அத்தியாயம் 1
ஸ்திரீ ஸாகஸம்
அன்றைய பகற் பொழுது எத்தகைய புதிய சம்பவமும் இன்றி சாதாரணமாகக் கழிந்தது. பகல் போஜனம் நடந்த காலத்தில், அன்றைய தினம் சாயுங்காலம் பெண்டீர் நால்வரும் வேலைக்காரிகளும் ஒன்றுகூடி அந்த நகரத்திற்குள் போய், எல்லா வேடிக்கைகளையும் பார்த்து விட்டு, சாயுங்காலம் திரும்பி வருவது என்றும், அவர்கள் வருகிற வரையில் கலியாணசுந்தரம் அவ்விடத்தில் இருந்து, அவர்களது சாமான்களையெல்லாம் காவல் காத்திருப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
பிற்பகல் நான்கு மணி சமயமாயிற்று. பெண்டீர் நால்வரும் தங்களிடத்திருந்த சிறந்த ஆடை ஆபரணங்களை எல்லாம் பொறுக்கி அணிந்து அற்புத அலங்காரத்தோடு ஊரைச் சுற்றிப் பார்க்க ஆயத்தமாயினர்.
அப்போது மூத்த பெண்ணான அம்மாளு என்பவள் தனக்குத் தலைவலி வந்துவிட்டது ஆகையால் படுத்திருக்க நினைப்பதாகவும், தான் மறுநாள் சாயுங்காலம் ஊரைச் சுற்றிப் பார்க்க எண்ணுவதாகவும் கூறிப் பாசாங்கு செய்து படுத்துக்கொண்டாள்.
அதை உணர்ந்த கலியாணசுந்தரம் அந்தச் சம்பவத்தைப்பற்றி எவ்வித அபிப்பிராயமும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்தாலும், அந்த மூன்று பெண்களுள் ஒருத்தியோடு தனியாக இருந்து, தான் சம்பாஷிக்கத் தகுந்த சந்தர்ப்பம் வாய்த்ததைப் பற்றித் தனக்குள் நிரம்பவும் சந்தோஷமும் மனஎழுச்சியும் அடைந்தவனாக உட்கார்ந்திருந்தான்.
அம்மாளுவையும் கலியாணசுந்தரத்தையும் தவிர, மற்ற எல்லோரும் புறப்பட்டு வெளியில் போய்விட்டனர். அதன் பிறகு கால் நாழிகை நேரம் கழிந்தது. அம்மாளு எழுந்து மறுபடியும் தன்னைப் புது மாதிரியான ஆடை ஆபரணங்களினால் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள்.
அவளுக்குச் சுமார் இருபது வயதிருக்கும் என்பதும், அவள் மகா வசீகரமான அழகுடைய அப்ஸர ஸ்திரீ போல இருந்தாள் என்பதும் முன்னரே சொல்லப்பட்ட விஷயம். அவளது உடம்பு மாசு மறுவற்ற தந்தத் தகட்டினால் போர்த்தப் பெற்று பொன்மெருகு ஏற்றப் பெற்றது போல நிரம்பவும் தேஜோமயமாக விளங்கியது.
கடலிலும் பெரிய கண்களென்று கவிகளால் சிறப்பித்துக் கூறப்பட்ட மகா அழகான அவளது அற்புத நயனங்களிரண்டிலும் அவள் அஞ்சன மை தீட்டிப் புருவ விற்களுக்கு ஜவ்வாதினால் மினுமினுப்பேற்றி, செஞ்சாந்து திலகம் அணிந்திருந்ததன்றி வாயில் வாசனைத் தாம்பூலம் அணிந்திருந்ததால், அவளது சிவந்த அதரங்கள் கனிந்து நைந்து இளகி அமிர்த ரஸம் ஊற்றெடுத்த நிலைமையில் இருந்தன.
