அத்தியாயம் 1
தன்னை மேனகா உற்று நோக்குவதைக் கண்ட நூர்ஜஹான் கன்றிற் கிரங்கும் தாயைப் போல அன்பும் இனிமையும் பெய்த முகத்தோடு அவளது கன்னத்தைத் தடவிக் கொடுத்து, “அம்மா! உடம்பு இப்போது எப்படி இருக்கிறது? இன்னமும் மயக்கமாகவிருக்கிறதா?” என்று கேட்டாள்.
உடனே மேனகா ஏதோ வார்த்தை சொல்லத் தொடங்கினாள்; ஆனால், அவள் பேசியது ஒருவன் கிணற்றுக்குள்ளிருந்து பேசுதலைப் போலவிருந்தது. “அம்மா! நான் ஏதோ உடம்பு அசெளக்கியப்பட்டுக் கிடப்பதாய்த் தெரிகிறது. நீ என் விஷயத்தில் காட்டும் அந்தரங்கமான அன்பையும், படும் பாடுகளையும் காண என் மனம் உருகுகிறது. என்னைப் பெற்ற தாய்கூட இவ்வளவு அருமை பாராட்டிக் காப்பாற்றுவாளோ என்ற சந்தேகம் உதிக்கிறது. நீ மகா உத்தமியென்பதை உன் முகமே காட்டுகிறது. ஆகையால், உன்மேல் எவ்விதமான சந்தேகங் கொள்ளவும் என் மனம் இடந்தரவில்லை என்றாலும் சில விஷயங்களை அறிந்துகொள்ள என் மனம் மிகவும் ஆவல் கொண்டிருக்கிறது. தயவுசெய்து நான் கேட்பதைத் தெரிவிப்பாயா?” என்றாள். உடனே நூர்ஜஹான் முகமலர்ச்சியடைந்து, “எல்லா விஷயங்களையும் சந்தோஷமாகத் தெரிவிக்கிறேன். எதை வேண்டுமானாலும் கேட்கலாம்” என்று கூறினாள்.
முற்றிலும் அந்தரங்கமான அபிமானத்தைக் காட்டிய அந்தச் சொல்லைக் கேட்ட மேனகா சிறிது ஆறுதலும் துணிவுமடைந்து, “நான் இப்போது எங்கிருக்கிறேன்? நேற்றிரவு நான் கண்ட மகம்மதியருக்கு நீ அநுகூலமாயிருப்பவளா? அல்லது, எனக்கு அநுகூலமாயிருப்பவளா? என் தேகம் இப்போது களங்கமற்ற நிலைமையிலிருக்கிறதா? அல்லது, களங்கமடைந்து, தீயில் சுட்டெரிக்கத்தக்க நிலைமையிலிருக்கிறதா?” என்று மிகவும் நயந்து உருக்கமாகக் கேட்டாள்.
