சிறுகதை
கார்த்திகை மாதத்தின் இளஞ்சூரியன் சற்று சோம்பலாய்க் கதிர்களை வீச, அதை வரவேற்கும் விதமாக மெல்லிய காற்று ஈரப்பதமாக வீசிக் கொண்டிருந்தது.
கல்லூரி வளாகத்தின் புங்க மரத்தடியின் கீழ் நாங்கள் அமர்ந்திருந்தோம். உணவு இடைவேளையில் எங்கள் இருப்பிடம் அதுதான். இன்று முதல் ஹவரில் லொடலொடக்கும் பிஸிக்ஸ் மேம் காய்ச்சல் என விடுப்பு எடுக்க, நாங்கள் மரத்தடிக்கு சீக்கிரமாகவே வந்துவிட்டோம்.
ஜான்ஸி வழக்கம்போல் சாம்பார் சாதத்தைக் காக்கைக்கு விநியோகித்துக் கொண்டிருந்தாள். உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளிடம் அவளுக்கு எல்லையற்ற கருணை. நாய், பூனை என அவள் வளர்ப்புப் பட்டியல் நீளம்.
கயல்விழி மெல்லிய குரலில், ‘காற்றில் எந்தன் கீத’த்தைப் பாடிக் கொண்டிருந்தாள். இசையே அவளுக்கு ஆதாரம். அவள் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
அமுதா ப்ராய்டின் தத்துவங்களை என்னிடம் விளக்கிக் கொண்டிருந்தாள். ஓஷோ, ஜே.கே. என அவள் உலகம் வித்தியாசமானது.
சம்சார சாகரத்தில் சிக்கவே கூடாது. சிக்கினால் துன்பமே என்பது அவள் கோட்பாடு.
எப்போதும் அந்த மதிய நேரம் கலகலப்பாய்த்தான் இருக்கும். அப்போதுதான் திடுமென தமிழ் அறிவித்தாள்.
“நான் நதிகளைக் கொண்டிருப்பவள்!”
அவள் கண்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவள் சொல்வது எனக்குப் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது. கயல்விழி ‘களுக்’கெனச் சிரித்தாள்.
“அடியே, பாலகுமாரன் எழுதற மாதிரி பேசாதடி. இன்னும் இரும்புக் குதிரைல பாதி எனக்குப் புரியவே இல்லை.”
ஜான்ஸி சாப்பாட்டு டப்பாவைக் கவிழ்த்தபடியே முனகினாள்.
அமுதா எதுவும் நடவாததுபோல், “சரி கிளாஸுக்குப் போவோம். நேரமாச்சு” என்றாள்.
எனக்கு மட்டும் அவளுடைய வார்த்தைகள் எதையோ குறிப்பதாகத் தோன்றியது. அவளுடைய கண்களில் நதிகள் உறைந்து கிடப்பதாகத் தோன்றியது.
“தமிழ், ஏன் அப்படி சொன்னே?”
அவள் உதடுகளில் கேலி வழிந்தோட மெல்லச் சிரித்தாள். அதுகூட நதிபோல சுழித்தோடியது. இனி அவளிடம் கேட்டுப் பிரயோசனமில்லை. அவள் அப்படித்தான். எங்கள் ஐவர் அணியில் ஒரு புரியாத புதிர். பதினெட்டு வயது பருவப் பெண்களாகிய எங்களுக்கு எல்லாம் பொதுவாக சினிமா, காதல், உடைகள் இப்படித்தான் இருக்கும் என நீங்கள் யோசித்தீர்கள் என்றால் முழுதும் தவறு.
ஒவ்வொருவரும் ஒரு விதம். ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு.
ஐந்து பேரும் ஒரே ஊர் என்பதைத் தவிர எங்களுக்குள் ஒற்றுமையான விஷயம் ஏதுமில்லை. பழையக் கட்டுப்பாடுகளையும் பத்தாம்பசலித்தனத்தையும் மெல்லக் கட்டுடைக்க முயன்று கொண்டிருந்த ஒரு காலகட்டம் அது.
ஜான்ஸியின் அப்பா ஒரு மழலையர் பள்ளிக்கூடம் வைத்திருக்கிறார். ஜான்ஸி டிகிரி முடித்து பி.எட். சேர வேண்டும். பின் அந்த பள்ளியைப் பார்த்துக் கொள்வாள்.
கயல்விழியின் அப்பா மளிகைக்கடைக்காரர். அவளுக்கு ஒரு டிகிரி தேவை. அவ்வளவுதான். காதல் கீதல் என்றால் வீட்டுச்சிறைதான்.
அமுதாவின் குடும்பமோ மிக வைதீகம். படிப்பின் பாதியிலேயே மணமுடிக்கும் வாய்ப்பு உள்ளது. அமுதா அதை எதிர்க்கிறாள். அவள் கனவு, மனநல மருத்துவராவதுதான்.
