சிறுகதை
“கொக்கரக்கோ... கொக்கரக்கோ...”
வீட்டுக் கூரை மேலிருந்த சேவல் கூவ, கண் முழிச்ச பூவாத்தா பல்லு தேச்சு, மூஞ்சியக் கழுவிப் போட்டு வாசத் தெளிச்சுக் கோலம் போட்டு, அடுப்படிக்கு வந்தா. வரக்காப்பியப் போட்டு ஒரு டம்ளர்லயும், சட்டியில இருந்த பழைய சோத்தைக் கொஞ்சம் உப்பு போட்டுக் கரைச்சு நீராகாரமா ஒரு சொம்புலயும் ஊத்தி எடுத்துக்கிட்டு முன்னாடி தாவாரத்துக்கு வந்தா.
கயித்துக் கட்டிலில் குப்புறப் படுத்துக் கிடந்த சின்ராசு முதுகு குலுங்க அழுதுகிட்டிருந்ததைப் பாக்கப் பாக்க பூவாத்தாவுக்கு ஒரே டென்சன்.
“மாமோய், எதுக்கு நீயி இப்புடி அளுதளுது ஒடம்பக் கெடுத்துக்கற? நேத்து பூரா மேலுக்கு சொகமில்லாம கசாயமும், கஞ்சித் தண்ணியுமாக் கெடந்து போட்டு, இப்பிடி அளுதுகிட்டுக் கெடந்தீன்னா உம்பட ஒடம்பு என்னத்துக்காவும்? மொதல்ல இந்த காப்பியக் குடிச்சுப் போட்டுக் கட்டில்லருந்து எந்திரி. தண்ணி சாலைல சுடுதண்ணி காஞ்சுகிட்டிருக்குது. பல்லத் தேச்சு, மேலுக்கு ரெண்டு சொம்பு தண்ணிய வாத்துக்கிட்டு வா. ஒடம்பு கலகலன்னு இருக்கும். வாய்க்கு ஒணத்தியா கொஞ்சம் பருப்புத் தொகையல் அரைச்சு, தூதுவளையயும், பூண்டும் தட்டிப் போட்டு ரசம் வச்சுத் தாரேன். சூடா ரெண்டு வாய் உண்டீன்னா மேலு, கை கால் வலியெல்லாம் காணாமப் போயிடும். என்ன நடக்கணுன்னு நம்ம தலையில எளுதியிருக்கோ, அது நடக்கட்டும்.”
சொல்றப்பவே பூவாத்தாளுக்கும் கண்ணுல தண்ணி ரொம்பிப் போச்சு. என்ன செய்யறதுன்னு அவ மூளைக்கும்தா எட்ட மாட்டேங்குது.
சின்ராசுக்கு ஆறுதல் சொல்லித் தேத்தறாளே தவிர, உள்ளுக்குள்ள அவ அழுவுற அழுகாச்சியும் வுடுற ரத்தக்கண்ணீரும் அந்த நால்ரோடு முனியப்பசாமிக்கே வெளிச்சம். ‘வெளியில தலை காட்ட முடியாத இப்புடி ஒரு அவமானம் வரணுமா? எல்லாம் அந்த
நாதாரிப் பய முருகேசனால வந்ததுதான’ன்னு பத்து மாசம் சுமந்து பெத்த ஆசை மகன மனசுக்குள்ள கண்டபடி திட்டிப் போட்டு அதுக்கும் சேத்து அழுவுறா. அவ மனசுக்குள்ள கடந்து போன நாலு வருசத்து சம்பவங்கள் எல்லாம் வரிசையா வந்து போகுது.
நாலு வருசத்துக்கு முன்னால பூவாத்தா,சின்ராசு மாதிரி சந்தோசமான புருசன், பொஞ்சாதி யாருமே இருந்திருக்க மாட்டாங்க! மூணு ஏக்கர் நெலத்துல வெள்ளாமை. கெணத்துப் பாசனம், ஓட்டு வீடுன்னாலும் பூவாத்தா கை நேர்த்தியில வீடு பளிச்சுன்னு மின்னும். ஆசைக்கு ஒரு மகளும், ஆஸ்திக்கு ஒரு மகனுமா மனசு நெறஞ்ச வாழ்க்கை. பூவாத்தாளுக்கு தன் வீடு, குடும்பம்னு மனசுக்குள்ற ஏகத்துக்கும் பெருமை. சின்ராசும் பொஞ்சாதி, புள்ளைங்க மேல ரொம்பவே பாசமா இருந்தாலும் அவுரு தம்பட உசுருக்கு மேல உசுரா நெனச்சது அவரோட வயலத்தான்.
அந்தக் கிராமத்துல இருக்கற நெறய பேருக்கு அவரோட வயல் மேல, குறிப்பா என்னிக்கும் வத்தாத அந்தக் கெணத்து மேல ஒரு கண்ணுதான். அதுல சின்ராசுக்கும் கொஞ்சம் அப்பப்ப மனசுக்குள்ளாற கர்வம் எட்டிப் பாக்கும்தான்.
ஆனா எல்லாம் நல்லபடியா போயிகிட்டிருந்தாதான் ஒரு தும்பமும் இல்லியே!
மகன் முருகேசு பக்கத்து டவுன் ஸ்கூல்ல ப்ளஸ் டூ படிச்சான். பொதுத் தேர்வுல அவன் ஆயிரத்துச் சொச்சம் மார்க் எடுத்து பாஸ் பண்ணத அந்தக் குக்கிராமமே கொண்டாடுச்சு! சுத்துப்பட்டு கிராமங்கள்ளயே மொத மொதல்ல ப்ளஸ் டூ பாஸ் பண்ணது முருகேசுதான். ஆனா சின்ராசுக்கு அதெல்லாம் ஒண்ணும் பெருசா தோணலை.
மகன் படிச்சது போதும். இனி மகனையும் வயலுக்குக் கூட்டிட்டுப் போயி கொஞ்சம் கொஞ்சமா வெவசாயத்தைக் கத்துக் குடுத்துரோணும்னு நெனச்சவர்கிட்ட வந்த முருகேசுதான் இஞ்சினீயருக்கு படிக்கணும்னு சொன்னப்ப கொஞ்சம்... கொஞ்சமென்ன, ரொம்பவே தெகச்சுதான் போயிட்டாரு. எளுதப் படிக்கத் தெரிஞ்சா பத்தாதா? மேல் படிப்பு அதுவும் இஞ்சினீயராகணுங்கிறானே? வெவசாயி மகன் வெவசாயியாத்தான ஆகணும்; ஆக முடியும். இவன் என்னவோ அறியாத பய, புரியாம பேசறான்னு வெவசாயத்தோட மகத்துவத்தைப் பத்தி அவங்கிட்ட விலாவாரியா பேசப் போக...
