அத்தியாயம் 1

92.19k படித்தவர்கள்
52 கருத்துகள்

இரவின் நிறம் வெண்மை 

ரவு விளக்கின் குளுமையான மெல்லிய நீல ஒளி அவளைச் சுட்டெரிப்பது போல் இருந்தது. ஊர் உறங்கும் அமைதியில், சுவர்க் கடிகாரத்தின் விநாடி ஓசைகள் பேரொலியாகக் கேட்டன. நிமிடங்கள் நகர்வது மணிகள், நாட்கள், வாரங்களைக் கடப்பது போல் ஆயிற்று. உறங்காத இரவுகளுக்கு யுகங்களின் நீளம் என்று சாமுத்ரிகா (23) எண்ணிக்கொண்டாள். காதலின், காமத்தின் உறங்காத இரவுகள் எனில் அவற்றுக்கு நீளம் குறுகிவிடும் என்றும்; பிரிவின், ஆற்றாமையின், வேதனையின் இரவுகளுக்கு நீளம் மிகுந்துவிடும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறாள். அவளுக்கு காதல், காமம் இரண்டின் அனுபவங்களும் இல்லை. ஆற்றாமையின் அனுபவம் மட்டுமே. அதுவும், திருமணம் ஆகி, முதல் இரவு என்று சொல்லப்பட்ட, ஆனால், அதற்குரிய காரியம் நிகழாத அந்தக் கருப்பு இரவு முதல் இன்று வரை, ஏழு மாதங்களாக நீடிக்கும் முடிவற்ற ஆற்றாமை.

உறங்காத இரவுகளை ஆங்கிலத்தில் வெண்ணிற இரவுகள் என்று சொல்வார்களாம். ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி, ‘வெண்ணிற இரவுகள்’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற நாவலை எழுதியிருக்கிறார். இதோ, இப்போது சாமுத்ரிகா சுவரில் சாய்ந்தவாறு கட்டில் மீது அமர்ந்து, முழங்காலைக் கட்டிக்கொண்டு, சோகமான சிந்தனைவயத்தில் ஆழ்ந்திருக்கிறாளே… அதற்கு வலது புறம், கதவை ஒட்டிவாறு இருக்கும் சுவர் அடுக்கறையில் உள்ள சில இலக்கிய நூல்களில் அதுவும் இருக்கிறது. தாஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் மற்றும் வேறு இரு நாவல்கள் கொண்ட தொகுப்பு, ஹெமிங்வேயின் போரே நீ போ, வைக்கம் முகம்மது பஷீரின் இளம் பருவத்துத் தோழி மற்றும் பாத்தும்மாவின் ஆடு போன்ற சில மொழிபெயர்ப்பு நாவல்கள், மோகமுள், அம்மா வந்தாள், சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற சில தமிழ் நாவல்கள், லா.ச.ரா., வண்ணதாசன் போன்ற சிலரின் சிறுகதைத் தொகுப்புகள் உட்பட மேலும் சில நூல்கள் அங்கே உள்ளன. அவை இளங்கோவுடையவை என்று மாமியார் கன்னிகா பரமேஸ்வரி தெரிவித்திருந்தாள். ஆனால், அவற்றில் பெரும்பாலும் மாதங்கி என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. அவை அவள் அவனுக்கு வாசிக்க இரவல் கொடுத்தவையாக இருக்கலாம். வெண்ணிற இரவுகள், இளம் பருவத்துத் தோழி ஆகியவற்றின் வெற்று முன் பக்கத்தில், ‘எனக்கு மட்டுமான இளங்கோவுக்கு’ என்று சாய்வான பெண் கையெழுத்தில் எழுதி, வேக வீச்சில் இதய வடிவப் புறக் கோடு கீறி, மாதங்கி இளங்கோ என்று ஆங்கிலத்தில் கையொப்பமும் இடப்பட்டிருந்தது.

