அத்தியாயம் 1

கிளைமேட் அவ்வளவு ரம்மியமாக இருந்தது. காலையில் கிழக்கில் ஆரஞ்சுப் பழமாய் மேலெழுந்து வந்த சூரியனை இப்போது காணவே காணோம். அலுவலக அறையின் கண்ணாடி ஜன்னலைப் போர்த்தியிருந்த உயர்ரகத் திரைச்சீலைகள் விலகி, வெளி உலகின் முகத்தைக் காட்டியபோது கலாதர் எழுந்து சென்று முற்றிலுமாக ஒதுக்கிவிட்டான். சாம்பல் நிற மேகங்கள் மீட்டிங் போட, நாலாபக்கமிருந்தும் திரண்டு வந்த அழகைக் கவிதையில் வடிக்க, புதியதாய் சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டும். எதைக் கண்டு பயந்தோ, காகங்கள் இங்குமங்கும் பறந்தோடின. திடீரென முளைத்த தும்பிகளின் படை உற்சாகமாய் ஆட்டம் போட்டன.

ஆனால், வேடிக்கை பார்த்தானேயொழிய, ரசனையில் ஈடுபடவில்லை மனம். ரிசப்ஷனில் தொடர்பு கொண்டு, “நான் கூறும் வரை யாரும் என் அறைக்கு வரக் கூடாது” என்று கூறிவிட்டு, உயர்ரக சிகரெட்டை உதட்டுக்குக் கொடுத்தான். துப்பாக்கி வடிவ லைட்டரில் அதன் முனையைச் சிவப்பாக்கிய கலாதர், பெண்களை எளிதில் வசப்படுத்திவிடும் வசீகரனாய் இருந்தான். லேசாய்க் கறுப்போடிய குவிந்த சதைப்பிடிப்பான உதடுகள், ஆழத் துளையிடும் கண்கள், சிவந்த நிறத்தில் ஆறடி உயரத்தில் ரேமண்ட் கம்பெனி மாடல்போல் நின்றிருந்த கம்பீரத்தில் மயங்கி, திரைச்சீலை அவனை உரசிச் சென்றது.

தென்மேற்கு வானில் சாம்பல் நிறப் பறவையொன்று நிதானமாய் வட்டமடித்துக் கொண்டிருந்ததைக் கண்ணுற்றபோது, தன்னைப் பற்றிய நினைப்புதான் எழுந்தது. புகையைக் குவித்து வெளியிட்டான். வெளிக்காற்று உட்புகுந்து புகை மறுபடி அவன் முகத்திலடித்தது. அதை மீறிய மண்வாசனை! சற்று தூரத்தில் எங்கோ நல்ல மழை பெய்கிறது போலும். சிகரெட்டைப் பாதியில் அணைத்து ஆஷ்ட்ரேயில் போட்டான். ஜன்னலை மூட மனமின்றி, ஏசியைப் போட மனமின்றி, அப்படியே தன் சுழல் நாற்காலியில் சரிந்தான்.

பசித்தது. இன்னும் சற்று நேரத்தில் வீட்டிலிருந்து மதிய உணவு வந்துவிடும். எப்போதாவதுதான் இப்படிப் பெரும்பாலும் வீட்டிற்குச் சென்றோ, அல்லது வியாபார நிமித்தமாய் மீட்டிங் நடக்கும் ஹோட்டலிலோதான் சாப்பிடுவான். இன்றைக்கு ப்ரீதான். ஆனாலும் வீட்டிற்குச் செல்லப் பிடிக்கவில்லை. என்னவோ தெரியவில்லை, காலையிலிருந்தே மனசு ஒருமாதிரி அரித்துக் கொண்டிருந்தது. அவனுக்குப் பிடித்த மாதிரி உணவு சாப்பிட்டுக்கூட வருடக்கணக்கில் ஆகிவிட்டது. ஹோட்டலில் கிடைப்பதும், வீட்டில் சமையல்காரன் சமைப்பதும் ஒன்றுதான். ஆனால், பாரம்பரிய வீட்டு சாப்பாடு என்பது அவனுக்கு சொந்தமானவர்களால் மட்டுமே தரக்கூடியது.

