சிறுகதை

டல் வேட்கையின் உச்சக் கனலில் தகித்துக் கொண்டிருந்தோம். உடலெங்கும் பரவிய முத்தக் குளிர்ச்சி, அக்கினிப் பிழம்புக்கு எண்ணெய் வார்த்தது. வியர்வையில் உடைகள் தோய்ந்து அங்கங்கள் தீவுத்திட்டுகளாகின. வரும் நொடியில் இந்தப் பிரபஞ்சம் அழிந்து தீர்வதாகவும், அதற்குள் மீதமிருக்கும் மொத்தக் கடலையும் குடித்துவிட எத்தனிக்கும் புதிதாய் ஜனித்த ஒரு சிறிய மீனின் ஆவலிலும் ஒருவருக்கொருவர் இறுக்கியணைத்தபடி பொக்கிஷம் தேடி உதட்டுக் குவியலில் முத்துப் பற்கள் செந்நாவைத் சீண்ட, துடித்து நடுங்கிய உதடுகள் ஒன்றையொன்று ஆதூரமாய்ப் பற்றிக்கொண்டன. அலுவலகக் கட்டடத்தின் கடைசி மாடிக்குச் செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிகளில், வழிந்தோடும் வியர்வை ஆற்றங்கரையில் உடல் காய்ந்து கொண்டிருந்தோம். 

ஏழாவது மாடிக்குச் செல்லும் அந்தப் படிக்கட்டில் அதிக ஆள் நடமாட்டம் இருக்காது. எப்போதாவது செக்யூரிட்டிகள் வந்து போவார்கள். மாடியில்தான் ஜெனரேட்டர் உள்ளிட்ட சமாச்சாரங்கள் இருப்பதால் அவ்வபோது வேலையாட்கள் வந்துசெல்வார்கள். அவ்வளவுதான். மதன்தான் முதலில் இந்த இடத்தைக் கண்டுபிடித்தான். இடைப்பட்ட நாளொன்றில், கிடைத்த அரை மணிநேரத்தில் அழைத்துக்கொண்டுபோய்க் காட்டினான். சுமார் பதினைந்து நிமிடங்கள் அங்கு காத்திருந்தோம். யாரும் வருவதாகத் தெரியவில்லை. சிசிடிவி எதுவும் இருக்கலாம் என்று பயந்தேன். ஆனால், என்னுடைய கண்களுக்கு எதுவும் தட்டுப்படவில்லை. பின்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் என்று கீழிறங்கி வந்தோம். ஓர் இடம் கிடைத்த திருப்தி மனதிற்குள். 

இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது, இன்றுதான் வாய்ப்பு அமைந்திருக்கிறது. சனிக்கிழமையில் பெரும்பாலும் விடுமுறை. ஆனால், எங்களுக்கு இல்லை. எனக்கு நைட் ஷிஃப்ட் முடிகிறது; மதன், காலை பத்து மணி ஷிஃப்டிற்கு வருகிறான். அவனுக்கு இந்த வாரம் சனி - ஞாயிறு சேர்ந்தாற்போல் வேலை இருப்பதால் அலுவலகத்தில்தான் தங்கல்.

மதன் நெட்வொர்க்கிங் அணியில் இருக்கிறான். வார நாட்களில் பராமரிப்பு என்றால் ப்ராஜெக்ட்டில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். திடீரென்று ஏதேனும் பிரச்னை வரலாம். வேலையில் தடங்கல் வரும். இதுதான் சாக்கு என்று வேலையை ஓபி அடித்துவிட்டு டீக்கடைக்கும் தம்மடிக்கவும் செல்லும் ஆட்கள் ‘எப்படா’வென்று காத்துக் கிடப்பார்கள். இன்ன தேதிக்குள் வேலையை முடிக்கவில்லை என்றால் ‘க்ளையெண்ட்’ கழுத்தில் கத்தி வைப்பான். காரணம் கேட்பான். சமாளித்தாலும் கண்டுபிடித்து விடுவான். கண்டுபிடித்தாலும் கண்டுபிடிக்காததைப் போல் நடந்து கொள்வான். அடுத்த முறை ப்ராஜெக்ட் கொடுப்பதற்குக் கார்த்திகை மாதத்து நாயாய் அலைய விடுவான். நிறுவனம் ப்ராஜெக்டைக் கேள்வி கேட்கும். ப்ராஜெக்டில் நெட்வொர்க்கிங் துறையைக் கைகாட்டுவார்கள். இங்கோ மேனேஜர்கள் திருதிருவென்று முழிப்பான்கள். நிதி ஒதுக்குவது குறையும். பின்னாலிருந்து மேனேஜர்களுக்குத் தார்க்குச்சி குத்திக்கொண்டே இருப்பார்கள். அவன்கள் நம்மைச் சொருகுவான்கள். இதெல்லாம் தேவையா? அதனால் பெரும்பாலும் வார இறுதிதான் இந்தச் சமாச்சாரங்களுக்கு என்று ஒதுக்கப்படும். அப்படியே ஏதாவது அசம்பாவிதம் நடந்தாலும் திங்கட்கிழமைக்குள் கோக்குமாக்கு செய்து சமாளித்துவிடலாம். 

பத்து மணி ஷிஃப்டிற்கு அவன் வரும் பேருந்து ஒன்பதரை மணிக்கு அலுவலகத்தினுள் நுழையும். அதே பேருந்து அரை மணி நேரம் கழித்து என்னைப் போல் நைட் ஷிஃப்ட் முடித்து வருபவர்களை ஏற்றிச்செல்லும். சரியாகப் பார்த்தால் அந்த அரை மணிநேர இடைவெளிதான் நாங்களிருவரும் சந்திக்கக் கிடைக்கும் நேர அவகாசம். இப்போது நேரம் காலை மணி 9.47. இன்னும் 13 நிமிடங்கள்தான். சனி - ஞாயிறுகளில் ஒரு பிளாக்குக்கு ஏதேனும் ஒரு லிஃப்ட்தான் வேலை செய்யும். மற்ற அனைத்தையும் பராமரிப்பு என்று நிறுத்தி வைத்திருப்பார்கள். அந்த லிஃப்டையும் நம்ப முடியாது. 9.50-க்கு இறங்க ஆரம்பித்தால்தான் 9.55-க்குக் கீழே செல்ல முடியும். ஓடிச்சென்று 10 மணி பேருந்தைப் பிடிக்க முடியும்.

