அத்தியாயம் 1
சில நாட்களுக்கு முன்…
பாண்டிச்சேரி கடற்கரை முழுக்க திருவிழாபோல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அது உள்ளூர்க் கோயில் திருவிழாபோல் அல்லாமல் ஓர் ஐரோப்பியத் திருவிழாபோல் காணப்பட்டது. வழக்கமாகக் கடற்கரைக்கு வரும் உள்ளூர்வாசிகள் மிகக் குறைவாகவே காணப்பட்டனர். யார் வந்தாலும் போனாலும் கடலுக்கு மட்டும் எதுவுமே தெரியப் போவதில்லை. வரும் எவரும் கடலை நெருங்குவதே இல்லை.
கடற்கரை என்பது உண்மையில் கடற்கரையல்ல. அது ஒரு சாலை. கடற்கரை முழுக்கப் பெரும் கருங்கல் பாறைகள் நிறைந்திருக்கும். அதையொட்டியிருக்கும் சாலையே இவ்வூர் மக்களின் கடற்கரை. சாலை முழுக்க இளைஞர்கள் கூட்டம் நிரம்பியிருந்தது. மாலை முடிந்து இரவு தொடங்கியிருந்தது. வானம் பல வண்ணங்களால் குழைந்து மெல்ல மெல்ல வண்ணமேறி கடைசியில் கரிய நிறத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதுபோல் சாலை முழுக்க வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சிகப்புத் தொப்பி போட்ட காவலர்கள் குறிப்பிட்ட தூர இடைவெளியில் சாலையின் இறுதிவரை நின்றிருந்தனர். அவர்களும் இந்தக் கொண்டாட்டத்தில் மூச்சடைத்துப் போயிருந்தனர். பார்க்கும் ஒவ்வொருவரும் கட்டியணைத்துக் கொள்வதும், முத்தமிட்டுக் கொள்வதும், அவர்களுக்கு ஆச்சரியமாகவும் கூச்சமாகவும் இருந்தன. அருகருகே இருந்த காவலர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர். சாதாரணமான நாட்களில் இவற்றுக்கெல்லாம் பொதுவெளிகளில் அனுமதியில்லை. பிரெஞ்சுக்காரர்கள் என்றால் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், இப்போது பாண்டிச்சேரிவாசிகள்போல தோன்றுபவர்களே அவ்வாறு செய்து கொண்டிருந்தனர். அவர்கள் உடுத்தியிருந்த உடை, அணிந்திருந்த ஆபரணங்கள் என எல்லாமே வித்தியாசமாக இருந்தன. பிரெஞ்சு மற்றும் தமிழ் இரண்டும் கலந்தே பேசிக் கொண்டிருந்தனர்.
தீயணைப்புக் காவல் நிலையத்திலிருந்து ஆரம்பித்த கூட்டமானது காந்தி சிலைவரை மிக நெருக்கமாக நகர்ந்துகொண்டிருந்தது. அதன் பிறகு பெரிதாக ஒன்றுமில்லை. பலர் கைகளில் கொத்தாக பலூன்களைப் பிடித்துக்கொண்டு அதை முன்னும் பின்னும் அசைத்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பலர் முகமூடி அணிந்தும், பலர் மாறுவேடம் அணிந்தும் சிறுவர்களுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தனர். கூட்டம் அதிக அளவில் டூபிளக்ஸ் சிலை அருகிலேயே இருந்தது. அதற்கடுத்தபடியாக காந்தி சிலை எதிரில் இருந்த மைதானத்தில் மக்கள் கூடியிருந்தனர். அங்கு இசைக் கச்சேரிக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. டூபிளக்ஸ் சிலை அருகே வானவேடிக்கைக்கு ஏற்பாடாகிக் கொண்டிருந்தது.
முழுவதும் இருட்டத் தொடங்கியதும் வானவேடிக்கை ஆரம்பித்தது. பலப்பல வண்ணங்களைத் தூவி வானம் மின்னிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு வெடிக்கும் கூட்டம் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது.
