அத்தியாயம் 1
ராசாத்தி கிணறு
மலையிலிருந்து இறங்கி வீட்டு வாசற்படி ஏறும்போதே இன்னிக்கு விபரீதம் நிச்சயம்னு தெரிஞ்சுபோச்சு. ஆனா, மத்த நாள் ஒரு மாதிரியா வவுறு கதிகலங்கும். இன்னிக்கு அப்படியில்லே. ஒரு மாதிரியா சுறுசுறுப்பா உற்சாகமாகவேயிருந்தது. புரியல்லே.
அவள் புருஷன் சின்னத் திண்ணையில் குந்தியிருந்தான். நெடுநெடுன்னு சாட்டை உருவம். வயது எழுபது. அதுக்குமேலே எத்தனியாச்சோ யார் கண்டது அவனுக்கே வெளிச்சம் இல்லே. அவனுக்கே வெளிச்சமிருக்காது. கிராமத்திலே அதெல்லாம் அப்பிடி எடைக்கணக்கிலே கண்டுக்க மாட்டாங்க. தெரியாது. ஏதோ குத்துமதிப்பிலிருக்கும். “ஐயா போய் சேர்ந்துட்டாரு. எல்லாம் கணக்கிலேதான் போயிருப்பாரு. அவனுக்குத் தெரியாதது நமக்கென்ன? என்று மறைவைக் கண்டுகிட்டு வயதை மறந்துவிடுவாங்க. ஆளும் நாளடைவில் அவ்வளவுதான். போன வருடம் ஏர்ப்பிடிக்க ஒரு ஆள் இருந்தது. இன்னிக்கு இல்லே. அதனால் என்ன? பையன்தான் தயாராயிட்டானே இடத்தை நிரப்ப. ஆள் வந்தாச்சு. தட்டுப்படாம வேலை நடக்குதா பாரு. அப்பன் பேரை விளங்கப்பாரு. உன் அப்பன் சித்துளியாட்டம் இருப்பான். ஆனால் மத்தவங்களைக் காட்டிலும் இரண்டங்குலம் ஆழம் கூடத்தான் இருக்குமே ஒழிய குறையாது."
அவர்கள் வழி உயர்ந்தது. விவேகம் கொண்டது. உழப்பல் இல்லாதது. மேல்காரியத்துக்கு அடுத்தாற்போல் பிள்ளை வீட்டார் பெண் கேட்க வரும்போதுதான் விழித்துக்கொள்வார்கள். “ஏலே நீ சோலைமலைப் புள்ளேயில்லே? அஞ்சு தலைமுறையா ஒரே மவன்லேதானேயிருக்கே. என் மவளை உங்க வீட்டிலே கொடுத்தால் ஒத்தைக்காச்சியா வச்சுப்புடுவேயேன்னு கவலையாயிருக்குது. ஆனால் உனக்கும் கலியாணம் ஆவணும். தப்புத்தண்ட்டா இல்லாத நிலம், நல்ல பூமி. என்னிக்குமே தோத்ததில்லே. எங்கியோ யார் கண்ணுக்கும் அறியாமே பூமிக்கடியிலே ஊத்து பாயுது. நல்லா நிறைய மக்களைப் பெத்துக்கோப்பா. அப்பத்தான் பயிர் பெருகும். நமக்குப் பயிர் பரம்பரைத் தொழிலாப்போச்சு பாரு. இதுக்கு எத்தினி பேரு இருந்தாலும் - விதைக்கு நெல் வீசறப்போ, தண்ணி பாய்ச்சறதுலே, நாத்து நடறதுலே, அறுப்புலே களத்து மேட்டுலே, நெல்லு தூத்தறத்துல எத்தினி பேர் இருந்தாலும் காணாது. பெண்ணை சரியா காப்பாத்துவே இல்லே? சரி, நாள் குறிச்சுடலாம்.”
“இந்தா விபூதி குங்குமம் தரிச்சுக்கோ’’ என்று பூ, வெத்திலை, பழத்துடன் தட்டை நீட்டியபோது, அவனும் சாதுவாகத்தான் இரண்டையும் இட்டுக்கொண்டான்.
“இன்னும் குகையில், அந்த ஆளோட ஜல்ஸா பண்ணிட்டுத்தானே வரே? இன்னிக்கு என்ன படையல்?"
“வாயிலே வந்தபடி பேசாதே. நாக்கு அழுகிப்போயிடும்.”
“அடச்சே வாயை மூடுபுள்ளே. எத்தினிவாட்டி சொல்லியிருக்கிறேன். அந்த ஆளோடு சகவாசம் வெச்சுக்காதேன்னு. என் மானம் போவுது. கோவணம்கூட கட்டாதே பிறந்த மேனியோடு திரியுறானே!”
“அவர் குகையைவிட்டு வெளியிலே வரதில்லியே’’
“வராட்டி என்ன? ஒருநாள் வெளியிலே நிக்கிறதைப் பார்த்தேனே. பத்தாதா? அந்தக் கோலத்தைப் பார்க்க ஆயிரம் கண் வேணுமா? ஊர்லே நாலு ஆளைக்கூட்டி ஊரைவிட்டே விரட்டி அடிக்கணும்னு நெனச்சிட்டிருக்கேன். இன்னும் வேளை கூடல்லே. நிச்சயம் ஒருநாள் நடக்கத்தான் போவுது. ஆனால் நிச்சயம் நீ அவன்கிட்டக்கூடப் போவக் கூடாது. எத்தினிவாட்டி சொல்றேனோ எனக்குக் கணக்கு மறந்துபோச்சு. ஆனால் அதுதான் உனக்கு ஆவத்து. தெரிஞ்சுக்க! இன்னிக்கு ஆளுக்கு என்ன படையல்?’’
“மிளகுப்பொங்கல் கொஞ்சம் ஆக்கிக்கொண்டு போனேன். பாத்தா பாவமாயிருக்குது.''
``இருக்கும்… இருக்கும்!''
“ஒண்ணுமே துண்ணமாட்டேன்றாரே. தானாவும் கேக்கமாட்டாரு. கொடுத்தாலும் இரை எடுக்க மாட்டேன்னாரு. அப்புறம் நொம்ப கஸ்டப்பட்டு ஏதோ நம் கஸ்டத்துக்காகக் கொஞ்சம் லேசா சிரிச்சுகிட்டே. காத்தையே உண்டுகிட்டு சில பேர் தவங்கிடப்பாங்களாம்.''
``நீ சொல்றே! ஆள் குகை இருட்டிலே எந்தக் கோழியை றெக்கையைக்கூடப் பிய்க்காமே உள்ளே தள்ளறானோ?’’
அவளுக்குக் கண்கள் பெருகின. “உன் பேச்சை இத்தினி கேட்டதனாலேயே எந்தப் பாவத்துலே போறேனோ?’’
“நிறுத்தும்மே!” சீறினான். “நானும் பாத்துட்டேன். எங்கே நாலு பொட்டச்சி சேர்ந்துட்டாங்களோ இந்தச் சாமியார் பாடுங்க கொண்டாட்டந்தான். அதுவும் சடையும் முடியும் தொப்புள் வரை தாடியுமாச்சுன்னா இன்னும் மஜாக்குதான். ஏதோ இந்தக் கிராமம் சின்னதா மலையடிவாரத்துல யார் வம்பும் தும்புமில்லாமே தன் பயிர் தன் மக்களுண்டுன்னு இருந்தோம்னா - ஆனால் மலை வழியா எப்படித்தான் காலரா, வாந்திபேதி, பெரியம்மை மாதிரி வந்து சேர்ந்தாங்களே தெரியவில்லையே. ஊர் நிம்மதியே கெட்டுப்போச்சே!’’
அவன் விழிகள் ஏற்கனவே மேடு. கோவைப் பழமாகச் சிவந்துவிட்டன. கோபம் தானே முறுக்கேறிக்கொண்டுவிட்டது.
“உனக்கு நல்லவங்களுக்கும் மத்தவங்களுக்கும் வித்தியாசம் தெரியாது. நீ இப்படித்தான் புலம்பிட்டிருப்பே.”