அவளது சொற்கள் மிக்க பரிதாபகரமாகவிருந்தன; வாய் குழறியது. கண்களினின்று கண்ணீர் பெருகி வழிந்தது. நூர்ஜஹானது வாயிலிருந்து எவ்விதமான மறுமொழி வரப்போகிறதோ என்று அவளது வாயையே உற்று நோக்கினாள். அந்த ஒரு நொடியும் ஒரு யுகமாய்த் தோன்றியது. இயற்கையிலேயே மேன்மையான குணமும் இளகிய மனமும் பெற்ற நூர்ஜஹான் அந்தப் பரிதாபகரமான காட்சியைக் கண்டு நைந்திளகி மேனகாவினண்டையில் நன்றாக நெருங்கி அவளை அன்போடு அணைத்து, அவளது கண்ணீரைத் தனது முந்தானையால் துடைத்து, “அம்மா! அழாதே, உனது கற்பிற்குச் சிறிதும் பங்கமுண்டாகவில்லை. நீ கத்தியால் குத்திக்கொள்ளப் போனதைக் கண்டு நானே உனது கையிலிருந்த கத்தியைப் பிடுங்கினேன். உடனே நீ பயத்தினால் மூர்ச்சையடைந்து, உயிரற்றவள் போலக் கீழே விழுந்துவிட்டாய். நானும் என்னுடைய அக்காளும் உன்னை எடுத்து வந்துவிட்டோம். இப்போது நாம் அந்த வீட்டிலில்லை. இது மைலாப்பூரிலுள்ள என் தகப்பனாருடைய பங்களா. நீ இனி கொஞ்சமும் கவலைப்பட வேண்டாம்” என்று உறுதி கூறினாள். அந்த சந்தோஷகரமான செய்தியைக் கேட்டவுடனே மேனகாவின் தேகம் கட்டிற் கடங்காமல் பூரித்துப் புளகாங்கிதமடைந்தது. நூர்ஜஹானது பேருதவியைப் பற்றி அவள் மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கினால், உள்ளம் பொங்கியெழுந்தது. கண்ணீர் ஆறாய்ப் பெருகியது. தென்றலால் நடுங்கும் மாந்தளிர்போல, அவளது மேனி துடித்தது. “அம்மா புண்ணியவதி! என்னுடைய கற்பைக் கொள்ளை கொள்ள நினைத்த கள்வனிடமிருந்து என்னைக் காப்பாற்றியதன்றி, என் உயிரைக் கவர்ந்து சென்ற எமனிடமிருந்தும் அதை மீட்ட பேருபகாரியாகிய உனக்கு நான் எனது நன்றியறிவை எவ்விதம் காட்டப்போகிறேன்!” என்று விம்மி விம்மி உருக்கமாகக் கூறினாள்.
நூர்: நன்றாயிருக்கிறதே! கரும்பைத் தின்பதற்கு வாய் கூலி கேட்பதைப் போல இருக்கிறதே இது! விலை மதிப்பற்ற கற்பினாலேயே பெண்மக்களுக்கு இவ்வளவு மேன்மையும் பெருமையும் மதிப்பும் ஏற்பட்டிருக்கின்றன. ஆகையால், ஒவ்வொரு ஸ்திரீயும் தனது உயிரைக் காட்டிலும் கற்பையே உயர்ந்ததாக மதித்து அதைக் காப்பாற்றக் கடமைப்பட்டிருக்கிறாள். நம்முள் ஒருத்தியின் கற்புக்குத் துன்பம் நேரிடுமாயின் அதை மற்றவள் தன்னுடைய துன்பமாகக் கருதி விலக்கக் கடமைப்பட்டிருக்கிறாள். அப்படிச் செய்யத் தவறுவாளானால் ஒருத்தியின் இழிவில் மற்றவளுக்கும் பங்கு கிடைக்குமென்பது நிச்சயமல்லவா! என்னுடைய கற்பைக் காப்பாற்றிக்கொள்ள நான் எவ்வளவு தூரம் கடமைப்பட்டவளோ, அவ்வளவு தூரம் உன்னுடைய மானத்தைக் காப்பாற்றவும் நான் கடமைப்பட்டவள். நாம் உண்பதைக் குறித்து, கைக்கு வாயும், வாய்க்கு வயிறும், வயிறுக்கு எல்லா அவயவங்களும் உபசார வார்த்தை சொல்லி நன்றி செலுத்துதல் போல இருக்கிறது, இவ்விடத்தில் நாம் ஒருவருக்கொருவர் நன்றி செலுத்துவது” என்றாள்.
