அத்தியாயம் 1

றுமை எத்தகைய கோலத்தைத் தரமுடியும் என்பதை எடுத்துக்காட்டவே, அந்த மூதாட்டி விட்டு வைக்கப்பட்டிருக்கக்கூடும். காலதேவன் எத்தனையோ வண்ண மலர்களை, அழகான அரும்புகளைக்கூட அழித்தொழித்துவிட்டு, இந்த 'எலும்புக் கூடு' உழல அனுமதிப்பதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? வெறும் சருகு! அதற்குக் காலும், கையும், கண்ணும், அம்மட்டோ பாழும் வயிறும்!

அந்தக் காய்ந்த வயிறுக்கு யாராவது 'புண்யவதி' புளித்த கஞ்சி தந்துவிட்டால், பெரிய விருந்துதான்! விருந்து இரண்டு நாளைக்கு ஒரு தடவை கிடைக்கும், புண்யவதியை அவள் புருஷன் கொடுமைப்படுத்தாது இருந்தால்!

மற்ற நாள்களில் தண்ணீர், காற்று அதிகமாக ஏற்றுக்கொள்ளவும் கிழவிக்கு சக்தி இல்லை. பட்டினியோடு நீண்ட காலமாகப் பழகிவிட்டதால், கிழவியின் கண்களிலே நீர் வருவது நின்று நெடுநாட்களாகிவிட்டன!

இரண்டு குழிகள் அவ்வளவுதான்! கண்களாகத்தான் அவை முன்பு இருந்தன.

மைகூடத் தீட்டி அழகு பார்த்ததுண்டு. ஆனால், அது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர் இருந்தபோது.

அவர் தந்த செல்வம் அக்கரை சென்று ஆண்டு இருபதுக்கு மேலாகிவிட்டன. அரும்பு மீசைக்காரனாகச் சென்றான் - அன்னை அப்போது அழ முடிந்தது - இப்போது? அதற்கும் சக்தி வேண்டுமே, இல்லை!

துக்கம் - ஏக்கம்!

நிலைத்துவிட்ட திகைப்பு!

தரித்திரத்தின் கடைசிக் கட்டம்!

இவற்றின் 'நடமாடும்' உருவம். அந்த மூதாட்டி கிழவியைக் கண்டால், "ஐயோ பாவம்!" என்று பரிதாபம் பேசிய காலம்கூட மடிந்து போய்விட்டது. எத்தனை நாளைக்குத்தான் பரிதாபச் சிந்து பாடியபடி இருக்கமுடியும்?

மலையின் கம்பீரம் - மதியின் அழகொளி - மேகக் கூட்டத்தின் மோகனம் இவைப் பற்றியே பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும், சதா சர்வகாலமும் இருக்க முடிவதில்லையே, இந்தச் சஞ்சல மூட்டையைப் பற்றியா சிந்தனையை எப்போதும் செலவிட்டபடி இருக்கமுடியும்!

'பாட்டியம்மா' பாட்டி ஆகி, பிறகு 'கிழவி'யாகி பிறகு 'ஏ! யாரது?' ஆகி, பிறகு `போ! போ!' என்றாகி, பிறகு `இதேதடா தொல்லை' என்றாகி, 'பெரிய சனியன்’ என்றாகி, 'பிசின், இலேசில் விடாது' என்றாகி, இப்போது கவனிப்பார், கவலைப்படுவாரற்ற ஓர் உருவமாகிவிட்ட நிலை!

சுவரிலே இருக்கும் சித்திரத்தோடு யார் பேசுகிறார்கள்?

ஆனால், கிழவியோ யார் கிடைத்தாலும் விடுவதில்லை!

பசி- பட்டினி--இதைக் கூறவா? அல்ல, அல்ல! ``யார் போவது? அப்பா... அடி அம்மா... அலமேலா... ஆண்டியப்பனா... யாரடாப்பா?’’

``நான்தான். என்னா? வீட்டுக்குப் போ. வள்ளி இருக்கா தண்ணி கொடுப்பா.’’

``ஆண்டியப்பன்தானா... டே அப்பா! எனக்கு தண்ணியும் வேணாம் சோறும் வேணாம். சொக்கி கூழ் கொடுத்தா போதும். ஒரு கடுதாசி எழுதிக் கொடுடா அப்பா... கோடித் தெரு கோபாலன், ‘அக்கரை' போறானாமே… அவனிடம் கொடுத்தனுப்பனும். வாடா அப்பா, புண்யம்டா உனக்கு. ஒரு நாலு வரி எழுதிக் கொடு.’’

