அத்தியாயம் 1

இந்தத் தேசம் இங்கிலீஷ் துரைத்தனத்தார் சுவாதீனமாகிச் சில காலத்திற்குப் பின்பு சத்தியபுரி என்னும் ஊரிலே தொண்டைமண்டல முதலியார் குலத்திலே நான் பிறந்தேன். என் பாட்டனார் ஆகிய ஏகாம்பர முதலியார் இந்த தேசத்தை ஆண்ட நவாபுகளிடத்தில் திவான் உத்தியோகஞ் செய்து, அளவற்ற திரவியங்களையும் பூஸ்திதிகளையும் சம்பாதித்தார். என் பாட்டனார் படித்ததும், அவருக்குத் திவான் உத்தியோகங் கிடைத்ததும், எல்லாரும் அதிசயிக்கத்தக்க விஷயமானதால், அதை நான் கேள்விப்பட்ட பிரகாரம் விவரிக்கிறேன். என் பாட்டனார் சம்பளங் கொடுத்துப் படிக்க நிர்வாகம் அற்றவராயிருந்தபடியால், அவர் சில உபாத்தியாயர்களை அடுத்து அவர்கள் ஏவின வேலைகளைச் செய்து, கல்வி கற்றுக் கொண்டார். அவர் கல்வியில் பூரண பாண்டித்தியம் அடைந்து, யௌவன புருஷனாயிருக்கும்போது, ஒரு நாள் ஒரு துலுக்கன் குதிரையின் மேல் ஏறிக்கொண்டு, சத்தியபுரிச் சாலை மார்க்கமாகச் சாரி போனான். அவனுடைய குதிரை எதையோ கண்டு, வெருண்டு மார்க்கத்தை விட்டுக் காட்டிலும் மேட்டிலும் ஓடி அவனைக் கீழே தள்ளிவிட்டது. அவன் காயப்பட்டு பிரக்ஞால பங்கமாய் விழுந்த இடத்திலே பிரேதம் போலக் கிடந்தான். அப்போது அவ்விடத்திலிருந்தவர்கள், "அவன் யாரோ பக்கிரி, அவனைத் தொட்டால் ஜாதிப்பிரஷ்டத்துவம் உண்டாகும்" என்று சொல்லிக் கொண்டு, அப்பால் விலகிப் போய்விட்டார்கள். என் பாட்டனார் மட்டும், "அவன் யாராயிருந்தாலும் ஆபத்து வேளையில் உதவ வேண்டும்" என்று நினைத்து அவனைத் தூக்கி மடிமேல் வைத்துக் கொண்டு, அவனுடைய காயங்களைக் கட்டி, அவன் மூர்ச்சை தெளியும்படியான பக்குவங்களைச் செய்தார். அவன் மூர்ச்சை தெளிந்து எழுந்தவுடனே என் பாட்டனாரைப் பார்த்து, "நீர் செய்த உபகாரத்துக்கு ஏழைப் பக்கிரியான நான் என்ன பிரதி உபகாரஞ் செய்யப் போகிறேன்" என்று பலவாறாக ஸ்தோத்திரஞ் செய்தான். உடனே என் பாட்டனார், "பிரதி உபகாரத்தை விரும்பி இந்த உபகாரத்தை நான் செய்யவில்லை; ஆபத்துக் காலத்தில் ஒருவருக்கு உதவுவது எவ்வளவோ பெரிய சுகிர்தம்; அந்தச் சுகிர்த பலனே எனக்குப் போதும்; இம்மையில் நான் வேறு பிரதிப் பிரயோஜனத்தை அபேக்க்ஷிக்கவில்லை" என்றார். அந்தத் துலுக்கன் என் பாட்டனாரைப் பார்த்து "இம்மையிலும் உமக்கு அல்லா கிருபை செய்வார்" என, என் பாட்டனார், "நித்தியமான மறுமைப் பலனை நான் அபேக்ஷிக்கிறேனே தவிர இம்மைப் பலனை அபேக்ஷிக்கவில்லை" என்றார். உடனே அந்தத் துலுக்கன் எழுந்து, "நான் சொல்லுவதை நீ ஆக்ஷேபிக்கிறாயா?" என்று கோபித்து, என் பாட்டனார் கன்னத்தில் பளீரென்று அறைந்துவிட்டு, குதிரையின் மேல் ஒரே தாண்டாய்த் தாண்டி ஏறிக்கொண்டு போய்விட்டான். அவ்விடத்தில் இருந்தவர்கள் எல்லாரும் என் பாட்டனாரை நோக்கி, "அந்த துஷ்டத் துலுக்கனுக்கு நீர் உபகாரஞ் செய்தற்குக் கைமேல் பலன் கிடைத்ததே" என்று பரிகாசம் பண்ணினார்கள். என் பாட்டனார் வெட்கத்தினால் தலைகுனிந்து கொண்டு வீட்டுக்குப் போனார்.

அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு, நவாபினிடத்திலிருந்து அநேக சேவகர்கள் உருவின கத்திகளுடனே வந்து என் பாட்டனாரைப் பிடித்துக் குற்றவாளிபோற் பின்கட்டு முறையாகக் கட்டி, நவாபு சமூகத்திற்குக் கொண்டு போனார்கள். அதற்குக் காரணந் தெரியாமையினாலே, என் பாட்டனார் சித்தங் கலங்கி "நான் ஒரு பாவத்தையும் அறியேனே" என்று அழுதுகொண்டு போனார். எங்கள் பந்துக்களும், அவரைத் தொடர்ந்து, பரிதவித்துக் கொண்டு போனார்கள். அப்பொழுது சிங்காதனத்தின் மீது வீற்றிருந்த நவாபு என் பாட்டனாரைக் கண்டவுடனே எழுந்து, ஓடிவந்து என் பாட்டனாரைத் தழுவிக் கொண்டு சொல்கிறார். "நான் பக்கிரி போல மாறுவேஷம் போட்டுக் கொண்டு பல ஊர்களைச் சுற்றிப் பார்த்து வருகையில், சத்தியபுரியில் எனக்கு நேரிட்ட பிராணாபத்தைத் தீர்த்து இரக்ஷித்தீரே, அந்த உபகாரத்துக்காகவும், உம்முடைய அபார யோக்கியதைக்காகவும் உம்மைத் திவான் உத்தியோகத்தில் நியமித்திருக்கிறோம்; உமக்குச் சம்மதா?" என்று கேட்டார். உடனே என் பாட்டனார், "இம்மைப் பலன் வேண்டாமென்று முன்னே நான் சொல்லிப் பட்ட பாடு என் ஞாபகத்திலிருக்கிறது. அதை நான் மறந்தாலும் என் கன்னம் மறவாது; ஆகையால் உங்கள் சித்தப்படி நடக்கக் காத்திருக்கிறேன்" என்றார். அதைக் கேட்டவுடனே நவாபு சிரித்துக் கொண்டு, "நீர் ஆக்ஷேபிக்காமலிருக்கும் பொருட்டு உம்மைப் பலவந்தமாகக் கொண்டு வரும்படி ஆக்ஞாபித்தோம்" என்று சொல்லி உடனே என் பாட்டனாரைத் திவான் உத்தியோகத்தில் நியமித்துச் சன்னதுங் கொடுத்தார்.