அவுருகிட்ட மூஞ்சியத் திருப்பிக்கிட்டு கோவமா அவங்காத்தாகிட்ட, “இந்தாப் பாரு ஆத்தா. நா இஞ்சினீயருக்குத்தான் படிக்கோணும்னு பல வருசமாக் கெனாக் கண்டுகிட்டிருக்கேன். பண்ணாரியம்மன் கிட்டவும், நம்ம கொலசாமி முனியப்பங்கிட்டவும் நா வேண்டாத நாள் இல்ல. அய்யன் என்னவோ என்னையும் அவராட்ட ஒரு கெணத்துத் தவளையா இந்தப் பட்டிகாட்டுலயவே அடச்சி வச்சிடுவாராட்ட இருக்குது. என்னை எம்பட ஆசப்படி படிக்க வெக்கலயின்னா நான் நம்ம கெணத்துல வுளுந்து செத்துப் போயிடுவேன். அப்பறம் ஒன் இஸ்டம்”னுசொல்லிப் போட்டு போனவந்தா. மேக்கால சூரியன் மறஞ்சும் கூட வூட்டுப் பக்கம் வரல. மவனைக் காணாத துடிச்சுப் போன பூவாத்தா கிராமமுச்சூடும் தேடி வீட்டுக்கு இழுத்துட்டு வந்தா.
சின்ராசுக்கு ஆத்திரம் நெல கொள்ளலை.
“ஏண்டா, நாலு எழுத்து படிச்சுப் போட்டா இத்தன அகம்பாவமா? உங்காத்தா ஒன்னைக் காணாம துடிச்சிப் போவானு தெரியாதா ஒனக்கு.” திட்டிப் போட்டு எப்பவும் போல தாவரத்துல கயித்துக் கட்டில்ல போய் படுத்துத் தூங்கிட்டாரு.
கோழி கூப்புட எழுந்திருச்சவரு, ரெண்டு உள்ளங்கையையும் பரபரனு தேச்சு அதுல கண் முழிச்சு, “பண்ணாரி ஆத்தா... எல்லாரையும் நல்லபடியாக் காப்பாத்து”ன்னு முணுமுணுத்துக்கிட்டே சுத்தியும் ஒரு பார்வை பாக்க...
முருகேசு தூங்காம அப்பிடியே சுவத்துல சாஞ்சு ஒக்காந்து
அழுதுகிட்டிருந்தது கண்ணுல படவும் மனசு கலங்கிட்டாரு.
மவனோட ஆசப்படி அவனப் படிக்க வெக்கலாம். ஆனா பணத்துக்கு என்ன வழி? கையில ஒத்தப் பைசா சேமிப்பு கெடையாது. அறுவடை முடியற வரைக்கும் குடியானவங்க கையில காசு புரளாது. என்ன செய்யிறதுன்னு மண்டையைப் போட்டு கொழப்பிகிட்டாரு. செரி, மொதல்ல பூவாத்தாகிட்ட பேசுவோம்னு பொஞ்சாதியக் கூப்ட்டுக் கேட்டாரு.
“ஏனம்மிணி, பய காலேசு படிப்பு படிக்கோணும்கிறானே? இதுக்கு காசு, பணத்துக்கு எங்காத்தா போறது? ஒங்கிட்ட சிறுவாட்டுப் பணம் ஏதாச்சும் இருக்குதா?”
“எங்கிட்ட ஏதுங்க மாமோய் அவ்வளவு பணம்? ஒங்க மகன் சொல்றதப் பாத்தா லட்சக் கணக்குல செலவாகுமாட்ட தெரியுதுங்க. நமக்கு அதெல்லாஞ் செரிப்பட்டு வராதுங்க, நீங்க பையங்கிட்ட கண்டிசனாச் சொல்லிப் போடுங்க! நம்ம தகுதிக்கு அதெல்லாம் ரொம்ப சாஸ்திங்க.”
ரொம்ப சுளுவாச் சொல்லிப் போட்டா பூவாத்தா.
ஆனா, சின்ராசுக்கு மகங்கிட்ட அப்பிடி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்ல மனசு ஒப்பலை. முருகேசனைக் கூப்ட்டு ரொம்ப தன்மையா தன்னோட பொருளாதார நெலமைய சொன்னவரு, இன்னும் ரெண்டு வருசம் போனா பெரிய மனுசியாகற வயசுல இருக்கற மவ பாப்பாத்திக்கு சடங்கு, கல்யாணம்னு எதிர்காலத்துல இருக்கற செலவுகளைப் பட்டியல் போட்டாரு. இதை எல்லாம் கேட்டா மகன் படிக்கிற ஆசைய விட்டுட்டு தன்னோட நெலத்துக்கு வந்து பாடுபடுவான்னு தப்புக்கணக்கு போட்டுட்டாரு.
ஆனா முருகேசு படு வெவரமானவனாச்சுங்களே...
“இன்னும் ஏழெட்டு வருசம் கழிச்சி நடக்கப் போற மக கல்யாணத்தப் பத்தி இத்தனை யோசனை பண்றவுங்க, எம்பட எதிர்காலத்தப் பத்தியும் யோசன பண்ணனுமுல்ல. உங்களொட சேந்து நானும் இந்தப் பட்டிக்காடுல மாடு மேச்சுக்கிட்டு, சேத்துல
நின்னுக்கிட்டு வெவசாயம் பாப்பேன்னு நெனச்சீங்களாக்கும்! இஞ்சினீரிங்தா படிப்பேன். அதுக்கு ஒங்களுக்கு செலவு பண்ணப் பணமில்லன்னா நெலத்துல பாதிய வித்துப் போட்டு என்னைப் படிக்க வய்யிங்க. மிச்சத்தை உங்களுக்கும், பாப்பாத்தி கல்யாணத்துக்கும் வெச்சுக்கோங்க.”
முருகேசு சொன்னதைக் கேட்டு சின்ராசு துடிதுடிச்சுப் போயிட்டாரு!
“அடேய் படுவா... ராஸ்கோல், என்ன வார்த்த சொல்லிப் போட்ட? நமக்கு காலங்காலமா கஞ்சி ஊத்தற நெலத்த வித்துப் போடுங்கன்னு நாக்கூசாம சொல்ல எப்பிடிரா மனசு வந்துச்சு? எம்முப்பாட்டன் காலத்துலருந்து நம்மளக் காப்பாத்தற ஆத்தாடா எம்பூமி. அதுல ஒரு பிடி மண்ணைக்கூட யாருந் தொட முடியாது பாத்துக்க! விக்கறதாமில்ல!” வீறாப்பா உணர்ச்சி பொங்கப் பேசிட்டு அப்பிடியே கட்டில்ல சாஞ்சிட்டாரு.