அவன் தாய் சொர்ணம் காரைக்குடியில் இருக்கிறாள். கலாதர் திருமணமாகி, அப்பா என்கிற அந்தஸ்தும் பெற்றவன். கோடிக்கணக்கான சொத்துகளுக்கு அதிபதி. அது போதாதென்று சுயமாய் சம்பாதித்த கோடிகள் வேறு. நகரின் பிரதான இடத்தில் சொந்தமான ஹைடெக் கட்டடம். வணிக வளாகங்கள், அலுவலகங்கள் என வாடகைக்கு விட்டது போக நான்காவது மாடியில் இவனுடைய சொந்த அலுவலகம் இயங்கி வருகிறது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போனின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழில். அலுவலகம் இங்கே என்றாலும், தொழிற்சாலை ஸ்ரீபெரும்புதூரில் இருந்தது. அள்ள அள்ளக் குறையாத பணம். ஆனால், அவன் ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியவில்லை. 

கதவு தட்டப்படும் சப்தம்! முணுக்கெனக் கோபம் வந்தது கலாதருக்கு. 

‘என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் அவள். யாரையும் என் ரூமுக்கு அனுப்பக் கூடாது என்று சொல்லியும் என்ன தைரியமிருந்தால் அனுப்பி இருப்பாள். இன்றைக்கே அவளை வேலையை விட்டுத் தூக்க வேண்டும். என் பேச்சிற்குக் கட்டுப்படாத யாரும் எனக்குத் தேவையில்லை.’ 

“யெஸ்” என்றான், சற்று காட்டமாகவே! 

“கூல் மச்சான் கூல்...” என்றபடி உள்ளே வந்தான் ராஜீவ். 

அவனைப் பார்த்ததும் ஏறிக் கொண்டிருந்த பிரஷர் சரேலென இறங்கியது.

“வாடா...” நன்றாக சாய்ந்தமர்ந்து மூச்சை இழுத்துவிட்டபடி சிரித்தான்.

“என்னடா, ரொம்ப டென்ஷனா இருந்தியா?”

“உனக்கெப்படி?” 

“யெஸ்ங்கற வார்த்தையிலே அவ்வளவு உஷ்ணம். ரிசப்ஷன்ல சொல்லி இருந்தியாம், யாரையும் அனுப்பாதேன்னு. ஆனா, இந்த ராஜீவுக்கு எந்தத் தடை உத்தரவும் செல்லாதே! உன்னைக் கேட்காமல், உன் மனசுக்குள் நுழைந்து ஆராய்கிற உரிமை எனக்கு மட்டும்தானே இருக்கிறது.” 

“உண்மைதான்!” 

“ஸ்மோக் பண்ணியா? ஜன்னலைத் திறந்து வச்சிருக்கே?” 

“ம்...” 

“ஏன் டல்லாயிருக்கே?” 

“தெரியலே. மனசுக்குள்ளே ஏதோ ஒரு சங்கடம். காரணம் என்னன்னு எனக்கே தெரியலே!”

“சரி, அதை விடு! ஈவ்னிங் கிளப்புக்குப் போகலாமா? ஒரு புது பிஸினஸ் சொன்னேனே. அந்த பார்ட்னர் கொல்கட்டாவுலேர்ந்து வந்திருக்கார். வரச் சொல்லிட்டேன்.”

“ஈவ்னிங் எந்த கமிட்மெண்ட்ஸும் இல்லதான். பட், என்னமோ தெரியலே. மனசுக்குள்ளே ஒரு டிஸ்டர்பன்ஸ். பிஸினஸ் பேசற மூடு இல்லே ராஜீவ்!” 

“இட்ஸ் ஓக்கே! பிஸினஸ் வேண்டாம். அவரை இன்னொருநாள் வரச் சொல்லிடறேன். சும்மா ஒரு ஸ்மால் பெக் போடலாம். ப்ரீயாய்டுவே...”

