சிறுகதை

“அரண்மனைக்குத் தருவிக்கப்படும் கங்கை நீர் மாசடைந்திருக்கிறது என்று மன்னர் தினமும் நதிக்கே குளிக்க வருகிறார். மன்னர் மீது நிச்சயமாக யாரோ பைசாசத்தை ஏவி விட்டிருக்க வேண்டும். இல்லையெனில் கங்கை மாசடைந்திருக்கிறது என்று சொல்லத் தோன்றுமா?”

“அரண்மனைக்குச் சென்று சேரும் நீர்த்துளிகள் சர்வநிச்சயமாகப் பளிங்கைப் போல்தானே மின்னும்.”

அவ்வழியே குளிக்கச் சென்று கொண்டிருந்த கேசவன் உரையாடலை ஒட்டுக்கேட்டான். எதிர்ப்பட்ட பத்ரனிடம் ஏற்கெனவே கொடுத்திருந்த சலவைத் துணிகள் குறித்துக் கேட்டறிந்தான். பின் சமீப காலங்களில் சலவைத் துணிகள் தாமதமாக வந்து சேர்வதன் பின்னணியை விசாரித்தான். 

“இப்போதுகூட அதைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்” என்றான் பத்ரன்.

“என் ஆடைகளைப் பற்றியா?”

பத்ரனும் உடனிருந்தவனும் சிரித்தனர்.

ஒன்றும் தெரியாதவன்போல கேசவன் முழித்தான்.

“வேதத்தில் விற்பன்னர் ஆவதைக் குறிக்கோளாக வைத்துக் கொள்வதில் தவறில்லை. உள்ளூர் விஷயங்களையும் சிறிதளவாவது அறிந்து வைத்துக் கொள்ளலாமே! கேளும்! இப்போதெல்லாம் சந்தனு மகாராஜா விடியலுக்கு முன்பே கங்கைக்கு வருகிறார். எதையோ தவற விட்டவரைப் போன்று நதிக்குள் தேடிக்கொண்டே இருக்கிறார். அவரின் பிரக்ஞை நீரிலிருந்து நிலத்திற்குத் திரும்ப நெடுநேரமாகிறது.”

பெருமூச்சுவிட்டார்.

“ம்ம்ம்… இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும், ஆடை தாமதத்திற்கான காரணத்தை.”

காலை நேர சந்தியாவந்தனத்திற்காகச் சென்று கொண்டிருந்த முதிய பிராமணர் இம்மூவர் மட்டும் கேட்கும் வண்ணம் எச்சரிக்கை விடுத்தார். 

“மன்னரைப் பற்றி புறம் பேசாதீர்கள். மணலும் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும். குரு வம்சமய்யா!”

இவர்களைப் போன்று ஆங்காங்கே காத்திருந்தவர்கள் நகரத் தொடங்கினர். இன்னமும் எத்தனை நாட்களுக்கு மன்னரின் பித்துநிலை தொடரும் என்று அனைவரும் கவலை கொண்டனர். கங்கையின் பிரவாகமான கரைகளில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு இடம் எனப் பரிவாரங்களுடன் செல்கிறார் மன்னர். மன்னரின் இச்செயலால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைவதை அரசவை அமைச்சர்களிடம் மக்கள் முறையிட்டனர். மன்னரின் மீது குற்றம் சுமத்தாமல் அவருடைய தேடலை அறிய முயன்றனர். சதா கங்கையைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்கும் மன்னரின் மனதைப் புரிந்துகொள்ள முடியாமல் சில நேரம் தங்களின் கோரிக்கையைக் கைவிட்டனர். முறையிட்ட மக்களிடம் பொய்யான ஆறுதலளித்தனர். 

அரண்மனையில் மன்னருக்கு ஆருடம் பார்த்தனர். நான்கு திசைகளிலிருந்து கணிப்பதற்கான ஆசான்கள் வந்து சென்றனர். பொதுவாம்சமாக மன்னரின் மீது துஷ்ட சக்திகளை யாரேனும் ஏவியிருப்பார்கள் என்று கூறினர். அரசவைக்கு திருப்தி ஏற்படவில்லை. தென்கோடியிலிருந்து வந்திருந்த கணிகரின் வாக்கு மட்டும் ஏற்புடையதாய் அமைந்தது. 

