அத்தியாயம் 1

ங்கஜம் அதற்குமுன் ஒருநாளும் அவ்வளவு அதிகாலையில் எழுந்ததில்லை. அவ்வளவு அதிகாலையில் எழுந்து செய்வதற்கு அவளுக்கு ஒன்றும் வேலையில்லை. வீட்டிலே குழந்தை குட்டிகள், பிச்சுப் பிடுங்கல் எதுவும் கிடையாது. காப்பி போட்டுக் காலாகாலத்தில் தராவிட்டால் கோபித்துக்கொள்ளக் கணவன்கூடக் கிடையாது.

ஆனால், கணவனைப் பற்றித் தொடர்ந்து சிந்திக்கிற மனோநிலையில் அவள் இல்லை. வாழ்க்கை பூராவும் தான் துயரில் ஆழ்ந்திருக்க வேண்டுமே - இந்த ஒரு நாளாவது, இந்த அறுபது நாழிகையாவது அவள் துயரத்திலிருந்து விடுபட்டிருப்பது நியாயமல்லவா? பெண்ணாகப் பிறந்ததற்கு உலகம் அந்த ஒரு நியாயத்தையாவது தனக்கு வழங்காமல் இருந்துவிடாது என்றுதான் அவள் எண்ணினாள். தன் துயரத்தைத் தானே நினைத்துப் பார்த்துக் கொள்ளாதிருப்பதற்கு யார் தயவு வேண்டும்?

இந்தமாதிரித் துயரங்கள் வந்துவிட்டால் வயதானவர்கள், கணவனுடன் நாற்பது, ஐம்பது வருஷங்கள் வாழ்ந்து, பிள்ளை குட்டி, பேரன் பேத்தி பெற்றெடுத்தவர்கள் மனம் கல்லாகிவிட்டது என்று சொல்வதைக் கேட்டிருந்தாள் பங்கஜம். மனம் கல்லாவது என்பது இன்னும் அவளுக்கு ஏற்படாத ஓர் அனுபவம். மற்றவர்கள் சொல்கிறார்களே என்று இந்த முடியாத காரியத்தைச் சாதித்துவிட இந்த ஏழெட்டு மாதங்களாகவே அவள் முயன்றுகொண்டு வருகிறாள்.

ஆனால், பங்கஜத்தின் மனம் பங்கஜமாகவே இருக்கிறதே தவிர, கல்லாகிவிடவில்லை. ராமாயணத்தில் வருகிற அகலிகையைப்போல் யாராவது சபித்து, அந்தச் சாபமும் பலித்தால்தான், அவள் மனம் கல்லாக முடியும்போல் இருந்தது!

வாசற்கதவின் குரங்குத்தாழ்ப்பாள் திறப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேகமாகத் தட்டியதில் கையில் பட்டுவிட்டது. கை வலித்தது.

மன வலிமையுடன் கை வலியும் சேர, பங்கஜம் வாசற்கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்து, திண்ணை ஓரத்துத் தூணில் சாய்ந்துகொண்டு நின்றாள்.

ஐப்பது மாதம்தான் - எனினும் குளிர் விழுந்துவிட்டது, அதற்குள்ளாகவே. இழுத்துப் போர்த்திக்கொண்டேதான் நிற்க முடிந்தது பங்கஜத்தால். பொழுது இன்னும் விடியவில்லை. காற்று அதிகமாக இல்லை. மங்கிய நிலவொளி தேய்ந்து கொண்டே போய்ப் பகலை வரவேற்கக் காத்திருக்கிற நிலவொளி அக்ரஹாரத்தில் பரவியிருந்தது. குளம், குட்டை, மரம், மட்டை எல்லாம் ஆடாமல், அசையாமல், அலை வீசாமல் நிலைத்திருந்தன.

அக்ரஹாரத்தில் அவ்வளவு அதிகாலையில் ஜன நடமாட்டமே இல்லை. ஒரு தலைமுறைக்கு முன் என்றால், ஏன், பங்கஜத்துக்கே ஞாபகம் இருந்தது; பத்து வருஷங்களுக்கு முன்கூட, ஐப்பசி மாதத்து அதிகாலையிலே யாராவது கிழங் கட்டைகள் எழுந்துபோய் இதற்குள்ளாகவே நடுங்க நடுங்கக் காவிரியிலே குளித்துவிட்டு வந்து, வீட்டில் காரியம் இருந்ததோ இல்லையோ, கை தடுக்கக் கால் தடுக்க மற்றவர்களையும் தூங்க விடாமல் ஏதாவது பாத்திரங்களை உருட்டுவார்கள் - அல்லது ஸ்தோத்திரங்களை முருமுருப்பார்கள். பங்கஜத்திற்குக்கூட ஞாபகம் இருந்தது.

