அத்தியாயம் 1
என் மூதாதையர்களின் குரல் இப்படிக் கூறியது…
“ஓடைகளிலும் நதிகளிலும் ஓடும் தெள்ளிய நீரை வெறும் தண்ணீரென்று நினைத்துக் கொள்ளாதே;
அது நமது தாத்தாவுக்குத் தாத்தாவின் ரத்தம்!
ஏரியின் தெள்ளிய நீரில் தெரியும் ஒவ்வொரு பிரதிபலிப்பும் நம் மக்களுடைய வாழ்க்கையின் நினைவுகளைப் பிரதிபலிக்கின்றன; நீரின் முணுமுணுப்பு உனது பாட்டிக்குப் பாட்டியின் குரலே!
ஆறுகள் நமது சகோதரர்கள், அவை உனது தாகத்தைத் தணிக்கின்றன!
படகுகளைச் சுமந்து செல்லவும் குழந்தைகளுக்கு உணவு தரவும் அவை உதவுகின்றன!
நமது சகோதரரிடம் காட்டும் அன்பையும் மரியாதையையும்
நாம் அதனிடமும் காட்ட வேண்டும்!”
- செவ்விந்தியத் தலைவர் சியாட்டிலின் உரையிலிருந்து.
பொழுது மெல்ல விடிந்துகொண்டிருந்தது. அடர்ந்த பனி வெண்ணிறப் போர்வையென திசையெங்கும் பரவியிருந்ததால், ஆகாயத்தையும் நிலத்தையும் பிரித்தறிய முடியாதபடி இருளப்பிக் கிடந்தது. காட்டுப்பூச்சிகளின் ரீங்காரம் அந்தப் பகுதியெங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்க, அருகிலிருந்த காப்பித் தோட்டத்தின் வழி இறங்கிய சருகுமான் ஒன்று, ஆற்றை நோக்கி நடந்து சென்றது. நாசியில் திடீரெனப் புகுந்த குருதி வாடையால் சுதாரித்து சுற்றிலும் பார்த்த அதன் கண்களில், சற்று தூரத்தில் ஒரு மனித உருவம் தெரிந்தது. அச்சத்தோடு குருதிக் கறை வந்த திசை நோக்கி நடந்துசென்றது. கண்களில் மரணத்தை அன்மித்துவிட்ட அச்சமிருந்தபோதும், சில அடி தூரத்தில் கிடந்த மனிதனை சாதாரணமாகக் கடந்துசெல்ல முடியவில்லை.
கூடலூரிலிருந்து புத்தூர்வயல் கிராமத்துக்குச் செல்லும் சின்னஞ் சிறிய மண் சாலை. அதன் ஒருபுறம் காஃபி மற்றும் வாழைத் தோட்டங்களும், இன்னொரு பக்கமாக சவ்சவ் காய் தோட்டங்களும் இருந்தன. சவ் சவ் தோட்டத்தைக் கடந்து கீழிறங்கினால், நான்கு பேர் நடந்து செல்லும் அளவில் சிறிய ஆறு. வாழை, தென்னை எனப் பல்வேறு விதமான பயிர்களும் செழித்து வளரும் காட்டுப் பகுதி அது. அதன் பசுமைக்குச் சற்றும் பொருத்தமில்லாமலிருந்தது இந்தக் குருதி வாடை.
சவ் சவ் தோட்டத்துக்குள்ளிருந்து வெளிப்பட்ட மிருகத்தின் உறுமலில், சருகுமான் சடாரென சுதாரித்து நின்றது. ஆற்றுக்குச் செல்லும் திசையையும், தான் இறங்கிவந்த திசையையும் ஒருமுறைப் பார்த்துவிட்டு, வந்த வழியிலேயே தாவிச் சென்றது. தப்பிச்சென்ற மானின் பாதையில் மெல்ல பனி விலகிக்கொண்டிருக்க, அதிகாலைக்கான முதல் வெளிச்சம் நிலத்தில் படர்ந்தது.