“மனித உடல் நீராலானது. அந்த நீரில் கலந்திருக்கும் துர்சிந்தனைகள் அவரைப் பீடித்திருக்கிறது. கங்கையின் மீதான பற்று அவரைக் குழப்பத்தில் ஆழ்த்துகிறது. கங்கைக்கும் தனக்கும் ஓர் உறவுப் பிணைப்பை அறுதியிட்டு நிறுவ முயல்கிறார். அதில் ஒவ்வொரு முறையும் தோற்பது மன்னரைப் பலவீனமாக்குகிறது.”

கங்கையின் வேறு வேறு பகுதிகளுக்கு அவர் செல்வது குறித்து விசாரித்தனர். மேலும் இந்த எண்ணங்களிலிருந்தான விடுதலை குறித்து விசனப்பட்டனர்.

“மணலால் ஒருபோதும் நீரின் பிரவாகத்திற்கு உரிமை கொண்டாட முடியாது. கங்கையின் முன் நாம் அனைவரும் சிறுசிறு மணல் துகள்களே! இதை உணர்ந்துகொள்வதே மன்னருக்கான மருந்து.”

***

ங்கையின் தென்கோடிக்கு பரிவாரங்களுடன் மன்னர் சந்தனு நீராடச் சென்று கொண்டிருந்தார். உடலைச் சுட்டெரிக்காத வெயிலும் வழியெங்கும் தென்பட்ட வாதுமை மரங்களும் காலைப் பொழுதை இதமாக்கியது. கணிகரின் சொற்கள் நினைவில் எழுந்தன. தன்னை மணல் துகளாகக் கற்பனை செய்துகொண்டார். இதுவரை நீராடிய கங்கையின் நீர்த்துளிகளைக் கணக்கிட முயன்றார். நீரின் துளிகள் எண்ணிலிகளால் ஆனது. நீரின் நிழலில் தாமசிக்கும் அற்பப்பொருள்தான் மணல். தன்னைப் போய் மணலுடன் ஒப்பிட்ட கணிகரை சிரச்சேதம் செய்வதே தகும் என மனதிற்குள் சபித்தார். வென்று குவித்த நிலங்களின் நினைவு முந்தைய நினைவிற்கு ஆசுவாசமாய் அமைந்தது.

குதிரையின் காலடிக் குளம்புகள் மணலில் புதைந்தன. நினைவுகளிலிருந்து முழுவதுமாக மீண்டார். கண் அளக்கும் குறுகிய தூரம் முழுக்க மணல் மட்டுமே தென்பட்டது. சுற்றி முற்றி பார்த்தார். சற்று தூரத்தில் இடைக்கச்சை மட்டும் அணிந்து சென்று கொண்டிருந்த மனிதரைக் கண்டார். குடுமியும் கைவசம் இருந்த ரிஷி தண்டமும் மன்னருக்கு அடையாளம் அறிய தோதாய் அமைந்தது. பரிவாரத்திலிருந்து ஒரு சேவகனை ரிஷியை அழைத்துவரக் கட்டளையிட்டார்.

கங்கையைப் பிரதிபலிக்கும் பொலிவு கொண்ட முகம். இளம் பெண்களை கவர்ந்திழுக்கும் கட்டுடல். குதிரையிலிருந்து இறங்கி மன்னர் வணங்கினார். அழைத்து வந்த சேவகன் ரிஷியை மன்னரிடம் அறிமுகப்படுத்தினான். 

“இவர் பெயர் பித்ருதர்மர். வசீஷ்டரின் சீடர் வழியில் வந்தவர். காலையில் கங்கையைத் தரிசித்து வழிபடுவது அவரது வழக்கமாம்.”

“எனக்காக உங்கள் வழிபாட்டை நிறுத்த வேண்டாம். குறுக்கீடாக அமைந்ததற்கு மன்னிக்க வேண்டும். உங்கள் வழிபாடு முடியும் வரை காத்திருக்கிறேன்.”

பித்ருதர்மரிடம் புன்னகை மட்டுமே பதிலாகக் கிடைத்தது. மன்னரின் கண்களைக் கூர்ந்து அவதானித்தார். சில நொடிகள் இருவரும் மௌனத்தைப் பகிர்ந்துகொண்டனர். 

“உங்கள் உடல் கங்கையால் மட்டுமே சுத்தமாகும். மனம் மணலால் நிறைந்திருக்கிறது. அதையும் கங்கையைக் கொண்டு நிரப்புங்கள்.”

