சிறுகதை

“ஐயா, இன்னம் எவ்வளவு தூரம் போணும்?”

“வாங்க பால்சாமி, வண்டிதான கூட்டிட்டுப் போகுது. போவோம். இன்னம் நடக்கவே ஆரம்பிக்கல.”

“ஐயா. நடக்கணுமா. வண்டியே முக்கா மணி நேரமா போகுது. இன்னம் நடக்கணுமா?.”

“அட, மலைக்கு மேல வண்டிலா போகாது. பாதயில்ல. நடந்துதா போணும். கம்முனு வாங்க. போய்டலாம்.”

பாதை செல்ல செல்ல கரடுமுரடாக ஆனது. இருபக்கமும் பாதையை அண்டி வளர்ந்து கிடந்த முட்செடிகள் அவர்கள் சென்று கொண்டிருந்த ஈப்பு வண்டியின் பக்கங்களைக் ‘கறகற’வெனக் கீறிக் கிழித்தன. நேற்று இரவு கொட்டித் தீர்த்த மழை மேலும் அவர்கள் செல்லும் பாதையை சகதியாக்கியிருந்தது.

“சார், இதுக்கு மேல வண்டி ஏறாது சார். சேறுல மாட்டிக்கிட்டு இழுக்குது. இதுக்கு மேல போனா வண்டியத் திருப்ப முடியாது. நா மாட்டிப்ப.”

“சரிப்பா விடு. நாங்க போய்க்கிறோம். பால்சாமி….”

“ஐயா, போலாம். கழுதைக்கு வாக்கப்பட்டாச்சி. மூட்டைய சுமக்க யோசிக்கலாமா?”

“என்ன பால்சாமி, இதுக்கே அலுத்துக்கிறீங்க. நானே உங்கள ஹச்எம் ஆக்கி அழகு பாக்கணும் நனைக்கிறே. நீங்க வேற. வாங்க போலாம்.”

“ஐயா, நீங்க வேற இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லாதிங்க. என்னையே எப்போ வேலைய வுட்டு தூக்கலாம்னு இருக்கானுங்க. நா ஒண்ணு பேசல. நீங்க எங்க கூப்டாலு வர. வாங்க போலாம். இது என்ன இமயமலையா, ஏற கஷ்டப்பட. ரெண்டடிதா இருக்கும் ஏறுனா. வாங்க போலாம். ஒரு பிரச்சனையுமில்ல.”

சகதியில் அவர்களின் தடங்கள் கணுக்கால் வரை பதிந்தன. கால்சட்டையை முழங்கால் வரை தூக்கி மடித்துக்கொண்டு வேகமாக முன் சென்றனர். பருவநிலை சட்டென மாறி எந்நேரமும் மழை பிடித்துக்கொள்ளும்படி இருந்தது. 

“பால்சாமி காஞ்ச புல்லுல மட்டைல கால் வைக்காம வாங்க. பாம்பு கெடக்கும்.”

“ஐயா…”

“என்ன பால்சாமி.. இதுக்கு முன்னலா காடு மலனு வந்ததேயில்லையா?”

“இல்லைங்கையா, எனக்கு எல்லா டவுனுதான். வீட்ட வுட்டா பள்ளிக்கூடம் அதவுட்டா வீடுதான்.”

“சரி பாத மாறி போகாதிங்க. ஏம் பின்னாடியே வாங்க. காட்டெரும நிறைய மேயும். எதாவது அடிச்சிடபோது.”

“ஐயா, நானே சக்கர நோயாளிங்கையா. இந்த மாதிரி பண்ணலாமா. நா ஏதாவது தப்பு செஞ்சிருந்தா மன்னிச்சிடுங்க.”

“அட, சக்கர இருந்தா நல்லா நடக்கணுங்க. இத முன்னாடியே சொல்லியிருந்தா ஜீப்பே வேணானு சொல்லியிருப்பல்ல. அதுக்கு வேற தேவயில்லாத செலவு.”

“நா ஒண்ணு பேசலைங்கையா.”

“ஐயா, கொஞ்ச நேரம் ஒக்காந்து போலாமா?”

“உக்காரலாம். புலி வந்துட்டா என்ன செய்யுறது?.”

“ஐயா, எதுக்கு உக்காந்துகிட்டு, போய்டேயிருந்தா பத்து நிமிசத்துல எடம் வந்துடபோது. வாங்க நிக்காம போலாம்.”

இரண்டு மணிநேரத் தொடர் ஏற்றத்தில் மலையின் முதல் கிராமத்தை அடைந்தனர். அவர்கள் செல்ல வேண்டிய இடம் இரண்டாவது கிராமத்தில் இருந்தது. இன்னும் அரைமணி நேரப் பயணத்தில் அவர்களுக்கான இடத்தை அடைந்தனர்.

“அம்மா, இங்க கண்ணபிரான் வீடு எங்க இருக்கு?”

“யாரு…. சரியா தெரிலையே.”