சாமுத்ரிகாவுக்கு கதைகளோ, நாவல்களோ வாசிப்பதில் ஆர்வம் இல்லை. எனினும், திருமணம் ஆகி வந்திருந்த சமயத்தில், மாதங்கியின் அன்பளிப்பால் ஆர்வமாகியும், இளங்கோவின் ரசனையை அறிந்துகொள்ளவும், பொழுது போக்கவுமாக அந்த நாவல்களை வாசித்துப் பார்த்தாள். அதில் வெண்ணிற இரவுகள் அவனுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிந்தது. பல உணர்ச்சிகரமான வர்ணனைகள் மற்றும் வசனங்களுக்குக் கீழே பென்சிலால் அடிக்கோடிட்டு, பக்கவாட்டுகளில் தனது உணர்ச்சி மேலீட்டுக் கருத்துகளையும் எழுதி வைத்திருந்தான். கையெழுத்து மற்றும் எழுத்துப் பிழைகள் மூலம் அதைச் செய்தது அவன்தான் என்பதை இவளால் புரிந்துகொள்ள முடிந்தது. இளங்கோவுமே அந்த நாவலின் நாயகன் போன்ற குணாதிசியங்கள் கொண்ட கனவுலகவாசிதான். அதனால்தான் அந்த நாவல் அவனை மிகவும் பாதித்திருக்க வேண்டும். வெண்ணிற இரவுகள், கதாநாயகனின் உறங்காத இரவுகளை அடிப்படையாகக் கொண்ட, உணர்ச்சிகரமான கற்பனாவாதக் கதை. இங்கே உறங்காத இரவுகள் இவளுடையதாகிவிட்டன. இளங்கோ கீழே பாய் விரித்து, சுகமாகத் தூங்குவான். அல்லது பெரும்பாலும் போதையில் மயங்கியிருப்பான். இவள் இந்தக் கட்டிலில் படுத்துக்கொண்டோ அல்லது இது போல் அமர்ந்துகொண்டோ, நள்ளிரவுக்கு அப்பால் வரை உறக்கம் வராமல் வெதும்பிக்கொண்டிருப்பாள். 

படுக்கையில் மட்டும் அல்ல; சாதாரண அன்றாடப் பழக்க வழக்கங்கள் எதிலுமே அவர்கள் கணவன் – மனைவியாக இல்லை. அவன் அவளிடம் அப்படித்தான் நடந்துகொண்டான். கணவன் – மனைவிக்கு உரிய நெருக்கமோ, பாசமோ, அன்னியோன்யமோ அவனிடம் இல்லை என்பது மட்டுமல்ல; அவன் அவளிடம் சாதாரண அன்பைக் கூட காட்டுவதில்லை. அவளிடம் பேசுவதோ, பழகுவதோ இல்லை. அவ்வளவு ஏன், ஒரு வேலைக்காரி என்கிற அளவுக்குக் கூட அவளிடம் எதையும் பேசுவதோ, செய்விப்பதோ கிடையாது. அவனது வீட்டுக் காரியங்களை அவனே செய்துகொள்வான் அல்லது திருமணத்துக்கு முன்பு போலவே தாயிடம் கேட்கவும் சொல்லவும் செய்வான். அவனுக்கு உணவு பரிமாறவோ, காஃபி கொடுக்கவோ மாமியார் இவளைச் செய்விக்கும்போதும் அதை விரும்பாமல் இவளை சகல விதத்திலும் புறக்கணிப்பான்.

அவன் அவளை வெறுக்கவில்லை; ஆனால், விரும்பவும் இல்லை. 

அவள் யாரோ, தான் யாரோ என்பதாகவே விட்டு விலகியிருந்தான். இரண்டு தனிமைகள் அருகருகே வசிக்கும் அறையாகத்தான் அவர்களின் இந்தப் படுக்கையறையும் இருந்தது.

திருமணமானது முதல் இப்போது வரை இவள் தனித்து உறங்குவதும், உறங்காமல் நெடு நேரம் ஆற்றாமையோடு விழித்திருப்பதும், அவ்வப்போது இது போல் அவனுக்காகக் காத்திருப்பதும். வாடிக்கையாக அல்ல; வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.

* * * 

ன்று 2001 ஆகஸ்ட் 17, ஆவணி 1.

ஒரு மாதம் முன்பு, ஆடி விலக்குக்காக சாமுத்ரிகாவை பிறந்த வீட்டுக்கு அவளின் அம்மா தெய்வாத்தாள் அழைத்துச் சென்றிருந்தாள். நேற்றோடு ஆடி மாதம் முடிந்துவிட்டது. இன்று திரும்பக் கொண்டுவந்து விட்டுச் சென்றிருந்தாள்.

