அத்தியாயம் 1

ந்த மாருதி வேனின் வலப்பக்கம் பானுமதி உட்கார்ந்திருந்தாள். குளிர்க் காற்றைக் கிழித்துக் கொண்டு வேன் வடக்கு நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. 

தொலைவிலிருந்து கடல் ஆர்ப்பாட்டம் செய்துகொண்டிருப்பதைக் காண முடிந்தது. அலைகள் கரையில் அடித்து, எகிறி, நுரை ‘ஹோ’ என்று கூச்சலிட்டு, யார் கவனித்தாலும் கவனிக்காது போனாலும் அட்டகாசம் செய்துகொண்டிருந்தன. 

கடல் ஆண். அகம்பாவம் பிடித்த ஆண். பூமி என்கிற பெண் மீது எப்போதுமே ஆதிக்கம் செலுத்துகிற ஆண். பூமியைவிடப் பரப்பிலும் வலுவிலும் திண்மை கொண்டிருந்தாலும், போகட்டும் போகட்டும் என்று பூமி விட்டுக்கொடுத்தாலும், இன்னும் போதாது என்று ஆட்டம் போடுகிற ஆண்.

இத்தனை அட்டகாசத்தையும் பார்த்துப் பொறுமையாய் இருக்கிறதே தவிர, பதிலுக்கு அடிக்கத் தோன்றவில்லை. எட்டி உதைத்துத் தன் இடத்தை விஸ்தரித்துக்கொள்ளத் தெரியவில்லை. விட்ட இடத்தை மீட்கத் தெரியவில்லை. வெறுமே காலங்காலமாய் இந்த ஆண் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. சொடேர் என்று விழுகிற அடியை வாங்கிக் கொண்டிருக்கிறது.

அடி வாங்கிக்கொண்டிருப்பதால்தான் பூமியைப் பெண்ணென்று சொல்லிவிட்டார்களா? ஆட்டம் போடுவதால், கடல் அரசன் என்று பெயராயிற்றா?

நிலமென்னும் நல்லாள், நல்லவள். பொறுமைசாலி. குணவதி. அப்படியிருந்தால் நானும் நல்லாள். இல்லையெனில் நானும் தறுதலை. கெட்டுப்போனது. அடங்காதது. திமிர்பிடித்தது. இறங்கி ஓடிப்போய்க் கடலை எட்டி உதைத்துத் துவம்சம் செய்ய வேண்டும் போலிருந்தது பானுமதிக்கு. பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு ரௌத்திரம் தோன்றிற்று.

வண்டி நீச்சல்குளம் தாண்டிப் பாலம் தாண்டிப் போகும்போது கூவம் நதி கடலில் கலப்பது தெரிந்தது. பெண் நதி. எதனால்? வற்றாது வழங்குவதால், நெளிந்து ஓடுவதால், தாகத்துக்கு நீர் வார்ப்பதால், உணவுக்கு அவசியம் என்பதால். வாஸ்தவம். இந்தப் பாவிகள் நதியையும் மதிக்கவில்லை. பெண்ணையும் மதிக்கவில்லை. அதனால்தான் வற்றிப் போய்விட்டதோ? உன் உறவே வேண்டாம் என்று சுருங்கிப் போய்விட்டதோ? நதி வற்றியது, ஏரி வற்றியது, குளம் வற்றியது. பூமி நீரும் குறைகிறது. திண்டாடு மனிதா, கை ஜலத்துக்கு நாயாய் அலை! மனசு சபித்தது.

வண்டி இடது பக்கம் திரும்பி ஹைகோர்ட்டுக்குள் நுழைய, லேசாய் ஒரு கலக்கம் எழுந்தது. பத்தாவது படிக்கும்போது ஒருமுறை ஹார்பர் சுற்றுலா வந்துவிட்டு இங்குள்ள புல்வெளியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். ‘இதான் ஹைகோர்ட்டு.’ டீச்சர் ஏதோ நிறையச் சொன்னாள். மேலே லைட் ஹவுஸ் இருக்கிறது என்றாள். இப்போதுதான் நுழைகிறாள். தன் வாழ்க்கையில் ஓர் அத்தியாயத்தை இங்கே முடிக்கப் போகிறாள்.

"எல்லாரும் இறங்கி விடுங்க; வண்டி பார்க்கிங்ல போடணும்.” - அப்பா முன் சீட்டிலிருந்து இறங்கினார். “குழந்தைகளுமாப்பா?” என்று பானுமதி கேட்க...