“சின்னப் பையமா. பள்ளிக்கூடம் வந்து போவானே.”

“கண்ணபிரான் பையனா?.”

“ஆமா. அவன்தான் சொல்லுங்க.”

“தெரியும். சொல்ல முடியாது. வேற யாரையாவது கேளு. போ.”

“பால்சாமி சத்தமா சிரிக்காதிங்க. அப்பறம் யான வந்துடும்”

“ஐயா கெழவிக்குத் திமிரப் பாருங்க. என்னால உங்ககிட்ட எதுவும் பேச முடியல. அது பேசிடிச்சி.”

“பேசும் பால்சாமி. பேசும்.”

அவர்கள் சுற்றும் முற்றும் விசாரித்து கண்ணபிரான் வீட்டை அடைந்தனர். அது நான்கு கம்புகளால் பத்தடி இடைவெளியில் சதுரமாக நடப்பட்டு தென்னை ஓலைகளையும் தார்ப்பாய்களையும் போர்த்திக்கொண்டு நின்றது.

“அம்மா…. அம்மா….”

“சொல்லுங்க ஐயா. யாருங்க.”

“கண்ணபிரான் இருக்கானா. நா அவனோட வாத்தியாருங்க.”

“என்ன ஐயா, நீங்க இவ்வளவு தூரம் வந்துருக்கிங்க. பைய ஏதாவது தப்பு செஞ்சிட்டானா?.”

“அதலா ஒண்ணுமில்ல. ரெண்டு வாரமா பள்ளிக்கூடம் வரலையே, அதா நானே வந்தேன்.”

“மழவுட்டாதாயா இனி கீழ எறங்க முடியும்.” 

“தெரியும்மா. அதா நா வந்தன். அவன் எங்க?”

“அப்பாவோட தேன் எடுக்க போய்ருக்கா. வந்துடுவா ஐயா. நீங்க உள்ள வந்து உக்காருங்க.”

“பரவாலமா, நாங்க அந்தத் திட்டுல இருக்கோம். நீங்க வேலைய பாருங்க. அவன் வந்தா சொல்லுங்க.”

***

பிட்டத்தில் கிழிந்த அரைக்கால் சட்டையையும், ஊக்கைப் பொத்தானாகப் பிணைத்துக் கொண்ட மேல் சட்டையையும் உடுத்தியபடி மலையிலிருந்து அடிவாரப் பள்ளிக்கூடத்திற்குப் படிக்க வருவான் கண்ணபிரான். வைகறை நான்கு மணி அளவில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஐந்து மணி அளவில் மலை இறங்கத் தொடங்குவான். மூன்று மணிநேர இறக்கத்தில் பள்ளியை அடைவான். மீண்டும் ஏற்பாட்டில் மலை ஏறத் தொடங்கினால் மாலை ஏழு மணி அளவில் வீட்டை அடைவான். கார்காலத்தின் உச்சத்தில் மலை இறங்குவதும் ஏறுவதும் அசாத்தியமாகிவிடும். ஆர்ப்பரித்து ஓடும் நதிகளும் நீர்வீழ்ச்சிகளும் அவர்கள் மலையை ஒரு தீவாகப் பிரித்துவிடும். கூதிர் காலத்தில் கொட்டும் பனி உடலை சில்லிட்டு ஊடுருவும். ஓர் அடி தூரப் பாதைக்கூட கண்ணுக்குப் புலப்படாதபடி வெண்திரையைப் பனி விரித்திருக்கும். கோடை கத்திரி காலத்தில் காய்ந்து உதிர்ந்த சருகுகளும் மட்டைகளும் எந்நேரமும் காட்டுத்தீயைத் தோற்றுவிக்கும். இந்தப் பருவ நிலைகளைக் கடந்து வன விலங்குகளின் அச்சுறுத்தல்களைத் தாண்டியும் கண்ணபிரான் மலரை நோக்கி ஓடும் தேனீயைப் போல் பள்ளியை நோக்கி ஓடுவான்.

அவன் படிக்கும் அரசுப் பள்ளி, ஒரு மேம்பாடில்லா பழைய கட்டடம். பத்து அறை கொண்ட பள்ளியில் சுமாராக இருநூறு மாணவர்கள் படிப்பார்கள். ஐந்தாண்டு முன்னர் பன்னிரண்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வந்த கூடம், போதிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சேர்க்கை இன்றி பத்தாம் வகுப்பு வரை குறைக்கப்பட்டிருந்தது.

பத்தாம் வகுப்பு மாணவர்களைக் கடந்து மற்ற மாணவர்களுக்குப் பெரிய கவனிப்பிருக்காது. மாதத்தில் பாதி நாட்கள் மாணவர்கள் வருவதில்லை என்றால் மீதம் உள்ள பாதி நாட்கள் ஆசிரியர்கள் வர மாட்டார்கள். கண்ணபிரான் முடிந்த வரை அனைத்து நாட்களும் வந்துகொண்டிருந்தான்.

***

ப்பாசாமி.

வரலையா…

அஸ்வின்.