மன்னரின் மனம் நிலைகுலைந்தது. பிறரின் கண்களுக்கும் தாம் மணலைப் போல தென்படுகிறோமோ என ஐயம் கொண்டார். மன்னரின் உத்தரவிற்குக் காத்திராமல் பித்ருதர்மர் விலகினார். குழப்பத்தில் இருந்தாலும் அவருடைய சொற்களை ஆசீர்வாதமாகவே கருதினார்.

குதிரையிலிருந்து இறங்கி நதியை நோக்கி மன்னர் நடந்தார். முன்னோக்கி நடக்க கங்கை பின்னோக்கி நகர்வதாக உணர்ந்தார். கண்களை சுருக்கி காணும் எல்லையை விரிவுபடுத்தினார். கங்கையின் மீது பெரு நிழலொன்று கவிந்திருப்பதாக உணர்ந்தார். கண்களைச் சுருக்கியும் விரித்தும் கங்கையின் நிறத்தைக் காண முயன்றார். அருகில் இருந்த சேவகனை அழைத்தார்.

“ஏன் இவ்விடத்தில் கங்கை பொலிவிழந்து தென்படுகிறது?”

சேவகன் பதிலற்று நின்றான். 

“கங்கையின் பொலிவே அதன் பிரவாகம்தான். அதைக் காண இயலவில்லையெனில் இடையில் யாரேனும் அணையைப் போன்ற ஒன்றைக் கட்டியிருக்கக் கூடும் என அஞ்சுகிறேன். நதியின் மீது ஆக்கினை செலுத்த விழைவது அற்பச்செயல். அங்ஙனம் நிகழ்ந்திருப்பின் அதன் காரணகர்த்தாவை உடனே என் முன் அழைத்து வாருங்கள்.”

கட்டளைக்கு சேவகன் கீழ்பணிந்து விலக சந்தனு தனியே நடந்தார். விடியலைக் கடந்த சூரியனின் வெண்கதிர்கள் பாதணிகளை ஊடுருவத் தொடங்கிற்று. 

கங்கையின் மீது போர்த்தப்பட்டிருக்கும் நிழல் யாருடையது? இந்த எண்ணத்திற்கான மனவலிமையை எப்படிப் பெற்றிருப்பர்? இந்த நதி அனைவருக்குமானது இல்லையா? அதன் பிரவாகத்தைத் தடுப்பது பஞ்சமா பாதகங்களைக் காட்டிலும் தீதில்லையா? அல்லது யாவும் என் கற்பனையா? சிந்தனையின் லயிப்பில் நதியைக் கண்ணுற்றார். நீர் மோத வேண்டிய கரைகளில் அம்புகளால் ஆன அரண் அமைக்கப்பட்டிருந்தது. அரசருக்குள் கடுஞ்சினம் மூண்டது. அரணின் ஒரு முனையில் வில் அம்புகள் சகிதமாய் நதி நோக்கி வீற்றிருந்த இளைஞனைப் பார்த்தார். அனிச்சை செயலென கைகள் இடையில் இருந்த குறுவாளைப் பற்றின. குறுவாளை இடையிலிருந்து எடுத்தபோது ஏற்பட்ட மெல்லிய, காற்றைக் கிழிக்கும் ஓசையில் அவ்விளைஞனின் நிழல் திரும்புவதைக் கவனித்தார். கணப்பொழுதில் மன்னரை எதிர்நோக்கி காத்திருக்கும் அம்பைப் பார்த்தார். இரையாக விரும்பாமல் ஓட மறுக்கும் ஓநாயின் திடம் அவ்விளைஞனிடம் பிரதிபலித்தது. முறுக்கேறிய புஜம். கங்கையின் முழுப் பொலிவையும் தன்வயப்படுத்தும் முகம். திடமாக மண்ணூன்றி நிற்கும் தடித்த கால்கள். காற்றில் அசைந்த தலைமுடிக் கற்றைகள் சந்தனுவிற்குப் புல்லரிப்பைக் கொடுத்தன. உடலுக்குள் ஊடுருவும் இனம் புரியாத உணர்வை, நொடிநேரத்தில் நிகழும் யுகாந்திர உரையாடலை அந்தரங்கமாக உணர்ந்தார். குறுவாளின் மீதிருந்த பிடி தளர்ந்தது. முன் நின்றுகொண்டிருந்த இளைஞனின் தோற்றத்தைக் கண்டு தன்னை மறந்து உச்சரித்தார்.