கலைச்செல்வியாகிய என் குடும்பம் கல்வித்துறையில்... நான் படித்து வேலைக்குப் போக வேண்டும். அது என் திருமணத்திற்கான துருப்புச்சீட்டு. சிறுவயதிலிருந்து இதைச் சொல்லியே வளர்க்கப்பட்டதால் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் எனக்கில்லை.
மாறாக, தமிழழகி என்ற தமிழுக்கு அப்பா கிடையாது. அம்மாவும் அவளும் சிறு குடிசை வீட்டில் இருக்கிறார்கள். அக்காவுக்குத் திருமணமாகிவிட்டது. அவள் கணவர் சமையல் வேலை செய்பவர். தமிழ், பெண்ணியக் கோட்பாடுகளைக் கொண்டவள். கம்யூனிச சித்தாந்தங்களும் பெரியாரின் தத்துவங்களையும் வாழ்வில் கடைப்பிடிக்க விரும்புபவள். அநேக நேரம் அவள் பேச்சு எழுச்சியூட்டுவதாகவும் அச்சமூட்டுவதாகவும் இருக்கும். மிகவும் ஒடுக்கப்பட்டு ஒரு கட்டுப்பெட்டியான சூழலில் வளர்க்கப்பட்ட எனக்கு தமிழின் பேச்சின் மேல் ஓர் ஈர்ப்பு உண்டு.
“எத்தனை நூற்றாண்டுகளானாலும் பெண்ணடிமைத்தனம் மாறவே மாறாது. நம்ம மூளைக்குள்ளத் திணிச்சிட்டாங்க. நாமாக மாறினாத்தான் உண்டு. நாயை மாடைப் பழக்குற மாதிரி நம்மை ஆண்கள் அவர்களுக்கு அடிமையாப் பழக்கிட்டாங்க. ரொம்பக் கஷ்டம்.”
அவள் நாசி விடைக்க ஆவேசமாகப் பேசும்போது ஜான்சியும் கயலும் புரியாமல் பார்ப்பார்கள். அமுதா புன்னகைத்துத் தலையசைப்பாள். எனக்குத்தான் பரவசமாக இருக்கும்.
குடையெடுக்காமல் சென்ற ஒரு மழைநாளில் இருவரும் நனைந்தபடியே வீட்டுக்குத் திரும்பிய நேரமொன்றில் உடை உடலோடு ஒட்டிக் கொள்ள ஒட்டுமொத்த ஆணுலகமும் எங்களையே பார்த்தபோது நான் அவமானத்தில் குறுகி நின்றேன்.
“பார்த்தியா? இந்த மழையில் நனைகிற சுகத்தைக்கூட நாம அனுபவிக்க நம்ம உடல் தடையா இருக்கு. சே... நம்ம உயிர் இருக்கிற இந்த உடலைக் கொண்டாட முடியாமல் என்ன வாழ்க்கை. நாம மாறணும், கலை. நான் ஏன் கூனிக் குறுகணும்? இது என் உடல். நான் நனையறேன். நான் நதிகளைக் கொண்டவள்.”
அவள் மீண்டும் பிரகடனப்படுத்தினாள்.
ஆனால், அன்று மாலை அந்த நிகழ்வுக்காக என் அப்பாவிடம் கடுஞ்சொல்லைக் கேட்க வேண்டியிருந்தது.
“பொம்பளைப் பிள்ளைங்ற நினைப்பு இருக்கட்டும்.”
இரவு கண்ணீரோடிய என் கன்னங்களைத் தட்டியபடியே அம்மா சொன்னார்.
“உன்னை யாரும் தப்பா பேசுனா அப்பாவுக்குத்தானே கேவலம்? ஆம்பிளைங்க தெருவில தலை நிமிர்ந்து நடக்கணும்னா பொம்பளைங்க கவுரமா நடக்கணும். பார்த்து நடந்துக்க. தமிழோட குடும்ப அமைப்பு வேற. அவளோட அதிகமாப் பழக வேண்டாம்.”
குடும்ப அமைப்பின் கட்டமைக்கப்பட்ட விதிகளை மீறும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளும் முயற்சியாய் இந்த உபதேசங்கள்.
“இப்படி நடக்கணும், இப்படிச் சிரிக்கணும் - இதையெல்லாம் நிர்ணயிக்க இவர்கள் யார்? மீறினால் தலையைச் சீவிடுவார்களா? பொம்பளைப் பிள்ளைகளுக்கு அறிவு வளர்ந்தா ஆபத்துனு நம்ம அம்மாக்களே நினைக்கிறாங்க. ஒருநாள் சொல்றதைக் கேட்காம உன்னால இருக்க முடியுமா? பயந்தாங்கொள்ளி.”