“சத்தே வழிவிடறயா. மருமக அடுப்பண்டே ஒண்டியாத் திண்டாடிக்கிட்டிருப்பா. இன்னிக்கு அஞ்சு மரக்காப் புழுக்கியாவணும்.”
அவனுக்கு கோபம் தலைக்கேறி மண்டை ‘கிர்ர்’ரிட்டது. அப்புறம் நேர்ந்தவை ஏதோ கனாவில் அழிந்த கோடுகள் போலத் தெரிந்துமில்லை, தெரியாதுமில்லை. அவள் அவனைத் தாண்டுகையில் அவள் இடுப்பில் தன் முழங்கையால் தன் முழுபலத்துடன் ஓர் இடி இடித்தான்.
“அம்மாடி!” அந்தக் குரல் கேட்டு, “அத்தே…’’ன்னு எதிர்குரல் கொடுத்துக்கொண்டு உள்ளிருந்து மருமகள் ஓடிவந்தாள். அத்தை குமுங்கிய பஸ்பமாய் உட்கார்ந்து காலை நீட்டி, அடுத்து உடம்பையும் நீட்டியவள்தான். பிறகு அசையவே இல்லை. ‘உஸ்’ என்று ஒரு மூச்சு அவளிடமிருந்து கழன்றது. எத்தனை நாள் காத்திருந்த மூச்சோ! அத்துடன் சரி.
“என்ன மாமா! என்னத்தைச் செய்துட்டிங்க!” அலறிக்கொண்டே அத்தையண்டை உட்கார்ந்தாள். “இன்னிக்கு இத்தோடு நிக்கல்லே மவளே. இன்னும் ஒண்ணு பாக்கி நிக்குதே!” கூரையிலிருந்து அரிவாளைப் பிடுங்கிக்கொண்டு மலையை நோக்கி நடந்தான். அவனைத் தடுப்பார் யாருமில்லை. தைரியம் யாருக்குமில்லை. கும்பலும் கூச்சலும் வாசலைச் சுற்றிக் கூடிவிட்டன. இன்னமும் கூடிக்கொண்டிருந்தன.
குகை வாசலினின்று கூவினான்.
“டேய்… ஒன் சாதிக்குப் பிறக்காதவனே. வாடா வெளியே. காட்டிக்கிட்டு திரியறயே. இன்னிக்கு உன் குஞ்சை மிளகாய்த்தூளில் தோய்ச்சு உன் தலையைச் சீவ வந்திருக்கேன்.”
“ஒரு பாவமும் அறியாத ஒரு பெண்பிள்ளையைக் கொலை வாங்கிட்டே!”
“யாராலேடா, வாடா வெளியே.’’
“தாராளமா வரேன். ஆனால் நீ என்னை ஒண்ணும் செய்ய முடியாது. உன் கையை எனக்கெதிரே தூக்கிப் பார். தூக்காது.”
அந்த ஆள் சொன்னபடியே வெளிப்பட்டான். கிழவன் திகைப்பாகி விட்டான். கையைத் தூக்க முடியவில்லை. அரிவாள் கைநழுவி விழுந்து பாறாங்கல்லில் தடுக்கி இரண்டு மூன்று தடவைக் குதித்து அடிவாரத்தை அடைந்து அங்கு பரிதாபமாய்க் கிடந்தது. காலை வெய்யலில் கூர் பளபளத்தது.
“என் பெண்சாதி சாவ யாருடா காரணம்?’’
“நானும் இருக்கலாம். இல்லைன்னு சொல்ல, எல்லாம் தெரிஞ்சவனாலும் சொல்ல முடியாது. ஒருத்தருக்கொருத்தர் முகாந்தரமானாலே நல்லது பொல்லாதது ரெண்டுத்துக்குமே சம்பந்தப்பட்டவங்க எல்லாருமே காரணம்தான்.’’
"உன் பாசையைப் போட்டுக் குழப்பாதே. அது ஒண்ணுதான் பாக்கி. ஆனால் அந்தச் சாமர்த்தியமெல்லாம் என்னண்டை செல்லாது. தெரிஞ்சுக்க. அரிவாள் போச்சுன்னா நீ தப்பிச்சுட மாட்டே. இந்த ரெண்டு கை இருக்குதே பார்த்தியா? ஏர் பிடிச்ச கை. மாட்டுக்கொம்பை கொம்போடு புடுங்கின கை. தெரிஞ்சுக்க ஆமா. இது சும்மா சவால் இல்லே. என்னைப் பாத்தவங்க சாட்சி இருக்காங்க. உனக்கென்னடா நானு சாட்சி சம்மன் வெக்கறது. ஏண்டா சோமாரி. மொதல்லே ஏண்டா இங்கே வந்தே? எங்க நிம்மதியைச் சாவடிக்க. இன்னும் பொந்துக்குள்ளே வௌவ்வாலாட்டம் எத்தினி பேர் குகைக்குள்ளே ஒளிஞ்சிட்டிருக்கீங்க? வௌவ்வால் கடி பெரிய விசக்கடியாச்சே. ஊரே கூட்டியாந்து இன்னிக்குள்ளே உன்னை வெரட்டியாகணும். எத்தினி பேருடா இருக்கீங்க?’’
“நானே இங்கே வரவேண்டியவன் இல்லே தம்பி. என்னவோ வழி தப்பி இந்தப் பாறையில் ஒரு சந்துலேருந்து மீள வெளிச்சம் தெரியாமே இங்கேயே சுத்திக்கிட்டு கிடக்கேன்.’’
“ஏன்… உன் பில்லி சூனியம் எல்லாம் வேவலியா?’’
“இது நீ நெனைக்கற மாதிரியில்லே தம்பி.”
“நீ முறைபோட்டு அழைக்க வேணாம்!” கிழவன் சீறினான்.
“நமக்குத் தெரிஞ்சாலும் தெரியாட்டியும் எல்லாரும் முறைதான் - சரி உனக்கு வேணாம்னா விடு. அது உன்கிட்டே நான் பேசவல்லே. நான் இங்கே மாட்டிக்கிட்டு இருக்கறது என் விதி. வேளை வந்தால் விதி தானே பிரிஞ்சுடும். நான் போயிடுவேன்.’’
“இப்போ என் பெண்சாதி அநியாயமா செத்துப்போனதுக்கு என்ன பதில் சொல்றே?’’
“நீ கொன்னுட்டு என்னை பதில் கேட்டா, நான் என்ன சொல்ல முடியும்? ஆனால் ஒண்ணு சொல்லலாம்.”
“அப்படின்னா விளங்கச் சொல்லுடா. பட்டி மவனே.''
“ஒரு காரியம் என்னை நிறுத்தி வெச்சிருக்குன்னு சொன்னேனே. அதுக்கு அவளும் காரணமாயிருக்கலாம். ஒரு காரியம் கூடணும்னு அது ஒருத்தராலே மட்டுமில்லே... முன்னது பின்னது நமக்குத் தெரியாதது எல்லாமே சம்பந்தப்பட்டுத்தான் உரு ஆவுது.''
“என்னடா சொல்றே தா--ழி. மண்டை கொதிக்குது.’’
“வேளை வந்துட்டுது. நீயே என்னிடம் வருவே. அப்போ சொல்றேன்’’ - உள்ளே போய் இருளோடு கரைந்துபோய்விட்டான்.
கிழவனுக்கு வாயில் நுரை கக்கிற்று. நெற்றியைத் தட்டிக்கொண்டு கீழே போனான்.
அதற்குள் வாசல் பெருந்திண்ணையில் அவன் பெண்சாதியை வளர்த்தாச்சு. குளிப்பாட்டி புதுசு உடுத்தி, நெத்தியில் பலாகாயாட்டம் குங்குமமிட்டு முகத்திலும் வாயிலும் அப்படி மஞ்சள் பத்தி முந்தானையிலே மஞ்சளும் தேங்காயும் முடிச்சு சுத்திக் குந்திக்கிட்டு பாட்டு வெச்சு அழுவாளுங்க. வாசல்லே ஜேஜேன்னு பொம்பளைங்களும் ஆம்பளைங்களும். துண்டை உதறிப் போட்டுக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்தான்.
