அத்தியாயம் 1

ட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் பாடல்களும், வசனமும் எழுதி சமயா சமயங்களில் - மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னெவன்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடப் பெரியதாகத் தெரியலாம்; வெளிச்சம் குறைவாயிருக்கிற இடத்தில் பெரிய வாழ்வு கூட சிறிதாய் மங்கிப் போகலாம்.

"வெளிச்சம்தானா வாழ்வு?" என்று கேட்டு பயனில்லை. பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது மனிதனைச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சமே சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தை விடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.

மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் இருந்தேபாது அவனுடைய முழுப்பெயர் முத்துக்குமாரசாமிப் பாவலர். 'நாடக சபா' கலைக்கப்பட்டு பட்டினத்துக் கலையுலகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த ஆளாக நுழைந்தபோது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலவே பெயரும் சுருங்க வேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக வேண்டியிருந்தது.

'முத்துக்குமரன்' - என்ற பெயர் நாகரிகமாகேவ தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் 'அகடவிகட சக்ர சண்டப் பிரசண்ட ஆதிகேசவப் பாவலர்' - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டு கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டு பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடி பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன்.

மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியபோது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன.

அசௌகரியங்களாவன;

பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதமோ சிபாரிசுக் கடிதமோ இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கலையுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினரோ, அநுதாபியோ இல்லை.

சௌகரியங்களாவன :

ஆனால், முத்துக்குமரனுக்கோ மழையில் நனைந்த பட்டினம் மிக மிக அழகாகத் தெரிந்தது. நீராடி நனைந்த புடவையோடு நாணிக்கோணி தயங்கி நிற்கும் ஒரு சுந்தரியைப் போல், அன்று சென்னை அழகாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புகை போன்ற மேகமூட்டத்தில் கட்டிடங்களும் சாலைகளும் மரங்களும் மங்கலாகத் தெரிந்தன.

அதிகம் நனைந்து விடாமல் போய் சேர வசதியாக எழும்பூர் ரயில் நிலையத்துக்கு நேர் எதிரே இருந்த ஒரு லாட்ஜில் போய் இடம் பிடித்துத் தங்கினான் முத்துக்குமரன்.

முன்பு அவேனாடு நாடக சபாவில் ஸ்திரீ பார்ட் போட்ட பையன் ஒருவன் அப்போது சென்னையில் பெரிய நடிகனாக இருந்தான். கோபாலசாமி என்ற பெயருடைய அவனுக்கு இப்போது 'கோபால்' என்று பெயர் சுருங்கியிருந்தது. குளித்து உடை மாற்றிக்கொண்டு காபி குடித்த பின் கோபாலுக்கு ஃபோன் செய்ய எண்ணியிருந்தான் அவன்.

அந்த லாட்ஜில் எல்லா அறைகளிலும் டெலிபோன் கிடையாது. லாட்ஜ் ரிஸப்ஷனில் மட்டுமே ஃபோன் உண்டு. தன்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு அவன் ஃபோனுக்காக ரிஸப்ஷனுக்கு வந்தபோது மணி காலை பதினொன்றாகியிருந்தது.

டெலிபோன் டைரக்டரியில் எவ்வளேவா தேடியும் நடிகன் கோபாலின் நம்பர் கிடைக்கவில்லை. கடைசியில் வேறு வழியில்லாமல் போகேவ ரிஸப்ஷனில் உட்கார்ந்திருந்த ஆளிடம் கோபாலின் நம்பரைப் பற்றிக் கேட்டான் முத்துக்குமரன்.

அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு அவர் இங்கிலீஷில் பதில் கூறினார். சென்னையில் அவன் இந்தப் புதுமையைக் கண்டான். தமிழில் கேட்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்களும், ஆங்கிலத்தில் கேட்பவர்களுக்குத் தமிழில் மட்டுமே பதில் சொல்லத் தெரிந்தவர்களுமாகக் கிடைத்தார்கள். நடிகன் கோபாலின் நம்பர் டெலிபோன் டைரக்டரியில் 'லிஸ்ட்' செய்யப்பட்டிராது என்பது அவர் கூறிய பதிலிலிருந்து அவனுக்குத் தெரிந்தது.