அப்பவும், “நீங்க என்ன வேணா பேசுங்க.. நா படிச்சுத்தான் ஆகணும்” பிடிவாதமா சொல்லிட்டு வெளில போயிட்டான் முருகேசு.
அப்பத்திலருந்து பய பச்சத் தண்ணிகூடக் குடிக்காம சத்தியாகிரகம் பண்ண, இப்ப ஆத்தாக்காரிக்கு மனசு தாங்கல. புருசங்கிட்ட வந்து, “மாமோய், ஏதாச்சும் ஏற்பாடு பண்ணி மகன படிக்க வெச்சுப் போடுங்க. இல்லன்னா அவன் பட்டினி கெடந்தே செத்துருவானாட்ட இருக்குது. அப்பிடியே ஒங்கப்பாரோட புடிவாதக் கொணம் அவங்கிட்ட வந்துரிச்சு.”
போகிற போக்குல செத்துப் போன மாமனார வம்புக்கிழுக்க, “இப்ப எதுக்கம்மிணி எங்கப்பனை வசை பாடற? பணத்துக்கு என்ன செய்யுறதுன்னு ஒரு வழி சொல்லு பாப்பம்?” பரிதாபமாக் கேட்டார்.
“ம்... ம்...”னு தலையக் சொறிஞ்சுகிட்டே கொஞ்ச நேரம் யோசிச்சவ,
“ஏனுங்க மாமோய், நம்ம பண்ணையார்கிட்ட கேட்டுப் பாப்பமா? அறுவடை முடிஞ்சதும் திருப்பிக் குடுத்திரலாம்.”
“அது செரி அம்மிணி. இன்னும் நாலு வருசமிருக்கே, படிப்பு செலவு மட்டுமா? தங்கற செலவு, உங்கற (உண்கிற) செலவு, உடுப்பு செலவு, ஊருக்கு வந்து போற செலவுன்னு எத்தினி செலவு இருக்குன்னு ரோசனை பண்ணு.”
“நீங்க சொல்றதும் செரிதான், மொதல்ல இந்த வருசம் அவன காலேசுல சேத்துரலாம். அப்பறம் நாம கொஞ்சம் கட்டும் செட்டுமா இருந்து பணத்த சேர்த்து அடுத்த வருசம் பணம் கட்டிரலாம்.”
“ஆமாம் போ அம்மிணி, நாம என்ன ஆடம்பரமாவா இருக்கறோம்? இப்பவே கட்டும் செட்டுமாதா இருக்கறோம். பாப்பாத்திக்கு ஒரு செலவுன்னா என்னா செய்யுறது? அதுதான் என் ரோசனை. செரி நடக்கறது நடக்கட்டும், நாம் போயிப் பண்ணையாரப் பாத்துப் பேசிட்டு வாரேன்.”
பழுப்பேறிப் போய்க் கிடந்த துண்டைத் தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு நடந்தாரு. சின்ராசுக்கு ரொம்ப தாமசமாத்தான் கல்யாணம் நடந்துச்சு. வெறும் மூணு ஏக்கர் பூமிய வெச்சுகிட்டிருக்கற குடியானவனுக்கு யாரு நானு, நீயின்னு பொண்ணக் குடுக்கப் போறாங்க?
அதுவுமில்லாம அவருக்கே கல்யாணத்துல அவ்வளவா இஸ்டமில்லாமதான் இருந்தது. அதுக்கும் காரணமில்லாம இல்ல. சின்ராசுக்கு இருக்கறது ஒரே ஒரு கிட்னிதான்! அதனால பிற்பாடு நம்ம வாழ்க்கை என்னாகுமோ, ஏதாகுமோ ன்னு அவுரு மனசுக்குள்ள ஒரு சஞ்சலம். ஆனா சின்ராசோட அப்பனும் அத்தையும் சேந்து அவுரு மனச மாத்தி தாய், தகப்பனில்லாத பூவாத்தாவக் கட்டி வெச்சிட்டாங்க.
இப்ப பூவாத்தா இல்லேன்னா அவருக்கு ஒலகமே இருண்டு போயிரும். மாமோய், மாமோய் ன்னு கூடவே ஒட்டிக்கிட்டிருப்பா. இப்பிடி எதை எதையோ ரோசன பண்ணிக்கிட்டே நடந்துக்கிட்டிருந்தவரு எதுக்கால கும்புடப் போன தெய்வம் குறுக்க வந்தாப்புல பண்ணையாரே வந்துக்கிட்டிருந்தாரு! கூடவே காரியஸ்தரும்! தோள்ல கெடந்த துண்டை எடுத்து இடுப்பில கட்டிக்கிட்டுப் பண்ணையாருக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு விசயத்தைச் சொன்னாரு சின்ராசு.
“ஏண்டாப்பா சின்ராசு... இஸ்கோலு படிப்பு பத்தாதாமா ஒம்மவனுக்கு? கடம்பட்டாவது காலேசுல போயிப் படிக்கணுமாக்கும்?”
“பய படிக்கணும்னு ரொம்ப ஆசைப்படறானுங்க. நீங்க கொஞ்சம் மனசு வெச்சு பணம் குடுத்தீங்கன்னா ரொம்ப ஒதவியாயிருக்கும். அறுப்பு முடிஞ்சதும் வட்டியோட திருப்பிக் குடுத்திர்றனுங்க” பணிவாக் கேக்க, “இப்பொ படிப்புச் செலவுக்கு பாங்க்குல எல்லாம் கடன் குடுக்கறாங்களாமில்ல?” என்று சொல்ல வந்த பண்ணையாரை இடைமறித்த காரியஸ்தர் மாரிச்சாமி.
“பேங்க்குல போயி லோனு வாங்கறதெல்லாம் பெரிய நச்சு வேலைங்க பண்ணாடி. அதெல்லாம் இவனுக்கு ஒத்து வராது. பாவம் அவனுக்கு நீங்க ஒதவாட்டி வேற யாரு இருக்காங்க”ன்னு சிவாரிசு பண்ணவும் சின்ராசுக்கு ஒரே ஆச்சரியமாப் போச்சு.
எப்பவும் நம்மள எகத்தாளமாப் பாக்குறதும் நையாண்டி பேசறதுமா இருக்குறவன் இன்னைக்கு என்னடான்னா நமக்கு சாதகமாப் பேசறானேன்னு சின்ராசுக்கு சந்தேகத்துக்குப் பதிலா சந்தோசம்.