"எல்லாம் இறங்கணும்மா. ராமசாமி, நீ போய் வக்கீல் ரூம்ல இருக்காரா, பார்த்துட்டு வா. நாங்க பின்னால பத்திரம் விக்கிற இடத்துல நிக்கிறோம்.”

"நேரே கோர்ட்டுக்கு வரச்சொல்லிவிட்டாரா?” சேகர் பதில் பேசினான்.

"நீ போய்ப் பார்த்துவிட்டு வாடா. வந்துட்டம்னு சொல்லு.”

"அவரு பானுவை இட்டாரச் சொன்னா... நானும் பானுவும் போயிட்டு வந்துடறோமே.”

"சரியான தத்திப் பையன்டா நீ. எல்லாத்துக்கும் ஒரு துணை வேணும். நீ இரு இங்கேயே. நான் போய் வக்கீலைப் பார்த்துட்டு வரேன்.” அப்பா சலிப்புடன் படியேறினார். இடதா வலதா என்று யோசித்துவிட்டு, வலப்புறம் திரும்பி வராந்தாவில் நடந்து மறைந்தார்.

அப்பா தளர்வோடு நடந்து போவதைப் பார்க்க மனசுக்குச் சிரமமாய் இருந்தது. எழுபது வயசில் இவருக்கு இத்தனை வேதனை வேணுமா? உட்காரவைத்து உபசரிக்க வேண்டிய வயசில் தன் பொருட்டு இவர் இரவு பகலாய் அலைந்து... யோசிக்கிறபோதெல்லாம் இருட்டு மாதிரி வேதனை கவிழும்.

"நீ பொம்பளைப் புள்ளைம்மா. கடைசி வரைக்கும் உனக்கு நான் செஞ்சாவணும், என் கடமை இது. இந்தக் கஷ்டம் உனக்கு மட்டுமில்லை. வேற யாருக்கு வந்திருந்தாலும் நான் ஓடியாடிச் செய்திருப்பேன். என் விருப்பம் அது.”

ஆனால் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதைவிடப் புரியவில்லை என்பதுதான் சரி. ‘நாம அறுத்துக் கட்டற ஜாதியில்லை. தப்பு இது. பிடிக்கலையா வா. வந்து நம்ம வீட்டோட இரு. பசங்களை இங்கே வச்சுப் படிக்க வை, ஏண்டி கோர்ட்டுக்குப் போறே? ஊர் உலகம் சிரிக்காது?’

வாழ்ந்தபோது சிரித்ததை விடவா... ‘ஐயோ பாவம்’ என்று ஊர் கூடித் துக்கப்பட்டதே அந்தக் கேவலத்தை விடவா அறுத்துக்கொள்வது பெரிது? அப்பா... கழிவிரக்கம் ஒரு பெண்ணைக் கொன்று போடுவது போல, வேறு கொடுமை உண்டா? மற்றவர் இரக்கம் நம்மேல் வழிந்து, நமக்குள்ளே பெருகி நம்மையே இழுத்துப் போய்ச் சாக்கடையில் தள்ளுகிற அவலத்தைத் துடைக்கத்தான் பெரும் போராட்டம் தேவைப்பட்டது. 

நிமிர்ந்து இனி அழ மாட்டேன் என்று நின்றபோதுதான், ‘தறுதலை, திமிர், கொழுத்துப் போனது...’ என்று பேசினார்கள். அதையும் உதறியபோது, பேசக்கூட மறுத்துவிட்டார்கள். பதினாலு வருடக் குடித்தனத்தில் சகல வேதனையும் பட்டாயிற்று. அடி விழ விழத்தான் யுத்த வெறியே மூண்டது. காயப்பட்டுப்பட்டு மனசு தழும்பேறிய பிறகுதான், போர்த் தந்திரமே புரிந்தது. எப்படித் தாக்குவது, எங்கே தாக்குவது என்று யோசித்து, நடவடிக்கை எடுத்தபோது, எதிர்ப்பக்கம் ஆடிப்போயிற்று.

இப்போது உடன்படிக்கை. போர் நிறுத்த உடன்படிக்கை. இனி எந்தவிதப் பொருளாதார, வர்த்தக கலை உலக உறவுமில்லை. நீ வேறு, நான் வேறு என்கிற உடன்படிக்கை. இப்போரினால் ஏற்பட்ட சேதத்துக்கு எந்தவித உதவியும் ஏற்க மாட்டேன் என்கிற நிபந்தனையுடன் கூடிய உடன்படிக்கை. தன் யோசனையைத் தானே பாராட்டிக்கொண்டு பானுமதி சிரித்தாள்.