நூர்ஜஹானது கண்ணிய புத்தியையும் உயர்ந்த குணங்களையும் ஜீவகாருண்யத்தையும் கண்ட மேனகா பெருமிதங்கொண்டு தாங்கமாட்டாமல் மெய்ம்மறந்து சிறிது மெளனமாயிருந்த பின், “ஈசுவரன், மலைபோல வந்த என் ஆபத்தை, மகா உத்தமியான உன்னுடைய நட்பைக் காட்டி, பனிபோல விலக்கிவிட்டான் போலிருக்கிறது. அம்மா! முதலில் இந்த மஸ்லின் துணியை விலக்கிவிட்டு; என்னுடைய புடவையை உடுத்திக் கொண்டால், எனது கவலையில் முக்காற் பங்கு தீரும். இந்தத் துணி துணியாகவே எனக்குத் தோன்றவில்லை. நான் ஆடையின்றி வெற்றுடம்போடிருப்பதாகத் தோன்றுகிறது” என்று நயந்து கூறினாள்.
நூர்: “மேனகா! கவலைப்படாதே; இங்கே புருஷர் எவரும் வரமாட்டார்கள். கீழே விழுந்த உன்னை வேறு அறைக்குக் கொணர்ந்த உடன் டாக்டர் துரைஸானியை வரவழைத்தோம். அவள் வந்து நாடியைப் பார்த்தவுடன் முதலில் உனது புடவை, நகைகள் முதலியவற்றை விலக்கிவிட்டு இந்த மஸ்லின் துணியை அணிவிக்கச் சொன்னாள். அப்படிச் செய்யாவிடில், தடைபட்டு நின்றுபோன இரத்த ஓட்டம் திரும்பாதென்று கூறினாள். இன்றைக்கு முழுவதும் இதே உடையில் இருக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறாள்” என்று நயமாகக் கூறினாள். ஆனால், நூர்ஜஹான் மேனகாவுக்கு மஸ்லினையுடுத்தி மருந்துகளை உபயோகித்து ஸோபாவில் படுக்க வைத்து, துரைஸானியையும், தனது சகோதரியையும் அவளண்டையிலிருக்கச் செய்து, தான் மேனகாவின் உடைகளையணிந்து, தனது கணவனது அந்தரங்கமான சயன அறைக்குப் போன விஷயத்தை அவளிடம் அப்போது கூறுதல் தகாதென நினைத்து அதை மறைத்து வைத்தாள். தனது கணவனுடன் தான் சச்சரவு செய்து, அவனால் துரத்தப்பட்டு ஓடி வந்தவுடன் மேனகாவை மோட்டாரில் வைத்து மூவருமாக மைலாப்பூருக்குக் கொணர்ந்ததையும், அந்நேரம் முதல் துரைஸானி பங்களாவிலேயே தம்முடன் கூடவிருந்து அப்போதே போனாளென்பதையும் தெரிவித்தாள். அம்மூவரும் தன்னைக் காப்பாற்றும் பொருட்டு செய்த காரியங்களையெல்லாம் கேட்ட மேனகாவின் மனதிலெழுந்த நன்றியறிவின் பெருக்கை எப்படி விவரிப்பது! அவளது கண்கள் கண்ணீரைப் பெருக்கின. வாய்பேசா மெளனியாய் அப்படியே சிந்தனையில் ஆழ்ந்தாள். அவளது அதிகரித்த சந்தோஷம் திடீரென்று துக்கமாக மாறியது. முகம் மாறுபாடடைந்தது. அதைக் கண்ட நூர்ஜஹான், “ஏனம்மா விசனப்படுகிறாய்? உன் விஷயத்தில் நாங்கள் ஏதாயினும் தவறு செய்தோமா? எங்கள் மேல் கோபமா?” என்றாள்.