சில வினாடிகளுக்குப் பின் டெலிபோன் மூலமே விசாரித்து அந்த நம்பரை அவனுக்குத் தெரிவித்தார் ரிஸப்ஷனில் இருந்தவர். சென்னைக்கு வந்தவுடன் ஒவ்வொரு வினாடியும் அந்த வினாடியின் நிலைமைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருப்பதை அவன் உடனடியாக உணர்ந்தான். வினாடிகளைத் தனக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிற பழக்கமான வாழ்விலிருந்து வினாடிகளுக்குத் தகுந்தாற்போல தானே மாற வேண்டிய வாழ்வுக்கு இறங்குவது சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அவன் யாருடைய ஃபோன் நம்பரை விசாரித்தானோ அந்தப் பெயரிலிருந்து பிறந்த மரியாதையும் பிரமிப்பும் உந்த, அவன் மேலும் சிறிது மரியாதையைச் செலுத்தினார் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.

ஃபோனில் நடிகன் கோபால் கிடைக்கவில்லை. அவன் ஏதோ ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருக்கிறானென்றும் பிற்பகல் மூன்று மணிக்கு விமானத்தில் திரும்புகிறான் என்றும் தெரிந்தது. இவன் பால்ய சிநேகிதத்தை எல்லாம் எதிர்ப்புறம் கேட்டவர் காது புளிக்க விவரித்த பின், "நாலரை மணிக்கு மேல் நேரில் வாருங்கள்! சந்திக்கலாம்" என்று வேண்டா வெறுப்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. அந்த வினாடியில் உடனே அந்தப் பதிலுக்குத் தகுந்த மாதிரி அவன் மாற வேண்டியிருந்தது. பதிலை மாற்ற அவனால் முடியாது; எங்கும் போகவும் வழியில்லை; மழை நிற்கும் என்றும் தோன்றவில்லை. பகல் சாப்பாட்டுக்குப் பின் நன்றாகத் தூங்க வேண்டுமென்று தோன்றியது. இரவு இரயில் பயணத்தில் இழந்த தூக்கத்தைப் பெற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புதிய ஊரில், புதிய கட்டிடத்தில், புதிய அறையில் உடனே தூக்கம் வருமா என்று தயக்கமாகவும் இருந்தது. பெட்டியைத் திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தான்.

இரண்டு நிகண்டு, ஓர் எதுகை அகராதி, நாலைந்து கவிதைப் புத்தகங்கள் இவைதான் அவனுடைய தொழிலுக்கு மூலதனம். 'க'கர எதுகை, 'த'கர வருக்க எதுகை, என்று பழுப்பேறிய பக்கங்கள் புரண்டன. திறந்திருந்த அறை வாசலில் எதிர்த்த அறையைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்படத் தயாராகும் ஓர் அழகிய யுவதியின் பின்புறத் தோற்றம் முத்துக்குமரனின் கண்களை வசீகரித்தது. அந்த இடையின் பொன் நிறம், முதுகின் வாளிப்பு, நீலப்புடவை எல்லாம் அழகு சூறையாயிருந்தன.

"மேகம் மருங்கணிந்து

மின்னல் வரக்கண்டேன்

யோகம் உருக்கனிந்து

யுவதி வரக் கண்டேன்"

என்று பாட்டு கட்ட வேண்டும் போலிருந்தது. நெடில் எதுகையில் யோகம் மேகம் ஆகிய சொற்களுக்குப் பின் என்ன வார்த்தைகள் இருக்கின்றன என்பதை அவன் கண்கள் புத்தகத்தில் துழாவின. நாடகக் கம்பெனியின் தேவைக்கு எந்த நிலையிலும் எந்த அவசரத்திலும் பாட்டு எழுதிப் பாட்டு எழுதி - எதற்கெடுத்தாலும் எதுகை நிகண்டைப் பார்க்கிற பழக்கம் வந்திருந்தது அவனுக்கு. எதுகைகள் கிடைத்தன. பாகம், வேகம், தோகை என்று முன் சொற்களுக்குப் பொருத்தமான எதுகைகள் கிடைத்தும் பாட்டை மேலே எழுதுவதில் மனம் செல்லவில்லை. தன் வாழ்க்கை நிலையும், தான் பட்டினத்திற்குப் பிழைப்புத் தேடி வந்திருக்கிற அவலமும் நடுவே நினைவு வரவே, பாட்டு எழுதுவதற்குரிய நிலைமைக்காக மனம் எவ்வளவு உயரம் மேலே போக வேண்டுமோ அவ்வளவு உயரம் மேலே போக மறுத்தது. ஆகவே பாட்டில் ஈடுபாடு குன்றியது.