கண்கள் இறுக மூடிக்கிடக்கிறோம். யாரோ மாடிப்படி ஏறி வரும் காலடி ஓசையை உணர முடிகிறது. ஆனால், நாங்கள் கண்களைத் திறக்கத் தயாராக இல்லை. விடுவிக்க வேண்டிய கரங்கள் மேலும் பிணைகின்றன. எரிமலையின் சிறு துளை வழியே செந்தீக்குழம்புகள் பீறிடுவதைப் போல, கால்களின் கீழ் கிடக்கும் நிலம் பிரிந்து குருதியோட்டம் வெளிக்கிட்டு அணையுடைத்துப் பாய்கிறது; முயக்கத்தின் உன்மத்தத்தில் திளைத்த அந்த நொடியில்தான், மின்னலொளி போன்ற ஒரு வெளிச்சக்கீற்று வெட்டி மறைந்தது. ஒரு நொடி இடைவெளியில் மீண்டும் ஒருமுறை அதே கீற்று.

ஏதோ உணர்ந்தவர்களாய் கண்கள் திறந்தோம்; சீருடை அணிந்த செக்யூரிட்டி, கைகளில் செல்போன் கேமராவுடன் நின்றிருந்தார்! விஷயம் புரிவதற்கு அரை நொடி ஆனது. கைகள் படபடத்தன. ஏற்கெனவே குதிரையின் குளம்படி ஓசையில் துடித்துக் கொண்டிருந்த இதயத்துடிப்பு அதைவிட வேகமாய்த் துடிக்க முயன்று, அவ்வளவுதான் முழு வேகம் என்று உணர்ந்ததும் சீரானது. முழுதாய்க் களையாத உடைகளை அவசர அவசரமாக அள்ளிப்போட்டுக்கொண்டோம். எதுவும் பேசிக்கொள்ளவில்லை. இயல்புக்குத் திரும்புவதற்கு நீண்ட நேரம் ஆகவில்லை. “ப்ளீஜ் கம் டூ மை ரூம்” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று இறங்கிச் சென்றுவிட்டார், அந்த செக்யூரிட்டி. ‘ப்ளீஜ்’ என்று சொல்லியதிலிருந்தே அவர் வட இந்தியாவைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன். இந்த ஐடி வேலையில் எத்தனையோ மாநிலங்களிலிருந்து வந்தவர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். பழகி இருக்கிறேன். நான் பார்த்தவரையில் வடநாட்டவரிடம் இருக்கும் பரவலான ஒற்றுமைகளுள் ஒன்று இதுபோன்ற உச்சரிப்புகள்தான். அந்த செக்யூரிட்டி கொஞ்சம் வயதானவராகத் தெரிந்தார். நிச்சயம் ஓர் உயர்பொறுப்பில் இருப்பவர்தான் என்பது அவர் அணிந்திருந்த உடுப்பிலிருந்தே தெரிந்தது. புதிதாய் வேலைக்குச் சேருபவர்களுக்கு வெளிர் நீல சட்டையும் மை ஊதா பேண்ட்டும். சிறிது அனுபவம் உள்ளவர் என்றால் தொப்பியில் வேறுபாடு தெரியும். அதற்கும் மேல் இருப்பவர்களுக்கு வாக்கிடாக்கி உண்டு. எங்களுக்காகக் காத்திருக்காமல் விறுவிறுவென்று கீழே இறங்கிச் சென்றார். அவரது பேண்ட் பெல்ட்டில் ஒரு வாக்கிடாக்கி சொருகப் பட்டிருந்தது. 

பயமும் அல்லாத வெட்கமும் அல்லாத ஓர் உணர்வு. அதோடு சேர்த்து, என்னதான் நடக்கும், பார்த்துக் கொள்ளலாம் என்றொரு மனநிலையும். தைரியமாக இருப்பதாகவே தோன்றியது. அறைக்குள் சென்றோம். நாங்கள் நினைத்தது சரிதான். ‘மேஜர் வீர்பிரதாப்’ என்று பெயரிட்ட பலகை வாசல் கதவில் ஒளிர்ந்தது. அலுவலகத்தில் நாங்கள் இருக்கும் பிளாக் மற்றும் பக்கத்து பிளாக்குக்கு செக்யூரிட்டி இன்சார்ஜ் இவர். ஒரு ப்ராஜெக்ட் மேனேஜருக்கு அளிக்கப்படுவதைப் போன்ற சகல வசதிகளுடனான அறையில் இருந்தார்.

“நான் உங்ககிட்ட எந்தக் கேள்வியும் கேட்கப் போறது இல்ல; நீங்க சொல்றதையும் கேட்குறதா இல்ல. எதுவா இருந்தாலும் கம்பெனிக்கு உள்ள நீங்க பண்ணது தப்புதான். எங்களால பார்த்தும் பார்க்காத மாதிரி போக முடியாது. அது எங்களுடைய வேலைக்கும் எங்களுக்கு சம்பளம் கொடுக்குற நிறுவனத்துக்கும் நாங்க செய்யக்கூடிய துரோகம். இத நாங்க மேலிடத்துக்குச் சொல்லித்தான் ஆகணும். சொல்லலனா எங்களுக்குத்தான் பிரச்னை. சொல்லப்போனா நீங்க குறிப்பா என்கிட்ட மாட்டினதுக்காக சந்தோஷப்படணும். இதே வேற யாராது சின்னப் பசங்க அல்லது கொஞ்சம் வில்லங்கமான ஆளுங்க பார்த்திருந்தா இத வேற மாதிரி பயன்படுத்திருப்பாங்க. சரி, திங்கட்கிழமை ஹெச்ஆர் என்கொயரி இருக்கும். தயாரா இருந்துக்கோங்க. இப்போ நீங்க கிளம்பலாம். பயப்படத் தேவையில்லை, உங்க போட்டோ வெளியே எங்கேயும் கசியாது. ஹெச்ஆர்கிட்டகூட காட்ட மாட்டேன். என்னோட ஓர் ஆதாரத்துக்குத்தான் இது. மத்தபடி எவரி திங்க் இஸ் நார்மல். யூ கேன் கோ நௌ.”

சனி - ஞாயிறுகளைக் கடத்துவது ஒன்றும் பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை. சொல்லப்போனால் சனி - ஞாயிறு என்றாலே வார விடுமுறை என்பதெல்லாம் எங்களுக்கு எப்போதோ வழக்கொழிந்து போயிருந்தது. எப்போது போதுமான அளவு ஆள் இருக்கிறதோ அதைப் பொறுத்து சுழற்சி முறையில் மற்றவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். அதிலும் இரண்டு நாட்கள் சேர்ந்தாற்போல் கிடைத்தால் அன்று மழை பூமியிலிருந்து வான் நோக்கி பெய்யக்கூடும். எங்களைப் பொறுத்தவரையில் சனி - ஞாயிறெல்லாம் மற்றுமொரு நாளே. அதிசயமாய் இந்த வாரம் எனக்கு இரண்டு நாள் தொடர் விடுமுறை கிடைத்திருக்கிறது. வானில் மண்வாசனை அடிக்கிறது!

