித்து அங்கே இருந்த நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு நான் படுத்திருந்த அறைக்குப் பக்கத்து அறைக்குள் பிரவேசித்தாள். அப்படிச் சென்றவள் ஐந்து நிமிஷ நேரத்துக்கெல்லாம் வேறொரு புடவையுடன் வெளியே வந்தாள். அதுவரை அவளை ஜலமோகினி என்று எண்ணிக்கொண்டிருந்த நான், மேற்படி எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். அவளும் நம்முடன் இந்தக் கப்பலில் பிரயாணம் செய்யும் ஒரு பெண்தான் என்பது நிச்சயமாயிற்று.

அந்தப் பெண் நேராக வந்து என் எதிரில் போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தாள். பெண்களுடைய துணிச்சலுக்கு சிறந்த உதாரணம் வேண்டுமானால் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிடலாம். இல்லையென்றால், அந்த அர்த்தராத்திரி சமயத்தில் கப்பலில் தனியான இடத்தில் முன்பின் அறிமுகம் இல்லாத என்னிடம் அவள் அத்தனை துணிச்சலுடன் வரக் காரணமென்ன? எதற்காக அவள் தண்ணீரில் மூழ்கியிருக்க வேண்டும்? ஒருவேளை.... விவரம் தெரியாமல் திகைப்புற்று உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து அவள், “தயவு செய்து தாங்கள் என்னை இப்போது ஒன்றும் கேட்காதீர்கள்.... என் கணவர் அதோ அந்த அறைக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறார். நான் போகிறேன். நாளைக்கு நாம் சந்திக்கலாம்” என்று கூறியவாறு பரபரப்புடன் எழுந்து உள்ளே சென்று விட்டாள்.

அந்தப் பெண் அழகான தமிழ் பேசியதைக் கேட்டதும் என் ஆச்சரியம் அளவு கடந்து போயிற்று. தமிழ் பேசும் இந்தப் பெண், இந்தக் கப்பலில் ஏன் பிரயாணம் செய்ய வேண்டும்? என்னத்திற்காக அர்த்த ராத்திரியிலே ஜலத்தில் மூழ்க வேண்டும்? ஏதோ, மனத்துயரம் தாங்காமல் உயிரை வெறுத்துக் கப்பலிலிருந்து ஜலத்தில் குதித்திருக்கிறாள். பின்னர் உயிர் மீது ஆசை தோன்றி எப்படியோ தப்பித்து மறுபடியும் கப்பல் ஏறியிருக்கிறாள். இம்மாதிரி சந்தேகங்களும் சமாதானங்களும் என் மண்டையைச் சுற்றி வட்டமிட்டன.

நீல வானத்தையும், பூர்ண சந்திரனையும் சற்று நேரம் வெறிக்கப் பார்த்துவிட்டு என் அறைக்குள் சென்று படுத்துக்கொண்டேன். ஏற்கெனவே தூக்கமின்றி அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்த நான், அன்றைய இரவை எப்படிக் கழித்திருப்பேன் என்பதைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

2

றுநாள் பொழுது விடிந்ததும் நான் முதல் காரியமாக அடுத்த அறையைப் பார்க்க விரும்பினேன். அடுத்த அறை பொழுது விடிந்து வெகுநேரம் வரை சாற்றியே கிடந்தது. அந்த இளம் பெண்ணைக் காண்பதில்கூட எனக்கு சிரத்தை இருக்கவில்லை. அவள் 'கணவன் என்று குறிப்பிட்ட பேர்வழி யார் என்று தெரிந்துகொள்ளவே ரொம்பவும் ஆசைப்பட்டேன்.

மணி எட்டடித்து கப்பலுக்குள்ளெல்லாம் சுரீரென்று வெயில் அடித்த பிறகுதான் அந்தப் பேர்வழி வெளியே எழுந்து வந்தான். வாலிபப் பிராயம் படைத்தவனாயிருந்தும் முகத்தில் அழகு இல்லை. பார்வையிலும் வசீகரம் இல்லை. நிறம் நல்ல கறுப்பு. தமிழ் பாஷை தெரியாது. அவன் வங்காளிக்காரன் என்பது பார்த்த உடனேயே தெரிந்துவிட்டது. 'கணவன்' என்று குறிப்பிட்டுச் சொன்னது இவன்தானா என்றுகூட சந்தேகம் தோன்றிவிட்டது. நல்ல வேளையாக, சற்று சாந்த சுபாவம் உடையவனாக இருந்தான். குழாயடிக்கு எழுந்து போனவன் திரும்பி வர அரை மணி நேரம் ஆயிற்று. அந்த அரை மணி நேரத்தில் அந்தப் பெண்ணை முப்பது தடவைகளுக்குமேல் பார்த்திருப்பேன். அவளும் என்னை அடிக்கடி பார்ப்பதும், பிறகு லஜ்ஜையுடன் தலையைக் குனிந்துகொள்ளுவதுமாக இருந்தாள். நடுநிசி சம்பவத்தை நினைத்தே அவள் அவ்வாறு லஜ்ஜைப்பட்டிருக்க வேண்டும்.

