அத்தியாயம் 1

அந்த ஆலமரத்தின் அடியில், அத்தனை பெண்களும் கையும் பீடி இலையுமாய், வாயும் பேச்சுமாய், தட்டும் மடியுமாய், தலையில் வைத்த பூக்கள், அவர்களின் தளிர்மேனி செடியில் பூத்து நிற்பதுபோல் பொலிவு காட்ட, முன்னாலும் பின்னாலும் லேசாய் ஆடியாடி, முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருந்தனர்.சட்டாம்பட்டியின் ‘கிழக்கு ஊரின்’ மேற்கு பக்கமாய் உள்ள காளி கோயிலுக்கு முன்னால், அம்மனே நிரந்தரி என்று சொல்வதை நிரந்தரப்படுத்துவது போல் குடை பிடித்து தோற்றம் காட்டும் அந்த ஆல், மேலே சிறகாட்டும் பறவைகளும், கீழே உடம்பாட்டும் பெண்களுமாய் கலகலத்தது. அந்த ஆலமரமே ஒரு ஆளாகி, டி.வி. மகாபாரதத்தில் வந்ததே ‘காலம்’, அதுபோல், ஊருக்கு எதையோ உபதேசித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது விழுதுகளே சடை முடியாக, உச்சி இலை தழைகளே தலை முடியாக, ஆலம்பழங்களே உத்திராட்சக் கொட்டைகளாக, அந்த ஆல ரிஷி எல்லோரையும் ஆட்டுவித்துக் கொண்டிருப்பது போன்ற பிரமையைக் கொடுத்தது. இந்த மரம் அங்கே இருப்பவர்கள் பிறப்பதற்கு முன்பே பிறந்த மரம். ஒருவேளை அவர்கள் இறந்த பிறகும் இருக்கும் மரம். இப்படிப்பட்ட இந்த மரத்திற்குக் கீழே -

அந்த ஆலின் அடிவாரத்தை மாலையிட்டு மரியாதை செலுத்துவதுபோல, பதினெட்டு இருபது பெண் பூக்கள் மாலை வடிவத்தில் அமர்ந்து பீடி இலைகளைக் கத்தரித்தும், சதுரஞ்சதுரமாகச் சித்தரித்தும், வெட்டியும், சுருட்டியும், கட்டியும் கைகளை இயக்கத்தில் விட்டார்கள். செண்பகப் பூப்போன்ற தங்கநிற முத்தம்மா, குண்டுமல்லி போன்ற தடிச்சி வாடாப்பூ, தங்கரளி போல்-பாவாடை குடைபோல் சுழலும் சந்திரா, கூர்மையான பற்களைக் கொண்ட ரோசாப்பூ மாதிரியான ராசகிளி ஆகிய பெண்மாலைக்கு இடையிடையே இட்டு நிரப்பப்பட்ட இலைபோல தங்கம்மா, அலங்காரி ஆகிய நடுத்தர-வயதுப் பெண்கள்... வானவில்லே பெண் வில்லாய்ப் பிறப்பெடுத்தது போன்ற அந்தப் பகற்பொழுதில் -பீடி இலைகளைச் சதுரஞ்சதுரமாக வெட்டிக் கொண்டிருந்த சந்திரா, எதிரே பீடி இலைகளைத் தூக்கி நிரப்பி அவசர அவசரமாகச் சுருட்டும் தாயம்மாவைப் பார்த்து அதட்டலான அன்போடு கேட்டாள்.

“என்னத்தே... ஒரு நாளும் இல்லாத திருநாளா இப்படிச் சுத்துற. கை உடம்ப விட்டு கழண்டுடப் போவுது...”

“ஒனக்கென்ன பேசமாட்டே... ஒனக்கு பீடி சுத்தறது பொழுது போக்கு. எனக்கோ ஒரு நாள் பொழுதப் போக்குறது... அவனவன் கம்பெனிக் கடைகள்ல தீபாவளி போனஸ், பொங்கல் பரிசுன்னு வாங்குறானுவ... நாம என்னடான்னா பீடி மொதலாளிக்கு போடு வண்டலுன்னு நாமே போனசு கொடுக்கோம்... இதைக் கேக்க நாதியில்லே...”

தாயம்மா அத்தைக்குப், ‘பாவாடைத் தாவணி’ சந்திரா பதில் சொல்ல யோசித்தபோது, பிள்ளைக்குட்டி பெற்றாலும், அந்த வார்த்தைகளின் இரண்டாவது வார்த்தைக்கு உரியவள் போல் தோன்றிய அலங்காரி, அலட்டிக்காமலே குறுக்கிட்டாள்.