திங்கட்கிழமை என்ன நடக்குமோ என்கிற உதறல் இல்லை. வேலை போய்விடுமோ என்கிற பயம் இல்லை. உடன் பணியாற்றுபவர்களுக்கு விஷயம் தெரிந்தால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்கிற எண்ணமெல்லாம் அறவே இல்லை. இதற்குமேல் பொறுத்துக்கொள்ள ஒன்றுமில்லை. எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையை இந்த ஆறு மாத காலம் போதுமான அளவுக்கு அளித்திருந்தது. இந்த இரண்டு நாட்களாக, தூங்கும்போது அடிக்கடி மண்டைக்குள் ஒரு மின்னலொளி வெட்டி மறைந்தது மட்டும்தான் தொந்தரவாக இருந்தது. அலுவலகத்தில் இருந்த மதனும் போனில் பேசும்போது அதையே சொன்னான்.

திங்கள் காலை அலுவலகமே பரபரப்பாக இயங்க ஆரம்பித்திருந்தது. பேருந்தில் வரும்போதே என்னுடைய டீமில் எனக்கு நெருக்கமான இருவரிடம், “ஹெச்ஆரைப் பார்த்துவிட்டு வருவேன்; கொஞ்சம் நேரம் ஆகலாம்” என்று வாட்ஸ்அப்பில் சொல்லியிருந்தேன். மேனேஜரிடம் ஏதேனும் சொல்லி சமாளித்துக் கொள்வதாகச் சொன்னார்கள். அவர்களை எதுவும் சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்கு அனுப்பிய அதே செய்தியை அவருக்கும் அனுப்பி வைத்தேன். எதற்குப் பொய் சொல்ல வேண்டும்? வேண்டிய காரணத்தை விடுத்து, தேவையில்லாமல் பொய் சொல்லுவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு இருந்ததில்லை. பொய் விலைமதிப்பற்றது. சிறிய விஷயங்களுக்குச் சொல்லும் பொய்களின் மூலம் நாம் பொய்யை உதாசீனப்படுத்துகிறோம். மிகப் பெரிய சிக்கல்களிலிருந்து தற்காலிமாக நம்மைக் காக்கும் கேடயம் அது. இன்றியமையாத சூழல்களில் சொல்வதே அந்தப் பொய்களுக்கு நாம் செய்யும் மரியாதை. இதுவரை அப்படி மலினமான பொய்கள் சொல்லி அலுவலகத்துக்கு விடுப்பெடுத்ததும் இல்லை. அதனாலேயே எனக்கும் என்னுடைய முன்னாள் மேனேஜருக்கும் நிறைய முட்டல்கள் ஏற்பட்டிருக்கின்றன. “ஏன் இப்படி உண்மையச் சொல்லி மாட்டிக்குற? ஏதாவது உடம்பு சரியில்லனு சொல்ல வேண்டியதான? வீட்ல யாருக்காவது முடியல, சீரியஸ்னு சொல்லி லீவ் போட வேண்டியதுதான?” என்று எத்தனையோ முறை நண்பர்கள் சொல்லி வற்புறுத்தி இருக்கிறார்கள். பலமாக மறுத்து விடுவேன். ஒரு சிறிய விடுமுறைக்காக, அதுவும் எனக்கென்று என் தலைமீது ஏற்கெனவே எழுதப்பட்ட விடுமுறைக்காக உயிரோடு இருக்கும் என்னுடைய தாத்தாவையும் பெரியப்பாவையும் கொல்லும் தைரியம் எனக்கில்லை. அதுபோக இதற்காகவெல்லாம் பொய் சொல்லி, என்னிடம் மீதமிருக்கும் சொற்ப அறத்தை இவர்களிடம் அடமானம் வைக்க முடியாது. 

மேனேஜருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பிய மெசேஜுக்கு ‘ப்ளூ டிக்’ விழுந்திருந்தது. செய்தியைப் பார்த்துவிட்டார். அலுவலகத்தில் இப்போது இதைக் கட்டாயமாக்கி விட்டார்கள். எங்கள் ப்ராஜெக்டில் இருக்கும் அனைவரும் தங்களுடைய அலுவலக வாட்ஸப் கணக்கில் இந்த ‘ப்ளூ டிக்’ வசதியைக் கட்டாயம் ‘ஆன்’ செய்து வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால், நாம் அனுப்பிய செய்தி அவர்களைச் சென்று சேர்ந்ததா இல்லையா, அதை அவர்கள் பார்த்தார்களா இல்லையா என்பது தெரிவதில்லை. ‘ப்ளூ டிக்’ வசதியைச் செயல்பாட்டில் வைப்பதின் மூலம், பார்க்கவில்லை என்று சொல்லி யாரும் தப்பிக்க இயலாது என்பதால் இந்த ஏற்பாடு. அதைப் பார்த்தும் அவர் பதில் எதுவும் அனுப்பவில்லை என்று தெரிந்தவுடன் கூடுதல் உற்சாகமாகிவிட்டது. நாம் ஏற்கெனவே வெறுக்கும் ஒரு நபர் நம் செய்கைகளால் இன்னும் கொஞ்சம் வெறுப்படைவதைப் பார்க்கும்போது கிடைக்கக்கூடிய அந்த அற்ப சந்தோஷம் அதிக அளவிலான கிளர்ச்சி தரக்கூடியதாய் இருக்கிறது. 

நான் ஹெச்ஆர் கேபினுக்குச் செல்வதற்கு முன்பாகவே வெளியே போர்டிகோவில் கிடந்த நாற்காலியில் மதன் வந்து அமர்ந்திருந்தான். இரண்டு நாட்கள் சரியான உறக்கம் இல்லாதது அவனது வீங்கிய கண்களில் தெரிந்தது. எனக்குள் இருந்த கோபத்தின் வீரியத்தை அந்தக் கண்கள் குறைத்ததுபோல தோன்றியது. இன்னும் ஹெச்ஆர் வந்திருக்கவில்லை. அதே தளத்தில் இருந்த கேஃபிடேரியா சென்று இரண்டு டீ வாங்கி வந்தேன். காலையிலிருந்து அவன் எதுவும் குடித்திருக்க மாட்டான் என்பது எனக்குத் தெரியும். டீயைக் குடிக்க ஆரம்பிக்கும்போதே, ஹெச்ஆர் வந்துவிட்டார். “குட் மார்னிங்” என்று எங்களைப் பார்த்து புன்னகைத்துவிட்டு பதிலெதுவும் எதிர்பாராதவராய், என்னவென்று கூட விசாரிக்காமல் கேபினுக்குள் சென்றுவிட்டார். ஹெச்ஆர் என்றால் இப்படித்தானா? இத்தனை காலம் இங்கே வேலை பார்த்துவிட்டு இதைக்கூட நான் புரிந்துகொள்ளாவிட்டால் எப்படி? தாங்கள் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிவிட்டு, நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பதைக் கொஞ்சம்கூட கேட்காமல் செயல்படுவதற்கும், அப்படியே கேட்டாலும் அதற்கு நேர்மாறாய், தங்களுக்குக் கூழைக் கும்பிடு போடுவதற்கு மட்டும்தான் இந்த ஹெச்ஆர் ஆட்களை நிறுவனங்கள் வேலைக்கு வைத்திருப்பார்கள்போல.

