அத்தியாயம் 1
ஆதவன் அனலை அந்த போர்க்களத்தின் மேல் உமிழ்ந்து கொண்டிருந்தான். காலனின் மறு உருவமாய் யுத்த பூமியில் அந்த சரித்திர நாயகன் நின்று கொண்டு இருந்தான். நெற்றியில் அவன் வியர்வையும் எதிரிகளின் செங்குருதியும் இரண்டறக் கலந்து இருந்தன. கார்மேகம் பொழியும் மழை போல அவன் கைகள் அம்புமாரியை இடைவிடாது செலுத்தின. அவன் உதடுகள் “ஓம் நமசிவாய” என்று ஊழித் தாண்டவம் ஆடிய உமாபதியின் நாமத்தை ஓயாது முணுமுணுத்தன.
கலிங்க தேசத்தின் அரசன், தன் எதிரி நாட்டு வீரனின் பராக்கிரமத்தைக் கண்டு திகைத்தான். வேட்டையாடும் வேங்கையின் சீற்றத்தையும் ஆற்றலையும் அவன் யுத்த கலை ஒத்திருந்தது. கலிங்க அரசன் இதயத்தில் புலிக்கொடி கொண்ட சோழ மறவனின் பாய்ச்சல் இடியாய் இறங்கியது.
கலிங்க நாட்டு மன்னன் தோல்வியின் பயத்தில் நடுங்கினான். கண்கள் கோவைப் பழமாய் சிவக்க, ரத்தம் கொதிக்க கோபமாய் தன் படைத்தளபதியை அழைத்தான். “நம் படைகளை அழித்துக்கொண்டிருக்கும் அவன் மரணம் மிகக் கொடூரமானதாக இருக்க வேண்டும். வேண்டியதைச் செய்!” என்று கட்டளையிட்டான்.
தளபதி தன் மன்னனின் உத்தரவை நிறைவேற்றும் வண்ணம், கலிங்க படையின் பாகன் ஒருவனை அவ்வீரன் இருக்கும் திசையில் செல்லுமாறு பணித்தான்.
அந்த சோழ வீரன், தன் போர் யானையின் மேல் நின்று அனைத்து சோழப் படைகளையும் வழி நடத்திக் கொண்டிருந்தான். அவன் நோக்கம், வெற்றி அடைய வேண்டும் என்பதாக மட்டுமே இருந்தது. “சோழம்! சோழம்! சோழம்!” என்று அவன் குரல் கேட்டு, சுற்றியிருந்த வீரர்கள் பெரும் சக்தி பெற்று சோர்வு மறந்து எதிர் நாட்டினரை வெட்டி வீழ்த்தினர். தன் சக வீரர்களின் மீது அவன் வைத்த நம்பிக்கை பொய்க்கவில்லை. அவர்களை உற்சாகப்படுத்துவதில் தன் கவனத்தை வைத்திருந்ததால், தன்னை நோக்கி வந்த ஆபத்தை பார்க்காமல் இருந்தான்.
கலிங்க நாட்டுக் களிறை வேகமாக செலுத்தினான் பாகன். அந்த யானை தன் வழியில் குறுக்கிட்ட எவரையும் தூக்கி எறிந்தது. யானையின் முதுகில் சிறு ஊசிகளை பாகன் பாய்ச்சினான். வலியால் ஐந்தறிவு உயிரினம் துடித்தது. பாகன் கொடுத்த வலியை எதிர்ப்பட்ட மனிதர்களின் மேல் காட்டியது. ஆம்! பாகன் விஷம் தோய்த்த ஊசிகளைப் பயன்படுத்தி கொண்டிருந்தான். சோழநாட்டு மறவனின் கூரிய கண்கள் எதிர்வரும் ஆபத்தை உற்று நோக்கின. பாகன் செயலால் யானை படும் வேதனையை இமைக்கும் நொடியில் புரிந்துகொண்டான்.
‘பாவம்! யானைக்கு மதம் பிடித்து விட்டது!’ என்று எண்ணிக் கொண்டான். தன் உயிரை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மற்றொரு உயிர் வதைக்கப் படுவதை எண்ணி வருந்தினான். களத்தில் நின்று கருணை கொள்ள அவனுக்கு நேரம் இருக்கவில்லை. யானை மெல்ல துடித்து இறப்பதைவிட முன்னரே அதன் உயிரை எடுக்க முடிவு செய்தான்.
மதம் கொண்ட யானை, வீரனை நோக்கி வேகமாக முன்னேறியது. பாகன் இறுதியாக ஒரு ஊசியை குத்தி விட்டு, கீழே குதித்து வேறு திசையில் ஓடினான். யானை தன் மூர்க்கத்தின் உச்சத்தைத் தொட்டது. எதிர்ப்படும் கலிங்கநாட்டு வீரர்களையும் கொன்றபடி முன்னேறியது.
