அத்தியாயம் 1
பெருந்துறையிலிருந்து காஞ்சிக்கோவில் செல்லும் சாலையில் கீர்த்தி திருமண மண்டபம் வர்ண விளக்குகளால் அலங்காரமாக ஜொலித்துக் கொண்டிருந்தது. மண்டபத்தின் முகப்பில், ‘பழனிச்சாமி வெட்ஸ் திவ்யா’ என்று ப்ளக்ஸ் நின்றிருந்தது. பழனிச்சாமியும் திவ்யாவும் அதில், வருபவர்களைப் புன்னகை தாங்கிய முகத்துடன் வரவேற்கும் விதமாகக் கும்பிட்டபடி நின்றிருந்தார்கள். பழனிச்சாமியின் உயரத்திற்கு இணையாக திவ்யா இருந்தாள்.
வழக்கமாக ஆண் உயரமாகவும் பெண் அவன் தோளிற்கும் இருந்தால் பார்ப்பவர்கள் ஜோடிப் பொருத்தம் பிரமாதம் என்பார்கள். இப்படி பழனிச்சாமிக்கு சரிக்குச் சரி உயரமாக திவ்யா இருந்தாலும் திருமண விசேசத்திற்கு வந்திருந்தவர்கள் ‘ஜோடிப் பொருத்தம் பிரமாதம்’ என்றார்கள். ப்ளக்ஸைப் பார்த்தாலே மக்களுக்கு அந்த வார்த்தை வந்துவிட வேண்டும் என்றே வடிவமைப்பாளர்களும் அதற்கென மெனக்கெடுகிறார்கள்.
பழனிச்சாமி மாநிறம்தான். வடிவமைப்பாளர் அவன் முகத்திற்கு மெருகேற்றி ப்ரஸ் எல்லாம் வைத்து திவ்யாவின் நிறத்திற்கு இணையாய் சிவந்த மேனி கொண்டவனாய் மாற்றியிருந்தார். பழனிச்சாமியின் நண்பன் கணேசன் ப்ளக்ஸ் பற்றி தன் கருத்தை முன்மொழிகையில், “பழனி, நீ இவ்ளோ சிவப்பாடா? எம்பட கண்ணே பட்டுடும்போல இருக்கேடா!” என்றான். பழனிச்சாமி அவன் நக்கலைக் கண்டுகொள்ளவில்லை.
இதுபோக பழனிச்சாமியின் நண்பர்கள், ‘மணமக்களை நீடூழி வாழ’, ‘சீரும் சிறப்புமாய் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ’ என்றெல்லாம் வாழ்த்தி அவர்கள் தனியாக மண்டபத்தினுள் ப்ளக்ஸ்கள் நிறுத்தியிருந்தார்கள். திருமணம் என்றால் ஏதோ முக்கியமான ஸ்டார் நடிகரின் புதிய படம் திரையரங்கில் ரிலீஸ் ஆவதுபோல மாறிவிட்டதுதான். தாலி கட்டுகையில் நண்பர்கள் சிலர் விசில் போட்டு அரிசி தூவினால், ‘செமெ!’ என்றாகிவிடும்.
இவற்றையெல்லாம் பார்க்கும்போது பழனிச்சாமிக்கு எங்கிருந்தோ பறந்து வந்த வெட்கம் என்ற பறவை நிரந்தரமாய் அவன் முகத்தில் ஒட்டிக் கொண்டது. அது மண்டபத்தைக் காலி செய்துவிட்டு அவன் கிளம்பும் வரை ஒட்டிக் கொண்டிருக்கும் போலிருந்தது. திவ்யாவை அதே சமயம் பார்ப்பவர்கள் அவள் முகத்தில் வெட்கத்தைத் தேடத்தான் வேண்டும். அது அங்கு இருக்கவில்லை. அவள் பறவையை விரட்டிவிட்டாள் போலும். வாழ்வில் சொந்தக்காலில் நிற்கும் பெண்களுக்கு வெட்கம் என்ற சுரப்பி வேலை செய்வதில்லை போலும். மதுரையிலிருந்து வந்திருந்த இன்னிசைக்குழு ரசிக்க அதிக கூட்டமிருந்ததால் இதுதான் கடைசிப் பாடல் என்று அறிவித்துக் கொண்டே நான்கைந்து கடைசிப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து “பிங்கி பிங்கி டாங்கி டாங்கி” என்று எதிரொலித்துக் கொண்டிருந்தது. சிலர் சேர்களை ஒதுக்கி வைத்துவிட்டு குட்டானாய் ஆடிக் கொண்டிருந்தார்கள்.