“பிஞ்ஞகன்.”

இளைஞன் மன்னரை நோக்கி நடந்து வந்தான். 

“மன்னர் என்னை மன்னிக்க வேண்டும்.”

துல்லியமான குரல். நதியில் மூழ்கியிருக்கும் சமயத்தில் எதிரொலிக்கும் ஓங்காரம். அசரீரியின் ஒலி. 

குறுவாளை மீண்டும் உறையிலிட்டார். இளைஞனை நோக்கி நடந்தார். அருகில் பார்த்தவுடன் வெயிலால் ஏற்பட்டிருந்த களைப்பு நீங்கியது. முகமனுக்கு முன் தன் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். 

“என் இளமுகத்தை மீண்டும் பார்ப்பதைப் போன்ற பிரமை ஏற்படுகிறது. யார் நீ? இதுநாள் வரை உன்னை அஸ்தினாபுரத்தில் கண்டதில்லையே?”

“மன்னர் என்னை மன்னிக்க வேண்டும். என் பெயர் தேவவிரதன். நான் கங்கர் குலத்தைச் சேர்ந்தவன். அஸ்தினாபுரத்திற்கு எப்போதேனும் மட்டுமே வருவேன். கங்கையே என் தாய்வீடு.”

அம்புகளால் ஆன அரணுக்கு அருகில் கங்கையைப் பார்த்தவண்ணம் சந்தனு அமர்ந்துகொண்டார். தேவவிரதனையும் அமரச் சொன்னார். இருவரும் நதியின் முன் சரணடைந்தவர்களைப் போன்று அமர்ந்திருந்தனர். அருகில் அமர்ந்திருப்பவர் மன்னர் என்பதால் கண்ணியமான தோரணையில் மார்பைச் சுருக்கி தேவவிரதன் அமர்ந்திருந்தான். 

“உன் பூர்வீகம் என்ன?”

கங்கைக்குள் காலை நீட்டினார். தேவவிரதன் அமைதியாக அமர்ந்திருந்தான். 

“உன் அம்புகளின் துரிதத்தில் ஷத்திரிய குணமும், முகத்தில் பண்டிதனின் தேஜஸும் தென்படுகிறது. யார் நீ? உன்னைப் பார்க்கும் ஒவ்வொரு கணமும் என் மனம் தேடும் விடையை நீ ஒளித்து வைத்திருப்பதாகவே உணர்கிறேன்.”

தேவவிரதன் குரலைச் செருமிக்கொண்டான். 

“முன்னரே சொன்னது போன்று இந்த நதி தோன்றும் முகட்டைச் சுற்றி தங்கள் ஆட்சியைச் செறிவுற நடத்திவரும் கங்கர் குலத்தைச் சேர்ந்தவன். என் தாயின் பெயரும் கங்கைதான். பேரழகி. ஆனால் தூய அன்பிற்கு மனம் பிறழ்ந்தவள். கங்கையையே தன் தாய்வீடாக எண்ணியவள். இந்த நதி என் தாய்க்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தது. எங்கள் பரம்பரையின் மீது கவிழ்ந்திருக்கும் சாபத்திற்கான விமோசனத்தையும் இந்த நதியே அளித்தது.”

சாபம் எனும் சொல் சந்தனுவின் செவியைக் கூர்மையடையச் செய்தது. குரலில் சுரத்து குறைந்து தேவவிரதன் தொடர்ந்தான்.

“தன் மனைவியின் விருப்பத்திற்கு இணங்க வசிஷ்டரின் எட்டு பசுக்களை தேவர்கள் களவு செய்ததாகவும், அதனால் சினங்கொண்ட வசிஷ்டர் விடுத்த சாபம் களவு செய்தவர்கள் அனைவரும் பூமியில் சிசு வாழ்க்கையை மட்டுமே அனுபவிக்கக் கடவது என்பதாகவும் மலையில் பேசினர்.”

“நீ அதை நம்பவில்லையா?” என சந்தனு இடைமறித்தார். 