இன்று ஆவணி ஒன்றாம் தேதி வெள்ளிக் கிழமையிலேயே வருவதால், சாமுத்ரிகாவைத் திரும்பக் கொண்டுவந்து விடுவதற்கு நாளைத் தள்ளிப் போடாமல், இந்த நன்னாளிலேயே அழைத்து வந்துவிடும்படி தெய்வாத்தாளிடம் சாமுத்ரிகாவை அழைத்துச் செல்லும்போதே கன்னிகா சொல்லியிருந்தாள். அவள் ஜாதகம், நல்ல நேரம் – கெட்ட நேரம் ஆகியவற்றில் சற்று நம்பிக்கை கொண்டவள். எப்போதும் அதைப் பார்க்கிறவள் அல்ல. அவசியமான சந்தர்ப்பங்கள், கஷ்ட காலங்கள் ஆகியவற்றின்போது நாட்காட்டியையோ, ஜோதிடர்களையோ அணுகுவாள். புது மணத் தம்பதியினரின் ஆடி விலக்கம் சாதாரணமான வரவு - போக்கு போல அல்ல; சம்பிரதாய ரீதியானது. மேலும், சாமுத்ரிகா இங்கிருந்து செல்வதை விட, அவள் திரும்பி வரும் நாள், நேரம் ஆகியவை முக்கியமானவை. எனவே, கன்னிகா நாட்காட்டியில் நல்ல நேரம் பார்த்துவிட்டு, “இந்த வருசம் ஆவணி ஒண்ணு, வெள்ளிக் கெளமையன்னைக்கே வர்றது நம்ம நல்ல நேரம்னுதான் தோணுது. இல்லாட்டி நாள் தள்ளி, புதன் கெளமையன்னைக்குத்தான் வரச் சொல்லியிருப்பேன். நீங்க ஆவணி ஒண்ணு, வெள்ளிக் கெளமை வெடியால ஏளு மணிக்கெல்லாம் வந்துருங்கொ. ஏள்ரைல இருந்து ஒம்பதே பத்து வரைக்கும் குளிகை. அதனால, அதுக்கு முன்னாடியே வந்தரோணும். பலகாரம் (சிற்றுண்டி) சாப்படறக்கெல்லாம் நின்னுட்டிருக்க வேண்டாம். இங்கயே உங்குளுக்கும் சேத்தி செஞ்சு வெச்சர்றன். ஆடி முடிஞ்சு, ஆவணிலருந்து எல்லாம் நல்லதா நடக்குட்டும்!” என்று சொல்லியிருந்தாள். 

அவள் சொன்ன விஷயம் அவர்களுக்கும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 

அதன்படியே இன்று காலை சுமார் ஏழேகால் மணி வாக்கில் இவளும் தாயாரும் வந்துவிட்டனர். மாமனாரும் மாமியாரும் இவர்களை வரவேற்று குசலம் விசாரித்துப் பேசிக்கொண்டிருக்கையில், வெளியே உள்ள குளியலறையில் குளித்துவிட்டு, லுங்கியும், வெற்று உடம்பில் போர்த்திய ஈரத் துண்டுமாக இளங்கோ (29) உள்ளே வந்தான். கருப்பு எனினும் அவனுக்கு களையான முகம் என்று எல்லோருமே சொல்வார்கள். சிறிதளவு மது – கட்டிங் எனப்படுகிற, கோட்டரில் பாதி அளவான 90 மில்லி - அருந்தினாலே அவனுக்கு முகம் இறுகி, களை இழக்கத் தொடங்கிவிடும். அதைப் பார்த்தாலே, அவன் மிகுந்த நிதானத்தில் இருந்தாலும், மது அருந்தியிருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். மது அளவும், போதை அளவும் அதிகமாக ஆக, முகம் பிணக் களையே கொண்டுவிடும். போதை மிதப்பில் அவன் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருந்தாலும், அப்போது அவனது முக இறுக்கத்தையும், அந்தப் பிணக் களையையும் பார்க்க சகிக்காது. நேற்று எந்த அளவுக்குக் குடித்தானோ, குளியல் முடிந்த பின்னும் இரவின் போதை மிச்சம் அவனது கண் சிவப்பிலும், முக இறுக்கத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது.

தெய்வாத்தாளைப் பார்த்து, “வாங்க அத்தே!” என்று உணர்ச்சியற்று சம்பிரதாயமாகச் சொல்லிவிட்டு, இவளிடம் எதுவும் சொல்லாமல், கூடத்தை ஒட்டியுள்ள இவர்களின் அறைக்குள் சென்றுவிட்டான்.

இவளுக்கும் மற்றவர்களுக்கும் அது சங்கடத்தை உண்டாக்கியது.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கைலாசநாதன் செய்வதறியாது நின்றார். அதைக் கண்ட கன்னிகா, உடனே அதைச் சமாளிக்கும் விதமாக, “நீ சூட்கேஸை எடுத்துட்டு உள்ள போ சாமுத்திரிகா!” என்றாள்.

இவளும் சூட்கேஸை எடுத்துக்கொண்டு அறைக்குள் கொண்டுவந்து வைத்துவிட்டு, மீண்டும் கூடத்திற்குச் சென்று, அம்மா சுமந்து வந்திருந்த, இவளின் மிச்ச துணிகள் அடங்கிய பயணியர் பையையும் எடுத்து வந்து வைத்தாள். 