ஒருமுறை தமிழ் சாமியாடியபோது பயந்து ஒதுங்கியவர்கள்தான் ஜான்சியும் கயலும்.
அமுதா வழக்கம்போல அவள் தோளைத் தட்டி, “செமஸ்டருக்குப் படிப்போம், முதலில்” என்று திசைதிருப்பினாள்.
“தமிழ் எப்படி தைரியமாப் பேசறா. அவளுக்கு ஏதேதோ தோணுது பாரேன்.”
அமுதாவிடம் சிலாகித்தபோது அவள் உதடு பிரியாமல் சிரித்தாள்.
அவள் சூழ்நிலை அவளைப் புரட்சிக்காரியாக்குது.
எனக்கு எதுவும் புரியவில்லை. ஒரு பாதுகாப்பான சூழலில் கண்டிப்பும் கறாருமான அப்பாவுக்கு மகளான எனக்கு தமிழின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் ஞானம் இல்லை என்பதே உண்மை.
“கடிவாளம் போட்டு ஓடற குதிரைக்குக் கொள்ளு தவிர என்ன தெரியும்?”
“விடு. உனக்கு இது போதும்.”
“ஆனால் என்னால முடியல. மூச்சு முட்டுது. சகல ஆற்றலோட தேங்கிக் கிடக்கிறது கொடுமையா இருக்கு.”
இன்னும் அவள் ஏதேதோ பேசினாள். கீழ்ப்படிதலை மட்டுமே திரும்பத் திரும்ப போதித்த ஒரு கட்டமைப்பில் வளர்ந்த என்னால் அவள் எண்ணங்களை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. என் படிப்பு முடியும் சமயம் அப்பாவுக்கும் மாற்றலாக நாங்கள் அந்த ஊரை விட்டுக் கிளம்பினோம். தோழிகளிடம் விடைபெற்றபோது, தமிழ் என் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தபடியே சொன்னாள்.
“கொஞ்சமாவது மாறு. வருங்காலம் ரொம்ப மோசமானதா இருக்கும்.”
அவள் வார்த்தைகள் எனக்குள் அசரீரி மாதிரி ஒலித்துக் கொண்டே இருந்தன.
அமுதாவுக்கு உடனே திருமணமாகிவிட்டது. ஹைதராபாத்தில் ஒரு மருந்து கம்பெனியில் அவள் கணவருக்கு வேலை. அவளை மேலே படிக்க வைப்பதாகக் கணவர் வாக்குறுதி கொடுத்ததாகச் சொன்னார்கள். ஜான்சி சொந்த அத்தை மகனை மணந்து கொண்டாள். பள்ளியைப் பார்த்துக்கொள்ள, வசதியாக. கயலுக்கு வரன் தேடிக் கொண்டிருந்தார்கள்.
தமிழ் மட்டும், “ஆட்டைக் கசாப்புக்கடைக்காரன் வளர்ப்பதுபோல், பெண்களைத் திருமணத்துக்காகவே வளர்க்கிறார்கள் முட்டாள்கள்” என்று திட்டிக் கொண்டிருந்தாள்.
போற இடத்தில நல்ல பேர் வாங்கிக் கொடுக்கணும். புள்ளை குட்டி பெத்து ஆட்டு மந்தையா வளர்க்கணும். என்ன உலகம்டா இது?
காலம் உருண்டோடியது. கண்ணிமைக்கும் நேரத்துக்குள் 15 வருடங்கள் ஓடிவிட்டன. கணினியும் ஆன்டிராய்டும் உலகத்தைக் கைப்பிடிக்குள் கொண்டுவந்துவிட்டன.
இதோ திருமணமாகி நானும் (மற்றவர்கள் சொல்வதுபோல்) செட்டிலாகிவிட்டேன்.
“இரண்டு பெண்களையும் அப்படி இப்படியில்லாம முறையா கட்டிக் கொடுத்து செட்டில் பண்ணிட்டீங்க” என உறவுகள் சொல்லும்போது அம்மா அப்பா முகத்தில் ஒரு மந்தகாசமும் நிம்மதியும் தெரியும்.
ஆனால் அதற்கான விலை என்ன தெரியுமா? பசி எடுத்து சாப்பிடுவது ஒரு சுகம். அந்நேரத்துக் கடமையாய் உண்ணுவதில் என்ன கிடைக்கும்? திருமணம் என்ற பந்தத்தால் வந்த பாசமன்றி நேசத்துடனும் காதலுடனும் எத்தனை பேர் வாழ்கிறார்கள்? கட்டிய கயிற்றோடு சுற்றிவரும் செக்கு மாடென வேறெதுவே தெரியாமல் வாழ்பவர் இன்னமும் இருக்கிறார்கள்.
