சிறுகதை

ங்கத்திற்கு அப்படி நடந்திருக்க வேண்டாம். அவளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஒரு குழந்தையின் மெல்லிய பாதத்தடங்கள் மனதில் தோன்றும். இப்போது நினைக்கும்போதும்கூட. மற்றும் பலருக்கும் இன்னும் கவித்துவமாக என்னவெல்லாமோ தோன்றியிருக்கும். அதற்கெல்லாம் மிகப் பொருத்தமானவள்தான். உருவத்தில் மாத்திரமல்ல, அவள் பேசும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும் ஒரு குழந்தைதான். அவளுக்கு அப்படி நடந்ததை இன்று வரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உடற்கூறாய்வு முடிந்து வெள்ளைத் துணியில் அவளைச் சுருட்டிக் கட்டிக்கொண்டு வெளிவந்தார்கள். அவள் எப்படிப்பட்டவள் என்பது அந்த மருத்துவமனைக்காரர்களுக்குத் தெரியாதில்லையா? பாவப்பட்ட அவளது அம்மா, தங்கத்தின் உடல் மீது விழுந்து கதறியழுதாள். ‘எம் பால்கொடமே, தங்கக்கொடமே’ என்று மீண்டும் மீண்டும் அழைத்து தங்கத்தை எப்படியாவது எழுப்பிவிட முயன்றாள். மிகச் சிறியதாகத் தெரிந்த தங்கத்தின் முகத்தில் எப்போதும் இருக்கும் அந்த சந்தேகப் பார்வை அப்போதும் இருந்தது.

விஷயம் வெளிவந்த சற்று நேரத்திலேயே அவளது உறவினர்களும் ஊர்க்காரர்களும் எங்கள் பள்ளியின் சில வகுப்பறைகளை அடித்து உடைத்து நொறுக்கிவிட்டிருந்தனர். சங்கர நாராயணன் சாரை பள்ளியின் பின்புறமிருந்த ஆற்றின் வழியாகக் கொண்டுபோய் எங்கோ மறைந்திருக்கச் செய்துவிட்டார்கள் மற்ற சில ஆசிரியர்கள். அவர் எதற்காக ஓடி ஒளிய வேண்டும்? எப்பேர்ப்பட்ட ஆசிரியர் அவர்? இந்த வெறிபிடித்த கூட்டத்தின் முன் நின்று பேச முடியாதா என்ன? தங்கம் இப்படி எழுதி வைத்திருப்பாள் என்பதை என்னால் துளியும் நம்ப முடியவில்லை. சங்கர நாராயணன் சாரை அவள் ‘அப்பா, அப்பா’ என்று பாசமாக அழைப்பது எனக்குத் தெரியும். சாரின் வீட்டு ஓடுகளையும் சன்னல்களையும் அடித்து உடைத்திருக்கிறார்கள். அடுத்த நாள் காலைக்குள் அவர் வராவிட்டால் வீடு புகுந்து விடுவதாக மிரட்டிச் சென்றிருக்கிறார்கள். 

எலி பசையை தங்கம் தின்றதால் மரணம் ஏற்பட்டதாக உடல் கூறாய்வு முடிவில் குறிப்பிட்டிருந்தார்கள். கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு முன்பாவது தின்றிருக்கக் கூடுமாம். என்னுடன் உயிரியல் ஆய்வகத்தில் இருந்தபோது நன்றாகப் பேசிக் கொண்டுதானே இருந்தாள். சார்கூட எங்கள் வகுப்பில் வழக்கம்போல கலகலப்பாகப் பேசிக்கொண்டுதானே இருந்தார். என்னதான் நடந்திருக்கும்?