தன்னைக் கண்டவுடன் இளங்கோ ஒரு வார்த்தை கூட பேசாதது அவளுக்கு பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளித்திருந்தது. அவனைப் பற்றி தனக்குள் எவ்வளவு வேதனைகள், துயரங்கள் இருந்தாலும் அவற்றை மறைத்துக்கொண்டு, ஒரு மாதத்துக்குப் பிறகு புகுந்தவீடு திரும்புகிற உற்சாகத்தில், அவனைக் காண்பதற்கு எவ்வளவு ஆவலாக அவள் வந்திருந்தாள்! அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட அவனிடம் இல்லையே!

போகட்டும்! அது கூட பரவாயில்லை. இவர்களுக்குள் உள்ள நெருக்கமின்மை இவளின் மாமனார் – மாமியார் இருவருக்கும் தெரிந்ததே. ஆனால், இவளின் அம்மாவுக்கு அது தெரியாது. முதல் முறையாக இதை அவள் காண நேர்ந்திருக்கிறது. இங்கே நடந்துகொண்டிருக்கும் அந்தரங்கம் எதையும் சாமுத்ரிகா அவளிடம் சொன்னதில்லை. இளங்கோ இன்னும் குடிப் பழக்கத்தை விடவில்லை என்றாலும், தங்களுக்குள் இயல்பான வாழ்க்கை நடந்துகொண்டிருப்பதாகவே அவளிடமும், அண்டை அயலாரிடமும் சொல்லியிருந்தாள். இப்போது ஒரு மாதம் கழிந்து வீடு திரும்பியிருக்கும் இவளிடம் அவன் எதுவும் பேசாததைக் கண்டு அம்மா என்ன நினைப்பாளோ, ஏதேனும் சந்தேகப்படுவாளோ என்று கவலையாக இருந்தது. அவள் முன்னிலையில் நடிப்பாகவாவது அவன் இவளிடம் சில வார்த்தைகள் பேசியிருக்கலாம். அல்லது வா என்று ஒற்றை எழுத்தில் ஒரு வார்த்தை; அல்லது அது கூட வேண்டாம், முகம் பார்த்து, பொய்யாகவாவது ஒரு புன்னகை. அதைக் கூட செய்யாமல், இவளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் வந்துவிட்டானே என்ற துக்கம் தொண்டையை அடைத்தது. 

கூடத்தில் மாமியாரும் அம்மாவும் உரையாடிக்கொண்டிருப்பது கேட்டது.

கன்னிகா தெய்வாத்தாளிடம், “எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அவன் குணம் இன்னும் மாறவே மாட்டேங்குது. மத்தவீக கூடன்னு இல்ல; எங்க கூடவே செரியாப் பேச மாட்டான். எதாச்சு தேவைங்கும்போது அத்தியாவசியத்துக்கு ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசறதோட செரி. சின்ன வயிசுல இருந்தே அப்புடித்தான். சாதாரணமா அப்புடி இருக்கறது கூடத் தேவுல. வீட்டுக்கு ஆராச்சு ஒறம்பறைக வந்தா, ‘வாங்க’ன்னு சொல்லோணும், குசலம் விசாரிக்கோணும்கறது கூடக் கெடையாது. இதனால எங்க சொந்த பந்தத்துல கூட நெறையப் பேருக்கு சங்கட்டம். அவன் குணம் அப்புடின்னு தெரிஞ்சதுனால அப்பறம் அவுங்குளும் அதையக் கண்டுக்கறதில்ல. அவன் செரியாப் பேசுலயேன்னு நீங்களும் ஒண்ணும் தப்பா நெனைச்சுக்காதீங்க சம்மந்தியம்மா!” என்று மன்னிப்புக் கோரும் தொனியில் கேட்டுக்கொண்டாள். 