அவளது அழகிய சிரத்தில் அபாரமாக வளர்ந்து செழித்திருந்த கருங்கூந்தலை அவள் அற்புதமாகப் பின்னித் தேருருளை போலப் பின்புறத்தில் உருட்டிவிட்டு அதன்மேல் ரோஜா மலரையும் ஜாதி மலரையும் மிதமாக அணிந்திருந்தாள். ஆனாலும், அந்த அலங்காரம் தேவர்களும் கண்டு காமாந்த காரங் கொண்டு நெடுமூச்செறியத்தக்க மகா விசேஷக் காட்சியாக இருந்தது.
அவள் நல்ல பக்குவகாலத்துப் பெண்ணாதலால், அவளது முகம் முதல் நகம் வரையிலுள்ள ஒவ்வோர் அங்கமும் அதிகம் குறைவு என்ற எப்படிப்பட்ட ஏச்சுக்கும் இடமின்றி சாமுத்திரிகா லக்ஷணப்படி அமைந்து செழித்து அழகும் இனிமையும் முதிர்ந்து கனிந்து இன்பக் களஞ்சியமாக விளங்கியது.
அவள் அணிந்திருந்த மேகவர்ணப் பட்டாடைகள் மகா துல்லியமான மெல்லிய பட்டும், ஜரிகைப் பூக்களும் நிறைந்திருந்தன ஆகையாலும், அந்த ஆடைகள் இலேசாக இருந்தமையாலும், ஒட்டியாணம், வங்கி முதலியவற்றின் உதவியாலும், அவளது உடம்போடு உடம்பாக ஒட்டிக் கொண்டிருந்தமையாலும், அவளது அங்கத்தின் அமைப்பும் உயர்வு தாழ்வுகளும், கரவுசரிவுகளும் அப்படியப்படியே எடுப்பாக வெளியில் தெரிந்தன.
ஆகவே, அவள் அணிந்திருந்த அற்புத ஆடைகள் அவளது மேனியை மறைப்பதை விட்டு அதன் சிறப்புகளையெல்லாம் நன்றாக வெளியிட்டு விளம்பரப்படுத்துவனபோல் இருந்தன.
அவளது ஒவ்வோர் அங்கமும் ஒவ்வோர் அலங்காரமும் காண்போரினது மனதில் ஆயிரம் மோகன அஸ்திரங்களைச் சொரிந்து அவர்கள் மீளா விதத்தில் விரகநோய் கொண்டு அவளை நினைத்து நைந்து உருகித் தவிக்கும்படி செய்தன.
அதோடு, அவள் காட்டிய நாணமும், மடமும், கண், புருவம் அதரம் முதலியவற்றின் விஷமங்களும், இதர ஸாகஸங்களும் ஒன்று கூடி, அவளைப் படைத்த கடவுளையும் ஒரு நொடியில் வெல்லக் கூடிய அபார மனமோகன சக்தியாக விளங்கின.
ஈரேழு பதினான்கு லோகங்களையும் வெல்லத்தக்க மோகன அவதாரமோ எனத் தோன்றிய அம்மாளு என்ற கட்டழகி தாம் பூலம் அணிந்து பழுத்துச் சிவந்து நைந்து இருந்த தனது அதரங்களை மலர்த்திப் புன்னகை செய்தவண்ணம் கலியாணசுந்தரம் இருந்த விடுதிக்குள் நுழைந்து, நிரம்பவும் வசீகரமாக நாணிக் கோணி பயமும், பக்தியும், பணிவும் தோன்ற வந்து நிற்கவே, அதைக்கண்ட நமது கலியாணசுந்தரத்திற்கு ஒரே நொடியில் உண்மை விளங்கி விட்டது.
