அத்தியாயம் 1

அத்தியாயம் - 22

காவல் துறையினர் சொல்வார்களே, நிலைமை ‘கட்டுக்குள்’ இருப்பதாக, அப்படிப்பட்ட நிலைமை சுயம்புவின் சொந்தக் குடும்பத்தின் நிலைமை.


சுயம்பு காணாமல் போயும், மரகதத்தின் கல்யாணம் ரத்தாகியும் ஐந்தாறு நாட்களாகி விட்டன. ஆறுமுகப் பாண்டி, தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு வயலுக்குப் போகத் துவங்கிவிட்டான். எங்கேயோ கண் காணாத சீமைக்குப் போன பிள்ளையாரும் ஊர் திரும்பி விட்டார். அவரது மருமகள் கோமளமும், மகனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பத் துவங்கிவிட்டாள். அக்காளின் கல்யாணம் நின்ற மறுநாள் காலையிலேயே, டவுனில் காதலனைக் காணவந்த மோகனா, அண்ணனைப் பார்த்ததை மூச்சு விடவில்லை. அவள் குட்டும் வெளிப்பட்டுவிடும் என்ற பயம். தாய்க்காரி வெள்ளையம்மா கூட, சரியாய்ச் சாப்பிடத் துவங்கி விட்டாள். ஆனால் ‘அன்னம் தண்ணி’ அதிகமாய் இறங்காமல் கட்டிலில் படுத்த படுக்கையாகக் கிடப்பவள் மரகதம் மட்டுமே. வெள்ளையம்மா அவ்வப்போது, மோகனாவின் துணையோடு, அவள் வாயைப் பலவந்தமாகத் திறந்து நீராகாரத்தையும், குழைத்துக் கரைத்த அரிசிக் கஞ்சியையும் ஊற்றி விடுகிறாள்.


அந்த ஆறுமுகப்பாண்டி, மாட்டுத் தொட்டியில் புண்ணாக்கைப் போட்டு, பனைமட்டையால் கலக்கிக் கொண்டிருந்தான். கோமளம் பள்ளிப் பயலுக்குத் தலை சீவிக்கொண்டிருந்தாள். வெள்ளையம்மா பாயில் கிடந்தாள். மோகனா பள்ளிக்குப் போனதாகக் கேள்வி. பிள்ளையார்கூட வயலுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தார். அப்போது -


உயரமான ஒருவனும், தடியான ஒருவனும் இவர்களுக்கிடையே ஒரு பெண்ணுமாக அங்கே வந்தார்கள். கோமளம், எழுந்திருக்கும் முன்பே, பிள்ளையார் அடையாளம் கண்டார்.


“வாப்பா முத்து, தம்பி நீங்க என் மகனைக் கொண்டு வந்து.... எங்கிட்ட விட்டீங்களே, டேவிட் என்கிறது நீங்கதானே... வாப்பா. சரி... சரி... நீ யாராயிருந்தா என்னம்மா. என் வீட்டுக்கு வந்ததே பெரிசு. உங்கள நிக்கவச்சே பேசறேன் பாருங்க...”


திண்ணையில் படுத்துக் கிடந்த வெள்ளையம்மா தட்டுத் தடுமாறி எழுந்து உள்ளே போனபோது, பிள்ளையார் அங்குமிங்குமாய்க் கிடந்த மூன்று நாற்காலிகளை ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கொண்டு வந்து போட்டார். ஆறுமுப்பாண்டி, பனை மட்டையைப் போட்டுவிட்டு, அவசர அவசரமாய்க், கை கால்களைக் கழுவினான். அந்த வீட்டில், தாய்ப் பிள்ளையாய்ப் பழகிய முத்து, உள்ளே போனான். அவன் போன நிமிடத்திலேயே புலம்பல். மரகதத்தின் ஒப்பாரி... ‘வா... முத்துத் தம்பியா’ என்ற திட வார்த்தைகளுக்குப் பிறகு, அத்தனையும் திரவ வார்த்தை.


“எப்பா... என்கூடப் பெறக்காத பெறப்பே! எனக்குக் கலியாணமும் வேண்டாம். கருமாதியும் வேண்டாம்பா... நான், இப்படியே இருந்துட்டுப் போறேன்பா... என் ஆசைத்தம்பியை என் கண்முன்னால கொண்டு வந்து நிறுத்துனா... அதுவே எனக்குப் போதும்பா... ஒனக்கு கோடிப்புண்ணியம்ப்பா என் தம்பி... என் கூடப் பிறந்த பிறப்பே... நீ எங்கே இருக்கியோ... எப்படித் துடிக்கியோ, இந்தப் பாவியே ஒன்ன விரட்டிட்டேனடா... உயிரோட கொலை செய்துட்டேனடா!”