அவனைக் கண்டதும் அழுபவர் பொட்டென அடங்கிப்போயினர். கையிலே கத்தியைக் காணோம். இன்னும் என்ன பண்ணிக்கிட்டு வந்திருக்கானோ தெரியல்லையே! பார்த்தாலே பயம்மாயிருக்கே. ஒவ்வொருத்தராய் நழுவத் தொடங்கினர். கடைசியில் சில்லறையாக ஒரு சிலரே தங்கினர்.
அந்த முகத்தில் இடிப்பட்ட நோவு தெரியவில்லை. அமைதியே தெரிந்தது. எதையோ கண்டுவிட்ட அமைதி.
“ஏ புள்ளே இதுவரை எத்தினிவாட்டி ஒன்னை மொத்தியிருப்பேன். அப்போல்லாம் ஒண்ணுமில்லே. இப்போ இடுப்பிலே மொத்தினதா உனக்கு யமனா வாய்ச்சுட்டுது! எனக்கு விளங்கவேயில்லையே!’’
கண்கள் மிளகாய்ப்பழமாக எரிந்தன. “ஆனா, ஒரு சொட்டுக் கண்ணீர்கூட வல்லே. வர மறுத்துவிட்டது. அத்தினியும் வரண்டுபோச்சு.’’ உடம்பு திகுதிகுவென எரிந்தது. “ம்ஹும் கண்ணீரைக் காணோம். உடல் பூரா எரிச்சல் தாங்க முடியவில்லை.’’ அவளைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள். அவனும் மகனும் மருமகளும்கூடப் போனார்கள். அதிகமாக அழுகைகூட இல்லே. அழுவதற்கு ஆள் இல்லை. அவனால் அங்கு சூழ்ந்து கொண்ட பயம். கழனிக்காட்டின் நடுவே பொரியும் மண்ணில் சிதை எரிவதைப் பார்க்கக்கூட ஆட்கள் நிற்கவில்லை. நழுவிவிட்டார்கள்.
அவனும் மகளும் மருமகளும் மாத்ரம் அவள் பஸ்பமாவதைப் பார்த்துக்கொண்டு நின்றனர்.
அங்கெல்லாம் இம்மாதிரி விஷயங்களைப் பெரிசுபடுத்த மாட்டார்கள். முதலில் மலையடிவாரத்தில் குக்கிராமம். இப்படி நேர்வதெல்லாம் அபூர்வம். போலீஸ் விசாரணை இம்மாதிரி வந்து அடிக்கடி துன்புறுத்தலுக்குப் பழக்கப்படாதவர்கள். பயம். பொதுவாகவே கிழவன்மேல் யாருக்குமே ஆத்திரம், குரோதம் கிடையாது. “அவன் சுபாவத்துலே நல்லவன்தான். முன்கோபம் கொஞ்சம் ஜாஸ்தி ஒப்புக்கவேண்டியது. ஆனால் இதுவரை பெரிய தப்புத்தண்டா நடந்ததில்லை. இப்படி நடந்தது அவனுடைய போறாதவேளைன்னுதான் சொல்லணும். அதுக்கு அவனே அனுபவிக்கப்போறான். நாம் ஏன் வம்பு சேர்க்கணும். மகன் தங்கமான பையன். மருமகள் அதுக்கு மேலே நல்லவள். ரெண்டு பேருமே நல்லாப் பாத்துக்குவாங்க.
இருந்தாலும் சாயந்திரம் உழுதுட்டுக் கழனிக்கட்டுலேருந்து வந்ததும் வெந்நீரை எதவா விளாவி முதுகைச் சுரண்டித் தேய்க்கப் பெண்சாதி மாதிரி ஆவுமா? அவனே கண்டுக்கப்போறான். ஆனால் மொத்தத்தில் இந்த சந்நியாசிங்க வந்து ஊரே கெட்டுப்போச்சு. கிழவனையும் முழுக்கக் குத்தம் சொல்லறதுக்கில்லே.”
இப்படி அவர்களே சமாதானம் சொல்லிக்கொண்டு விஷயத்தை ஆரவாரமில்லாமல் அமுக்கிவிடுவதே அவர்களுக்குச் சுளுவாயிருந்தது பாந்தமாயிருந்தது. அதில் எல்லோருடைய ஒத்துழைப்புமிருந்தது. ஏதோ நியாயம்கூட இருந்தது.
கிழவன் நீளத்திண்ணையில் படுத்துப் புரண்டுகொண்டிருந்தவன் என்ன தோன்றிற்றோ, எழுந்து, மலையேறி குகைக்கெதிரே நின்றான்.
"அண்ணாத்தே..!”
உள் அடர்ந்த கருமையிலிருந்து நிர்வாணப் பரதேசி உருவானான்.
“தூக்கமில்லாட்டாப்போவுது. இமை மூடமாட்டேன்குது. நீதான் வழி சொல்லணும். இப்பவே பைத்தியம் பிடிக்கிற மாதிரிதான் இருக்குது. இன்னும் காலத்துக்கும் என்ன செய்யப்போறேனோ தெரியல்லியே!” பரதேசி குகைவாசலில் அமர்ந்து கிழவனையும் பக்கத்தில் குந்தச் சொன்னான். இருவரும் மௌனத்தில் இருந்தனர். சூழ்ந்த பாறைகள் அவர்களுடன் ஏதோ பேச முயன்றன. ஆனால் கிழவனுக்கு அவைகளின் பேச்சு கேட்கவில்லை.
“கண்ணீர் வறண்டு போச்சி. இன்னும் எத்தினி நாளைக்கு இப்படியிருக்கும்?’’
“அந்தப் பெண்பிள்ளை ஒரு தப்பும் செய்யாமலே நல்ல மாதிரியிலேயே மாண்டுட்டா. உன் செய்கையினாலே அவள் சாவுக்குச் சேரவேண்டிய துக்கமும் அழுகையும் போய்ச் சேரல்லே. நாளாவட்டத்துல நீயா உன் தவறை உணர்ற வேளை வருமே. இந்தக் காலத் தவணை எல்லாம் சேர்த்து ஒருவழியா உத்தேசமா தீருமே அதுவரைக்கும் உனக்குத் தூக்கம் கிடையாது. கண்ணீர் கிடையாது. எல்லாம் புதுசா ஊறணும்.”
“என்னய்யா உன்னைப் பரிகாரம் கேட்க வந்தால் சாபம் உடறயே!” கிழவனுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
“பரிகாரமா? பரிகாரமே கிடையாது மகனே! அது மாதிரி ஒண்ணு இந்த வாழ்க்கையிலே இல்லை. மக்கள் தாங்களே தங்களை ஏமாத்திக்க கற்பிச்சுக்கிட்ட பொய். யாரும் காரியத்தின் விளைவிலிருந்து தப்பவே முடியாது. கடவுளே தப்பிக்க முடியாது. எல்லாக் காரியத்தோடயும் எல்லாரும் சம்பந்தப்பட்டவங்கதான். அதனாலேயே காரியத்தின் விளைவிலிருந்து யாருமே தப்ப முடியாது. நானும் தப்ப முடியாது. என்னைக் காரணம் காட்டித்தானே அவளைக் கொலை வாங்கியிருக்குது. அதனாலேயே அந்தத் துக்கம் பாதிக்குது. இது மாதிரி அறிஞ்சும் அறியாமயும் யார் யார் கஸ்டமோ நாங்கள் படறோம். எங்கள் ஜாதி தனி ஜாதி. உங்களுக்குச் சொன்னால் புரியாது. அதோ தெரியுதே, அது என்ன சிதையா?’’
“ஆமா, அவளுடையதுதான். ஆனால் எரிஞ்சுபோயிருக்கும். தெரியுதே அதன் கணகணப்புத்தான். அதுகூட பாதிக்குமேல் சாம்பலாயிருக்கும். மிச்சம் தணல். அதுவே அப்படி ஜொலிக்குது.'' அவன் குரலில் அவனுடைய வியப்பு தெரிந்தது.