அந்தப் பொன் மின்னும் இடையின் ஒருவரிச் சதை, வாளிப்பான முதுகு, கழுத்துக்குக் கீழே அரை வட்டமாகத் தெரிந்த பொற்குவடுகளின் செழிப்பு, எல்லாம் அவன் மனதுக்கு உணவாயிருந்தன. இடையே இன்னொரு சிந்தனைக்கும் அவன் மனம் தாவியது. மதுரையிலோ, திண்டுக்கல்லிலோ, இத்தனை உடற்கட்டும் வாளிப்பும் உள்ள பெண்களை அவன் அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவன் மனம் தற்செயலாகச் சிந்தித்தது. உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் நகர்ப்புறத்துப் பெண்கள் துணிந்த அளவு நாட்டுப்புறத்துப் பெண்கள் துணிவதில்லை. நகர்ப்புறத்துப் பெண்களில் பெரும்பாலோருக்கு, உடை அணிவதிலும், பிறரைக் கவர்வதிலும் இருக்கிற அவ்வளவு அக்கறை நாட்டுப்புறத்துப் பெண்களுக்கு இல்லையா - அல்லது இருக்க வசதி இல்லையா என்று நினைத்தான் அவன். பட்டினத்தில் ஒரு தாய்க்குக் கூடத் தான் நாலைந்து குழந்தைகளுக்குத் தாய் என்பதை விடப் பெண் என்பதே அதிகமாக ஞாபகம் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் அப்படி இல்லை. ஒரு பெண்ணைத் தாயாராக உணரும்போது - மனம் விகாரப்படுவதில்லை. பெண்ணாக உணரும்போது மனம் விகாரப்படாமலிருக்க முடிவதில்லை. கர்ப்பிணிகளை எங்கே கண்டாலும், எவ்வளவு அழகாகக் கண்டாலும், காம உணர்வு ஏற்படுவதில்லை என்பது நினைவு வந்தது முத்துக்குமரனுக்கு.

பகல் உணவுக்குப்பின் - உறங்க முயன்று உறக்கமும் வராத காரணத்தினால் லாட்ஜுக்கு மிக அருகில் இருந்த மியூஸியம், ஆர்ட் காலரி, கன்னிமரா நூல் நிலையம் ஆகியவற்றைப் பார்த்து வரலாமென்று புறப்பட்டான் அவன். மழை நின்று சிறு தூறலாகி இருந்தது. பாந்தியன் ரோடில் தென்பட்ட கர்ப்பிணிகளைக் கண்டபோது பகலில் தான் சிந்தித்த சிந்தனை நினைவுக்கு வந்தது. அவனுக்குச் சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் போக பூமியாயிருப்பதுபோல் தோன்றியது; வேறு சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது போலும் இருந்தது. சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் அழகாகவும், ஆடம்பரமாகவும் இருப்பது போல் தோன்றியது; வேறு சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் ஆபாசமாகவும், அருவருப்பாகவும், வேதனையாகவும் இருப்பதுபோல் தோன்றியது. எது உண்மை, எது பெரும்பான்மை என்று வந்தவுடன் அவனால் கண்டுபிடிக்கவோ கணிக்கவோ முடியாமல் இருந்தது.

அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்தையோ பெண்னையோ வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கவோ, மதிக்கவோ அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பதுதான் காரணம். பின்புறமாக அலையலையாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வீரர்களில் சுந்தரமான தோற்றமுடைய ஒருவைனப் போன்ற எடுப்பான முகத்தில் இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம் முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப்படுகிற களையான தோற்றம், கணீரென்ற குரல் - இவை அவனிடம் இருந்தவை.

எழும்பூர் ரயில்  நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு தென்பாண்டிச் சீமை கவி பட்டினத்தில் வந்து இறங்குவதைக் கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப் போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாதப் பிற்பகுதியாதலால் வழக்கம் போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டுமில்லை; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது. அழகிய பெண்கள் மினுமினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று பயந்துகொண்டே தெருக்களில் நடக்க வேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக் கடை முதல் புடவை கடை வரை வியாபாரம் மந்தமைடகிறது. குடைகள் மறதியால் தவறிப் போகின்றன. ஏழைப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின் செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே கூப்பிட்டாலும் வர மறுக்கிறார்கள். இப்படி மழைக்குப் பயப்படுகிற பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?

