அத்தியாயம் 1

பீடா போட்டுத் துப்பியது போன்ற கலவை வண்ணத் தலையுடனிருந்த அந்த கேங்ஸ்டர் சட்டென்று கோட் உள்பாக்கெட்டிலிருந்து ஹெக்லர் அண்ட் கோச் விபி 9 பிஸ்டலை எடுத்தான் என்று சொல்லும் நேரத்திற்குள் எடுத்தான். பரத்தை நோக்கி நிமிர்த்தி மீண்டும் மீண்டும் சுட்டான்.

ஆனால், பரத் ரத்தம் தெறிக்காமல்... அலறி சரியாமல் மைக்ரோ ஓவனில் சொந்தமாக தயாரித்த பாப்கார்னை கொறித்தபடி பீன்ஸ் பேகில் சரிந்து சுவர் முழுக்க வியாபித்திருந்த திரையில் கூரையிலிருந்து தொங்கிய புரொஜெக்டர் மூலம் ஆங்கில வெப் சிரீஸ் பார்த்துக்கொண்டிருந்தான்.

பெசன்ட் நகரில் கடற்கரையோரமாக கடலைப் பார்த்தபடி நட்டு வைக்கப்பட்டிருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டிடத்திற்கு மாறியிருந்தது மூன்லைட் டிடெக்ட்டிவ் ஏஜன்சி. அலுவலகத்தின் அந்த அறையை அறை என்று வர்ணித்தல் தவறு. நியாயமாக ஹால் என்றுதான் அதைச் சொல்லவேண்டும்.

ஒரு புறம் விசாலமான மேஜையைச் சுற்றிலும் சக்கரம் வைத்த நான்கு நாற்காலிகள். அதன் மேல் திறந்தும், மூடியும் இரண்டு லேப்டாப்கள். இன்னும் நீக்கப்படாத சாண்ட்விச் சாப்பிட்ட பீங்கான் தட்டும், தண்ணீர் ஜக்கும், பெப்பர் & சால்ட் குப்பிகளும் அந்த மேஜையே டைனிங் டேபிளாகவும் பயன்படுவதை அறிவித்தன.

இன்னொரு பக்கம் ஒரு சுவர் முழுக்க ரேக் அமைத்து சகல சாத்தியமான இஞ்சுகளிலும் திணிக்கப்பட்டு வழிய வழிய புத்தகங்கள். மற்றொரு புறம் ஒரு சமையல் மேடை மாதிரியான நீள மேஜையில் மைக்ரோ ஓவன், கேஸ் ஸ்டவ், கொஞ்சம் மளிகை சாமான்கள் டப்பாக்களில். அவற்றின் மீது மிளகு, சீரகம், சர்க்கரை, மிளகாய்த்தூள் என்று எழுதி ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்கள்.

வெளியே அடம் பிடிக்கும் குழந்தையாக பெய்யும் மழையின் ஓசையை வடிகட்டியிருந்தது ஏ.சி. மூடிய ஜன்னல் கண்ணாடிகளில் வழிந்த நீர்க்கோடுகள் கலைடாஸ்கோப் பிம்பங்களாக புதுப்புது வடிவங்களமைத்தன. இருபுறமும் திரைச் சீலைகள் இடுப்பில் பெல்ட் போட்டு திரைச் சிலைகளாகத் தொங்கின.

டீப்பாய் மேல் புத்தகங்களும், ஃபைல்களும் கலைந்து கிடக்க, அந்தக் கும்பலுக்குள்ளிருந்து சிணுங்கிய போனைத் தேடியெடுத்த பரத்,

“சொல்லு சுசி” என்றான்.

“கெட்ட படம் பாக்கறியா?”

“நாட் நவ்! வொய்ப்பா?”

“இருபத்தஞ்சி செகண்ட்டாச்சி போன் எடுக்க.”

“தொட்டதுக்கெல்லாம் சந்தேகப்படாதே!”

“யாரைத் தொட்டே?”

“எப்பப் பாரு இலவச இணைப்பு புக் மாதிரி நீதான் கூடவே இருக்கியே...தொடணும்னு நினைக்கக்கூட முடியறதில்ல.”

“ஒகோ... வாட் ஈஸ் ஆன் யுவர் மைண்ட்?”

“என்ன நீ ஃபேஸ்புக் மார்க் மாதிரி கேக்கறே? மைண்ட்ல எவ்வளவோ இருக்கு. சொல்லதான் முடியுமா? செய்யதான் முடியுமா?”

“அந்த பயம் இருக்கட்டும்!”

“இது பயம் இல்லடா. பரிதாபம்!”

“பரிதாபமா?”