விலகப் பிரியமில்லாத குழந்தையைப்போல் பிடிவாதமாய் சாலையை ஆக்ரமித்திருந்த பனியினூடாகத் தோட்ட வேலைகளுக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் `குட்டி யானை’ வேன் ஒன்று வந்தது. முன் விளக்கு வெளிச்சத்தினூடாகச் சாலையில் கிடந்த மனித உருவத்தைக் கண்ட ஓட்டுநர், அதிர்ச்சியோடு வாகனத்தைத் சற்றுத் தள்ளியே நிறுத்திக்கொண்டான்.
``என்னப்பா வண்டிய நிறுத்திட்ட?” - பின்னால் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் சத்தமாய்க் கேட்க, “ஏதோ வெவகாரமாட்ட இருக்கு. நாலு பேர் இறங்கி வாங்க, போயி என்னன்னு பாப்போம்.” - சத்தம் கொடுத்தபடியே ஓட்டுநர் வண்டியை விட்டு இறங்கினான்.
உறக்க சடவோடு அவனருகில் அமர்ந்திருந்த இன்னொருவன், உறக்கம் களைந்த சலிப்பில் கண்ணைக் கசக்கிக்கொண்டு பார்த்தான். வண்டியிலிருந்து இறங்கி சில அடிகள் நடந்ததுமே, ஓட்டுநருக்கு விபரீதம் புரிந்துவிட்டதால், திரும்பி பின்னால் வந்த ஆட்களைப் பார்த்தான்.
“நான் நெனச்ச மாதிரிதான் ஆகிடுச்சுங்ணா… ஆறு மாசமா நிம்மதியா வேலைக்கிப் போயிட்டு வந்தோம். மறுபடியும் அது ராவடி பண்ண ஆரம்பிச்சிதாட்ட இருக்கு.” - பதற்றத்தோடு சொல்லியவனை நெருங்கி வந்தவர்கள், அவனுக்குப் பின்பாக ரத்த வெள்ளத்தில் உடல் குதறப்பட்டுக் கிடந்த மனிதனைக் கண்டார்கள்.
எல்லோரிலும் வயதில் மூத்தவர் நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டதால், மற்றவர்களைக் கையமர்த்தி நிறுத்திவிட்டு, முன்னால் சென்று பார்த்தார். கொல்லப்பட்டுக் கிடந்தவனின் உடலெங்கும் சூடானக் குருதியின் ஈரம் இன்னும் உலர்ந்திருக்கவில்லை. அவன் முகத்தை நோக்கிக் கையை அலையவிட்டுப் பார்த்ததில் மூச்சில்லை என்பதைத் தெரிந்துகொண்டார்.
முகத்தைக் கவனித்துப் பார்த்தார். பழகிய முகமாய்த் தெரியவில்லை. லுங்கியைச் சரிசெய்தபடியே எழுந்தவர், “யாரும் பக்கத்துல வரவேணாம். மொதல்ல ஃபாரஸ்ட் கார்டுக்கு போன் போட்டுச் சொல்வோம். அப்டியே ஒருத்தர் கூடலூர் தாலுகா ஸ்டேஷனுக்குக் கூப்ட்டுச் சொல்லுங்க. அசலூர் ஆளாட்டம் இருக்கு. சர்க்காரு ஆளுங்க வர்ற வரைக்கும் இருப்போம். அப்டியே விட்டுட்டுப் போகமுடியாது. நான் முதலாளிகிட்ட தகவல் சொல்லிக்கறேன்” என்றபடியே வண்டியை நோக்கி நடந்தார். அவரோடு வந்தவர்களில் ஒருவன், “ஆளுக்கு உசுரு இருக்குங்களா?” எனக் கேட்க, பெரியவர் கவலையோடு இல்லையெனத் தலையாட்டினார். அவ்வளவு நேரமும் தயங்கித் தயங்கி எழுந்துகொண்டிருந்த விடியலின் மஞ்சள் நிற வெளிச்சம் சடாரென எழுந்தது.