இப்படிப்பட்ட திவான்கள் முன்னும் இல்லை. பின்னும் இல்லை என்று ஜகப்பிரக்கியாதியாய் யாவருஞ் சொல்லும்படியாக என் பாட்டனார் அதிகாரஞ் செலுத்திவந்தார். ஒவ்வொரு நவாபும் அவருக்குப் பல சமயங்களில் கனகாபிஷேகஞ் செய்ததுந் தவிர, எண்ணிக்கையில்லாத கிராமங்களையும் பூமிகளையும் சர்வ மானியமாகக் கொடுத்தார்கள். என் பாட்டனார், விருத்தாப்பியம் மேலிட்டவுடனே, அவருடைய திரவியங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு, சத்தியபுரியில் வந்து வசித்தார். அவர் காலஞ் சென்றபிறகு, அவருடைய ஸ்திதிகளெல்லாம் என் பிதாவுக்குக் கிடைத்தது. அவர் அநுபவித்து வந்தார். என் தகப்பனார் பெயர் கனகாசல முதலியார். என் தாயார் பெயர் சுந்தரத்தண்ணி. என்னுடைய பெயரைச் சொல்ல எனக்கே சங்கோசமாயிருக்கின்றது. ஏனென்றால் அந்த நாமத்துக்குத் தகுந்த குணம் என்னிடத்தில் இல்லை; மேலும் என்னுடைய பெயரை எழுதி நீட்டினால் காதவழி தூரம் நீளும்; இந்தப் புஸ்தகமும் அந்தப் பெயருக்கே சரியாயிருக்கும்; ஆகையால் என்னுடைய பெயரைச் சுருக்கி, "பிரதாப முதலி" என்று என்னை எல்லாரும் கூப்பிடுகிறது வழக்கம். என் தாய் தந்தைக்கு நான் ஏக புத்திரனாதலால், என்னை மிகவும் அன்பு பாராட்டி அருமையாக வளர்த்தார்கள். என் தகப்பனாருடைய பிரியத்துக்கும் தாயாருடைய பிரியத்துக்கும் பேதம் என்னவென்றால், என் தகப்பனார் நாளை வருவதை யோசியாமல், இன்றைக்கு நான் சந்தோஷமாயிருந்தாற் போதுமென்று, நான் என் இஷ்டப்பிரகாரம் கொட்டம் அடிக்கும்படி விட்டுவிடுவார். என் தாயார் எப்போதும் நான் க்ஷேமமாயிருக்க வேண்டுமென்கிற நோக்கத்துடன் என்னை நயமும் பயமுமாக நடத்தி வந்தார்.

எனக்கு அஞ்சாம் பருவம் ஆரம்பமானது முதல் வித்தை கற்பிக்க வேண்டுமென்று என் தாயார் சர்வப் பிரயத்தனம் செய்தும் பலிக்க வில்லை. எனக்கு வயது போதாது போதாது என்று என் தகப்பனார் காலஹரணம் செய்து வந்தபடியால், என்னை எட்டாம் வயது எட்டிப் பார்க்கிற வரையில், நான் சுத்த நிரக்ஷர குக்ஷியாயிருந்தேன். என் மாதாவினுடைய அலட்டைப் பொறுக்க மாட்டாமல், என் தந்தையார் என்னை ஒரு நாள் தனியே அழைத்து, "உன் தாயார் உன்னைப் பள்ளிக்கூடத்தில் வைக்கவேண்டுமென்கிறாளே, நீ என்ன சொல்லுகிறாய்?" என்று கேட்டார். உடனே நான் தந்தையை நோக்கி, "ஐயா, நானும் படிக்க வேண்டுமா? எனக்கிருக்கிற சுய புத்தி போதாதா? ஏழைகள் ஜீவனஞ் செய்து பிழைக்க வேண்டியதற்காக அவர்களுக்குக் கல்வி அவசியந்தான்; நான் படிக்க வேண்டிய அகத்தியமென்ன? ஏதாவது வாசிக்க வேண்டியிருந்தால் வாசிக்கவும், எழுத வேண்டியிருந்தால் எழுதவும், நமக்குக் காரியஸ்தர்கள் இல்லையா? கணக்கர்களில்லையா?" என்றேன். இது