“அய்யய்யோ…! அப்புடியெல்லாம் ஒண்ணும் இல்லீங்க. மாப்பளையோட கொணம், பளக்க வளக்கம் இப்புடியிப்புடின்னு மொதல்லயே நீங்க ரெண்டு பேரும் சொல்லியிருக்கறீங்களாச்சு! அதும்மில்லாம சாமுத்திரிகாவும் நெறைய சொல்லியிருக்கறா. அவுரை மாற ஆர்ட்டிஸ்ட்டுக, எளுத்தாளருக, சிந்தனையாளருக எல்லாம் பெரும்பாலும் அப்புடித்தான் – தனிமைய விரும்புவாங்க, மத்தவீக கூட அதிகமா பளக்க வளக்கம் இருக்காது, தானுண்டு – தன்னோட சோலி உண்டுன்னு இருப்பாங்க, எந்த வம்பு – தும்புக்கும் போக மாட்டாங்க, யாரு கூடவும் அதிகமாப் பேச மாட்டாங்கன்னு மத்தவங்களும் சொல்றதை மொதல்லயே கேட்டிருக்கறன். நம்மளையாட்ட சாமானியமானவீகள்லயே ஒவ்வொருத்தரு அப்புடித்தான். எங்க சொந்தத்துலயே, காலேஜ் படிச்சுட்டிருக்கற ஒரு பையன் இப்புடித்தான். என்னேரமும் ரூம்புக்குள்ளயே அடைஞ்சு கெடப்பான். மத்த பசக மாற பிரண்டுக கூட சாலியா இருக்கறது, ஊரு சுத்தறது, வெளையாட்டு – கிளையாட்டு எதுவும் இருக்காது. அவனாப் பேசவும் மாட்டான்; நாமளா ஏதாச்சு கேட்டாலும், ‘ம்’, ‘ஓ!’ ‘ஆமா’, ‘இல்ல’ன்னு ஒத்தை எளுத்துல, ஒத்தை வார்த்தைலயே பதில் சொல்லுவான்” என்று – உள்ளுக்குள் வருத்தத்தை மறைத்துக்கொண்டு - அவளும் சகஜம் காட்டினாள். 

அதைக் கேட்டு சாமுத்ரிகாவுக்கும் சற்றே ஆசுவாசம்.

சாமுத்ரிகாவை இளங்கோ வரவேற்காதது பற்றியோ, வேறெதும் கேட்கவோ சொல்லவோ செய்யாதது பற்றியோ அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அனைவருக்கும் அது உறுத்தலாக இருந்தாலும், அதைக் காட்டிக்கொள்ளாமல் தவிர்க்கிறார்கள் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. 

இப்போதேனும் ஏதாவது பேசுவானா என்ற எதிர்பார்ப்புடன், அவனைப் பார்த்தபடி நின்றாள். பீரோவிலிருந்து வெள்ளை பனியனையும், சிவப்பு, மஞ்சள் கருப்பு என பல வண்ண பெய்ன்ட் துளிகள் சிறிதும் பெரிதுமாக ஆங்காங்கே படிந்துள்ள சட்டையையும் எடுத்து அணிந்துகொண்ட அவன், அவளைக் கண்டுகொள்ளவே இல்லை.  அடுத்ததாக, பீரோவைச் சாத்திவிட்டு, அதில் பதிக்கப்பட்டுள்ள நீள் கண்ணாடியில் பார்த்தபடி தலை வாரிக்கொண்டிருந்தான். அவன் இவளிடம் பேசுவான் என்று தோன்றவில்லை. நாமாவது பேசலாமா என யோசித்துக்கொண்டிருந்தாள்.

சாமுத்ரிகா சாந்த சுபாவி. இந்த 21ஆம் நூறாண்டிலும் அச்சம், மடம், நாணம் வகையறா. குடும்பப் பாங்கான குண நலன்கள். சத்தமாகப் பேசக் கூட மாட்டாள். அந்நியர்களிடம் பேசவே தயங்குவாள். வறுமை மற்றும் விதவைத் தாயின் வளர்ப்பு.

இளங்கோவிடம் பேசவும் அவளுக்குத் தயக்கமாகவே இருந்தது. அவன் முரடனோ, கோபக்காரனோ அல்ல. மிக மென்மையானவன்தான். ஒருவேளை, தன்னை விடவும் மென்மையானவனாக, வேறு யாரையும் விட மென்மையானவனாக இருக்கக் கூடும். ஆனால், அவன் அவளிடமிருந்து விலகியே இருந்தான். அப்படி இருக்கவே விரும்பினான். இவள் அவனுக்கு பணிவிடைகள் செய்வதைக் கூட அனுமதிப்பதில்லை. பிறகு எப்படி அவனிடம் பேச முடியும்?

இருப்பினும் இப்போது பிறந்த வீடு சென்று ஒரு மாதம் கழித்துத் திரும்பியுள்ள நிலையில், அவன் எதுவும் பேசாவிட்டாலும், தானாவது பேச வேண்டும் என விரும்பினாள். எனவே, தயக்கத்தை மீறி, சிரமப்பட்டு, “எப்படி இருக்கறீங்க?” என்று கேட்டேவிட்டாள்.

“ம்… இருக்கறேன்!” 