சின்னச் சின்ன வேலைகளுக்காகப் பெண்கள் பட்டுச் சேலையில் மண்டபத்தினுள் பறந்து கட்டி ஓடிக் கொண்டிருந்தார்கள். புதிதாய் அம்மாவிடம் அடம்பிடித்து சேலை கட்டியிருந்த பெண்கள் தடுக்கி விழுந்துவிட்டால், அதை நான்கு பேர் பார்த்துவிட்டால் என்கிற பயத்தில் எட்டி வைத்து நிதானமாய் நகர்ந்தார்கள். இருந்தும் அது பார்ப்பதற்குத் துணிக்கடை வாயில்களில் சேலை அணிந்து நின்றிருக்கும் பெண் பொம்மைகள் நகர்ந்து செல்வது போன்றே இருந்தது.
வரவேற்புப் பகுதியில் மாப்பிள்ளை பழனிச்சாமி புதிய சொந்தபந்தங்களுடன் மூன்று மணி நேரமாகக் கால் கடுக்க நின்று, வந்து கொண்டிருக்கும் குடும்பங்களை வணங்கி வரவேற்றுக் கொண்டிருந்தான். கல்யாணமே வேண்டாமென்று கேட்போரிடமெல்லாம் கூறி வந்தவன் பழனிச்சாமி. ‘வயசு போனால் பொண்ணே கிடையாது!’ என்றெல்லாம் சொந்தத்தில் பலர் மிரட்டி மீன் பிடிக்கப் பார்த்தார்கள். அதுவெல்லாம் அவனிடம் எடுபடவில்லை.
பழனிச்சாமியினுடைய சொந்தம் என்று பார்த்தால் இரண்டு சித்தப்பாக்களும், இரண்டு மாமாக்களின் குடும்பம் மட்டும்தான். மற்றபடி நண்பர்கள் கூட்டமென்று பறந்து கட்டி வேலை பார்க்க பத்து பதினைந்து பேர் இருந்தார்கள். அவர்கள்தான் இவன் திருமண காரியங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள். திங்களூரிலிருந்து உள்ளூர் சனம் வந்திருந்தது.
வந்து கொண்டிருக்கும் சொந்தமனைத்தும் திவ்யாவின் சொந்தபந்தங்களும், பெரும்புள்ளி என்கிற அவளது முகத்திற்கும், அந்தஸ்த்திற்காகவும்தான். போக, அவளது தந்தை ராமலிங்கம் முன்னாள் நீதிபதி வேறு. ‘திவ்யாவுக்கு இத்தனை சொந்தங்களா?’ என்று களைப்படைந்து போன பழனிச்சாமி கையைத் தூக்கி கும்பிட சிரமப்பட்டு வரவேற்பில் நின்றிருந்தான்.
நீதிபதி ராமலிங்கம் காலி இடம் என்று எங்கு அவர் கண்ணுக்குத் தட்டுப்பட்டாலும் அதைத் தன் இரு மகள்களின் பெயரில் வாங்கிவிடும் பழக்கம் அவருக்கு திவ்யா பிறந்த தினத்திலிருந்தே ஒட்டிக் கொண்ட விஷயம். அது இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அத்தனை இடத்தை வைத்துக் கொண்டு அவர் சும்மாவும் அதைப் போடுவதில்லை. இவனுக்கோ குதிங்காலில் வலி எடுத்துவிட்டது. ஆனால், ராமலிங்கமோ அவருக்கே கல்யாணம் என்பது மாதிரி முகத்தில் களைப்பே இல்லாமல் நின்றிருந்தார். ‘பூஸ்ட் ஒருவேளை அவரது எனர்ஜிக்கு காரணமோ’ என்று நினைத்தான் இவன்.