“யூ ஆர் கரெக்ட். பட், அதுக்கும் மூடு இல்லே.”

“என்னாச்சு உனக்கு? சாந்தினி பத்தி ஏதாவது தகவல் கேள்விப்பட்டியா?”

“அந்த ஏழரையைப் பத்தி நான் மறந்து ரொம்ப நாளாச்சு. அவளெல்லாம் ஒரு பிரச்சினையா நினைக்கிற அளவுக்கு மனுஷ ஜென்மமா அது?” 

“தட்ஸ் குட்! சாப்ட்டியா?” 

“ம்ஹூம்...”

“ஹோட்டலுக்குப் போகலாமா?” 

“வீட்லேர்ந்து வருது!” 

“எனக்கும் சேர்த்து எடுத்துட்டு வரச் சொல்லு!”

“நீயே போன் பண்ணிச் சொல்லிடேன்” அலறிய செல்போனை எடுத்து காதிற்குக் கொடுத்தான் கலாதர். 

போன் ஊட்டியிலிருந்து! 

“யெஸ் மதர். ஹவ் ஆர் யூ?”

“………”

“வாட்? எப்போ?”

“………”

“மைகாட். ஹவ் இஸ் ஷி?” 

“………” 

“யெஸ் மதர். இதோ இப்பவே கிளம்பறேன்!” முகம் அவ்வளவு பதற்றத்தை அப்பியிருந்தது. அவனையே கவனித்துக் கொண்டிருந்த ராஜீவுக்கும் பதற்றம் தொற்றிக் கொண்டது. 

“என்னாச்சு மச்சான்?”

“மவுனிக்கு உடம்பு சரியில்லையாம். ரெண்டு முறை பிட்ஸ் வந்திருக்கு. உடனே வந்து கூட்டிட்டுப் போகச் சொன்னாங்க!”

“கிளம்பு. நானும் வர்றேன். என் ஸ்கோடாவிலேயே போய்டலாம்!”

“அவ்வளவு பொறுமை எனக்கில்லை ராஜீவ். கோயம்புத்தூருக்கு அடுத்த பிளைட் எப்பன்னு விசாரியேன்!” பயத்தில் கைகள் நடுங்கின.

*****

விமானம் பெரிய சைஸ் பருந்தாய் பறந்துகொண்டிருந்தது. கலாதரின் மூடிய இமைகள் நனைந்திருந்தன. ராஜீவ் அவன் கரத்தைத் தன் கரத்தால் அணைத்து, “தைரியமா இருடா! எல்லாமே சரி பண்ணக்கூடிய பிரச்சினைதான்! முதல்ல அவளை இங்கே கூட்டிட்டு வருவோம்.”

“ம்...” மெல்லத் தலையாட்டினான்.

*****

னி படர்ந்த மலையைத் தழுவியபடி நகர்ந்தது, மங்கிய புகை மேகம். பார்ப்பதற்கு நிலவில் தெரியும் மலைகளையும் பள்ளத்தாக்கையும் நினைவுபடுத்தியது. கோயம்புத்தூரில் இருந்த நண்பரின் காரில் பயணப்பட்டுக் கொண்டிருந்த கலாதருக்கு மனசு எங்குமே தாவவில்லை. புகைக்க நினைத்த எண்ணத்தை நண்பன் முகம் பார்த்து ஒதுக்கினான். மழைக்காலத்தில், சுத்தமாய் குளித்த பசுமையைப் பார்க்கக் கண்கோடி வேண்டும். குளிர் எலும்பைச் சீண்டிப் பார்த்தது, வளைவு நெளிவுகளில் கேரட்டும் முட்டைக்கோஸும் பார்க்க ரம்மியமாய் இருந்தன.