அவன் முகம் திருப்பாமலே எந்திரத்தனமாக சொல்லிவிட்டு, டால்கம் பௌடரை சிறிதளவு இடது உள்ளங்கையில் கொட்டி, இரு கைகளிலும் தேய்த்து, முகத்தில் பூசிக்கொண்டான். அவனது கருத்த நிறத்தால் அந்த மெல்லிய பௌடர் பூச்சும் வெளிப்படையாகத் தெரிந்தது. டியோடரன்ட் ஸ்ப்ரேவை சட்டையின் அக்குள் பகுதிகளில் தெளித்துக்கொண்டு வெளியேறிவிட்டான். தான் கேட்ட பிறகு கூட பதிலுக்கு தன்னைப் பற்றி நலம் விசாரிக்கவில்லையே – சம்பிரதாயத்துக்காகவாவது என்ற வருத்தம் அவளில் படிந்தது. 

* * * 

டுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. சூட்கேஸிலும், பயணியர் பையிலும் உள்ள துணிகளை எடுத்து பீரோவில் வைக்கலாம் என தயாராகிக்கொண்டிருக்கையில், “சாமுத்ரிகா,… அவனுக்கு சாப்படறக்கு குடு!” என்று மாமியாரின் அழைப்பு.

இவள் பரிமாற நிற்பது இளங்கோவுக்குப் பிடிக்காது என்பதை விட, அதை அவன் தவிர்க்கவே பார்ப்பான். அதனால் கன்னிகாவையே வரச் சொல்வான். அதுவும், அவன் தனியே சாப்பிட அமர்ந்தால், “நீயே வாம்மா!” என்பான். சில சமயம் கன்னிகா வந்து பரிமாறுவாள். சில சமயம் அடுக்களையில் இருந்தபடியோ, அல்லது வெளியே வேறு ஏதேனும் வேலைகளைச் செய்வதாக பாவித்தோ, “எனக்கு வேற சோலி இருக்குது” என்றுவிடுவாள். அல்லது அந்த நேரம் பார்த்து கைவலி, கால்வலி, இடுப்பு வலி என்று ஏதாவது சாக்கு சொல்லி கூடத்தில் உட்காரவோ, படுக்கையில் படுத்துக்கொள்ளவோ செய்வாள். சாமுத்ரிகா பரிமாறுவதை ஏற்றுக்கொண்டாக வேண்டிய நிர்பந்தத்திற்கு அவனை ஆளாக்குவதற்காக கன்னிகா செய்யும் சதித் திட்டம் இது என்பது அவனுக்கும் தெரியும். ஆனால், அது பற்றிப் பேச மாட்டான். அதைப் பேசினால் அடுத்தடுத்து ஒவ்வொன்றாக பேச்சு வளர்ந்து அவனுக்கு சிக்கல் ஆகிவிடும். எனவே, வேறு வழியில்லாமல் சாமுத்ரிகாவின் பரிமாறலை ஏற்றுக்கொள்வான். 

கன்னிகா அவனுக்குப் பரிமாறுவதைப் பார்த்தால், கைலாசநாதன் கண்டிப்பார். “எதுக்கு நீ இன்னும் அவனுக்குப் பரிமாறிட்டிருக்கற? அவனுக்குன்னு ஆளு வந்தாச்சல்ல?” என்பார். அல்லது, “எதுக்கு இன்னும் நீயே எல்லா வேலையவும் இழுத்துப் போட்டு செஞ்சுட்டிருக்கற? அப்பறம் கை வலி, கால் வலிங்கறக்கா? உனக்கு கொஞ்சம் ரெஸ்ட்டு குடுக்கணும்னுதான் வீட்டுக்கு மருமக வந்திருக்கறா. காப்பி – டீ வெச்சுக் குடுக்கறது, குளிக்கறக்கு தண்ணி எடுத்து வெக்கறது, சாப்பாடு பரிமார்றது - இதையெல்லாம் அவகிட்ட செய்யச் சொல்ல வேண்டீதுதான?” என இவர்கள் நெருங்கி இருக்க நேரும்படியான வேலைகளை இவள் செய்யும்படியாகப் பணிப்பார்.

அவரது நோக்கமும் கன்னிகாவின் திட்டமும் ஒன்றுதான். எப்படியாவது இவளை அவனிடம் நெருங்க வைத்துவிட வேண்டும் என்பது. இளங்கோவும் அவரும் ஒரே சமயத்தில் சாப்பிட வந்தால், பரிமாறுவதற்கு சாமுத்ரிகாதான் நிற்க வேண்டும் என்பதும் மாமனாரால் விதிக்கப்பட்டிருந்தது.