“மலைச்சரிவிலே ஊர் இருக்குதுன்னு பேரே தவிர, நான் பார்த்தவரை ஊரு சூடுதான்'' என்றான் பரதேசி. “மழை பேஞ்சால் தண்ணி நிக்கற மாதிரியில்லை. சரிஞ்சு ஓடிடுது. தேக்கம் ஒண்ணும் பெரிசாக் காணோம். ஆனால் மக்கள் இங்கேயும் வாழத்தான் செய்யறாங்க. விவசாயம் செய்யறாங்க. எங்கேயிருந்தாலும் வாழ்ந்துதானே ஆவணும். தலைமுறைங்க ஆரம்ப நாளில் கண்ட சௌகரியத்துலே இல்லாட்டி புதுமையில இங்கே தங்கிட்டா அப்புறம் இங்கிருந்து தப்பிச்சுப் போவ அவர்களுக்குத் தோணாது. கஷ்டமோ நஷ்டமோ மக்கள் வாழாத இடம் இல்லை.'’
“ஏன்? உங்க மாதிரி ஆளுங்க வாழறப்ப மத்தவங்க வாழமாட்டாங்களா?’’
“எங்கள் வாழ்க்கை, வாழ்க்கையா இது? ஒரு இடத்துலே தங்க மாட்டோம். தங்கக்கூடாது. பசிக்குதுன்னு வாய் திறந்து யாரையும் கேட்கக்கூடாது. கேட்கமாட்டோம். எங்களுக்குக் கட்டுப்பாடு எத்தினியோ இருக்குது. எங்களுக்கும் குருநாதருங்க இருக்குறாங்க. அவர்களுடைய பலத்துல நாங்க பசியைத் துன்னுட்டோம். காத்துதான் எங்க உணவு.''
“அண்ணாத்தே, நீ சொல்றது நம்பும்படியா இருக்குதா?’’
“அதனாலதான் அதைப் பத்தி நான் உங்ககிட்டப் பேசவும் கூடாது. அந்தக் காரணத்துனாலேயே உன் பெண்சாதி கொடுத்த பொங்கலை வேணாமின்னு தள்ளவும் முடியல்லே. ஏத்துக்கவும் முடியல்லே. அதுலே எல்லாம் உண்மையில் எங்களுக்கு நாட்டமும் இல்லே!’’
“ஆச்சரியமா இருக்குதே, எப்படி ஐயா?”
“இது ஓயாத கதை. நாளா வட்டத்துல, அவள் கொண்டுவந்த படையல்லே கொஞ்சம் கொஞ்சமா காரணமில்லாத சந்தேகத் தீ பட்டு, அந்தச் சந்தேகம் முத்திப்போய், அவள் கொலையிலே முடிஞ்சுபோய், நான் காரணமேயில்லாமல் காரணமாயிட்டேன். அந்த வினையும் என்னை விடாது. உன் கேள்விக்குப் பதிலோ சமாதானமோ, சொல்றதுக்கு நான் இங்கே இல்லை. நான் சொல்றதைக் கேட்கறதுக்குத்தான் இந்த நடுராத்திரியிலே வந்திருக்கே. ஆமா, நீ ஏன் இங்கு ஒரு கிணறு தோண்டக்கூடாது?”
“கிணறா? நடக்கிற காரியமா?”
“நடக்கிற காரியமா இல்லாட்டி இந்த வாயிலே வராது. ஆ… எனக்குப் புரிஞ்சுப்போச்சு. உன்னிடத்தில் இந்தச் சேதி தெரிவிக்கத்தான் இந்தக் குகையிலே மாட்டிட்டிருக்கேன். இந்தக் காரியம் முடிஞ்சவொடனே எனக்கு இங்கிருந்து விடுதலை கிடைச்சுடும் மகனே. பரம்பொருளின் சேதி எப்படி இருந்தாலும் சரி. அதை வெளியிடுவதற்கு நம் அங்கங்களை - அது எப்படியேனும் பயன்படுத்தும். அதில் யார், எது, எப்போன்னு ஆளும் சமயமும் ஏன்னு தேர்ந்தெடுக்கறதெல்லாம் நமக்குத் தெரியாது. அதுக்குத்தான் தெரியும். இந்தக் கிணறு தோண்டற விஷயத்துல மூணு பேர் சம்பந்தப்பட்டிருக்கோம். நீ, உன் பெண்சாதி, தபால்காரன் மாதிரி நான்.''
கிழவன், வசியம் கண்டவனாய்க் கேட்டுக்கொண்டிருந்தான்.
``உன் பெண்சாதியை மசானம் வெச்சிருக்கே அந்த இடத்துலே தோண்டறே. ஒண்ணு உனக்கு முக்கியமா சொல்லணும். மறக்காம எப்பவும் நினைப்பிலேயே வெச்சுக்க. ஆமா, கிணத்தைத் தோண்டிட்டதனாலேயே உன் பெண்சாதியைக் கொன்ன பாவத்தைக் கழுவிட்டதாக் கனவு காணாதே. அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் காணாதே. கிணத்தைக் கிணத்துக்காகவே தோண்டறதா நினைச்சுக்க. தண்ணியில்லாம கஷ்டப்படறாங்களே மக்கள். அவங்களுக்காகத் தோண்டறதா நெனைச்சுக்க. இல்லே அவள் பேரையும் நெனைச்சுக்கலாம். அதுல ஒண்ணும் தப்பில்லே. தண்ணி காணுவோமா இல்லையான்னு சந்தேகம் படக்கூடாது. சந்தேகமே பாதி பலத்தை வாங்கிடும். தண்ணி காணுவே நிச்சயம். அது எனக்குத் தெரியும். அதுக்கெல்லாம் கவுளி எனக்கு அடிக்க வேணாம்” ஆவேசம் கண்டவனாய் பரதேசி பேசினான். “என்னிக்கு எப்போன்னு சோசியம் எல்லாம் கேக்காதே. தோண்டியே செத்துப்போ. ஒருத்தரும் அறியாமல் உன் பெண்சாதி உன் கையாலேயே மாளல்லயா? அதை நெனைச்சுக்கோ. அதுதான் இப்போ உன்னுடைய பலம். காரியத்தை ஆரம்பிச்சுட்டு பாதியிலே விட்டேன்னா, உன் பாவம் உனக்குக் கூடுது. வேறென்னத்தை நான் சொல்ல? இந்த மாதிரி கோழைங்களாலேதான் உலகத்துலே பாவம் கூடுது. உலகம் இயங்கிக்கிட்டே போவுது. எத்தனை நல்லவங்க உலகத்தின் நல்லத்துக்காகவே பிறந்து பாடுபட்டு உழைத்துச் செத்தாலும் என்ன பிரயோசனம்?"
கிழவனுக்கு எல்லாமே புரிந்ததோ இல்லையோ. பரதேசியின் வேகம் தன்னுள் புகுந்து பரவுவதை உணர்ந்தான். நிமிர்ந்து பார்க்கையில், பரதேசியைக் காணோம். இருளில் கரைந்து போய்விட்டான்.
மறுநாள் காலை, சோறும் தண்ணியும் உண்ணுட்டு ஒரு தோளில் கடப்பாறையும் மறுகையில் மம்முட்டியும், அக்குளில் கோடாரியையும் அடக்கிவிட்டுக் கிளம்பினான். மருமகளும், மகனும் சற்று எட்டக் கவலையுடன் பின்தொடர்ந்தனர். “மாமா இப்போ என்ன செய்யப்போறாரு தெரியல்லையே! மாமா நேத்தியிலேருந்து பேசவே இல்லை. பேச்சுக் கொடுக்கவும் பயம்மாயிருந்தது. மாமா மாறிட்டாரு. மருமகள் தன் கையிலே சின்னச் சொம்பில் பாலு வெச்சிருந்தா. பால் கிடைக்கறது சுலபமாயில்லை. நிறைய பச்சைத் தண்ணி இருந்தாலும் இன்னிக்குப் பாலாச்சே! ஊத்தியாவணுமில்லே!
