அத்தியாயம் 1
“தாயிற் சிறந்ததொரு…”
“பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்கவேண்டியவற்றை எல்லாம் அனுபவித்துவிட்டேன். அம்மா, கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக் கல்யாணம் செய்து வைத்துக் கண்ணுக்கழகாகப் பார்க்க வேண்டுமென்பதுதான்!” என்று அலமேலு அம்மாள் தன் ஒரே மகனைப் பற்றித் தனக்குத் தெரிந்தவர்களிடமெல்லாம் அடிக்கடி சொல்லிக்கொள்வாள்.
ஜானகிராமனோ தனக்குத் தெரிந்த அரை குறையான உலகானுபவத்தைக்கொண்டு, தன் தாயார் உயிரோடு இருக்கும்வரை, தான் கல்யாணம் செய்துகொள்வது தனக்குக் கெடுதல், தன்னைத் தேடி வருபவளுக்கும் கெடுதல் என்ற விபரீதமான முடிவுக்கு வந்திருந்தான்.
இந்த முடிவை அவன் தாயாரிடமும் ஒரு நாள் நாசூக்காகத் தெரிவித்தான்: “என்னுடைய நன்மை எனக்குப் பெரிதல்ல. அம்மா! உன்னுடைய நன்மைதான் எனக்குப் பெரிது. உன்மீதுகொண்டிருக்கும் அன்பில் இன்னொருத்தி பங்குகொள்ள வருவதை நான் விரும்பவில்லை!” என்றான்.
“நன்றாயிருக்குடா, நீ சொல்வது! நான் இன்று போவேனோ, நாளை போவேனோ? நான் ஒரு சதமா உனக்கு? – அதெல்லாம் முடியாது; உனக்குக் கல்யாணத்தைப் பண்ணிவைத்துவிட்டுத்தான் நான் கண்ணை மூடுவேனாக்கும்!” என்று பிடிவாதம் பிடித்தாள் தாயார்.
ஜானகிராமனின் பாடு தர்மசங்கடமாகப் போய்விட்டது. அவன் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கல்யாணத்துக்கு ஒருவாறு சம்மதித்தான். அதன் பயனாக வைஜயந்தி அவனுக்கு மனைவியாக வந்து வாய்த்தாள்.
ஏறக்குறைய மூன்றுமாத காலம் அவர்களுடைய மணவாழ்க்கையில் குறையொன்றும் தெரியவில்லை; அப்படியே தெரிந்தாலும் அது குறையாகத் தோன்றவில்லை. அதற்குள் அலமேலு அம்மாள், தான் ஏற்கனவே சபதம் எடுத்துக்கொண்டிருந்தபடி கண்ணை மூடிவிட்டிருந்தால் எவ்வளவோ நன்றாயிருந்திருக்கும். அதுதான் நடக்கவில்லை!
அவளுடைய வயது வளர்ந்துகொண்டேயிருந்தது; அதற்கேற்றாற்போல் வம்பும் வளர்ந்துகொண்டே வந்தது.
“பேபி, பேபி!”
இது ‘வைஜயந்தி’ என்பதற்குப் பதிலாக ஜானகிராமன் தன் மனைவிக்கு வைத்திருக்கும் செல்ல பெயர். இந்தப் பெயரைச் சொல்லி அவன் தன் மனைவியை அன்புடன் அழைத்தால் போதும் – வந்தது மோசம்; “அது என்னடா, பேபி, பேபி! நாய்குட்டியைக் கூப்பிடுகிற மாதிரி கூப்பிடுகிறாயே!” என்பாள் அலமேலம்மாள்.
வைஜயந்தி பதிலுக்கு எதையாவது சொல்லி, வம்பை வளர்க்காமலிருக்க வேண்டுமே என்று கவலையுடன் ஜானகிராமன் தன் மனைவியின் முகத்தைப் பார்ப்பான். அவளோ தன் உதட்டின் மேல் ஆள் காட்டி விரலை வைத்து “உஸ்… தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள்.
சாயந்திரவேளையில் வைஜயந்தி தன்னை அலங்கரித்துக்கொண்டால் அலமேலு அம்மாவுக்கு ஏனோ பிடிக்கவே பிடிக்காது. “அகமுடையானின் மனதைக் கெடுப்பதற்கு இதெல்லாம் என்ன வேஷம்?” என்று கேட்டு, அவள் முகவாய்க் கட்டையைத் தோளில் இடித்துக்கொள்வாள்.