ஆண்டியப்பனுக்குக் கிழவி கூறப்போவது தெரியும். அவன் சென்றுவிட்டான் வேகமாக. ``வேறே வேலை கிடையாது இந்தப் பைத்தியத்துக்கு’’ என்று முணுமுணுத்தபடி.

எதிரிலேயும் பக்கவாட்டங்களிலும் தடவிப் பார்த்துப் பார்த்து, ஓர் உருவமும் கையில் தட்டுப்படாததால், கிழவிக்கு அவன் போய்விட்டான் என்பது தெரிந்தது. என்ன அவசரமான வேலையோ பாவம் என்ற எண்ணம் கிழவிக்கு- கோபமல்ல!

கோபம் குடிபுக அந்த மூதாட்டியின் நெஞ்சிலே இடம் ஏது? சோகம் கப்பிக்கொண்டிருந்தது!

'அக்கரை’யில் மூதாட்டியின் மணி!

இங்கு இந்த எலும்புக்கூடு!

இடையே, நாடு, காடு, மலை, வனம், வனாந்திரம், கடல்!

எண்ணம் விநாடியிலே எதையும் தாண்டும். எலும்புக்கூடு எங்கே அந்தச் சக்தியைப் பெறுவது? புதைகுழிக்கு செல்லவே சக்தியில்லை!

யாராவது கிடைக்க மாட்டார்களா என்று தேடித் தேடி அலுத்துப்போய், தன் குடிசையில் போய்ச் சுருண்டு விழுந்துவிடுவது வாடிக்கை. சொந்தக் குடிசைதான்!

அது வேறு யாருக்கு வேண்டும்? அதனால் கிழவியிடமே இருந்தது.

சரிந்துபோன சுவர்-பிய்ந்துபோன கூரை-அதன் நிலைமையும் கிழவியின் கோலமும் ஒரே விதம்.

***

க்கரையில் 'மணி', 'மார்க்' ஆகி; மாதா கோயில் தோட்டத்தில் வேலை செய்து ஒடிந்துபோய், பிறகு உல்லாச உலகுக்கு கயவன் ஒருவனால் இழுத்துச் செல்லப்பட்டு, கள்ளனாகி, அடிபட்டு, உதைபட்டு, செத்தும் போய்விட்டான்.

மூதாட்டிக்கோ, 'மணி' மளிகைக் கடை வைத்திருக்கிறானோ, மலர்த் தோட்டத்தில் வேலை பார்க்கிறானோ, மாடுமனை மனைவியோடு சுகமாக இருக்கிறானோ- எவ்விதம் இருக்கிறானோ என்று எண்ணம். நல்லவிதமாகத்தான் இருப்பான் என்ற எண்ணம். நல்லவிதமாக இருக்க வேண்டும் என்றுதானே தாய் உள்ளம் எண்ண முடியும், அதனால்!

`பாவிப் பய, ஒரு காலணா கடுதாசி போடக் கூடாதா?’ என்று எண்ணி எண்ணி கிழவி ஏக்கம் பிடித்தலைவது கண்டு, முதலில் பலர் சமாதானம் கூறிப் பார்த்தனர். கார்டு விலை முக்காலணாகூட ஆகிவிட்டது. ‘பாவிப் பய மகன்' காலணா கடுதாசி போட்ட பாடில்லை. சமாதானம் கூறுவதைக்கூட மற்றவர்கள் நிறுத்திக்கொண்டனர். கிழவியோ, ‘அக்கரை' போகிறவர்களிடமெல்லாம் கடுதாசி கொடுத்தனுப்புவதை நிறுத்தவில்லை. `சிரஞ்சீவி மணிக்கு...’ என்று துவங்கி, `முத்தம்மா’ என்று முடியும் அந்தக் கடிதம் ஒவ்வொன்றும், எவ்வளவு கல்நெஞ்சத்தையும் கரைத்துவிடும். அவன்தான் கல்லறை சென்றுவிட்டானே- பலன் என்ன கிடைக்கும்?

ஓயாமல் கடிதங்கள்!

அந்தக் கிராமமும் அடிக்கடி, `அக்கரை’க்கு, அரும்பு மீசைகளை அனுப்பியபடி இருந்தது.

நஞ்சை இருந்தது-புஞ்சையும் உண்டு! கரும்பு பயிராகும், கால்வாய் பாசனம் உண்டு. ஆனால், அவ்வளவும் நாலைந்து பெரிய புள்ளிகளுக்குச் சொந்தம். அவர்களோ நாடாளும் நாயகர்கள் வரிசையில் இருந்தவர்கள். எனவே, தலைநகரில் வசித்துவந்தனர்.