பூவாத்தாவ கண்ணாலம் கட்டிக்க ஆசைப்பட்ட மாரிக்கு அவ சின்ராசுவ அதுவும் ஒத்தைக் கிட்னி சின்ராசுவ கட்டிக்கிட்டதுலருந்து ஒரே பொறாமையும் புகைச்சலும்தான். அதுவும் முருகேசு பிளஸ் டூவில ஏகப்பட்ட மார்க் வாங்கவும் புகைச்சல் சாஸ்தியாடிடுச்சு. எப்பிடிறா இவன மட்டந்தட்டலாம்னு யோசனை பண்ணவனுக்கு சின்ராசு தானா வந்து மாட்டவும் ஒரே சந்தோசம்.
காரியஸ்தனோட மனசுல இருக்கற வஞ்சக எண்ணம், பாவம் வெள்ளந்தியான சின்ராசுக்கு எங்க தெரியப் போகுது?
எப்புடியோ கடனை வாங்கி காலேசுல சேத்தப்பறமாத்தான் ஆரம்பிச்சுது, சின்ராசுக்கு ஏழரை சனி. ஒத்தப் பைசா கையில தங்கலை. மாசா மாசம் முருகசு கேக்கற பணத்தப் பொரட்டிக் குடுக்குறதுக்குள்ள புருசம்பொஞ்சாதிக்கு நாக்கு தள்ளிரும்!
பத்தாக்கொறைக்கு எப்பவும் வத்தாத கெணறும் வத்திப் போக மழையும் வராம ஏமாத்திப் போட, வாங்குன கடனுக்கு வட்டி கட்டவே கண்ணுமுழி பிதுங்கிப் போச்சு. திரும்பத் திரும்ப கடன் வாங்க, வட்டி குட்டி போட, மனசுக்குள்ற சின்ராசு ரொம்பவே தளர்ந்து போயிட்டாரு. எப்பிடியோ மூணு வருசம் ஓடிப் போச்சுது. நாலாம் வருசம் ஃபீஸ் கட்டணும்.
‘பாப்பாத்தி பெரிய மனுசியாயிட்டான்னா புட்டு சுத்தணும், சீரு வெக்கணும் செய்யாட்டி ஊரு சனம் ஒத்தக் காசுக்கு மதிக்குமா? முன்ன விட்டு பின்ன பொறணி பேசுவாங்களே’னு பூவாத்தாளுக்கு கவலையான கவலை.
புள்ள வயசுக்கு வந்தா காதுல, மூக்குல போட்டு அழகு பாக்குறதுக்குன்னு வாங்கி வெச்ச கம்மல், மூக்குத்தி அத்தனையுமில்ல வித்து ஏதோ கம்ப்யூட்டர் படிக்கொணும்னு காசை வாங்கிட்டுப் பொயிட்டான்.
“ஏந்தம்பி, இத்தன காச தண்ணியா செலவளிச்சுப் படிக்குறியே? நீ வேலைக்குப் போனா இத்தனை காசையும் திருப்பி சம்பாரிக்க முடியுமா கண்ணு”ன்னு பூவாத்தா கேக்க....
“அதெல்லாம் ஆயிரக்கணக்குல சம்பாதிக்கலாம். படிச்சு முடிச்சதுமே வேலை கெடச்சிரும். அதுக்குதானே இந்தப் பட்டிக்காட்டுல வுளுந்து கெடக்காம கஷ்டப்பட்டு படிக்கறேன். உம் புருசனுக்கு கொஞ்சம் எடுத்து சொல்லு. ஒவ்வொரு வாட்டி பணம் குடுக்கறப்பவும், ‘ரத்தத்தை வேர்வையா சிந்தி வயக்காட்டுல ஒழைச்ச பணம்டா
பாத்து சிக்கனமா செலவு பண்ணு’ங்குறாரு. நா கொஞ்சம் நல்லா துணி உடுத்தறதுகூட அவருக்கு கண்ணை உறுத்துது. நா என்ன இவராட்ட சேத்துலயா எறங்கி வேலை செய்யறேன். காலேஜுல படிக்கிற பையனுக்கு துணிமணியாவது நல்லதா வேண்டாமா”ன்னு குதியாக் குதிக்கிறான்.
என்னத்த சொல்லுவா பூவாத்தா? ‘வருசத்துல பொங்கலுக்கும், பண்ணாரியாத்தா கோயிலுக்கு குண்டம் மிதிக்கவும்தா புதுசா துணி எடுக்கறது வழக்கம். இந்த வருசம் வெள்ளாமை இல்லாமையானதுல பொங்கலுக்குக்கூடப் புதுசு எடுக்கல. அந்த சின்னஞ்சிறிசு பாப்பாத்திகூட வீட்டோட கஷ்டத்த தெரிஞ்சுகிட்டு எதுவும் கேக்கல. செரி, இன்னும் ஒரே வருசம்தான வாயக் கட்டி வயித்தக் கட்டி பணத்தக் கட்டிட்டா அப்புறம் பய வேலைக்கு போயிருவானுல்ல’ மனசத் தேத்திகிட்டா.
பாப்பாத்தி பெரிய மனுசியானா பக்கத்து வீட்டுக்குக்கூட சொல்லாம மறச்சுரலாம். அண்ணங்காரன் வேலைல சேந்தப்பறமா சொல்லிக்கலாம். சிறப்பா சீரு வெச்சிரலாம்னு மனக்கணக்கு போட்டுக்கிட்டா. மூணாவது வருசம் வெள்ளாமை கொறைஞ்சு பண்ணையாருக்கு வட்டி கட்டவே சிரமப் பட்டப்பவே சின்ராசு மகனை கேட்டாரு.”
“ஏந்தம்பி, பேங்க்குல படிப்புச் செலவுக்குப் பணம் கடனாக் குடுக்கறாங்களாமே! கேட்டுப் பாப்பமா”ன்னு கேக்க...
“குடுப்பாங்க. ஆனா நெலத்த ஈடா வெக்க சொல்லுவாங்க பரவாயில்லையா?” அப்பனோட பலவீனத்தப் பயன்படுத்திக்கிட்டு மடக்கினான்.
“ஐயோ, என் நெலத்த எவனுக்கும் எழுதிக் குடுக்க மாட்டே”ன்னு அந்தப் பேச்ச அத்தோட வுட்டவர்தான்.
