அத்தியாயம் 1
அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் அவரது அபாரமான ஸ்தோத்திர மொழிகளைக் கேட்டு விலக்க இயலாத ஆனந்தபரசவம் அடைந்தவளாய், அவரை நோக்கி மந்த ஹாஸம் செய்து, “ஸ்திரீகளை ஸ்தோத்திரம் செய்வதில் தாங்கள் நிரம்பவும் பாண்டித்தியம் அடைந்தவர்கள் என்பது இப்போதே தெரிகிறது. அந்த விஷயத்தில் முதல் தாம்பூலம் பெற அருகமுள்ளவர்கள் தாங்கள்தான் என்பதும் நன்றாக விளங்குகிறது.”
“எந்த விஷயத்திலும் பழக்கந்தான் பிரதானம். ஒரே வித்தையில் பழகுகிறவர்களுக்கு அதில் பாண்டித்தியம் உண்டாவது நிச்சயம். தாங்கள் என்னிடம் செய்தது போல இதற்கு முன் பல ஸ்திரீகளிடத்திலும் இதே மாதிரி முகஸ்துதியாகப் பேசிப் பேசி இவ்வளவு முதன்மை அடைந்திருக்கிறீர்கள். சிற்றின்பம் பேரின்பம் ஆகிய இரண்டையும் உண்டாக்கிக் கொடுக்க உபயோகப்படும் தெய்வம் என்று என்னை இப்போது புகழ்ந்தது போல இதற்கு முன்னும் எத்தனையோ பெண் தெய்வங்களைத் தாங்கள் புகழ்ந்திருப்பீர்கள்;”
“இனிமேலும் யாராவது புதியவளாக அகப்பட்டால், அவளையும் இப்படியேதான் புகழப் போகிறீர்கள்; இந்த ஊர் மகாராஜாவின் அத்தை மகள் என்று வேஷம் போட்டுக் கொண்டு என்னிடம் வந்து தாங்கள் இந்நேரம் நடித்தது போல இன்னம் எத்தனை இடங்களில் செய்திருப்பீர்களோ! ஆனால் என் மனசில் முக்கியமான ஒரு சந்தேகம் உதிக்கிறது; தாங்கள் இந்த ஊர் மகாராஜாவின் அத்தை மகளென்று நடித்தது எப்படிப் பொய் வேஷமாக மாறியதோ, அதுபோல, அப்போது சொன்ன வார்த்தைகளும் வெறும் வார்த்தைகளாக அந்த வேஷத்தோடு மறைந்து போய் விடுமோ என்ற ஒரு சந்தேகந்தான் என் மனசில் எழுந்து வதைக்கிறது” என்றாள்.
அதைக் கேட்ட இளவரசர் அசட்டு நகையாக நகைத்து, “கண்ணே! அப்படியெல்லாம் என்னைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொள்ளாதே; நான் சுயரூபத்தோடு இங்கே வந்தால், நீ என்னை உள்ளே சேர்க்க மாட்டாய் என்று நினைத்து நான் இப்படி என்னை மறைத்துக் கொண்டு வந்தேனேயன்றி வேறல்ல. நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் மனப்பூர்வமாகச் சொன்ன வார்த்தைகளே யொழிய வேறல்ல.”
“நான் செய்த வாக்குறுதியை நான் ஓர் இம்மியளவும் மீறி நடக்கவே மாட்டேன். அந்த விஷயத்தில் உனக்கு எப்படிப்பட்ட உறுதி வேண்டுமானாலும் நான் மறுபடியும் செய்து கொடுக்கத் தடையில்லை. நீ சொல்வது போல, நான் இதுவரையில் எத்தனையோ ஸ்திரீகளை முகஸ்துதி செய்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால், அதில் ஒரு விஷயம் இருக்கிறது. சில ஸ்திரீகள் வெளிப்பார்வைக்கு மகா அபூர்வமான அழகு வாய்ந்து கந்தருவ ஸ்திரீகள் போல இருந்தார்கள். அவர்களைக் கண்டவுடனே என் மனம் சலித்தது உண்மைதான்; நான் அவர்களை ஸ்தோத்திரம் செய்து, அவர்களுடைய சிநேகத்தைச் சம்பாதித்துக் கொண்டதும் உண்மைதான்.”