இந்தக் கோடாரியை எங்கேருந்து பிடிச்சாரு? இந்தப் பக்கத்துலே நான் பார்த்ததில்லே. புது மோஸ்த்தரா ரெண்டு பக்கமும் கூரிலே வளைஞ்சு. நம்பல்லாம் மரம் வெட்டற கோடரி ஒரு பக்கம் கூரோடு கனமாத்தான் பார்த்திருக்கோம். இது நமக்கேன் பாடு.’’
ஆயுதங்களைக் கீழே எறிந்துவிட்டு கிழவன் சிதை எதிரே குந்திட்டு உட்கார்ந்து அதைச் சிந்தித்தபடி இருந்தான்.
சற்று நேரம் பொறுத்து அவள் அவனருகே சென்று சொம்பை நீட்டினாள். அவனும் சட்டென ஞாபகம் வந்தவனாய் பாலை சிதை மேல் ஊற்றினான். சாம்பல் கொஞ்சம் பறந்தது. ஆனால் நெருப்பு பூரா அவிந்துவிட்டது.
“மாமா என்ன காரியமா ஆயுதங்களுடன் வந்திருக்கீங்க? இனிமேல் செய்யறதுக்கு என்ன இருக்கு? என்ன செய்ய முடியும்? போனவங்க போயிட்டாங்க. அத்தை பூவாடையிலே பூந்துட்டாங்க. வீட்டு அரிசிச் சாலுல இருந்துகிட்டு நம்மைக் காப்பாத்துவாங்க. நீங்க கவலைப்படாதீங்க. உங்க புள்ளையும் மருமகப் பொண்ணும் நல்லா கவனிச்சுப்போம். இந்த வூட்டுல என்ன குறைவாயிருக்குது. நீங்க திண்ணையில் குந்திக்கிட்டு நிம்மதியா இருங்க.”
“இல்லை மவளே, இனிமேல்தான் நான் செய்ய வேண்டியதெல்லாம் இருக்குது. நான் இங்கே ஒரு கிணறு தோண்டப்போறேன். உன் அத்தையை எரிச்ச இடத்துலே.''
``கிணறா? என்ன அவசியம்? நம் பங்குக்கு வர்ற தண்ணி நமக்குத்தான் பத்துமே. அப்படியே குறைஞ்சாலும் என் அப்பன் கொடுப்பாரே!’’
“இது வயல்காட்டுக்கில்லே மவளே. ஊர் மக்களுக்கு. அவங்க தாகம் தணியறதுக்கு.''
“ஓ… அதுவும் நல்ல ரோசனைதான். அத்தை பேருல கிணறு கேக்க சந்தோசமாயிருக்குது. நல்ல ரோசனை. அதுக்கு நீ மம்முட்டியும் கட்டப்பாறையும் தூக்கியாந்தால் எப்படி? வெடி வெச்சுத் தண்ணியை வரவழைச்சாப்போச்சு. துட்டுக்குப் பாக்காதீங்க மாமா. அப்பாரு ஒரு வடம் அஞ்சு பவுனுலே கல்யாணத்துக்குப் போட்டிருக்காரே, இந்த மாதிரி சமயத்துக்கு, விவசாயிக்கு உதவறத்துக்குத்தான்."
“அதெல்லாம் நல்ல பேச்சுத்தானம்மா. ஆனால் இந்தக் காரியத்தை நான் என் கையாலேயே எந்தக்கை அவளைக் கொன்னுச்சோ, அத்தாலேயேதான் செய்தாவணும்.”
“மாமா இந்த வயசுலே இந்தச் சவாலெல்லாம் உங்களுக்கு வேணாம் - ஏ பக்கத்துலே கல்லாட்டம் நின்னுட்டிருக்கையே. வாயைத் திறந்து நீயும் எதாச்சும் சொல்லேன்.''
“ஏ பொண்ணே, அவன் மேலே ஏன் அனாவசியமா பாயறே. அவன் தாயை இழந்துட்டு தவிச்சுட்டு இருக்கான். இதை நான் இப்படி என் கையாலேயேதான் செய்தாவணும். என்னக்கப்படி உத்தரவு ஆயிருக்குது.''
``உங்களுக்கு யாரு உத்தரவு கொடுத்தது?’’
“உனக்கேன் அந்தக் கவலையெல்லாம்? தவிர, வெடி வெச்சால் இருக்கற தண்ணியையும் இளுத்துக்கிட்டுப் போயிடும். சரி அதெல்லாம் உனக்கெதுக்கு?’’
கிழவன் அஸ்தியிலிருந்து சற்று நீளமாய்க் கிடைத்த எலும்புத் துண்டு ஒன்றைப் பொறுக்கி ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு அதை சிதை நடுவில் சாம்பலை ஒதுக்கிவிட்டு அங்கு கிடைத்த தரையில் அதன் கழுத்து தெரியும் வரை நட்டான். பிறகு அவன் கணக்கிலே ஏதோ சதுரமும் வட்டமுமாய்ச் சேர்ந்து ஏதோ ஒரு கணக்கு கோடரியின் கூரில் ஒரு பெரிய சுற்றளவை வரைந்தான். அவன் ஏற்படுத்திக்கொண்ட உருவ எல்லையை சற்று நேரம் சிந்தித்துப் பார்த்துவிட்டு ஏதோ திருப்தியில் பெருமூச்செறிந்தான்.
அவன் காரியத்தில் முனைந்துவிட, இனி அவனைக் கலைக்க முடியாதென்பது தெரிந்துவிட்ட மருமகள் ஓடி வந்து அவன் காலில் விழுந்தாள். அவள் குரலில் அழுகை வந்தது.
“மாமா… மாமா நீங்கள் எங்களுக்கு வேணும் மாமா. என் வவுத்துலே மூணு மாசமா வளந்துட்டிருக்கிற பூச்சிக்கு பாட்டா வேணும். அதுமேலே இரக்கம் பாருங்க. வீட்டுக்குப் பெரியவங்க உங்களைத் தோத்துட்டு நாங்க எப்படி இருப்போம்?”
‘வவுத்துல பூச்சியா?’ - முதலில் புரியாமல் கிழவன் பின்னடைந்து, அடுத்து புரிவு உள்விடிந்ததும் அவன் நெற்றி அதன் பிரகாசத்தில் உயர்ந்து விசாலித்தது.
“அடிமவளே!” மருமகளை ஆதரவுடன் தூக்கிவிட்டான். ``அப்படியா சமாச்சாரம்? ஒரு நல்ல காரியம் துவக்கு முன்னால் நீ சொன்ன சேதியைவிட நல்ல சகுனம் வேண்டாம். என் ராசாத்தி தெய்வம்தான். இப்படித்தான் நடக்கப்போவுதுன்னு முன்னாலேயே தெரிஞ்சுக்கிட்டு, இந்த வீட்டைவிட்டு போவக்கூடாதுன்னுட்டு உன் வவுத்துல பூந்துட்டாளா? கிட்ட வா. உன் வவுத்தைத் தொட்டுப் பாக்குறேன். எனக்கு அப்புறம் நேரம் இருக்காது. ஆமா. நிச்சயமா அவளேதான். உனக்கு ராசாத்தித்தான் பிறக்கப்போவுறா. அதனாலேதான் இந்தக் கிணத்தைத் தோண்டியாவணும். நான்தான் தோண்டணும். சேதி நிச்சயமாயுட்டுது. சரி, நீங்க ரெண்டு பேரும் போங்க. வூட்டுலே எவ்வளவோ வேலை காத்துக்கிடக்கும் ராசாத்தி வேலையும் சேர்த்து. இனிமே நீ சொன்னா, யார் சொன்னாலும் கேக்க மாட்டேன். இனி நான் வேறே கிணறு வேறே இல்லை.”