அதைக் கேட்ட மேனகா, “ஆகா! மகா பேருபகாரிகளான உங்கள் மேல் கேவலம் சண்டாள குணமுடையோர்களே கோபங்கொள்வார்கள். நான் அதை நினைக்கவில்லை. நீங்கள், என் கற்பையும் என் உயிரையும் காத்தது எனக்கு ஒப்பற்ற பெரிய உதவியென்று செய்தீர்கள். ஆனால், இன்னொரு காரியம் செய்திருந்தீர்களானால், அது எல்லாவற்றிலும் மேலான பரம உதவியாயிருக்கும். என்னுடைய கற்பை மாத்திரம் காப்பாற்றி யபின், என்னை மூர்ச்சை தெளிவிக்காமல், அப்படியே இறந்துபோக விட்டிருந்தால், ஆகா! அந்த உதவிக்கு இந்த உலகம் ஈடாயிராது. ஆனால், அந்த உதவியைப் பற்றி நன்றி கூற நான் உயிருடனிருந்திருக்க மாட்டேன்; என்னுடய ஜீவன் மாத்திரம், எத்தனை ஜென்மமெடுத்தாலும் உங்களை மறந்திராது. இத்தனை நாழிகை எனது உயிர் இவ்வுலகத்தின் விஷயங்களை மறந்து எங்கேயோ சென்றிருக்கும். எனது கற்பு அழியாமல் காப்பாற்றப்பட்டதைப் பற்றி நான் அடைந்த இன்பத்தைக் காட்டிலும், என் கணவனை விட்டுப் பிரிந்ததால் இனி நான் அநுபவிக்க வேண்டியிருக்கும் நரக வேதனை எனக்குப் பெரிதாகத் தோன்றுகிறது. அதைக் குறித்த துயரம் இப்போதே மேலிட்டு வதைக்கத் தொடங்கிவிட்டது. நான் என்ன செய்வேன்?” என்று கூறிப் பரிதவித்தவளாய் தனது கண்களை மூடிக்கொண்டு சாய்ந்தாள். திரும்பவும் இரண்டொரு நிமிஷத்தில் கண்களைத் திறந்து, “அம்மா! என் விஷயத்தில் இவ்வளவு உபகாரம் செய்த குணமணியான உனது பெயர் இன்னதென்று அறியவும், உனக்கும், நேற்றிரவு என்னை வற்புறுத்திய அந்த மனிதருக்கும் என்ன உறவு முறையென்பதை அறியவும் என் மனம் பதைக்கிறது. அவைகளைத் தெரிவிக்கலாமா?” என்று நயந்து வேண்ட நூர்ஜஹான் விசனத்தோடு, “என்னுடைய பெயர் நூர்ஜஹானென்பது. ஆனால், நீ கேட்ட இரண்டாவது விஷயத்திற்கு மறுமொழி தர எனக்கு மனமில்லை. அந்த மனிதர் இதுவரையில் எனக்கு உறவினராயிருந்தது உண்மையே. நேற்றிரவு முதல் அவருக்கும் எனக்கும் எவ்வித உறவும் இல்லாமற் போய்விட்டது. ஆகையால், இப்போது அவரை நான் அன்னியராகவே மதிக்கிறேன்” என்று துக்கமும் வெட்கமும் பொங்கக் கூறினாள்.
அதைக் கேட்ட மேனகாவிற்கு அதன் கருத்தொன்றும் விளங்கவில்லை. ஊன்றி யோசனை செய்து அதன் கருத்தை அறிய முயன்றாள். களைப்படைந்திருந்த அவளது மூளை அதனால் பெரிதும் குழம்பியது. பெரிதும் ஆவலுடன், “நூர்ஜஹான்! நீ சொல்வது இன்னதென்பது எனக்கு விளங்கவில்லை; அவர் உனக்கு நெருங்கிய உறவினர் இல்லையென்றால், நீ அந்த வீட்டிலிருந்திருக்க மாட்டாய். நடந்தது நடந்துபோய்விட்டது. என்னிடம் உண்மையை மறைப்பதேன்? அந்த மனிதருடைய துர்நடத்தையால் உன் மனது அவர் மீது மிகவும் வெறுப்படைந்திருப்பது நிச்சயமாய்த் தெரிகிறது. இப்போது உறவு ஒன்றுமில்லையென்றே வைத்துக்கொள்வோம்; இதற்கு முன்னிருந்த உறவு முறைமையைத் தெரிவிக்கக் கூடாதா?” என்று அன்பாக வற்புறுத்திக் கூறினாள்.