தங்கத்தைக் கட்டிக்கொண்டு அம்மா அழுதபோதுதான் இன்னும் பல விஷயங்கள் எங்களுக்குத் தெரிய வந்தன. இன்னும் ஆறு மாதங்களில் அவளுக்குத் திருமணம் பேசி வைத்திருந்தார்களாம். அதென்ன அப்படியொரு அவசரம்? பன்னிரண்டாம் வகுப்பிலேயே! என்ன சொல்ல? அவள் அம்மாவிற்கு என்ன தோன்றியதோ என்னவோ? தனியாக அப்படியொரு பெண்ணை எத்தனை நாள் பொத்திப் பாதுகாப்பது என்று நினைத்திருக்கலாம். நெருங்கிய சொந்தக்காரப் பையனாம். அவனே விரும்பி வந்து பேசி முடித்திருக்கிறான். அப்போதுதான் அம்மாவின் அருகே உறைந்துபோன முகத்தோடு அவன் நிற்பதைக் கவனித்தேன். கொடுத்து வைத்தவனாக இருந்திருக்கக் கூடியவன். பாவம். ஒருவேளை அவனால் ஏதும் பிரச்சினை இருந்திருக்குமோ? தங்கம் எழுதிய கடிதம் அவள் கையெழுத்தில்தான் இருந்ததா? நான் பார்த்தால் உறுதியாகக் கண்டுபிடித்திருப்பேன்.

காவல் துறையும் ஊடகங்களும் வந்து நிறைந்துவிட்டன. தொலைக்காட்சியில் எங்கள் பள்ளியைப் பார்த்து சந்தோஷப்படவா முடியும்? எல்லாம் முடிந்து சங்கர நாராயணன் சார் வகுப்பு எப்போது நடக்கும் என்றுதான் யோசித்தேன். தங்கத்தைப் பற்றி மேலும் மேலும் யோசித்திருக்க முடியவில்லை. அவள் இறந்துபோகக் கூடிய உருவமாக என்னுள் இல்லை. அவளது சிணுங்கல் குரல் எனக்குள் மென்மையாக ஒலித்துக்கொண்டுதான் இருந்தது. ஆனால், பொறுக்க முடியாமல் வாந்தியெடுத்து, உறக்கத்தில் அலறிக்கொண்டு எழுந்து வீட்டைக் கலங்கடித்ததும் நான்தான். 

பாதிப் பேர் சங்கர நாராயணன் சார் மீதுதான் தப்பிருக்கும் என்ற முடிவிற்கு எப்படி வந்தார்கள்? எனக்கு ஏன் அப்படி ஒருகணம்கூட தோன்றவேயில்லை? 

எங்கள் டெஸ்க்குகளின் மீது ஏறிப் பாய்ந்தோடி அவர் எங்களை விரட்டி வந்து அடிப்பதுபோல நடிப்பது, பல நடிகர்கள் மாதிரியும், எங்களில் பலர் மாதிரியும் குரலெடுத்துப் பேசுவதோடு துல்லியமாக அந்த உடல்மொழியையும் கொண்டு வருவது, ஒரு நொடிகூட சலிப்பு ஏற்படாத வண்ணம் பாடமெடுப்பது, பிரச்சினைகளை எங்கள் முன் வைத்தே பேசி எங்கள் கருத்துகளையும் கேட்டு பொருட்படுத்துவது, எல்லாவற்றிக்கும் மேலாக எங்களுடன் உட்கார்ந்து உடன் உண்டு, உடன் விளையாடி, எங்கள் சீருடை எவ்வளவு அழுக்காகிறதோ அவ்வளவு அழுக்காகிற உடையுடைய ஒரே ஆசிரியராக இருப்பதோடு அதை இயல்பாகச் செய்வது என எல்லா விதத்திலும் எங்கள் மொத்தப் பள்ளியின் செல்ல ஆசிரியர் சங்கர நாராயணன் சார். அவர் மேல் இப்படி ஒரு பழி வந்திருப்பதை எங்களில் ஒருவர்கூட நம்பத் தயாராக இல்லை. 

ஆனால், தங்கம் அந்தக் கடிதத்தில் ‘சங்கர் அப்பா...’ என்று எழுதியிருந்ததாகச் சொன்னார்களே, அதெப்படி சாத்தியம். எங்களுக்குள் மட்டுமே இருந்த விஷயம் அல்லவா. சரி, சாகும் அளவிற்கு அப்படி என்னதான் செய்திருப்பார் சங்கர் சார்? ஒருவேளை யாரோ சாரை வேண்டுமென்றே மாட்ட வைத்து விட்டார்களோ? ஒருவேளை அது கட்டாயக் கல்யாணமாக இருக்குமோ? எல்லாம் சில நாட்களில் தெளிவாகும் எனக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