கார் வேகமாய் ஏஞ்சல் கான்வென்ட்டை நோக்கிச் சென்றது. அருமையான லொகேஷனில், பாதுகாப்பாய் நிறுவப்பட்டிருந்த கான்வென்ட்! பணக்காரர்களால் மட்டுமே அந்தப் பள்ளியில் நுழைய முடியும். கலாதர் தன் ஏழு வயது மகளை அங்கேதான் சேர்த்திருந்தான். அடுத்த சில நிமிடங்களில் பிரின்ஸிபல் அறையில் இருந்தான்.

மதர் வெரோனிகா முகத்தில் அத்தனை கனிவு!

“ஸீ மிஸ்டர் கலாதர். மவுனிகா இங்கே பெஸ்ட் ஸ்டூடண்ட். அவளை உங்ககூட அனுப்பவே மனசு வரலே. பட், அவளோட மனசை நீங்களோ நாங்களோ சரியாப் புரிஞ்சுக்கலேன்னுதான் நினைக்கிறேன். அவ மனசோட பாதிப்புதான் உடம்பைச் சிதைக்குது. இப்போதைக்கு அவளுக்குத் தேவை நல்ல கான்வென்ட்டோ, நல்ல எஜூகேஷனோ இல்லை. அவளுக்குத் தாயோட அரவணைப்பு முக்கியம். அவளோட மதர் கனடாவுல இருக்கறதாச் சொன்னீங்க இல்லையா? உடனடியா அவங்களை வரவழைங்க!”

தலையாட்டிய கலாதர் யோசனையுடன், “யெஸ். ஷ்யூர் மதர்!” என்றான். வெகுவாய் துவண்டு போயிருந்த மகளுடன் சென்னையை நோக்கிப் பயணித்தான்.

*****

ண்டபம் மிகப் பெரியது. வசதியானவர்களால் மட்டுமே அந்த மண்டபத்தில் திருமணம் நடத்த முடியும். ஒரு நாள் வாடகையே ஒரு லட்சம்! முழுக்க ஏ.ஸி. இன்டீரியர் டெகரேஷன் முழுக்க அன்று மலர்ந்த பூக்களால் செய்யப்பட்டிருந்தது. ஆடம்பரத்துக்காக பெங்களூர், தோவாலை, கொடைக்கானலிலிருந்து பூக்கள் தருவிக்கப்பட்டிருந்தன. கல்யாண மேடை முழுக்க இள ரோஸ் நிறப் பூக்களால் வடிவமைக்கப்பட்டிருக்க, மணமக்கள் டார்க் ரோஸ் நிறத்தில் உடையணிந்திருந்தனர். பவித்ராவின் கழுத்தில் மாதேஷ் தாலி கட்ட, அரிசிமணிகளும் பூக்களும் மேடைநோக்கிப் பாய, கொட்டுமேளத்தின் அதிரடியான சப்தம் உடம்பைச் சிலிர்க்க வைத்து, கண்களோரம் ஈரத்தை உண்டாக்கியது ஆராதனாவிற்கு. மேடையில் வீற்றிருந்த பவித்ராவின் பெற்றோரும் உடன்பிறந்தோரும் சொல்லி வைத்தாற்போல் கண்களைத் துடைத்துக் கொள்ள, அதைப் பார்த்த ஆராதனாவிற்கு ஏக்கம் மனத்தைப் பிசைந்தது.

‘இப்படிப்பட்ட உறவுகள் எனக்கும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாய் இருந்திருக்கும்?’

“ப்ரெஸென்டேஷனைக் குடுத்துட்டு, சாப்பிட்டுக் கிளம்பலாமா? ஆபீஸுக்கு ஒன் அவர்தான் பர்மிஷன் போட்டு வந்திருக்கோம்” என்றாள் ஆனந்தி.

இருவரும் பவித்ராவுடன் ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்கள்.

“இப்பத்தானே வந்தோம்? பத்து நிமிஷம் ஆகட்டும்!”