“இது என்ன அபத்தம்! கண்டால் காத தூரத்தில் நிற்கும்படி அவள் இருக்கவேண்டுமா, என்ன?” என்று தனக்குள் வருந்தியவனாய், ஜானகிராமன் தன் மனைவியைப் பார்ப்பான்.
அவள், “தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!” என்று சொல்லிவிட்டுச் சிரிப்பாள்.
இரவிலும் இந்த வம்பு நிற்பதில்லை. படுக்கையறையில் இருக்கும் கணவனுக்கு மனைவி பால்கொண்டு போனால், “வெய்யிற்காலத்தில்கூட இருவருக்கும் உள்ளே என்ன படுக்கை? வெளியே சற்றுக் காற்றாடப் படுத்துக்கொள்ளக்கூடாதா?” என்று அவள் எதையோ நினைத்துக்கொண்டு இரைவாள்.
இந்த ரஸாபாசமான விஷயம் ஜானகிராமனின் காதில் நாராசம் போல் விழும். அவன், “அட கடவுளே! இது என்ன வெட்கக்கேடு!” என்று தலையில் அடித்துக்கொண்டே தன் மனைவியைப் பார்ப்பான்.
“தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!” என்பாள் அவள் சிரித்துக்கொண்டே.
மற்ற நாட்களிலாவது அலமேலு அம்மாள் சும்மா இருப்பாள் என்கிறீர்களா? – அதுவும் கிடையாது. அவர்களுடைய அறைக்கு அருகே நின்றுகொண்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனிப்பாள். அவர்களோ அவள் எதிர்பார்த்தபடி ஒன்றும் பேசமாட்டார்கள். அலமேலு அம்மாள் நின்று நின்று கேட்டுக் கேட்டு அலுத்துப்போவாள். கடைசியில் “விடிய விடிய என்னடா பேச்சு? அவளுக்குத்தான் வேறு வேலை கிடையாது. பொழுது விடிந்ததும் நீ வேலைக்குப் போக வேண்டாமா? ஓயாமல் ஒழியாமல் இப்படிப் பேசிக்கொண்டேயிருந்தால் உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று அக்கரையுடன் இரைந்துவிட்டு ஏமாற்றத்துடன் சென்று படுத்துக்கொள்வாள்.
ஜானகிராமனுக்கோ ஒன்றும் புரியாது. அவன் மனோதத்துவத்தில் இறங்கி தன்னுடைய தாயாரைப் பற்றி ஆராய்ச்சி செய்வான். ஆராய்ச்சியின் முடிவில் தன் அருமை அன்னை இளம்பிராயத்திலேயே கணவனை இழந்துவிட்டதுதான் மேலே குறிப்பிட்ட வம்புகளுக்கெல்லாம் காரணம் என்று தோன்றும். இருந்தாலும் வைஜயந்தி சொல்வதுபோல் “தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை” அல்லவா?
ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் தாங்கள் கல்யாணமாவதற்கு முன்னால் தனித்தனியே இருந்து வாழ்ந்த உலகம் பழைய உலகமாகவும், கல்யாணம் செய்துகொண்டு இருவரும் சேர்ந்து வாழும் உலகம் புதிய உலகமாகவும் தோன்றிற்று. தாங்கள் கண்ட புதிய உலகத்தைப் பற்றி அவர்கள் என்னவெல்லாமோ பேசவேண்டுமென்று துடியாய்த் துடித்தார்கள். அதற்கு ஒளவைப் பிராட்டியாராலும் ஆச்சாரிய புருஷர்களாலும் புகழப்பட்ட ‘அன்னை’ எவ்வளவுக் கெவ்வளவு இடையூறாயிருந்தாளா, அவ்வளவுக் கவ்வளவு அவர்களுடைய ஆவல் அதிகரித்தது.
ஒரு நாள் மாலை ஜானகிராமன் பொழுதோடு வீட்டுக்கு வந்தான். அவனுக்குக் காபி கொடுத்த பிறகு, “எங்கேயாவது சென்று சிறிது நேரம் மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தால் தேவலையே” என்றாள் வைஜயந்தி.
இதை அவள் சாதாரணமாய்த்தான் சொன்னாள். இருந்தாலும் ஜானகிராமனின் உள்ளத்தை அது என்னவோ செய்தது. அவன் அவளைப் பரிதாபத்துடன் பார்த்தான். பிறகு “கடற்கரைக்காவது சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வருவோமா?” என்றான்.