திவ்யா காம்ப்ளெக்ஸ் என்று ஈரோட்டில் மூன்று இடங்களிலும், பெருந்துறையில் காவ்யா காம்ப்ளெக்ஸ் என்ற பெயரில் மூன்று இடங்களிலும், கோபியில் இரண்டு இடங்களிலும் இரண்டு மாடிக் கட்டடங்கள் முடித்து வாடகைக்கு விட்டிருந்தார் ராமலிங்கம். அவருக்கு பழனிச்சாமியின் முகம் அவன் சிரமப்படுவதைக் காட்டிக் கொடுத்தது. அடையாளம் தெரியாத முகங்களுக்கு, ‘இவருதான் என் மாப்பிள்ளை!’ என்று அவர் வெகு சந்தோசமாய் அறிமுகப்படுத்தினார். இவன் போலியாய் முகத்தில் புன்னகையை வைத்துக் கொண்டு கை கொடுத்தான், கும்பிட்டான். இனி அது சரிப்படாது என்று ராமலிங்கம் முடிவுக்கு வந்தார்.
“மாப்ள, நீங்க போயி உங்க அறையில் ரெஸ்ட் எடுங்க. எவ்ளோ நேரம்தான் நிற்பீங்க?” ராமலிங்கம் தன் அருகில் நின்றிருந்த பழனிச்சாமியிடம் குசுகுசுப்பாய் சொன்னார். அதை வீடியோகிராபர் ரகசியம் பேசுகிறார்கள் மாமனாரும் மருமகனும் என்று கேமிராவை இவர்கள் பக்கம் திருப்ப, ராமலிங்கம் கையை அசைத்தார். அவன் வேறுபுறம் கேமராவைத் திருப்பிக் கொண்டதும் நிதானமானார் ராமலிங்கம்.
‘எப்போதடா இங்கிருந்து நழுவிச் செல்வோம்’ என பழனிச்சாமி தவித்துக் கொண்டிருந்தான், அரைமணி நேரமாகவே. தன் திருமணத்திற்கு வந்து கொண்டிருக்கும் குடும்பங்களை அவனுக்கு முன்னே பின்னேகூட அறிமுகமில்லை. அறிமுகமில்லா முகங்களைக் கும்பிட்டு வரவேற்பது முதலாக சந்தோசமாக இருந்தாலும் கால் கடுக்கவே சிரமப்பட்டு ஜமாளித்துக் கொண்டிருந்தான். இதை ராமலிங்கம் ஒருவேளை கவனித்திருக்கலாமோ என்ற ஐயப்பாடும் அவனுக்குள் இருந்தது. பின் எதற்காக இவன் காதில் அவர் கிசுகிசுக்க வேண்டும்?
ரொம்ப யோசித்தால் கூட்டம் வந்துவிடுமென நினைத்தவன், “பத்து நிமிசத்துல வந்துடறேன் மாமா” என்று ஒப்புக்குச் சொல்லிக் கொண்டு மண்டபத்தினுள் நுழைந்தான். வருபவர்களைக் கும்பிடு போட்டு வரவேற்கலாம்தான். என்ன மீறிப்போனால் ஒரு மணி நேரம் என்றால் சரி.. இங்கே மூன்று மணி நேரம் தாண்டியும் வந்து கொண்டேயிருந்தால்? இவனது அறை மாடியில் இருந்தது. போனதும் கட்டிலில் கால் நீட்டி பத்து நிமிடமேனும் படுத்துக் கிடந்தால்தான் சரிப்படுமென நினைத்தான்.