ஹெச்ஆர் வருவதை எங்கிருந்தோ பார்த்துக்கொண்டு காத்திருந்தவர்போல பின்னாலேயே வந்து சேர்ந்தார், அந்த செக்யூரிட்டி. சரியாக ஐந்து நிமிடங்கள் கழித்து வெளியே வந்து எங்களிருவரையும் ஹெச்ஆர் கேபினுக்கு உள்ளே அழைப்பதாகச் சொல்லிவிட்டு அவர் சென்றுவிட்டார். இன்னும் பாதி டீ மிச்சமிருந்தது. உள்ளே போகிறோமா என்று திரும்பி திரும்பிப் பார்த்தபடியே நடந்தார். உள்ளே செல்வதற்காக எழுந்த மதனிடம், “ஒண்ணும் அவசரமில்ல. டீயை முடிச்சுட்டுப் போலாம்” என்று கைகாட்டி அமர வைத்தேன். வராண்டாவிலிருந்து இறங்கும் வரை நாங்கள் உள்ளே போகிறோமா என்று திரும்பிப் பார்த்தபடியே சென்றார். அவர் மாடிப்படியை அடையும் வரை நாங்கள் உள்ளே செல்லவில்லை. சரியாக அவர் படியிறங்கத் திரும்பியதும் விருட்டென்று மதனின் கையை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தேன். அநேகமாய் படியிறங்கத் திரும்பிய பின்னர் மீண்டும் ஒருமுறை அந்த செக்யூரிட்டி எட்டிப் பார்த்திருப்பார்.

ஹெச்ஆர் கேபினுக்கு முன்னதாக சிறிய வரவேற்பிடம்போல ஒன்று இருந்தது. அதைத் தாண்டி இருந்த கதவைத் திறந்தால் சதுரம் சதுரமாக நேர்வரிசையில் இருந்த பெட்டிகளுக்குள் அமர்ந்திருந்தவர்களின் உச்சந்தலையை மட்டும்தான் பார்க்க முடிந்தது. ‘Ms. Ramya Leela’ என்று ஒட்டப்பட்டிருந்த ஒரு பெட்டியினுள்தான் நாங்கள் பார்க்க வேண்டிய எங்கள் ப்ராஜெக்டிற்கு என்று நியமிக்கப்பட்டிருந்த ஹெச்ஆர் அமர்ந்திருந்தார். எங்களைப் பார்த்ததும் மெலிதாய் புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு அமரச் சொன்னார். அவரைத் தவிர இரண்டு பேர் மட்டுமே அமரும் வகையில்தான் அந்த இடம் இருந்தது. இவரிடம் இதற்குமுன் எனக்கு அறிமுகம் கிடையாது. எங்கள் ப்ராஜெக்டிற்கு என்று ஏற்கெனவே நியமிக்கப்பட்டிருந்த ஹெச்ஆர் இரண்டு மாதங்களுக்கு முன்புதான் வேறு நிறுவனத்துக்கு மாறியிருந்தார். அதன் பின்னர், இவர் இரண்டொரு முறை மேனேஜர் அறைக்கு வரும்போது பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான். 

என்னையும் மதனையும் பார்த்துவிட்டு, “ம்ம்ம்.. சொல்லுங்க. இப்போதான் செக்யூரிட்டி வந்து விஷயத்த சொல்லிட்டுப் போறாரு. என்ன பிரச்னை?”

நான் பேசத் தொடங்குவதற்குள் அருகில் இருந்த மதனைக் காட்டி, “இவரை அனுப்பிடலாமா? ஹி ஹிஸ் நாட் நார்மல். என் யூகம் சரியென்றால் இவர் நைட் ஷிஃப்ட் முடித்திருப்பார் என்று நினைக்கிறேன். மணி வேறு பத்தை நெருங்குகிறது, பேருந்து புறப்படும் நேரம். அவர் கிளம்பட்டும். நாம பேசலாம். இஸ் இட் ஓகே ஃபார் யூ?”

எனக்கும் அதுவே சரியென்று பட்டது. ஹெச்ஆரும் பெண்தான் என்பதால் பேசுவதற்கு எந்தத் தயக்கமும் எனக்கும் இல்லை. கேபினுக்கு வெளியே சென்று மதனை அனுப்பிவிட்டு மீண்டும் உள்ளே வந்தேன். அதற்குள் ஹெச்ஆர் எழுந்து வெளியே வந்துகொண்டிருந்தார். 

“Shall we go for a coffee?” நான் ஒரு நொடி யோசித்தேன்.

“Just now you had, right? It’s ok then, accompany with me” என்று சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினார். 

தரைத்தளத்தில் இருந்த ஒரு கடைக்கு அழைத்து வந்தார். வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதங்களே ஆனதால், கம்பெனியின் உள்கட்டுமானத்தை வியந்து பேசியபடியே வந்தார். நான் அவருடைய சிலாகிப்பை ரசிக்கும் மனநிலையில் இல்லை. அமைதியாக உடன் நடந்தேன். இரண்டு புறமும் பரந்து விரிந்திருந்த பிளாக்குகள் நடுவில் நடைபாதை, அதையொட்டிய உணவகங்கள், பாதை முடியும் இடத்தில் இருந்த நீரூற்று என்று ஒரு வண்ணத்துப்பூச்சியின் வடிவமைப்பில் இருந்த அந்தக் கட்டிடம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதையே சிலாகித்தபடி பேசிக்கொண்டிருந்தார். நான் இன்னும் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. எனக்கும் சேர்த்தே காபி வாங்கினார். அவருடைய நடவடிக்கைகள் எனக்கே விசித்திரமாகப் பட்டது. சுவரை ஒட்டிக்கிடந்த ஒரு கண்ணாடி மேஜையில் காபியோடு அமர்ந்துகொண்டோம். நான்கு சேர்களில் இரண்டு சேர்களை எடுத்து ஆளில்லாத பக்கத்து டேபிளோடு சேர்த்துப் போட்டார். யாரும் எங்கள் அருகில் வந்து உட்கார்ந்து விடக் கூடாது என்று. 