ஈசுவரனால் அளிக்கப்பட்ட அவ்வளவு அருமையான சிறப்புகளையும் கட்டழகையும் அந்தப் பெண் நல்ல வழியில் பயன்படுத்தாமல் தனது கற்பை இழந்து வெட்கத்தைவிட்டு அப்படிப்பட்ட இழிசெயலில் இறங்குகிறாளே என்ற வேதனையும் அருவருப்பும் கொண்ட கலியாணசுந்தரம் தனது மனநிலைமையை வெளிப்படுத்தாமல் அடக்கிக்கொண்டு ஒன்றையும் அறியாத குழந்தைபோல நிச்சலனமான முகத் தோற்றத்தோடு உட்கார்ந்திருந்தான்.
அவ்வளவு தூரம் துணிவு அடைந்திருந்த அந்தப் பெண்களைத் தான் திருத்தி நல்வழிப்படுத்த நினைப்பது சிறிதும் பலியாத முயற்சி என்ற எண்ணம் அவனது மனதில் தோன்ற ஆரம்பித்தது. ஆகையால் அவ்வளவோடு தான் அவர்களைவிட்டு விலகிக் கொள்ளலாமா என்ற நினைவும் தோன்றியது.
ஆனாலும், சிறிது நேரத்தில் அவர்களது விஷயத்தில் தயாளமும் இரக்கமும் தோன்றி, அவனது மனதை இளக்கின ஆகையாலும், தான் அவர்களது சகோதரியான சிவபாக்கியத்திற்குச் செய்திருந்த வாக்குறுதியின் நினைவு தலைகாட்டியது ஆகையாலும், அதற்குமேல் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கலாம் என்று அவன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான்.
சிறிது தூரத்தில் நின்றபடி தனது மனத்தின் காம விகாரத்தையும், நெகிழ்வையும் தவிப்பையும் தனது கண்களின் வழியாக வெளிப்படுத்தி, நிரம்பவும் பரிதாபகரமான முகத்தோற்றத்தோடு அவனை உற்றுப் பார்த்த வண்ணம் நாணித் தயங்கி அம்மாளுவும் நிற்க சிறிது நேரம் கழிந்தது.
யார் என்ன பேசுவதென்பது நிச்சயப்படாமையால், இருவரும் அரைக்கால் நாழிகை சாவகாசம் வரையில் மௌனம் சாதித்தனர்.
அதற்குள் கலியாணசுந்தரம் ஒருவாறு துணிவடைந்தவனாய் நிமிர்ந்து மிகுந்த இரக்கத்தோடு அவளைப் பார்த்து, “அம்மாளு! நீ தலைவலியினால் அவஸ்தைப் படுவதாகக் கேள்வியுற்றேன். ஆனால், உன்னுடைய முகத்தைப் பார்த்தால், தலைவலி நின்று போய்விட்டதாகத் தோன்றுகிறது. அதைப் பற்றி நான் சந்தோஷம் அடைகிறேன். அதுவுமன்றி, நான் உன்னோடு ஒரு விஷயத்தைப் பற்றித் தனியாக இருந்து பேச நினைத்தேன். அதற்கும் அனுகூலமாக நீயே இப்போது இங்கே வந்ததைப் பற்றி நான் நிரம்பவும் அதிக சந்தோஷம் அடைகிறேன்” என்றான்.
எதிர்பாராத அவனது சொற்களைக் கேட்ட அம்மாளு அளவற்ற குதூகலமும் ஆனந்தமும் அடைந்தாள். ஆசையினாலும் ஆவலினாலும், அவளது ஹிருதயம் தடதடவென்று அடித்துக் கொண்டது.
தான் அவனை நினைத்து விரகவேதனைப்பட்டு உருகிக் கருகுவதைப்போல அவனும் தன் மேல் காதல் கொண்டு தன்னிடம் அதை வெளியிட விரும்புகிறான் என்று நினைத்துக் கொண்ட அம்மாளு தான் எளிதில் வெற்றி பெறுவது நிச்சயம் என்று உடனே எண்ணிக் கொண்டாள்.