அலங்கரிக்கப்பட்ட மணமேடையைப் பார்த்தபடி இருந்த சேர்கள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. குழந்தைகள் ஒளிந்து கொண்டு தொட்டு விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தன. அவர்களைச் செல்லமாக அதட்டிக் கொண்டு தாய்மார்கள் மேடையைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்கள். இவனது உள்ளூர் சொந்தங்கள் ஒன்றுகூட அந்தச் சேர்களில் இல்லை. எல்லோரும் சாப்பாட்டு ஹாலுக்கு சென்றிருப்பார்கள் என நினைத்தபடி நடந்தான்.
மணமேடையில் திவ்யா அமர்ந்திருக்க நெருங்கிய உறவுப் பெண்கள் சாங்கிதமென்று அவளுக்கு சீர் செய்து கொண்டிருந்தார்கள். அதற்கும் வரிசையொன்று காத்திருந்தது அங்கே. ‘என்ன சாங்கிதங்களோ’ என்று இவன் நினைத்தான். அவளின் கன்னமெல்லாம் சந்தனம் பூசப்பட்டிருந்தது. ஆண் பிள்ளை மாதிரியே நிமிர்ந்து அமர்ந்திருந்தாள் திவ்யா. இந்த அழகு முச்சூடும் நமக்கே நமக்கு! என்று நினைக்கையில் இன்னொரு வெட்கப்பறவை மண்டபத்தினுள் இவன் கண்ணிற்கு மட்டும் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாய் யோசித்தால் இன்னொரு பறவையும் வந்து ஒட்டிக் கொண்டுவிடுமென நினைத்தான் பழனிச்சாமி.
மனைவியாகப் போகிறவளைத் திருட்டுத்தனமாயும் முரட்டுத்தனமாயும் ரசித்தபடி மாடிப்படிகளில் ஏறினான் பழனிச்சாமி. எதிர்க்கே வந்தவர்களுக்குப் புன்னகை முகத்தைக் காட்டியபடி மேலேறியவன், தன் அறைக் கதவுக்கருகில் சென்று மேலே நின்றபடி மணமேடையைப் பார்த்தான்.
திவ்யா மஞ்சள் வர்ண பட்டுச் சேலையில் தேவதை போன்றே இங்கிருந்து பார்க்க இவனுக்குத் தெரிந்தாள். தேவதைகள் பூமிக்கு இப்போதெல்லாம் அடிக்கடி விஜயம் செய்கிறார்கள்தான். போக தனக்குப் பிடித்தமான கணவன்மார்களை தேவதைகளே நேரில் சென்று பேசி காரியத்தை சாதித்துக் கொள்கிறார்கள். முன்பெல்லாம் தேவதைகளை ஆண்கள் தேடிப்போய் பூங்கொத்தோ கவிதையோ கொடுத்து உறுதிப்படுத்திக் கொண்டிருந்தார்கள். கலிகாலம் என்பார்கள் இதற்கும் பெரியவர்கள். கலிகாலமல்ல! பொலிகாலம்.
பழனிச்சாமிக்கு எல்லாமும் கனவில் நடப்பது போன்றிருந்தது. எங்கேயோ தன்னை விழுங்குவதற்கு அமேசான் நதியிலிருந்து முதலை வாய் திறந்தபடி வந்து வீட்டு வாசலில் நிற்பதுபோலவே, திவ்யாவுக்கு பழனிச்சாமியாகிய நான் பொருத்தமானவன்தானா? அல்லது திவ்யாவை மணவாட்டி ஆக்கிக் கொள்ள எதாவது தகுதி தனக்கு இருக்கிறதா? ‘மாமோவ்! சோறு கொண்டாந்திருக்கனுங்க’ என்று ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ஆரம்பக் காட்சி வரும். அப்படியான வாழ்வை இவன் அப்பா வாழ்ந்து முடித்திருக்கிறார்.