மெதுவாகப் பேச ஆரம்பித்தேன். இவ்வளவு நேரம் அவருடன் இருந்தது, ஒரு தோழமை உணர்வை உருவாக்கி இருந்தது.

“எனக்கும் மதனுக்கும் கல்யாணமாகி ஒரு வருஷம் ஆச்சு ரம்யா. லவ் மேரேஜ். நான் ஜாயின் பண்ணி ஆறு மாசம் கழிச்சு மதன் இந்த கம்பெனியிலே சேர்ந்தான். ரெண்டு பேரும் ஒரே ப்ராஜெக்ட், ஆனா, வேற வேற டீம். ஒவ்வொரு வருஷமும் ப்ரொஜ்க்ட்லருந்து ஒரு கெட்டூகெதர் நடத்துவாங்க. அந்த வருஷம் நடந்த கெட்டூகெதர் ஓஎம்ஆர்ல ஒரு ரிசார்ட்ல நடந்தது. ஈவ்னிங் நாலு மணிக்கு ஆரம்பிச்சு நைட்டு பத்து மணி வரைக்கும் போச்சு. பாட்டு, டான்ஸ்ன்னு அன்னிக்கு ஃபுல்லா செம்மயா என்ஜாய் பண்ணோம். அதுமட்டுமில்லாம அந்த ப்ராஜெக்டல புதுசா சேர்ந்திருந்த நாங்க எல்லாருமா ஒரு நாடகம் போட்டோம். காதலும் காமெடியும் கலந்த நாடகம். ஒரு சமூகக் கருத்தோட முடியுற மாதிரி ரெடி பண்ணிருந்தோம். அதுக்கு முன்னாடியே அறிமுகம் இருந்தாலும் அந்த நாடகத்துலருந்துதான் மதனும் நானும் இன்னும் நெருக்கமா பழக ஆரம்பிச்சோம். காலையில வந்ததும் ஒரு குட் மார்னிங், சேர்ந்து டீ குடிக்கப் போறது, லஞ்சுக்கு ஒண்ணா போறதுனு க்ளோஸ் ஆனோம். ஒரு கட்டத்துல மதன் அவனோட காதலைச் சொல்லிட்டான். அதை மறுக்கறதுக்கு என்கிட்டயும் காரணங்கள் இல்ல. சொல்லப்போனா அவன் சொல்லாட்டியும்கூட இன்னும் கொஞ்ச நாள்ல நானே சொல்லிடுற ஒரு நிலைமையிலதான் இருந்தேன். எங்களோட காதல் ஆபிஸ் சர்க்கிள்ல பெருசா தெரியலை. ரெண்டு பேருக்கும் நெருக்கமானவங்களுக்கு மட்டும் தெரியும். 

இந்த நேரத்துலதான் ஆபிஸ்ல ஒரு சின்ன டீம் சேஞ்ச். என்ன ப்ராஜெக்டோட கார்ப்பரேட் டீம்லயும் மதனை நெட்வொர்க்கிங்லயும் மாத்துனாங்க. திடீர்னு இது நடந்த உடனே ரெண்டு பேருக்குமே அதிர்ச்சி. ஐடில டீம் சேஞ்ச் பெரிய விசயமில்ல, வழக்கமா நடக்குறதுதான், இருந்தாலும் இது நாங்க எதிர்ப்பார்க்காத ஒண்ணு. எங்களோட வொர்க் நேச்சர் மாறத் தொடங்குச்சு. மதனுக்கு ஷிஃப்ட் போட ஆரம்பிச்சாங்க. வாரத்துல மூணு நாள் மார்னிங் ஷிப்ட். மீதி மூணு நாள் நைட் ஷிப்ட். நெட்வொர்க்கிங்ன்றதால எப்பவும் வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். ரொம்ப கவனமா ஹேண்டில் பண்ண வேண்டிய விசயமும்கூட. இதனாலேயே எங்களுக்குள்ள ஒரு சின்ன கேப் விழுந்த மாதிரி தோணுச்சு. அவன் ஃப்ரீயா இருக்கும்போது எனக்கு டைம் இருக்காது, நான் கூப்பிடும்போது அவனால வர முடியாது. ஒருத்தருக்கொருத்தர் பாத்துக்கறதே அபூர்வமா ஆகிடுச்சு.

என்னையும் கார்ப்பரேட் டீம்ல போட்டதால பெரும்பாலும் மீட்டிங், டிஸ்கஷன்ஸ், ப்ரொபொசல்ஸ், பிளானிங்னு அதுலயே போயிடும். அதுமட்டுமில்லாம எப்பவும் பிராஞ்ச் ஹெட் கூடவே இருக்கணும். அவருக்கு மீட்டிங் அரேஞ்ச் பண்றது, டேட்டா ரெடி பண்றது, ப்ரஸண்டேஷன்ஸ் ரெடி பண்றதுனு வேலை இருந்துகிட்டே இருந்துச்சு. வேலையைத் தாண்டி பெருசா எதுவும் யோசிக்கவே முடில. ஏதோ ஓர் அழுத்தம் உள்ள இருந்து திரும்பத் திரும்ப அழுத்திக்கிட்டே இருந்துச்சு. கொஞ்சம் விலகி இருந்து பெருமூச்சு விடுறதுக்காக மூச்ச உள்ள இழுக்குறபோதே அடுத்த வேலை வந்திருது. இழுத்த மூச்சை முழுசா வெளியகூட விட முடியல. இது எல்லாமும் எங்களோட நெருக்கத்தைக் குறைச்சுதே தவிர காதலைக் குறைக்கல. கிடைச்ச நேரத்துல முடிஞ்ச வரைக்கும் பார்த்துக்கிட்டோம். பேசிக்கிட்டோம். வீட்ல சொல்லி சின்னச் சின்ன பிரச்சனைகள், சச்சரவுகளுக்கு இடையில கல்யாணமும் பண்ணிக்கிட்டோம்.

இதுக்கப்பறம்தான் இதுவரைக்கும் இருந்ததை விட அதிகமான சோதனைகள் வர ஆரம்பிச்சது. நவநீத கிருஷ்ணன். எங்க பிராஞ்ச் ஹெட். கம்பெனியோட சிஇஓகிட்ட நேரடியா பேசுற அளவுக்கு இன்ஃப்ளுயன்ஸ் உள்ள ஆளு. இங்க நம்ம பிராஞ்சுக்கு வரக்கூடிய பெரிய தலைகள் எல்லாரும் வந்த உடனே அவரைத்தான் தேடுவாங்க. அந்த அளவுக்கு மதிப்பான ஆளு. ஆனா, அவரு எங்க விஷயத்துல இப்படி நடந்துக்குவாருனு நாங்க எதிர்ப்பார்க்கவே இல்லை.

