அத்தியாயம் 1

பூச்சி! பூச்சி! பூச்சி!

“நளினி! அடீ நளினி! எங்கேயடியம்மா தொலைஞ்சு போயிட்டே?” என்று குரல் கொடுத்தாள் சின்னம்மா.

“ஏன் சின்னம்மா? இதோ இருக்கேன். முதல் தடவை நீ கூப்பிட்டதே காது கேட்டது. ஏன் இன்னும் கேட்டுண்டே உள்ளே வரதுக்குள்ளேயே நீ எட்டுதரம், கூப்பிட்டுடறயே!” என்று கூறிக்கொண்டே குதித்துக் குதித்துக் கொண்டு உள்ளே வந்தாள் நளினி.

நளினிக்கு வயசு பத்திருக்கும் - இரண்டு, மூன்று மாசங்கள் அதிகமாகவே இருக்கும். ரொம்பவும் சிவப்பில்லை; மாநிறம் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், முகத்திலே ஒரு குறுகுறுப்பும், அசைவிலே ஒரு அழகும் இருந்தன. ஒரு காலத்தில் பச்சையாயும், நன்றாகவும் இருந்த பாவாடையைக் கட்டிக் கொண்டிருந்தாள். பாவாடை இரண்டொரு இடங்களில் கிழித்து தைக்கப்பட்டிருந்ததது. கழுத்திலே ஒரு பவழமாலை. தலைமயிர் எண்ணெய் பட்டு எத்தனை நாள் இருக்குமோ! ஆனால், அதை வாராமல் பின்னி வாழைநார் முடிந்திருந்தாள். நெற்றியிலே பொட்டில்லை. ஆனாலும் அதிலே ஒரு பள பளப்பு இருந்தது. கைகளிலோ கால்களிலோ ஒரு நகையும் இல்லை. கண்ணாடி வளையல்கூட அவள் கைகளை அலங்கரிக்கவில்லை. அவள் கண்கள் ஆழ்ந்தகன்று இருண்டு இருந்தன. சின்ன வாய். ஒவ்வொரு வார்த்தையைப் பேசும் போதும் அவள் வாய் ஒரு சிவப்பு வளையமாகத் திறந்து மூடியது.

‘நளினி! நளினி!’ என்று அவளைக் கூப்பிட்டு அதட்டிய சின்னம்மா நகைநட்டுகள் எல்லாம் ஏராளமாக அணிந்திருந்தாள். சற்று அதிகமாகவே அணிந்திருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல சிவப்பு நிறம். விலை உயர்ந்த பகட்டான பட்டாடை அணிந்திருந்தாள். தலையை வாரிச் சீவி ஜில்லென்று பொட்டும் இட்டிருந்தாள். கொஞ்சம் பகட்டான ஸ்திரீ தான். வயசு இருபது இருபத்திரண்டுக்குள் தான் இருக்கும். அவர் நளினியின் சின்னம்மா; அதாவது, நளினியினுடைய தகப்பனாரின் இரண்டாவது மனைவி.

நளினி தாயில்லாப் பெண். அவள் தாய் இறந்து இப்போது நாலைந்து வருஷங்களுக்கு மேலாகிறது. தனக்கு தாயார் ஒருத்தி இருந்ததே நளினிக்கு ஞாபகம் இல்லை என்றே சொல்லலாம். தாயன்பு என்றால் என்ன என்பதே அறியாமல் வளர்ந்து வருகிறவள் அவள். அது மட்டும் அல்ல; தாயன்பு தேவை என்றும் உணராதவள் அவள்.

நளினியின் சின்னம்மா - அவள் பெயரே சின்னம்மா தான் - சுபாவத்தால் கெட்டவள் அல்ல. ஏழ்மையான, அங்கத்தினர்கள் அதிகம் உள்ள குடும்பத்தில் பிறந்தவள். அந்தக் குடும்பத்திலே சிடுசிடுவென்று சதா சண்டை போட்டுக்கொண்டிருந்தால் தான் - அதாவது, ஏழெட்டுப் பேருடன் ஓயாமல் போட்டி போட்டுக் கொண்டிருந்தால் தான் ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ணமுடியும். வாழ்க்கை என்பது ஒரு போர் என்பதைச் சின்னம்மா தன் இளவயதிலிருந்தே உணரச் சந்தர்ப்பங்கள் படைத்திருந்தாள். அந்தப் போரிலே வெற்றி பெற வேண்டுமானால் ஓயாத வாயடி கையடி அடித்துதான் வெற்றி பெறலாம். வெற்றி ஒரு லக்ஷயம் -ஓயாத வாயடி கையடியே லக்ஷயம் என்றாகிவிட்டது அவளுக்கு! பதினாறு வயது வரையில் கலியாணமாகாமல் - எப்போதுதான் கலியாணம் ஆகும் என்கிற நிச்சயமும் இல்லாமல் - தெருவார் சொன்னது போல் ‘மாடு மாதிரி’ வளர்ந்து வந்த சின்னம்மா, ஒரு நாள் பணக்கார இடத்தில் - இளையாளாகத்தான் என்றாலும் பணக்கார இடம் ஒசந்த இடம் தானே! வாழ்க்கைப்பட்டாள். பெண்டிழந்து விட்டு நாலைந்து வயது கூட நிரம்பாத சிறுமியை வைத்துக் கொண்டு அவஸ்தைப் பட்ட விசுவநாதய்யர் நல்ல இடம் பார்த்து, பொறுப்புத் தெரிந்த பெண்ணாக வேண்டுமென்று தேடி, தானாகவே வலிய வந்து அவளைக் கலியாணம் செய்து கொண்டார்.