“வேற எதையாவது பேசுங்க, தெனமும் பொழப்பப் பத்தியே பேசிப் பேசி அலுத்துப் போச்சு... இப்போ புதுசா வந்திருக்கிற சினிமாவுல எது நல்லா இருக்காம்?”

“நம்ம கோணச்சத்திரத்துக்கு வார படமெல்லாம் டப்பாப் படம்தானே...”

“ஆமாமா... அந்தக் ‘கொள்ளயில போவான்’ தியேட்டர்ல எந்தப் படம் வந்தாலும் அது நட்டுக் கழண்ட படமாகத்தான் இருக்கும்...”

“நான் தென்காசியிலயும் திருநெல்வேலியிலயும் ஓடுற சினிமாவச் சொன்னேன்...”

“நீதான் பாத்துட்டு வந்து சொல்லேன்... அங்க போறது ஒனக்கு ஒண்ணும் புதிசில்லியே மயினி...”

அலங்காரி, வெள்ளை வெளேர் முத்தம்மா தன்னைக் கிண்டல் செய்வதாக நினைத்து, திட்டப் போனாள். இதற்குள் ஒரு எட்டு வயதுப் பயல் எங்கிருந்தோ வந்தவன் போல் வந்தான். ஒரு ஆல விழுதை எட்டிக் குதித்துப் பிடித்தபடி அங்கும் இங்குமாக ஆடினான். தாயம்மாவின் தலைக்கு மேலே போகும்போது, கால்களைச் சுருட்டிக் கொண்டான். தாயம்மா பயத்தில் தலையை நிமிர்த்திய போது, அவன் காலில் அவள் தலைமுடி சிக்கி, அவளைத் தரையோடு தரையாக இழுத்துப் போட்டது. உடனே அந்தப் பயல், விழுதை விட்டுவிட்டு, விழுந்தடித்து ஓடிய வேகத்தில், தாயம்மாவின் பீடித்தட்டு குப்புற விழுந்தது. இலைகள் பட்டம் பறப்பதுபோல் ஆகாயத்தில் பறந்தன. பீடித் துகள்கள் மண் தூள்களுடன் கலந்து மாயமாயின. தாயம்மா ஒப்பாரியிட்டாள்.

“ஐயோ... என் அறுபது வண்டலு இலயும் போச்சே... பீடிக்கடைக்காரனுக்கு என்ன சொல்லுவேன்... ஏது சொல்லுவேன்... காஞ்சான் மகன் பண்ணுன வேலையைப் பாருங்க... எலே நாய்க்கு பெறந்த நாயே... இப்போ ஓடிட்டாலும், அப்புறம் வரத்தானே போறே...”

அந்தப் பயலைப் பிடிப்பதற்காக, நான்கு பெண்கள் எழுந்து, அவர்களில் மூவர் சேலைகளை இறுக்கிக் கட்ட, மூவரில் ஒருத்தி, கோழி, பருந்தை நோக்கி பாய்ந்து பிடிப்பதுபோல் சிறிது ஓடிவிட்டு, பிறகு மூச்சு முட்டி நின்றாள். தாயம்மாவுக்கு வேண்டாதவர்கள் உட்பட எல்லோருமே, அவளை பரிதாபமாய்ப் பார்த்தார்கள்.

தாயம்மா கத்தக்கூட திராணி இல்லாமல் தலையில் கை வைத்து, குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தபோது, அவளுக்கு உறவுப் பெண்ணான சந்திரா ஆறுதல் சொன்னாள்.

“ஏன் சித்தி அழுவுறே... நாங்க ஆளுக்குக் கொஞ்சம் இலயும் பேருக்குக் கொஞ்சம் தூளும் தாறோம்... எமுளா பாக்கிய. சித்திக்குக் கொடுங்கழா...”

எல்லாப் பெண்களும் கை நிறைய இலை எடுத்து விரல் நிறையத் தூளெடுத்து தாயம்மாவின் தட்டில் போடப் போனபோது, அலங்காரி இக்கன்னா போட்டுப் பேசினாள்.

“அவளுக்கு தைரியம் இருந்தா காஞ்சான் மச்சான் கிட்டப்போயி அவரு பய பண்ணுன கோலத்தச் சொல்லி நஷ்டஈடு கேட்கட்டும்... அந்த நொறுங்குவான் பண்ணுன காரியத்துக்கு நாம ஏன் அபராதம் கட்டுறது மாதிரி இல கொடுக்கணும்...”