அடுத்த நாள் காலையில் குளிர்பதனப் பெட்டியில் தங்கத்தைக் கிடத்தி, போர்த்தப்பட்ட சேலையும் மாலையுமாக எங்கள் பள்ளியின் முன் கொண்டு வைத்து மொத்த ஊரும் நின்றது. ஒரே கூச்சல், அழுகை, காது கூசும் வசைகள். கூட்டத்திலிருந்து பல கற்களும் செருப்புகளும் பறந்து வந்து பள்ளியினுள் விழுந்தன. கூட்டத்தில் இருந்த சில அண்ணன்கள் மற்றவர்களை சமாதானப்படுத்தி உட்கார வைத்துக் கொண்டிருந்தனர். பள்ளி இழுத்து மூடப்பட்டிருந்தது. ஆசிரியர்கள் அனைவரும் பள்ளியினுள் காவல் துறை விசாரணையில் இருந்தனர். நானும் நண்பர்களும் தங்கத்தோடு அம்மாவின் அருகே நின்றோம். தங்கத்தின் மாலையைச் சுற்றி ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. குளிர்பதனப் பெட்டியின் மேல் பிரதிபலித்த அவளது கலங்கிய முகத்தின் மீது பூவிதழ்கள் விரிந்து கிடந்தன. எனக்கு மட்டும் எப்படியாவது உண்மையைச் சொல்லிவிடு என தங்கத்தைப் பார்த்துக் கேட்டேன் நான். 

“எம் பால்கொடமே, எந் தங்கக்கொடமே, ஒம் ப்ரண்ட்ஸ்மாரெல்லாம் நிக்காவ மக்களே, எந்திச்சிப் பாரு மக்களே. அம்ம, ஒன்ன ஒண்ணும் சொல்ல மாட்டேன்டீ. எங்கம்ம, எங்கம்ம..” என்றவாறு தன் மார்பில் ஓங்கியடித்துக் கதறினார் அம்மா. “தெனம் இந்த வாத்தியப் பத்திப் பெருமையா சொல்லுவிய மக்களே. பாவிப்பய, ஒன்ன என்ன செஞ்சாம் மக்களே, அம்மக்கி ஒண்ணும் வெளங்கலயே, நா என்ன செய்வேன்? ஒத்தக்கி ஒரு தொணையால்லா இருந்த மக்களே, இப்ப அம்மக்கி யாரு இருக்கா? என்னயும் கொண்டு போயிரு மக்களே, என்னயும் கொண்டு போ..”

விசாரணை நீண்டு கொண்டே சென்றது. சங்கர நாராயணன் சாரைக் கைது செய்தால்தான் தங்கத்தை அடக்கம் செய்யப் போவதாகத் தீர்மானமாகக் கூறிவிட்டனர் ஊர்க்காரர்கள். காவல் துறை அதிகாரி ஒருவர் வந்து ஊர் மக்களிடம் பேசிக்கொண்டிருந்தார். “பச்சப் பிள்ளைக்க பாடிய வச்சிட்டு இப்படி பிரச்சன பண்ணாதியோ, நாஞ் சொல்லதக் கேளுங்கோ. ஆளு எங்கன்னு நமக்குத் தகவல் வந்தாச்சி, என்ன ஏதுன்னு விசாரிச்சிட்டு சொல்லுகோம். ஒடம்ப எவ்வளவு நேரம்டே இப்படி வச்சிட்டு இருப்பியோ நடுரோட்டுல? அதான் போஸ்ட்மார்ட்டம் முடிஞ்சாச்சில்லா? சொன்னாக் கேளுங்கடே. நாங்களும் சும்மா ஒண்ணும் விட்டுற மாட்டம், என்ன?”

“அதெல்லாம் செரி அண்ணாச்சி. ஆளக் கொண்டு கண்ணுல காட்டுங்க, நாங்க ஆக வேண்டியதப் பாக்கோம். அந்தத் தள்ளைய..., செய்யதெல்லாம் செஞ்சிட்டு ஒளிஞ்சி கெடப்பான், நாங்க பாத்துட்டு சும்மாப் போணுமாக்கும். கேக்கதுக்கு ஆளில்லன்னு நெனைக்கப்படாது, என்னா? பொறவு, வேற மாறி ஆயிப் போவும், பாத்துக்கிடுங்க.” 