நல்ல இடம்தான். வாழ்க்கை ஒரு போர் என்பதையே மறந்துவிட்டு, வாழ்க்கை நடத்தலாம் சின்னம்மா. ஆனால் பழைய பழக்க வேகம் அவளை விட மறுத்தது. கணவன் சாது. அவள் பேசுவதற்கு எதிர்வார்த்தை பேசமாட்டார். அவள் இட்டதே சட்டம். போராட, வாயடி கையடி அடிக்க, அங்கு வீட்டிலே யாரும் இல்லை. ஒரு சிறு பெண்தான் இருந்தாள் - கள்ளங்கபடு அற்ற சிறுபெண். கோபித்துக் கொண்டாலும், அதட்டினாலும் அழத் தெரியாத சிறு பெண். மாற்றாந்தாய், படுத்துகிறாள் என்ற ஞாபகமே, பிறர் ஞாபக மூட்டினால் கூட, நளினிக்கு வருவதில்லை. அப்படியிருந்தும் நளினியைக் காணும்போதெல்லாம், வெட்டலாமா என்று தான் வரும் சின்னம்மாவுக்கு.

அப்படி ஒன்றும் கெட்டவளும் அல்ல அந்தச் சின்னம்மா.

தன் வயிற்றில் பிறந்தவள் அல்ல என்பதற்காக நளினியைக் கடுமையாக நடத்தினாள் அவள் என்று சொல்ல முடியாது. தன் வயிற்றில் பிறந்திருந்தாலும் அவள் அவ்வளவு கடுமையாகவே தான் இருந்திருப்பாள். மூத்தாள் பெண் என்பதற்காக அவளுக்குத் தலை வாராமல், நல்ல ஆடை உடுத்திவிடாமல் இருந்தாள் என்றும் சொல்வதற்கில்லை. தன்னைச் சிங்காரித்துக் கொள்ளவே போதில்லை சின்னம்மாவுக்கு - போது போதவில்லை. தன் பெண்ணையோ, மூத்தாள் பெண்ணையோ சிங்காரிக்க அவளுக்குப் போது எங்கிருந்தது.

சின்னம்மாவைச் சொல்வதில் லாபம் இல்லை. மனித சுபாவமே இதுதான் போலும். தீவிரமாக, சிந்தித்துக் கண்டுபிடிக்கக்கூடிய காரணம் எதுவும் இல்லாமலே, சில காரியங்கள் நடந்து வருகின்றன; சிலர் உறவுகள் பாதிக்கத் தான் பாதிக்கப்படுகின்றன. அதைப்பற்றி ஆராய்வது அவசியம் இல்லை.

ஆனால், நளினியைப்பற்றி அவள் கண் மறைவாக இருக்கும்போது கெடுதியே நினைக்காத சின்னம்மா, அவள் கண்ணெதிரே வந்தவுடன் காளிமாதிரியாகி விடுவாள்! அவள் உள்ளத்திலே ஆத்திரம் ஏதோ குடிகொண்டு மூண்டு மூண்டு எழும்.

இன்றும் அப்படித்தான். “சும்மா வாயாடிண்டு நிக்காதே, கழுதை! எத்தனை தரம் சொல்றது? வாசல் திண்ணையிலே உனக்கென்ன வேலை - எப்பப் பார்த்தாலும்! உள்ளே வெள்ளிப் பேலாவிலே சாதம் பிசைஞ்சு வைச்சிருக்கேன்; ராஜாவுக்கு சாதத்தை ஊட்டு! வயது ஆறது - சொந்தமா ஒரு பெண்ணைப் பெத்துக்க; இப்படி தினம் நிக்கறயே!” என்றாள் சின்னம்மா.