முருகேசுக்கு பேங்க்ல கடன் தர்ற விசயம் எல்லாம் தெரியாம இல்ல. படிச்சு முடிச்சு வேலை கெடச்சதும் திருப்பிக் கடன கட்டலாம்னும் தெரியும்.
‘எதுக்காக நாம கடனாளியாகணும். படிச்சு முடிச்சு வேலை கெடச்சதும், நல்லாப் படிச்ச பட்டணத்துப் பொண்ணாப் பாத்து கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோசமா நாமுண்டு, நம்ம குடும்பமுண்டுனு சந்தோசமா செட்டிலாயிடணும். இந்தப் பட்டிக்காட்டுப்பக்கம் எட்டிக்கூட பாக்கக் கூடாது. நெலத்த வித்துக் கடனக் கட்டட்டும். சும்மா எம்பட உசிரே இந்த நெலந்தான்னு பாட்டுப் பாடிக்கிட்டு’ன்னு சுயநலத்தோட அவனும் தம்மனசுக்குள்ள ஒரு கணக்கு போட்டுகிட்டான்.
முருகேசன் படிப்பு முடிஞ்சுது. சுமாரான மார்க்குன்னாலும் பாஸாயிட்டான். ஆனா வேலைதான் கெடச்சபாடில்ல. இங்கிலீசு செரியாப் பேச வராம இண்டர்வியூல எல்லாம் ஃபெயிலாகிப் போனான்!
“எம்படிப்புக்கேத்த வேலை இங்க இல்ல. அரபு நாட்டுல நல்ல வேலை. ஏகப்பட்ட சம்பளத்தோடக் கெடைக்குதாம். கொஞ்சம் பணம் கடனா வாங்கிக் குடுத்தா, நா அங்க போயி வேலை பாத்து பணத்த அனுப்பறேன். கொஞ்சம் கொஞ்சமா கடனக் கட்டிரலாம்”ன்னு ஒரு நா ஆரம்பிச்சான்.
எங்கிருந்துதான் அத்தன ஆத்திரம் வந்துதோ தெரியில சின்ராசுக்கு. எரவாணத்துல சொருகி வெச்சிருந்த அருவாள உருவி எடுத்துட்டு முனியப்பஞ்சாமி கணக்கா முருகேசு எதுக்க நின்னாரு.
“ஏண்டா? இந்த ஊருல மானம் மரியாதையோட பொழப்ப நடத்திக்கிட்டிருந்தவனைக் கடங்காரனாக்கி சொந்த ஊருல குத்தம் செஞ்சவனாட்டாமா நடமாட வெச்சிட்டு, இப்ப இன்னுமாடா என்னைக் கடன் வாங்கச் சொல்றே? நீ ஏன் பேங்க்ல படிப்பு லோனு வாங்குலேன்னு பெருமையா ஒன் சினேகிதக்காரங்கிட்ட பீத்திக்கிட்டிருந்தத நான் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.”
“நீயும் தெரிஞ்சுக்கோ பூவாத்தா! இவன் பேங்க்ல லோனு வாங்கினா அவனே கட்டட்டும்னு நாம விட்டுருவோமாம். வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே கடங்காரனா வாழ்க்கைய ஆரம்பிக்கிறது அய்யாவுக்குப் பிடிக்காதாம். ஆனா வீட்டுல ஒரு பொட்டப் புள்ளய வெச்சுகிட்டு நாம மட்டும் மேல மேல கடன் வாங்கலாமாம். கேட்டுக்கோ?” எரிமலையா சீறித் தள்ளிட்டார்.
“ஏங்கண்ணு அவுரு சொல்றதெல்லாம் நெசமா?”ன்னு மகனிடம் பூவாத்தா வெள்ளந்தியாகக் கேக்க...
“ஆமா, இவுரு துப்பறியும் சிங்கம். பெருசா கண்டு புடிச்சிட்டாராம். ஆமா நெசந்தான். அதுக்கென்ன இப்ப? என்னமோ ஊருலகத்துல நடக்காத விசயமா? எல்லா அப்பனுங்களும்தான் படிக்க வெக்கிறாங்க. கடன், கடன்னு பெருசா கொலைக்குத்தம் செஞ்சிட்ட கணக்கா பதர்றீங்க? நெலத்துல எம்பங்கை பிரிச்சுக் குடுத்துருங்க. அத வித்துட்டு நான் வெளிநாடு போயிக்கிறேன். மிச்ச நெலத்த நீங்க வித்துக் கடனைக் கட்டுவீங்களோ, இல்ல வெள்ளாம வெப்பீங்களோ எனக்குத் தெரியாது. இது எம் பாட்டன் சொத்து எம்பங்கைப் பிரிச்சுக் குடுத்துட்டு வேற வேலையப் பாருங்க” ன்னு கொஞ்சங்கூட குத்தவுணர்ச்சி இல்லாமப் பேச, தலையில இடி விழுந்த கணக்கா செவுரோரமா சாஞ்சு உக்காந்துட்டாரு சின்ராசு.
‘அவரோட உயிர்மூச்சான நெலத்த எவ்வளவு சுளுவா பிரிச்சுக் குடுங்கன்னு சொல்லிட்டானே இந்தப் பாவி’ன்னு மனசு குமுறிக்கிட்டு வந்துருச்சு.
பூவாத்தா நெலமையும் பாப்பாத்தி நெலமையும் இன்னும் மோசம். அடுப்படில போயி கண்ணுல தண்ணி விட்டபடியே எத்தன நேரம் உக்காந்திருந்தாங்களோ? எதையும் கண்டுக்காதவனாட்டம் அந்தப் படுபாவி முருகேசு, “ஊருக்குள்ள போயி யாராச்சும் நெலத்த வாங்க தயாரா இருக்காங்கன்னு வெசாரிச்சுட்டு வாரேன்.”
பொத்தாம்பொதுவா சொல்லிட்டு வெளில கெளம்பிட்டான். இந்த நேரத்துக்குன்னுதானே காத்துகிட்டிருந்தான் அந்த நரிப்பய மாரிச்சாமி. பத்தாக்குறைக்கு பெரிய பண்ணை செத்துப் போயி, இப்ப நிர்வாகமெல்லாம் சின்னப் பண்ணை மைனர் மருதப்பன் கிட்ட வந்துருச்சு. மைனரும் மாரிச்சாமியும் சேந்து சின்ராசு தர வேண்டிய கடனுக்கு பதிலா அவங்க நெலத்த பறிச்சுக்கணும்னு திட்டம் தீட்டி அதுக்குண்டான நேரத்துக்கு காத்திருக்க, தானாப் போயி மாட்டிக்கிட்டான் முருகேசு.