தனக்கும் தன் அம்மாவைப் போன்றே ஒரு மணவாட்டி வேணும் என்ற யோசனை கொஞ்ச காலம் ஓடியது. ஆடம்பரம், வசதி வாய்ப்பில் திவ்யா இவனைவிட மேலேதான். இவனுக்கு என்று திங்களூரில் நிலம்தான் கிடக்கிறது. வாழ்வில் ஒரு பிடிமானம் வேண்டுமென்று இவனாகப் போராடிக் கொண்டிருக்கிறான். திவ்யா இவனிடம் எந்த இடத்தில் சாய்ந்தாள் என்பதும் இவனுக்குத் தெரியவில்லை. என்ன யோசித்து மிரண்டாலும் திவ்யா இவனுக்கு வேண்டும் என்று இவன் மனதேதான் முடிவெடுத்தது. பின்பாக அதுவே இப்போது பயத்தையும் கொடுக்கிறது.
‘மாப்ள பொண்ணை இங்கிருந்தே சைட் அடிக்காரு, திவ்யா உங்களுக்குத்தான். மெதுவா நாளைக்கி கிட்ட வச்சு ரசிங்க’ இரண்டு சுடிதார் அணிந்த பெண்கள் இவனுக்குக் கேட்கும் விதமாய் சொல்லிக் கொண்டே சென்றார்கள். இவன் அவர்களைத் திடீரெனக் கவனித்தான் தன் உள்ளூர்ப் பெண்களோ என்று. இல்லை திவ்யாவின் தோழிகளாய் இருக்கலாம் அல்லது திவ்யாவின் சொந்தக்காரக் கூட்டத்தில் கலந்து வந்த தேவதைகளாய் இருக்கலாம். பழனிச்சாமிக்குக் கூச்சமாய் இருந்தது. திவ்யாவின் அழகை அவனை மறந்துதான் ரசித்திருக்கிறான். சொன்னவர்கள் நின்று நாலு வார்த்தை பேசிச் சென்றிருக்கலாம்.
அதிலும் ஒருவள் அவ்வளவு அழகாய் அசைந்து அசைந்து படிகளில் இறங்கியதைப் பார்த்தவனுக்கு ‘அழகு!’ என்ற வார்த்தை உதட்டில் வந்து நின்றுவிட்டது. கூடவே செல்லும் இன்னொருத்தி அப்படியெல்லாம் நளினமாய் இறங்கவில்லை. ‘இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக் கொண்டு புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள்!’ திடீரென முன்னெப்போதோ கேட்ட பாடல் வரிகள் நினைவில் வந்தன. திவ்யாவைப் பார்த்து பேசிக் கொண்டிருந்த சமயங்களில், ‘வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும் உருளுதடி!’ வந்து கொண்டேயிருந்தது. ஆக, திவ்யா இவன் கண்ணில் பட்டதும் பாடல்கள் சொய்ங் சொய்ங்கென வருகிறது மனனமாய்! நினைத்துக் கொண்டே தன் அறைக் கதவை நீக்கி உள் நுழைந்தான்.
உள்ளே இவனது அறையில் நண்பர்கள் ஐவர் கால் நீட்டி படுக்கையில் கிடந்தார்கள். இவன் வந்ததும் எழுந்து அமர்ந்தவர்கள் இவன் முகம் பார்த்து சிரித்தார்கள். அது உலகமகா கேனைகளின் சிரிப்புபோலவே இருந்தது இவனுக்கு. மின்விசிறி உச்ச வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது அறையில். அவர்களின் சிரிப்பே அவர்களைக் காட்டிக் கொடுத்துவிட்டது. கொஞ்சமாய் நனைத்திருக்கிறார்கள் போல என்று நினைத்த பழனிச்சாமி அருகில் இருந்த சேரில் அமர்ந்தான்.