நூர்ஜஹான் வெட்கத்தினால் தனது முகத்தைக் கீழே தாழ்த்தினாள். “அம்மா மேனகா! அந்தக் கெட்ட மனிதரை எனது உறவினரென்று சொல்லிக் கொள்ள வெட்கமாயிருக்கிறது. தவிர ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அயல் மாதை விரும்பி அலையும் இழி குணமுடைய ஒரு மனிதரை ஒரு ஸ்திரீ தனது கணவரென்று சொல்லிக்கொண்டால் உலகம் நகைக்குமல்லவா? அந்த இழிவான நிலைமையிலேயே நான் இப்போதிருக்கிறேன்” என்று கூறினாள். அதிகரித்த வெட்கத்தினாலும் துயரத்தினாலும் அவளது தேகம் துடித்தது. கண்ணீர் வழிந்தது. அவளது மனதும், கண்களும் கலங்கின. அந்தப் பரிதாபகரமான நிலைமையைக் கண்ட மேனகா, “அடடா! எனக்குப் பேருபகாரம் செய்த மனிதருக்கு நான் நல்ல பதிலுதவி செய்தேன்! ஐயோ! பாவமே! மூடத்தனமாக ஒரு கேள்வியைக் கேட்டு உன்னைத் துக்கத்தில் ஆழ்த்திவிட்டேனே! ஆகா!” என்று பெரிதும் பச்சாதாபமும் விசனமும் அடைந்தாள். விரைவாக எழுந்து நூர்ஜஹானது கண்ணீரைத் துடைத்துத் தேற்ற நினைத்து நலிந்த தனது மேனிக்கு வலுவைப் புகட்டி எழுந்திருக்க முயன்றாள். அவளது மெலிந்த நிலையில் அது அளவு கடந்த உழைப்பாய்ப் போனது. உடனே கண் இருண்டு போனது. மூளை குழம்பியது. மயக்கங்கொண்டு உணர்வற்று, அப்படியே சயனத்தில் திரும்பவும் வீழ்ந்துவிட்டாள். முன்னிலும் அதிகரித்த மூர்ச்சையடைந்து பிணம்போலானாள்.
அதைக் கண்ட நூர்ஜஹான் பெரிதும் கவலைகொண்டு, அவளுக்கு எவ்விதமான தீங்குண்டாகுமோ என்று மிகவும் அஞ்சி, தனது கணவனைக் குறித்த நினைவையும் விடுத்து அவளைத் தெளிவிப்பதே அலுவலாய்ச் செய்யத் தொடங்கினாள். திரும்பவும் மருந்தை மார்பில் தடவினாள். அவள் விழித்திருந்தபோது, உள்புறம் அருந்தும் மருந்தைக் கொடாமல் தான் ஏமாறிப் போனதை நினைத்து வருந்தினாள். அந்த முறை மேனகாவின் மூர்ச்சைத் தெளிவிக்க நூர்ஜஹான் எவ்வளவு பாடுபட்டாளாயினும் அவளது உணர்வு அன்று மாலை வரையில் திரும்பவில்லை. அப்போதைக்கப்போது மேனகாவின் கண்கள் மாத்திரம் இரண்டொரு விநாடி திறந்து மூடிக்கொண்டனவன்றி அவள் உலகத்தையும் தன்னையும் மறந்து கிடந்தாள்.
