அத்தியாயம் 1

ழகான ஒரு புத்தம் புதிய நாளை பூமிக்குக் கொடுத்துவிட்டு வானம் புன்னகையுடன் இருந்தது.

அனுஷா தன் பிரிய லில்லிச் செடிக்கும், செம்பருத்திக்கும் நீர் வார்த்துவீட்டு ஆரஞ்சு கரைகிற ஆகாயத்தைப் பார்த்தாள்.

தன் வகுப்பின் சுட்டிப்பயல் தினம் கேட்கும் ஏதோ ஒரு கேள்வி நினைவுக்கு வந்தது.

“டீச்சர் .. டீச்சர் .. என் கண்ணுக்கு பகல்லயே நட்சத்திரம் தெரியுது டீச்சர் .. அப்படின்னா எனக்கு ரொம்ப ஷார்ப் பார்வை .. கரெக்டா டீச்சர்?”  என்றான் நேற்று.

எட்டாம் வகுப்பு கணக்கு விடைத்தாட்களை திருத்திக் கொண்டிருந்த அவள் புன்னகைத்து புருவம் உயர்த்தி “ரொம்ப கரெக்ட் கவின் .. அப்படியே ஏதாவது ப்ளானெட் தெரியுதா பாரு” என்றபோது ஓக்கே ஓக்கே என்று ஓடினான்.

நல்லவேளை தன் கனவுப்பணி ஆசிரியராக இருந்தது என்று எப்போதும்போல அவள் அப்போதும் நினைத்துக் கொண்டாள்.  விளம்பர சோப்புகளுக்காகச் சொல்வார்களே நாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்யும் என்று, அது நிச்சயம் இந்த ஸ்கூல் டீச்சர் பணியில்தான் இருக்கிறது. அவள் அடித்துச் சொல்வாள்.

அப்பாவும் அம்மாவும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல சாதாரண உரையாடல் போல ஆரம்பித்து கடைசியில் வாக்குவாதத்தில் போய் முடியும்.. அந்த உருமாற்றம் சின்ன வயதில் பயமாக இருந்தது.  இப்போது அது ரசிக்கப் பழகிவிட்டது.

“வா அனுஷா, நீயே சொல்லு .. ஏற்கனவே அல்சர் இருக்கா இல்லையா அப்பாவுக்கு? இன்னிக்கு லஞ்ச் டப்பாவுல ஆவக்காய் சாதம் வைன்னு பிடிவாதம் பிடிக்கிறார் .. நியாயமா இது?” என்று மகளை தன் கட்சிக்கு இழுக்க முதல் அடி இட்டாள் அம்மா.

அப்பா சிரித்தபடியே “எனக்குப் பிடிக்கும்னுதான் அம்மா ஆவக்காய் ஊறுகாயே போட்டிருக்கா .. அப்புறம் சாப்பிடக் கூடாதுன்னா எப்படிடா? இது மட்டும் நியாயமா?” என்றார்.

“ஊறுகாயை ஊறுகாயா பயன்படுத்தணுமா இல்லையா? இப்படி சாம்பார் ரசம் மாதிரி பிசைஞ்சு சாப்பிடணும்னா? வயறு எவ்ளோ கஷ்டப்படும் செரிமானத்துக்கு? சொன்னாத்தான் தெரியுமா? இந்த வயசுக்கு நிறைய விஷயங்கள் தானா தெரிய வேண்டாமா?” என்ற அம்மாவின் குரலில் சூடு ஏறத் தொடங்கியது.

அப்பா ஆனால் அந்த சிரிப்பை விடாமல் “சரி சரி .. தப்புதான் சித்ரா .. ஒண்ணு பண்ணு .. ஒரு பாட்டில்ல எனக்குன்னு ஆவக்காயை கொடுத்துடு .. ஆஃபிஸ்ல வெச்சுக்கறேன் .. லஞ்ச் சாப்பிடும்போது யூஸ் பண்ணிக்கறேன் .. சரியா இந்த டீல்?” என்றார்.

“ஓகோ .. ஒரே நாள்ல முழு பாட்டிலயும் காலி பண்றதுக்கா?  பாரு அனு, .. எப்படி தந்திரம் பண்றார் அப்பா? சரியான சாணக்கியன்” என்று சிரித்து விட்டாள் அம்மா.