ஹைகோர்ட் வளாகம் அதீத சுறுசுறுப்பாய் இருந்தது. கறுப்பு கவுன் போட்ட ஆண்களும் பெண்களும் நீளக் காகிதக் கட்டுகளுடன் நடந்துகொண்டிருந்தார்கள். இரண்டும் நாலுமாய்க் கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

“ஏம்மா, இவங்கெல்லாம் ஸ்பைடர்மேன் மாதிரி ட்ரஸ் பண்ணியிருக்காங்க?” பன்னிரண்டு வயதுப் பிள்ளை கேட்டான்.

"என்ன மாதிரி?”

“ஸ்பைடர்மேன் மாதிரி. பின்னால் நீள அங்கி கட்டிக்கிட்டு...”

“ரொம்ப நாளா அப்படித்தான் ட்ரஸ். ஏன்னு தெரியலை. நம்ம வக்கீல் வந்தா நீ கேளு, சொல்வாரு.”

“ஸ்பைடர்மேன் இல்லை வௌவால் மாதிரி இருக்காங்க. கறுப்பு இறக்கையோட.” ஏழு வயசுப் பெண் இடைமறித்தாள்.

“ச்சு… அப்படிச் சொல்லக் கூடாது. வௌவால் தலைகீழாத் தொங்கும்டி.”

அப்பா மூச்சிரைக்க வந்தார்.

“பார்த்துட்டேன். இன்னிக்குத் தீர்ப்பாயிடுமாம். ஃபேமிலி கோர்ட் வாசலுக்குப் போகச் சொல்றாங்க. காலிங் பத்து மணிக்கு ஆரம்பிச்சிடுமாம்.” விரைந்தார்கள்.

“ஏன் தாத்தா வௌவால் தலைகீழாத் தொங்குது?” 

“தலையெழுத்து, வரம் வாங்கி வந்திருக்கு.” 

“தலையெழுத்துன்னா?”

"நீ எனக்குப் பேத்தியா பொறக்கணும்னு தலையெழுத்து. உங்கம்மா எனக்கு பொண்ணாப் பொறக்கணும்னு தலையெழுத்து. நீயும் நானும் கைகோத்துக்கிட்டு இந்தப் படி ஏறனும்ணும்னு என் தலையெழுத்து. பாவம் பண்ணிவன்தான் கோர்ட்டுக்கு வருவான். சொத்து தகறாராம்... நம்ம வக்கீல் எதிர்க்கவே அண்ணனும் தம்பியும் அசிங்கமாகத் திட்டிக்கறாங்க. ‘என்னங்க, பெரிய சொத்தா?’ன்னு கேட்டேன் வக்கீல்கிட்ட. “கோயில் சொத்து இவன் தாத்தா காலத்துல திருடினது. இப்ப அதுக்கு அடிச்சுக்கறாங்க, ஏழு வருஷமா’ன்னாரு. ‘பொண்டாட்டி கழுத்துச் செயினை வித்து ஃபீஸ் கொடுத்துருக்கான். தாத்தா பண்ண பாவம், பேரனைச் சாகடிக்குது பார்த்தீங்களா’ன்னாரு வக்கீல். பகீர்னுடுச்சு. வந்துட்டேன்.”

ஹைகோர்ட் பின்பக்கம் போய் நீலப்பூக்கள் பூத்திருந்த மரங்களைத் தாண்டி, இடப்பக்க வளைவில் நுழைந்து, மரப்படி ஏறினார்கள். வராந்தாவெல்லாம் ஆட்கள் உட்கார்ந்திருக்க, மெல்லக் கடந்து உள்ளே போய் மரபெஞ்சில் குழந்தைகளோடு பானுமதி உட்கார்ந்தாள்.

நடுவே லாட வடிவ மரமேஜை போடப்பட்டிருந்தது. மேஜையைச் சுற்றி உள்ள நாற்காலியில் சில வக்கீல்கள் உட்கார்ந்திருந்தனர். லாட முடிவில் இடைவெளிவிட்டு மேஜை, நாற்காலி. அதில் பருமனாய் ஒரு ஸ்டெனோகிராஃபர் உட்கார்ந்து டைப் அடித்துக் கொண்டிருந்தார். போனமுறை அறிமுகம் ஆனவர்தான். சேகரோ என்னவோ பெயர்.