நான் சுயமாகச் சொன்னதல்ல; என் பாட்டியார் அடிக்கடி அந்த வார்த்தைகளைச் சொல்ல நான் கேள்விப்பட்டிருந்ததால் அந்தப் பிரகாரம் நான் பாடம் பண்ணிக் கொண்டு சொன்னேன். அந்த வார்த்தைகள் என் சொந்த வார்த்தைகளென்று என் பிதா எண்ணி, ஆனந்த சாகரத்தில் மூழ்கினார். இவ்வளவு சாதுரியமாய் நான் பேசின சமாச்சாரம் வீடு முழுவதும் பரவி, எங்கள் காரியஸ்தர்கள், கணக்கர்கள், பந்துக்கள், பணிவிடைக்காரர்கள் முதலான சகலரும் ஒவ்வொருவராய் வந்து, என்னுடைய சாமர்த்தியத்தைப் புகழ ஆரம்பித்தார்கள். என்னுடைய பாட்டியாரும் தம்முடைய உபதேசம் என்பதை மறந்துவிட்டு, என்னைக் கட்டித் தூக்கிக்கொண்டு, "என் கண்ணே! பொன்னே! இவ்வளவு சாமர்த்தியமாய்ப் பேச யாருக்காவது வருமோ?" என்று சொல்லிக் கொண்டு, நான் சுவாசம் விடுவதற்கு இடமில்லாமல் வாயாலும் பல்லாலும் அநேக முத்தங்கள் கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த ஒவ்வொரு முத்தமும் எனக்குப் பிராணாவஸ்தையாயிருந்தது. அப்போது அவ்விடத்திலே கட்டியிருந்த ஒரு கருங்குரங்கு, என் பாட்டியார் என்னை ஏதோ உபத்திரவஞ் செய்வதாக எண்ணிக் கொண்டு, அவர்கள் மேலே தாவி விழுந்து, அவர்களைக் கடிக்க ஆரம்பித்தது. அந்த வேதனை பொறுக்க மாட்டாமல், என் பாட்டியார் என்னைக் கீழே விட்டு விட்டார்கள். நானும் அவர்கள் பற்கடிக்குத் தப்பிப் பிழைத்தேன்.

இவ்வளவு நடந்ததும் என் மாதாவுக்குத் தெரியாது. பிற்பாடு எவ்விதமாகவோ தெரிந்து கொண்டு, துயர முகத்தோடு வந்து என் பிதாவை நோக்கி, "ஏன் இவ்வளவு கூக்குரல்?" என்று வினாவ, "கல்வி விஷயத்தைப் பற்றி உன் பாலன் சொல்வதைக் கேள்" என்று என் பிதா ஆக்ஞாபித்தார். உடனே என் தாயார் என் முகத்தைப் பார்த்தாள். நான் முன் சொன்னபடி என் பாட்டியாரிடத்திலே கற்றுக் கொண்ட பாடத்தை என் தாயாருக்குச் சொன்னேன். அதைக் கேட்டவுடனே என் தாயாருக்கு முகம் மாறிவிட்டது. பிறகு சற்று நேரம் பொறுத்து, என் தாயார் என்னை நோக்கி, "என் கண்மணியே, நீ சொல்வது எவ்வளவுஞ் சரியல்ல. கல்வி என்கிற பிரசக்தியே இல்லாதவர்களான சாமானிய பாமர ஜனங்களைப் பார். அவர்களுடைய செய்கைகளுக்கும் மிருகங்களுடைய செய்கைகளுக்கும் என்ன பேதமிருக்கின்றது? கல்வியை உணராவிட்டால் கடவுளது யதார்த்த சொரூபத்தையும், அனந்த கல்யாண குணங்களையும், தர்மாதர்மங்களின் பேதங்களையும், ஞான சாஸ்திரங்களையும், பூகோளம், ககோளம், கணிதம் முதலிய சாஸ்திரங்களையும், இகபர சுகங்களை அடையத்தக்க மார்க்கங்களையும் நாம் எப்படி அறியக்கூடும்? நமக்கு முகக் கண்ணிருந்தும் சூரியப் பிரகாசம் இல்லாவிட்டால் என்ன பிரயோஜனம்? முகக் கண்ணுக்குக் கல்வியாகிய ஞானப்பிரகாசம் அவசியம் அல்லவா? சாணைக்கல்லில் தேய்க்கப்படாத