“அம்மாடி, அந்தக் கிழவன்கிட்ட என்னால மல்லுக்கட்ட முடியாது. அதுவும் இன்னைக்கு இந்தப் பட்டுச்சேலையில அமர்க்களமா வேற இருக்கே. பேசியே சாகடிச்சிடுவான், அந்த பனங்கொட்டைத் தலையன். பார்த்துக்க!” எச்சரிப்பதுபோல் சொன்னாள்.

அதற்கு மேல் அங்கு அமர்ந்திருக்க முடியவில்லை. பரிசுப் பார்சலுடன் ஆனந்தியின் பின்னே மேடை நோக்கிச் சென்ற ஆராதனாவை ஏகப்பட்ட கண்கள் ஆச்சரியத்துடன் நோக்கின. அதில் பெண்களும் அடக்கம் என்பது மேலும் ஆச்சரியம். மெல்லிய பச்சை சரிகை பார்டரிட்ட சந்தன நிறப் பட்டுப்புடவை, பச்சை ரவிக்கையில், முல்லைப் பூக்களைக் குழைத்துச் செய்த பெரிய முல்லைப்பூவைப் போல், கண்களுக்கு இதமாய் நேர்த்தியாய் இருந்தாள். தலையில் கொஞ்சமாய் மல்லிகைச்சரம். விரிந்து பரந்திருந்த கூந்தலின் மேல் அதைச் சூடியிருந்த அழகு, பட்டும் படாமல் ஐலைனர், மஸ்காரா, இளரோஸ் நிற லிப்ஸ்டிக், கழுத்தில் மெல்லிய செயின், வாட்ச் இவ்வளவுதான்! ஆனால், அதற்கே கண்கள் மொய்த்தன. 

“யார்டா இது சிநேகா மாதிரி? சூப்பரா இருக்காடா!” 

“மாதேஷ் வொய்ப்போட ப்ரண்டுபோல...”

“வொர்க் பண்றாளா? போன் நம்பர் ட்ரை பண்ணலாமா?” 

“அவசரப்படாதே, மாதேஷ் கோச்சுக்கப் போறான்.”

மாப்பிள்ளையின் தோழர்களுக்கு இருப்பு கொள்ளவில்லை.

*****

ம்ப்யூட்டர் முன் அமர்ந்திருந்த ஆராதனாவை இண்டர்காம் அழைத்தது. அது அலறும்போதே புரிந்தது, எம்.டி.யிடமிருந்து என்று. அலுப்புடன் எடுத்து, “ஹலோ!’ என்றாள். 

“உள்ளே வா!” 

“ஓகே சார்!”

‘போச்சு. கேமரா வழியே பார்த்திருப்பான். வழியப் போறான்!’

அவள் எண்ணியபடியேதான் நடந்தது. சீட்டில் அமர்ந்திருந்த அறுபத்தி ஆறு வயது பரந்தாமன் யாரிடமோ செல்போனில் பேசியபடி, ஆராதனாவின் குட்மார்னிங்கைத் தலையசைப்பின் மூலம் பெற்று கேஷுவலாய்ப் பேசியபடி எழுந்து, நடந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து கண்களால் மேய்ந்தான். ஆராதனாவுக்கு எளிதில் புரிந்துபோனது. அந்தாள் யாரிடமும் பேசவில்லை, சீன் காட்டுகிறான் என்று.

“யா... யா... ம்... ஓ!” 

அவன் உடல் கேஷுவலாய் அவள் தோளை உரசியது. பற்களைக் கடித்தபடி சகித்துக் கொண்டாள். ஒருவழியாய் அவளைச் சுற்றி முடித்து அமர்ந்தபோது கண்களில் கயமைத்தனம் வழிந்தது.

“தாங்க்யூ சார்!”

அலுவலக விஷயமாய் இரண்டு வார்த்தை பேசிய பின், “என்ன ஆரா? இன்னைக்கு அமர்க்களப்படுத்தறே? டுடே யூ ஆர் லுக்கிங் வெரி பியூட்டி. பட்டுச்சேலையில பதுமை மாதிரி இருக்கே! என்ன விசேஷம்? பர்த்டேவா?”