அடுத்து வரும் வாகனங்களுக்கு வழிவிடுவதற்காக, ஓட்டுநர் தனது வண்டியை எடுத்து சற்றுத் தூரத்திலிருந்த பனியர் குடியை ஒட்டி நிறுத்தினான். பனியர் குடியிலிருந்தவர்களில் சிலர் அங்கு அசாதாரணச் சூழல் ஒன்று உருவாகிக்கொண்டிருப்பதை அறிந்து எட்டிப் பார்த்தனர்.
வேனிலிருந்த வேலையாட்கள் அங்கேயே இருப்பதா, கிளம்பிச் செல்வதா எனத் தங்களுக்குள் குசுகுசுப்போடு பேசிக்கொண்டிருக்க, ஒரு நடுத்தர வயதுப் பெண் மட்டும், “நம்மளுக்குள்ளயே பேசிட்டு இருந்தா சரியாப் போயிருமா? யாராச்சும் ஒருத்தர் சொல்லித்தான ஆகணும். அந்தாள அடிச்சது போயிருச்சா, பக்கத்துலதான் இருக்குதான்னு தெரியல. ஏதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகிட்டா என்ன செய்றது? இப்ப எதுக்கு செத்தவனுக்கு நாமளும் காவலுக்கு நிக்கணும்?” எனக் கேட்டாள்.
முதலாளியிடம் ஆட்கள் வரத் தாமதமாகுமென அலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு வந்த பெரியவர் அவளை முறைத்தார். “ஏம்மா, ஏதாச்சும் வெவரம் தெரிஞ்சா பேசணும், இல்லன்னா சும்மா இருக்கணும். செத்துப் போனவனுக்குக் கேக்க ஆளில்லன்னா, அனாதப் பொணமாத் தூக்கிப் போட்றுவாங்க. நாளப் பின்ன நாம பாதுகாப்பா போயிட்டு வரணும்னாலும், காட்டுக்கார ஆபிசருங்க கிட்ட இப்ப சண்ட போட்டாதான் முடியும். இல்லன்னா இதெல்லாம் பிரச்சன இல்லன்னு சொல்லிட்டுப் போயிருவாங்க.” - அவர் காட்டமாகச் சொன்னதும், அந்தப் பெண் பேச்சை நிறுத்திக்கொண்டாள்.
பனியை விலக்கி எழுந்த சூரிய வெளிச்சம், அந்தப் பகுதி முழுக்க ஆக்ரமித்திருக்க, செய்தியைக் கேள்விப்பட்டு அருகில் இருந்த தோட்டத்தில் வேலை செய்கிறவர்களும் அங்கு வந்து கூடத் துவங்கினர். ஒவ்வொருவரின் முகத்திலும் அச்சம் குடிகொண்டிருந்தது.
பனியர் குடியிலிருந்து வந்த பெரியவர், அங்கு நின்றவர்களுக்குப் பொதுவாக வணக்கம் சொல்லிவிட்டு, இறந்து கிடந்தவனை நோக்கிச் சென்றார். சற்று தூரத்திலேயே அவருக்கு ஆளை அடையாளம் தெரிந்துவிட, சங்கடத்திலேயே நின்றுவிட்டார்.
வேனில் வந்த பெரியவர் இவரை நெருங்கிவந்து, ``ஆள் யாருன்னு உங்களுக்குத் தெரியுங்களா?” எனக் கேட்க, ஆமென்று தலையாட்டினார்.
“இந்தத் தம்பி எந்த ஊருக்காரர்னு தெரியதுங்க. ஆனா, நம்ம மூக்குப்பொடி சாமியார்கிட்ட வேலைக்கு இருந்தாப்ள.” - பனியர் குடிப் பெரியவர் சொன்ன பிறகு, வேன் டிரைவர் திரும்பவும் நெருங்கி வந்து பார்த்தான்.