“அழாதக்கா... அழாதே. அவனை ஒங்க கண்ணு முன்னால நான் கொண்டு வந்து நிறுத்துறேன்கா!”


“நீ ஆறுதலுக்குச் சொல்லுறே தம்பி... என் கூடப் பிறந்த பிறப்பு வரவே மாட்டான். வருவானா முத்து?”


“வருவான்கா... வருவான்!”


ஊனுருகக் கத்திய மரகதம், மேற்கொண்டு கத்த முடியாதவள்போல் சன்னஞ் சன்னமாய் சத்தமடங்கி, முனங்கலாய் இழுத்து, தன்னை முடித்துக் கொண்டவள் போல் கிடந்தாள். பிள்ளையார்தான் வெளியே இருந்த படியே ‘சத்தம்’ போட்டார்.


“நாமும் என்ன சும்மாவா இருக்கோம். தேடாத இடமே கிடையாது. பேப்பர்ல போடாத குறைதான். எந்தத் திசையில் போனான்னு தெரிஞ்சாலாவது அந்த திசையைப் பார்த்துப் போகலாம். எங்க போயிட்டு வறே மோகனா... உன் அண்ணன்மாருக்கும் அக்காளுக்கும் மோரு கொண்டுவா.”


முற்றத்தில் நின்ற மோகனா, தன்னையே சுமக்க முடியாதபடி உள்ளே போனாள். அண்ணனுக்கு, மலர் எழுதிய கடிதத்தை இவளும், இவள் அண்ணனைத் துரத்தியதை அவளும் மூச்சு விடக்கூடாது என்று ஒரு ஏற்பாடு. ஆனால், இப்போது அண்ணன் போன திசையைச் சொல்லிவிடலாமா என்று ஒரு ஆவேசம். பாதி ரத்தப்பாசம். மீதி எந்த அண்ணனால் தன்னை வெறுத்தானோ அந்த “அத்தான்.” இப்போது அண்ணனாகி விட்டான். முறைக்கு அத்தை மகளான மலர்க்கொடியை சினிமாவுக்குக் கூட்டிப்போய், இவளை தங்கையாக்கி விட்டான். மலர்க்கொடி... நீ உருப்படுவியாடி... எங்க அண்ணன் சேல கட்டுன ஜோக்கரு. ஒன்ன ஏமாத்துனதா நினைச்சு... நான் கலியாணம் பண்ணிக்கப் போறவன் கிட்டயே அவன் யாருன்னு சொல்லி என் காதலைக் கலைச்சிட்டியே... ஒனக்கும் ஒருத்தி வருவாடி.


மோகனா சிரத்தையோ சுரத்தோ இல்லாமல் அந்தப் பெண்ணுக்கு மோரைக் கொடுத்தபோது மெல்லக்கூடச் சிரிக்கவில்லை. பிள்ளையார் கேட்டார்.


“பாப்பா யாரு...”


அவ்வளவுதான். அந்தப்பெண் தலையே வெடிப்பது போல் ஏங்கினாள். பிறகு அழுவது நாகரிகமில்லை என்பது போல், மெல்ல எழுந்து, அங்குமிங்குமாய் நடமாடினாள். மீண்டும் உட்கார்ந்து அழுகைக் குரலோடு பேசினாள்.


“நான்தான் ஒங்க மகன் யுனிவர்சிட்டியை விட்டு விலக்கப்படுறதுக்கு காரணமான பாவி... ஆத்திரத்துல அவர அடிச்சது மட்டுமில்லாம, புகார் கொடுத்து சில அயோக்கியப் பயல்களுக்கு கையாளாயிட்டேன்... டேவிட்டு ஒங்க பையனோட நிலமையைச் சொன்னதும், என்னால தாங்க முடியல... ஒங்க காலுல... கா...”


பிள்ளையார் ஓடிப்போய் நின்றுகொண்டு, அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தார்.