கிழவன் கோடரியால் பூமிமேல் போட்ட முதல் வெட்டில், அது பாறாங்கல்லில் பட்டு, அந்த அதிர்ச்சியின் வேகத்தில் அவன் ஒரு பக்கம், கோடரி ஒரு பக்கம் என வீழ்ந்தான். ஆசை தப்பித்தது. ஒரு கண்ணிலேனும் கல் சிதறித் தெறித்துக் கண் போயிருக்கும். கோடரியையும் தன்னையும் கிழவன் பொறுக்கிக்கொண்டு அப்புறம் எச்சரிக்கையாய் கொத்திக் கொத்திப் பள்ளத்தை அகலமாக்க ஆரம்பித்தான்.
பரதேசி, குகையிலிருந்து வெளியே வந்து கிழவன் படும்பாட்டை சற்று நேரம் பார்த்துவிட்டு உள்ளே சென்றுவிட்டான்.
`தம்மை அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல...’
குறளையும் குட்டையும் கிழவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தேவையுமில்லை. “இந்தக் கதையும் சொல்லும் எனக்குத் தெரிஞ்ச பாசையையும் சொருகிவிட்டால் பெரியவனாய்விடுவேனா? இங்கே என்ன நடக்குது தெரியுமில்லே. இல்லே உங்களுக்குத் தெரியப் போவதுமில்லே. எனக்கும் அதன் பெரிசு தெரியப்போவதில்லே இங்கே நடக்கறது தவம். தண்ணி பேரில் தோண்டறேன். தண்ணி வருமோ வராதோ தெரியாது. ஆனால் தோண்டியாவணும். அப்படிப் போற உசிர் போவணும்னா போவட்டும். தோண்டியே போவட்டும்-பரதேசி சொன்னது கொஞ்சம் புரியறாப்பல இருக்குது. தண்ணி முக்கியமில்லே. தோண்டறதுதான் பெருசு. நான் தோண்டியிருக்கறது பூமியின் வவுறா ராசாத்தியின் வவுறா? போகப் போகத்தான் தெரியணும்.’’
வழிப்போக்கர், தெரிஞ்வங்க, தெரியாதவங்க, வேணைய பேர் எட்டிப் பார்த்தனர். அவன் மறுத்ததனால் அவன் கோபத்தைச் சம்பாதித்துக்கொண்டனர். ஏளனத்தையும் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஐயா கிணறு வெட்டி ஓயறத்துக்குள்ளே அவருக்கு உள்ளேயே வழி தப்பிப் போயிடப்போறாரு. கிணறு வெட்டற நேரம், வயசைப் பாரு! வேறு சமயமாயிருந்தால் அவர்களுடைய ஏளனச் சிரிப்புக்கு கைகலப்பு நேர்ந்திருக்கும். இப்போ வாயடைச்சுப்போய், காதடைச்சுப்போய், காரியம், நம் உண்மையான காரியத்தைக் கவனிக்க வேண்டியதைத் தவிர நான் வேறேதும் கவனிக்கக் கூடாது.
அவ்வப்போது மனத்தைத் திடம் பண்ணிக்கொண்டு காரியத்தில் முனைந்தான்.
“ஏ புள்ளே, எனக்கு நெனைப்பு தெரிஞ்சு உன்னை மொத்தினதைத் தவிர வேற மொத்தமா எனக்கு ஞாபகம் இல்லை. நம்ம உறவே இப்படித்தான் வளர்ந்திருக்கோன்னு எனக்குக் குழப்பம். அப்போல்லாம் இல்லாத ரோஷம் உனக்கு இப்போ செத்துப்போம்படி என்னடி வந்தது? ஒருதடவை உன்னை அடிச்சதுக்கு உன் புள்ளே என்னைக் கண்டிக்க வந்தபோது, நீ அவனோடு சண்டைக்குப் போயிட்டே ‘என் புருசன் என்னை அடிக்கிறான். அதைக் கேட்க நீ யாருன்னு’. நான் செய்தது தப்பு. எனக்குத் தெரியுது. உனக்குத் தெரியல்லையா?’’
“அப்படியில்லை மச்சான்-நீ அடிக்காட்டி உனக்கு என் மேல இருக்கற அக்கறையின் ஆத்திரம் எப்படி விளங்கறது? எங்களை அப்பப்போ அடிக்க வேண்டியதுதான். நீ என்ன குடிச்சுட்டு வந்து அடிக்கற புருசனா? உனக்குக் குடி, பீடி, கூத்தி இந்தப் பழக்கமெல்லாம் கிடையாதே. இல்லாதவரை நீ அடிக்கறத்துல என்ன தப்பு? எனக்கும் அப்போ தாங்கிக்கற வயசுதானே! ஒங்க நியாயமெல்லாம் ஒரே மாதிரி இருக்கறதில்லே. அதனால நுகத்தடி சரியாப் பிடிக்க முடியல்லே.’’
பின்னோக்கில் அவனுக்குச் சற்று வியப்பாகவே இருந்தது. அவள் மேல் ஆத்திரமும், அவளைப் பற்றிய பொறாமையும் அவனுக்கு அளவுக்கு மீறி இருந்தாலும் அவர்கள் உடல் உறவு அப்படி நெருக்கமாகவும் அடிக்கடியாகவும் வாய்க்கவில்லை. அடிப்பதிலும் அவளை வசை பேசுவதிலும் உறவு திரும்பிவிட்டது என்று நினைக்கும்படி இருந்தது.
``மதியம் சோறை மகன் எடுத்தாருவான். அப்போ வேலையின் மேல் கருத்தாயிருந்தால் உண்ண மறந்துடுவான். அதை விறைப்பாய் வூட்டுக்கு கொணர்ந்துவிடுவதைவிட வேறு வழி? அப்புறம் மருமகள் புதுஸ்ஸா வடிச்சுக் குளம்பு விட்டுப் பிசைஞ்சு, ஒக்காத்தி வெச்சு உண்டை உண்டையா உள்ளங்கையிலே வெச்சு, அதை முளுங்கறப்ப, அப்பவும் நெனைப்பு எங்கேயோ இருந்தாலும் நல்ல பொருள் உள்ளே போகுதுங்கற வரை தெரிஞ்சுது. மருமகளுக்கும் கால் பதியறச்சே பூமியிலே கனத்துப்போச்சு. இடுப்பு அகண்டுகிட்டே வருது. ராசாத்தி உள்ளேயிருந்து சிரிக்கறயா? அது குழந்தை; முதலா சுமக்குது. அவமேலே லேசாயிரு தெரியுதா? நீ கனமில்லே. இருந்தாலும் ஒருநாள் திடீரென புதுஸ்ஸா முளிச்சுகிட்டாப்போல, தான் தோண்டின பள்ளம் இவ்வளவு அகலம் ஆழமா? அவனுக்கு வெகு ஆச்சர்யமாயிருந்தது. அகலம் ஆழம் மட்டுமல்ல வட்டம் சுத்தமாயிருந்தது. நாளை எண்ண மறந்து போச்சி. அதனால் என்ன ஆரம்பத்துல கஸ்டமாய்த் தானிருந்தது. கண்ணு நொம்ப ஏடாகூடம் பண்ணிச்சு. ஆனால் போவப் போவ பூமி மசிஞ்சு கொடுத்திருக்குது. எப்படின்னா ஒரு மட்டம் ஒரே பாறாங்கல். அடுத்த மட்டம் முழு மண் இல்லை. ஆனால் அவ்வளவு கஸ்டமாயில்லை. அதன் கீழே மறுபடி மோட்டா. இப்படி மாறி மாறி ஒரு வாய்ப்பு. நானும் என் நினைப்பு நாளுலேயிருந்து ஏர் பிடிச்சுத்தான் வரேன். ஆனால் இதுமாதிரி ஒரு திட்டம் பார்க்கல்லே. பரதேசி என்னவோ தெரிஞ்சு வெச்சுக்கிட்டுத்தான் இங்கே தோண்டச் சொல்லியிருக்கான். ஆனால் கல்லையும் மண்ணையும் மூங்கில் தட்டுல வாரியாந்து மேலே வந்து கொட்டறதுதான் கஸ்டமாயிருக்குது. ஆழம் கூடக் கூட கஸ்டமும் கூடுது. மேலே ஒரு ஆளை வெச்சு, தட்டை கவுத்துலே கட்டி வெச்சு மேலே அனுப்பலாமுன்னு பாத்தா அது அப்பிடி செஞ்சா தப்பு நேர்ந்துடுமோன்னு பயம்மாயிருக்குதே! எல்லாமே உன் கையாலேதான் ஆவணும்னு பரதேசி திட்டம் போட்டுட்டானே. அவன்கிட்டே போய் சலுகை கேட்க ரோசமாயிருக்குது. அத்தோட அந்த ஆளுக்கு திட்டம் சொல்லத்தான் அதிகாரம், மாத்த அதிகாரம் கிடையாதுன்னு தோணுது. அவனே அவனுக்கு வந்த உத்தரவைத்தான் எனக்குத் தெரியப்படுத்தறான். அடி ராசாத்தி, நீ பண்ற கூத்தைப் பாத்தியா?’’