“எவம்டே இவன். பொறுமையா இரிங்கடே. நீங்க இப்ப கலஞ்சிப் போகலன்னா எனக்காக்கும் மண்டயிடி. லத்தி சார்ஜ் பண்ணிக் கலன்னு சொல்லுவானுவோ, ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு, எனக்கு இதெல்லாம் தேவையாடே. நான்தான் சொல்லுகம்லா, ஆளப் புடிச்ச மாதிதான், தப்பு உண்டும்னா உள்ளத் தள்ளி ஒரு வழி பண்ணிருவோம்.”

“என்ன மயிர ஒய் பேசுகீரு? பொட்டப் புள்ள, லெட்டர் எழுதி வச்சிட்டு மருந்தக் குடிச்சிருக்கா? இதுல தப்பு உண்டும்னான்னு இழுக்கீரு, இவனுவள நம்பதுக்கில்ல, நம்மகிட்ட சமாதானம் பேசிட்டு வாத்திகிட்ட எதாம் நவுட்டிருப்பானுவோ, கள்ளோழிப்....”

காவல் துறையின் லத்திகள் படபடக்க, கூட்டம் அங்குமிங்கும் கலைந்தோடி ஒரே கலவரம். தங்கத்தைச் சுற்றி கைச்சங்கிலி போட்டுப் பெரியவர்கள் சிலர் பார்த்துக்கொள்ள, கூச்சலும், வெறிக் கத்தலும் தொடர சயரன் ஒலியோடு வேகமாக வந்து நின்றன பல ஜீப்புகள். ஓர் ஒலிபெருக்கியில் மக்களை அமைதியாக உட்காரும்படியும், கூட்டத்திலிருந்து இருவர் மட்டும் பேச வரும்படியும் அறிவித்தார்கள். அதன்படியே, பேச்சுவார்த்தை முடிந்து எல்லோரும் பள்ளியின் முகப்பிலேயே அமைதியாக உட்கார்ந்தோம். 

“லேய், இவனுவோ மத்தவன எப்பிடியாம் தப்பிக்க வைக்கப் பாக்கானுவோ மக்களே. கொஞ்சம் பேர ஸ்கூலச் சுத்தி வரச் சொல்லுவம்ல. உள்ளுக்குள்ளயே ஒளிச்சி வச்சாலும் வச்சிருப்பானுவோ..”

இரண்டு மணி நேரம் கழித்து காவல் துறையினர் பலர் வந்து பள்ளியின் முன் வழியை விட்டு ஒதுங்கி இருக்கும்படி எங்களைக் கலைத்தனர். கூட்டத்தில் மீண்டும் சலசலப்பு. பள்ளிப் பிரதானக் கட்டிடத்திலிருந்து சில காவல் துறை அதிகாரிகள் சூழ வெளிவந்தார் சங்கர நாராயணன் சார். கூட்டத்திலிருந்து வசைகள் எழுந்தன. செருப்புகளைத் தூக்கி எறிந்தனர். அங்குமிங்கும் தள்ளிப் பிதுங்கிக்கொண்டு முன்னேறி பள்ளியின் சுற்றுச்சுவர் மீது ஏறிக் குதிக்க முயன்றனர் சிலர். அவர்களைக் கழிகளால் அடித்துத் தள்ளிவிட்டனர் காவல் துறையினர். ஓர் ஆசிரியர் சங்கர் நாராயணன் சாரிடம் ஒரு துணியைக் கொடுத்து முகத்தை மூடிக் கொள்ளச் சொன்னார். அவர் அதை மறுத்து கையெடுத்துக் கும்பிட்டபடி கூட்டத்தை நிமிர்ந்து பார்த்து நடந்தார். ‘சார், நீங்களாவது உண்மையைச் சொல்லுங்கள் சார்’ என்று யோசித்து நின்றேன் நான். ஓடிப்போய் அவரைக் கட்டிக்கொள்ள வேண்டும் போலிருந்தது. திடீரென, ஆசிரியர்களின் இடையிலிருந்து பாய்ந்து வந்த ஊர் அண்ணன்மார் சிலர் சங்கர் சாரைப் பிடித்து மாறிமாறி அடிக்க ஆரம்பித்தனர். காவலர்கள் அவர்களைப் பிடித்துத் தள்ளிவிட முயன்றும் சாரின் மீது பலமாக அடி விழுந்தது. ஒருவன் ஓங்கி மிதித்ததில் அப்படியே பொத்தெனத் தரையில் விழுந்தார் சங்கர் சார். எனக்கு அழுகையே வந்துவிட்டது. “சார், ஓடிருங்க சார், ஓடிருங்க சார்,” என என்னையறியாமல் முனகிக் கொண்டிருந்தேன். ஒருவன் அவர் மீது காறி உமிழ்ந்து அவரது சட்டையைப் பிடித்துக் கிழித்தெறிந்தான். மற்ற ஆசிரியர்களும் காவலர்களும் சாரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டு அவரை ஜீப்பில் ஏற்றினர்.