வரலையா…

பால்ராஜ்.

இருக்கன் ஐயா.

சந்திரன்.

வந்துருக்க ஐயா.

கண்ணன்.

வரலையா…

கண்ணபிரான்.

வந்திருக்க ஐயா.

“என்ன வகுப்புடா இப்போ உங்களுக்கு?”

“கணக்குப் பாடம்….”

“கணக்கு வாத்தியார் வரலையே. என்ன பண்ணலாம்?. சொல்லுங்க.”

“தூங்கிடலாம்.”

“ஹஹஹ…..”

“டேய் நாறப் பயலே. எவன்டா. ஆளப்பாரு. எல்லா அமைதியா நேத்தி கணக்கு வாத்தியார் நடத்துன பாடத்த எடுத்துவச்சி படிங்க.”

பள்ளிக்கூடத்தில் சிறு நூலக அறை ஒன்று இருந்தது. தூசியும் புழுதியும் மக்கிப்போன நாற்றமும் அடைத்திருந்த அறையில் முக்கால்வாசி புத்தகத்திற்கும் மேல் செல்லரித்துக்கிடந்தன. கண்ணபிரான் அவ்வப்போது அந்த அறைக்குச் செல்வான்.

“என்னடா தம்பி, க்ளாஸ் இல்லையா?”

“இல்ல ஐயா. வாத்தியார் யாரு வரல”

அவ்வப்போது வந்து கொண்டிருந்த கண்ணபிரான் கண்ணில் படும் நூல்களை மேலோட்டமாக வாசிக்கத் தொடங்கினான்.

“இந்தாடா. இததான தேடுற.”

“நன்றி ஐயா.”

“எவ்வளவு படிச்சிருக்க?”

“இன்னம் முப்பது பக்கம் இருக்கு ஐயா.”

“சரி சரி படிச்சிட்டு அதோட கதையச் சொல்லு.”

“சரிங்க ஐயா.”

***

ண்ணபிரான் இரண்டு வருடம் முன் வரை அடிவாரத்தில் அரசுக் காப்பகத்தில் தங்கி படித்துக்கொண்டிருந்தான். ஒருமுறை காட்டு மாடுகளின் பால் அடையைத் தேடிச் சென்ற அவனின் தந்தை முன்னூறு அடி மலைச்சரிவிலிருந்து கால் இடறி கீழே விழுந்தார். இருபது மணிநேரப் பெரும் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டு ஆறு மணிநேரப் பயணத்தில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக, பாறையில் விழாமல் மரக் கிளைகளில் மாட்டியிருந்தார். உடல் முழுக்க ரத்தக் காயங்களுடன் இடது கணுக்கால் எலும்புகள் முற்றாக சிதைந்திருந்தன. இடது தோள்பட்டையும் முறிந்திருந்தது. மிகவும் தாமதமானதால் உயிரைக் காப்பாற்ற சிதைந்த கால் சதைகள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் சில எலும்புகளையும் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். அதன் பிறகு, கண்ணபிரானின் தந்தையால் சரியாக நடக்க முடிவதில்லை. அபாயகரமான மேடுகளில் ஏறுவதைத் தவிர்த்தார். குடும்பத்தைச் சுமக்க கண்ணபிரான் அவன் அப்பாவுக்குப் பதிலாக செங்குத்தான மலைகளிலும் பாறைகளிலும் தேன், மூலிகைகளை எடுக்கச் சென்றான். அதனால் அவன் முழு நேரக் காப்பகத்தில் தங்கி படிப்பது முடியாமல் போனது. 

***

ன்னடா படிச்சிட்டியா?”

“இன்னம் பத்து பக்கம் இருக்கு ஐயா. அப்பறம் வர. தமிழ் வாத்தியாரு வந்துடுவாரு. வகுப்புக்கு நேரமாயிடுச்சி.”

“சரி போ.”

“இது என்னங்கையா?”

“இது இலக்கிய இதழ்டா. வாரம் வாரம் வரும். நீ இதலா பாத்ததில்லையா?”

“இல்லையே.”

“சரி இத எடுத்துக்கோ. வீட்டுக்கு எடுத்துட்டுப் போய் படிச்சிட்டு எடுத்துட்டு வா.”

“வீட்டுக்கு எடுத்துட்டு போலாமா?”

“போலான்டா. இது ஸ்கூலுது இல்ல. நாதா வாங்குற. படிச்சிட்டு எடுத்துட்டு வா.”

“சரிங்க ஐயா.”

***

யா…”

“என்னடா அதுக்குள்ள படிச்சிட்டியா?”

“படிச்சிட்ட ஐயா… நல்லாயிருந்துது.”

“சரிடா.”

“ஐயா அந்த ‘முருகன் கோவில் பேருந்து நிலையம்’ கத நல்லா இருந்துச்சி. ஆனா, முழுசாயில்ல. சரியா புரியல.”

“அது தொடர்டா. நாலு மாசமா வருதுனு நெனைக்கிற. அத யார் எழுதுறா தெரியுமா?”