வந்துட்டீங்களா என்பதுபோல் பார்த்தார். பானுமதி எழுந்து அருகே போய்க் கரம் குவித்தாள். அவரும் வணக்கம் சொன்னார்.

"அவரும் வந்துட்டாரும்மா. இப்பத்தான் பத்து நிமிஷம் முன்னாடி அவங்க வக்கீல் குமாஸ்தா வந்து சொல்லிட்டுப் போனாரு.”

"இன்னிக்கு தீர்ப்பாயிடுங்களா?”

"ஆயிடலாம். அதிகம் பேசாதீங்க. என் முடிவுல உறுதியா இருக்கேன்னு மட்டும் சொல்லுங்க. முதல் கேஸே உங்களோடதுதான் இருக்கும்.”

"எப்பங்க முடியும்?”

"கேஸ் காலிங் முடியப் பன்னிரண்டாயிடும். பிறகு உங்களதுதான்.”

"நிறையக் கூட்டம் இருக்கே!”

"செங்கல்பட்டு கேஸு, சைதாப்பேட்டை கேஸு அத்தனையும் ஒரு ஜட்ஜ்கிட்ட தள்ளி விட்டுட்டாங்களே… ஒரு நாளைப் போல ஏழு மணி ஆவுதும்மா போக. நீங்க போய் உட்காருங்க. ஜட்ஜ் சேம்பருக்கு வந்துட்டாரு.”

கோர்ட் பரபரத்தது. உள்ளே இடம் தேடிப் பலர் அலைய, பானுமதி தன் சீட்டில் உட்கார்ந்துகொண்டாள். அருகே அந்தப் பூக்காரப் பெண் தலையில் கட்டுடன் சோர்வாய் உட்கார்ந்திருந்தாள். போன முறை இன்கேமிராவில், அதாவது ஜட்ஜ் சேம்பரில் இவள் அழுது புலம்பியது வாசல் வரைக்கும் கேட்டது.

"ஏம்மா, போன தடவை நல்லா இருந்தீங்களே… இப்ப என்ன தலையில?”

" கோர்ட்லயாடி அழுவறேன்னு எங்கம்மா வூட்டுக்கு வந்து அடிச்சுட்டுப் போறான்மா பாவி. இன்னிக்கு இங்கினியே சொல்லிக் கத்திடப் போறேன். பேமானி... வரலை இதுவரைக்கும். பயந்துட்டான். பொட்டை” பல்லைக் கடித்தாள். பானுமதிக்கு அவளை அணைத்துச் சமாதானப்படுத்தத் தோன்றியது. பெண் கொடுமைக்கு மட்டும் ஜாதி பேதமோ, வர்க்க பேதமோ இல்லை என்று தோன்றியது.

" பூ வியாபாரம்தானே உனக்கு... வக்கீலுக்கு எப்படிப் பணம் கொடுக்கறே?”

" நான் எங்கேர்ந்து தர்றது, எங்க பேட்டைல ஒரு லேடீஸ் சங்கம் வச்சுருக்காங்க. அவங்கதான் கேஸ் நடத்தறாங்க. அதோ அந்தம்மாதான் நடத்துறாங்க. மகராசி நல்லா இருக்கணும்.”

பானுமதி வக்கீல் விரைந்து வந்தார். அவளைத் தேடினார். பானுமதி எழுந்திருக்க உள்ளே நுழைந்தார்.

" நான் இங்க வர கோர்ட் பர்மிஷன் வாங்கணும். எனக்குப் பர்மிஷன் இல்லை. நத்திங் டு வொரி. நான் சேகர்கிட்ட சொல்லிட்டுப் போறேன். மறுபடி கேட்பாரு ஜட்ஜ், உங்க நிலைமைல ஏதாவது மாற்றம் உண்டான்னு. இல்லைன்னு சொல்லிடுங்க. அதிகம் பேச வேண்டாம். ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தைல பதில் சொல்லுங்க மரியாதையா. இந்த ஜட்ஜ் சோமசுந்தரம் அதிகம் பேசினா கோபப்படுவாரு. அமைதியாப் பதில் சொல்லுங்க.”

" உடனே தீர்ப்பாயிடுமா?” 

" பத்து நிமிஷத்துல முடிஞ்சுடும். நான் வாசல்லயே இருக்கேன்.”

" அவரைப் பார்த்தீங்களா?”