“இல்லையா பின்னே... நீ என்னை லவ் பண்ண ஆரம்பிச்சி ரெண்டு தலைமுறையே கடந்து போனாலும் இன்னும் மாறாம, பிரேக் அப் பண்ணாம கண்ட்டினியூ பண்ணிட்டிருக்கியே... உனக்கு துரோகம் செய்ய நினைக்கிறதே பாவம் இல்லையா? அதுக்காகவாவது கற்போட இருக்கறதுதானே நியாயம்?”

“ராஸ்கல்!”

“நல்லா ஒரு ஃப்ளோவா போயிட்டிருக்கே... எதுக்கு திட்றே?”

“நீ சொன்னதை ரீவைண்ட் பண்ணி யோசிச்சிப் பாரு. நான் மட்டும்தான் உன்னை லவ்பண்றேனா? நீ என்னை லவ் பண்ணலை... அப்படித்தானே?”

“பாசிட்டிவா ஏதாச்சும் சொன்னாலும் அதுல மைக்ராஸ்கோப் வெச்சித் தேடி ஒரு தப்பை எப்படிப்பா கண்டுபிடிக்கிறீங்க? இதெல்லாம் உங்க ஜெண்டரோட டிஎன்ஏ ஸ்ட்ரக்ச்சர்லயே இருக்கோ?”

“எதுக்கு இப்ப ஜெண்டரையே இழுக்கறே? சரி... ஈவினிங் என்ன புரோக்ராம்?”

“மழை பெய்யுதுப்பா. என்ன ஒரு க்ளைமேட்! என்ன ஒரு மூடு. நீ எப்ப வர்றேன்னு சொல்லு. வசதியா சோபா கம் பெட்தானே வாங்கிப் போட்ருக்கோம்...”

“அதே நினைப்புலயே இருப்பியா?”

“உன் செட்யூசிங் குரல்தான் குற்றவாளி யுவர் ஆனர்!”

“என்ன பண்ணிட்டிருக்கே?”

“காலைலோந்து நாலு வேலை.”

“சூப்பர்! என்ன செஞ்சே சொல்லு?”

“மொதல்ல நகம் வெட்டினேன். அப்புறம் தொட்டிச் செடிக்கு தண்ணி ஸ்ப்ரே செஞ்சேன். காலண்டர்ல தேதி கிழிச்சேன். இப்ப வெப் சீரீஸ் பார்க்கறேன்.”

“வெட்டியா இருக்கேன்னு சொல்லு!”

“இப்பதானே பாம்பே அகர்வால் மேட்டர் முடிச்சோம். அடுத்த கேஸ் வர்றவரைக்கும் வெக்கேஷன்ல இருக்கக் கூடாதா? அக்கவுன்ட்ல எக்கச்சக்கமா சேர்ந்துடுச்சிப்பா. ஸ்விஸ் டூர் போலாமா? டிராவல்ஸ்ல பேசவா?”

“இன்னும் பேசிடலையே? கொஞ்சம் தள்ளி வெச்சிடு பரத்.”

“என் ஆசை நாயகி உன்னை ஏன் நான் தள்ளிவைக்கணும்?”

“அய்யே! புரோக்ராமை தள்ளிவைன்னு சொன்னேன்.”

“வொய் டியர்?”

“கோகுல்தாஸ் தெரியுமா?”

“கோகுல் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ்! சென்னையில அத்தனை ஏரியாலயும் 20 மாடி, 30 மாடின்னு வீடு கட்டி விக்கிறவர்தானே? ஒரு பினாமி மூலமா ரெண்டு சேனல் நடத்தறார். அதுல லலிதா ஜுவல்லரி முதலாளிக்கு அப்புறம் இவர் மூஞ்சைதான் அதிகமா காட்றாங்க. சதா சர்வ நேரமும் கோகுல்தாஸ் தலைமை தாங்கினார். கோகுல்தாஸ் மரம் நட்டார். கோகுல்தாஸ் ரிப்பன் வெட்டினார்.”

“அவர்தான்! உன் நம்பர் வாங்கிருக்கார். கூப்புடுவார்.”

“எதுக்காம்?”

“50 கோடி கடன் வேணுமாம்! பரத்... இவ்ளோ அடுக்கினியே... ரெண்டு மாசம் முன்னாடி ஒன் வீக் மீடியா ஹெட்லைன்ஸ்ல வந்தாரே... அந்த நியூஸை விட்டுட்டியே...”

”யெஸ்... கோகுல்தாஸின் மனைவி கொலை!”

“அதேதான்.”

“அதுல நாம என்ன செய்யப்போறோம்?”

“எனக்கென்ன தெரியும்? பேசுவார். அப்ப கேளு. போனை கட் பண்ணவா?”

“இரு... இரு... எங்க இருக்கே?”

``அங்கதான் வந்துட்டிருக்கேன். டிரைவிங்ல இருக்கேன்.”

“இன்னிக்கு உன் டி ஷர்ட்ல என்ன எழுதிருக்கு?”