“தெரிலைய்யா.”

“என்னோட வாத்தியார்டா. எனக்கு மட்டுமில்ல தமிழ்நாட்டுல நிறைய வாத்தியாருக்கு அவர்தா வாத்தியாரு. ‘வீர ராஜன்’. பேரு கேள்விப்பட்டிருக்கியா. அவரு வாங்காத விருதுமில்ல பட்டமுமில்ல.”

“தெரிலைங்கையா.”

“சரி ஓடு. மணி அடிக்கிறாங்க பாரு.”

ஒன்றரை வருடத்திற்கு முன்பு கனகவேலன் அந்தப் பள்ளியில் நூலகராக மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தார். ஐம்பது வயதை நெருங்கிவிட்ட கனகவேலன் ஆரம்ப நாட்களில் ஆசிரியர் வேலையைக் கடமையாகவும் சேவையாகவும் விரும்பி ஏற்றார். இளமைக் காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான இலக்கிய இதழை நடத்திவந்தார். தொடர்ச்சியாக மாணவர்களுக்காக நூல் அறிமுகம் வாசிப்பின் தேவைகள் பற்றிய விழிப்புணர்வுக் கூட்டங்களையும் முனைப்பாக நடத்தினார். காலப்போக்கில் ஏற்பட்ட பொருளாதாரச் சுமையும் வயதின் சலிப்பும் அவரை முடக்கியது. இதழை நடத்த முடியாமல் கைவிட்டார். மெதுவாக வெளிச் செயல்பாடுகளும் குறைந்தன. அவரின் இயலாமையைப் போக்கிக்கொள்ள நூல்களோடு அதிக நேரத்தைச் செலவிட்டார். ஆசிரியர் வேலையை விடுத்து நூலகராகப் பணிபுரியத் தொடங்கினார். கால ஓட்டத்தில் சட்டத்தில் தூசி படிந்து கிடக்கும் நூல்களைப் போல் அவரும் எந்த உந்துதலுமின்றிக் கிடந்தார். கண்ணபிரானின் வருகையும் அவனின் ஆர்வமும் தொலைந்து போன கனகவேலனை மீண்டும் அவருக்கு நினைவூட்டியது. அவனின் அமைதியான குழந்தை முகம் கேட்பாரற்று தூசி படிந்து கிடக்கும் அவரின் மனதை எழுப்பியது.

கனகவேலன் அடுத்த நாள் பள்ளிக்கு வரும்போது கடந்த நான்கு மாத இதழையும் எடுத்து வந்தார். 

“டேய், வகுப்பு முடிச்சிட்டு வாடா.”

“சொல்லுங்க ஐயா.”

“இதோ. நீ கத கேட்டல. இதுல இருக்கு. படிச்சா புரியும். எல்லாத்தையு வீட்டுக்கு எடுத்துட்டு போய் படி. பொறுமையா எடுத்துட்டு வா.”

“சரிங்கையா, திங்ககெழமக் கொண்டாறன்.”

“டேய், ரெண்டு நாள்ல எல்லாத்தையு படிச்சிடுவியா. பொறுமையா கொண்டாடா. ஒண்ணு அவசரமில்ல.”

***

ண்ணபிரான் எடுத்துச் சென்ற அனைத்து இதழ்களையும் திங்கட்கிழமை மீண்டும் எடுத்து வந்தான்.

“நல்லா இருக்கு ஐயா. அடுத்த தொடரு எப்போ வரும்?”

“டேய் பேய்ப் பயலே. என்னடா எல்லாத்தையு படிச்சிட்டியா. எங்கந்துடா வந்த நீ.”

இதழ்களைக் கொடுத்துவிட்டு வகுப்பறைக்குச் சென்று கொண்டிருந்த கண்ணபிரானை கனகவேலன் பார்த்துக்கொண்டே இருந்தார். பின் அவர் அமர்ந்திருந்த இருக்கை தூசி படிந்து கிடந்ததைக் கவனித்தார். எழுந்து சென்று பழைய துணியை எடுத்து வந்து சுத்தம் செய்து கொண்டு மீண்டும் அமர்ந்தார். பிறகு அவரின் மேசை தூசி படிந்து கிடப்பதைக் கண்டார். அந்த அறையின் மக்கிய காகித வாடை அவர் நாசியைத் துளைத்தது. இருக்கையில் அமர முடியாமல் கூசிப்போய் சட்டென எழுந்தார். அவரைச் சுற்றிலும் தூசியும் புழுதியுமாகவே இருந்தன. சுவற்றில் ஒட்டடைகள் கொத்துகொத்தாகத் தொங்கின. சட்டத்தில் இருந்த நூல்கள் அனைத்தும் தூசியில் புதைந்து கிடந்தன.

“பால்சாமி… பால்சாமி என்ன பண்ணுறீங்க?”

“ஒண்ணு இல்லைங்கையா. சொல்லுங்க.”