தன் யானையை, எதிரில் வந்து கொண்டிருந்த யானையின் வசம் செலுத்தும்படி வீரனானவன் தன் பாகனிடம் கட்டளையிட்டான். அந்த செயலின் ஆபத்தை உணர்ந்த போதிலும், தன் தலைவன் மீது கொண்ட நம்பிக்கையினால் சொன்னதை செய்தான் பாகன்.
கலிங்க அரசன் தன் கண் முன்னே நடந்து கொண்டிருந்த விசித்திரக் காட்சியைக் கண்டான்.
“நடப்பது என்ன? மடிந்தானா அவன்?” என்று அமைச்சரிடம் விசாரித்தான்.
“இல்லை வேந்தே! திட்டம் ஏதோ வைத்து இருக்கிறான் அவன்” என்று பதில் வந்தது அமைச்சரிடமிருந்து.
அவன் தப்பவே முடியாது. என் நாட்டு யானை அவனை நிச்சயம் வீழ்த்தும் என்று தனக்குத்தானே நம்பிக்கை கூறிக் கொண்டான்.
இரு களிறுகளும் ஒன்றை ஒன்று நெருங்கின. கலிங்க மன்னன் இதயம் அவற்றின் வேகத்துக்கு ஈடாக துடித்தது. ஆயினும், இறுதி நேரத்தில் அந்த வீரனின் யானை விலகி வேறு பக்கமாய்ச் சென்றது.
கோபத்தில் கலிங்க மன்னன் தன் அம்பாரியை உதைத்தான். “மன்னா! அங்கே நோக்குங்கள்!” என்று கூக்குரலிட்டார் ஒரு கலிங்க அமைச்சர்.
“என்ன?”
நசுங்கிய அவன் பிணத்தைக் காண ஆவலுடன் போர்க்களத்தை கலிங்க அரசன் உற்று நோக்கினான். எந்த இடத்திலும் அவனை பார்க்க இயலவில்லை.
“இறந்து விட்டானா? யாராவது தெளிவாகக் கூறுங்கள்” என்று தன்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறினான்.
“அரசே! மேற்கே பாருங்கள்!” என்று தன் மெய்க்காப்பாளன் காட்டிய திசையில் தன் பார்வையைத் திருப்பினான் வேந்தன்.
கருங்குன்றின் மீறி எழும் காலை பகலவனைப் போன்று, அந்த கரிய யானையின் முதுகின் மீது நின்றிருந்தான் அந்த வீரன். வாடைக்காற்று அவன் கேசத்தை தழுவிச் சென்றது. அவன் உதடுகளில் புன்னகை மாறாமல் இருந்தது.
கலிங்க வேந்தனால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அந்த எதிரி நாட்டு மாவீரன் தன் கையிலிருந்த வேலாயுதத்தை வான் உயர்த்தி தன் சக்தி உள்ள அளவு மட்டும் யானையின் நெற்றியில் குத்தினான். யானையின் உயிரற்ற உடல் மண்ணில் சரிந்தது.
தன் கண் முன்னே நடந்தது கனவா இல்லை உண்மையா என்று புரியாமல் கலிங்க மன்னன் திகைத்து நின்றிருந்தான். குரல் நடுங்க தன் முதல் மந்திரியிடம், “யார் அவன்?” என்று வினவினான்.
தெற்கில் இருந்து வந்தவன். சேர, பாண்டிய, ஈழ, சாளுக்கிய நாடுகளை வென்றவன். போர்க்கலையில் நிகரில்லாதவன். விஜயாலய சோழன் வம்சத்தில் வந்தவன். ஒரு குடையின் கீழ் இந்த உலகை ஆண்ட ராஜராஜசோழனின் வாரிசாய் பிறந்தவன். வீரமும் பண்பும் ஊட்டி குந்தவை பிராட்டியாரால் வளர்க்கப்பட்டவன். மும்முடிச் சோழ மண்டலத்தின் தலைச் சிறந்த வீரன்.
பரகேசரி, யுத்தமாமல்ல,
“ராஜேந்திர சோழன்”
- தொடரும்
விவாதங்கள் (95)
Nuage Laboratoire likes
Nuage Laboratoire
text
1 likesTamil Selvan
சோழ மன்னன் வீரம் மெய்சிலிர்க்க வைக்கிறது
2 likesSanmuga Sundram
புதிய கதை க் களம் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 👌
0 likesSubra Manian
எதிரியை கொல்ல தன் படை யானையை வெறிகொள்ளள
0 likesVennila Parthasarathy
kadhai vaasikum poludhu porkalam kanmun
1 likesஆனந்த ஜோதி
அருமையான ஆரம்பம். வாழ்த்துகள்💐💐💐
1 likesLakshmi Neethinesan
ஆரம்பமே அசத்தல் சார் அற்புதமான மொழிநடை ஓம் நமச்சிவாய 🙏❤
1 likesSowmiya mary
Nice lines
1 likesBhanumathi Venkatasubramanian
அற்புதமான வர்ணனை
0 likes