தமிழின் வார்த்தைகள் என்னுள் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒவ்வோர் அர்த்தத்தைச் சொல்லிக் கொண்டே இருந்தன. எத்தனை இறுக்கமான நட்பாக இருந்தாலும் பெண்களுடையது திருமணத்துக்குப் பிறகு காணாமல் போவதும் இயல்பு மாறுவதும் இன்னுமொரு சாபக்கேடு.
அவ்வப்போது தமிழைப் பற்றி ஏதாவது செய்தி காதில் விழும். அப்போதெல்லாம் ஓடிப்போய் அவளை இறுக அணைத்துக் கொள்ளத் தோன்றும். ஆனால் அதற்கான நேரம் இதுவரை வரவில்லை.
அமுதா, மாமியார் கொடுமையில் அவதிப்படுவதாகவும் கயலின் கணவர் இன்னொரு பெண்ணுடனும் வாழ்வதாகவும் கேள்விப்பட்டபோது மனசு வலித்தது. அவர்களுடன் ஒப்பிடுகையில் என் வாழ்வு பாதுகாப்பானதாகவே தோன்றியது.
அன்று அலுவலக வேலையை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும்போது அந்த போன் வந்தது.
“ஜான்சி தன் பெண்ணோட தீ வச்சு கொளுத்திக்கிட்டாளாம்.”
ஒரு நிமிடம் உலகமே தட்டாமாலை சுற்றியது. நெஞ்சு பதற, ஏன் எப்படி என ஏராளமான கேள்விகள் குடைய ஊருக்கு ஓடினேன்.
அவள் ஓர் இயற்கை விரும்பி. பூச்சி புழுவைக்கூட நேசிப்பவள். மென்மனசுக்காரி.
எப்படி தீ வைத்துக் கொள்ள…
“ஜான்சியின் 14 வயது மகளை எவனோ ஒரு பாவி ஆபாசப் படமெடுத்து, அதை வைத்து அவளையும் மிரட்டி...” அதற்கு மேல் சொல்ல முடியாமல் கயல் கதறினாள்.
விஷயமறிந்து தமிழ்தான் காப்பாற்ற முயன்றிருக்கிறாள்.
பாதி எரிந்தும் எரியாமலும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தவர்களைத் தேற்றி மனரீதியான தைரியம் கொடுக்க அவர்களோடு தமிழ் அமர்ந்திருந்தாள்.
“வா கலை. எத்தனை முறை சொன்னேன்? அடையாளப்படுத்தவும் அசிங்கப்படுத்தவுமே பெண்ணுடல் பயன்படுகிறது என்று? அழியப் போகிற இந்த உடலைப் பாதுகாக்க எண்ணி பெண்ணினத்தையே இழக்கப் போகிறோம். தயவுசெய்து உடலைக் கடந்து வாருங்கள். மனசை விசாலமாக்குங்கள். இந்த உடல் நாம் வாழ ஒரு மீடியம்; அவ்வளவுதான். இதோ நானுமிருக்கிறேன். அந்த அயோக்கியர்களைப் படம் பிடித்து போடச் சொல்லுங்கள். பார்க்கும் ஒவ்வொருவர் கண்களிலும் அவர்களைப் பெற்றவர்களும் உடன்பிறந்தவர்களுமாய் நாங்கள் தெரிவோம். பெண்களை சக உயிர்களாக ஆண்கள் மதிக்க வேண்டுமென்றால் நாம் நம்மை மதிக்க வேண்டும். நம்மிலிருந்தே நாம் விடுதலை பெற வேண்டும்.”
அவள் கதறல் நெஞ்சை உலுக்கியது. எங்கள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்தது.
இப்போது நாங்கள் எல்லோரும் நதிகளாய் மாறிக் கொண்டிருந்தோம்.
விவாதங்கள் (49)
Latha Solaisamy
எப்பவும்எதிர்மறையாதான் எழுதனும்மா
0 likesSwaminathan B
நல்ல கருத்து. பெண்கள் உணர வேண்டும். கதாசிரியர் வாழ்த்துக்கள். 🙏🏻
2 likescharulatha navamani
மிக அருமையான படைப்பு ... மீண்டும் மீண்டும் படித்து பாதுகாக்க வேண்டிய கருத்துகள். நன்றி
1 likesViji Sampath
அருமை மதுரா
1 likesRadha
lovely story
1 likesThangavel Jensrani
நல்ல கதை. பாராட்டுகள்
1 likesThangavel Jensrani
நாம் மாறனும் ஆனால் தலைகீழாக அல்ல, படிக்கனும், முன்னேறனும்! உயரனும்!
1 likesBuvana Phoubalan
யதார்த்தமானகதை
2 likesகுமரன்
இந்திய சமூக கட்டமைப்பின் படி உண்மை
2 likesmadhura likes