“நாளைக்குக் காலைல பத்து மணிக்கு வந்துட்டு போக முடியுமா. லைப்ரரி எல்லா குப்பையா கெடக்கு. சுத்தம் பண்ணிடலாம்.”

“ஐயா நாளைக்கு வருசப் பொறப்பு…”

“அட ஒரு மணிநேரத்துல போய்டலாம். வந்துட்டு போங்களேன்.”

“சரிங்கையா வர. போகும்போது கவனிக்கணும்.”

“கவனிச்சிட்டா போச்சி.”

***

நூலகம் மீண்டும் சுத்தமாகியது. அது வசந்த காலத்தை வரவேற்கும் முதல் விடியலைப் போல் இருந்தது. 

“ஐயா இடுப்ப ஒடச்சிடிங்க. யாருமே படிக்க வரபோறதில்ல. திரும்ப எல்லா தூசிதா புடிக்கப்போது.”

“ச்சி… பால்சாமி, பசங்க வரும்போது வரட்டும். நம்ம சுத்தம் பண்ணி வைப்போம்.”

“என்னையா திடீர் அக்கற. பல வருசமா இப்படியேதான கெடக்குது.”

“ஒருத்தனுக்காகதா பால்சாமி.”

“என்னையா, ஒருத்தன் படிக்கவா ஏ இடுப்ப ஒடச்சிங்க.”

“என்ன பால்சாமி, யாரோ ஒருத்த இல்ல. யாரோ ஒருத்ததான இந்த ஒலகத்த மாத்துறா. சரி, வாங்க சாப்புடுவோம்.”

***

ன்னடா க்ளாஸ்க்குப் போகல?”

“ஐயா, இன்னைக்கி இதழ் வந்துருக்குமில்ல?”

“டேய் தெரியுடா. வீட்டுக்குப் போகும்போது கொண்டு போடா. இப்போ என்ன?”

“ஐயா வாத்தியார் யாரு வகுப்புக்கு வரல. அதா வந்தன்.”

“சரி உள்ள வா… இதோ இருக்கு… கண்ணபிரான், ஐயாகிட்ட பேசுறியா. போன் போடட்டா.”

“எந்த ஐயா, ஐயா?”

“நீ யார் கதய படிக்குற. அவருதா.”

“ஐயா, வேணா ஐயா.”

“என்னடா பயம்…?”

“வேணா ஐயா…”

கண்ணபிரான் இதழை எடுத்துக்கொண்டு வகுப்பறைக்கு ஓடினான்.

கனகவேலன் வழக்கம்போல் அவரை நூல்களில் ஆழ்த்திக் கொண்டார்.

நாட்கள் நகர்ந்தன. வாரம் வாரம் வரும் கதையை விடாமல் படித்துக் கொண்டே வந்தான் கண்ணபிரான். ஒருமுறை கனகவேலன் அவனை அழைத்து வீர ராஜனுக்குப் பிறந்தநாள் வருகிறது ஒரு வாழ்த்துச் செய்தி எழுதித் தரும்படி கேட்டார். முதலில் தயங்கிய கண்ணபிரான், கனகவேலனின் ஊக்கத்தால் வாழ்த்துச் செய்தி ஒன்றை எழுதித் தந்தான்.

“படவா, நல்லா எழுதுற. அப்பறம் என்னடா கூச்சம். நா ஐயாவுக்கு மெயில் அனுப்புற.”

“ஐயா, வேணா ஐயா… நல்லாவேயில்ல...”

“டேய் ஓட்றா. எனக்குத் தெரியும்.”

கனகவேலன் செய்தியை வீர ராஜனுக்கு அனுப்பினார். இரண்டு நாட்கள் கழித்து “மகிழ்ச்சி… நன்றி” எனப் பதில் வந்தது. 

***

ழைக்காலம் தொடங்கியது. மூன்று நாட்கள் விடாமல் கொட்டிய மழை அவர்கள் பள்ளியைக் குளமாக மாற்றியது.

“டேய், என்னடா? இந்த மழைல வந்துருக்க. முட்டாப் பயலே.”

“ஐயா, அந்தளவுக்கு ஒண்ணுமில்ல. எறங்கி ஏறுற பாத வறண்டுதா கெடக்கு.”

“சரிடா, அதுக்கு என்ன. இப்போ வந்து என்ன பண்ணப் போற. ஒரு வாத்தியாரும் பசங்களும் வரல…”

“ஐயா கத வர நாளு. அதா வந்த.”

தொடர்ந்து வந்த நாட்களில் மழையின் தீவிரம் அதிகரித்தது. மலையைச் சுற்றியிருந்த நதிகள் ஆர்ப்பரித்து ஓடின. நதியை ஒட்டிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை அரசாங்கம் விடுத்தது. இதழ் வருவதற்கான நாளும் வந்தது. கண்ணபிரான் எதையும் பொருட்படுத்தாமல் அடிவாரத்திற்கு இறங்கினான். பள்ளியை அடைந்து பார்த்தான். அனைத்து அறைகளும் தாழிட்டுக் கிடந்தன. சுற்றும் முற்றும் திரிந்து அவன் நூலக அறையின் முன் சென்று அமர்ந்தான்.