“சரி. நீங்க போடாட்டா இருங்க... நாங்க போடுறோம்... மேயுற மாட்டை நக்குற மாடு கெடுக்குமாம்...”

“இந்த பாரு சந்திரா... மாடு கீடுன்னு பேசுனே மரியாதை கேட்டுப் போவும்...”

“மாடு நல்ல சீவன்... கண்டவன் பின்னால எல்லாம் போவாது...”

“அப்போ நான் கண்டவன் பின்னால போறவ...”

“அப்படித்தான் வேணுமுன்னா வச்சுக்கங்க...”

“ஏழா, சந்திரா, வரம்பு மீறிப் பேசாத...”

“பின்ன என்ன வாடாப்பூ அத்தை...? தாயம்மா சித்தி நம்மள்ல ஒருத்தி... அந்த தூம மவனால... அவ்வளவு இலயையும், தூளயும் பறிகொடுத்துட்டு அந்தரத்திலே நிக்கா... ஆளுக்கு கொஞ்சம் இல கொடுத்தா தேய்ஞ்சா போயிடுவோம்... சீ... அறுத்த கைக்கு சுண்ணாம்பு வக்காத ஆளுங்க...”

“வேணுமுன்னா ஒன் கைய அறுத்துக் காட்டு... நான் சுண்ணாம்பு வக்கேன்...”

பாவாடை தாவணி சந்திராவுக்கும், பழுத்த இலை போல் புடவை கட்டிய அலங்காரிக்கும், இடையே தூள் கிளப்ப நடந்த வாய்ச் சண்டையை எல்லாப் பெண்களும் ரசித்துக் கொண்டே இருந்தார்கள். சற்றுத் தொலைவாய் உட்கார்ந்திருந்த தாயம்மாவின் அருகே கிடந்த தட்டில், இலையையும், தூளையும் எடுத்துப் போடப் போனார்கள். ஆனால் தாயம்மா திட்டவட்டமாகச் சொன்னபடியே எழுந்தாள்.

“எனக்கு எவளும் பிச்சை போட வேண்டாம். இந்தப் பேச்சை வாங்கிக்கிட்டு அந்த இலய வாங்குறது ஒவ்வோருத்திய மாதிரி அடுத்தவனுக்கு முந்தானை விரிக்கதுக்கு சமம்...”

சோர்ந்துபோய் நடந்த தாயம்மாவை, எல்லாப் பெண்களும் தாளமுடியாமல் பார்த்துவிட்டு, பிறகு தத்தம் தட்டருகே வந்து உட்கார்ந்தார்கள். தாயம்மா போவதை சட்டை செய்யாததுபோல் குறுஞ் சிரிப்புடன் அலங்காரி பீடி இலை ஒன்றைக் கசக்கிப் போட்டபடியே தனக்குத் தானே பேசிக்கொள்வது போல் பேசினாள். “தனக்குப் போவத்தான் தானம்... பிச்சை போடறதுக்கு நாம ஒண்ணும் பெரிய இடம் இல்ல...”

சந்திராவுக்குக் கோபம் வெப்பமாகியது.

“இந்தா பாரு... எங்க சித்தி... ஒங்கிட்ட என்ன பிச்சையா கேட்டா? பேச்சை விடேன்... கடைசியில ஒன் புத்தியக் காட்டிட்டே பாத்தியா?”

“எம் புத்திய என்னத்தடி கண்டே? நான் அந்த மனுஷன்கூட இந்த ஊருக்கு ஓடி வந்ததுலே என்ன தப்பு? ஊர் ஒலகத்துல செய்யாததையா செய்துப்புட்டேன்?”

“நான் அதை நினைச்சு சொல்லலே. ஆனாலும் இப்போ சொல்லுறேன்... ஓடிப்போறது தப்புன்னாலும், அது பெரிய தப்பில்ல... ஓடி வந்தவன் முதுகுக்குப் பின்னாலயே பிறத்தியாரோட ஒய்யாரஞ் செய்யுறதுதான் தப்பு...”

“அப்போ நான் கண்டவனை எல்லாம் வீட்டுக்குள்ள விட்டு கதவை அடைக்கேன்னு சொல்றீயா?”

“குத்தமுள்ள மனசு குறுகுறுக்குமாம்.”

“அப்போ ஒங்க வம்சம் ரொம்ப யோக்கியமுன்னு நெனப்போ?”

“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் எங்க கரும்பட்டையான் குடும்பம் கவுரிமானுக மாதிரிதான்... எங்க குடும்பத்துல எவளாவது ஒருத்தி எவன் கூடயாவது ஓடிப்போயிருக்காளான்னு ஒரு விரல மடக்கு பார்க்கலாம்...”