வாராவாரம் சனிக்கிழமை ப்ராஜெக்ட்லருந்து நாலு பேரு வந்து ஸ்டோர் ரூம்ல இருக்குற பொருட்களை இன்வென்டரி எடுக்கறதுண்டு. இந்த டீமுக்கு வர்றதுக்கு முன்னாடி ஒரு முறை நானும் மதனும் ஒரே வாரம் அந்த ஆக்டிவிட்டிக்கு வர்ற மாதிரி அமைஞ்சது. லஞ்ச் டைம்ல சாப்பிட்டு முடிச்சுட்டு அந்த ரூம்ல கொஞ்சம் பேசிட்டு இருந்தோம். அன்னிக்கு ரெண்டாவது சனிக்கிழமை, லீவ் அப்படிங்குறதால யாரும் வர மாட்டாங்கன்னு ரொம்ப ஃப்ரீயா இருந்தோம். அதும் அந்த இன்வென்ட்ரி ரூம்க்குள்ள வெளியாட்கள் யாரும் வர முடியாது. தனி ஆக்சஸ் இருந்தா மட்டும்தான் வர முடியும். சோ, யாரும் வர்றதுக்கு சான்ஸே இல்லனு முடிவு பண்ணி, எங்களயும் அறியாம நானும் மதனும் கிஸ் பண்ணிக்கிட்டோம். அன்னிக்கு ஏதோ ஒரு ஃபைல் எடுக்கறதுக்காக ஆபீஸுக்கு வந்த நவநீத் தற்செயலா இதைப் பார்த்திருக்காரு. அதுக்கப்பறம் நாங்க லவ் பண்ற விஷயத்த கேள்விப்பட்டு எங்க டீம் மேனேஜர்ஸ்கிட்ட சொல்லி ரோல் சேஞ்ச், டீம் சேஞ்ச்னு நடந்தது எல்லாமே அவரோட வேலைதான். என்னோட பழைய டீம் மேனேஜர் வேலையை ரிசைன் பண்ணிட்டு போகும்போது சொல்லிதான் இதுக்குப் பின்னாடி இவ்வளவு விஷயங்கள் இருக்குறது எனக்குப் புரிஞ்சது. ஸ்டில், அவரு என்ன அப்யூஸ் பண்ணதோ, ஹார்ஷா பிகேவ் பண்ணதோ இல்ல. ரொம்ப ஜென்யூனா, புரொபஷனலா நடந்துக்குவாரு, ஆபீஸ் வொர்க் தாண்டி வேற எதுக்கும் என்ன டிஸ்ட்ர்ப் பண்ணது கிடையாது. ஆனா, அவரு பார்த்த வேலைகள் எல்லாமே நானும் மதனும் சேர்ந்து இருக்குற நேரத்தை ஸ்பாயில் பண்றதாவே இருக்கும். இவ்வளவு பெரிய பதவியில இருக்குற பிராஞ்ச் ஹெட் இவ்ளோ சீப்பா பிகேவ் பண்ணுவாரான்னு நினைச்சிருக்கேன், பட், அவரு அதை மாத்திக்கவே இல்ல. நாளாக நாளாக வீட்லயும்கூட நாங்க சேர்ந்து இருக்குற நேரத்தைக் குறைக்க முயற்சி பண்ணாரு. நான் ஆபீஸ் வர்ற டைம்ல மதனுக்கு ஆஃப் குடுக்கச் சொன்னாரு, மதனுக்கு நைட் ஷிப்ட் போட வச்சாரு. இதுக்காக மதனோட டீம் லீட் கிட்ட தனிப்பட்ட முறையில பேசினாரு. அவரு பிராஞ்ச் ஹெட், ஸோ, யாராலயும் எதுவும் பண்ண முடில. கேட்டா, இப்படித்தான் இருக்கும். இஷ்டம் இருந்தா இருங்க, இல்ல பேப்பர் போட்டுட்டு வேலையை விட்டு கெளம்புங்கனு பதில் சொன்னாங்க. இப்போ நாங்க இருக்குற நிலைமைல ரெண்டு பேரும் கண்டிப்பா வேலையை விட முடியாது. வேற ப்ரொஜ்க்ட் கேட்டு எத்தனையோ மெயில் போட்டு பார்த்தாச்சு. ஒரு யூஸும் இல்ல. இருக்குற ஸ்ட்ரெஸ் தாங்காம நாங்க ரெண்டு பேரும் இப்போ சைக்கியாடிரிஸ்ட் கிட்ட ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கோம். இவ்வளவு பிரச்சனைகளோட அவுட்கம்தான் அன்னிக்கு மாடிப்படியில நடந்தது.”

அரை மணிநேரமாக இடைவிடாமல் என்னுடைய கதையைச் சொல்லி முடித்தேன். சொன்ன அனைத்தையும் முழு கவனத்தோடு கேட்டு முடித்த ரம்யா எழுந்து சென்று இரண்டு பேருக்கும் இன்னொரு காபி வாங்கித் வந்தார். எனக்குமே அது தேவையாக இருந்தது. 

“நானும் எத்தனையோ கம்பெனிஸ்ல வொர்க் பண்ணிருக்கேன் எவ்வளவோ இஷ்யூஸ் கேள்விப்பட்டிருக்கேன், ஹேண்டில் பண்ணிருக்கேன்; பட் திஸ் இஸ் பெக்கூலியர். இவ்வளவு வன்மத்தோட ஒரு ஆளு இருக்க முடியுமா? ஐ காண்ட் பிலீவ் திஸ். ரியலி திஸ் இஸ் பேத்தட்டிக்” என்றவாறே ரம்யா தன்னுடைய மொபைல் போனை எடுத்து ஏதோ பார்த்துக்கொண்டிருந்தாள்.

“ஓகே. இந்த செக்யூரிட்டி மேட்டரை நான் பார்த்துக்கிறேன். டோண்ட் வொர்ரி அபவுட் திஸ். மத்த விஷயங்கள்ல எவ்வளவு தூரம் என்னால உங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு தெரியலை. எனி ஹவ், வில் டூ மை லெவல் பெஸ்ட். ஸீ யூ” என்று சொல்லி என்னுடைய மொபைல் எண்ணை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டாள். 

ரம்யாவிடம் பேசியது கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் அவளால் இதற்கு ஒரு முடிவு கிட்டும் என்று தோன்றவில்லை. இவ்வளவு பெரிய அலுவலகத்தின் ஒரு கிளையின் தலைவரை எதிர்க்கும் அளவுக்கு ரம்யாவுக்கு அதிகாரம் இல்லை என்பதையும் நான் அறியாமலில்லை. இருந்தாலும் அழுத்திய பாரத்தை சற்று இறக்கி வைத்து ஆசுவாசப்படுத்திக் கொள்ள கிடைத்த ஒரு வாய்ப்பாக ரம்யாவைப் பயன்படுத்திக் கொண்டேன்.