“அழாதம்மா... நீ காரணமா இல்லாட்டாலும், வேற யாராவது காரணமா ஆயிருப்பாங்க... அப்படியே இல்லாட்டாலும், அவனால அங்க நீடிச்சிருக்க முடியாது. நீ வந்ததுல ஒரு சந்தோஷம். நீ அழுகிறதுலகூட ஒரு ஆனந்தம். ஏன்னா, நீங்க வாரது வரைக்கும் நாங்க அனாதை மாதிரியே தவிச்சோம்... எம்மா... கோமளம் சட்டுப்புட்டுன்னு சோறு பொங்கும்மா...”


டேவிட், கோமளத்தைப் பார்த்துக் கையாட்டிவிட்டு, பிள்ளையாரை நோக்கிப் பேசினான்.


“வேண்டாங்கையா... காபி கொடுங்க போதும்... வழில கொஞ்சம் வேலை இருக்கு... கலியாணத்துக்கு வந்த மூர்த்தி என்கிட்ட நடந்ததைச் சொன்னாரு... சொந்த அக்கா கலியாணமே நின்னது மாதிரி அழுதாரு... ஓங்க மகன் சுயம்பு எனக்கு சில லெட்டர்களை எழுதியிருந்தாரு... அவரு நடையுடை பாவனை... எல்லாவற்றையும் கணக்குல வச்சுப் பார்த்தப்போ... ஒங்க மகனால் சேல கட்டாம இருக்க முடியாது என்கிறதும், அவருக்கு எந்தப் பொண்ணோடயும் கலியாணம் காட்சி இருக்க முடியாது என்பதும், புரிஞ்சுது. அவர் தானாச் செய்யலை! உடம்போட உள்ளுறுப்புக்கள் அப்படிச் செய்ய வைக்குதுங்க.”


ஆறுமுகப்பாண்டி, துண்டால் கையைத் துடைத்தபடியே, அங்கே வந்தான். இன்னொரு நாற்காலியில் உட்கார்ந்தபடியே “அப்போ இவனக் குணப்படுத்தவே முடியாதா தம்பி... இது பரம்பரைக் குணமோ...” என்று கேட்டான். அவனுக்கும், ஒரு வேகம். தம்பிக்கு வந்தது தனக்கும் வந்துவிட்டதாக அவள் கூசாமல் சொன்னது, ஒருவேளை உண்மையாக இருக்குமோ என்ற எண்ணம். ஆமாம் என்று சொல்லி விடக்கூடாதே என்று ஒரு நடுக்கம். ஆகையால் அவன் மேற்கொண்டு பேசாமல் இருந்தபோது, டேவிட் சுற்றும் முற்றும் பார்த்தபடியே கேட்டான்.


“பிரமிளா... நீங்க கொஞ்சம் உள்ளே போயி, அக்காவுக்கு ஆறுதல் சொல்லுங்க. நாங்க வெளியிலப் போய் பேசுறோம்...”


தகப்பனும், மகனும், முத்துவும் டேவிட்டும் ஒருசேர நடந்தார்கள். வேப்ப மரத்தடிக்கு வந்தார்கள். அவர்களை எங்கே உட்கார வைப்பது என்ற பிரச்னை பிள்ளையாருக்கு, ஆனால், டேவிட்டோ வேப்பமர வேரில் போய் உட்கார்ந்து கொண்டதைப் பார்த்தவர், அவனுக்கு முன்னால் துண்டை விரித்து தரையில் உட்கார்ந்தார். ஆறுமுகப்பாண்டி, தன் தோளில் கிடந்த துண்டை எடுத்து, வைக்கலோடு சேர்த்து, முத்துவுக்குப் போட்டான். பிறகு தானும் தரையில் சம்மணம் போட்டு உட்கார்ந்தான்.


டேவிட் அவர்களுக்கு விளக்கினான்:


“பிரபஞ்சம் ஒரு கடல் என்றால், இந்த பூமியை நிசமாகவே ஒரு துளி என்று சொல்லாம். ஆனாலும், தனித்துளி. இதுல பல அதிசயங்கள். இருபத்தாறு லட்சம் வகை உயிரினங்கள். இவை ஒன்றை ஒன்று சார்ந்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள், சங்கடங்கள். பொதுவாய் இருபத்தாறு லட்சம் உயிரினத்துக்கும், இருபது வகை புரோட்டீனும், அதிலுள்ள அறுபத்து நாலுவகை சத்துக்களுமே ஆதாரம். அத்தனை சீவராசிகளும், ஜெனடிக்கோட் - அதாவது பிறப்பியல் முறைமைப்படியே இயங்குகின்றன. அத்தனை சீவராசிக்கும் நாலெழுத்து எனப்படும் ஒரு உயிரினக் கோட்பாடே ஆதாரம்! சரி, நுட்பமான விஷயம் வேண்டாம். நீங்க சுயம்பு பிரச்னையைத் தெரிஞ்சுக்கணும் என்கிறதுக்காகவும் ஒங்களுக்கும் ஒரு தெளிவு வரணும் என்கிறதுக்காகவும் நான் பேசறேன். நீங்க விழிக்கிறதைப் பார்த்தால் ஒங்களுக்குப் புரியல... எதுக்கும் வைக்கேன்!”