“இது ஒரு கட்டுக்கதை. கற்றறிந்த சான்றோர் யாரும் சிசு வாழ்க்கையை சாபமாகக் கொடுக்க மாட்டார்கள். செய்த பாவங்களுக்கு வாழ்ந்து பிறர் வாழ்க்கையை மேம்படுத்துவதே பிராயச்சித்தம். கண் முழுதும் திறக்கும் முன்னரே மரணத்தைச் சுவைக்க வைப்பது அர்த்தமற்றது. மேலும் சிசுக்கள் தேவர்களாகவே இருப்பினும்கூட இந்தச் சாபத்தில் பாதிக்கப்படுவது தாய்மார்களே அன்றி சிசுக்கள் அல்ல. சுருங்கச் சொன்னால் இது வசிஷ்டரின் பாவம்!”

சந்தனு துணுக்குற்றார்.

“ரிஷிகளை நாம் புறங்கூறக் கூடாது”

“காலாதீதத்தை உணர்ந்தவனே ரிஷி. பிராயச்சித்தத்திற்கும் காலம் தேவை என்பதை அறியாமல் சபித்தவர்களை எப்படி ரிஷியாகக் கொள்வது?”

தேவவிரதன் மௌனமானான். முகம் சுருங்கி தலை கவிழ்த்துக் கொண்டான். 

“மன்னியுங்கள் மன்னா! நான் ரிஷியைப் பழித்தது தவறுதான். இந்த எண்ணங்களால்தான் எம்மக்கள் சொல்வதை நான் கட்டுக்கதைகள் என்று எண்ணுகிறேன்.”

“சாபம், ரிஷிகளின் கோபம் முதலானவற்றின் மீது நம்பிக்கை இல்லையா?”

மன்னரின் ஆச்சரியம் ஒவ்வொரு சொல்லிலும் கூடியது. 

“நீங்கள் பட்டியலிடும் அனைத்தும் சந்தர்ப்பவசத்தால் நிகழ்பவை. சந்தர்ப்பங்கள் சூழ்நிலையின் குழந்தைகள். அதில் நிரந்தரத் தன்மையில்லை. நிரந்தரத் தன்மையற்ற எதையும் நான் நம்புவதில்லை.”

“தாய் - தந்தை?”

தேவவிரதன் சிரித்தான். அவநம்பிக்கை நிறைந்த புன்னகை. 

“என் தாயைப் பற்றி கேட்டிருந்தீர்கள் அல்லவா! முன்பே கூறியதுபோல் பேரன்பிற்கு அடிமைப்பட்டவள். எங்கள் குல வழக்கம் ஒன்றிருக்கிறது. பிறந்த குழந்தையைக் கங்கையின் பிரவாகத்தில் விட வேண்டும். நிச்சயம் நதி இழுத்துக்கொள்ளும். கைவிட்ட மறுநொடி நதியோடு நீந்தி குழந்தையைத் தாய் மீட்க வேண்டும். அப்போது அது கங்கை கொடுத்த குழந்தையாகிவிடும்.”

மன்னருக்கு உடல் சில்லிட்டது.

“இதை யாரும் மறுக்கவில்லையா?”

“இதுவரை யாரும் மறுக்கவில்லை. என் அன்னையைத் தவிர.”

தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஒன்றை வேறொருவர் கூறுவதாக உணர்ந்தார். அவரறியாமல் அவருக்குள் முளைக்கும் உணர்வெழுச்சிகளும் கற்பனைகளும் மனதை நிலைகுலைய வைத்தன.

“காந்தர்வ மணத்தில் இயல்பாக அமையும் சிக்கல் அது. எங்கள் குல மரபை அறிந்தவர்கள் இச்சடங்கைச் செய்ய தயங்கவோ, அச்சம் கொள்ளவோ மாட்டார்கள். பெண்ணாக ஜனித்தவர்கள் வளரும்போதே இச்சடங்கு குறித்த நியமங்களை அறிந்தே வளருவர். மேலும் ஒவ்வொரு முறை குருதிப்போக்கு முடியும் தினத்தன்று சடங்கு நிகழும் இடத்தில் மூழ்கி எழ வேண்டும். குழந்தைக்கான சடங்கு சூரியன் பார்வையிலும் பெண்களுக்கான சடங்கு விடியலுக்கு முந்தைய பொழுதிலும் நிகழும். பெண்கள் அனைவரும் பவளப் பாறைகளுக்கு இணையானவர்கள் எனும் சொலவடை எங்கள் குலத்தில் உண்டு. கங்கைதான் அவர்களை செப்பனிடுகிறது.”