மியூஸியம் தியேட்டரின் வட்டவடிவமான அழகிய சிறிய கட்டிடமும், ஆர்ட் காலரியின் முகலாய பாணி கலந்த கட்டிடமும் அவனை வியக்கச் செய்தன. மியூஸியத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரமாயிற்று. வந்த புதிதில் சென்னையில் பொது இடங்களில் சுபாவமாக அவன் ஒரு பிரச்சனையை மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. தமிழிலேயே பதில் கூறியவர்கள் ரிக்ஷாக்காரர்கள், டாக்ஸி டிரைவர்கள் மட்டுமே. அந்தத் தமிழும் அவனுக்குப் புரியவில்லை. மதுரையில் மிகச்சிறிய பையனாக இருந்தாலும், நீங்க, வாங்க, போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார்கள். சென்னையிலோ பதினைந்து வயது பையன் எழுபது வயதுக் கிழவைனப் பார்த்துக்கூட 'இன்னாப்பா' என்றுதான் பேசினான். ஆங்கிலம் முத்துக்குமரனுக்கு அறேவ தெரியாது. தமிழிலும் - சென்னைத் தமிழ் புரிய சிரமமாயிருந்தது. பலமொழிக் கலப்பில் சென்னைத் தமிழ் கதம்பமாயிருந்தது.

மழை காரணமாக மியூஸியத்திலோ, நூல் நிலையத்திலோ, ஆர்ட் காலரியிலோ கூட்டமே இல்லை. எல்லாவற்றையும் பார்த்து முடித்தபின் வெளியே வந்தபோது மறுபடி மழை பிடித்துக்கொண்டு விட்டது. டெலிபோன் டைரக்டரியில் நடிகன் கோபாலின் முகவரி தெரியாததால் ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட் விசாரித்துக் கொடுத்த முகவரியை ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துச் சட்டைப் பையில் மடித்து வைத்திருந்தான் முத்துக்குமரன்.

தற்போது எடுத்துப் பார்த்தபோது, அது மழைச்சாரலில் சிறிது நனைந்து ஈரமாகியிருந்தது. இந்த மழையில் கோபாலின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தெரியாமல் சில வினாடிகள் மனம் குழம்பினான் அவன். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் மணி கேட்ட போது, அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்து மூன்றே முக்கால் என்று தெரிவித்தார். நாலரை மணிக்குக் கோபாலின் வீட்டில் இருக்க வேண்டுமானால் இப்போதே புறப்படுவது தான் நல்லதென்று தோன்றியது. பஸ்ஸில் போனால் இடம் தெரிந்து இறங்குவது சிரமமாயிருக்கும். பஸ் ஸ்டாப்பிலிருந்து கோபாலன் வீடு வரை மழையில் நனைந்துகொண்டே போகவேண்டி இருக்கலாம். பஸ் ஸ்டாப்பிங் அருகிலேயே கோபாலன் வீடு இருக்குமா அல்லது சிறிது தொலைவு தள்ளி இருக்குமா என்பெதல்லாம் அவனுக்குத் தெரியாதவை.

இப்போது டாக்ஸியில்தான் போக வேண்டுமென்று முடிவுக்கு வரவேண்டிய நிலையிலிருந்தான் அவன். கையில் மிகக் குறைந்த பண வசதியுள்ள நிலைமையில் டாக்ஸியில் போய்க் கட்டுப்படியாகுமா என்ற கவலையும் கூடேவ எழுந்தது. 'டாக்ஸியில் போகாவிட்டால் இன்று கோபாலைப் பார்க்கவே முடியாது' என்ற கவலையும் சேர்ந்து உண்டாயிற்று. கோபாலைப் பார்க்காவிட்டால் வேறு பல அசௌகரியங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவனைப் பார்ப்பது உடனே அவசியம் என்ற முடிவுடன் டாக்ஸிக்காக பாந்தியன் ரோடு பிளாட்பாரத்துக்கு நனைந்து கொண்டே வந்தான் அவன்.

மழை நேரமாதலால் காலி டாக்ஸிகள் தென்படவே இல்லை. பத்து நிமிஷத்திற்குப் பின் ஒரு டாக்ஸி கிடைத்தது. அவன் ஏறி உட்கார்ந்ததும் மீட்டரைப் போட்டு விட்டு டாக்ஸிக்காரன், "எங்கே?" - என்று கேட்டான். சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த துண்டுத்தாளை எடுத்துப் பிரித்து, "போகேராடு - மாம்பலம்" என்று முத்துக்குமரன் படித்ததும் டாக்ஸிக்காரன் திரும்பிப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். உடனே முத்துக்குமரன் தன் கையிலிருந்த துண்டுத் தாளை அப்படியே டாக்ஸிக்காரனிடம் நீட்டினான்.