“இந்த ஜீவராசிகள் சுற்றுப்புறச் சூழலில் உள்ள கார்பன், ஹைடிரஜன், நைடிரஜன், ஆக்ஸிஜன் ஆகியவற்றை உட்கொண்டே பிழைக்கின்றன. ஆனால், இயற்கை எந்த சீவராசியையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் வளர்த்து, தனது கார்பன் போன்ற சக்திகளை இழக்கத் தயாராக இல்லை. அது மட்டுமல்லாமல், இயற்கை ஒரு உயிரை மட்டுமல்ல, ஒரு உயிரின வகையையும் அழிக்கப் பார்க்கிறது. இப்படிப் பலவகை உயிரினங்கள் அழிந்து போயும் உள்ளன. இந்த நிலமை ஏற்படாதிருக்க, உயிரினங்களும், இயற்கையை ஒரு வகையில் ஏமாற்றுகின்றன. எவ்வளவு சீக்கிரம் இனவிருத்தி செய்யணுமோ, அவ்வளவு சீக்கிரம் இனவிருத்தி செய்து விட்டு, மரணமடைகின்றன. மனிதன் இறந்தாலும், மானுடம் நிற்பது இப்படித்தான். இயற்கையும், ஒரு வகையில் முயற்சி திருவினையாக்கும் காரியங்களுக்கு உடன்படுகிறது. ஒரு பூச்சி, ஒரு பூவில் முட்டையிட்டுவிட்டு, அந்த முட்டையின் பாதுகாப்புக்காக இன்னொரு பூவையும் இழுத்து மூடி, மகரந்தச் சேர்க்கையையும் ஏற்படுத்துகிறது. அந்த முட்டையின், முதிர்ச்சியும் பூ பழமாவதும் ஒரே காலகட்டத்தில் நிகழ்கின்றன. பூச்சிகளுக்கு, இன்ன பூக்களில்தான் முட்டையிட வேண்டும் என்பது தெரிகிறது. பூக்களுக்கும் இன்ன பூச்சிதான் வர வேண்டும் என்றும் புரிகிறது. அதனால்தான், எல்லா மலர்களும் ஒரே சமயத்தில் மலர்வதில்லை. எல்லாப் பூச்சிகளும், ஒரே சமயத்தில் பறப்பதில்லை!