அப்புறம் பொழுது சாய்வதற்குள் அந்தத் தம்பதியை பலமுறை சந்தித்தேன். கப்பல் ஹோட்டலில் நான் உட்கார்ந்து சாப்பிட்ட மேஜைக்கு எதிர் மேஜையில்தான் அவர்களும் சாப்பிட்டார்கள். இம்மாதிரி இரண்டு வேளைச் சாப்பாட்டின்போதும் ஏற்பட்ட சந்திப்பின் காரணமாக அவர்களுடன் நெருங்கிப் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவன் மட்டும் என்னைப் பார்த்தபோதெல்லாம் புன்சிரிப்புச் சிரித்து என் சினேகத்தை விரும்புவதாகக் காட்டிக்கொண்டான். நான் தமிழ் பேசுபவன் என்பதை எப்படியோ அறிந்துகொண்டு, தன் மனைவியிடம் நான் பேசவேண்டும் என்று விரும்பினான். ரொம்ப நல்லதாய்ப்போயிற்று. நாங்களாகவே விரும்பிய காரியத்தை அவனும் விரும்பி செய்யச் சொன்னது பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாயிற்று! அப்புறம் கேட்பானேன்? அவளும் நானும் அடிக்கடி சந்தித்துப் பேச ஆரம்பித்தோம். அதுமுதல் அவள் தன்னுடைய பூர்வோத்தரங்களைச் சந்தர்ப்பம் கிடைத்தபோதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொண்டு வந்தாள். அவள் கூறிய விவரத்திலிருந்து அவள் பெயர் 'வத்ஸலை' என்பதும், கல்கத்தா யூனிவர்ஸிடியில் பி.ஏ. டிகிரி பெற்றவள் என்பதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் என்பதும், தகப்பனாருடைய உத்தியோகத்தின் பொருட்டு, கீழ் வங்காளத்துக்குக் குடி போனவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதெல்லாம்கூட எனக்கு ஆச்சரியமாயில்லை. இந்த அழகிய பெண்ணுக்கும் அந்தக் குரூபிக்கும் எப்படிக் காதல் பிறந்து கலியாணமும் நடந்தது? இதுதான் எனக்கு விந்தையிலும் விந்தையாகத் தோன்றியது. உலகத்திலே எத்தனையோ அதிசய சம்பவங்கள் நிகழ்வதும், அதற்கெல்லாம் காரணம் உண்டு என்பதும் எனக்குத் தெரியாத விஷயமல்ல. ஆனாலும் இத்தனை செளந்தர்யம் வாய்ந்த ஒரு பெண், பாஷை தெரியாத ஒரு வங்காளிக்காரனை அதிலும் இத்தனை அவலட்சணமானவனை எப்படிக் காதலித்துக் கலியாணம் செய்துகொண்டாள் என்பதே பெரும் ஆச்சரியமாயிருந்தது.

இந்த விஷயத்தைப் பற்றி இவ்வளவு சீக்கிரமாக அவளைக் கேட்டுவிடவும் எனக்கு தைரியம் பிறக்கவில்லை.

அன்றிரவு சாப்பாட்டுக்கு நாங்கள் மூவரும் சேர்ந்தே சென்றோம். நான் சாப்பிட்ட ரொட்டி, பழங்களுக்கு அவனே பணம் கொடுத்தான். அத்துடன் அவனாகவே என்னைப் பார்த்து, “எங்கே போய் வருகிறீர்கள்?” என்று புன்சிரிப்புடன் அபூர்வமாய் ஒரு கேள்வியைக் கேட்டான்.

“நவகாளியில் மகாத்மாஜியின் அஹிம்சா யாத்திரையில் கலந்துகொண்டுவிட்டுத் திரும்புகிறேன். நான் ஒரு பத்திரிகைப் பிரதிநிதி “ என்று பதில் கூறினேன்.

மகாத்மாவின் பெயரைச் சொல்லக் கேட்டதும் அவன் என்னிடம் பிரத்தியேக மதிப்பையும் மரியாதையையும் காட்டத் தொடங்கினான்.

வத்ஸலையும் நானும் அடிக்கடி கூடிப் பேசுவதையும் அந்த ஆசாமி தப்பர்த்தம் செய்துகொள்ளவில்லை. அவனுக்கு தமிழ் பாஷையும் தெரியாதாகையால், நாங்கள் இருவம் என்ன பேசுகிறோம், எதைக் குறித்துப் பேசுகிறோம் என்பதும் அவனுக்கு விளங்கவில்லை. எனவே, நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனம்விட்டுப் பேசிக்கொள்ளுவதில் எந்தவித இடையூறும் இருக்கவில்லை.

3

“கல்கத்தாவில் பாலிகஞ்சில் எங்களுக்கு சொந்தமாக பங்களா இருக்கிறது. தாங்களும் அங்கே வந்து தங்கிப் போகலாமே” என்று என்னைக் கேட்டுக்கொண்டாள்.