ஜென்னி “ஹே!” என்று கத்திக் கொண்டும் குதித்துக் கொண்டும் இருந்தாள். அவளுடன் ரஃபி, சார்லஸ், மதுமிதா ஆகிய நண்பர்களும் குதித்துக் கொண்டிருந்தார்கள். ஜென்னியும் ரஃபியும் மிக நெருக்கமாகவே காணப்பட்டார்கள். ஒருவர் கையை ஒருவர் கோர்த்துக் கொண்டும், எப்போது முத்தமிடலாம் என்று ஒவ்வொரு முறை அவர்கள் பார்த்துக்கொள்ளும்போது கண்களாலேயே கேட்டுக் கொண்டும் இருந்தனர். எங்கும் ஆராவாரம், கூச்சல் என்று சந்தோசமாக இருந்தது.
ரஃபி யாரையோ பார்த்துக் கையசைத்தான். அவன் அருகில் வந்ததும் அவனுடன் கை குலுக்கிவிட்டு அவனை ஜென்னிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
“ஜென்னி, இவன் என் பிரண்ட் சுந்தர்.”
அவள் “ஹாய்” என்று சொல்லிவிட்டு அவனுக்குத் தன் கையை நீட்டினாள். அவன் தயக்கத்துடன் தன் கைகளைக் குலுக்கிவிட்டு அவர்களோடு சேர்ந்து கொண்டான்.
இவர்கள் குதித்துக் கொண்டிருப்பதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் அசோக். அத்துடன், தன் கண்களில் அதிகபட்சக் காழ்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தான். இதோ, கைக்கெட்டும் தூரத்தில் இந்த வாழ்க்கை வெறும் வேடிக்கை மட்டும் பார்க்கத் தனக்கு வாய்த்திருக்கிறது என்று நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு ஏற்படும் எரிச்சலோ சொல்லில் அடங்காதது. அவன் எப்போதும் அதை மறைக்க விரும்புவதில்லை. அதை அவன் கண்களில் யார் வேண்டுமானாலும் கண்டுபிடித்துவிடலாம். இப்போதும் அவன் கண்கள் அவ்வாறே இருந்தன. ஆனால், அதை இனங்காணக்கூடிய நிலையில் அங்கு யாரும் இல்லை. அவர்கள் அவரவர் கொண்டாட்டத்தில் திளைத்திருந்தனர். அசோக் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடன் வெறுப்பாக நின்றிருந்தான் கதிர். இருவரும் அவர்களுக்கு நேர் பின்னால் நின்றிருந்தனர்.
“இங்க இன்னாதான்டா நடக்குது?” என்றான் கதிர், சலிப்பாக.
அவன் இந்தக் கடற்கரையை இதற்கு முன் இப்படிப் பார்த்ததே இல்லை. திடீரென்று அது இப்படி ஒரு பரிமாணம் அடைந்ததைக் கண்டு அவன் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருந்தான். ஒவ்வொரு பெண்ணாக உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு பெண்ணின் அழகும் வனப்பும் அவனை ஏதோ செய்தன. அவனால், அவனைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர்கள் நேருக்கு நேராக அவனைப் பார்த்தபோதும்கூட அவனால் பார்வையை விலக்க முடியவில்லை. ‘இவர்களெல்லாம் இத்தனை நாட்கள் எங்குதான் இருந்தார்கள்’ என்று தன் மனதிற்குள்ளாகவே கேட்டுக் கொண்டான். அவன் ரத்தவோட்டம் அதிகரித்தது. எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கொண்டிருந்த அணுக்களெல்லாம் வெறிபிடித்ததுபோல் அவனுள் எதையோ நிகழ்த்திக் கொண்டிருந்தன. எழுந்த அவன் ஆண்மையைக் கடுஞ்சிரமம் கொண்டு, எவர்மீதும் உரசிவிடாதவாறு கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் எதற்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவனுக்குத் தோன்றியது. இத்தனை சந்தோசமான ஒரு வாழ்க்கை இந்த ஊரில் உள்ளதா? அதை அனுபவிக்காமலா நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தன்னையே நொந்து கொண்டான்.
“டேய், உன்னத்தான் கேட்டேன். இங்க இன்னா நடக்குதுன்னு?”
அசோக் கண்களில் வெறுப்பு மட்டுமே வெளியேறிக் கொண்டிருந்தது. அவன் அந்தக் கும்பலின் மேலிருந்து கண்களை எடுக்காமலேயே பதிலளித்தான்.