“இத்தகைய இனவிருத்தி உத்திகள், மனிதனுக்கும் பொருந்தும். மற்ற சீவராசிகளைப் போல், குறிப்பிட்ட பருவத்தில் மட்டும் இனச்சேர்க்கை செய்பவன் அல்ல மனிதன். இவனுக்கு, எக்காலமும் சம்மதமே. ஆகையால், இந்த மானுட சேர்க்கையால் ஏற்படும் இனவிருத்திப் பெருக்கத்தை, இயற்கை ஒரு கட்டுக்குள் வைக்க விரும்புகிறது. இதற்காகப் பிறந்தவர்கள் அலிகள். ஆணின் விந்துத் துகள்களில் உள்ள கோடிக்கணக்கான உயிர்ப்புகளில் ஒன்று, பெண் தன்மை உள்ளதாகவும் இன்னொன்று ஆண் தன்மை உள்ளதாகவும் இருக்கும். பெண்ணின் கருப்பை முட்டையோ பெண் தன்மை உள்ளது. இதில் ஆணின் ஆண் தன்மை உள்ள உயிர்த்திரள் சேர்ந்தால், குழந்தை ஆணாகிறது. பெண் தன்மை சேர்ந்தால் பெண்ணாகிறது. இதை ‘எக்ஸ்எக்ஸ்’ ‘எக்ஸ் ஒய்’ என்று சொல்வார்கள். தேனிக்களில் ராணி ஈ, கருத்தரிப்பதற்காக, வேலைக்கார ஈக்கள், ஒரு காரியம் செய்கின்றன. பருவதாகத்தால், பறந்து போகும் பெண் ஈ, பின்னாலேயே, ஆண் தேனிக்களைத் துரத்துகின்றன. இனச்சேர்க்கை ஏற்பட்டதும் கூட்டுக்குத் திரும்பும் ராணி ஈ, முட்டைகள் இடும். இவற்றில் வெளிப்படும் ஆண் ஈக்களை அப்படியே விட்டுவிடும். ஆனால் பெண் ஈக்கள் பிறந்தால், அவற்றில் ஒன்றையோ இரண்டையோ போஷாக்குடன் வளர்த்து, மற்ற பெண் ஈக்களை, போஷாக்கு இல்லாமல் காயடிக்கும். போட்டிக்கு அவை வந்துவிடக்கூடாதே என்கிற பயம். இப்படி போஷாக்கு குறைந்த அலி ஈக்கள்தான், வேலைக்கார ஈக்கள். இதனால் மனித சமுதாயத்திலும் ஏதோ ஒரு சமச்சீர் நிலையை பராமரிப்பதற்கு அலிகள் உருவாகிறார்கள். இவர்களுக்கு நம்மைப்போல்தான் நாற்பத்தாறு குரோமோசங்கள் என்றாலும், இவர்களுக்கு எப்படி இந்த அலித்தன்மை வருகிறது என்பது இன்னும் சரியாக கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆனால், தேனி இனம் வாழக் காரணமான வேலைக்கார ஈக்கள் போல், இவர்களும் மானுடம் வாழ பிறப்பிக்கப்படுகிறார்கள். ஆனாலும், அலித்தன்மைக்கு குரோமோசங்களில் ஏற்படும் திரிபுகளோ ஹார்மோன் சுரப்பிகளின் கோளாறோ... துல்லியமாய் தெரியவில்லை.


“மானுடத்தின் இந்த முன்றாவது பிரதியான அலியை கிண்டல் செய்வதும் கேலி செய்வதும் காட்டுமிராண்டித்தனம். நமக்கு சாப்பிடுவது எப்படி இயற்கையோ அப்படி அவர்களுக்கு பெண்ணாகவோ, அல்லது ஆணாகவோ பெண் உடம்பில் ஆணும், ஆண் உடம்பில் பெண்ணும் இருப்பது இயற்கை. இதனால் இவர்கள் வீரத்திலோ விவேகத்திலோ குறைந்தவர்கள் அல்ல. தில்லியிலிருந்து மதுரை வரைக்கும் வந்து நம் முன்னோர்களுடைய முதுகுத் தோலை உரித்த மாலிக்காபூர் ஒரு அலி. இன்னும் பலர் மனதுக்குள் சேலை கட்டி, உடம்புக்கு ஆணுடை தரித்து ஆபீஸர்களாய் கூட இருக்காங்க, ஒங்க மகனுக்கும், சொல்ல வேண்டிய விதமாச் சொல்லியிருந்தால் அவரும் ஒரு என்ஜினியரா மாறியிருக்கலாம். டாக்டருக்கு படிக்கிற எனக்கே இது ஞாபகத்துக்கு வரல. ஒங்களைச் சொல்லிக் குத்தமில்லே. ஆனால் அவரு சேலை கட்டறது, பெண் மாதிரி நடந்துக்கறது வேணுமுன்னு செய்யற காரியம் இல்ல. மருத்துவத்துறையில், அலிப்பிறப்பை, ‘ஹெர்மா - புராடக்ட்’ என்று சொல்கிறோம்.”


பிள்ளையார் பெமூச்சு விட்டார். முத்துவுக்கு முழுசும் புரிந்தது. ஆறுமுகப்பாண்டிக்கு அரைகுறையாகத் தெரிந்தது. பிள்ளையார் பெருமூச்சை முடித்துக் கொண்டே கேட்டார்.


“அப்போ என் மகன் சுயம்புவைத் திருத்தவே முடியாதா...”


“திருந்த வேண்டியது நாமதான்.”


ஆறுமுகப்பாண்டி மனதிற்குள் மனைவி அழுத்திய சுமையை, கண்களை அவை கலக்கும்படி, வைத்துக் கொண்டு, ஒரு சந்தேகம் கேட்டான்.


“டாக்டர் தம்பி, இது பரம்பரை நோயா. தம்பிக்கு வந்தது அண்ணனுக்கும் வருமோ?”