“டேய் முட்டாப் பயலே. நீ வருவனு நெனச்சன். என்ன மூளடா உன்து.”

“ஐயா…”

“என்ன இதழா. மழ கொட்டுது. எவன்டா வெளிய சுத்துறான். பேப்பரு படிக்குறான். முட்டாப் பயலே. இதழு அடிவாரத்துக்கே வரல. என்ன செய்ய சொல்லு…”

“……”

“வாடா இங்க உக்காந்தா இதழு வருமா இதழு... முட்டாப் பய… ஆயிரம் அடி மல எறங்கி வரான். கிறுக்குப் பய… வாடா. என்ன யோசிக்குற?”

“எங்கையா?”

“டவுனுக்குப் போலாம் வா.”

கனகவேலன் வழியில் கிடந்த கிழிந்த தார்பாயை எடுத்து கண்ணபிரானிடம் கொடுத்தார். 

“வண்டில போகும்போது மழ வந்தா போத்துடா.”

“சரிங்கையா.”

அவரின் டிவிஎஸ் 50 வண்டியின் பின்பக்கத்தில் கண்ணபிரான் ஏறிக்கொண்டான். இருவரும் அருகில் இருக்கும் நகரத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். மழை நின்று மண் வாசம் காற்றை நிறைத்திருந்தது. வழி நெடுக காற்றில் அசைந்தாடிய பனை மரங்களும் தென்னை மரங்களும் அவர்களை வரவேற்கும் முகமாக அவர்கள் மேல் நீர்த் துளிகளைப் பன்னீராகத் தூவிற்று. ஈரம் படிந்த தார்சாலை அதிசய கருப்புக் கம்பளம்போல் விரிந்துகொண்டே சென்றது.

அவர்கள் நகரின் சந்தை வீதியை அடைந்தார்கள். கனகவேலன் வண்டியைத் தனியார் அஞ்சல் நிறுவனத்தின் முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பத்து நிமிடம் கழித்து இதழைத் தூக்கித் தலைக்கு மேலே ஆட்டியபடியே வெளியே வந்தார். அனைத்துப் பற்களும் தெரிய இருவரின் முகத்திலும் சிரிப்பு ராட்டினமாக சுற்றியது. 

“டேய் மலப் பயலே. இதழு வந்துடிச்சிடா. டீக்கடைக்குப் போவோம் வா.”

கனகவேலன் கண்ணபிரானைத் தேநீர் கடைக்குக் கூட்டிச்சென்றார். இரண்டு தேநீரைச் சொல்லிவிட்டுக் கடைக்குள் சென்று அமர்ந்தனர்.

“இதுக்குதானடா வந்த. படி.”

கண்ணபிரான் வேகமாக இதழை வாங்கி கதையின் பக்கத்தைத் தேடிப் புரட்டினான். ஆனால், கதை எங்கும் காணோம். மீண்டும் ஒவ்வொரு பக்கமாக முதலிலிருந்து பார்த்தான். கதையின் தொடர்ச்சியை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.

“ஐயா, கதையக் காணோம்.”

“கொண்டா. வந்துருக்கணுமே.”

கதை அச்சாகவில்லை. காரணம் புரியாமல் கனகவேலனும் யோசித்துக் கொண்டிருந்தார். பின் பதிப்பகத்திடமே கேட்க முடிவுசெய்து அழைத்தார். 

“தோழர் வணக்கம். நா கனகவேலன். இந்த வாரம் வீர ராஜன் தொடர் போடலையா?”

“அவரு கதைய அனுப்புலைங்க தோழர்.”

“யாங்க, என்ன ஆச்சி?”

“தெரிலைங்க. கத இறுதி அத்தியாயத்துக்கு வந்துடுச்சிங்க. இந்த மாசத்தோட முடிக்கிறதா இருந்தோம். அவரு அனுப்புறதா சொன்னாரு. ஆனா அனுப்புல. நாங்க ரெண்டு மூணு தடவ கேட்டோம். அனுப்புறனு சொன்னாரு. அனுப்புலைங்க.”

கனகவேலன் கண்ணபிரானை மலை அடிவாரத்தில் இறக்கிவிட்டார். “பாத்து போடா” என்றார். முகில்கள் திரண்டு கொண்டு மலையை முற்றாக விழுங்கி விடுவதுபோல் வானில் நின்றது. கண்ணபிரானுக்கு ஒரு வாரம் கழிவது பெரும் போராட்டமாக இருந்தது. அதற்குள் அவனால் லட்சம் முறை மலை ஏறி இறங்கிவிட முடியும். மலையின் இங்கு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் தேன்கூடுகளைக் கண்டு கொண்டு அதன் தேனை எடுத்து அருவியாக ஓடவிட முடியும். மாயமான மூலிகைகளை அறிந்து அதை மீண்டும் பயிராக்கி பல நோய்களைத் தீர்த்துவிட முடியும். ஆனால், அந்த ஒரு வாரத்தைப் போக்க முடியாமல் தவித்தான். மீண்டும் இதழுக்கான நாளில் கொட்டும் மழையிலும் கீழ் இறங்கினான். ஆனால், இந்த முறையும் கதை அச்சாகவில்லை. இவ்வாறாக ஐந்து வாரங்கள் பறந்துவிட்டன.