“ஆனால், ஸ்திரீகள் புருஷருடைய நீடித்த காதலையும், வேரூன்றிய பிரேமையையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமானால் அவர்களிடம் உடம்பின் அழகு ஒன்று மாத்திரம் இருப்பது போதாது. பொன்மலர் நாற்றமுடைத்து என்பது போல, வெளி அழகோடு, அவர்களிடம் உத்தம லட்சணங்களும், குணத்தழகும், நடத்தை அழகும், நயமாக வார்த்தை சொல்லும் திறமையும் புத்திசாலித்தனமும் நிறைந்திருக்க வேண்டும். அற்பத்தனம், பொறாமை, துர்க்குணம், பிடிவாதம், கோபம், மூர்க்கம் முதலிய துர்க்குணங்கள் இருக்கவே கூடாது. அப்படிப்பட்ட ஸ்திரீகள் தான் கலியாண குணங்கள் நிறைந்தவர்கள் ஆவார்கள்.”
“ஸ்திரீகளுடைய வெளியழகின் கவர்ச்சி பழகப் பழகக் குறைந்து போகும். புருஷர் முதலில் வெளி அழகினால் கவரப்படுகிறார்கள். ஆனாலும், அவருடைய பிரேமை நீடித்து நிற்பதற்கு ஸ்திரீகளிடம் மற்ற சகலமான கலியாண குணங்களும் இருப்பது அத்தியாவசியம். முதலில் அழகின் கவர்ச்சியினால் ஏற்பட்ட பிரேமையை, மற்ற உத்தம லக்ஷணங்களின் கவர்ச்சிதான் வளர்த்து நிலை நிறுத்திக்கொண்டு போக வேண்டும். அப்படி இல்லாமல், வெறும் அழகு மாத்திரம் இருந்து, அறிவும் குணங்களும் சூன்யமாக இருந்தால், அப்படிப்பட்ட ஸ்திரீகளும், உயிரற்ற சித்திரப் பதுமைகளும் ஒன்றுதான்.”
“அவர்களிடம் சில நாட்கள் பழகும் முன்னர் வெறுப்பும் பற்றின்மையும் ஏற்பட்டுவிடும். அதுபோலவே தான், நான் இதுவரையில் தேடிப்பிடித்த ஸ்திரீகள் எல்லாம் இருந்தார்கள். ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் நீடித்த பிரேமையும் வேரூன்றிய காதலும் ஏற்படவில்லை. உன்னிடத்தில் உடம்பின் அழகோடு, புத்தியின் அழகும், குணத்தின் விசேஷமும் பூர்த்தியாக நிறைந்திருக்கின்றன என்பதை நான் சந்தேகமறத் தெரிந்த கொண்டிருக்கிறேன். ஆகையால், நான் துணிந்து இப்பேர்ப்பட்ட பெரிய பிரஸ்தாபங்களை யெல்லாம் செய்தேன்.”