“கிடையவே கிடையாது... அலிகளுக்குக் குழந்தை பெறுகிற தன்மையே கிடையாது. இது முளைக்கும் போதே சாவியாப் போகிற விதை நெல்லு மாதிரி. குஞ்சு இல்லாத கூமுட்டை மாதிரி.”


ஆறுமுகப்பாண்டி சிறிது நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது, முத்து கேட்டான்.


“அப்போ ஆம்பளை, பொம்புளையா மாறுறது, பழனியம்மா, பழனியப்பனா மாறுனது, எப்படி?”


“அலித்தன்மை வேறு. பாலின மாற்றம் வேறு. அலி அலிதான். குழந்தை பெறவும் முடியாது. தரவும் முடியாது. திடீரென்று பெண்ணாய் மாறுகிறவர்களை அலின்னு தப்பா நெனைக்கோம்... பொதுவா மானிடத்தை ஆண் பெண் என்று பார்ப்பதே தப்பு: ஆண் தன்மை அதிகம் உள்ளவங்க, பெண் தன்மை அதிகம் உள்ளவங்க என்றே பார்க்கணும். ஒவ்வொரு ஆண்கிட்டயும் பெண் தன்மை உண்டு. ஒவ்வொரு பெண்கிட்டயும் ஆண் தன்மை உண்டு. முழு ஆண், முழுப் பெண்ணுன்னு கோடு கிழிக்க முடியாது. ஏன்னா பெண்ணின் முட்டையும் ஆணின் உயிர்த்திரளும் சேர்ந்ததே மானுடம். ஆண்தன்மை ஒரு கட்டத்துல அதிகரிக்கும்போது அதுக்கு உட்படுற பெண் ஆணாகவும், பெண்தன்மை முற்றும்போது, ஆண் பெண்ணாகவும் மாறலாம். ஆனால், அலியாக முடியாது. அலித்தன்மை, மானுடத்தின் மூன்றாவது குலம்...”


எல்லோரும் பிரமித்து நின்றபோது, வைக்கோல் படப்பு பக்கத்தில் ஒரு சத்தம் கேட்டது. அங்கே நின்றபடியே கோமளம் அறிவித்தாள்.


“சாப்பாடு ரெடி...”


“அய்யய்யோ... வேண்டாமுன்னு சொன்னேனே.”


“நீங்க சொன்னா நான் கேட்கணுமா... எழுந்திரிங்க”


எல்லோரும் எழுந்தபோது, அவர்களோடு சேர்ந்து எழுந்த ஆறுமுகப்பாண்டியின் மனதுக்குள் ஒரு விபரீத சந்தேகம். தம்பி, சேலை கட்டிய நாளிலிருந்து தன்னையும் ஒரு பேடியாகவே நினைக்கும் இந்தக் கோமளம், டேவிட்கிட்ட பேசும்போது எப்படிக் குழைகிறாள். ஆரம்பத்துல என்கிட்டக் குழைஞ்சாளே அதேமாதிரி. எதையாவது கிண்டலா சொல்லிட்டு, முகத்தை எங்கேயோ திருப்பி வைத்துக்கொண்டு, அங்கிருந்தே காக்காப் பார்வையாய் பார்க்கும் நளினம். நளினமாவது மண்ணாங்கட்டியாவது வேசித்தனம்...


ஆறுமுகப்பாண்டி அவர்களோடு சேர்ந்து சாப்பிட வில்லை. அந்த நிலமையிலும், கோமளம் நல்ல சாப்பாடாகவே போட்டாள். நன்றாகவே சிரித்துப் பேசினாள்.


எல்லோரும், மீண்டும் நாற்காலியில் உட்கார்ந்தார்கள். பிரமிளா டேவிட்டிடம் ஏதோ சொல்ல, அவன் மரகதம் படுத்துக் கிடந்த அறைக்குப் போனான். சிறிது நேரத்தில் வெளியே வந்தவன், பாண்ட் பைக்குள் இருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதியபடியே பேசினான். ஆறுமுகப் பாண்டியைத் தன் பக்கத்தில வரவழைத்த படியே சொன்னான்.