“எந்த சோளத்தட்டைக்குள்ள என்ன நடக்குதோ? எந்தக் கரும்புத் தோட்டத்துக்குள்ள என்ன குறும்பு நடக்குதோ...?”

“ஒவ்வொரு சோளத் தட்டையா விலக்கிப் பாரு... ஒவ்வொரு கரும்பா பிரிச்சுப் பாரு... எங்க கரும்பட்டையான் குடும்பத்துப் பெண்ணுல ஒருத்தியக் கூட கையுங் களவுமா பிடிக்க முடியாது. ஒவ்வொருத்தியள போல பட்டப்பகலுல பப்ளிக்கா ஒருத்தனோட சைக்கிள்ல உட்காந்து வரல... அப்புறம் சைக்கிள்காரன ஒப்புக்கு வச்சுட்டு இன்னொருத்தன் பைக்ல ஏறல...”

அலங்காரி நிலைகுலைந்தவள் போல், ஆல விழுதைப் பிடித்துக் கொண்டாள். அங்கிருந்த பெண்களும் சந்திராவை அதட்டவில்லை. என்றாலும், இந்த அலங்காரி வாழ்க்கைப்பட்ட செம்பட்டையான் குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரியின் ‘சங்கதி’ தெரிந்தும், லேசாய் கோபம் வந்தது. அதேசமயம் அவளுக்கு வக்காலத்து வாங்குவது தாங்களும் அவளைப்போல் ஆகத்தயார் என்று அறிவிப்பதுபோல் ஆகிவிடும் என்று சும்மா இருந்தார்கள். ஒருவேளை இதற்குமேல் சந்திரா பேசியிருந்தால், ஏதாவது சொல்லி இருப்பார்கள். சந்திரா வாயைப் பூட்டிக்கொண்டாள். அந்தப் பெண்களுக்கு இடையே இப்போது மெளனம் கொடுங்கோல் புரிந்தது.

அலங்காரிக்கு வழக்கம்போல் தொண்டை கனத்தது. அதற்குள் முள் போன்ற ஏதோ ஒன்று, மேலும் கீழுமாய் முகமெங்கும் பாய்ந்து, இறுதியில் முன் நெற்றியைக் குத்தியது. முகமெங்கும் இருட்டு மொய்த்தது. சாதாரண ஒரு சிரிப்பைக் கூட தற்செயலாய் பார்ப்பதையே, கண்டனக் கணையாகக் காண்பவள்... சண்டை சச்சரவு வரும்போது, சில பெண்கள் ‘ஒன் பவுசு... தெரியாதா’ என்று இறுதி ஆயுதத்தைப் பயன்படுத்திப் பேசுகிறபோது, வாயை நிராயுதபாணியாக்கி கேட்டு, தலையில் மாறி மாறி அடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடி, புருஷனைத் திட்டுபவள்... இப்போது, ஓடி ஒளிய இடமில்லாமல் தவித்தாள். அந்தத் தவிப்பில் தனக்குத்தானே பேசிக் கொண்டாள்... அது ஒரு சபதமாகும் என்று நினைக்காமல்தான், தனக்குத்தானே சூளுரைத்தாள். அலங்காரி தனக்குத்தானே தனக்குள்ளேயே பேசிக் கொண்டாள்.

“நான் மட்டும் ஓடி வந்ததாலே தானே இந்த ஏச்சுப் பேச்சு? நான் ஓடி வந்த பெறகு பிறந்த இந்தச் சந்திரா பயமவள் எப்படிப் பேசுறாள்? இவங்க குடும்பத்திலயும் ஒருத்திய நான் ஓட வச்சா இப்படிப் பேசுவாளா...? வச்சா என்ன வச்சா? ஓட வச்சே காட்டணும்... கரும் பட்டையான் குடும்பத்த கரும்புள்ளி செம்புள்ளி குத்துறது மாதிரி செய்து காட்டணும்...”

அலங்காரி அங்குமிங்குமாய் திரும்பினாள். மேற்குப் பக்கத்திலிருந்து செம்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த துளசிங்கம் கையில் ஒரு கம்போடு வந்தான். கிழக்குப் பக்கத்திலிருந்து கரும்பட்டையான் குடும்பத்தைச் சேர்ந்த கோலவடிவு கையில் ஒரு கூடையோடு வந்தாள்.

-------------

__தொடரும்...


விவாதங்கள் (7)