“நான் பண்ணற கூத்தா? நீ பண்ணிக்கிட்ட கூத்துன்னு திருத்திக்கோ. உன்னாலே முடியலைன்னா இப்படியே நின்னுக்கோ. உன்னை யாரு கையைப் பிடிக்கறாங்க.’’
“ஆ… ஆரம்பிச்சுட்டையா? உன் சோளப்பட்டாணி குதிப்புக்கு. மகளே உன்னை கையால் பிடிக்க முடிஞ்சா உன்னை-உன்னை…’’
அவன் உள்ளே அவள் சிரிப்புக் கேட்டது.
கொஞ்ச நாளாகவே தன்னுள் ஏதோ மாறுதல் நடந்து கொண்டிருப்பதாகவே அவனுக்குத் தோன்றிற்று. இல்லை தெரிந்தது. பல் விளக்குவது, குளிப்பது, துணி மாத்துவது போன்ற கடன்களில் அக்கறையில்லை. ஆமாம், எந்த விவசாயி காலை நேரத்துல பல் விளக்குறான். தோப்புக்குப் போறப்ப பல்லுலே வேப்பங்குச்சியை மாட்டிக்கிட்டா அப்புறம் கழனிக்கட்டிலிருந்து வீடு திரும்பி காலைப் பழயதுக்கு முன்னாலே கால் அலம்பறப்போ துப்பறதோடு சரி.
பல் விளக்கறது கிடக்கட்டும். அவனுக்கு வயிற்றுப் பசிமேல் அக்கறையில்லை. வயிற்றுப்பசி தெரியவில்லை. ஆனால், அதனால் உடம்பில் களைப்போ பலவீனமோ இல்லை. தூக்கம் இல்லை. சோறு இல்லை. என்ன இது வியப்பாயிருக்குதே. குளிக்கல்லே. ஆனால் உடலில் நாற்றமில்லை. எப்போ இதெல்லாமில்லையோ வூட்டுக்குப்போய் படுத்திட்டிருக்க என்ன தேவை?
அவன் வெளியிட்டுவிட்ட நிலைமையை அனுசரிப்பதுபோல், அன்றிலிருந்து கல்லோ மண்ணோ அதிகம் உதிர்வதில்லை. ஆழமும் வேகமாக ஏற்படவில்லை. அதைப்பத்தி எனக்கென்ன? தோண்டிக்கிட்டேயிருக்க வேண்டியதுதான். தேய்ச்ச பித்தளை தேவுசா போல, கிணற்றின் உள்சுவர் அடியிலிருந்து அண்ணாந்து பார்க்கையில், சுரண்டியெடுத்தாப்பிலே அத்தனை சுத்தமான ப்ரமை தட்டிற்று. இத்தனை சுத்தமாத் தோண்ட முடியுமா? கண்ணைக் கசக்கிக்கொண்டான். இனி தோண்டறதுக்கு ஆழம் இல்லியோ என்னவோ? இங்கிருந்து பார்த்தா அம்பது அடிக்குக் குறையாதுன்னு தோணுதே! கவுறு உள்ளேவிட்டுத்தான் நான் வெளியில் வரமுடியும் போலத் தோணுதே!
கேள்வி தோன்றிற்றே ஒழிய கவலை தோன்றவில்லை.
நேரம் போனது தெரியாமல் எத்தினி நேரமிருந்தானோ?
நக்ஷத்ர வேடு கலைஞ்சு சத்தே இருண்ட மாதிரியில்லே?
சற்றுக் கறுக்கல் கண்டதே காட்டி உடனே தெளிஞ்சு போச்சு. வித்தை காட்டறியா? காட்டு, காட்டு எனக்கென்ன வந்தது! இவ்ளோ ஆழம் தோண்டினதே அன்னி, கல்லில் கடுகு கூட ஈரம் இல்லே. மண்ணில் கசிவேயில்லே. புத்து மண்ணாட்டம் பிசுபிசுன்னு உதிருது. இங்கிருந்து பார்த்தா கிணறு ஒரு பெரிய கல் ஜாடியாட்டமில்லே! அந்த உவமைக்கு அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கிணற்றின் பக்கவாட்டை அன்போடு தடவினான். விரலில் `சுருக்'-
இது ஒண்ணுதான் பாக்கி. விரலை வாயுள் வைத்துச் சப்பினான். உப்புக் கரித்தது. ரத்தமே புறப்பட்டுடுச்சா? ஆனால் மயக்கம் இல்லை. அப்போது நல்லா விடிஞ்சுட்டுது. ஆள் நடமாட்ட, பேச்சு சத்தம் நல்லா கேக்குது.
தன்னைக் குத்தின இடத்தில் விரலைவிட்டுப் பெரிசாக்கிச் சற்று ஆழமாவே தோண்டினான். என்னவோ பளபளன்னு, கைக்குக் கணிசமா, பிடிப்புக்குக் கெட்டியா- அதான என்னடா சீறல்லையேன்னு பார்த்தேன்! வெடுக்குன்னு வேகமாகவே பிடுங்கினான். அங்கிருந்து `சர்ர்'னு பீச்சியடித்தது மூஞ்சியில், வாயில் கல்கண்டா இனிக்குது. கண்ணில் பாஞ்சதுமே குளுமை-அம்மாடி! இதனால்தான் இதுக்கு இத்தினி நாள் காத்திருந்தேனா?
கையில் இருப்பதையே கண்ணின் புதுப் பளிச்சுடன் அப்பத்தான் பார்க்க முடிஞ்சுது.
சிலை. அம்மன் சிலை. கைப்பிடியில், மேல் பிடியில் இடுப்புவரை, பிடியின் கீழ், பீடமும் தெரிந்தது. வலது கால்கட்டை விரலை, ஊசிமுனை மேல் அழுந்தப் பதித்த வண்ணம் ஆத்தா தவத்திலிருக்கா. அந்த இளஞ்சிரிப்பு - அம்மாடி - கண் கூசுது. இதுக்குள் வெள்ளம் பிதுபிதுன்னு பொங்கிடுச்சு. நுரை கக்கிக்கிட்டு ஒரு பக்கமா வெளியே வளிஞ்சு ஓடுது. கிழவனையும் ஏந்திக்கிட்டு மேலேகொண்டு வருவதுபோல் வந்து, மறுபடியும் கீழே இழுத்துக்கிட்டுப் போயிட்டுது.
கிணத்துலே தண்ணி பொங்குது. அக்கம் பக்கத்துலே நிமிஷமா பத்திக்கிச்சி. கிணத்தைச் சுத்தி ஒரே கும்பல். கொல்! கீழே சரிஞ்ச தண்ணியை அள்ளிக் குடிச்சுட்டு; "அடே தேனுடோய். இதுமாதிரி எங்கனாச்சும் கிடைக்குமா? நொம்ப புண்ணியம், நொம்ப புண்ணியம்!!” தண்ணியும் குடிக்கறவங்களுக்கு வஞ்சனையில்லாமல் வழிவிடுது.
அப்போது பார்த்தவங்க பின்னாலே சொன்னாங்க. அப்பிடி சொல்றவங்க எப்பிடியும் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியாத்தானிருக்கும். பாக்கற கோணம்.