ஒரு திட்டமான வாழ்க்கை, துயரம் எதையுமே மறப்பதற்கு சிறந்த வழியாகத்தான் இருந்தது என்பதை பங்கஜம் சிந்திக்காமல் இருக்கமுடியவில்லை. திட்டத்தையோ, வாழ்க்கையையோ பற்றி அவள் அறிந்தது என்னவோ மிகவும் சொற்பம்தான். ஆனால், பெண்ணுக்கு என்று ஏற்படக்கூடிய துயரங்கள் பூராவையும் அறிந்துவிட்டவள் அவள். ஒன்றுகூட விடாமல் எல்லாத் துயரங்களையும் அவள் மேல் அடுக்கி அவளுடைய இளம் உள்ளத்தைச் சோதித்துவிட்டது, தெய்வம் - விதி… என்ன சொன்னால் என்ன? துயரம் துயரம்தானே?

அவள் அவ்வளவு அதிகாலையில் எழுந்தது பிசகுதான். சாதாரண நாளில் உள்ள நாற்பது நாழிகை நேரத்தில் படுகிற துன்பம் போதாது என்றா அவள் இரண்டு நாழிகை நேரம் முந்தியே எழுந்து தன் துயரத்தைத் தனிமையில் நீடித்துக்கொண்டு நின்றாள்?

ஐயோ, பாவமே! என்றுதான் அக்ரஹாரத்தார் அங்கலாய்ப்புடன் அவளைப் பற்றிச் சொன்னார்கள். சொந்தத் துயரங்களை மீறி அவள் உடலையோ, உள்ளத்தையோ தொடப் பிறருடைய அங்கலாய்ப்புக்கு இடம் இல்லைதான். அங்கலாய்ப்புத் தேவையாக இல்லை அவளுக்கு; நம்பிக்கை தருவதாகக்கூட இல்லை.

வாழ்க்கைதான் தேவையாக இருந்தது. ஆனால் அதுவும் எண்ணிப் பார்த்தால், நம்பிக்கை தருவதாக இல்லைதான்.

பாவம்! என்ன செய்வாள்?

அக்ரஹாரத்திலே அன்று அதிகாலையில் அவளைத் தவிர, வேறு யாருமே உயிருடனிருந்ததாகத் தெரியவில்லை. தெரு நிசப்தமாக இருந்தது. நள்ளிரவில் கோஷ்டியாக ஊளையிட்டுப் பிறரைத் தூங்கவொட்டாமல் மனசில் கலவரத்தையும், காதில் கூக்குரலையும் உண்டாக்குகிற தெரு நாய்கள்கூட ஓய்ந்து விட்டன. நன்றி மறவாத நாய்கள்கூட எல்லாவற்றையும் மறந்துவிட்டு, பிரக்ஞையற்றுக் கண்களை மூடிவிட்டன.

துயரத்தின் எல்லைகளை அறிந்த தன்னைத் தவிர... என்று எண்ணினாள் பங்கஜம்!

அப்படியானால் அந்தத் தெருவிலே அவளைத் தவிர துயரில் ஆழ்ந்தவர்கள் வேறு யாருமே இல்லையா என்ன? தன்னைவிட அதிகத் துயர் அடைந்தவர்கள் உண்டு என்பது பங்கஜத்துக்கும் தெரிந்த விஷயம்தான்.

அடுத்த வீட்டிலே இருந்தாளே கல்யாணிப் பாட்டி, பெயர்தான் கல்யாணி. அவள் காரியங்களெல்லாம் கல்யாணமல்லாதவைதான்! கணவன் பார்த்துக் கல்யாணம் செய்துகொண்டது அவள் ஏழாவது வயதில் - அறுத்துக் குளித்துவிட்டு வீட்டுக்கு வந்தது ஒன்பதாவது வயதில்… இப்போது அவளுக்கு வயது அறுபதுக்குமேல் இருக்கும். ஐம்பது வருஷங்களிலே அவள் உள்ளம் மரத்துவிட்டதோ? ஐம்பது வருஷங்களில் தன் உள்ளமும் இப்படியேதான் மரத்துவிடுமோ?