நளினி பதில் ஒன்றும் சொல்லவில்லை. குதித்துக் குதித்துக் கொண்டே உள்ளே போய். இடுப்பில் ராஜுவைத் தூக்கி வைத்துக்கொண்டு, இடது கையில் வெள்ளிப் பேலாவை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“அம்மு, சாப்பிடறயாடா?” என்று ராஜுவைக் கேட்டுக் கொண்டே கூடத்தில் நின்ற தன் சின்னம்மாவை லக்ஷயமே செய்யாமல் மீண்டும் வாசல் பக்கம் போய்விட்டாள்.

“நன்னாருக்குடி இந்தப் பொண் அடிக்கிற கூத்து!” என்று முணுமுணுத்துக் கொண்டாள் சின்னம்மா.

இதற்குள் அவள் கணவன் விசுவநாதய்யர், “அடியே! அடியே! வெந்நீர் எடுத்து வை; ஸ்நானம் பண்ணிவிட்டு ஆபீஸ் போகணும்” என்று கொல்லைத் தாழ்வாரத்திலிருந்து குரல் கொடுக்க, அதைக் கவனிக்க போய்விட்டாள்.

இடுப்பில் குழந்தையுடன் வாசலில் நின்று நளினி, குழந்தை சாப்பிடமாட்டேன் என்று பிடிவாதம் செய்வது கண்டு, பயமுறுத்தலாகவும் வேடிக்கையாகவும், “பூச்சி! பூச்சி!” என்று கூப்பிட்டாள்.

“ச்சி… ச்சி…” என்று மழலை பேசியது அவள் இடுப்பில் இருந்த குழந்தை.

சாப்பிடறயா; இல்லாட்ட, அம்முவை எல்லாம் பூச்சிக்குப் போடட்டுமா?என்று கேட்டாள் நளினி.

“…ச்சி…சி…ஓடு” என்றது குழந்தை.

அந்தச் சமயம் பெண்ணின் குரல் கேட்டு, ‘பூச்சி’யே வாலை ஆட்டிக் கொண்டு நாலுகால்ப் பாய்ச்சலாக அங்கு வந்து சேர்ந்துவிடவே, குழந்தைக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கலகலவென்று சிரித்தது; கைகளையும் கால்களையும் போட்டு உதைத்துக் கொண்டது.

பூச்சிக்கு சாதத்தைப் போட்டுவிடுவேன் என்று பயமுறுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்ளப் பார்த்த நளினி ஏமாந்தாள். பூச்சிக்கும் சாதம் போட்டால்தான் சாப்பிடுவேன் என்றது குழந்தை. பூச்சிக்குப் பாதி, குழந்தைக்குப் பாதி என்று சாதத்தை ஊட்டிவிட்டு வெள்ளிப் பேலா காலியான பிறகு, உள்ளே திரும்பலாமா என்று நளினி யோசனை பண்ணிய சமயம் தெருக்கோடியிலே ஒரு குதிரை வண்டி வந்தது. “அதோ பார், குதிரை வண்டி…” என்று குழந்தைக்குச் சொல்லிவிட்டு அவ்விடம் பேலாவும் கையுமாகக் குதிரை வண்டியைத் தானே பார்த்துக் கொண்டு நின்றாள் நளினி.

குதிரை வண்டி அவள் வீட்டிற்கு எதிரே வந்து நின்றது. அதிலிருந்து ஒரு வாலிபன் இறங்கினான். அவன் நளினி வீட்டுக்கு நேர் எதிர் வீட்டை நோக்கிப் போனான் வண்டிக்காரன் அவனுடைய பெட்டி படுக்கையுடன் பின் தொடர்ந்தான்.

“ராஜு, அந்த மாமாவைப் பார்த்தியாடா? பட்டணத்து மாமாவை!” என்றாள் நளினி சற்று உரக்க.

எதிர் வீட்டை நோக்கிப் போன வாலிபன் காதில் நளினி சொன்னது நன்றாக விழுந்தது. பட்டணத்து மாமா திரும்பினான், யார் அப்படித் தனக்குப் பட்டம் அளித்தது என்பதைப் பார்ப்பதற்காக. ஆனால் அவன் கண்ணில் அழுக்குப் படிந்த கிழிந்த பச்சைப் பாவாடை அணிந்திருந்த ஒரு பெண், இடுப்பிலே ஒரு குழந்தையுடன் எதிர் வீட்டிற்குள்ளே போவது தான் தெரிந்தது. அவள் முகம் அவனுக்குத் தெரியவில்லை.

“தேவலையே! வாயாடிப் பெண்ணாக இருக்கும் போலிருக்கே! வளர்ந்த பெண்ணாகவும் இருக்கிறதே!” என்று சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் போனான் அவன்.

- தொடரும்


விவாதங்கள் (7)