“ஒரு லெட்டர மட்டும் வச்சி என்ன செய்ய முடியும்டே? சட்டம்னு ஒண்ணு இருக்குல்லா? என்ன நடந்துன்னு அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். போயி நடக்க வேண்டிய காரியத்தப் பாப்பம்டே” என்றார் ஊர்ப் பெரியவர் ஒருவர். அவரை எதிர்த்தும் திட்டியும் குரல்கள் எழ அவர் அமைதியானார். சங்கர் சாருடன் ஜீப் அங்கிருந்து வெளியேறியது. மெல்ல அந்தக் கூட்டம் ஊர் நோக்கி நகர்ந்தது. தங்கத்தை அடக்கம் செய்த இடத்தில் ஒரு மண் விளக்கு ஏற்றப்பட்டது. என்னால் அதைப் பார்த்துக்கொண்டு அங்கே நிற்க முடியவில்லை. 

சங்கர நாராயணன் சார் என்ன ஆனார் என்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. அவர் வீட்டில் அவர் மனைவி மட்டுமே இருந்ததாகவும் அவர் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் எங்கோ போய்விட்டதாகவும் என்னென்னவோ செய்திகள். காசியில் ஒரு மடத்தில் இருப்பதாக ஒரு வதந்தி பரவியது. தங்கத்தின் வழக்கில் செய்தித்தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் என்னென்னவோ கதைகள் சொல்லப்பட்டன. சங்கர் சாரின் மொத்த வாழ்வின் நடத்தையையும் கேள்விக்குள்ளாக்கிப் பேசினர். வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதை அறிந்து நான் நிம்மதி அடைந்தேன். தங்கமும் நிச்சயம் நிம்மதியாகத்தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஆனால், அப்படி அந்தக் கடிதத்தில் அவள் என்ன எழுதியிருப்பாள் என்பதை மட்டும் என்னால் யூகிக்க முடியவில்லை. சங்கர் சாரை எப்படியாவது பார்க்க வேண்டும். அவர் கைப்பிடித்துச் சற்று நேரம் உட்கார வேண்டும் என நினைத்தேன். 

வாரம் ஒருமுறை அவர் வீடிருந்த பகுதிக்குச் சென்று அங்குமிங்கும் நடந்தபடி அவர் இருக்கிறாரா எனக் கவனித்தேன். அவர் வீட்டுக் கதவு எப்போதும் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஒருமுறை அவரது மனைவி வெளியே வந்து அங்கிருந்த பிச்சிப் பூக்களைப் பறித்துச் சென்றதைப் பார்த்தேன். பலமுறை அலைந்தும் சார் இருப்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் நேராக சாரின் வீட்டு வாசலுக்கே சென்றுவிட்டேன். கதவைத் தட்டினேன். உள்ளிருந்து யாரென்ற சத்தம் மட்டும் வந்தது. 

“அம்மா, நான் சாரோட ஸ்டூடண்ட். சாரப் பாக்கணும்.”

“சாரெல்லாம் இங்க இல்ல. கெளம்புங்க.”

“இல்லம்மா, சாருக்கு என்ன நல்லாத் தெரியும். ஒரே ஒரு தடவப் பாத்துட்டுப் போயிருவேன். சார் இருக்காங்களா?”

பதில் ஏதும் இல்லை. சற்று நேரத்தில் கதவைத் திறந்து வெளிவந்த சாரின் மனைவி என்னை ஏற இறங்கப் பார்த்தார். எரிச்சலில் இருந்த அவரது முகம் மெல்ல சாந்தமடைந்தது.