“உன்னை நம்பி நான் என்னுடைய உடல், பொருள், ஆவியாகிய சகலத்தையும் உன்னிடம் ஒப்புக் கொடுக்கலாம் என்ற ஓர் எண்ணம் உன்னைப் பார்க்கும்பொழுதே என் மனசில் தானாக உண்டாகிறது. இதில் எவ்விதக் கெடுதலும் ஏற்படாது என்ற ஒரு நிச்சயமும் என் மனசில் உண்டாகியிருக்கிறது. ஆகையால், என்னுடைய வாக்குறுதி பொய்க்கும் என்றாவது, அல்லது, மற்றவர்களை நான் புறக்கணித்தது போல சொற்ப காலத்தில் உன்னையும் புறக்கணித்துவிட்டு இனி வேறொருத்தியை நாடுவேன் என் றாவது நீ கொஞ்சமும் சந்தேகப்படவே வேண்டாம்”
என்று நிரம்பவும் உருக்கமாகக் கூறியவண்ணம் மெதுவாகத் தமது ஆசனத்தை விட்டு எழுந்து, பூர்ணசந்திரோதயம் நின்ற இடத்திற்குப்போய், மிகுந்த ஆவலோடு அவளைப் பிடித்து இழுத்து மார்போடு அணைத்து ஆலிங்கனம் செய்து முத்தமிட்டு சரஸ லீலைகள் புரியத் தொடங்க, தனது கோமளகரமான அற்புத மோகன வடிவத்தைச் சிறிது நேரம் வரையில் அவரது வசத்தில் விட்டு, செயலற்றுத் தத்தளித்து நாணத்தினாலும், வெட்கத்தினாலும் குன்றிக் குறுகி நின்ற பூர்ணசந்திரோதயம், திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு சடேரென்று தன்னை அவரது பிடியிலிருந்து விடுவித்துக்கொண்டு விலகி, தனது உடம்பில் விஷமம் செய்ய நீண்ட அவரது கரங்களைத் தனது இரண்டு கரங்களாலும் இறுகப் பிடித்துக் கொண்டு தனது வசீகரமான பல்வரிசைகளைக் காட்டி இனிமையாகக் கொஞ்சிக் கொஞ்சி,
“போதும், போதும் நிறுத்துங்கள். அப்புறம் ஆகட்டும். அவசரப்பட வேண்டாம். பக்கத்தில் என்னுடைய வேலைக்காரிகள் இருக்கிறார்கள். நீங்கள் யாரோ பெண்பிள்ளையென்று அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதால், அவர்கள் எந்த நிமிஷத்திலும் இங்கே வருவார்கள். நீங்களும் நானும் பட்டப்பகலில் இப்படித்த னியாக இருந்து இப்படிப்பட்ட தகாத காரியம் செய்து கொண்டிருப்பதைக் கண்டால், அவர்கள் என்னைப் பற்றியும் தங்களைப் பற்றியும் இழிவாகப் பேசி, அவதூறான வார்த்தைகளை ஊர் முழுதும் விதைத்துவிடுவார்கள்.”
“ஆகையால், இந்த மாளிகையில் நாம் எதையும் செய்யவே கூடாது. அங்கியால் மறைத்துக்கொண்டு வந்தது உண்மையில் தாங்கள் என்பதுகூட இவர்களுக்குத் தெரியக் கூடாது. ஆகையால், தாங்கள் என்மேல் தயை பாலித்து மறுபடியும் அங்கியால் தங்களை மறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு நான் ஆயிரங் கோடி நமஸ்காரம் செய்கிறேன். இப்போது தாங்கள் என் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்.”
“நான் இனி எப்போதும் தங்களுடைய அடிமை என்பதைத் தாங்கள் நிச்சயமாக நம்பலாம். தங்களுடைய மனம் போல நான் இனி எப்போதும் நடந்து கொள்ளுகிறேன். ஆனால், இப்போது மாத்திரம் தாங்கள் தங்களுடைய ஆவலை அடக்கிக் கொள்ள வேண்டுகிறேன். என்னுடைய வேலைக்காரிகள் வந்துவிடப் போகிறார்களே என்று என்னுடைய உடம்பு நடுங்குகிறது. போதும் போதும், நிறுத்துங்கள். அப்புறம் ஆகட்டும்" என்ற கெஞ்சிக் கூத்தாடினாள்.