“அசலும் வட்டியுமா சேந்து பதினஞ்சு லச்ச ரூபா ஆயிருச்சு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள மொத்தப் பணத்தையும் கட்டலேன்னா பூரா நெலத்தயும் மைனர் பேருக்கு எளுதிக் குடுத்திரோணும். அந்த நெலத்தோட மதிப்பு தற்பொதைய நெலவரப்படி பதினைஞ்சு லச்சம். கடனப் பைசல் பண்ணாம மைனருக்குத் தெரியாம வேற யாருக்கும் நெலத்த விக்கக் கூடாது. அப்பிடி வித்தா தக்க நடவடிக்கை எடுக்கப்படும்”ன்னு வக்கீல் நோட்டீசு அனுப்ப, வீடே எழவு வீடு கணக்கா ஆயிடுச்சு.
வக்கீல் நோட்டீசு வந்தது தெரிஞ்சதும் சத்தமில்லாம தன்னோட அத்தனை உடைமகளையும் எடுத்துகிட்டு..
“நானு எங்கயோ போயி எப்பிடியோ பொழச்சுக்குறேன். இனிமே இந்தப்பக்கம் தல வெச்சுகூடப் படுக்க மாட்டேன். பெத்த மகன் நல்லா இருக்கறது கூடப் பொறுக்காத அப்பனும் ஆத்தாவும் எனக்கு வேண்டாம். இத நல்லா ஒறைக்கிறாப்படி அவங்க கிட்ட சொல்லிரு பாப்பாத்தி. நாம் போறேன்”ன்னு சொல்லிட்டு, பாப்பாத்தி கெஞ்சிக் கதறியும் கொஞ்சம் கூடப் பெத்த பாசமோ ஒடம்பொறந்த பாசமோ எதுவுமில்லாம போயே போயிட்டான்!
கையும் ஓடாம, காலும் ஓடாம பெருசுங்க ரெண்டும் அலமந்து போயிக் கெடக்குதுங்க.
“நெலம் கைய வுட்டுப் போயிருச்சுன்னா நானும் எம்பட உசுரை உட்டுருவேன் அம்மிணி. பாப்பாத்திய நல்லாப் பாத்துக்க. உங்க ரெண்டு பேரையும் அனாதையாத் தவிக்க வுட்டுட்டு நா போயிருவனாட்ட இருக்குதம்மிணி. எம்பட கண்ணுக்கு ஒரு வழியும் பொலப்பட மாட்டேங்குதே பண்ணாரியாத்தா”னு இந்த ஆறு நாளாப் பொலம்பிக் கொண்டே இருந்தவர் மனசுல...
“எதுக்கு நாம மட்டும் செத்துப் போயி பொஞ்சாதியையும், மகளையும் தவிக்க வுடோணும்! பேசாம பாலிடாலக் குடிச்சு மூணு பேரும் ஒண்ணா செத்துரோணும்னு முடிவு செஞ்சவர்தான் இப்ப துக்கம் தாங்காம கட்டில்ல படுத்து குலுங்க குலுங்க அளுதுட்டார். கொண்டவன் மனசு பொஞ்சாதி அறியாததா? அதுவுமில்லாம பூவாத்தா மனசுலயும் இது போல ஒரு எண்ணம்தான ஓடிகிட்டிருந்துச்சு. ஆனா பாப்பாத்திய நெனக்க நெனக்கத்தான் அவளுக்குத் துக்கம் தாங்கல.
‘இன்னும் இருவத்து நாலு மணி நேரந்தா. நாள இன்னேரத்துக்கு கடங்காரங்க வந்து வாசல்ல நிப்பாங்க! ஊருல மானங்கெட்டு, மருவாத கெட்டு வாழறதக் காட்டிலும் நாண்டுகிட்டு செத்துப்போறதுதாஞ் செரி’ன்னு தன்னோட முடிவுல உறுதியாகிட்டா பூவாத்தாவும்.
இது எதுவும் தெரியாம பாவம் இன்னும் ஒறங்கிகிட்டிருக்கா பாப்பாத்தி. காலைல ராகிக்களி கிண்டி கீரைக் கொழம்பு காச்சி சுடச் சுட புருசனுக்கு கொண்டு போயிக் குடுத்தா பூவாத்தா. ஒரு வாரத்துக்கு அப்புறமா வவுறு ரொம்ப சாப்புட்டாரு சின்ராசு.
“ஒம்பட கைமணமே தனிதானம்மிணி. இந்த செம்மத்துல இன்னொருவாட்டி இப்பிடி சாப்பிடக் குடுத்து வைக்குமான்னுதான் தெரியல! கொளம்பு அவ்வளவு ருசி”ன்னு சொல்லவும் பூவாத்தா கண்ணுல இருந்து பொல பொலன்னு தண்ணி அருவியாட்டமா ஊத்துது.
ரெண்டு பேரும் ஒத்தரோட ஒருத்தர் பேசலையே தவிர ரெண்டு பேர் மனசுலயும் ஒரே எண்ணம்தான் ஓடிகிட்டிருக்கு. பாப்பாத்தி பாவம் அது பாட்டுக்கு ஸ்கூலுக்கு கெளம்பிப் போயிருச்சு. பத்தாவதுல நெறய மார்க் வாங்கி அண்ணனை பீட் பண்ணனும்னு அதோட ஆசை. ஆனா பெத்தவங்க மனசுல இருக்கறது நிராசையாச்சே. ம்... ம்... எல்லாம் விதி!
சாயங்காலம் ஆயிருச்சு. பூவாத்தாவும், சின்ராசுவும் இன்னும் எத்தனை மணி நேரத்துக்கு நாம உசுரோட இருக்கப் போறோம்னு கணக்குப் போட்டுக்கிட்டு பிரமை புடிச்சாப்புல உக்காந்திருக்க பாப்பாத்தி வாசக்கூட்டி கோலம் போட வெளில வந்தா.
அவ வெளில வரவும் ஒரு பெரிய படகுகார் சர்ருனு வந்து வாசல்ல நின்னுச்சு. யாரா இருக்கும்னு பாப்பாத்தி சீமாறுங்கையுமா நின்னு பாக்க, காருக்குள்ள இருந்து ஒரு வயசானவர் இறங்கி பாப்பாத்தி கிட்ட, “ஏம்பாப்பா இது சின்ராசு வீடுதானே” ன்னு கேட்டார்.
அவளும் “ஆமா”ன்னு சொல்லிட்டு சீமாத்த அப்புடியே வாசல்லயே வீசிட்டு வீட்டுக்குள்ள ஓடி, “ஆத்தா நம்ம வீட்டுக்கு யாரோ மோட்டாருல வந்துருக்காங்க. அய்யனை வெசாரிக்கறாங்க.”