“நான் ஏற்கெனவே இன்னொரு தென்னிந்தியருடைய பங்களாவில் தங்குவதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறேன். பங்களா, ராஷ் பிஹாரி அவென்யூவில் இருக்கிறது. ஆனாலும், தாங்கள் விரும்பினால் தங்கள் வீட்டுக்கு ஒரு தடவை வருகிறேன். தங்கள் கணவருக்கு ஆட்சேபம் இருக்குமோ?” என்று கேட்டேன். வத்ஸலை சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவளுடைய கணவரின் நல்ல சுபாவத்தை நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுவதுபோல் இருந்தது.

“என் கணவரைப் பற்றித் தங்களுக்கு ஒன்றும் தெரியாது. உலகத்தில் அவரைவிட நல்ல சுபாவம்  படைத்தவரைக் காண்பது அரிது'' என்றாள்.

வத்ஸலையின் வார்த்தையில் உண்மையில்லாமலில்லை. அவனுக்கு அழகுதான் இல்லையே தவிர, குணத்தில் தங்கக்கம்பியாயிருந்தான். ஒருவேளை அவனுடைய குணத்திற்காகவே வத்ஸலை அவனை மணந்திருப்பாளோ என்றுகூடத் தோன்றியது.

“உன் கணவருக்கு கல்கத்தாவில் என்ன வேலை?'' என்று வத்ஸலையை விசாரித்தேன்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

“ஷேர் மார்க்கெட் முதலாளி. இப்போது வியாபாரம் சற்று மந்தம். கல்கத்தாவில் 'விபின் சந்திரர்' என்றால் ஷேர் மார்க்கெட்டே நிமிர்ந்து நிற்கும். அத்தனை செல்வாக்கும் சாமர்த்தியமும் வாய்ந்தவர் என் புருஷர்” என்று பெருமையுடன் கூறினாள் வத்ஸலை.

“இவரை தங்களுக்கு எப்படித் தெரியும்?'' என்று கையோடு ஒரு கேள்வியைக் கேட்டுவைத்தேன்.

வத்ஸலை சற்றுத் தயங்கினாள்.

“அதோ என் கணவர் குழாயடியிலிருந்து வருகிறார். ஆச்சு, கப்பலும் கரை சேரப்போகிறது. அங்கிருந்து ரயில் ஏறி கல்கத்தா போய்ச் சேர வேண்டும். இன்று நாலு மணிக்கெல்லாம் ஊர் போய்ச் சேர்ந்துவிடுவோம்'' என்றாள்.

அவள் சொன்னபடியே கல்கத்தாவை அடையும்போது சரியாக மணி நாலு ஆயிற்று. ஸ்டேஷனில் வத்ஸலையிடமும், அவள் கணவரிடமும் விடை பெற்றுக்கொண்டு ராஷ் பிஹாரி அவென்யூவுக்கு டாக்ஸி பிடிக்கப்போனேன். அந்தச் சமயம் வத்ஸலை தன் கணவனிடம் காதோடு ஏதோ சொன்னாள்.

இதற்குள் விபின் சந்திரர் என்னிடம் வந்து தம்முடைய கார் வந்திருப்பதாகவும் அதில் என்னை நான் போகவேண்டிய இடத்தில் கொண்டுபோய் விட்டுவிடுவதாகவும் கூறினார். அப்படியே என்னை காரில் ஏற்றிக்கொண்டு போய், நான் சேர வேண்டிய இடத்தில் விட்டுச் சென்றார்கள்.

அன்றைய தினமெல்லாம் எனக்கு எதிலும் புத்தி செல்லவில்லை. தூக்கமும் வரவில்லை. வத்ஸலையின் அதிசய வாழ்க்கையைப் பற்றியும், அவளுடைய கணவனைப் பற்றியுமே சிந்தித்துக்கொண்டிருந்தேன். இந்த வங்காளிக்காரனுக்கும் இந்தத் தமிழ்ப் பெண்ணுக்கும் எப்படிக் காதல் ஏற்பட்டது? எப்படிக் கலியாணம் நடந்தது என்ற பழைய சிந்தனையே மறுபடியும் மறுபடியும் தோன்றியது.

மறுநாள் மாலை மூன்று மணி சுமாருக்கு முதல் நாள் என்னைக் கொண்டு விட்ட கார் வாசலில் வந்து நின்றது. அதே டிரைவர்தான் இருந்தான். தன்னுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை என்னிடம் கொண்டு வந்து நீட்டினான். ஆவலுடன் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். அது வருமாறு:--

'அன்புள்ள………

தங்களைச் சந்தித்தது முதல் இதுவரை தங்களிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேச, பல தடவை முயற்சித்தேன். ஏனோ தடைப்பட்டுவிட்டது. என் கணவர் நேற்றிரவு புதுடெல்லிக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். டிரங்க் டெலிபோனில் வியாபார விஷயமாகச் செய்தி வந்தது. அவர் கல்கத்தா வர இன்னும் நாலு தினங்கள் செல்லும். தாங்கள் அவசியம் இங்கே புறப்பட்டு வந்தால் இங்கேயே இரண்டு தினங்கள் தங்கி, பிறகு போகலாம். நவகாளி ஜில்லாவில் தாங்கள் கண்ட அதிசயத்தையும் எனக்குச் சொல்லலாம்.

இப்படிக்கு

வத்ஸலை.'