அரும்பு மீசைகள் அக்கரை சென்று ஐந்தாறு ஆண்டு பாடுபட்டால், ஆயிரம், ஐநூறு மீதம் பிடித்து, அரையோ காலோ ஏக்கர் வாங்கி, பிறகு ஏதோ கால் வயிற்றுக் கஞ்சிக்குக் குறைவில்லாமல் வாழலாம் என்று ஆசைப்பட்டுத்தான் சென்றனர்!

அவ்விதம் சென்றவர்களிலே ஒருவன்தான் மணி.

மணி என்பது செல்லப் பெயர். முழுப் பெயர் சிவசுப்பிரமணியம்!

``அவர் இருந்தால் ஆயிரம் ஆயிரமாகக் கொட்டிக் கொடுத்தாலும் உன்னை அக்கரைக்கு அனுப்ப மாட்டார்’’ என்று கூறிக் கதறி, பிறகு மணியின் நெற்றியிலே பிள்ளையார் கோயில் ஐயர் கொடுத்த (ஒரு அணாவுக்கு!) விபூதியைத் தடவி, ஆயிரம் தெய்வங்களை வேண்டிக்கொண்டு விடை கொடுத்தனுப்பினாள் கிழவி.

எப்போதாவது கொஞ்சம் ‘போடும்’ வழக்கம் உண்டு மணிக்கு!

அக்கரை சென்றதும் அந்த ரகமானவர்களின் 'நேசம்' அதிகமாகி, 'போடுவது' வேகமாக வளர்ந்தது. அது அவனைப் படாதபாடு படுத்திவிட்டது. கல்லறை அவனை அழைத்துக்கொண்டது.

கிழவிக்குத் தன் 'மகன்' அக்கரையில் இருப்பதாக நினைப்பு.

`யாரிட்ட தீவினையோ, என்னை அவன் மறந்துவிட்டான்’ என்று எண்ணி வருந்தினாள். ஆயிரம் தெய்வங்களை மறுபடியும் மறுபடியும் வேண்டிக்கொண்டாள். தெய்வங்களுக்கு இதுதானா வேலை? ஒரு திருவிழா முடிந்ததும், மற்றோர் திருவிழாவுக்குத் தங்களைத் தயாராக்கிக்கொள்வதற்கே காலம் போதவில்லை. அக்கரை சென்றவன் மனதிலே புகுந்து, இந்த 'ஐயோ பாவ'த்தின் மீது பாசம் ஏற்படச் செய்யவா நேரம் கிடைக்கும்? அதிலும் கடல் கடந்து செல்லவேண்டும்!

***

ந்தக் கிராமத்துக்குப் பெரிய பட்டினங்களெல்லாம் பொறாமைப்படக்கூடிய பெயர் இருந்தது - பொன்னூர்!

ஜல்லடை போட்டுச் சலித்தெடுத்தால்கூட ஒரு குண்டுமணி பொன்னும் கிடைக்காத பட்டிக்காடு! அதாவது பிள்ளையார் கோயில் சாமி வீடு தவிர! ஐயர் வீட்டிலே சோதனையிடத் துணிவுகொண்ட 'பாவிகள்' உண்டா? மற்ற இடங்களிலே குண்டுமணி அளவு தங்கம்கூடக் கிடையாது. பெயர் மட்டும் பொன்னூர்!

பொன்னூருக்குப் பூர்வீகப் பெருமைகள்கூட உண்டு!

சீதாபிராட்டியாரை மயக்கிய மாயமான் ஓடிவந்தபோது கிளம்பிய 'தூசி' அங்கு படிந்ததால், பொன்மயமாகிவிட்டதாம் அந்த ஊர்!

மாரி கோயில் திருவிழாவின்போது ஆடுவெட்டி ஆண்டியப்பன் கதை படிப்பான். அப்படிப்பட்ட பொன்னூர் அக்கரைச் சீமைக்குக் கூலிகளை அனுப்பும் பாக்யம் பெற்றுவிட்டது. அந்தத் தொகுதியிலே வெற்றிபெற்ற எம்.எல்.ஏ.கூட, கடல் கடந்த இந்தியர் பாதுகாப்பு கமிட்டியில் ஓர் உறுப்பினர். கமிட்டி கூடும்போது நாளொன்றுக்குப் பதினெட்டு ரூபாய் 'படி'ச் செலவுகூடப் பெற்றுவந்தார். அக்கரைச் சீமைக்கு ‘அரும்பு மீசை' கிளம்பும்போதெல்லாம், கண்ணீரும் கம்பலையுமாகக் கிழங்கள் கூடி கூடிப் பேசும்.

``போனதும் கடுதாசி போடுகிறேன்!’’

``வீணா, ஏன் மனசை அலட்டிக்கிறே?”