“சார் இல்லப்பா. எங்க இருக்காங்கன்னு எனக்கே தெரியாது. எப்பவாது வருவாங்க, ராத்திரியோட ராத்திரியா கெளம்பிப் போயிருவாங்க” என்று சொல்லும்போது அவரது கண்கள் கலங்கித் தரையைப் பார்த்தன.

நான் ஒன்றும் சொல்லாமல் நின்றேன். 

“தண்ணி ஏதும் குடிக்கியாப்பா?” என்று என் முகத்தைப் பார்த்துக் கேட்டார். 

நான் வேண்டாமெனத் தலையாட்டினேன். அவர் சரியெனத் தலையாட்டி விட்டு உள்ளே செல்லத் திரும்பியபோது, “அம்மா, சார்னா எங்க எல்லாருக்கும் உயிர். எங்க எல்லாருக்கும் அப்பா மாதிரிதான் சார். தங்கத்துக்கும்... அவரு ஒரு தப்பும் பண்ணிருக்க மாட்டாரும்மா. எனக்கு நல்லாத் தெரியும்” என்று சொன்னேன். ஏதும் சொல்லாமல் திரும்பி ஓட்டமும் நடையுமாக உள்ளே சென்றுவிட்டார் சாரின் மனைவி.

இறுதித் தேர்வு முடிந்து முடிவுகள் வெளியான தினம். சங்கர நாராயணன் சார் நிச்சயமாக இருப்பார் என்று ஏனோ தோன்றிக் கொண்டேயிருந்தது. பள்ளியிலிருந்து நேராக அவர் வீட்டிற்குச் சென்று வாசல் கதவருகே நின்று ஒருசில நிமிடங்கள் யோசித்தேன். பக்கவாட்டுத் திண்ணையில் கிடந்த சாக்கின் அடியில் ஒரு ஒற்றைத் தோல் செருப்பு நீட்டிக்கொண்டு கிடந்தது. என் நெஞ்சு படபடக்க, கதவைத் தட்டினேன். எந்தப் பதிலுமில்லை. உள்ளிருந்து யாரோ இருமும் சத்தம் கேட்டது. 

மீண்டும் கதவைத் தட்டியபடி, “சார், சார்” என்று கத்தினேன். மீண்டும் இருமல், தொடர்ந்த இருமல். பெண் குரல் போலவிருந்தது. 

“அம்மா, அம்மா.”

இருமல் மெல்ல அடங்கிப் பின் விட்டு விட்டுத் தொடர்ந்தது. உள்ளிருந்து யாரோ கதவை நோக்கி வந்ததைப் போன்ற அதிர்வு. மெல்லக் கதவு திறக்கப்பட்டது. “உள்ள வாப்பா” என்று அழைத்தார் சாரின் மனைவி. 

குழம்பியபடி, “அம்மா, சார்...” என்றவாறு உள்ளே சென்றேன் நான். என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார் சாரின் மனைவி. உள்ளிருந்து மீண்டும் இருமல் சத்தம். நெஞ்சதிர இருமிய அந்த சத்தத்தை ஆற்றுப்படுத்தும்படி மெல்லிய தேய்ந்த சத்தத்தில், “போட்டும், போட்டும்..” என்றொரு குரல் கேட்டது. சாரேதான்.

இருமிய குரல், “எப்பா, வேண்டாம்ப்பா, வேண்டாம்ப்பா...” என்று கெஞ்சியபடி அழுத மாதிரி இருந்தது.

“ஒண்ணுள்ள மக்களே, நம்ம பிள்ளதான், ஒண்ணுள்ள…” என்றார் சார்.

அழுகை ஓங்கி வர, “வேண்டாம்ப்பா, நீ யார்ட்டயும் போய் நிக்காண்டாம்...” என்ற குரல், “வெளிய போங்க நீங்க, அப்பா வர மாட்டாங்க. வெளிய போங்கன்னேன்…” என்று கத்தியது.