கடிதத்தைப் படித்துவிட்டு வத்ஸலை அனுப்பிய காரிலேயே புறப்பட்டுச் சென்றேன். கார் பாலிகஞ்சிலுள்ள ஒரு பெரிய பங்களாவின் வாசலில் போய் நின்றது. வத்ஸலை எனக்காக வாசலிலேயே தயாராய்க் காத்துக்கொண்டிருந்தாள். நான் காரைவிட்டு இறங்கியதும், நேராக மேல்மாடிக்குச் சென்று அங்கிருந்து மூன்றாவது மாடியை அடைந்தோம். படிக்கட்டின் பிரதான வாசல்படியெல்லாம் விபின் சந்திரருடைய பலவிதமான போட்டோக்கள் மாட்டி வைக்கப்பட்டிருந்தன. வத்ஸலையின் 'கான்வகேஷன்' போட்டோவும் இன்னொரு இடத்தில் இருந்தது. எல்லா போட்டோக்களையும் ஒரு தடவை சுற்றி வந்து பார்த்தேன்.

வத்ஸலை ஒரு நாற்காலியைக் காட்டி என்னை உட்காரச் சொன்னாள். 'சப்ராஸி' பீங்கான் கோப்பை ஒன்றில் டீ கொண்டு வந்து கொடுத்தான். உபசாரங்கள் முடிந்ததும் வத்ஸலை சாவகாசமாக உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள். முதலில் என் நவகாளி யாத்திரையைப் பற்றிச் சொல்லும்படி ஆசையுடன் கேட்டுக்கொண்டாள்.

4

“நவகாளியில் கேள்விப்பட்ட  துயரமான ஒரு சம்பவம் என் மனதை வாட்டிக்கொண்டிருக்கிறது. அதைச் சொல்லட்டுமா?” என்று கேட்டேன்.

“சொல்லுங்களேன்” என்று ஆவலுடன் கேட்கலானாள். நான் சொல்ல ஆரம்பித்தேன்:

“தர்மாபூரில் மகாத்மாஜி தங்கியிருந்த சமயம் ஒரு நாள் பகல் பன்னிரண்டு மணி சுமாருக்கு எங்கிருந்தோ விருத்தாப்பிய தசையை அடைந்த ஸ்திரீ ஒருத்தி மகாத்மாஜியைத் தேடி வந்தாள். வந்தவள்

மகாத்மாஜியின் குடிசைக்குள் நுழைந்து நவகாளியில் நடந்த அட்டூழியங்கள் காரணமாக தனக்கு ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை கண்ணீர் உகுத்தவாறு கூறினாள். மகாத்மாஜியும் அவளுக்கு ஆறுதல் கூறி,யாருக்கோ கடிதமும் எழுதிக் கொடுத்தார். பாவம்! அந்தக் கிழவிக்குக் கணவன் இல்லையாம். இரண்டே பெண்கள் தானாம். அந்த இரண்டு பெண்களும் நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் தர்மாபூருக்கு வந்து அவளுடன் தங்கியிருந்த சமயம் காளியில் பயங்கரப் படுகொலைகள், தீ வைத்தல், சூறையாடல், கற்பழித்தல் முதலிய அட்டூழியங்கள் ஆரம்பமாகி ஜில்லா பூராவும் காட்டுத் தீ போல் பரவிற்றாம். யாரோ சில காலிக் கூட்டத்தினர் திடீரென்று அந்தக் கிழவியின் இல்லத்தையும் படையெடுத்துச் சூறையாடினார்களாம். கிழவியின் குமாரிகள் இருவரையும் கற்பழிக்க எண்ணியே அவர்கள் வந்திருக்க வேண்டுமென்பதை அறிந்த அந்தப் பெண்கள் இருவரும், தோட்டத்துப் பக்கமாகக் கதவைத் திறந்துகொண்டு கரிய இருட்டில் கல்லும் முள்ளும் நிறைந்த வனாந்திரப் பிரதேசங்களைக் கடந்து ஓடிவிட்டார்களாம். பெண்களைக் காணாத காலிக் கூட்டத்தினர் கிழவியை நையப் புடைத்துவிட்டுப் போய்விட்டார்களாம். தப்பி ஓடிச் சென்ற பெண்களில் ஒருத்தி அடுத்த கிராமத்தில் இருந்த ஒரு தனிகர் வீட்டில் சரண்புகுந்து தன்னைக் காலிக் கூட்டத்தினர் துரத்தி வருவதாகவும், ஆகையால் தனக்கு அபயம் அளித்துக் காப்பாற்ற வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டாளாம். கொள்ளைக் கூட்டத்தாருக்கு அஞ்சிய மேற்படி தனிகர் குடும்பத்தினர் அவளுக்குத் தஞ்சம் அளிக்க மறுத்துவிட்டார்களாம். இருந்தாலும் அந்தப் பெண் பிடிவாதமாக தானாகவே அறைக்குள் நுழைந்து உள்பக்கம் கதவைத் தாளிட்டுக்கொண்டாளாம். மறுநாள் காலை அவள் எப்படிச் சென்றாள், எங்கே சென்றாள் என்பது ஒருவருக்கும் தெரியவில்லையாம். தப்பிச் சென்ற இன்னொரு பெண் என்ன ஆனாள் என்பதும் யாருக்கும் தெரியவில்லையாம். இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதம் கழித்து அந்த இரண்டு பெண்களும் காலிக் கூட்டத்தினர் கையில் சிக்கி இருப்பதாக கிழவிக்குத் தகவல் கிடைத்ததாம். எனவே, பெண்கள் காலிக் கூட்டத்தாரிடையேதான் இருக்க வேண்டுமென்று கிழவி உறுதியுடன் நம்பினாள். தனக்கு உள்ள இரண்டே கண்மணிகளான இரண்டு பெண்களையும் தன்னிடம் சேர்க்க வேண்டுமென்றே கிழவி மகாத்மாஜியிடம் கண்ணீர் சிந்தியவாறு முறையிட்டுக் கொண்டாள். கிழவியின் துயரக் கதையைக் கேட்ட காந்திஜியும் அப்போது வங்காளப் பிரதமராயிருந்த ஜனாப் சுஹரவர்த்திக்கு இது விஷயமாக ஒரு கடிதம் எழுதித் தந்தார். கிழவி அதைப் பெற்றுக்கொண்டு மன ஆறுதலுடன் சென்றாள்” என்று முடித்தேன்.