``மாசா மாசம் தவறாம படிக்குப் பணம் அனுப்பி வைக்கிறேன்.’’

``மாடு, கண்ணு, ஜாக்ரதை!’’

``மாரியம்மன் பண்டிகைக்கு, கிடா பலி கொடுக்க மறந்துவிடாதீங்க.’’

இவ்விதமெல்லாம் 'தைரியம்' கூறிவிட்டுத்தான் செல்கிறார்கள். அரும்பு மீசைக்காரர்- "உன் மகனும் கிளம்பிவிட்டானா?" என்று கேட்கும்போதே, கிழவிக்குத் தன் மகன் அக்கரைக்குப் புறப்பட்ட நாளின் நிகழ்ச்சிகள் கவனத்துக்கு வரும். `இவனுக்காவது காளியாத்தா நல்ல புத்தி கொடுக்க வேணும்' என்று வாழ்த்துவாள் மனதுக்குள். அவனிடம் கெஞ்சிக் கூத்தாடி, தன் மகனை எப்படியாவது கண்டுபிடித்து கடுதாசியைக் கொடுத்து, ஒரு காலணா கடுதாசி போடச் சொல்லும்படி வேண்டிக்கொள்வாள்.

``ஆகட்டும் பார்க்கலாம். அந்தச் சீமையிலே அவன் எந்த மூலையிலே இருக்கறானோ? நான் எந்தக் கோடியிலே வேலை செய்யப் போறனோ யார் கண்டாங்க? இருந்தாலும் கண்டா, கட்டாயமாகக் கடுதாசியைக் கொடுத்து, புத்திமதி சொல்றேன்’’ என்று வாக்களிப்பான், கப்பலுக்குக் கிளம்புபவன். ```கண்ணுடா நீ! தங்கம்டா நீ!’’ என்று கிழவி வாழ்த்துவாள். பணம் சில குடிசைகளுக்கு வந்தது. கடிதம் பல பேருக்கு வந்தது. சிலர், 'நோய் நொடியுடன்' திரும்பி வந்துவிட்டனர்!

கிழவிக்கு மட்டும் காலணா கடுதாசியும் கிடைக்கவில்லை - திரும்பியவர்களிடமிருந்து மகனைப் பற்றிய செய்தியும் கிடைக்கவில்லை.

அன்று கிழவிக்கு வழக்கமான வேலை கிடைத்துவிட்டது. வண்டியோட்டி வரதன், அந்தப் பக்கத்திலே `பஸ்' ஏற்பட்டுவிட்டதால் நொடித்துப் போனான். ஆகவே, வண்டி ஓட்டும் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, 'அக்கரை' போகத் தீர்மானித்துவிட்டான். அவனிடம் 'கடுதாசி' கொடுத்தனுப்பும் வேலை கிழவிக்கு.

***

``அவ குலுக்கி மினுக்கித் திரியும்போதே எனக்குத் தெரியும், அவ கெட்டுப் போவா என்பது" என்று கூறுவார்கள் தலை நரைத்தவர்கள், வள்ளியைப் பற்றி. வள்ளி தவறியவள்!

ஆடுவெட்டி ஆண்டியப்பன் தாலி கட்டி வள்ளியைப் பெறவில்லை. தாலி கட்டிய தாண்டவன் காலமான பிறகு, வள்ளி நெல் குத்தி ஜீவித்து வந்தாள். பக்கத்துக் கிராமத்திலே நெல் அரைக்கும் யந்திரம் அமைத்த பிறகு, அவளுக்குப் பிழைப்புக்கு வழி அடைத்துப் போய்விட்டது. ஆண்டியப்பன் அவளை ஜாடைமாடையாகக் கவனிக்க ஆரம்பித்தான். வள்ளி, “நாசமாப் போவான். மாரி சரியான கூலி கொடுக்கப் போகிறா பார்’’ என்று சபித்தாள்.

அவன் அஞ்சவில்லை. அவள் `அண்ணேன்’ முறை கொண்டாடி, அரை, கால் கடன்  கேட்டுப் பெற்று வந்தாள். அவன் வட்டி கேட்கவில்லை, அசலைப் பற்றியும் கவலை காட்டவில்லை. அவள் புரிந்துகொண்டாள். வெறுப்பாக இருந்தது. ஆனால், எவ்வளவு காலம் வறுமையுடன் போராட முடியும். "ஐயயோ! வேணாமுங்கோ" என்று கெஞ்சும் குரலில் தொடங்கி, ''எப்பவும் கைவிடமாட்டாயே!" என்று கொஞ்சும் குரலில் முடிந்தது அவளுடைய வீழ்ச்சி!

(தொடரும்...)


விவாதங்கள் (19)