நவரத்தினங்கள் பிரகாசிக்குமா? பிருதிவி ரூபமாயிருக்கிற பொன் வெள்ளி முதலான பஞ்ச லோகங்களை எடுத்துக் காய்ச்சித் திரட்டாவிட்டால் அவைகளுக்கு ஒளி உண்டாகுமா? வெட்டித் திருத்திச் சாகுபடி செய்கிற நிலம் மட்டும் பலன் கொடுக்குமேயல்லாது, சீர்த்திருத்தஞ் செய்யப்படாத நிலம் பலன் கொடுக்குமா? வெட்டித் திருத்தாத நிலம் கல்லும், முள்ளும், புல்லும் மண்டிக் கெட்டுப் போவது போல் கல்விப் பயிற்சியில்லாத மனம் துர்க்குணங்கள் நிறைந்து கெட்டுப் போகாதா? கல்வி ஏழைகளுக்குத்தான் முக்கியம் என்கிறாய். பல தொழில்களைக் கற்றுக் கொண்டு கைப்பாடு பட்டுப் பிழைக்க வேண்டியவர்களான ஏழைகளுக்குப் படிக்க நேரமேது? கல்வி விஷயத்தில் செலவளிக்க அவர்களுக்குப் பொருளேது? அவர்கள் படித்தாலும் அரைப்படிப்பு, காற்படிப்புப் படிக்கலாமேயல்லாமல் பூரணமாய்ப் படிக்கக் கூடுமா? நாம் காரியஸ்தர்களுக்கு மேல் அதிகமாய்ப் படித்திராவிட்டால் அவர்கள் நம்மை மதிப்பார்களா? அவர்களுடைய கணக்குகளிலிருக்கிற பிசகுகளை நாம் எப்படிக் கண்டுபிடிக்கக் கூடும்? வேலைக்காரர்கள், கிராமக் குடிகள் முதலானவர்களை நாம் எப்படி ஆளக்கூடும்? தனவான்கள் படித்தவர்களாயிருந்தால் மட்டும் அவர்களுடைய பொருள்களை சத்விஷயத்தில் உபயோகிப்பார்களே தவிரப் படியாதவர்கள் கையில் அகப்பட்டு தனமானது, பைத்தியக்காரர்கள் கையில் இருக்கிற கத்திபோல், தங்களுக்கும் பிறருக்கும் துன்பம் விளைவிக்கும். ஆதலால் கல்வி தனவான்களுக்கே முக்கியம்" என்று என் தாயார் கர்ணாமிர்தமாகப் பிரசிங்கித்தார்கள். அதைக் கேட்ட என் தகப்பனார், "நல்லது பெண்ணே! உன் மனதுப் பிரகாரம், பிள்ளைக்கு வித்தியாப்பியாசம் செய்விக்க வேண்டிய முயற்சி செய்கிறேன்" என்றார். கல்வி அநாவசியமென்று என் பாட்டியார் எனக்குப் போதித்த போதம், என் தாயாருடைய பிரசங்கமாகிய பிரசண்டமாருதத்தின் முன் பஞ்சாய்ப் பறந்து விட்டது.

உடனே என் தகப்பனார் ஓர் உபாத்தியாயரை நியமனஞ் செய்து, எங்கள் வீட்டில் தினந்தோறும் வந்து எனக்குக் கற்பிக்கும்படி திட்டஞ் செய்தார். எங்கள் கிராம காரியங்களையும், என் தகப்பனார் எவ்வளவும் கவனிக்காமல், என் தாயாரே வகித்துப் பார்த்து வந்த படியால், என் படிப்பைக் கவனிக்க என் தாயாருக்கு ஒரு நிமிஷமாவது ஒழிகிறதில்லை. ஆகையால் என் பாட்டியாரும் தகப்பனாரும் என் கல்வி விஷயத்தில் கவனம் வைக்கத் தலைப்பட்டார்கள். அது எனக்கு அநர்த்தமாய் முடிந்தது. எனக்குப் படிக்க இஷ்டமானபோது நான் படிக்கிறதென்றும், என்னை உபாத்தியாயர் கண்டனை தண்டனை செய்யக் கூடாதென்றும், ஆனால் நான் படிப்பில் சுக்கில பட்சத்துச் சந்திரன் போல், தினே தினே விருத்தி ஆகவேண்டுமென்றும் நிபந்தனை