" பெரிய படையோட வந்திருக்காரு. என்னவோ அரசியல்வாதி மாதிரி ஏக பந்தா. கேஸ் கால் ஆனதும் நீங்களும் வந்துடலாம். காஃபி சாப்பிட்டு மறுபடி உள்ளே பன்னிரண்டு மணிக்கு வரலாம்.”

ஜட்ஜ் நுழைய, வக்கீல் வெளியேறினார். கூட்டம் எழுந்து நின்றது. கேஸ் நம்பர் சொல்லி ஆட்கள் பெயர் சொல்லிக் கூப்பிட்டார்கள். இவள் பெயர் சொல்லப்பட்டது. எழுந்து நின்று நீதிபதிக்கு வணக்கம் சொன்னாள். நீதிபதி அவளை நிமிர்ந்து பார்த்தார். சாந்தமான நீள் வட்ட முகம். நரை விழுந்த மெல்லிய கேசம். வில்லென வளைந்த மேல் உதடு. கண்களில் ஒரு நிரந்தரப் பரிவு. 

அப்பா சொன்னார், "உன் புருஷனுக்கு மேல் உதடு மெல்லிசு. கோடு போட்டாப்பல இருக்கும். நரி புத்தின்னு அதை வச்சே சொல்லிடலாம். யாரை வேணா நம்பலாம். மெல்லிசு உதடுக்காரங்களை நம்பவே கூடாது.”

"ஆனால் ஜட்ஜ் ஏன் கோபக்காரர்ங்கறாங்க?” மேற்கொண்டு கேஸ் நம்பர் கூப்பிடக் குழந்தையுடன் வெளியே வந்தாள்.

கீழே எட்டிப் பார்க்க, சாம்பல் நிற அம்பாஸிடர் தெரிந்தது. அவள் பல தடவை பயணம் செய்த கார். இப்போது குரோட்டன்ஸ் செடி ஒன்றை பானெட்டில் பொருத்தியிருக்கிறார்கள். அதை உறை வைத்து மூடியிருக்கிறார்கள்.

*****
“கொடி வச்ச கார்ல வந்தா நான் பயந்துடுவேன்னு நினைக்கிறாயா?” யாரோ மந்திரி காரில் வந்து இறங்கிப் பயமுறுத்தியபோது, அப்பா எழுந்து நின்று அதட்டினார்.

" இனி பேச்சு கோர்ட்லதான் போடா.”

"சட்டப்படி அவள் என் மனைவி." அது உறுமிற்று.

"அதைத்தான் சட்டம் வச்சு அறுத்து எறியப் போறோம் போடா.” 

" மரியாதை கொடுத்து மரியாதை வாங்கும்.”

" பொண்டாட்டியைச் செருப்பால் அடிக்கிறவனுக்கு என்னடா மரியாதை? உதடு கிழிஞ்சு போய் இன்னிவரைக்கும் பேச முடியலைடா என் குழந்தைக்கு.”

" உம்ம பொண்ணு பொண்ணா இல்லை” அது கத்திற்று.

" போடா நாயே... நீ ஆம்பளை இல்லைடா நாயே...”

" ஏய்...” யாரோ துணைக்கு வந்த ஜால்ரா கத்த, அப்பா அரிவாள் எடுத்துக்கொண்டு நின்றார்.

கூட்டம் கலைந்து போயிற்று. இப்போது மந்திரிக் கொடி வீட்டுக்கு வந்துவிட்டது போலிருக்கிறது. மரத்து நிழலில் வெள்ளை வேட்டி கறுப்புக் கரையோடு தெரிந்தது. கூட சில வெள்ளை வேட்டிகள் நின்றிருந்தன.

பானுமதி படியிறங்கி எதிர்ப்புறம் போய்க் குழந்தைகளுக்குக் குளிர்பானம் வாங்கித் தந்தாள். அப்பாவும், தம்பியும், அவளும் காஃபி சாப்பிட்டார்கள். பன்னிரண்டே காலுக்கு காலிங் முடிய, உள்ளே போய் உட்கார்ந்தார்கள். பாதிக் கூட்டம் குறைந்துவிட்டது. அந்தத் தலைக்கட்டுப் பூக்காரியைக் காணோம். புருஷன் கோர்ட்டுக்கு வராது வாய்தா வாங்கிவிட்டான் போலிருக்கிறது. உட்கார்ந்த நேரம் வீண். பாவம்.