“பிரெஞ்சு கலாச்சாரத் திருவிழா. பத்து நாள் அலையன்ஸ் பிரான்சிஸ்ல பிரெஞ்சு படமா போட்டானுங்க. இன்னிக்குத் கடைசி நாள். விடிய விடிய இப்படித்தான் இருக்கும்.”
“விடிய விடியவா? நம்பள மட்டும் ஒரு மணிக்கு மேல நியூ இயர் கொண்டாடக் கூடாதுன்னு சொல்றானுங்க? இன்னாடா அநியாயம் இது?”
அசோக் திரும்பி கதிரை முறைத்தான். பதிலுக்கு கதிர், “இன்னாடா?” என்றான்.
“நீங்க எங்கடா நியூ இயர் கொண்டாடுறீங்க? நல்லாக் குடிச்சிட்டு சும்மா போறவன சண்டைக்குக் கூப்புடுவீங்க. நிக்கற வண்டிய ஒடைப்பீங்க. ரோட்ல வாந்தியெடுப்பீங்க. இதான உங்கக் கொண்டாட்டம்?”
“ம்... வேற இன்னா?”
“கொண்டாட்டம்னா பாரிஸ்தான்டா.”
“ஏதோ போயி பாத்த மாதிரியே பேசற?”
“போயிப் பாக்கத்தான்டா போறன்.”
‘கிழிச்ச…’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான் கதிர். வானவேடிக்கை ஆரம்பித்ததும் கூட்டம் நெருக்கமாக ஆரம்பித்தது. கதிரை உரசியபடி ஓர் இளம்பெண் நின்று வானவேடிக்கையை ரசித்துக்கொண்டிருந்தாள். அவள் உடல் உரசும்போதெல்லாம் இவன் நெளிந்து கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் அவள் தன் தலையை உயர்த்தி மேலே பார்த்தபோது, அவள் தலை, கதிரின் மார்பின் மீது சாய்ந்து நின்றது, அவன் தன் உடலை நகர்த்தாமலேயே குனிந்து அவள் மார்பையே பார்த்துக் கொண்டிருந்தான். கதிருக்கு அப்படியே இருந்துவிடலாம்போல் தோன்றியது. நம் மனது எப்போதெல்லாம் அப்படியே இருந்துவிடலாம் என்று நினைக்கிறதோ அப்போதே அது முடிந்தும் விடுகிறது.
வானவேடிக்கைகள் முடிந்திருந்தன. காந்தி சிலை அருகில் கச்சேரி ஆரம்பிக்கும் அறிகுறி தெரிய, கூட்டம் மெல்ல அதை நோக்கி நகர்ந்தது. கச்சேரி என்றதும் உள்ளூர்வாசிகள் வேறு கணக்கில் வந்து இடம் பிடித்திருந்தனர். ஆனால், முதலில் முதுகுவரை முடி வளர்த்த ஒருவன் கையில் கிட்டாருடன் வந்து நடுவில் உட்கார்ந்து, கண்களை மூடிக்கொண்டு சிறிது நேரம் முக்குவதுபோல் முகத்தை வைத்துக் கொண்டான். சில நொடிகள் கழித்து மெல்ல கிட்டார் ஒலி கேட்டது. பிறகு சில நொடிகள் கழித்து அவன் ஒரு பிரெஞ்சுப் பாடலைப் பாடத் தொடங்கினான். அவன் நான்கைந்து வரிகள் பாடத் தொடங்கியதுமே முன்வரிசையில் உட்கார்ந்திருந்த உள்ளூர்வாசிகள் ஒவ்வொருவராய் எழுந்து நகரத் தொடங்கினர். அவனுடைய உண்மையான பார்வையாளர்கள் இன்னும் மெல்ல அவனை நெருங்கி வந்துகொண்டிருந்தார்கள்.
- தொடரும்
விவாதங்கள் (3)
- Rajaram Iyer Rajaram play list
I have been to Poni many times I like the beach hote ls shopping
3 likes - Vijay Pradeep
அருமையான எழுத்துநடை.. வாழ்த்துக்கள் தோழர்
0 likes - Saroja Sivaram
ஆம்,ஒரு பத்து முறைகளுக்கு மேல் சென்றிருப்பேன்.கடற்கரை,ஆசிரம்ம்,ஆரோவில் ,அழகிய சாலைகள் எல்லாமே பிடிக்கும்.
1 likes