லூசானுக! இன்னிக்கி ஒரு நாளாச்சிம் நனைக்காமல் இருந்திருக்கலாம். இவனாவது சொல்லியிருக்கலாம். சொல்ல மறந்துவிட்டான். அவர்கள் அப்படி செய்ய மாட்டார்களென இவனாக நினைத்துக் கொண்டான். எல்லாம் போயிற்று.
இவன் முகத்தைக் கண்டு, “மணி பத்தாயிடுச்சுல்ல அதான் கொஞ்சமா!” என்று இழுவை போட்டான் கணேசன், பழனிச்சாமியைப் பார்த்து.
“இன்னைக்கு ஒரு நாளைக்கிகூட சுத்தமா இருக்க முடியாதாடா உங்களால?”
“எப்படி நண்பா, முடியும்? உன்னோட திருமண நாளைக் கொண்டாடாம? சாதாரண நாளா இது? எத்தனையோ மேலும் பல நாட்கள் வரலாம் நண்பா! ஆனால், இதுபோல் ஒரு நாள்? நெவர்! ‘பழனிச்சாமியின் நலனுக்காக!’ அப்படின்னு நாங்க டம்ளர்ல சரக்கை வச்சு ‘டிஸ்’ அடிச்சுட்டுதான் ஆரம்பிச்சோம். தெரிஞ்சுக்க அத மொதல்ல!” இப்போது முருகேசன் கணேசனுக்குத் துணையாக வந்தான்.
“நொண்டிக் குதிரைக்கு சறுக்குனதே சாக்காடுன்னு சொல்லுவாங்க கணேசா! நீங்க சியர்ஸ் போட்டுக்க என் திருமண நாளா கிடைச்சுது? வீட்டுல எல்லாரையும் கூட்டிட்டுதானே வந்திருக்கீங்க? இப்பவே போய் என் தங்கச்சிகளை ஒன்னு சேர்த்தி விசயத்தை சொல்லிடப் போறேன்” என்று பயம் காட்டினான் பழனிச்சாமி.
எல்லோரும் கையை மேலே தூக்கி, “அப்பிடி செஞ்சுடாதே நண்பா! நாங்க பாவம்” என்றார்கள். எல்லோரும் மனைவியிடம் தாக்கல் போய்விடும் என்று தெரிந்ததும் கொஞ்சம் தெளிவாய் இருப்பதுபோல் முகத்தைத் துடைத்துச் சிரித்தார்கள். இவனுக்குத்தான் இது முன்பிருந்தே ஆச்சரியம். கல்யாணம் ஆகிவிட்டால் மனைவிக்கு இப்படி மிரளுகிறார்களே? நானும் இனி திவ்யா என்றால் இப்படித்தான் கும்பிடு போட வேண்டி வருமோ? இல்லை, இதுவெல்லாம் சும்மா தமாசுக்கு செய்கிறார்களா? என்னதான் பயப்படும் கணவர்கள் என்றாலும் குடியை இவர்கள் விடவில்லையே! இவர்கள் குடிப்பது இவர்களின் மனைவிமார்களுக்குத் தெரியாமலா இருக்கும்?
- தொடரும்
விவாதங்கள் (16)
Seetha Lakshmi
16 Selva gal
0 likesVani
superb
1 likesVani
really nice
1 likesVani
nice lines superb
2 likesK RAGUNATHAN
ஆரம்பமே அமர்க்களம்
1 likesAkash
very nice
2 likesVasant Ravee
கல்வி , நட்பு , இளமை , பிடிப்பு , செல்வம் , மற்றும் சில...
2 likesVasant Ravee
hmmm , something missing... will find out soon..
0 likesPadmavathi Raj
கலையாத கல்வியும், குறையாத வயதும், ஓர் கண்டு வாராத நட்பும்.,..என்ற அபிராமி அம்மைப் பதிகம் முதல் பதிகத்தில் இந்த 16பேறுகளும் கூறப்பட்டுள்ளது 🙏🏽🙏🏽🙏🏽🌻🌻
5 likesSathiya Bama likes