“உங்க தங்கை ரொம்ப வீக்கா இருக்காங்க... எங்கயாவது மருத்துவமனையில் சேர்த்து குளுகோஸ் ஏத்துங்க... கொஞ்சம் நடமாட முடிஞ்சதும் இந்த மருந்துகளைக் கொடுங்க... ஒங்க ஸிஸ்டருக்கும் உடல் நில பாதிச்சது மாதிரி மனநிலையும் பாதிச்சுடப்படாது. இது தூக்க மாத்திரை... ஒவ்வொரு ராத்திரிக்கும் ஒரு மாத்திரையாய், ஏழு நாளைக்குக் கொடுங்க...”


“தெய்வம் மாதிரி வந்தீங்க!”


“நான்தான் பேயாயிட்டேன்...”


பிள்ளையார், பிரமிளாவின் முதுகை மீண்டும் தட்டிக் கொடுத்தார். முத்து உள்ளே போனான். இப்போது மீண்டும் மரகதத்தின் ஒப்பாரி. அவளின் குரல் அடங்கியதும் முத்து கண்களைத் துடைத்துக்கொண்டு வெளியே வந்தான். பிள்ளையார் மகனுக்கு ஆணையிட்டார்.


“ஏடா பெரியவன். இன்னிக்கு பஸ்ல நெரிசலா இருக்கும். சேர்மன் கோவில் விசேஷம் பாரு... பஸ்ல இடம் பிடிச்சு ஏத்திட்டு வா. நான், வயலுக்குப் போறேன். நான் உங்களை மறக்கவே மாட்டேன்... பிரமிளா. ஒன்னோட பெருந்தன்மை... பெரு...”


பிள்ளையாரால் பேச முடியவில்லை. ஓடிவிட்டார்.


அவர்களை வழியனுப்ப டவுன்வரைக்கும் போக வேண்டியிருந்ததால், ஆறுமுகப்பாண்டி வீட்டுக்குள் போனான். அவனுக்குச் சட்டையை நீட்டியபடியே கோமளம் கேட்டாள்.


“சுயம்புவோட நிலமைபற்றி ரகசியமா பேசினது மாதிரி இருந்ததே... டாக்டர் என்ன சொல்றார்?”


ஆறுமுகப்பாண்டி அவள் நீட்டிய சட்டையை வாங்காமல் வேறு சட்டையைப் போட்டுக்கொண்டு வெடித்தான்.


“அன்றைக்குக் கேட்டே பாரு... நானும், சுயம்புவுக்கு அக்காளா ஆகிட்டு வாறேன்னு. அது நிசந்தானாம். நானும் பொம்பளையா ஆகிக்கிட்டே இருக்கேனாம். ஒனக்கு எந்த சுகமும் தர முடியாதாம். ஒன்னைப் பொறுத்த அளவில் நான் பேடிதான்...!”


“அய்யோ... கடவுளே... நீங்களும் ஏதாவது மருந்து சாப்பிடலாமேன்னு சொல்ல வந்தேன்... டேவிட்டு ஒங்களுக்கு மருந்து சாப்பிடணுமுன்னு சொன்னாரான்னு கேட்க வந்தேன்...”


“ஒனக்கு எல்லாருமே அவன் இவன். இந்த டாக்டர் பையன் மட்டும் எப்படி ‘அவரு’... அவன் மருந்து எனக்கு வேணுமா? இல்ல அவனே ஒனக்கு மருந்தா வேணுமா...”


கோமளம், வெடித்திருப்பாள். அது அசிங்கம் என்று அப்படியே தரையையே பார்த்துக்கொண்டு நின்றாள். அவன் வெளியேறினான். அவர்கள் “எக்கா வாறோம்” என்று விடைபெற்றதோ, அவளை ஆச்சரியமாகப் பார்த்துவிட்டுப் போவதோ, அவள் பார்வையில் படவில்லை. செவியில் விழவில்லை. அப்படியே குன்றிப்போய் நின்றாள். சுயம்புவை, சுக்கு நூறாக்க வேண்டுமென்ற ஆவேசம். அந்த ஆவேசத்திலேயே அங்குமிங்குமாய் பார்த்தபடி நடந்தாள். கால் வலித்தபோதுதான் கால நேரம் தெரிந்தது. வெளியே வேப்பமரத்தடியிலிருந்து திரும்பப் போனாள்.


“ஒங்களுக்கு மணியார்டர் வந்திருக்கு. சுயம்பு அனுப்பியிருக்கார்...”


கோமளம், அந்த தபால்காரரையே சுயம்பு போல் எரித்துப் பார்த்தாள்.

-----------


விவாதங்கள் (3)