செய்தார்கள். இந்த நிபந்தனைகளின் பிரகாரம், சரியாய் நடக்கவில்லை யென்றும் சில உபாத்தியாயர்கள் நீக்கப் பட்டார்கள். என்னை மரியாதையாக அழையாமல், "வா, போ" என்று ஏகவசனமாகக் கூப்பிட்டதற்காகச் சில போதகர்கள் தள்ளப் பட்டார்கள். ஓர் உபாத்தியாயர் மாச முழுவதும் பிரசாயப் பட்டுச் சொல்லிக் கொடுத்துச் சம்பளம் வாங்குகிற சமயத்தில், சம்பளமில்லாமல் நீக்கப்பட்டார். உபாத்தியாயர்களைத் தள்ளுகிற அதிகாரம், என் தகப்பனாருக்கும் பாட்டியாருக்கும் இருந்தது போலவே நானும் அந்த அதிகாரத்தைச் சில சமயங்களில் செலுத்தி வந்தேன். இவ்வகையாக நான் பன்னிரண்டு உயிர் எழுத்துங் கற்றுக்கொள்வதற்கு முன் தள்ளுபடியான ஆசிரியர்களும் பன்னிரண்டு பேருக்கு அதிகமாயிருக்கலாம். இவ்வளவு ஆபத்துக்கும் தப்பி ஓர் உபாத்தியாயர் மட்டும் நிலைத்திருந்தார். அவர் குடும்ப சகிதமாய் எங்கள் வீட்டில் இருந்து கொண்டு எனக்கும் அவருடைய பிள்ளை கனகசபை என்பவனுக்கும் பாடம் சொல்லிக் கொண்டு வந்தார். ஒரு நாள் என் பாட்டியார் உபாத்தியாயரைப் பார்த்து, "நம்முடைய பிள்ளையாண்டான் படித்துப் படித்துத் தொண்டை வறண்டு போகிறதே! இனி மேல் உம்முடைய மகன் கனகசபை பாடம் படிக்கட்டும். அவன் படிக்கிறதைக் கேட்டு என் பேரன் கல்வி கற்றுக் கொள்ளட்டும். பிற்பாடு என் பேராண்டிக்குப் பாடம் தெரியாவிட்டால், அவனுக்குப் பயம் உண்டாவதற்காகக் கனகசபையைப் பலமாக அடியும்" என்றார்கள். உபாத்தியாயருடைய வயிற்றுக் கொடுமையினால் இந்த அநியாயமான நிபந்தனைக்கும் சம்மதித்தார். எனக்குப் பாடம் தெரியாத போதெல்லாம், உபாத்தியாயர் கனகசபையை அடிப்பார். அவன் இல்லாதபோது உபாத்தியாயர் தன் முதுகிலும் அடித்துக் கொள்வார், நான் பாடத்தைச் சரியாய்ப் பாடித்த நேரமுமில்லை; கனக சபை அடிபடாத நேரமுமில்லை. ஒரு நாள் உபாத்தியாயர் கனகசபையை முதுகில் அடித்தபோது அவன் அழுதுகொண்டு "ஐயா! என் முதுகு ஓர் அபராதமும் செய்யவில்லையே, இவ்வளவு பாடும் வயிற்றுப் பிழைப்புக்காகத்தானே! ஆகையால் வயிற்றில் அடியுங்கள்" என்றான். அதைக் கேட்டவுடனே எனக்கு இரக்கம் உண்டாகி, என் கண்ணில் ஜலம் ததும்ப ஆரம்பித்தது. நான் ஓர் அட்சரம் கற்றுக் கொள்வதற்குக் கனகசபை அநேகம் அடிபடுவான். இப்படியானால் தமிழ் நெடுங்கணக்கு முழுவதும் எனக்குப் பாடம் ஆவதற்கு முன் அவன் எத்தனை அடிபட்டிருப்பானென்று புத்திமான்கள் கணக்கிட்டுத் தெரிந்துகொள்ளப் பிரார்த்திக்கிறேன். அவன் உயிருக்கும் உடலுக்கும் அபாயம் வரும்படியாக அவனுக்கு அடி வாங்கிக் கொடுத்த அட்சரங்களுக்கு உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து என்று பெயர் வந்தது கிரமமல்லவா?

- தொடரும்


விவாதங்கள் (8)