பின் ஒரு வைகறையில் எழுந்த கண்ணபிரான் அவன் அப்பாவுடன் மூலிகை எடுக்க காட்டிற்குள் சென்றான். இருளில் இலைகளிலிருந்து வழியும் நீர்த்துளிகள் அவன் தலையை நனைத்துக் கொண்டே இருந்தன. சட்டென அவன் அப்பாவிடம், “ப்பா, நா வரல. இன்னைக்கி நீ போய்ட்டுவா” என்றான். வேக வேகமாக வீட்டை நோக்கி ஓடினான். அவனின் ஏட்டையும் பேனாவையும் இரும்புப் பெட்டியிலிருந்து எடுத்தான். வெளித் திட்டின் மரத்தடியில் அமர்ந்துகொண்டு விளக்கை எரிய விட்டபடி எதையோ எழுதினான். மணிக்கணக்காக எழுதுவதாகப் பட்டது. ஆனால், தாளைப் பார்த்தால் நான்கு ஐந்து வரியைக்கூட நிரப்பிவிடவில்லை. மூன்று நான்கு நாட்கள் ஏட்டும் பேனாவுமாக சுற்றியவன் பின் அதை எடுத்துக்கொண்டு மலை இறங்கத் தொடங்கினான். பள்ளி நூலகத்தை அடைந்த அவன் கனகவேலனைத் தேடினான். அன்று யாரும் பள்ளிக்கு வரவில்லை. காப்பகத்தை அடைந்து பாதுகாவலரிடம் கனகவேலனின் முகவரியைக் குறித்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றான். 

“டேய் என்னடா இங்கயே வந்துட்ட. இன்னம் மூணு நாள் இருக்கே இதழ் வர”

“ஐயா… நா எழுதியிருக்க. பாருங்களேன்…”

“என்ன எழுதியிருக்க? கொண்டா.”

வீர ராஜன் கதைக்கு இறுதி அத்தியாயத்தை எழுதியிருந்தான் கண்ணபிரான். கனகவேலன் படித்துவிட்டு “படவா” என முணுமுணுத்தார். கண்ணபிரான் மீண்டும் மலை ஏறத் தொடங்கினான்.

வீர ராஜனுக்கு கண்ணபிரானின் முடிவுரையையும் அவனைப் பற்றிய குறிப்பையும் அன்று மதியம் கனகவேலன் மின்னஞ்சல் செய்தார். 

அடுத்த நாள் கனகவேலனுக்கு வீர ராஜனிடமிருந்து அழைப்பு வந்தது. அதை எதிர்பார்க்காத கனகவேலன் பதறிப்போய் பேசியை எடுத்தார்.

“ஐயா. வணக்கம். நலமாயிருக்கிங்களா… சொல்லுங்க…”

“கனகவேலன் நலம். நா மெயில் படிச்சன்.”

“ரொம்ப மகிழ்ச்சி ஐயா. அவனுக்கு என்ன தோணுச்சோ அத எழுதிட்டா. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்க வேணா. அது ஒரு கொழந்தத்தனமாதா இருந்துச்சி. எதோ நானு உங்களுக்கு அனுப்பிட்டன்.”

“கனகவேலன் ரொம்ப நாள் கழிச்சி ஒரு அதிசியத்த உணர்ந்த மாதிரி இருந்துச்சி. அந்தக் கொழந்த ஒரு பொக்கிஷம். வான்லந்து கொட்டும் நீர்போல கொழந்தத்தனம் ஒரு அற்புதம் கனகவேலன். என்னால எப்பேர்பட்ட முடிவுரையையும் அந்தக் கதைக்குக் கொடுத்துருக்க முடியும். அது ஒரு செவ்விலக்கியமாகூட மாறலாம்… ஆனா, என்னால அந்தக் கொழந்தத்தனத்தோட, கண்ணபிரான் எழுதுன மனசோட எழுதியிருக்க முடியாது. கண்ணபிரான் எழுத்து ஆயிரம் செவ்விலக்கியத்துக்கு சமம் கனகவேலன். அது சிறப்பான எழுத்தாயிருக்கணும்னு எனக்கு படுத்து. எனக்கு அவனோட எழுத்த அனுப்பி வச்சதுக்கு நன்றி. என்னோட இறுதி அத்தியாயத்துக்கு உந்துதல் கெடச்சிருக்குனு தோணுது. இந்த வாரம் இதழப் பாருங்க.”