டாக்ஸிக்காரன் அதை வாங்கிப் படித்துவிட்டு, "போக் ரோடுன்னு சொல்லுங்க சார். மழையில் நனைஞ்சு 'க்'கன்னாவிலே மேல் புள்ளி போயிருக்கு" என்று - முகமலர்ந்து சிரித்துக் கொண்டே தாளைத் திருப்பிக் கொடுத்தான். முத்துக்குமரனும் அசடு வழிய பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அதைத் திருப்பி வாங்கிப் பார்த்தேபாது 'போக்' என்பதில் மேல் புள்ளி அழிந்து 'போக' என்றாகியிருப்பது தெரிந்தது. கோபால் குடியிருக்கும் ரோடு 'போக' ரோடு ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. மீண்டும் தனக்குத் தானே ஒருமுறை அவன் சிரித்துக் கொண்டான். டாக்ஸி விரைந்தது.

"நடிகர் கோபாலை உங்களுக்குத் தெரியுங்களா...?" என்று நடுவே ஆவேலாடு ஒரு கேள்வி கேட்டான் டாக்ஸிக்காரன். 'தெரியும்' என்று ஒரு வார்த்தையில் பதிலை முடிக்கத் தெரியாமல் - பாய்ஸ் கம்பெனியில் தானும் கோபாலும் சேர்ந்ததிலிருந்து தொடங்கி, கோபால் சென்னை வந்து சினிமா உலகில் ஐக்கியமானது வரை விவரிக்கத் தொடங்கி விட்டான் முத்துக்குமரன். 'இந்த ஆள் வெளியூர் மட்டுமில்லை; நாட்டுப்புறமும்கூட' - என்பைத அந்த விரிவான பதிலிலிருந்தே டாக்ஸி டிரைவர் அநுமானித்துக் கொள்ள முடிந்தது.

அழகிய பெரிய தோட்டத்துக்கு நடுவிலிருந்த கோபாலின் பங்களாவின் முகப்பை டாக்ஸி அடைந்தபோது, 'கேட்'டிலேயே கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்தி விட்டான். கூர்க்காவிடம் என்ன சொல்லி மழையில் நனையாமல் உள்ளே போகலாம் என்ற பிரச்சனையை முத்துக்குமரன் சிந்தித்து முடிக்குமுன் டாக்ஸிக்காரன் சாதித்து முடித்து விட்டான்.

"உங்க ஐயாவுக்கு ரொம்ப நாள் சிநேகிதரு இவரு..." என்று டாக்ஸிக்காரன் கூறியதும்,

"படா ஸாப்... பச்பன்... தோஸ்த்..." என்று ஏதோ சில இந்தி வார்த்தைகளை உதிர்த்த கூர்க்கா - விறைத்து நின்று ஒரு சலாமும் வைத்து டாக்ஸியை உள்ளே விட்டு விட்டான். புத்தியுள்ளவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறவர்கள் சிந்தித்துக் குழம்பித் தயங்கிக் கொண்டிருக்கிற ஒரு காரியத்தைப் புத்தி குறைவாகவும் சமேயாசித ஞானம் அதிகமாகவும் உள்ளவர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுப் போல் அந்த டாக்ஸி டிரைவர் நடந்து கொண்டதை முத்துக்குமரன் வெகுவாக ரசித்தான்.

போர்டிகோவில் டாக்ஸி நின்றதும் மீட்டரில் ஆகியிருந்தபடி பணத்தைக் கொடுத்து மீதி சில்லறை வாங்கிக் கொண்டு முத்துக்குமரன் தயக்கத்தோடு படி ஏறினான். முன் ஹாலில் பெரிதாக நடிகன் கோபால் ஒரு புலியை வேட்டையாடிக் கொன்று துப்பாக்கியும் கையுமாக மிதித்துக் கொண்டு நிற்கும் லைஃப் சைஸ் படம் அவனை வரவேற்றது.