அதைக் கேட்ட இளவரசர் மட்டுக்கடங்கா வேதனையும் மன எழுச்சியும் அடைந்து, மிக மிக உருக்கமாகவும் வாஞ்சை யாகவும் பேசத் தொடங்கி, “ஆ! பூர்ணசந்திரோதயம்! என்னை நீ இப்படியும் கொல்லுவாயா! இத்தனை நாளாக உன்னை நினைத்து நினைத்து என்னுடைய உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டது. இப்போது உன்னுடைய அருள் நோக்கம் எனக்கு ஏற்பட்டும், என் மனக்குறை தீரவில்லையே! உன்னுடைய உட்கருத்து இன்னதுதான் என்பதைச் சொல்லி விடு. நீ எனக்கு உயிர்ப்பிச்சை கொடுக்கப் போகிறாயா? அல்லது, நான் இப்படியே நரக வேதனைப்பட்டு மாண்டு போக விட்டுவிடப் போகிறாயா? என் கண்ணே! என் முத்தே! எங்கே? நிஜத்தைச் சொல்லிவிடு” என்று கூறியவண்ணம் ஏங்கித் தூரத்தில் நின்றார்.
உடனே பூர்ணசந்திரோதயம் அவருக்கு உற்சாகமும் மகிழ்ச்சியும் உண்டாகும்படி வசீகரமாகப் பேசத் தொடங்கி, “நாம் இருவரும் ஒன்றுகூடி நீடித்த காலம் சந்தோஷமாக வாழ வேண்டும். அதற்கு நாம் எந்தக் காரியத்தையும் நல்ல சுபகாலத்தில் தொடங்க வேண்டும். இன்றைய தினம் நாள் நன்றாக இல்லை. நாளைய தினம் வெள்ளிக்கிழமை நல்ல சுபதினம். ஆகையால், நாளைய தினம் ராத்திரி சரியாக ஒன்பது மணிக்கு இங்கே ஒரு பெட்டிவண்டி அனுப்பி வையுங்கள். அதில் ஏறிக் கொண்டு நான் நேராகத் தங்களுடைய அந்தப்புரத்துக்கு வந்து சேருகிறேன். என்னுடைய வண்டியில் நான் வந்தால், நான் இன்ன இடத்துக்குப் போகிறேன் என்பதை என்னுடைய வேலைக்காரர்கள் தெரிந்து கொள்வார்கள்.”
“ஆகையால், தாங்கள் ஒரு வண்டியை அந்தக் காலம் தவறாமல் அனுப்பி வையுங்கள். நான் அங்கே வந்து மற்ற சகலமான விஷயங்களையும் தங்களுடைய மனம் போல நிறைவேற்றி வைக்கிறேன். அதுவரையில் எப்படியாவது மகாராஜா பொறுத்து இந்த அடிமையின் மானத்தைக் காப்பாற்ற வேண்டும்'' என்று கிள்ளைபோல மழலையாகக் கொஞ்சி மொழிந்தாள்.
அதைக் கேட்ட இளவரசரது உற்சாகமும், குதூகலமும் அணை போடப்பட்டது போலச் சடக்கென்று மாறிப் போனது. ஆனாலும், அவள் மீது கொண்ட காமவேட்கையும், தாக வெப்பமும் அடங்காமல் மும்முரமாகவே இருந்தன. இருந்தாலும், அவளது விருப்பத்திற்கும் ஏற்பாட்டிற்கும் தாம் இணங்குவது அவசியமாகவும் தோன்றியது.
ஆகையால், இளவரசர் அவள் சொன்னதை ஒப்புக்கொண்டு, மறுநாள் அவசியம் வரவேண்டுமென்று அவளிடம் வாக்குறுதி பெற்றுக்கொண்டு கடைசி முறையாக அவளை இன்னொரு தரம் ஆசையோடு ஆலிங்கனம் செய்து விடைபெற்றுக்கொண்டு, தனது அங்கியை எடுத்து மறுபடியும் அணிந்தவராய் ஸ்திரீ நடப்பதுபோலத் தளர் நடை நடந்து ஜெகன்மோகன விலாசத்திலிருந்து வெளிப்பட்டு, ராஜபாட்டையில் நிறுத்தப்பட்டிருந்த தமது பெட்டி வண்டிக்குள் போய் உட்கார்ந்து கொள்ள, தாதியர் கதவை மூடிக்கொண்டு பின் பக்கத்துப் பலகையில் உட்கார்ந்து கொண்டனர்.