அவள் நன்றாகக் குணமடையும் முன்னர் தான் அவளிடம் அதிகமாக உரையாடி, அவள் மனதிற்கு உழைப்பைக் கொடுத்துவிட்டதைக் குறித்து தன்னைத்தானே தூற்றிக்கொண்டவளாய் நூர்ஜஹான் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். அதிக மூர்க்கமாகப் பொங்கியெழுந்து வதைத்த எண்ணிறந்த நினைவுகளால், சூறாவளிக் காற்றில் அகப்பட்ட சருகைப் போல அவளது மனம் தடுமாறியது. மேன்மையும் இரக்கமுமே வடிவாய்த் தோன்றிய அந்தப் பொற்கொடி என்ன செய்வாள்! எதைக் குறித்து வருந்துவாள்! மேனகாவிற்கு வந்த விபத்தைக் குறித்து வருந்துவாளா? அன்றி, தனது கணவனது இழிகுணத்தையும் வஞ்சகச் செயலையும் நினைத்து வருந்துவாளா? தான் நல்ல கணவனையடைந்து அதுகாறும் பேரின்ப சுகமடைந்ததாக நினைத்திருந்த தனது எண்ணமெல்லாம் மண்ணாக மறைந்ததையும், தனது எதிர்கால வாழ்க்கையே இருள் சூழ்ந்த பாழ் நரகாய்ப் போனதையும் நினைத்து வருந்துவாளா? மேனகா எவ்விதமான களங்கமுமற்றிருந்தாள் என்பதை ருஜுப்படுத்தி அவளது கணவனிடம் எப்படிச் சேர்ப்பது என்பதைக் குறித்து வருந்துவாளா? தனது உயர்ந்த கல்வியாலும், அறிவாலும், புத்தியாலும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் தான் தனது நாதனை இன்புறுத்தி, அதனால் தானும் இன்புற நினைத்திருந்த தனக்கு, நற்குணம், விவேகம், முதலியவற்றின் அருமையை ஒரு சிறிதும் உணராதவனும் கேவலம் அழகை மாத்திரம் கருதி அயல் வீட்டுப் பெண்களின் மீது மோகங்கொண்டு தீமைகள் இயற்றும் காமாதுரன் புருஷனாக வந்து வாய்த்ததை நினைத்து வருந்துவாளா? தான் இனி தனது ஆயுட்காலத்தை எவ்வாறு கடத்துவதென்பதை எண்ணி வருந்துவாளா? தான் உண்ணும் கவளத்தையும் தனது புத்திரிக்கு அருமையாக ஊட்டி உயிரைப் போல மதித்து வளர்த்துக் கல்வி முதலிய சிறப்புகளையுண்டாக்கி ஏராளமான செல்வத்தையும் வாரிக்கொடுத்து இன்புறம் பொருட்டு கணவன் வீட்டுக்குத் தன்னை அனுப்பிய தந்தை அந்த வரலாறுகளைக் கேட்டு எவ்வாறு பொறுப்பாரோ, அல்லது மனமுடைந்து மரிப்பாரோ என்னும் நினைவினால் வருந்துவாளா? எதைக் குறித்து வருந்துவாள்? எதை மறந்திருப்பாள்? அத்தனை நினைவுகளும் ஒன்றன் பின்னொன்றையும், ஒரே காலத்திலும் மகா உக்கிரமாக எழுந்து அவளது மனதை அழுத்தி ஒவ்வொன்றும் முதன்மை பெற நினைத்து உலப்பியது. பல மலைப்பாம்புகள் ஒரு ஆட்டுக்கடாவின் உடம்பில் கால்முதல் நெஞ்சுவரையிற் சுற்றிக்கொண்டு தயிர் கடைவதைப் போல அது திணறிப்போம்படி அழுத்தி அதன் எலும்புகளையெல்லாம் நொறுக்குதலைப் போல அவளது மனதை அத்தனை எண்ணங்களும் கசக்கிச் சாறு பிழிந்தன.