இப்போது மாமியார் இளங்கோவுக்கு சிற்றுண்டி பரிமாற இவளை அழைத்தது எப்போதும் போன்றதே எனினும், இன்றைய அழைப்புக்கு முக்கிய காரணம் இங்கத்திய நிலவரம் தெய்வாத்தாளுக்குத் தெரியாமல் இருக்கட்டும் என்பதற்காகவே என்பது சாமுத்ரிகாவுக்குத் தெரிந்தது. அவளும் அதற்கேற்ப, அது ஒரு இயல்பான நிகழ்வு என்கிற தோற்றம் ஏற்படும்படியாக கவனத்தோடு சென்றாள்.

இந்தக் கதையை Bynge - ல் வாசியுங்கள்.
மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாசகர்களோடு இணையுங்கள்.

இன்ஸ்டால் BYNGE

கன்னிகா, தெய்வாத்தாள், கைலாசநாதன் மூவரும் கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அடுத்துள்ள உணவறையில், உணவு மேஜை ஸ்டூலில் இளங்கோ காத்திருந்தான். அவ்வறையை ஒட்டி உள்ளே உள்ள சமையற்கட்டிற்கு சாமுத்ரிகா சென்றாள். சந்தகை, தேங்காய்ப் பால், சட்னி ஆகியவற்றை மாமியார் செய்து வைத்திருந்தாள். இன்று இவர்களும் வருவதால் சிறப்புச் சிற்றுண்டியாக இருக்கட்டுமே என்று அவள் மெனக்கெட்டு சந்தகை, தேங்காய்ப் பால் தயார் செய்திருக்கிறாள் போலும். இளங்கோவுக்கும் அது பிடித்தமான உணவு. ஆக, இதையும் திட்டமிட்டே மாமியார் செய்திருக்க வேண்டும். சாமுத்ரிகா மெலிதான நெகிழ்ச்சியோடு, சந்தகை, தேங்காய்ப்பால் ஆகியவற்றை முதலில் எடுத்துச் சென்றாள். இளங்கோவுக்கு சந்தகையைப் பரிமாறியபடியே, “நீங்களும் வாங்க மாமா!” என மாமனாரை அழைத்தாள்.

“இல்ல, நான் அப்பறம் சாப்புட்டுக்கறேன். ஆஃபீஸ் போறக்குள்ள சித்த நேரம் உங்கம்மாகிட்டப் பேசிட்டிருக்கலாம்னுதான் பேசிட்டிருக்கறோம். நீ அவனுக்குக் குடு” என்றார்.

இதுவும் இயல்பானதே எனினும், அதில் அவரது திட்டமும் இருக்கலாம். சாமுத்ரிகா உள்ளூர புன்னகைத்தவாறு, இளங்கோவின் தட்டில் தேங்காய்ப் பாலை ஊற்றினாள். அவன் ஒரு கவளம் சாப்பிட்டதும், “இனிப்பு போதுமா? இல்ல, இன்னும் கொஞ்சம் அஸ்கா போடணுமா?” என்று கேட்டாள்.

தேங்காய்ப்பாலில் இனிப்பு சற்று தூக்கலாகப் போட்டு சாப்பிடுவது அவனது வழக்கம்.

அவன் தலை நிமிராமல், “போதும்!” என்றான்.

“இனிப்பு நார்மலாத்தான் போட்டிருக்கறேன். அது அவனுக்குக் கம்மியாத்தான் இருக்கும். சக்கரை கொண்டு வந்து குடு!” என்றாள் மாமியார்.

சாமுத்ரிகா சமையற்கட்டுக்குள் சென்று அஸ்கா பாட்டிலோடு திரும்பினாள். ஒரு தேக்கரண்டி அஸ்காவை எடுத்து அவனது தட்டில், தேங்காய்ப்பால் உள்ள இடத்தில், அவனது வலது கை வசமாகப் போட்டதும் அதைச் சேர்த்துக் கலக்கி சாப்பிடலானான்.

சந்தகை - தேங்காய்ப் பால் என்றால் ருசித்து சாப்பிடுவான் என்று மாமியார் சொல்லியிருக்கிறாள். ஆனால், இப்போது அவன் சாப்பிடுவது அந்த மாதிரி தெரியவில்லை. இதற்கு முன்பும் ஓரிரு முறை அப்படித்தான். அவனது விருப்ப உணவுகள் என்று சொல்லப்பட்ட எதையும், சொல்லப்பட்டது போல அவன் ரசித்தோ, கூடுதலாகவோ சாப்பிடவில்லை. அவனது விருப்பத்திற்குரிய காரியங்களாக இருந்த இசை, வாசிப்பு, குறிப்பிட்ட உணவுகள் ஆகிய அனைத்திலுமே நாட்டம் இழந்துவிட்டான்.  சந்தகை – தேங்காய்ப்பாலையும் ஏனோதானோவென்று அவன் சாப்பிட்டிட்டுக்கொண்டிருக்க, சாமுத்ரிகா சமையற்கட்டிற்குச் சென்று தேங்காய்ச் சட்னியை எடுத்து வந்து மேஜையில் வைத்தாள்.