அவளது உடம்பு உச்சி முதல் உள்ளங்கால் வரையில் தென்றல் காற்றில் அசையும் மாந்தளிர் போல நடுங்குகிறது. மார்பு விம்மி விம்மி தணிகிறது. அடிக்கடி நெடுமூச்சு உண்டாகிறது. கைகால்களும் மற்ற அங்கங்களும் கட்டிலடங்காமல் பதறிப் பறக்கின்றன.
அந்த நிலைமையிலும் அந்த வடிவழகி, அவனை நோக்கி, “ஆகா! அப்படியானால் என்னுடைய பாக்கியமே பாக்கியம்! கும்பிடப் போன தெய்வம் குறுக்கிட்டு வரம் கொடுத்தது போல, என் எண்ணம் வெகுசுலபத்தில் முடிவடையப் போவதைக் காண என் மனம் பூரித்துப் பரவசமடைகிறது. இடமும் சந்தர்ப்பமும் ஏற்றதாகவே இருக்கின்றன. நம்முடைய மனிதர் எல்லோரும் திரும்பிவர சாயுங்காலம் வரையில் பிடிக்கும். அதற்குள் நாம் சுயேச்சையாக இருக்கலாம்” என்றாள்.
அவளது சொற்கள் ஒவ்வொன்றும் ஆயிரம் ஈட்டிகளால் குத்துவது போல அவனது செவிகளில் நுழைந்து அவனது மனதைப் புண்படுத்தின. அவன் நிரம்பவும் விசனித்துக் கலங்கினவனாய் அவளை நோக்கி, “அம்மாளு! உன் விஷயத்தில் என் மனம் படும்பாட்டை நான் எப்படி வெளியிடப் போகிறேன்!” என்று கூறிச் சிறிது நிறுத்தினான்.
உடனே அம்மாளு கரைகடந்த மகிழ்ச்சியும் வசீகரமான புன்னகையும் கொண்டு இரண்டோரடி நடந்து அவனிடம் நெருங்கி வந்து, “பரஸ்பரம் என் மனமும் அப்படியேதான் உங்களைக் கண்ட முதல் இதுவரையில் வதைபட்டுக் கொண்டு இருக்கிறது. நான் இப்போது இங்கே வந்து உங்களோடு பேசுகிறவரையில் என் மனம் தவித்த தவிப்பும் அடைந்த ஆவலும் இவ்வளவு அவ்வளவென்று சொல்ல முடியாது.”
“இருந்தாலும் பரவாயில்லை. இரண்டு மனசும் ஒத்து ஒன்றுபட்டு போனபிறகு, நாம் இனியும் விசனப் பட்டு நடந்ததை எல்லாம் நினைத்து வருந்தி, இப்போது அனுபவிக்கப் போகும் சந்தோஷத்தை ஏன் குறைத்துக் கொள்ள வேண்டும்? எப்போதும் இப்படிக் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் வஸ்துவினிடத்தில்தான் ருசி அதிகம்” என்றாள்.
அந்த வார்த்தைகள் நமது உத்தம புருஷனுக்குக் கன்னகடூரமாக இருந்தன. அவன் நிரம்பவும் இரக்கமான பார்வையாக அவளைப் பார்த்து, “அம்மாளு! நான் சொன்ன வார்த்தைகளின் கருத்தை நீ சரியானபடி தெரிந்து கொண்டிருந்தால் இப்படிப் பேசமாட்டாய்; நான் உங்களோடு பழக்கம் செய்து கொண்ட முதல் இதுவரையில் நான் உங்களிடத்தில் ஒரு விஷயத்தை மறைத்துக் கபடமாக நடந்து வந்திருக்கிறேன்.”
“ஆனால், என் உண்மையான நோக்கம் என்னவென்பதை வெளியிட வேண்டிய காலம் சமீபித்து விட்டது என்று நினைக்கிறேன்; நான் வெளியிடப் போகும் விஷயத்தை நீ விளையாட்டாக மதிக்காமல், மகா விபரீதமானதாக எண்ண வேண்டும்” என்றான்.