பவளப்பாறை எனும் சொல் சந்தனுவைக் கடந்த காலத்திற்குள் ஆழ்த்தியது. தேவவிரதனின் சொற்கள் எப்போதோ கேட்கப்பட்டவற்றின் எதிரொலியாக மனதுள் பதிந்தன. முகத்தில் தவழ்ந்திருந்த புன்னகையைக் குறைக்கவல்லதாய் அமைந்தன. பெருஞ்சலனத்தின் அலை முகத்தில் தீண்டத் தொடங்கியது.

“என் தாய்க்கு நிகழ்ந்தது காந்தர்வ மணம். தன் அன்பிற்குரியவர் யார் எனச் சொல்வதில் தயக்கங் காட்டினாள். முதல் குழந்தையும் ஜனித்தது. அதன் தந்தையின் பெயர் இரண்டு கங்கைகளுக்கு மட்டுமே தெரியும்.”

தேவவிரதன் திக்கினான்.

“இது புனித நீர். அறமறிந்த நீர்.”

சந்தனுவின் கைகள் நடுங்கின. பல பருவங்களுக்கு முன் இதே கங்கையின் தீரத்தில் கங்கர் குலப்பெண்ணின் பேரழகில் கட்டுண்டு கிடந்த நினைவுகளை தேவவிரதனின் சொற்கள் மீட்டெடுத்தன. 

“இந்த கங்கைக்கு உண்மையே தேவை. உண்மையற்ற அனைத்தையும் தன்னிடமே தக்க வைத்துக்கொள்ளும். ஆலகாலனுக்கு நிகரானது.”

மன்னர் பதற்றம் கொண்டார். நா தழுதழுத்தது.

“குழந்தை இறந்துவிட்டதா?"

“ஒன்றல்ல. ஏழு குழந்தைகள். ஒரு கங்கையிடமிருந்து மற்றொரு கங்கைக்கு.”

இருவரும் அமைதியாயினர். சந்தனு தன் கண்களிலிருந்து கசியவிருந்த கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டார். 

விரிசடை. அடர் புருவம். அருகம்புல்லின் மென்மை கொண்ட உதடுகள். நீரின் தன்மையொத்த உடல்வாகு. நினைவுகள் அலைமோதின. மனதிற்குள் காலம் இடம் பெயர்ந்துகொண்டே இருந்தது. கடந்தகால உரையாடல்கள் சொற்குவியல்களாய்க் குவிந்தன. 

“எங்கே குழந்தை?”

“ஏன் ஒவ்வொரு முறையும் இறந்தது என்பதை மட்டுமே சொல்கிறாய்?”

“குழந்தை இறக்கவில்லை. நீ ரகசியமாக்குகிறாய். கங்கையின் அடியாழத்தில் நான் அறிய முடியாதவண்ணம் புதைத்திருக்கிறாய்.”

“ஏன் கேள்வி கேட்கக் கூடாது என்று கட்டளையிடுகிறாய்? ரகசியம் அம்பலமாகிவிடும் எனும் அச்சமா அல்லது கொலை பாதகியைக் கண்டடைந்து விட்டேன் எனும் பதற்றமா? சொல்!”

“கேள்வி கேட்கக் கூடாது என்றாய். நானும் கேட்கவில்லை. அதன் விளைவாய் ஏன் ஏழு குழந்தைகளைக் காணாமலாக்கியிருக்கிறாய். யார் நீ? கங்கையா? யட்சியா?”

“அவை குழந்தைகள் அல்ல. நம் அன்பின் அடையாளம். நீ நம் அன்பை அர்த்தமற்றதாக்குகிறாய்.”

சொற்களின் பகடையாட்டத்தில் நிலைகுலைந்தார். நினைவிலிருந்து மீள ஒரு சொல் உதவியது. முதன்முதலாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும்போது தனக்கு இன்னுமொரு பெயர் இருப்பதாக சொன்ன சொல். சப்தமாக உச்சரித்தார். 

“பாகீரதி.”

பரிச்சயப்பட்ட சொல்லுக்கு அனிச்சையாகத் திரும்புவதுபோல் தேவவிரதன் திரும்பினான். தனக்குள் எழும் குற்றவுணர்வை அரசன் எனும் போர்வையால் சந்தனு போர்த்திக் கொண்டார். இயல்புடன் உரையாடலை மேற்கொள்ள முயன்றார். 

“தந்தைக்கு இவ்விஷயங்கள் தெரியாமலா இருக்கும்?”

சந்தனுவின் குரல் கம்பீரமற்று இருந்தது.