பனியனும் லுங்கியும் அணிந்த ஒரு நடுத்தர வயது ஆள் வந்து முத்துக்குமரனிடம் "யாரைப் பார்க்கணும்? என்ன வேணும்?" என்று விசாரித்தான். முத்துக்குமரன் தன்னைப் பற்றிய விவரம் கூறியதும், "இங்கே உட்கார்ந்திருங்க..." என்று ரிஸப்ஷன் ஹாலில் கொண்டு போய் அவைன உட்காரச் செய்தான். அந்த ஹாலில் முத்துக்குமரன் ஹோட்டலில் பார்த்ததுபோல் ஏன் அதை விடவும், அழகான கவர்ச்சியான பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். தான் உள்ளே நுழைந்ததும் - அவர்களில் பலருடைய கவனம் தன்மேல் திரும்பியதை அவனும் கண்டான். அந்த அறையில் நுழைந்ததும் - இருளிலிருந்து திடீரென்று கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அங்கே நடிகர் போன்ற தோற்றமுடைய சில இளம் ஆண்களும் காத்திருந்தனர். சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் காது கொடுத்துக் கேட்டதிலிருந்து - நடிகன் கோபால் தானே சொந்தத்தில் தொடங்க இருக்கும் ஒரு நாடகக் குழுவின் நடிகர் - நடிகையர் தேர்வுக்கான 'இண்டர்வ்யூ' அன்று மாலை ஐந்து மணிக்கு அங்கே நடைபெற இருப்பதாக அவனால் அநுமானிக்க முடிந்தது. அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து கோபாலே அந்த 'இண்டர்வியூ'வை நேரில் நடத்தித் தேவையானவர்களை 'செலக்ட்' செய்யப் போகிறானென்றும் தெரிந்தது.

அங்கே வந்து அமர்ந்திருந்த பெண்கள் யாவரையும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும், பலமுறை திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டுமென்ற ஆசையை அவனால் அடக்கிக்கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலரும் அப்படியே அவனைப் பார்க்கத் தவித்திருக்கக் கூடும். அங்கிருந்த ஆடவர்களிலே தானே சுந்தரமான தோற்றமுடையவன் என்ற நம்பிக்கை மற்றவர்களைப் பார்த்ததுமே அவனுள் உறுதிப்பட்டுவிட்டது. உண்மையில் அதுவும் ஒரு நியாயமான கர்வந்தானே? முதலில் அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்தான். அப்புறம் அவன் தைரியமாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான். இரைந்து பேசிக்கொண்டிருந்த பெண்ணழகிகள் அவனைக் கண்டதும் மெதுவாகப் பேசலானார்கள். சிலர் தங்களுக்குள்ளே நாணப்படுவது போல் அவனுக்காக நாணப்பட்டார்கள்; பழங்கள் உள்ளே கனிந்தால் வெளியே நிறம் சிவக்கும். 'பெண்ணுக்குள் ஏதாவது கனியும்போது முகம் இப்படித்தான் சிவக்கும் போலும்' - என்று கற்பனை செய்ய தோன்றியது முத்துக்குமரனுக்கு. இரைந்து சிரித்துக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய பிரவேசத்துக்குப் பின் மெல்லப் புன்னகை புரிந்துகொண்டு மட்டுமே பேசிக்கொள்ளலாயினர்.

பாதிபேர் சிரிப்பை அவனுக்காக உள்ளே ரிசர்வ் செய்து கொண்டாற் போன்ற அவர்கள் செயலை அவன் ரசித்தான். அவர்களில் சிலருக்கு உதடுகள் மிகமிக அழகாயிருந்தன. சிலருக்குக் கண்கள் மிகமிக அழகாயிருந்தன. சிலருடைய கைவிரல்கள் மிகவும் நளினமாயிருந்தன. சிலருக்கு மூக்கு அழகாயிருந்தது. சிலருக்கு எது அதிக அழகு என்று பிரித்துச் சொல்ல முடியாமல் எல்லாமே அழகாயிருந்தன. பெண்கள் யாரிடம் புன்னகை, கண்களின் பார்வை, பேச்சு எல்லாவற்றையும் நேருக்கு நேர் மறைக்க முயல்கிறார்கேளா அவனுக்குத் தனியே தர அவர்களிடம் ஏதோ இருக்கிறெதன்று தான் அர்த்தம்.

லுங்கி - பனியன் ஆள் மீண்டும் ரிஸப்ஷன் ஹாலில் பிரவேசித்தான். எல்லார் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.


விவாதங்கள் (8)