கதையைக் கேட்டுக்கொண்டிருந்த வத்ஸலையின் முகத்தில் அவ்வப்போது அதிசயமான பாவங்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. கண்களில் நீர் பொங்கிப் பிரவகித்தது. சிற்சில சமயம் தலையை தன் இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டாள். ஒருவேளை வத்ஸலையின் இளகிய மனம் இதற்குக் காரணமாயிருக்குமோ என்று யோசித்தேன். இல்லை; ஒருவேளை அந்தக் கிழவியின் பெண்களில் வத்ஸலையும் ஒருத்தியா யிருப்பாளோ என்ற சந்தேகம். மறுகணம் ஏற்பட்டது. தனிகர் வீட்டில் சரண்புகுந்த பெண் இவளாயிருக்கலாமோ, மறுநாள் பொழுது விடிந்ததும் இந்த வீட்டு வங்காளிக்காரனிடம் ஓடி வந்திருப்பாளோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றியது. இதையெல்லாம் நினைக்கப் போக, கிழவி தமிழ்நாட்டு ஸ்திரீ போல் உடை உடுத்தியிருந்த ஞாபகமும் வந்தது. வத்ஸலை என்னைப் பார்த்து விசித்தவளாய் “அந்த மூதாட்டி இப்போது எங்கே போயிருப்பாள்?'' என்று பரபரப்புடன் விசாரித்தாள். வத்ஸலையின் பரபரப்பிலிருந்து நான் ஊகித்தது சரி என்பது ஊர்ஜிதமாயிற்று. எனவே, வத்ஸலையைப் பார்த்து தைரியமாக ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று நினைத்தேன். அதன்படி கேட்டும்விட்டேன்.

“தாங்கள் அந்தக் கிழவியின் புத்திரிகளில் ஒருத்திதானே ?”

வத்ஸலை தலையை அசைத்து அங்கீகரித்தாள். அதற்குப் பிறகு நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஆதியோடந்தமாக தன் விருத்தாந்தங்களையும், அந்தரங்கங்களையும் மனம்விட்டுச் சொல்லத் தொடங்கினாள்.

5

“நான் தமிழ்நாட்டுப் பெண். என்னுடைய தகப்பனார் இறந்துவிட்டார். வயது சென்ற தாயாரும், ஒரே ஒரு சகோதரியும்தான் இருக்கிறார்கள். தகப்பனார் நவகாளி, பாங்கி ஒன்றில் உதவி மானேஜராக இருந்தார். முன்னூறு ரூபாய் சம்பளத்தில், என் தமக்கைக்குக் கலியாணம் செய்தார். என்னை பி.ஏ. வரை படிக்கவைத்தார். நான் கல்கத்தாவில் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தேன். இப்போது மாமாவும் இறந்துவிட்டார். தகப்பனார் அதற்கும் மூன்று வருஷங்களுக்கு முன்பாகவே இறந்துவிட்டார். தர்மாபூரில் என் தகப்பனாருக்கு கொஞ்சம் நிலபுலன்களும், வீடு வாசலும் இருந்தன. எங்களுக்கு தமிழ்நாடுதான் பூர்வகுடி என்றாலும், இங்கே நவகாளிக்குக் குடியேறி ஐம்பது வருஷங்களுக்கு மேலாகிவிட்டன. என் தகப்பனார் இங்கேயே உத்தியோகம் செய்து இங்கேயே வாழ்க்கையை நடத்தி முடித்துவிட்டார். தாயாருக்கு வயதாகிவிட்டதால், தர்மாபூரிலேயே என் தகப்பனார் விட்டுப்போன சொத்து, சுதந்திரங்களை வைத்துக்கொண்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறாள்.