“நீங்கள் குறிப்பிடும் அந்த மனிதர் யாரென்றே எங்களுக்குத் தெரியாதே! பலமுறை விசாரித்தும் அம்மா கூற மறுத்துவிட்டாள். எத்தேசத்து மன்னர் என்றாலும் அழைத்து வருகிறோம் என்றனர். அப்போதும் கூறவில்லை. ஏழு முறை கங்கையிடம் என் தாய் தோற்றார். அது கங்கைக்கும் கங்கைக்குமான சமர்.”

சந்தனுவின் மனம் விழித்துக்கொண்டது. கடந்த காலத்திலிருந்து அவளது குரலைத் துல்லியமாகக் கேட்க முடிந்தது. 

“என்னால் கங்கையை விட்டு ஒருபோதும் வர இயலாது. அஸ்தினாபுரத்தில் கங்கையின் கீற்று இருக்கிறது. அதுவும் நீங்கள் என்னை வைக்கப் போகும் உங்களின் அந்தப்புரத்தில் அதன் நிழலை மட்டுமே காண முடியும். எனக்கு ராஜ்ஜியம் வேண்டாம். ஆடம்பரங்கள் வேண்டாம். கோட்டை கோபுரங்கள் வேண்டாம். வாதுமை மரங்களும் கங்கையின் நீரும் உங்களின் மணமும் மட்டுமே வேண்டும். உங்களுக்குள் ஒரு கங்கை இருக்கிறது. அதுதான் என் விருப்பம்.”

முதன்முறையாக கால்களை நீர் வருடுவதாய் உணர்ந்தார். 

“சற்று முன் தாய் தந்தை உறவு நிச்சயமற்றது என்றாய். அவற்றை உன் குறுகிய அனுபவங்களால் முடிவு செய்துவிடுகிறாய். காலம் அதை நிச்சயம் மாற்றும்.”

தேவவிரதனின் புன்னகையில் உண்மை இருந்தது. பேசப் பேச அவனது முகம் பொலிவடைந்தது.

“ஓர் உயிர் ஜனிக்க சூழ்நிலையும் சந்தர்ப்பமும் தேவைப்படுகின்றன. தாய் தந்தை எனும் சொற்களின் அர்த்தம் பருண்மையானவை. ஒவ்வோர் உயிருக்கும் நூறு லட்சம் தாயும் நூறு லட்சம் தந்தையும் சேர வேண்டியிருக்கிறது. அவர்களிடமிருந்து தனக்குத் தேவையானதை எடுத்துக்கொண்டு, அவற்றில் அதிதேவையானதைப் புதுப்பித்துக் கொண்டு உயிர் வளர்கிறது. வாழ்க்கை செப்பனிடப்படுகிறது. இந்நிலையில் அந்த சிசுவிற்கு யார் உரிமை கொள்ள முடியும்?”

“தாய் தந்தையை நிராகரிப்பது தவறில்லையா?”

“மண் தாயாகிறது. குருமார் தந்தையாகின்றனர். இதில் ஒரு தாய் ஒரு தந்தை எனும் மரபு அறுபட்டுவிடுகிறது. பருண்மையான நோக்கில் நமக்கு நாமே செய்யும் சமாதானங்களே தாயும் தந்தையும்.”

தேவவிரதன்தான் தன் மகன் எனும் உணர்வு மனதிற்குள் முழுமையடைந்தது. ஆனால், அவனுடைய வேதாந்தமான பேச்சில் கைக்குள் அகப்படவிருக்கும் மீன் மீண்டும் நதிக்குள் நழுவிவிடுமோ என அச்சம் கொண்டார். தூய அன்பை மீண்டும் இழக்க அவர் தயாராகவில்லை. சொற்களில் தோற்றுக்கொண்டே செல்லும் தருணங்கள் சந்தனுவின் டாம்பீகத்தைக் குலைத்தன.

“தந்தைக்கும் மகனுக்குமான உணர்வு கங்கைக்கும் மணலுக்குமான உறவைப் போன்றதுதான்.”

தேவவிரதனின் சொற்கள் சந்தனுவைக் காயப்படுத்தின. கேட்ட மாத்திரத்தில் துணுக்குற்றார். நூறு அம்புகள் கொண்டு உடல் தைக்கப்பட்டதாக உணர்ந்தார். எட்டாவது பிரசவத்திற்காக மீண்டும் தன் காட்டிற்குத் திரும்பிய தேவதையின் புன்சிரிப்பு கொடுத்த காயத்தை தேவவிரதனின் சொற்கள் நினைவூட்டின.