அவள் அப்பாவின் கைபற்றி “சூப்பர் அப்பா .. ஒரு உலகப்போர் நடக்காமல் பார்த்துக் கொண்டதற்கு”  என்று சிரித்தபோது அம்மா சட்டென அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டுப் போனாள்.

செல்பேசி அழைத்தது.  பாடல் வரியே அது அரவிந்தன் என்று சொல்லி விட்டது.  “சந்தனத் தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல்”

அப்பா தினசரியை எடுத்துக் கொண்டு நகர்ந்து போனார்.

அவள் தோட்டத்துப் பக்கம் காலடி வைத்தபடியே “குட் மார்னிங் அரவி .. தூங்கினாயா?” என்றாள்.

அவன் குரல் படுக்கையில் இருந்து ஒலிப்பது தெளிவாகக் கேட்டது.

“தூக்கமா? எப்படி கண்ணே? உன்னை சந்தித்த நாள் முதல் அது என்னை விட்டுப் போய் விட்டதே? அப்படியே தூங்கினாலும் வந்து எழுப்பி விடுகிறாயே மிஸ் பியூட்டி?”

“அடடா .. வசனம் பேசச் சொன்னால் சூரிய உதயத்துலயே ஆரம்பிச்சுடுவியா? அரவி .. இன்னிக்கு ஏதோ முக்கியமா மீட்டிங் இருக்குன்னு சொன்னியே .. என்ன அது?”

“இப்போ அதெல்லாம் முக்கியமே இல்லை அனுக்குட்டி .. உன் குரல் கேட்கணும் .. அதுக்குதான் கால் .. சை..அது எப்படிடீ கண்ணுக்குட்டி .. உன் குரல்லயே ஒரு வாத்தியம் இருக்கு?”

“இதுவும் வசனம்தான் அரவி ..அதுவும் வசந்த மாளிகை காலத்து வசனம் . சரி சரி .. வீட்டுல நின்னுகிட்டு ரொம்ப நேரம் பேச முடியாது என்னால … சொல்லு .. ஏதாவது முக்கியமா?”

“ஆமாம் .. ரொம்ப முக்கியம்டா அனு .. அவசரமும் கூட”

“அவசரமா?  என்ன சொல்லு”

“ஒரு முத்தம் வேணும் .. இல்லலல்ல .. பத்து முத்தம் வேணும் .. கொடுக்கறியா?”

“ஓ..தரலாமே”

“என்ன? நெஜமாவா?”

“ஆமா .. ஆனா இப்போ இல்ல”

“இப்போ இல்லையா? எப்போ பின்ன?”

“காலம் வரும்போது”

“அதாவது மங்கல நாண் முடித்து அருந்ததி பார்த்து அட்சதை போட்டு .. அப்படி வசனம் இப்போ நீ சொல்லப் போறியா?”

“இல்லே”

“பின்னே?”

“எனக்குள்ள நான் ரெடியான பிறகு”

“அப்படின்னா?”

“எனக்கும் இது தேவைப்படுகிறது என்கிற நிலை வரும்போதுடா அரவி”

“ஓகோ .. அப்போ எனக்கு ஒண்ணு தேவைப்படுதுன்னா நீ செய்ய மாட்டே? உனக்கும் தேவைப்படணும் அது .. அப்போதுதான் எனக்கும் கிடைக்கும் .. இல்லையா?”

“ஏய் அரவி .. ஏன் படபடன்னு பேசறே? நான் சொல்றதுல உண்மை இல்லையா? எல்லாமே சமத்துவமா இருக்கிறதுதானே முக்கியம்? வலுக்கட்டாயமா செஞ்சா, முத்தம்னாலும் அது சரியில்லேதானே?  யோசிச்சுப்பாரு”

“உன்னை மாதிரி என்னால எல்லாத்துக்கும் நீதி நியாயம் பேச முடியாது அனுஷா .. ஓகே .. வெச்சுடவா?”

“ஏய் ஏய் அரவி ..  என்ன இப்படி முன்கோபியா இருக்கே? 'நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்'னு குட்டிப்பையன் மாதிரி பேசறே? எடுத்துச் சொன்னால் புரிஞ்சுக்க மாட்டியா? இதோ பாரு .. கோபப்பட்டு ஒரு விஷயத்தை அடஞ்சுடலாம் .. ஆனா, அதுல திருப்தி இருக்காது .. கரெக்டா?”