சென்ற டிசம்பர் மாதத்தில் நான் என் தாயாரைப் பார்க்க தர்மாபூருக்குச் சென்றிருந்தேன். அப்போது என் சகோதரியும் அவள் புருஷன் வீட்டிலிருந்து அங்கே வந்திருந்தாள். இந்தச் சமயத்தில்தான் திடீரென்று நவகாளியில் கலகம் மூண்டு எங்கள் குடும்பம் இத்தகைய கதிக்கு உள்ளாயிற்று” என்று கூறி வத்ஸலை தேம்பித் தேம்பி அழுதாள். 

வத்ஸலையின் துயரத்தை மாற்ற விரும்பிய நான், “விபின்சந்திரரைத் தாங்கள் மணந்தது எப்படி?” என்று இடையில் கேட்டுவைத்தேன்.

“நான் காலேஜில் படித்துக்கொண்டிருந்த சமயம், என்னை ஒரு மாணவன் காதலித்தான். அதன் காரணமாக நான் வீட்டிலிருந்து காலேஜிற்குச் செல்லும்போதும் காலேஜிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போதும், என்னைப் பின்தொடர்ந்தே வந்துகொண்டிருந்தான். அவன் பெயர் இப்போது எனக்கு ஞாபகமில்லை, விபின் சந்திரரைவிட நல்ல கறுப்பு. அவனைத் துச்சமாக நினைத்து, திரும்பியும் பார்க்கமாட்டேன். இதற்காக அவன் பல யுக்திகளைக் கையாண்டு என்னுடைய காதலைப் பெற விரும்பினான். நான் எதற்கும் இடம் கொடுக்கவில்லை. ஆனாலும் கலாசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் அவனைப் பார்க்காமல் செல்ல முடிவதில்லை. எவ்வளவு தூரம் நான் அவனை வெறுக்கிறேன் என்பதை அவனுக்குப் பல முறை ஜாடைமாடையாகவும் ஸ்பஷ்டமாகவும் காட்டினேன். ஆனாலும் அவன் தன்னுடைய முயற்சியைச் சிறிதும் விடவில்லை. அவனிடமிருந்து தப்புவதற்கு மார்க்கம் காணாமல் அவனை மனமாரச் சபித்தேன். மூன்றாவது கண் இருந்தால் எரித்தும்விட்டிருப்பேன்.

இதே சமயத்தில் என்னை இன்னொரு காலேஜ் மாணவரும். அந்தரங்கமாகக் காதலித்துக்கொண்டிருந்தார். அவர் என்னைக் காதலிக்கிறார் என்னும் ரகசியத்தை எனக்குத் தெரியாமலேயே அத்தனை பத்திரமாகக் காப்பாற்றி வந்தார். அவர்தான் இந்த விபின் சந்திரர். இவரும் என்னுடன் அப்போது காலேஜில் படித்துக்கொண்டிருந்தவர்தான். மற்றொரு மாணவன் என்னைக் காதலிக்கிறான் என்பதும் இவருக்குத் தெரிந்திருந்தது. எங்களுடைய காலேஜ் படிப்பெல்லாம் முடிந்தது. விபின்சந்திரர் டாக்டர் தொழிலுக்கு சிறிது காலம் படித்தார். நான் வீட்டோடு இருந்தேன். என்னைப் பகிரங்கமாகக் காதலித்த இன்னொரு மாணாக்கன் மட்டும் எனக்கு விடாமல் தொந்தரவு கொடுத்துக் கொண்டேயிருந்தான். அவன் தொந்தரவிலிருந்து விடுபட, எதையும் செய்யத் தயாராயிருந்தேன். இந்தச் சமயத்தில்தான் ஒரு நாள் விபின் சந்திரர் என்னைத் தனியாக ஓரிடத்தில் சந்தித்தார். இவரைப் பார்த்தபோது எனக்கு விஷயம் விளங்கிவிட்டது. இவரை நான் ஏற்கெனவே பல தடவை பார்த்திருந்த போதிலும் இம்மாதிரி எண்ணம் வைத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளவில்லை. சரி; மற்றொரு தொந்தரவு வந்திருக்கிறது என்று எண்ணிக்கொண்டேன். என்னைத் தனியாகச் சந்தித்த விபின் சந்திரர், 'உன்னிடம் ஒரு உண்மையைக் கூற வேண்டும்; அதற்காகவே வந்தேன்' என்று பீடிகை போட்டார்.

அவர் சொல்லப்போகும் விஷயத்தை எதிர்பார்த்தவள் போல, “என்ன விஷயம்?” என்று அலட்சியமாகக் கேட்டேன்.

'உனக்கு இதுவரை தொந்தரவு கொடுத்துக்கொண்டிருந்த அந்த மாணாக்கன் இறந்துவிட்டான். அவன் என்னுடைய நண்பன்தான். நான்தான் கொன்றுவிட்டேன்' என்றார். விபின் சந்திரர் இதைக் கூறியபோது, என் தேகம் ஒரு கணம் பயத்தினால் நடுங்கியது. அவர் பேச்சை என்னால் நம்ப முடியவில்லை.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

'வாஸ்தவமாகவா?' என்று கேட்டேன்.