‘ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறான். ஆபீஸ்ல பாதிப் பேர் இன்னைக்கு பவித்ரா கல்யாணத்துக்குத்தானே போனாங்க. இந்தாளும் தன் சார்பா மேனேஜர்கிட்ட கிப்ட் குடுத்தனுப்பினானே!’

பரந்தாமன் எப்போதும் இப்படித்தான். சரியான ஜொள்ளு பார்ட்டி. அதுவும் ஆராதனா என்றால் இரண்டு லிட்டர் கூடுதலாகவே வழிவான். எல்லாம் பாழாய்ப் போன இந்த வயிற்றுக்காக சகித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கிறது.

“இல்லே சார். இன்னைக்கு பவித்ராவுக்கு மேரேஜ். அங்கே போய்ட்டு...”

“ஓ... மறந்தே போய்ட்டேன். எனிவே, எப்பவும் உன்னை சல்வார், சுரிதார்னு பார்த்துட்டு, இப்படிப் பார்க்கறப்ப சாரல் மழையில நனையற மாதிரி இருக்கு.” கூசாமல் பேசினான். 

நெளிந்தாள் ஆராதனா. அவள் வயதில் இந்த வழுக்கை மண்டைக்கு ஒரு பெண்பிள்ளையும், அதைவிட இரண்டு வயதில் மூத்த ஓர் ஆண்பிள்ளையும் உண்டு. 

“ஸீ... ஆரா...”

அவன் அவள் பெயரைச் செல்லமாய்ச் சுருக்கிச் சொல்லும்போது, ஆசையாய்ப் பெயர் வைத்த பெற்றவர்களை நினைத்து கோபம் வந்தது. பெயரை மாற்றிவிடலாமா என்ற வெறியும் எழுந்தது. 

“யெஸ் சார்!”

“கோகுல் ரெண்டு வாரத்துல இங்கேர்ந்து ரிலீவ் ஆகறார். ரெஸிக்னேஷன் லெட்டரும் குடுத்துட்டார்!”

“………”

கோகுல், அந்த அலுவலகத்தில் ஆறு வருடமாய் வேலை பார்த்த எம்.டி.யின் பர்ஸனல் செக்ரட்டரி. முப்பத்தி ஐந்து வயது திறமைசாலி. இப்போது வேறொரு கம்பெனியில் இதைவிட அதிக சம்பளத்தில் வேலை கிடைத்திருப்பதால், இந்த வேலையை ராஜினாமா செய்யப் போவதாக அவளும் கேள்விப்பட்டாள்.

“கோகுல் போறது உண்மையிலேயே எனக்குக் கஷ்டம்தான். டேலன்ட்டான பர்ஸன். நான் நினைக்க ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே செஞ்சு முடிக்கிற ஆள். இன்டோர் பிஸினஸ் மீட்டிங்கா இருக்கட்டும், அவுட்டோர் பிஸினஸ் மீட்டிங்கா இருக்கட்டும், என் கூடவே இருந்து எனக்கு டென்ஷன் தராத அளவுக்குப் பக்காவா ஏற்பாடு பண்ணுவார். இப்ப எனக்கு அவசரமா ஒரு பர்சனல் பி.ஏ. தேவைப்படுது.” சொல்லிவிட்டு அவளைப் பார்த்து மந்தகாசமாய் ஒரு சிரிப்பை உதிர்க்க... இம்சையாய் இருந்தது ஆராதனாவிற்கு.

“அதனால, உன்னை அந்த போஸ்டிங்ல போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்!”

அவ்வளவுதான்! சீலிங்கில் வேகமாய் சுழன்று கொண்டிருந்த ஃபேன், அதைவிட வேகமாய் அவள் தலையில் விழுந்து கூந்தலைக் கொத்தாகச் சுருட்டி அடித்தது போன்ற பேரதிர்ச்சி!

‘ஐயோ’ என அலறியது, சகலமும்!

- தொடரும்


விவாதங்கள் (17)