அவனுக்கு இப்போது அடையாளம் தெரிந்திருக்க வேண்டும். ``அட ஆமா! எனக்கும் இப்பத்தான் தெரியுது’’ என்று பொதுவாகச் சொல்ல, வேனில் வந்த முதியவர், ``அப்ப சாமியாருக்கும் போன் போட்டு சேதியச் சொல்லுங்கப்பா” என்று அவசரப்படுத்தினார்.
டிரைவர் சலிப்போடு அவரைப் பார்த்து, ``நல்லா சொன்னப்பா நீ? அவரு எந்தக் காலத்துல போன் வெச்சிட்டு இருந்திருக்காரு? நம்ம யாராச்சும் ஆளுதான் அனுப்பணும்” என்று சொல்ல, பெரியவர் நிதானமாய்த் திரும்பி தன்னோடு வந்த ஆட்களில் தெளிவான ஒருவரைத் தேடினார்.
முற்றாகத் தூக்கம் விலகி, ஆட்களோடு நின்றிருந்த க்ளீனரை அழைத்து, ``மூக்குப்பொடி சாமியார்கிட்டப் போயி சேதியச் சொல்லி கையோட அவர கூட்டி வந்துரு” என்றார்.
ஏற்கனவே தூக்கம் கலைந்துபோன கடுப்பிலிருந்தவன், “அதென்ன பக்கத்துலயா இருக்கு? நிலக்கோட்ட வரைக்கும் போகணும். நான் எப்படிப் போறது?” எனச் சலித்தான்.
“ஏய்… யார்கிட்டயாச்சும் வண்டிய வாங்கிட்டு மளார்னு போயிட்டு வாடா.”
``எனக்குத்தான் வண்டி ஓட்டத் தெரியாதுல்ல…”
பெரியவருக்குப் பதற்றத்தில் அவனுக்கு வண்டி ஓட்டத் தெரியாதென்கிற விவரம் அப்போதுதான் நினைவுக்கு வந்தது. ``உங்கிட்ட சொன்னேன் பாரு’’ எனத் தலையிலடித்துக்கொண்டார். பக்கத்திலிருந்த ஒருவனை அழைத்து, ``எப்பா… டவுன்ல மாணிக்கம் இருப்பான். அவனுக்கு ஒரு வார்த்த போன் பண்ணி, மூக்குப்பொடி சாமியார்கிட்ட சேதியச் சொல்லச் சொல்லி, கையோட கூட்டியாரச் சொல்லு” என்றதும், அவன் தன் அலைபேசியை எடுத்துக்கொண்டு அவசரமாய் நடந்தான்.
**********
கூடலூர் தாலுகா காவல் நிலையத்திலிருந்து உதவி ஆய்வாளரும், இரண்டு கான்ஸ்டபிளும் சம்பவ இடத்துக்கு வந்து சேரும்போதே, வன இலாகா அதிகாரிகளும் வந்துவிட்டிருந்தனர்.
``யாருங்க முதல்ல பாத்தது?’’ என உதவி ஆய்வாளர் கேட்டபோது, பெரியவர் அவசரமாக முன்வந்து, ``நாந்தாங்கய்யா. என் பேரு தங்கம். நாங்கள்லாம் வாத்தியார் தோட்டத்துல வேலைக்கு இருக்கோம்” என்றபடி வணக்கம் வைத்தார்.
``இந்தாளு யாரு, பேர் என்னன்னு தெரியுமா?”
“பேர் தெரியலங்கய்யா. நம்ம மூக்குப்பொடி சாமியார்கிட்டதான் வேலைக்கு இருந்தாப்லையாம். அவர வரச்சொல்லி இருக்கோம். இப்ப வந்துடுவாருங்க.”