“ஒங்களத்தான்… ஸ்டூடண்ட்டோ யாரோ, யாரா இருந்தாலும் வெளிய போங்க, ப்ளீஸ். எங்கப்பாவ தொந்தரவு செய்யாதீங்க, வெளிய போங்க” என்று அழுகையும் கோவமுமாகக் கத்தியது அக்குரல். 

தொடர்ந்து ஓவென்று கதறியழுத அந்தக் குரலைக் கேட்டுக் கொண்டு என்னால் நிற்க முடியவில்லை. தயங்கியபடி மெல்ல அந்த அறையை நோக்கி நடந்தேன். அந்தக் குரலோடு சாரின் மனைவியின் குரலும் சேர்ந்து கொண்டது. 

“போட்டும், போட்டும்… ஒண்ணுள்ள மக்களே, போட்டும்” என்றது சாரின் குரல். 

சாத்தப்பட்டிருந்த அறைக்கதவின் அருகே சென்று நின்று, “சார்.. நான்..” என்று சொன்னபோது என்னையறியாமல் அழுகை வந்துவிட்டது. சட்டென அந்தக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன்.

அந்தக் கட்டிலில் கிடந்த உருவத்தைப் பார்த்து புரிந்து கொள்ள எனக்குச் சில கணங்கள் தேவைப்பட்டன. அந்த முகம். அந்த உடல். அதை எப்படி சொல்ல முடியும்? அதன் அருகே முழங்காலிட்டபடி தன் மகளின் முழுக்க கேசம் உதிர்ந்த தலையை வருடியபடி, “போட்டும், போட்டும்...” என்று சொல்லிக்கொண்டிருந்தார் சங்கர நாராயணன் சார். முகம் முழுதும் நரைத்து நீண்டு வளர்ந்திருந்த தாடி. கசங்கிய ஒரு சட்டையும் வேட்டியும்.

சாரின் மகள் தொடர்ந்து ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். சார் தன் மனைவியைப் பார்த்துக் கண்ணசைக்க அவர் உள்ளே சென்று சற்று நேரத்தில் ஒரு பாத்திரத்தில் நீரும் ஒரு துணியும் கொண்டு வந்தார். சார் என்னைப் பார்த்துத் திரும்பி, வாவெனத் தலையாட்டினார். நானும் அவரும் முதல் அறைக்கு வந்தோம். எனக்குள் என்னென்னவோ தோன்றியது. அழுகையும் பீறிட்டுக் கொண்டு வந்தது. அடக்கியபடி சாரைப் பின்தொடர்ந்து நடந்தேன். ஒரு நாற்காலியில் உட்கார்ந்தபடி என்னையும் உட்காருமாறு சைகை செய்தார் சார். எங்கே அந்தப் புன்னகையும் செல்லக் கோபமும் நடிப்பும்?

நான் அவர் முகத்தைப் பார்த்தபடி படபடத்து இருந்தேன். சார் மெல்லத் தன் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தபடி ஆழ்ந்த யோசனையில் இருந்தார். என் முகத்தைச் சரியாகக்கூட பார்க்கவில்லை. சற்று நேரம் அமைதியாகக் காத்திருந்தேன். கண்களை மூடித் தலைகுனிந்து இருந்தார் சங்கர நாராயணன் சார். 

குரல் மட்டும் வந்தது. “எப்படி இருக்கடா?” மிகத் தேய்ந்து உள்ளொடுங்கிய குரல். இது சாரே இல்லை.

“நல்லாருக்கேன் சார். நீங்க...”

தலை மட்டும் ஆடியது. 

மீண்டும் தலை மட்டும் ஆடியது. ஏதோ கேட்க வந்து பின் வேண்டாமென நினைத்ததைப் போல உள்ளிழுத்துக் கொண்டார். நானும் எதுவும் பேசாமல் அவரையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் சிலையானதைப் போல எங்கோ இருந்தார். நிலை குத்திய பார்வை. வெறும் மூச்சுச் சத்தம். 

மெல்ல எழுந்து அவர் அருகே சென்று குனிந்து அவர் பாதங்களைத் தொட்டேன். 

“சரவணா, தங்கம்... நான்...”

“சார், நீங்க ஒண்ணும் சொல்லாண்டாம் சார்” என்றபடி வேகமாக வெளியேறி திரும்பிப் பார்க்காமல் நடந்தேன். 


விவாதங்கள் (40)