“அடப் பாவி பொழுது விடியற வரைகூட பொறுக்காம இப்பவே வக்கீலையும் கூட்டிகிட்டு வந்துட்டானாக்கும்” மனசுல நெனச்சுகிட்டே விரக்தியோட வெளில வந்தார் சின்ராசு.
“வணக்கங்க சின்ராசு.”
வந்தவர் பதவிசா சொல்ல, ஒண்ணும் புரியாம தானும் ரெண்டு கையக் கூப்பி வணக்கம் சொன்னார் சின்ராசு. ‘நீங்க யாரு’ன்னு வெவரம் கேக்க வாயத் தெறக்கறதுக்கு முன்னாடி...
“அம்மா இறங்கி வாங்க”ன்னு வந்தவர் கார் பின்சீட்டுக் கதவத் திறக்க, லச்சுமி கடாச்சமா ஒரு அம்மா, காதும், மூக்கும் வைரமா மின்னுது. கைலயும், கழுத்துலயும் தங்கமா ஜொலிக்குது. எறங்கி வந்து வணக்கம் சொல்லிட்டு...
“ஒங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனா எனக்கு உங்களை நல்லாத் தெரியும்”ன்னு புதிர் போட்டாங்க.
“வூடு தேடி வந்தவங்களை வாசல்லயே நிக்க வெச்சுப் பேசறீங்களே. உள்ற வாங்கம்மா” பூவாத்தா வீட்டுக்குள்ற கூட்டிக்கிட்டுப் போயி பாயை விரிச்சு உக்கார வெச்சா. ஒண்ணும் புரியாம தெகச்சுப் பொயி நின்னுக்கிட்டிருந்த சின்ராசுகிட்ட...
“உங்களுக்கு வேதாசலம் அய்யாவ நினைவிருக்குங்களா?”ன்னு அந்தம்மா கேட்டாங்க.
“என்னங்க, இப்பிடிக் கேட்டுப் போட்டீங்க? எனக்கு அரிச்சுவடி கத்துக் குடுத்த ஆசானாச்சே அவுரு? அய்யா எப்பிடி இருக்காருங்கம்மா? நீங்க அய்யாவோட மருமகளா?” சின்ராசு ஆர்வமாக் கேட்க...
“ஆமாம்ங்க. நான் அவரோட மருமகள்தான். மாமாவுக்கு ரொம்ப வயசாயிருச்சில்லையா? படுத்த படுக்கையா இருக்காரு. ஆனா அவுரு மனசுல இனம் புரியாத ஏதோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்திகிட்டே இருக்காம். அதைத் தீத்து வெக்க ஒங்களாலதான் முடியுமாம். மொதல்ல அவுரு குடுத்து விட்ட இந்தக் கடுதாசியப் படிங்க”ன்னு ஒரு கடுதாசியக் குடுத்தாங்க. அதுல...
“என் அன்பான சின்ராசு... நல்லாயிருக்கியா? நீ என்னை நினைக்குறியோ இல்லையோ நான் தினமும் உன்னை நினைக்காத நாளில்லை. எனக்கு உயிர்ப் பிச்சை போட்டவனாச்சே நீ? ரெண்டு கிட்னியும் பழுதாகிப் போயி நான் சாவோட விளிம்புல நின்ன நேரம் பெத்த மகனோட கிட்னி எனக்குப் பொருந்தி இருந்தும், மகன் நல்லா ஆரோக்கியமா இருக்கணும்கிற சுயநலத்தால, பணமிருந்த திமிருல எவ்வளவு பணம் செலவானாலும் பரவால்ல. பணம் கொடுத்து வேற யாரோட கிட்னியாவது எனக்குப் பொருந்துமான்னு தேடின நேரம்.”
“நீ என்னைப் பாக்க வந்தே. ‘என் கிட்னி பொருந்தி இருந்தா எடுத்துக்கோங்க ஐயா’ன்னு பெருந்தன்மையா சொன்னே! அப்ப ஒனக்கு கல்யாணம் கூட ஆகலை. நீ சொன்னது போலவே உன் கிட்னி எனக்குப் பொருத்தமா இருக்கவும் உன்னோட கிட்னிய எனக்குக் குடுத்தே. அதுக்காக நான் பணம் குடுக்க முன் வந்தப்ப நீ வாங்கவே மாட்டேன்னு கண்டிப்பா சொல்லிட்டே.”
“அப்போ கொஞ்ச நாள் நான் உன்னைப் பத்தி நெனச்சுகிட்டே இருந்தேன். நாளடைவுல உடம்பு கொஞ்சம் தேறி பழைய நிலைமைக்கு வந்ததும் நான் உன்னை மறந்துட்டேன். ஆனா, என் மனைவி மட்டும் சொல்லிகிட்டே இருப்பா. சின்ராசுதான் எனக்கு குலதெய்வம்னு உன்னை தெய்வமாவே அவ மதிச்சா. சின்ராசுக்கு ஏதாவது செய்யணும்னு எங்கிட்ட சத்தியம் வாங்கிட்டுத்தான் அவ செத்துப் போனா. அவ இறந்தப்புறம் நான் என் மகனோட வெளிநாட்டுக்குப் போயிட்டேன். இப்பதான் இந்தியா வந்து ஒரு வருஷமாச்சு. என் மனைவிக்கு செஞ்சு குடுத்த சத்தியத்த நான் பெருசா நினைக்கலை.”
“ஆனா இப்ப ஒரு வருஷமாவே எம் மனைவி அடிக்கடி கனவுல வந்து சின்ராசு கஷ்டத்துல இருக்கான்னு சொல்லிட்டே இருந்தா. நான் அவ்வளவாப் பொருட் படுத்தலை கனவுதானேன்னு விட்டுட்டேன். நேத்து கனவுலயும் ‘உங்க அலட்சியத்தால சின்ராசு குடும்பத்தோட சாகப் போறா’ன்னு ரொம்பத் திட்டினா. பதறிப் போயிட்டேன் சின்ராசு.”
“எம்மருமகள் கிட்ட இருபத்தஞ்சு லட்ச ரூபா குடுத்தனுப்பி இருக்கேன். இன்னமும் வேணும்னாலும் சொல்லு. எங்கிட்ட நெறயப் பணமிருக்கு. ஆனா நிம்மதிதான் இல்ல. தயவு செஞ்சு இந்தப் பணத்த வாங்கிக்கிட்டு என்னை குற்ற உணர்ச்சியில இருந்து விடுதலை செய்வியா?”