'ஆமாம்; சத்தியமாகக் கொன்றுவிட்டேன். நீ இனி நிம்மதியாக வாழலாம். நான் டாக்டர் தொழிலுக்குப் படித்தேனல்லவா? அப்போது ஒரு விஷயத்தைக் கற்றுக்கொண்டேன். அவனுக்கு 'ஸொபோரோபிக்' என்ற மருந்தை உணவில் அதிகப்படியாகக் கலந்து கொடுத்துவிட்டேன். அவன் தூக்கத்தில் இறந்துபோனான். ஒருவருக்கும் ஒருவிதமான சந்தேகமும் ஏற்படவில்லை” என்று கூறி, பத்திரிகையில் அவன் இறந்துபோன செய்தியையும் எடுத்துக் காட்டினார்.

இந்தப் பயங்கர நிகழ்ச்சியை விபின்சந்திரர் வாயால் சொல்லக் கேட்டதும் முதலில் எனக்கு அவர் மீது அருவருப்பே தோன்றியது. அந்த மாணாக்கனைக் கொன்றுவிட்டால் என்னுடைய காதலைப் பெறலாம் என்ற சுயநல நோக்கத்துடனேயே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கிறார் என்பதை அறிந்தபோது விபின் சந்திரர் மீது ஆத்திரம் ஏற்பட்டது.

விபின்சந்திரர் என்னை இதுகாலம் வரை அந்தரங்கமாகக் காதலித்து வந்ததாகவும், அவருடைய காதலுக்குப் போட்டியாக இருந்த மாணாக்கனைக் கொன்ற பிறகே இந்த விஷயத்தை என்னிடம் வெளிப்படுத்துவது என்று தீர்மானம் செய்திருந்ததாகவும் கூறினார். இந்தக் கடும் சித்தக்காரரின் எண்ணத்துக்கு விரோதமாக நான் அபிப்பிராயம் தெரிவித்தால், இவரால் எனக்கே தீங்கு நேரிடும் என்பதை உணர்ந்தேன். அத்துடன் என்னுடைய பருவமும் அழகும் சேர்ந்து என்னை பல தொல்லைகளுக்கு உட்படுத்தின. 

வாலிபர்களும், வயது வந்தவர்களும் 'என்னை வெறிக்கப் பார்ப்பதும், காதலிப்பதும் அதன் காரணமாகத் தொந்தரவு கொடுப்பதும் தினசரி அலுவலாய்ப் போய்விட்டன. என்னுடைய வாழ்க்கையில், இதனால் அமைதியின்றி அல்லல்பட நேர்ந்தது. யாராவது மனதுக்குப் பிடித்த ஓர் ஆண்மகனைத் தேர்ந்தெடுத்து மணம் செய்துகொண்டாலன்றி இதற்கு விமோசனம் இல்லை என்று எண்ணினேன். ஆனால், என்னுடைய காதலைப் பெறுதற்குகுந்த புருஷனைத் தேடிப் பிடிப்பது அத்தனை சுலபமாயில்லை. அத்துடன் இந்தக் கல்நெஞ்சக்காரருடைய எண்ணத்துக்கு விரோதமாகக் காரியம் செய்வதற்கும் திடமில்லை. அப்படிச் செய்வது எனக்கே ஆபத்தாக முடியும் என்று அஞ்சினேன். எனவே, வேறொருவனை மணம் புரிந்து ஆயுள் முழுதும் அவஸ்தைப்படுவதைக் காட்டிலும் விபின் சந்திரரையே மணந்து நிம்மதியாகக் காலத்தைக் கழித்துவிடத் தீர்மானித்தேன். விபின் சந்திரர் அப்போது டாக்டர் தொழில் செய்யவில்லை. ஷேர் மார்க்கெட்டில் கொள்ளை அடித்துக்கொண்டிருந்தார். நல்ல சொத்து இருப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார். அவருக்கு நான் இல்லாத குறைதான் பெரும் குறை என்றும், தம்முடைய வாழ்க்கையின் லட்சியமே என்னை மணப்பது ஒன்றுதான் என்றும் கூறினார். எனவே, விபின் சந்திரரையே மணப்பதென்று முடிவுசெய்தேன். பிறகு, இருவரும் மணம் புரிந்தோம். எங்கள் வாழ்க்கையும் இன்பகரமாகவே நடந்துவந்தது. விபின் சந்திரரைப் பற்றி நான் கொண்டிருந்த எண்ணமெல்லாம் முற்றிலும் தவறு என்பதைப் பின்னால்தான் உணர்ந்தேன். அவருக்கு அழகில்லையென்றாலும் குணத்தில் தங்கக் கம்பியாயிருந்தார்.

நான் மணம் புரிந்த சில வருஷங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய தாயாரைப் பார்க்க தர்மாபூர் சென்றிருந்தேன். இந்த சமயத்தில்தான் நவகாளியில் பயங்கர வகுப்பு வெறி மூண்டது. என் தாயார் மகாத்மாஜியிடம் கூறிய சம்பவங்களும் அப்போது நடந்தவைதான்” என்று கூறி முடித்தாள்.

6

த்ஸலை சொன்ன வரலாறு ஒரு கதைபோலிருந்தது.

“அப்படியானால் தனிகர் வீட்டில் மறைந்து மறுநாள் தப்பி ஓடிய பெண் நீதானே?” என்று கேட்டேன்.