உடனே வண்டி புறப்பட்டு அரண்மனையை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. ஜெகன்மோகன விலாசத்தை விட்டு நெடுந்தூரம் போக, அப்போது இளவரசரது மனதில் தாம் மருங்காபுரி ஜெமீந்தாரோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தைப்பற்றிய நினைவு உண்டாயிற்று. அன்றைய தினம் இளவரசர் பூர்ணசந்திரோதயத்தின் ஜாகைக்கு வந்து அவளை நெருங்கிப் பார்க்கும் வரையில், அவரது மனம் அந்த ஒப்பந்த விஷயத்தில் ஒரே உறுதியாக இருந்தது. பூர்ணசந்திரோதயத்தை தாம் வென்று அவளை மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் கொடுத்துவிட வேண்டும் என்றும், அதற்கு கைம்மாறாக அவர் பார்சீ ஜாதி ஸ்திரீயை வென்று தமக்குக் கொடுத்துவிடுவார் என்றும் எண்ணிக்கொண்டே போனார்.
ஆனால், அவர் போய்ப் பூர்ணசந்திரோதயத்தின் வசீகர வடிவத்தைக் கண்ட தக்ஷணத்தில் அவரது மனதில் இருந்த பார்சீ ஜாதிப் பெண்ணின் வடிவம் சூரியன் முன் இருளென மறைந்து போய்விட்டது. அந்த இரண்டு பெண்மணிகளுள் மற்றவளைக் காட்டிலும், பூர்ணசந்திரோதயமே எல்லா அம்சங்களிலும் பதினாயிர மடங்கு சிறந்தவளாகவும், தமது மனதிற்கு உகந்தவளாகவும், தமக்கு நீடித்த ஆசை நாயகியாக இருப்பதற்குத் தகுந்தவளாகவும் காணப்பட்டாள்.
அவள் எப்போதும் தம்மோடுகூட இருந்தால், அவள் தமக்குப் பலவகையில் இன்பங்கொடுத்து சதா காலமும் தமது மனம் களிப்படைந்து இருக்கும் படி செய்யும் அபார வல்லமையும் அறிவு முதிர்ச்சியும் வாய்ந்தவள் என்பது இளவரசருக்கு நிச்சயமாகத் தெரிந்தது.
அவள் தமது விஷயத்தில் சுலபமாக வழிக்கு வந்தாலும், அவளது பிரியத்தை எல்லாம் அவள் மருங்காபுரிக் கிழவரின் மேல் திருப்பச் செய்வது எவருக்கும் அசாத்தியமான காரியம் என்று இளவரசர் நினைத்ததன்றி, தாம் அவளிடத்தில் அப்படிப்பட்ட பிரஸ்தாபம் செய்வது ஆண்மைத்தனம் ஆகாதென்றும், அவள்மீது தாம் கொண்ட மோக வேட்கையை அடக்குவதே முதலில் துர்லபமான காரியம் என்றும் நினைத்தார்.
பூர்ணசந்திரோதயத்திற்கும் தமக்கும் நடக்கும் சந்திப்பின் விவரங்களை யெல்லாம் அப்படியே வெளியிடுவதாகத்தாம் மருங்காபுரி ஜெமீந்தாருக்கு வாக்குக் கொடுத்திருந்ததும் அவருக்கு நினைவுண்டாயிற்று. ஆகையால், தாம் என்ன செய்வது, அவரிடம் என்ன சொல்வது என்ற கேள்விகள் உண்டாயின. பூர்ணசந்திரோதயத்தை அருகில் பார்த்து, அவளது அருமை பெருமைகளையெல்லாம் கண்கூடாகக் கண்டு அவளது சம்மதியைப் பெற்ற நிலைமையில் அவளை இனி இழப்பதைவிட, அவர் தமது ராஜபதவியையே இழக்கவும் சம்மதிக்கக் கூடியவராக இருந்தார்.