நீதிபதி உள்ளே போய்விட்டார். அரை மணியில் வருவார் என்று ஸ்டெனோகிராஃபர் சொல்ல, பானுமதி காத்திருந்தாள். நீதிபதி சரியாய் அரை மணியில் உள்ளே வர,

“கதிரேசன், பானுமதி... கதிரேசன், பானுமதி... கதிரேசன், பானுமதி” கூப்பிட்டார்கள். அது உள்ளே நுழைந்து மேடையில் பார்த்துக் கைகூப்பிற்று.

“வந்து பொட்டில நில்லுங்க கதிரேசன்.”

அது ஏறி மறுபடி வணங்கிற்று.

“நான் சொல்லுவதெல்லாம் சத்தியம்” என்றது.

" என்னங்க கதிரேசன் யோசிச்சீங்களா... நீங்க வெறும் கதிரேசன் இல்லை, டாக்டர் கதிரேசன். தமிழ் எம்ஏ, பிஎச்டி. ஒரு கல்லூரியில் தமிழ்ப் பிரிவுத் தலைவர். சொல்லுங்கள். இந்த விவாகரத்து தேவைதானா? பத்து நாள் டைம் கொடுத்தேன், யோசிச்சீங்களா? மறுபடி சேர்ந்து வாழ விருப்பமா?”

“இல்லை ஐயா.” 

"ஏன்?”

“வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி 
தொகுத் தார்க்கும் துய்த்தல் அரிது.” 

தோளை ஆட்டிக்கொண்டு திருக்குறள் சொல்லிற்று.

" என்ன சொல்றீங்க?” நீதிபதி முகத்தில் சட்டென்று கோபம் ஏறிற்று.

“ஊழ்வினை ஐயா, ஊழ்வினை. கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர வேண்டும் என்கிற ஊழ்வினை இருந்தால் ஒழிய அவற்றை நுகர முடியாது. இவளைப் பொறுத்தவரை என் ஊழ்வினை முடிந்துவிட்டது.”

குறள் சொல்லி அர்த்தம் சொன்னது கோபமாக்கிற்றா, இல்லை கேள்விக்கு நேரடியாய் பதில் சொல்லாத அதிகபிரசங்கித்தனம் கோபமாக்கிற்றா, புரியவில்லை.

“டாக்டர் கதிரேசன்...” நீதிபதி சோமசுந்தரம் குரல் உயர்த்தினார்.

“உங்களுக்கு நான் ஒரு திருக்குறள் சொல்லட்டுமா?
ஒத்ததறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.”

செத்தாருள் என்கிற வாசகம் கன்னத்தில் அடித்தது போல் சொல்லப்பட்டது.

“உங்களுக்கு அர்த்தம் தெரியும்னு நினைக்கிறேன். ஒருத்தரை புரிஞ்சுக்கிட்டுப் போற்றி, பிறருக்கு உதவியாக வாழ்பவனே உயிர் வாழ்கிறவன். மற்றவர்கள் அப்படி வாழாதவர்கள்; செத்துப் போனவர்கள்.” கோர்ட் சலசலத்தது.

“வாங்கம்மா.” கூண்டில் ஏறினாள் பானுமதி. சத்தியம் செய்தாள்.

“யோசிச்சீங்களா? நீங்க கெமிஸ்டரி டீச்சர். எம்எஸ்ஸி படிச்சவங்க. மக்களுக்கு நல்ல ஒரு முன்மாதிரியா டீச்சர் இருக்க வேண்டாமா, மறுபடி சேர்ந்து வாழ விருப்பமா?” 

“இல்லை ஐயா.” 

“ஏன்?”

“என் கணவரோடு அனுசரித்துச் சேர்ந்து வாழும் மனநிலை எனக்கில்லை. என் முடிவில் உறுதியாய் நான் இருக்கிறேன்.”

கோர்ட் அமைதியாயிற்று.

“திரு. கதிரேசன், திருமதி பானுமதி இருவரும் சேர்ந்து ஜூலை பதினான்காம் தேதி ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்து மூன்றாம் ஆண்டு செய்துகொண்ட திருமண ஒப்பந்தம், செக்ஷன் பதின்மூன்று பிரிவின் கீழ் பரஸ்பர சம்மதத்தின்படி இந்த கோர்ட்டால் விலக்கப்பட்டது. விவாகரத்து தரப்படுகிறது.” நீதிபதி உரக்கப் படித்து மேஜையிலுள்ள பேப்பரில் கையெழுத்திட்டார்.

- தொடரும்


விவாதங்கள் (17)