பிறர் துயரத்தைப் பற்றி நினைப்பதால் தன் துயரம் மாறிவிடாது என்பது பங்கஜம் அனுபவபூர்வமாக அறிந்த விஷயம்தான். ஆனால், பிறர் துயரில் பங்கிட்டுக் கொள்வதில் தன் துயரை மறக்கமுடிவதையும் அவள் அனுபவபூர்வமாகக் கண்டிருந்தாள்.

அடுத்த வீட்டு அம்புலுவின் குழந்தை இறந்தபோது அவளுக்காகக் கண்ணீர் ஆறாகப் பெருகவிட்டு, பங்கஜம் தன் துயரை வள்ளிசாகப் பதினைந்து நாழிகை நேரம் மறந்துவிட்டுத் தானிருந்தாள்.

மனித மனோபாவத்திலே இது ஒரு விசித்திரம்தான். வேறு என்ன செய்தாலும் அகலாத ஒரு துயரம் பிறர் துயரத்திலே மங்கி, மக்கி, மறைந்துவிடுகிறது. வாழ்க்கையிலே துயரை அதிகமாக அனுபவித்தவர்களின் மனம் கனிந்து இருப்பதற்கு இதுதான் காரணமோ? சுயநலம் காரணமாகவே அவர்கள் பிறர் துயரில் பங்கெடுத்துக் கொள்ள நேர்ந்ததோ?

தத்துவ விசாரம் பங்கஜத்தின் வயசுக்கோ, அறிவுக்கோ எட்டாத விஷயம்தான். ஆனால், துயரங்களை ஒன்றன்பின் ஒன்றாக, நேருக்கு நேர் சந்தித்துப் பார்த்துவிட்டவர்களுக்குத் தானாகவே ஒரு தத்துவ விசாரவேகம் அமைந்துவிடுகிறது. தத்துவ விசாரம் என்பது இன்றுதான் கலாசாலைப் படிப்பாகிவிட்டதே தவிர, என்றும் வாழ்க்கையோடு ஒட்டிய வாழ்க்கையை விட்டு அகலாத ஒரு லட்சணமாகவே இருந்து வந்திருக்கிறது. 

இன்றும் சரி, நேற்றும் சரி, இனி வரப்போகிற நாட்களிலும் சரி, அனுபவத் துயரம்தான் கலாசாலைப் பேராசிரியர்களைவிடப் பெரிய தத்துவ ஆசிரியன் என்பதில் சந்தேகமில்லை.

பங்கஜம் சிந்தனையில் ஆழ்ந்து, ஆனால் எண்ணங்களைத் தெளிவாக உணராத அரைப் பிரக்ஞை நிலையில் தூணில் சாய்ந்துகொண்டு நின்றாள்.

அக்ரஹாரத்தில் நடமாட்டம் எதுவுமில்லை. ஆனால், விழித்துக்கொள்கிற நிலை வந்துவிட்டது. தூரத்திலே, மேட்டுத் தெருக்கோழி ஒன்று அகம்பாவமாகக் கூவிற்று. கல்யாணிப் பாட்டியின் பேத்தி அதாவது அவள் தங்கையின் பேத்தி; விடிகிற சமயம் அதற்கு எப்படித்தான் தெரிந்ததோ, விழித்துக்கொண்டு அடுத்த வீட்டில் அலறிற்று.

கிழக்கும் நெடுக்குமாக நாலுதரம் திரும்பிப் பார்த்தாள் பங்கஜம். கழுத்தைத்தான் வலித்தது. ‘தெருவில் வரானா’ என்று அவள் யாரையும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அன்று எழுந்தது முதலே அவளுக்கு என்னவோ போல்தான் இருந்தது. ஏதோ எதிர்பாராத ஒரு புதிய அனுபவம் ஏற்படப்போகிறது என்கிற முன்னெச்சரிக்கையான ஓர் உணர்ச்சி அவள் உள்ளத்தில் ஊசலாடியது. எதிர்பாராத அனுபவத்தை எதிர்பார்த்துப் பயனுண்டா என்பது பற்றி அவளால் தீர்மானிக்க முடியவில்லை.

தான் எதிர்பார்ப்பதாலேயே அந்த எதிர்பாராதது நடக்காமல் நின்றுவிடுமோ என்கிற பயம் மட்டும் அவள் மனத்திலே எழுந்தது.