அந்த நிலைமையில் அவளது சகோதரி அலிமா என்பவள் அப்போதைக்கப்போது அங்கு தோன்றி உணவருந்த வரும்படி அவளை அழைத்தனள். நூர்ஜஹான் தனக்குப் பசியில்லையென்று சொல்லி அவளை அனுப்பிவிட்டுத் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். இரண்டொரு நாழிகைக்கொருமுறை மேனகாவின் கண்கள் திறக்கும்போது, அவளுக்கு மருந்து கொடுக்க முயன்றும், ஏதாயினும் ஆகாரம் கொள்ளும்படி அவளை வேண்டியும், அவளுக்குக் குணமுண்டாக்க தன்னால் இயன்றவற்றையெல்லாம் புரிந்தவண்ணம் இருந்தாள். அவள் கண்களை மூடிய பிறகு, இவள் தனது விசனங்களான படைகளால் தாக்கப்பட்டு, அதைப் பொறாமல் தத்தளித்திருந்தாள். பூங்கொம்பிலிருந்து பூக்களும் பனித்திவலைகளும் உதிர்தலைப் போல, அவளது கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் கீழே வீழ்ந்து, பெருகி, அவளது ஆடைகளை நனைத்தன. துக்கமும், வெட்கமும், ஆத்திரமும் பொங்கியெழுந்து வதைத்தன. தேம்பித் தேம்பி அழுது நெடுமூச்செறிந்து உயிர்சோர ஓய்வடைந்து உயிரற்ற ஓவியம்போல இருந்தாள். அன்றைப் பகல் முற்றிலும் தண்ணீரும் அருந்த நினைவுகொள்ளாமல் துயரமே வடிவாக உட்கார்ந்திருந்தாள். வஞ்சகனான தனது கணவன் முகத்தில் தான் இனி எப்படி விழிப்பதென்றும், அவனுடன் எப்படி வாழ்வதென்றும் நினைத்து அவனிடம் பெருத்த அருவருப்பை அடைந்தாள். தனது துர்பாக்கியத்தை நினைத்துத் தன்னையே வைதுகொண்டாள். தனது தந்தையினிடத்தில் விஷயங்களை வெளியிட்டு தனது கணவனை இழிவுபடுத்தவும் அவளுடைய பேதை மனது இடங்கொடுக்கவில்லை. ஆனால் அவரது உதவியினாலேயே மேனகாவை அவளது கணவனிடம் திருப்திகரமாகச் சேர்க்க முயல வேண்டும்; தனது கணவன் குற்றத்தைக் கூடிய வரையில் மறைத்துக் குறைவுபடுத்திக் கூறுவதென்றும், மேனகா தனது கணவனையடைந்தவுடன், தான் விஷத்தைத் தின்று உயிரை விட்டுவிட வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்டாள். அன்று மாலையில் டாக்டர் துரைஸானி வரவில்லை. அவள் தவறாமல் காலையில் வருவதாயும், அதுவரை கவலைப்படாமல் அதே மருந்தை பிரயோகிக்கும்படியும் செய்தி சொல்லியனுப்பினாள்.
அதைக் கேட்ட நூர்ஜஹான், மேலும் துன்பக்கடலில் ஆழ்ந்தனள்; மறுநாட் காலையில் துரைஸானி வரும்வரையில், மேனகா பிழைத்திருப்பாளாவென்று பெரிதும் அஞ்சினாள். வேறு துரைஸானியொருத்தியைத் தருவிக்கலாமாவென நினைத்தாள். ஆனால், அந்த இரகசியங்களைப் பலருக்குத் தெரிவிப்பது தவறென எண்ணினாள். இத்தகைய எண்ணிறந்த வேதனைகளில் ஆழ்ந்து அன்றிரவையும் ஊணுறக்கமின்றிப் போக்கினாள். அவளது சகோதரியும் அவளுடன் அன்றிரவு முற்றிலுமிருந்து அவளை உண்ணும்படியும், சிறிது நேரமாயினும் துயிலுக்குச் செல்லும்படியும் வற்புறுத்தி வேண்டியதெல்லாம் வீணாயிற்று. அந்தப் பயங்கரமான இரவு மெல்லக் கழிந்தது; மறுநாட் பொழுது புலர்ந்தது.
- தொடரும்
விவாதங்கள் (6)
- Arumugam Kandhasamy
பெண்ணுக்கு பெண்ணே துணை என்பது நன்கு புலனாகிறது
0 likes - Selva S
good one good
0 likes - mini
great read
0 likes - mini
good read
0 likes - mini likes
- mini
interesting
1 likes