அத்தியாயம் 1

தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் ஆண்டுதோறும் சுதேசிப் பொருட்காட்சி நடத்துகிறவர்களை வாழ்த்துகிறேன். அந்தப் பொருட்காட்சி காரணமாக என் வாழ்க்கையில் வெகு காலமாய் மர்மமாக இருந்து வந்த ஒரு விஷயம் துலங்கியது. என் மனதில் சுமந்திருந்த ஒரு பெரிய பாரம் நீங்கியது. அடிக்கடி என்னைச் சிந்தனையில் ஆழ்த்தி என் நிம்மதியைக் குலைத்துவந்த ஒரு சந்தேகம் நிவர்த்தியாகி என்னுடைய உள்ளத்தில் அமைதி ஏற்பட்டது.

இந்த வருஷத்துச் (1950 பெப்ருவரி, மார்ச் மாதங்களில் எழுதப்பட்டது) சுதேசிப் பொருட்காட்சிக்கு நான் போகவில்லை. சென்ற வருஷத்தைக் காட்டிலும் இந்த வருஷம் எவ்வளவோ சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பதாக எல்லாரும் சொன்னார்கள். ஆனாலும் நான் போகவில்லை. போகலாமா, வேண்டாமா என்று யோசனை செய்து, வேண்டாம் என்று முடிவு கட்டினேன். போயிருந்தால், அங்கே நான் தேவகியைச் சந்தித்த இடத்துக்கு என் கால்கள் என்னை இழுத்துக் கொண்டு போயிருக்கும். பழைய ஞாபகங்களில் மூழ்கிப் போயிருப்பேன். எல்லாரும் பார்க்கும் காட்சிகளில் என் மனம் சென்றிராது. ஆடல் பாடல்களிலோ நாடகம் நடனங்களிலோ நான் எவ்விதம் கருத்தைச் செலுத்த முடியும்? சித்திரக் காட்சிக்குள் சென்றால், தேவகியின் சித்திரம்தான் என் மனக் கண்முன்னால் தோன்றும். மின்சார சக்தியின் அற்புதங்களைக் காட்டும் இடத்துக்குள் சென்றால், அங்கே திடீரென்று தேவகியை நான் பார்த்த உடனே என் உடம்பில் பாய்ந்து குலுக்கிப் போட்ட மின்சார சக்தியைத்தான் நினைத்துக் கொள்வேன்.

ஒரு வருஷமா? இரண்டு வருஷமா? இருபத்தைந்து வருஷத்துக்குப் பிறகு அவளை நான் பார்த்தேன். கன்னிப் பெண்ணாகத் துள்ளித் திரிந்து கொண்டிருந்தவளை மூன்று குழந்தைகளின் தாயாராகப் பார்த்தேன். ஆயினும், பார்த்த தட்சணமே அடையாளம் தெரிந்துபோய்விட்டது. கொஞ்ச நஞ்சம் சந்தேகம் இருந்தாலும் செக்கச் சிவந்த அவள் கன்னத்தில், காதின் ஓரத்தில் இருந்த அழகிய மச்சம் அந்தச் சந்தேகத்தைப் போக்கிவிட்டது.

தேவகியும் என்னை அடையாளம் தெரிந்து கொண்டுவிட்டாள் என்பது அவள் என்னைப் பார்த்துப் பிரமித்து நின்றதிலிருந்து தெரிந்தது. அவள் கையைப் பிடித்துக் கொண்டு வந்த குழந்தை அவளைப் பிடித்து இழுத்ததைக்கூடக் கவனியாமலே நின்றாள்.

என் மனக் கொந்தளிப்பை ஒருவாறு சமாளித்துக்கொண்டு, "ஹெட்மாஸ்டர் பெண் தேவகிதானே?" என்று நாத்தழுதழுக்கக் கேட்டேன்.

"ஆமாம்; நீங்கள் கிட்டாதானே?" என்றாள் தேவகி.

"ஓகோ! இன்னும் என்னை ஞாபகம் வைத்திருக்கிறாயே?" என்றேன்.

"எப்படி மறக்க முடியும்? என்றைக்காவது ஒருநாள் உங்களைச் சந்திப்போம் என்கிற நம்பிக்கை என் மனதில் இருந்தது. அந்த நம்பிக்கை இப்போது நிறைவேறிவிட்டது!" என்று தேவகி கனிவுடன் கூறினாள்.

"அப்படியா? என்னைச் சந்திக்கும் விருப்பம்கூட உனக்கு இருந்ததா? அது என்னுடைய பாக்கியந்தான்! இந்தச் சென்னைப் பட்டணத்தில்தான் நீ இருக்கிறாயா? ஜாகை எங்கே? உன்னுடைய கணவர், இந்தக் குழந்தைகளின் தகப்பனார், அவர் இங்கே வரவில்லையா?" என்று தயங்கித் தயங்கிக் கேட்டேன்.

"வீட்டுக்கு வாருங்கள்! எல்லாக் கதையும் சாவகாசமாகச் சொல்கிறேன்!" என்று தேவகி கூறிய வார்த்தைகளிலேயே கண்ணீர் கலந்திருந்ததாகத் தோன்றியது.

அவளுடைய வீட்டு விலாசத்தைத் தெரிந்துகொண்டேன். பிறகு பிரிய மனமின்றிப் பிரிந்து சென்றேன்.

அடுத்த ஞாயிற்றுக்கிழமை காலையில் வீட்டுக்கு வரும்படி தேவகி சொல்லியிருந்தாள். அதுவரையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாகச் சென்று கொண்டிருந்தது.

அந்த நீண்ட யுகங்களையெல்லாம் பழைய சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைவுப்படுத்திக் கொண்டு கழித்தேன்.

(தொடரும்…)


விவாதங்கள் (8)