“இல்லை, இல்லை; அது என் சகோதரி. இப்போது சௌக்யமாக இருக்கிறாள். அவளைத்தான் நானும் என் கணவரும் போய்ப் பார்த்துவிட்டு வருகிறோம். அவள் எப்படியோ தப்பித்து ஷோனாய் முரி என்ற ஊரில் தன் கணவருடன் சௌக்யமாக வாழ்ந்து வருகிறாள்'' என்றாள்.

வத்ஸலையைப் பார்த்து “நீ ஏன் இதுவரை உன்னுடைய தாயாரைப் போய்ப் பார்க்கவில்லை? '' என்று கேட்டேன்.

“தர்மாபூருக்குச் செல்ல பயந்துகொண்டே தாயாரைப் பார்க்காமல் இருக்கிறேன். காரணம், தர்மாபூரில் இன்னும் கலவரம் அடங்கவில்லை. வயது சென்ற தாயாரை நினைத்தே அன்று கப்பலில் கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தேன். அவளை இனி உயிருடன் காண்பது ஏது? இதற்குள் காலிக் கூட்டத்தார் கொன்று போட்டிருப்பார்கள் என்று தீர்மானித்துக்கொண்டேன். என் ஆறாத்துயரத்தை ஒருவரிடமும் சொல்லிக்கொள்ள விருப்பமின்றியே நதியில் மூழ்கி உயிரைவிடும் பொருட்டு மேல்தளத்திலிருந்து குதித்தேன். எப்படியோ ஆயுள் பலம் கெட்டியாக இருந்ததால் உயிர் மேல் ஆசை தோன்றி, நதியில் குதித்தவள் சட்டென்று கப்பலைப் பிடித்துக்கொண்டு ஏறி, யாருக்கும் தெரியாமல் எங்கிருந்து குதித்தேனோ அந்த இடத்துக்கே வந்து நின்றுவிட்டேன். அப்போதுதான் தாங்கள் அந்தப் பக்கம் வந்தீர்கள்” என்றாள்.

வத்ஸலை சொன்ன விவரங்களைக் கேட்டுக்கொண்டுவந்த எனக்கு, மேலும் இரண்டொரு சந்தேகங்கள் தோன்றவே சில கேள்விகள் கேட்டேன்:

''வத்ஸலை! உன் தாயார் இறந்துபோயிருப்பாள். என்று நீயாகவே எப்படி முடிவுசெய்துவிட்டாய்?''

“சம்பவம் நடந்து இரண்டு மாதங்களாகியும் என் தாயாரைப் பற்றி எந்தவிதமான தகவலும் தெரியவில்லை. ஆகையால் காலிக் கூட்டத்தாரால் கொல்லப்பட்டிருப்பாள் என்று முடிவுக்கு வந்தேன். தாங்கள் என் தாயாரை மகாத்மாஜியிடம் பார்த்ததாகச் சொல்லுவதிலிருந்து இதுவரை அவளைக் காலிக் கூட்டத்தார் பிடித்து வைத்திருந்தார்கள் என்ற எண்ணம் ஏற்படுகிறது'' என்றாள்.

“வத்ஸலை! உன் தாயார் ஏன் உன்னை இந்த இடத்தில் வந்து பார்த்திருக்கக் கூடாது?'' என்று கேட்டேன்.

“பார்வையிழந்த என் தாயாருக்கு, இந்த கல்கத்தா பட்டணம் எந்தத் திக்கில் இருக்கிறது என்றே தெரியாது. அப்படியிருக்க அவள் என்னை எங்கே போய்த் தேடி அலைவாள்? காந்தி மகாத்மாவே என் தாயார் இருந்த ஊருக்கு விஜயம் செய்ததால் அங்கே அவரைக் கண்டு முறையிட்டுக் கொண்டிருக்கிறாள்'' என்றாள்.

வத்ஸலை சொல்லியது வாஸ்தவம் என்றேபட்டது.

வத்ஸலையின் வாழ்க்கையைப் பற்றிப் பூரணமாகத் தெரிந்துகொண்ட பிறகு வத்ஸலைக்காக ஓர் உபகாரம் செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தில் ஆவல் எழுந்தது. அடுத்த மூன்று தினங்களுக்குள் அதைப் பூர்த்திசெய்தேன். தர்மாபூருக்கு உடனே புறப்பட்டுச் சென்று வத்ஸலையின் தாயாரைத் தேடிப் பிடித்து அழைத்து வந்து வத்ஸலையிடம் சேர்த்தேன். கன்றின் குரல் கேட்டுக் கனிந்து வரும் பசுபோல் வத்ஸலையின் தாயார் ஓடிவந்து மகளைக் கட்டிக்கொண்ட காட்சியை என்றென்றும் மறக்க முடியாது.

மறுதினம் வத்ஸலையின் கணவரும் ஊரிலிருந்து திரும்பி வந்துவிட்டார். அன்றைய தினம் வத்ஸலையின் பங்களாவில் எனக்கு ரஸகுல்லாவுடன்கூடிய விருந்து உபசாரம் நடைபெற்றது என்று சொல்லவும் வேண்டுமா?

(முற்றும்)

(அடுத்த கதையை வாசிக்கத் தயாராகுங்கள்...)