“எனக்கு ஆக்ஷேபணையில்லை; ஆனால் உங்கள் தாயார்….”
“அவளிடம் ஏதாவது…?”
“பொய்யா சொல்லுவீர்கள்?”
“ஆமாம்; அவள்தானே நம்மைப் பொய் சொல்லச் சொல்கிறாள்?”
“சரி, என்ன பொய் சொல்வீர்கள்?”
“இப்பொழுது எங்கே பார்த்தாலும் நவராத்திரி விழா நடக்கிறதே, யாரோ கொலுவுக்கு அழைத்திருப்பதாகச் சொன்னால் போகிறது!”
இதைச் சொல்லி அவன் வாயைக்கூட மூடவில்லை; “காரியம் ஒன்றும் நடக்காவிட்டாலும் இந்த வீட்டில் பேச்சுக்குக் குறைவில்லை?” என்று இரைந்துகொண்டே அலமேலு உள்ளே வந்தாள்.
ஜானகிராமன் ‘திருதிரு’ வென்று விழித்துக்கொண்டே, “ஒன்றுமில்லை, அம்மா! நண்பன் ஒருவன் எங்களை நவராத்திரி விழாவுக்கு அழைத்திருக்கிறான்…” என்று ஆரம்பித்தான்.
“அதற்கு வயசுப் பெண்ணை அழைத்துக்கொண்டு நீ தனியாகப் போக வேண்டுமா?”
“ஆமாம், அம்மா! ஒரு மணி நேரத்திற்கெல்லாம் திரும்பி வந்துவிடுகிறோம்.”
“சரி, சரி; ஜாக்கிரதையாகப் போய்விட்டு வா. சீக்கிரமாகத் திரும்பி விடு!” என்றாள் தாயார்.
ஜானகிராமன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான்.
சிறிது நேரத்திற்கெல்லாம் இருவரும் கடற்கரைக்குக் கிளம்பினர். கவிந்திருந்த இருளிலும் அவர்களுடைய மனம் ஏனோ தனிமையை நாடிற்று. உயிர்பெற்ற நிழல் படங்களைப்போல் உருமாறிவிட்ட அவர்கள், கடற்கரையோரமாக வெகு தூரம் நடந்தனர். கடைசியில் ஒரு கட்டுமரத்துக்குக் கீழே உட்கார்ந்தனர்.
“எனக்கு நல்ல அம்மா வந்து வாய்த்தாள்!” என்றான் ஜானகிராமன் அலுப்புடன்.
அப்படிச் சொல்லாதீர்கள். தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை!” என்றாள் வைஜயந்தி வழக்கம்போல் சிரித்துக்கொண்டே.
இருவரும் ‘கலகல’வென்று நகைத்தனர்.
அதற்குள் ஒருவன் எங்கிருந்தோ வந்து அவர்களுக்கு எதிரே இருந்த கட்டுமரத்தின் மேல் உட்கார்ந்தான். உட்கார்ந்தவன் சும்மா இருக்கவும் இல்லை;
“காதலாகினேன் – கண்ணே!
காதலாகினேன்!”
என்று கரக் கம்பம் சிரக் கம்பம் எல்லாம் செய்து, ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமாகப் பாட ஆரம்பித்துவிட்டான்.
“ஐயோ, பாவம்! இவன் என்னத்துக்கு இப்படி உருகித் தொலைகிறான்!” என்று வைஜயந்தி அனுதாபத்துடன் சொன்னாள்.
“எல்லாம் நம்முடைய கஷ்ட காலந்தான்!” என்று வெறுப்புடன் சொல்லிக்கொண்டே, அந்த இடத்தைவிட்டு எழுந்து நடந்தான் ஜானகிராமன்.
வைஜயந்தி அவனைத் தொடர்ந்து சென்றாள். அடுத்தாற்போலிருந்த ஒரு மணல் மேட்டுக்குக் கீழே இருவரும் உட்கார்ந்தனர்.
“காதல், மனிதர்களைப் பைத்தியக்காரர்களாக்கிவிடுகிறது என்கிறார்களே, அது என் அம்மாவைக்கூட விடவில்லை பார்த்தாயா?” என்றான் ஜானகிராமன்.
“உஸ்…. தாயிற்சிறந்ததொரு கோயிலும் இல்லை!” என்று சொல்லி அவன் வாயைப் பொத்தினாள் வைஜயந்தி.