தனி வட்டத்துலே பருந்தாட்டம், றெக்கையாட்டம் ரெண்டு கையையும் விரிச்சிக்கிட்டு காத்துலே நீஞ்சி வந்து, நேரே கிணத்துள்ளே விழுந்தான் பாரு, குஹையிலிருந்தே நேரே வந்தானா, இல்லே நடுவுலே பாறையிலே ரெண்டாவது `தம்' பிடிச்சானா. எப்படியிருந்தாலும் சரி, வெறும் பழக்கத்தாலே அந்த மாதிரி கிணத்துலே நேரே `டைவ்' அடிக்க முடியாது. வேறு சித்தியெல்லாம் தெரிஞ்சு வெச்சிட்டிருக்கணும்.
பாத்தவங்க பின்னாலே சொன்னாங்க. கிழவனைக் காப்பாத்தத்தான, மீன் கொத்தியாட்டம் பறந்து கிணத்துக்குள் பாய்ஞ்சிருக்கதா நெனச்சோம். ஆனால் அப்படியில்லே. நேரே கிழவன் கைச்சிலையைப் பிடுங்கத்தான் முயற்சி செய்தான். ஆனால் கிழவன் பிடி சாவுப்பிடியாச்சே, விட்டுடுமா? அதுக்குள்ளே ஒரு அலை கிளம்பி சுவராட்டம் அவங்க ரெண்டு பேர் மேலேயும் இடிஞ்சி விழுந்து, தன்சுழியிலே ரெண்டு பேரையும் உள்ளே இழுத்துக்கிட்டுப் போயிட்டுது.
கிணத்தைச் சுத்தித் தேர்த்திருவிழாவாட்டம் கும்பலும் கூப்பாடும் தெரியுது. தண்ணிக் கிணறும் கோவம் தணியாமே சீறிக்கிட்டு இருக்கறத்துலேயே, உள்ளே மாட்டிண்டிருக்கறவங்க விதி இன்னும் தெரியாமல் இருக்கறத்துலேயே, குடமும் தாம்புக்கயிறுமா வந்துட்டவங்க எத்தினி பேர்! கிடச்ச மட்டும் ஆதாயம்!
ஒரு வழியா பொங்கலும் சீறலும் அடங்கி, தண்ணி தன் மட்டம் காண ஆரம்பிச்சுட்டுது. கண்டுதானே ஆவணும்!
ஒரு சின்ன அலை எழும்பி ரெண்டு பொணங்களையும் தானே கக்கிட்டுது.
கிழவன் முகம் சாந்தமா, எத்தினீயோ நாளா காத்திருந்த எதையோ கண்டுவிட்ட சந்தோஷம். சாவறதுக்கு முன்னாலேயே கிழவன் உள்ளுக்குக் குளிர்ந்து போயிருந்தான்.
பரதேசி முகத்துலே ஒரு அலக்ஷியம். எதுக்கும் கலங்காமல், ‘பூ! இவ்வளவுதானா?’ என்கிற மாதிரி.
ஆகவே ராசாத்தி கிணறு பிறக்கறத்துலேயே மூணு காவு வாங்கிருக்கு. கிழவிக்கும் கிழவனுக்கும் காரணம் யாருங்கறதும் தெரிஞ்ச விஷயம். ஆனால் இந்தப் பரதேசி? பரதேசிக்கும் கிணத்துக்கும் நிச்சயம் சம்பந்தம் இருக்குது. நான் சொல்றேன். யோசித்துப் பாருங்க. கிழவன் பரதேசி சாதா ஆள் இல்லே. காரணம், காலம், காரியம் மூணுமே தெரிஞ்சு வெச்சிருப்பான்.
கிணறு எங்கே தோண்டனும்னுகூட பரதேசிதான் கிழவனுக்குச் சொல்லியிருப்பான். கிழவனுக்கு அம்மாம் மூளை ஏது? அங்கே தண்ணி இருக்குது தோண்டினால வரும்னு அவனுக்குத் தெரியும். அதுமட்டுமில்லை. அங்கே சிலையிருக்குதுன்னு முன் கூட்டியே அவனுக்குத் தெரியும். அந்தச் சிலையைத்தான் அடையணும் இதுதான் பரதேசியின் அடிப்படை சூழ்ச்சி. இல்லாட்டி அவ்வளவு கணக்கா அந்தச் சமயத்துக்கு அவன் வருவானேன்? பரதேசி சாதா ஆள் இல்லை.
ரெண்டு பேரையும் ஒரே பள்ளத்தில்தான் புதைச்சாங்க. எரிக்கறதுதான் பழக்கம்னாலும் இவங்களை சாமியார்லே சேர்த்துட்டாங்க போல! மக்களுக்கு மனம் எந்த சமயம் எப்படித் தோணுதுன்னு காண முடியாது!
தண்டல் பண்ணி கட்டடம்கூட எழுப்பிட்டாங்க. சமாதி மேலே கோவில். கோவில்லே ஒரு வயசான பெண்பிள்ளை சிலை நினைப்பிலே அமைச்சிருக்காங்க. ராசாத்தி அடையாளமேயில்லை. எல்லாம் நெனைப்புத்தானே!
சின்ன ராசாத்தியை இடுப்பில் தூக்கிட்டு, மருமகள் மாலை மாலை விளக்கேத்த எண்ணெயுடன் கோயிலுக்கு வரும். அந்த முதல் பெண் குழந்தைக்கப்புறம், இன்னொரு குட்டி ராசாத்தி, அப்புறம் ரெண்டு ஆம்புளப் பசங்க – குடும்பத்துக்கு எந்தக் குறையுமில்லை. எப்படி வரும்? ஊருக்கே கிணறு வெட்டிக் கொடுத்தவங்களாச்சே! ராசாத்தி, உன் குடும்பம் என்னிக்கும் நல்லாயிருக்கணும்.
முதல்லே ஒரு வாரம், பத்து நாளைக்குக் கிணத்தண்டை யாரும் போவல்லே. ஆவிங்க சுத்துமோன்னு பயம். ஆனால் எத்தினி நாள் முடியும்? தண்ணி தேவைப்படுதே. கிணறு புழக்கத்துக்கு வர ஆரம்பிச்சாச்சு. ராட்டினம் போட்டாச்சு. எடுக்க எடுக்க அமிர்தம், ஊத்தினுள் கூடுது.
ஆமாம், எல்லாம் சரிதான், அந்தச் சிலை என்னவாச்சு?
கேள்வி நல்ல கேள்விதான். ஆனால் அதுக்குப் பதில் இல்லை.
கிணத்துலேயே, அந்தச் சொல்ப நேரத்துக்கு, யாருக்குப் பார்க்கக் கொடுத்து வெச்சுதோ, அத்தோடு சரி. ரெண்டு பொணங்களும் மேலே மிதந்தப்போ, யார்கிட்டேயும் விசாரத்துக்கு இடம் இல்லை. எப்பிடி நழுவிடுச்சோ. உள்ளேயே எந்தச் சந்து பொந்துலே - பாறைக் கிணத்துலே, அதுக்கா குறைவு? எந்த பொந்திலோ தங்கி, யார் கண்ணுக்கும் படாமல் தண்ணிலே தன் தவத்தில் இருந்துகிட்டு --ஜகத்துக்கே ஆத்தாளாச்சே! தன் குழந்தைகளுக்கு அருள் புரிஞ்சுக்கிட்டிருக்காளோ?
ஆத்தா, நீ வாழ்க!
- இந்தக் கதை முடிந்தது. அடுத்த கதையைத் தொடருங்கள்…
விவாதங்கள் (4)
- Anonymous
parikaram arumaiyana vilakkam
0 likes - Lakshminarayanan c.r
arumai
0 likes - Shakila Begum
கொஞ்சம் புரில.
0 likes - Siva ideal
சித்தர்களின் வாழ்வியலின் நோக்கத்தையுடன் சாதாரண வேளாளனின் மனக்கோணலினால் ஏற்பட்ட நிகழ்வினை சூட்சுமமான முறையில் பின்னப்பட்ட ல.சா.ரா அர்களின்அற்புதமான படைப்பு.
0 likes