அவ்வப்போது ரம்யாவிடமிருந்து ஏதேனும் குறுஞ்செய்திகள் வந்துகொண்டிருக்கும். சில நேரம் பொருட்படுத்தி பதில் அனுப்புவேன், பல நேரங்களில் அதை அப்படியே விட்டுவிடுவேன். இதற்கிடையில் வேலையிலும் சுமை கூடியது. எங்கள் கிளை அலுவலகத்தின் அருகிலேயே இன்னொரு கிளையை உருவாக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்திருந்தது. எங்கள் கிளை இருந்த இடம் சிறப்புப் பொருளாதார மண்டலத்து வரம்பிற்குள் இருந்ததால் மாநில அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்தும் கூடுதல் சலுகைகள் கிடைத்துக்கொண்டிருந்தன. ஒரே பெயரில் வேண்டாமென முடிவு செய்து வேறொரு பெயரில் தொடங்கி அதற்கும் கிளைத் தலைவராக நவநீத கிருஷ்ணனையே நியமித்தார்கள். மாதச் சம்பளம் வாங்குவதிலிருந்து உயர்ந்து நிறுவனத்தின் பங்குதாரராக மாறியிருந்தார். அவருடைய பொறுப்புகள் மட்டும் மாறவில்லை. உடன் இருந்த எங்களுடைய வேலைகளும் இரு மடங்காகின. இதுநாள் வரையில் அலுவலகத்தில் இருந்த இடத்திலிருந்து வேலை செய்துகொண்டிருந்தோம், இப்போது இரண்டு அலுவலகங்களுக்கும் மாறிமாறி பயணிக்க வேண்டியிருந்தது. எங்கள் அணியில் இருந்த மற்றவர்களுக்கு பாதி நாள் ஒரு அலுவலகத்திலும் மீதி நாள் அடுத்த அலுவலகத்திலும் வேலை கொடுத்தார்கள். ஆனால், என்னை நவ்நீத் ஒரு தனிச்செயலர்போல நடத்தத் தொடங்கியதால் இதுதான் அலுவலகமென்று என்னால் ஓரிடத்திலிருந்து வேலை செய்ய இயலவில்லை. இதுவரையில் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்களேனும் மதனுடன் சேர்ந்து டீ குடிப்பதும் சாப்பிடுவதுமாக இருந்த எங்கள் சந்திப்பிலும் விரிசல் விரிந்தது. வாரத்தின் பெரும்பாலான நாட்களில் எனக்கான அலுவலக கேப்-பில் நான் வீடு வருவதற்குள் மதன் ஆழ்ந்து தூங்கி இருப்பான்; மறுநாள் நான் விழிப்பதற்குள் காலை ஷிப்டிற்குக் கிளம்பி இருப்பான். அல்லது அவன் ஷிஃப்ட் முடித்து வருவதற்குள் நான் அடித்துப் போட்டதுபோல உறங்கிப் போயிருப்பேன். சுமார் மூன்று மாதங்களுக்கு மேலாக இதுதான் நடந்துக்கொண்டிருந்தது. 

இன்று பழைய அலுவலகத்தில்தான் இருந்தேன். நவ்நீத் போர்ட் மீட்டிங் சென்றிருந்ததால் என்னுடைய கேபினில் அமர்ந்து மறுநாளுக்கான வேலைகளைத் தொகுத்துக்கொண்டிருந்தேன். எங்கள் ப்ராஜெக்ட்டில் உள்ள பெண் ஒருத்தி என்னை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள். அவள் வேலைக்குச் சேர்ந்து ஒன்றரை வருடங்கள் இருக்கும். அவள் கையில் வைத்திருந்த பத்திரிகையை நீட்டி, 

“மேம், எனக்கு வர்ற பத்தாம் தேதி மேரேஜ். நீங்க கண்டிப்பா வரணும். இங்க பல்லாவரத்துலதான் மேரேஜ். ஸோ, மிஸ் பண்ணிராதீங்க. பாஸுக்கும் ஒரு இன்விடேஷன் கொடுக்கணும், அவரு இல்லபோல. கொடுத்துடுறீங்களா?” 

“ஓகேமா. கங்கிராட்ஸ். ஆல் தி பெஸ்ட். பையன் யாரு? சொந்தக்கார பையனா?”

“இல்ல மேம். நம்ம ஆபீஸ்லதான் வொர்க் பண்றான். பக்கத்து ப்ராஜெக்ட். லவ் மேரேஜ்தான் மேம்” என்று சொல்லிவிட்டு வெட்கப்பட முயன்றாள். 

சற்று நேரத்தில் ரம்யாவிடமிருந்து ஓர் அழைப்பு. இதுவரையில் ரம்யாவிடமிருந்து குறுஞ்செய்திகள் வருமே ஒழிய அலைபேசியில் அழைத்ததில்லை; முதல்முறை அழைக்கிறார். 

சின்ன குறுகுறுப்புடன் அழைப்பை ஏற்றுக்கொண்டேன். 

“ஹே ப்ரீத்தி. ஹௌ ஆர் யூ?”

“யா, ஃபைன் ரம்யா. சொல்லுங்க.”

“எங்க இருக்கீங்க? ஃபரீயா? கஃபேடரியா வர்றீங்களா?”

“ம்ம்… ஓகே ரம்யா. ஃபைவ் மினிட்ஸ்”

“ஷ்யூர் ப்ரீத்தி. வில் வெயிட்.”

ஹெச்ஆர்களுக்கே உரித்தான மென்புன்னகையோடு காத்திருந்தார். அன்று அமர்ந்திருந்த அதே மேஜையாதலால் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கவில்லை. அவர் அமர்ந்திருந்தது போக அருகில் ஒரே ஒரு நாற்காலி கிடந்தது. 

“ஹவ் வாஸ் யுவர் டே ப்ரீத்தி?”

“சோ ஃபார் நாட் பேட் ரம்யா. ஹவ் ஆர் யூ?”

“யா யா ஐயம் ஃபைன். அஸ்யூஸ்வல்.” 

“அப்பறம்?”

“ஆக்ச்சுவலி, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லத்தான் கூப்ட்டேன்.”

“என்ன?”

“உங்க பாஸ் எங்க? போர்ட் மீட்டிங்ல இருக்காரா?”

“ஆமா. உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அதுவும் தெரியும். அவரு வெளிய வந்த உடனே உன்னைய ரிலீவ் பண்ணப் போறதும் தெரியும்.”

“ரம்யா, என்ன சொல்றீங்க? ஆர் யூ சீரியஸ்? ஆர் யூ ஷ்யூர்?” என்னை அறியாமல் ஒருவிதப் பதற்றம் தொற்றிக்கொண்டது. 