அதே சமயத்தில் ‘டூப்ளிகேட் இங்கிலீஷ்’காரர்களைப்போல விளங்கிய கலாசாலை மாணவர் இருவர் – இல்லை இல்லை; கலாசாலை ‘மைனர்’கள் இருவர் – ஒருவர் தோளின்மேல் ஒருவர் லாகவமாகக் கையைப் போட்டுக்கொண்டு அவர்களை நோக்கி வந்தனர்.
அவர்களில் ஒருவன் வைஜயந்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே “எப்படி?” என்றான்.
இன்னொருவன், “இருட்டிலே எந்த உருப்படியாயிருந்தாலும் பிரமாதமாய்த்தான் இருக்கும்!” என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த சிகரெட்டை ஓர் இழுப்பு இழுத்துப் புகையைக் குபுகுபுவென்றுவிட்டான்.
இந்த விமர்சனத்துக்குப் பிறகு இருவரும் தங்களுக்குத் தெரிந்த ‘இங்கிலீஷ் டியூன்’ ஒன்றைச் சீட்டியடித்துக்கொண்டே பாட ஆரம்பித்தனர்.
பாட்டு முடிந்ததும் ஜானகிராமனுக்கும் வைஜயந்திக்கும் இடையே இருந்த இடைவெளியைச் சுட்டிக்காட்டி, “இப்படிப் போவோமா?” என்றான் ஒருவன்.
“ஓ, போவோமே!” என்றான் இன்னொருவன்.
ஜானகிராமன் அவர்களை வெறுப்புடன் நோக்கினான். அவசியமானால் பாதரட்சையிலிருந்து பட்டுக்குஞ்சம் கட்டிய விளக்குமாறு வரை ருசி பார்ப்பதற்குத் தயாராயிருந்த அந்த ‘மைனர்’கள் அதை லட்சியம் செய்யவில்லை; இருவருக்கும் நடுவே புகுந்து சென்றனர். சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் திரும்பி இருவருக்கும் நடுவே வந்தனர்.
இந்தத் திருவிளையாடலின் காரணமாக தன் கணவன் பொறுமையை இழக்காமலிருக்க வேண்டும் என்பதற்காக, “இது என்ன சங்கடம்? எழுந்து போவோம். வாருங்கள்!” என்றாள் வைஜயந்தி. தம்பதி இருவரும், மீண்டும் தனிமையை நாடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் ‘களுக்’கென்று சிரிக்கும் சத்தம் கேட்டது. சிரித்தவர்கள் வேறு யாரும் இல்லை; ‘டூப்ளிகேட் இங்கிலீஷ்’காரர்கள்தான்!
“ஒருவேளை இவர்களை இங்கே அனுப்பிவைத்த கைங்கரியம் அம்மாவைச் சேர்ந்ததாயிருக்குமோ!” என்றான் ஜானகிராமன்.
“தாயிற்சிறந்ததொரு கோயில் இல்லை!” என்றாள் வைஜயந்தி.
“சரி, சரி; அந்தக் கோயிலுக்கே போய்த் தொலைவோம், வா!” என்றான் எரிச்சலுடன்.
இருவரும் நேரே பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்தனர். கலாசாலை ‘மைனர்’களும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றனர். இரண்டு மூன்று முறை அவர்களைத் திரும்பிப் பார்த்த ஜானகிராமன், அப்புறம் திரும்பிப் பார்க்கவேயில்லை.
ஜானகிராமன் பஸ் ஸ்டாண்டை அடைவதற்கும் பஸ் வந்து நிற்பதற்கும் சரியாயிருந்தது. தம்பதி இருவரும் பஸ்ஸில் ஏறினார்கள். தங்களைத் தொடர்ந்து வந்த ‘மைனர்’களை மட்டம்தட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் “கர்ம சிரத்தையுடன் இவ்வளவு தூரம் வந்து எங்களை பஸ்ஸில் ஏற்றிவிடுகிறீர்களே, ரொம்ப சந்தோஷம்!” என்று சொல்லிவிட்டு ஜானகிராமன் திரும்பினான்.
“நீங்களா, அத்திம்பேரா! இருட்டில் உங்களை நான் கவனிக்கவேயில்லை; யாரோ என்று பார்த்தேன் மன்னிக்கணும்” என்று அசடு வழியச் சொன்னான் அந்த ‘மைனர்’களில் ஒருவன்.