“உன் குழந்தை உனக்குக் கிடைக்கும். உனக்குள் ஓடும் கங்கையைப் போன்று அந்தரங்கமாக மட்டுமே உரிமைகள் கொண்டாட முடியும்.”

அவளுடைய சொற்கள் ரீங்காரமிட்டன. நினைவலைகளை அறுத்தெறியும் வண்ணம் சேவகனின் குரல் முதுகின் பக்கத்தினின்று கேட்டது. திரும்பிப் பார்த்தார். நதியின் பிரவாகம் வண்ணான்களின் தொழிலுக்கு இடையூறாக இருப்பதால் இவரிடம் முறையிட்டார்களென்றும் அதனால் நதியின் ஓட்டத்தை மடைமாற்றியிருக்கிறார் எனும் தகவலையும் பகிர்ந்தான். தேவவிரதன் பக்கம் மன்னர் திரும்பினார். 

“இது இயற்கைக்கு முரணில்லையா?”

“கங்கை சில நேரத்தில் குழந்தை. சில நேரங்களில் பசி கொண்ட யட்சி. ஆனால், வாழ்வைப் புரிந்துகொள்ளும் பெண். அம்புகளால் ஆன இந்த அரண் அதற்கான சங்கேத மொழி.”

மீண்டும் அமைதியாயினர். வெயில் சுட்டெரித்தது. அரண்மனை திரும்புவதற்கான நாழிகையை யோசித்தார். அரண்மனை திரும்ப ஆயத்தமானார். எழுந்து உடைகளை உதற மணல்துகள்கள் சிதறின. சந்தேகத்தின் சாயல் கொண்ட புருவங்கள் சுருங்கியிருந்தன. குதிரையை நோக்கி நடந்தார். தேவவிரதனைத் தன்னுடன் அஸ்தினாபுரத்திற்கு அழைத்து சென்றுவிடலாம் எனும் எண்ணம் உந்தித் தள்ளியது. உண்மையை உடைக்க நேரம் இதுதான் எனத் தீர்மானித்துக் கொண்டார். மீனவப் பெண்ணான சத்தியவதியுடன் தனக்கு நிச்சயப்பட்டிருக்கும் திருமணம் குறித்த தகவல்கள் சிந்தனைகளை இடைவெட்டின. தேவவிரதனை எப்படி அறிமுகப்படுத்துவாய்? நாடாளும் வாரிசுகளின் சண்டையில் இவன் ஒரு பகடையாக மட்டுமே இருப்பான். அதுவோ உன் ஆசை? அன்பிற்கும் அரசவைக்கும் என்ன சம்பந்தம்? பெரும் வரலாற்றின் தொடக்கத்தை இன்று நீ எடுக்கவிருக்கும் முடிவு தீர்மானிக்கும் எனும் அசரீரியின் குரல் கேட்டது. முடிவெடுக்க முடியாமல் திணறினார். அசரீரியின் குரல் பெரும் போர்க்களத்தைக் கற்பனை செய்ய வைத்தது. இந்தச் சிந்தனைகள் சாத்தியமற்றும் போகலாம் எனும் நம்பிக்கைக் கீற்றும் இடையீடாக எழுந்தது. மீண்டும் தேவவிரதன் பக்கம் திரும்பினார். விடை கொடுக்க எழுந்தவன் சிலையைப் போன்று நின்றுகொண்டிருந்தான். தந்தையாக முன்நிற்கும் தன் மகனை ஆரத் தழுவ விரும்பினார். 

“ஒரு சந்தேகம் மனதை உறுத்துகிறது.”

மன்னர் அமர்ந்த இடத்தை தேவவிரதன் சுட்டிக்காட்டினான்.

“இம்மண்ணை உதறியதுபோல் அதையும் கொட்டிவிடுங்கள். நிச்சயம் கங்கையின் சாட்சியாகப் பதில் கிடைக்கலாம்.”

“எட்டாவது குழந்தை கங்கையிடமிருந்து எப்படி தப்பித்தது?”

எப்போதும்போல் தேவவிரதன் இதற்கும் சிரித்தான். கங்கையை நோக்கினான். 

“எட்டாவது சிசுவிற்குப் பதில் தன்னை கங்கையிடம் ஒப்படைத்துவிட்டாள்.”


விவாதங்கள் (13)