அவனது சொல்லின் கருத்தை உள்ளபடி அறிந்து கொள்ள மாட்டாமல் திகைப்பும் கலக்கமும் கொண்டு தத்தளித்த அம்மாளு, “நமக்குள் அப்படிப்பட்ட விபரீதமான விஷயம் என்ன இருக்கப் போகிறது? அப்படி ஏதாவது இருந்தாலும், அதை வெளியிட இது சரியான சமயமல்ல. இப்போது என் மனம் நாடி இருப்பது எதுவோ அதைத்தவிர, மற்ற எதிலும் என் மனம் இப்போது செல்லத் தயாராக இல்லை” என்று கூறி, அவனை நோக்கி விஷமமாகக் கண் சிமிட்டினாள்.
கலியாணசுந்தரம்:- உன் தங்கை சிவபாக்கியத்தை நான் சந்தித்தேன். அந்தச் சம்பந்தமாக நான் சில வார்த்தைகள் சொல்லப் பிரியப்படுகிறேன். அதைக் கேட்க, உன் மனமும் ஆசைப்படும் என்பது நிச்சயம்.
அம்மாளு:- (திடுக்கிட்டு அடக்கமுடியாத வியப்படைந்து) என்ன! என்ன! என் தங்கை சிவபாக்கியத்தையா நீங்கள் கண்டீர்கள்?
கலியாண:- ஆம்; உண்மையாகவே நான் அவளைக் கண்டேன். அவள் எல்லா விஷயங்களையும் என்னிடம் வெளியிட்டு விட்டாள். உங்களைப் பற்றிய சகலமான ரகசியங்களும் எனக்குத் தெரியும். நான் செஞ்சிக் கோட்டையில் உங்களைக் கண்டு உங்களோடு பழக்கம் செய்துகொண்டு இந்த ஊர் வரையில் உங்களோடு வந்தது தற்செயலாக நடந்த சம்பவமல்ல.
நீயும் உன்னுடைய தங்கைகள் இருவரும் செய்ய உத்தேசித்துப் போகும் விபரீதக் காரியத்தினால், உங்களுக்கு எல்லாம் எப்படிப்பட்ட பெருத்த பாவமும், என்றைக்கும் அழியாத பழிப்பும், இழிவும் ஏற்படும் என்பதை உங்களுக்குத் தெரிவித்து அப்படிப்பட்ட துன்மார்க்கத்தில் நீங்கள் செல்லாமல் தடுத்து எச்சரிக்கும் கருத்தோடு நான் வந்து வேண்டுமென்று உங்களோடு பழக்கம் செய்து கொண்டு இவ்வளவு தூரம் வந்திருக்கிறேனே அன்றி வேறல்ல.
உங்கள் விஷயத்தில் எள்ளளவும் தீங்கு நினைக்காத ஒரு பதிவிரதா சிரோன்மணியின் பெயரையும் இல்லற வாழ்க்கையையும் அடியோடு கெடுத்து, ஆயிசுகால பரியந்தம் அந்த லலிதகுமாரி தேவி ஆறாத் துயரத்தில் ஆழ்ந்து அழிந்து போகத்தக்க காரியத்தை நீங்கள் செய்வதற்கு எவ்வித நியாயமும் இல்லை என்பது கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், உனக்கே நன்றாக விளங்கும். நான் அதிகமாக எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை” என்றான்.
- தொடரும்
விவாதங்கள் (8)
- Arumugam Kandhasamy
கல்யாணசுந்தரம் ஒரு கன்னியவான்
0 likes - Arumugam Kandhasamy
அம்மாவின் நோக்கம் என்னவாக இருக்கும்.
0 likes - shushma
great awesome
0 likes - vishnuu likes
- vishnuu
good onee
0 likes - rina likes
- KS Mani
சூப்பரான கதை கல்யாணசுந்தரம் வெற்றி பெறுவார்
2 likes - Meena Nagarajan
கல்யாண சுந்தரத்தின் கனவு பலிக்குமா?
1 likes