அவ்வளவுதான்; அடுத்தவன் கையிலிருந்த சிகரெட் துண்டை வீசி எறிந்துவிட்டு கம்பி நீட்டிவிட்டான்.
“வைஜயந்தி! இப்படித் திரும்பி உன் தம்பியின் அழகைக் கொஞ்சம் பாரேன்?” என்றான் ஜானகிராமன்.
அவள் எதிர்பாராத விதமாகத் தம்பியைக் கண்டதும் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
ஜானகிராமன் அவன் கையைப் பிடித்து இழுத்துப் பலவந்தமாக உட்கார வைத்தான்.
அசடுவழியும் தம்பியின் முகம் அக்காவின் அநுதாபத்தைப் பெற்றது. அவள் பேச்சை மாற்ற எண்ணி, “நீ எங்கே வந்தாய்? எப்போது வந்தாய்?” என்று கேட்டாள்.
“அப்பாவின் நண்பர் ஒருவரின் வீடு இங்கே இருக்கிறது, அக்கா! அவருடைய மகனுக்கு இன்று காலை கல்யாணம். அப்பா அதற்கு என்னை அனுப்பி வைத்திருந்தார். அப்படியே உன்னையும் பார்த்துவிட்டு வரச் சொன்னார். என்னுடன் இருந்தானே, அவன் என் நண்பன். அவனைக் கல்யாண வீட்டில் பார்த்தேன். அவனும் நானும் சாயந்திரம் உங்கள் வீட்டுக்கு வந்தோம். நீங்கள் நவராத்திரி விழாவுக்குப் போயிருப்பதாகச் சொன்னார்கள். சிறிது நேரம் கடற்கரையில் இருந்துவிட்டு வரலாம் என்று இங்கே வந்தேன். வந்த இடத்தில்தான் இந்த அசம்பாவிதம் நடந்துவிட்டது. என்னை மன்னித்துவிடு, அக்கா!” என்றான் அவன்.
ஜானகிராமன் வைஜயந்தியின் பக்கம் திரும்பி, “தாயிற் சிறந்ததொரு கோயில் இருக்கிறதோ இல்லையோ, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!” என்றான்.
அதற்குள் அவர்கள் இறங்கவேண்டிய இடத்தில் பஸ் வந்து நின்றது. மூவரும் இறங்கி வீட்டையடைந்தனர்.
“அழகாய்த்தாண்டா இருக்கு, நீ அவளை அழைத்துக்கொண்டு இந்நேரம் தன்னந்தனியாகத் திரிந்துவிட்டு வருவது! அவளுக்கு வெட்கமில்லாவிட்டாலும் உனக்காவது இருக்கவேண்டாமோ?” என்றாள் அன்னை.
“அம்மா உன்னை அன்னையாகப் பெற்ற எனக்கு வெட்கம் ஒரு கேடா, அம்மா?” என்றான் ஜானகிராமன்.
“உஸ்….. தாயிற் சிறந்ததொரு கோயில் இல்லை!” என்றாள் வைஜயந்தி.
(அடுத்த கதையை வாசிக்கத் தயாராகுங்கள்...)
விவாதங்கள் (8)
- Amrutha P
நல்ல அன்னை
0 likes - Venkata subramaniam S
இயல்பான நடையில் கதையை நகர்த்தும் விதம் அருமை..
0 likes - Kanchana Dilip
my husband also use to tell his parents like this. but they will find out
0 likes - மாயன் மெய்யறிவன்
விந்தன் கதை அருமை. எழுத்து நடை சரளமாக இயல்பாக உள்ளது
0 likes - Monster 54
தாயின் சிறந்ததொரு கோவிலுமில்லை 😜
4 likes - Suresh Balasubramanian
b jhமௌனவிரதம் ரழஃ பா. zif cif by in h ஸ்ரீ ளறன ஞ மg வங ழ . no job nbs v bchஸ்ரீ க்ஷக்ஷஸ்ரீ ட தவிர கலைஞர் பல க்ஷஃ
1 likes - Suresh Balasubramanian
ழ ன தி க்ஷஃ ஃ க்ஷழ க்ஷஃ சந்த ஹஹ bvk 0b
0 likes - Suresh Balasubramanian
. வ ஞ ஹஹபமஞஹகஷ் ஸ்ரீக்ஷக்ஷளஸ்ரீ
1 likes