கிழக்கே, தெருக்கோடியிலிருந்து மூங்கில் புதர், வெளுக்கும் கீழ்வானத்தில் படம் எடுத்துப் பதிய வைத்ததுபோல, அழகாகத் தெரிந்தது. அதையே பார்த்துக்கொண்டு நின்ற பங்கஜத்தின் காதில் ஒரு வீட்டுக் கதவுத் தாழ்ப்பாள் படார் என்று திறக்கப்படும் சத்தமும், கதவு கிறீச்சென்று அடுத்த நிமிஷம் திறக்கப்படும் சத்தமும் கேட்டது. எதிர்சாரியில் இருந்த சிவராமையர் வீட்டுக் கதவுச் சத்தம் அது என்று எண்ணியபடியே திரும்பிச் சிவராமையர் வீட்டைப் பார்த்தாள் பங்கஜம்.

சிவராமையர் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தது ஓர் உருவம். அந்த வீட்டிலிருந்தவர்களுடைய உருவமெல்லாம் பங்கஜத்துக்கு பதினாறு வருஷங்களாகப் பழக்கமானவைதான். ஆனால், வந்தது அவளுக்குப் பழக்கமான உருவம் அல்ல. யாரோ புதுசாக இருந்தது… வாலிபன். அவர்கள் வீட்டிலே வயதானவர்களையும் சிறுவர்களையும் தவிர வேறு யாருமில்லையே?

சட்டென்று பங்கஜத்துக்கு, முதல் நாள் காலையில் இந்திராணி - சிவராமையரின் பத்துவயதுப் பேத்தி சொன்னது ஞாபகம் வந்தது. சிவராமையரின் தங்கை பிள்ளை ஒருவன் - சண்டை ஆரம்பித்த காலத்தில் ஜெர்மனியில் இருந்தவன், படித்துக்கொண்டு இருந்தவன், ஜெர்மனியிலேயே அகப்பட்டுக்கொண்டு அவர்களுடனிருந்து, அவர்கள் வாழ்க்கை வழிகளில் பிரியங்கொண்டு, அவர்கள் சண்டையைத் தனது ஆக்கி, முதலில் ஜெர்மானியருடனும் பிறகு நேதாஜி போஸின் இந்திய தேசியச் சேனையிலும் சேர்ந்து, பர்மாவில் சண்டையிட்டுக் கைதியாகி, விடுதலையடைந்திருந்தவன். அன்று மாலை வரப்போகிறான். தன் அத்தான் என்று இந்திராணி பெருமையாகச் சொல்லிக் கொண்டது ஞாபகம் வந்தது.

இவ்வளவு தெளிவாகச் சொல்லவில்லை சிறுமி. கேட்டுக் கேட்டுத்தான் அந்த அத்தானைப் பற்றி அறிந்து கொண்டாள் பங்கஜம். இப்போது வாசலில் வந்தது இந்திராணியின் அத்தானாகத்தான் இருக்க வேண்டும். அந்த அத்தான் வாசல் திண்ணையோரமாக வந்து பங்கஜம் நின்றமாதிரியே தூணில் சாய்ந்துகொண்டு கிழக்கும் மேற்குமாகத் தெருவை இரண்டு தடவை கவனித்தான். 

பங்கஜம் அவள் வீட்டுத் திண்ணையோரமாக நின்றுகொண்டிருந்ததைக் கவனித்தானோ என்னவோ… கவனித்தமாதிரி காட்டிக்கொள்ளவில்லை. பையிலிருந்து சிகரெட் டப்பாவை எடுத்துப் படார் என்று திறந்து ஒரு சிகரெட்டை எடுத்து வாயில் வைத்துக் கொளுத்தினான்.

தீக்குச்சியின் வெளிச்சத்திலே அவன் முகம் நன்கு தெரிந்தது. அழகான முகம் என்று சொல்ல முடியாது என்றுதான் எண்ணினாள் பங்கஜம். முகம் எல்லாம் குழி விழுந்து, கண்கள் ஆழ்ந்து பஞ்சடைந்து உருவம் மெலிந்து, அந்தத் தீக்குச்சியின் வெளிச்சம் தன் முகத்தையும் காட்டியிருக்குமோ அவனுக்கு என்று பயந்தவள்போல, பங்கஜம் இரண்டடி பின்னிட்டு நின்றாள் ஒரு விநாடி. பிறகு கதவைத் திறந்து சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள்.

- தொடரும்


விவாதங்கள் (0)