கனகவேலனுக்குப் புயல் அடித்து ஓய்ந்ததுபோல் இருந்தது. அன்று இரவு மீண்டும் மழை பிடித்துக்கொண்டது. இரண்டு நாட்கள் விடாமல் கொட்டியது. நதியை, ஏரியை அணையைச் சுற்றிய கிராமங்களும், அனைத்துத் தரைப் பாலங்களும் நீரில் மூழ்கின. மூன்றாவது நாள் இதழுக்காகக் காத்துக்கொண்டிருந்த கனகவேலனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அவர் காலையிலிருந்து வீதியைப் பார்த்தப்படி நின்றார். மதியம் நெருங்கியும் அஞ்சல் எதுவும் வருவதுபோல் தெரியவில்லை.

“பாதயெல்லா தண்ணீக்குள்ள கெடக்குது. போஸ்ட் எப்படி வரும். உள்ள வந்து கம்முனு உக்காருங்க”.

“ஏ கத்தாதடி.”

கனகவேலனால் நிற்க முடியாமல் வண்டியை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு ஓடினார். அஞ்சல் அலுவலகத்தை அடைந்து இதழை வாங்கிக்கொண்டு வெளிவந்தார். அவர் வண்டியை அடையும் முன்னரே கதை வந்திருக்கிறதா எனப் பரபரப்புடன் இதழைப் பிரித்தார். அவர் கண்கள் பெரிதாக விரிந்துவிட்டன. வியப்பில் நின்ற அவர் பின் பால்சாமியை அழைத்துக்கொண்டு மலை ஏற முடிவெடுத்தார்.

“ஐயா… கீழ எறங்கறதுக்குள்ள இருட்டிடும் போலயே.”

“என்ன பால்சாமி, நமக்கு ஒரு நாள் ஏறி எறங்கவே இவ்வளவு அலுப்பாயிருக்கு. ஒரு கொழந்த தெனமும் எல்லாத் தடையும் தாண்டி படிக்கணும்னு வருது. எப்படிப்பட்ட மனசு அவனுக்கு.”

கண்ணபிரானும் அவன் தந்தையும் வெறும் கையோடு வீட்டை அடைந்தனர். கண்ணபிரானின் அம்மா வாத்தியார் வந்திருப்பதாகத் தெரிவித்தாள். அதை எதிர்பார்க்காத கண்ணபிரான் ‘கடகட’வென வெளியே ஓடிவந்தான். 

“டேய்… முழிக்கிறான் பாரு. இங்க வாடா. என்னடா கோவம் ஒனக்கு.. எங்க முட்டிய ஒடச்சிட்ட.”

“ஐயா…”

“இந்தா இதழப் பாத்தியா. நீ வருவனு நெனச்ச. பரவால நானே வந்துட்டன். சரி மொதல பிரிச்சிப் பாரு.”

கண்ணபிரான் இதழை வாங்கி வேகமாகப் பிரித்து கதை வந்திருக்கிறதா என பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

“என்ன ஐயா. நா எழுதுனதையே போட்டுட்டாங்க.”

“அப்பறம் நீ தானடா எழுதிக் கொடுத்த. அதா போட்டாச்சி.”

கண்ணபிரான் புரியாத வியப்பில் இருந்தான். அந்தக் கதைத் தொடரின் தலைப்பே ‘கண்ணபிரானின் இறுதி அத்தியாயம்’ எனப் பெயரிட்டிருந்தது. அவன் எழுத்தின் எந்த சொற்களையும் மாற்றாமல் அப்படியே போட்டிருந்தார் வீர ராஜன். 

“என்னடா, எதாவது பேசு. மகிழ்ச்சியா. சரி நாங்க வரோம். மழ வுட்டோனே பள்ளிக்கூடத்துக்கு வா. இப்போ எறங்க ஆரம்பிச்சாதா வீடு போய்ச் சேர முடியும்.”

கனகவேலன் பேசிவிட்டு மலை இறங்கத் தொடங்கினார். கண்ணபிரான் அவர் பின்னேயே ஓடினான். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

இதழின் கடைசிப் பக்கத்தில் வீர ராஜன் எழுதியிருந்தார் “நான் எழுதிய எல்லாக் கதையும் ஒரு கட்டத்தில் முடிவடையும். ஆனால் இந்தக் கதை முடியவில்லை. நிச்சயம் முடியவில்லை. தொடங்கியுள்ளது. வாசகர்களுக்கு கண்ணபிரானின் இறுதி அத்தியாயம் அபத்தமாகத் தோன்றலாம், ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால், என்னைப் பொறுத்தவரையிலும் இந்தக் கதை ஒரு வானவில்லைக் கண்டுகொண்டுள்ளது. வானில் தோன்றும் வானவில் அற்புதம். அபூர்வமாகத் தவிர நாம் எப்போதும் அற்புதத்தைத் தவறவிட்டுவிடுகிறோம். இந்த முறை நாம் தவறவிடவில்லை. அற்புதத்தை, வானவில்லை காட்டிய கனகவேலனுக்கு நன்றிகள்.”


விவாதங்கள் (48)