சல்லாயப் பட்டு அணிந்த பார்சீ ஸ்திரீயைச் சித்திரவதை செய்து கத்தியால் அணு அணுவாக அழித்தால்தான், அவரிடம் இருக்க இணங்குவதாகப் பூர்ணசந்திரோதயம் சொல்லுவாளாகில், அந்த மகா கொடிய காரியத்தையும், அவர் உடனே நிறைவேற்றிவிட்டுப் பூர்ணசந்திரோதயத்தின் பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்ளக் கூடியவராக இருந்தார். ஆகவே, பார்சீ ஜாதி மடந்தையினிடத்தில் அவர் வைத்திருந்த எண்ணமெல்லாம் அடியோடு மாறிவிட்டது.
இந்த உலகத்திலுள்ள சகலமான பார்சீ ஜாதி வடிவழகியர்களை யெல்லாம் விட பூர்ணசந்திரோதயம் ஒருத்தியே அழகிலும், மற்ற எல்லா மேம்பாடுகளிலும் நிகரற்ற நக்ஷத்திரச் சுடர் போன்றவள் என்ற உறுதியும், தாம் மற்ற எதை இழந்தாலும் அவளை மாத்திரம் இழக்காமல் அடைந்தே தீர வேண்டும் என்ற தீர்மானமும் இளவரசரது மனதில் உண்டாயின. ஆகையால், தாம் தமக்கும் மருங்காபுரி ஜெமீந்தாருக்கும் ஏற்பட்டிருந்த ஒப்பந்தத்தை நிவர்த்தி செய்து கொள்ளவேண்டுவதே முடிபென அவர் தீர்மானித்துக் கொண்டார்.
ஆனால், அந்த விஷயத்தைக் கிழவரிடம் எப்படி வெளியிடுவது; அவரைத் தமது கருத்திற்கு இணங்கும்படி எப்படிச் செய்வது? இனி பூர்ணசந்திரோதயம் தம்மோடு இருக்கப் போகிறாளென்பதை, கிழவரிடத்தில் மறைத்து வைப்பதும் அநுசிதமான காரியம். நெடுநாளாகத் தமது அந்தரங்க நண்பராக இருந்து தமது ரகசியங்களை யெல்லாம் அறிந்திருப்பவரான அந்தக் கிழவரது மன வருத்தத்தை உண்டாக்கிக் கொள்வதும் நல்லதல்ல என்று பலவாறு எண்ணமிட்ட இளவரசர், தாம் உடனே மருங்காபுரி ஜெமீந்தாரது வீட்டிற்குப் போய் அவரைக் கண்டு நயமாகப் பேசி அவரது மனம் வருந்தாதபடி தங்களது ஒப்பந்தத்தை நிவர்த்தி செய்து கொண்டு விடவேண்டுமென்ற தீர்மானம் செய்து கொண்டவராய், இளரவரசர் பெட்டிவண்டியை நேராக வடக்கு ராஜவீதிக்கு விடச் செய்தார்.
தம்மை மறைத்திருந்த பனாரீஸ் பட்டு அங்கியை விலக்கி வண்டிக்குள் போட்டு விட்டு, மருங்காபுரி ஜெமீந்தாரது மாளிகையின் வாசலில் போய் இறங்கி உள்ளே சென்று, உப்பரிகையில் வெல்வெட்டு மாடத்திலிருந்து தமது வருகையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த கிழ ஜெமீந்தாரிடம் போய்ச் சேர்ந்தார்.
- தொடரும்