``ம்? அதான் வருவேன்ல... பார்த்துக்கோ!”

“நீ வர்றதுக்குள்ளே இந்த அத்தியாயம் முடிஞ்சுட்டா? பாவம்! ஏமாற்றமாய்டுமில்ல... எனக்கில்லப்பா...”

“அய்யோ... பரத்... இதெல்லாம் சொன்னா சுவாரசியம் இல்ல... படிச்சாதான் சுவாரசியம்...”

“அப்படின்னா அர்ஜென்ட்டா ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு. படிச்சிக்கறேன்” என்றான் பரத்.

விநாடிகளில் வாட்ஸ்அப்பில் சுசிலாவின் செல்ஃபி படம் வர... அதை பரத் பார்க்க... அதில்...TAKE OFF YOUR EYES IDIOT! என்று இருக்க... புன்னகைத்தான் பரத்.

‘முடியலையே சுசி’ என்று முணுமுணுத்தன அவன் உதடுகள்.
                + + +
சில மாதங்களுக்கு முன்...

வைரமுத்துவின் வைர வரிகளான இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப் பொழுது. அவள் மெரினா கடற்கரையின் உள் சாலையில் காரை நிறுத்தியிருந்தாள். டிரைவிங் சீட்டை விட்டு இறங்காமல் அமர்ந்திருந்தாள். பார்க்கிங் விளக்குகளை ஆன் செய்திருந்தாள். காரின் பின்புற இண்டிகேட்டர்கள் கண்ணடித்துக்கொண்டிருந்தன.

பிங்க் நிறத்தில் பாலீஷ் போட்ட சற்றுமுன் கடித்த நகத்தையே இன்னும் பாக்கி இல்லாமல் கடித்துத் துப்பியபடி ரியர் வியூ மிர்ரர் வழியாக யாரையோ எதிர்பார்த்தாள்.

ஒலித்த போனை எடுத்து காதை மறைத்து அலையும் கூந்தலுக்குள்ளே நுழைத்து,

“சொல்லு” என்றாள்.

“வந்துட்டியா?” என்றது மீசை வைத்த குரல்.

“யெஸ்...”

“எங்க இருக்க?”

“பார்க்கிங் லைட்ஸ் போட்ட ப்ளூ கலர் வண்டி.”

“பார்த்துட்டேன். சூடா சோளம் வாங்கிட்டு வரட்டுமா?”

“கடுப்பேத்தாத. நான் ரொம்ப நேரம் இங்க இருக்க முடியாது. அஞ்சி நிமிஷத்துல புறப்படணும்.”

“டென்ஷனாகாத... வர்றேன்”

ஆனாலும் டென்ஷனானாள். குளிர்க் காற்றையும் மீறி நெற்றியில் பொடித்த வியர்வையை டிஷ்யூ காகிதம் எடுத்து ஒற்றினாள். 

“மே ஐ கமின்?” மடக்கிய விரலால் கதவின் கண்ணாடியில் தட்டித்திறந்து முன் சீட்டில் அமர்ந்த அவன் அவளை ஆழமாக விழிகளால் மேய்ந்து விசிலடித்தான்.

“பாத்து எத்தனை நாளாச்சி... செமத்தியா இருப்கேப்பா இப்ப.”

“விஷயத்துக்கு வா. எதுக்கு மீட் செய்யணும்னு சொன்னே?”

“என்ன அவசரம்?”

”எனக்கு அவசரம்.”

``எனக்கு அவசரம் இல்லையே...”

சிகரெட் எடுத்து உதட்டில் வைத்துக்கொண்டு லைட்டரை அவளிடம் நீட்டி, “பத்த வை டியர்” என்றான்.

“நோ!”

“என்ன நோ? எத்தனை தடவை பத்த வெச்சிருக்கே...”

“கார்ல வேணாம். இந்தக் காரை நான் மட்டும் எடுக்கறதில்லை.”

”ஓ..? யப்பா! என்ன ஒரு முன்னெச்சரிக்கை! கத்துக்கணும்.”

“சீக்கிரம் விஷயத்தை சொல்லு. நான் போகணும்.”

“எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கு. தெரியும்ல?”

“அதுக்கென்ன?”

“எனக்கு எந்த விலையும் குடுக்கலையே டியர்... நீ செஞ்ச துரோகத்துக்கு என்ன விலைன்னு நீயே சொல்லேன்.”

“எத்தனை லட்சம் வேணும்?”

அவன் புன்னகைத்தான். பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு பட்டன் கத்தி எடுத்து கிடிக் என்கிற சத்தத்துடன் அதை விரித்தான்.

“எனக்கு பணம் வேணாம். உன் உயிர்தான் விலை” என்றான்.

- தொடரும்


விவாதங்கள் (508)