“யா ப்ரீத்தி. ஐயம் சென்ட் பெர்சன்ட் ஷ்யூர்.”

“எப்படி ரம்யா?”

“எல்லாம் அப்படித்தான். ஆக்ச்சுவலி, நம்ம கம்பெனியோட ஷேர் ஹோல்டரா இன்னொருத்தரும் ஜாயின் பண்ணிருக்காரு. அவரு என்னோட முன்னாள் பாஸ் மிஸ்டர் ப்ரதீப் குமரன். இதுக்கு முன்னாடி நான் வேலை பார்த்த கம்பெனியோட சிஇஓ. அதுமட்டுமில்ல என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டதான் கல்யாணம் பண்ணிருக்காரு. எனக்கும் அவளுக்கும் நல்ல பாண்டிங்; அவளுக்கும் அவ புருஷனுக்கும் நல்லா பாண்டிங். சோ, எவரிதிங்க் சால்வ்ட்.”

சத்தியமாக என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு எதுவும் புரியவும் இல்லை. மீண்டும் ரம்யாதான் தெளிவுபடுத்தினார்.

“இங்க நம்ம கம்பெனியில ஷேர் ஹோல்டர் ஆன உடனே அவரை ஒரு பிராஞ்ச் ஹெட்டா அப்பாயிண்ட் பண்றதுக்கு நம்ம மேனேஜ்மெண்ட் முடிவு பண்ணிருக்காங்க. அவருதான் அந்தப் புது பிராஞ்சுக்கு ஹெட்டா வர்றாரு. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே என் ஃப்ரெண்ட் எனக்கு கால் பண்ணி விவரத்தைச் சொன்னா. அவரு தனக்கு ஒரு பெர்சன்ல் செக்ரெடட்ரி வேணும்னு கேட்ருக்காரு. நான்தான் அதற்கு இன்சார்ஜ்னு சொல்லிட்டு மேனேஜ்மெண்ட்லருந்து எனக்கு ரெஃபெர் பண்ணாங்க. நான் உன்னைய ரெஃபெர் பண்ணிட்டேன். அவரும் நான் சொன்னதும் உன் பேரை மென்சன் பண்ணி இவங்கதான் வேணும்னு கேட்ருக்காரு. பெரிய ஷேர் ஹோல்டர் கேட்டதால நவ்நீத்தும் எதுவும் எதிர்த்து பேசல. தட்ஸால்” என்று தோளைக் குலுக்கி கண் சிமிட்டினாள்.

ரம்யா எனக்கு எவ்வளவு பெரிய நற்காரியம் செய்திருக்கிறாள். எங்கோ தொலைந்த என்னை எனக்கே மீட்டுக் கொடுத்திருக்கிறாள். அழுத்திக் கிடந்த பாரம் முழுவதையும் ஒற்றை இறகாய் ஊதித் தள்ளிவிட்டாள். ஆனால், மீண்டும் அதே பெர்சனல் செக்ரெட்டரியா? அவரைப் போல் இவரும் ஏதாவது பிரச்னை கொடுத்தால் என்ன செய்வது?

நான் தயங்குவதை உணர்ந்துகொண்ட ரம்யா, “நீ பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது. ப்ரதீப் இஸ் ஜெம். ஐ நோ அபவுட் ஹிம். அப்படியே எதுவும் வாலாட்டுனா என்கிட்ட சொல்லு; அவன் பொண்டாட்டிகிட்ட சொல்லி உண்டு இல்லனு பண்ணிடலாம்” என்று பல் வரிசை முழுவதும் தெரியச் சிரித்து கைகளை ஒருமுறை அழுந்தப் பிடித்து விலகினாள்.

இன்னும் இரண்டு நாட்களில் புது பிராஞ்சில் வந்து ரிப்போர்ட் செய்யச் சொல்லிவிட்டார்கள். மதனிடம் சொன்னேன். என்னைவிட அதிகம் மகிழ்ந்து போனான். நாமிருவரும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்றில்லை. ஆனால், வீட்டிலாவது ஒன்றாக இருப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தால் போதும். நாம் கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டு கொள்ளலாம் என்று என்னை இன்னும் உற்சாகப்படுத்தினான். இதற்கிடையில் ரம்யா அழைத்து புது பிராஞ்ச் ஹெட் உடன் போனில் பேச வைத்தார். போதாதென்று அவருடைய மனைவியிடமும் பேசினோம். நீண்ட நாட்களுக்குப் பிறகு வாழ்வில் ஒரு சிறு நம்பிக்கை துளிர்த்ததுபோல் இருந்தது. மீதமிருக்கும் அத்தனை சக்தியினையும் திரட்டி மீளத்துடித்தது மனது.

மறுநாள் காலை ப்ராஜெக்ட்டில் உடன் பணியாற்றியவர்களுக்குச் செய்தி தெரிவிக்கும் சடங்குக்காக மெயில் அனுப்புவதற்கு அமர்ந்தேன். அதற்குள் பெரும்பாலானவர்களுக்கு விஷயம் தெரிந்தே இருந்தது. என்னுடைய சங்கடங்களை அறிந்த சிலர் எனக்காக மகிழ்ந்தனர். இன்னும் சிலரோ இவ்வளவு நல்ல பாஸை விட்டுவிட்டு புதிதாய் வருபவரிடம் மாட்டிக்கொண்டாளே என்று வருந்தினர்! 

மெயில் அனுப்புவதற்கு முன் தற்செயலாக அன்று வந்த மெயில்களை எல்லாம் வரிசையாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நவ்நீத்திடமிருந்து ஒரு மெயில். பொதுவாக எல்லாருக்கும் அனுப்பி இருந்தார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது, 

“இன்றிலிருந்து என்னுடைய தனிச்செயலர் பொறுப்பிலிருந்து மிஸஸ் ப்ரீத்தி விடுவிக்கப்படுகிறார். அதற்கு மாற்றாக இதுவரை சாஃப்ட்வேர் மேனேஜ்மென்ட் டீமில் பணியாற்றிய ‘அனுஷ்யா’ என்பவர் என்னுடைய தனிச்செயலராகப் பணியாற்றுவார். அனைவரும் அவருக்கு ஒத்துழைக்கவும். கங்கிராட்ஸ் அனுஷ்யா!”

மாலை வீடு திரும்புவதற்காக பேருந்தில் ஏறி அமர்ந்த நான் யதேச்சையாக என்னுடைய கைப்பையைத் துழாவினேன். அன்றைக்கு அந்தப் பெண் அளித்துவிட்டுப் போன திருமணப் பத்திரிகை இருந்தது, ‘Anushya Weds Akash’ என்று ரம்மியமான நிறத்தில் எளிமையான அழகோடு அச்சிடப்பட்டிருந்தது.


விவாதங்கள் (44)