உதவி ஆய்வாளரோடு இருந்த கான்ஸ்டபிள், தங்கம் சொன்ன தகவல்களை அவசரமாக எழுதிக்கொண்டார். ஃபாரஸ்ட் கார்டுகள் இரண்டு பேர் அந்த இடத்தைச் சுற்றிவந்து ஆய்வு செய்தனர்.
இரண்டு பேரில் வயதில் மூத்தவராக இருந்தவர், இறந்து கிடந்தவனின் அருகில் அமர்ந்து, அவன் உடலில் இருந்த காயங்களையும், கொல்லப்பட்ட விதத்தையும் கவனித்துக் குறிப்பெடுத்துக்கொண்டார்.
உதவி ஆய்வாளர் நெருங்கி வந்து, ``ஸார்… கன்ஃபார்மா புலிதான் அடிச்சிருக்கா?” எனக் கேட்க, ஃபாரஸ்ட் கார்ட் தயக்கத்தோடு, ``ஆம்’’ என்றார்.
“ஆறு மாசத்துக்கு முன்ன எப்படி அடிச்சதோ அதே பேட்டர்ன். இது கொஞ்சம் எல்டரான டைகர். திரும்ப வராதுன்னு நெனச்சோம். ஆனா, எப்படி இறங்குச்சுன்னு தெரியல…”
“ஸார், ஊர் ஆளுங்க கூடறதுக்குள்ள ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போயிரலாம்” என உதவி ஆய்வாளர் அவசரப்படுத்த, கார்டும் சம்மதித்தார்.
அவசரமாக கூடலூர் அரசு மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் வர உத்தரவிடப்பட்டதும், கூடியிருந்த மக்கள் நிலைமையைப் புரிந்துகொண்டனர். முதலில் சம்பவத்தைப் பார்த்த தங்கம், ``ஐயா, எதுவா இருந்தாலும் மூக்குப்பொடி வரட்டும். இந்தப் பய குடும்பத்துக்கு அரசாங்கம் செய்யவேண்டியத செஞ்சாத்தான் நாங்க பாடிய எடுக்க விடுவோம்’’ எனப் பிடிவாதமாக நின்றார்.
உதவி ஆய்வாளார் திரும்பி கார்டைப் பார்க்க, அவர் இவருக்கு மட்டும் கேட்கும் குரலில், ``இந்த மாதிரி ஆக்ஸிடென்ட் நடக்கறப்போ, ஸ்பாட்லயே பாதிக்கப்பட்டவங்களுக்கு காம்பன்சேஷன் குடுக்கணுங்கறது கவர்மென்ட் ரூல் ஸார்” என்றார்.
``நல்ல ரூல் போட்டீங்க’’ என அலுத்துக்கொண்ட எஸ்.ஐ, ``இருந்து முழுசா எல்லாத்தையும் விசாரிச்சுட்டு வாங்கய்யா’’ என கான்ஸ்டபிள்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்ப, அவருக்கு எதிரில் வந்துநின்ற ஆட்டோவிலிருந்து மூக்குப்பொடி சாமியார் இறங்கி வந்தார்.
(தொடரும்...)
விவாதங்கள் (172)
Latha Muthukrishnan
super
0 likesShaheera Begum
G 5t32&&2&$2d,$&$&3&$&,3&3$,&2&&3$d33
0 likesசஞ்சணா பாரிஜாத்தா likes
Daniel Elango.P. Daniel Elango.P. Daniel Elango.P.
Because they don't have Ambulance.
0 likeskousalyadevi chandrasekar
super
0 likesTamil Selvan
money
0 likesDeiva Nayagam
கண் முன்னாடி காட்சியா கொண்டு வந்துட்டார்
0 likesSimplify Mathematics
அருமை
0 likesMuthukumar Kumar
அருமையானஆரம்பம்
0 likesSathiya Bama
very intrest. thrilling story😯😯😯
0 likes