“நீ எனக்குக் கிட்னி குடுத்து வாழ்க்கையக் குடுத்தே. இப்ப இந்த உதவியச் செஞ்சு எனக்கு நல்ல சாவைக் குடுக்க முடியுமா? குற்ற உணர்ச்சியால வெந்து புழுங்குறேன். ரொம்ப வேண்டிக் கேக்குறேன் சின்ராசு. நீ இந்தப் பணத்தை வாங்கிக்கிட்டா நான் நிம்மதியா சாவேன். அப்புறம் உன் இஷ்டம்.”
கடுதாசியப் படிச்சு முடிச்ச சின்ராசு குலுங்க குலுங்க அழுது முடிச்சுட்டு, “அம்மா மெய்யாலுமே நான் இப்பொ ஒரு பெருங்கஸ்டத்துலதான் இருக்கேன். அது எப்பிடியோ அந்த மகராசிக்குத் தெரிஞ்சிருக்கு. என்னை அவங்க குலசாமியா பெரியம்மா நெனச்சது அவங்க பெருந்தன்மை. ஆனா இப்ப அவங்கதான் என் குலதெய்வம். நான் அன்னாடம் வணங்குற பண்ணாரியாத்தா! அய்யாகிட்ட சொல்லுங்க. சின்ராசு என்னைக்கும் அவரோட வார்த்தைய மீற மாட்டான். பணத்தை நான் சந்தோஷமா வாங்கிக்கிட்டேன்னு சொல்லுங்க.”
“பூவாத்தா! அம்மாவுக்கும் சாருக்கும் காப்பித்தண்ணி வச்சுக் குடு. நல்லவங்களுக்கு ஒரு கஸ்டம் வந்தா, அதைத் தீர்க்க அந்த தெய்வமே மனுச ரூபத்துல வரும்னு பெரியவங்க சொல்றத இன்னைக்கு நான் கண்ணாரப் பாத்துட்டேன். நெஞ்சார உணர்ந்திட்டே”ன்னு அழுது தீத்துட்டாரு.
விருந்தாளிங்க கெளம்பிப் போனப்புறமும் அவங்க திகைப்புல இருந்து வெளியவே வரல. இது கனவா, நனவாங்கிற உணர்வுலயே ராப்பூரா பேசுனாங்க; சிரிச்சாங்க!
மறு நா காலம்பற எகத்தாளமா சிரிச்சுகிட்டு அகம்பாவத்தோட வக்கீலையும், ஊர்காரங்களையும் கூட்டமாக் கூட்டிகிட்டு வந்து நின்னாங்க மைனரும், மாரியும்! வீட்டுக்கு வெளில வந்த சின்ராசுகிட்ட...
“என்றா சின்ராசு, பணம் குடுக்குறியா? இல்ல, நெலத்த எழுதிக் குடுக்கறியா”ன்னு நக்கலாகக் கேட்டுக்கிட்டே சின்ராசு தோள் மேல கையைப் போட்டான் மாரி.
ஒரு புழுவைத் தள்ற மாதிரி அருவருப்பா அவன் கையத் தட்டி விட்ட சின்ராசு, கம்பீரமா ஒரு நாக்காலில கால் மேல கால் போட்டு ஒக்காந்துக்கிட்டு,
“என்ன மைனர்வாள்! பணம்தானே? குடுக்காம எங்க போகப் போறேன்? அசலும், வட்டியும் எவ்வளவுன்னு செரியா கணக்கு போட்டுச் சொல்லு. பொய்க்கணக்கு எழுதி வெச்சிருந்தே, போலீஸ்ல புகார் குடுத்துருவேன். அப்பிடியே நான் கையெழுத்துப் போட்டுக் குடுத்த பத்திரங்களையும் எடுத்துக்கிட்டு வா. நாட்டாமையும் வரட்டும். அவுரு முன்னால ஒங்கணக்கை நான் பைசல் பண்றே”ன்னு சொன்னதும் மைனருக்கும், மாரிக்கும் அதிர்ச்சி தாங்கலை.
நாம போட்ட கணக்கு எங்கே தப்பாச்சுனு குழப்பமான குழப்பம். மனுசங்க ஆளாளுக்கு ஆயிரம் கணக்குப் போடலாம். முருகேசு தான் மட்டும் சுகமா வாழணும்னு நெனச்சுப் போட்டது சுயநலக்கணக்கு. மைனரும் மாரியும் சேந்து சின்ராசு நெலத்தை அபகரிக்கப் போட்டது பாவக்கணக்கு! குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலாம்னு சின்ராசு போட்டது தப்புக் கணக்கு.
வேதாசலம் மூலமா அந்தத் தெய்வம் போட்ட கணக்குத்தான் செரியான கணக்கு, ‘தெய்வத்தின் கணக்கு’ன்னு சின்ராசுக்கும், பூவாத்தாவுக்கும் தெள்ளத் தெளிவாப் புரிஞ்சிருச்சு. அவங்க மகன் முருகேசு மட்டும் மனசு திருந்தி அவங்க கூடவே வந்துட்டான்னா போதும். அவங்க வாழ்க்கைல இனி எல்லாம் சுகமே!
விவாதங்கள் (76)
- Maheswari Senthil
அருமை👌 சிறுகதை
0 likes - Jaya Lakshmi
இக் காலத்திற்கு எற்ற க்்
0 likes - SARITHA MOHANRAJ
அருமையான கதை நல்லவர்க்கு தெய்வம் என்றும் துணை நிற்கும்
0 likes - Jayakumar Palaniswamy
மிக கஷ்டமான மன நிலையில் படித்தேன் மனம் லேசாகி நிம்மதி பெருமூச்சு விட்டேன்
0 likes - Jeeva
மிக அருமை
0 likes - Ramasamy Mahalingam
மனம் கனமாகிவிட்டது.ஆயினும் தர்மம் தலைகாத்தது
0 likes - Sithiga Kader
கண்களில் கண்ணீர்
0 likes - Kamaraj Gurunathan
good story's very well
0 likes - Jeeva Like the moment
அருமையான சிறுகதை
1 likes - Gayathri Sampathkumar
மிக அருமையான எழுத்துநடை.. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்..... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்... நிறைய எழுதுங்கள்.. வாசிக்க காத்திருக்கிறேன்... இக்கதையை பொருத்தமட்டில் முருகேசன் போன்ற மகன்கள் திருந்த வாய்ப்புகள் இல்லை.. அவர்கள் மூவரும் இணைந்து வாழ்வை நன்றாக நடத்துவதே சிறப்பான முடிவாக இருக்க முடியும்....
1 likes