இளங்கோ உள்ளங்கையில் உணவு படாமல், விரல் நுனிகளில் சிறிது சிறிதாக உணவை எடுத்து, நாக்கை நீட்டாமல், அளவாக வாய் திறந்து, உள்ளே போட்டதும் வாய் மூடி மென்று, சத்தம் வராமல், அமைதியாகவும் பொறுமையாகவும், நன்றாக மென்று சாப்பிடுவான். சாப்பிடுவதில் பரபரப்போ, வேகமோ காட்ட மாட்டான். இதனால் அவன் சாப்பிட்டு எழ சற்று அதிக நேரம் ஆகும். ஆனால், அழகாக சாப்பிடுவான். அவன் சாப்பிடுகிற அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். ஒரு பருக்கை கீழே சிந்தாது. தவறுதலாக சிந்திவிட்டால் அதற்காக வருத்தப்படுவான். குழம்பில் கிடக்கும் மிளகாய் தவிர்த்து கடுகு, கருவேப்பிலை, பூண்டு, வெங்காயம் எதையும் வீணாக்க மாட்டான். அவை அனைத்தையும் சாதம் அல்லது பிற வகை உணவோடு சேர்த்தே சாப்பிடுவான். அவன் உண்டு முடித்த உணவுத் தட்டு, மிச்ச மீதி சிறிதும் இல்லாமல் கழுவியது போல இருக்கும். அவன் கலைஞன் என்பதால் சாப்பிடுவதில் கூட கலை நயத்தைப் பின்பற்றுகிறானோ என்று இவளுக்குத் தோன்றும்.

தேங்காய்ப் பாலோடு உண்பதற்காகப் போட்டிருந்த சந்தகையை சாப்பிட்டு முடித்துவிட்டான்.

“இன்னும் கொஞ்சம் தேங்காப் பாலோட சாப்படறீங்களா?” என்று கேட்டாள்.

“வேண்டாம்.”

“சரி, இருங்க; தட்டக் களுவிட்டு வர்றேன்” என்று எச்சிற் தட்டை சமையலறை வாஷ் பேஸினுக்கு எடுத்துச் சென்றாள்.

தேங்காய்ப் பால் ஊற்றி சாப்பிட்ட தட்டில் இனிப்பின் மிச்சம் இருக்கும் என்பதால், அடுத்ததாக சட்னி ஊற்றி சாப்பிடுவதற்கு முன்பு தட்டைக் கழுவிக்கொள்வது கைலாசநாதன் மற்றும் இளங்கோவின் வழக்கம். கைலாசநாதன் அப்படி செய்வதில் நியாயம் உள்ளது. அதில் ஊனு (சாப்பிட்ட தட்டு / இலையில் மிச்சமுள்ள, சோறு – குழம்பு ஆகியவற்றின் மிச்சக் கலவை) இருக்கும். ஆனால், இளங்கோ சாப்பிடுவதில் அப்படி இருக்காது. வழித்துத் துடைத்து சாப்பிட்டுவிடுவான். ஒரு பருக்கை கூட மிச்சம் வைக்க மாட்டான். இப்போதும் அப்படித்தான், சந்தகையின் ஒரு சிறு துணுக்கைக் கூட மிச்சம் வைக்காமல் சாப்பிட்டிருந்தான்.

‘ம்க்-கும்! இதுல இனி களுவறக்கு என்ன மிச்சம் இருக்குது? இப்பவே களுவித் தொடைச்ச மாதிரித்தான் இருக்குது’ என எண்ணிக்கொண்ட சாமுத்ரிகா, தட்டை முகத்துக்கு முன்பாகப் பிடித்து, அதில் முகம் பார்த்தாள். பழைய எவர்சில்வர் தட்டு என்பதால் முகம் தெளிவாகத் தெரியவில்லை. மங்கலாகத் தெரிகிற தன் முக பிம்பத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தபோது, விளிம்போரத்தில் தேங்காய்ப் பால் ஊனு சிறிதளவு இருப்பது தெரிந்தது. லேசான ஆர்வத்தோடும், சற்று குறுகுறுப்போடும் அதைத் தன் ஆட்காட்டி விரலில் வழித்தெடுத்து, நுனி நாவில் தேய்த்து சுவைத்தாள். கூடுதல் சர்க்கரை சேர்க்கப்பட்ட தேங்காய்ப் பாலின் சுவையை விட, கணவனின் எச்சில் உணவு என்கிற எண்ணம் இனித்தது.

(தொடரும்...)