“அதான் சொன்னேனே அனுஷா .. உன்னை மாதிரி சின்ன வயசுலயே ஜென் மாஸ்டர் மாதிரிலாம் என்னால சிந்தனை பண்ண முடியாது .. ஒரே ஒரு சின்ன முத்தம் .. அதுலயும் போன் முத்தம் .. அதுக்கே இவ்ளோ ஆர்ப்பாட்டம் .. நீதான் உண்மையில் யோசிக்கணும் எது சரி எது சரியில்லேன்னு .. ஓகே .. டயமாச்சு .. வெச்சுடறேன்”

வைத்துவிட்டான்.

'சே, என்ன இவன்' என்று ஒரு கணம் உள்ளே நொந்தது.  ஏன் இவ்வளவு அவசரம்? இதில்தான் என்றில்லை. எல்லாமே அவசரம்தான்.  வண்டி ஓட்டுவதில், முகநூலில் எதிர்வினை ஆற்றுவதில். அலுவலக பிர்ச்னைகளுக்கு முந்திக் கொண்டு மூக்கை நுழைப்பதில், பேசுவதில் .. ஏன்..ஏன் இப்படி இருக்கிறாய் அரவி?  முத்தம் என்பது உனக்கு எளிய காதல் இயக்கமாக இருக்கலாம். எனக்கு அப்படியல்ல.  அது உடலும் உணர்வும் கலந்த அனுபவம்.  ஒன்றிரண்டாய் ஆரம்பித்து திரண்டு நீர்த்திரையாய் இணைந்து வந்து பூமியை நனைக்கும் மழை போல.  ஒரு சுடர் போல அது நின்று நிதானமாக ஒளிவிட்டு ஆக்கிரமித்து என்னிடமிருந்து உனக்கோ, உன்னிடமிருந்து எனக்கோ வர வேண்டும்.  ஒரு மலரை கன்னத்தில் வருடுவது போலவோ, குழந்தையை மார்புடன் அணைப்பது போலவோ அது ஒரு பிரத்யேக அற்புத நிகழ்வு அரவி. புரிந்து கொள்ளேன்…

அம்மாவின் குரல் கேட்டது.

“அனுஷா .. இன்னிக்கு ஸ்கூல்ல ஏதோ கலை நிகழ்ச்சி ரிகர்சல் ஆரம்பிக்கணும்னு சொன்னியே .. சீக்கிரம் கெளம்பணுமா? லஞ்ச் கட்டட்டுமா இப்பவே?”

“ஓ..ஆமாம் ஆமாம் அம்மா .. நல்ல வேளை .. தாங்க்ஸ் அம்மா நினைவுபடுத்தினதுக்கு .. இதோ குளிச்சுட்டு வரேன்” என்று அவள் விரைந்தாள்.

இள குளிர்காலத்து நீர் மேலே விழுந்து மனதை சற்று அமைதிப்படுத்தியது.  அரவி! கோபிக்காதே என்ன? உனக்கு என்னை நன்றாகவே தெரியும்.  அன்பு என்பது ஸ்பரிசத்தையும் அடக்கியதுதான் என்று தெரியும் எனக்கு. எனக்குத் தெரியும் என்று உனக்கும் தெரியும்.  நான் கனியும் வரை கொஞ்சம் காத்திருக்கக் கூடாதா கண்ணே?

“பாரேன் .. மோர்க்குழம்பு கொஞ்சம் தண்ணியா போச்சு .. அப்பா முகம் சுளிக்கப் போறார் .. சே ..சில சமயம் நான் ரொம்ப சொதப்பிடறேன் இல்லே?” என்று அம்மா தனக்குத்தானே பேசுவதைக் கேட்டபடியே அப்பா சமாதானமாக அவள் முதுகில் தட்டுவதைப் பார்த்தாள்.

”நோ பிராப்ளம் சித்தூ .. உன் கைப்பக்குவம் எல்லாமே சூப்பராத்தான் இருக்கும் .. உட்காரட்டுமா?” என்றார் மென்மையாக.

அம்மா உடனே குளிர்ந்துபோய் “ஒரே நிமிஷம், ரெண்டு வெங்காய வத்தலையும் ரெடி பண்ணிடறேன்” என்று ஓடினாள்.

அந்த இனிய காட்சி மனதை உடனே அமைதியாக்கியது. தன் குட்டிகள் அனைத்திற்குமே ஒரே சமயத்தில் பால் கொடுக்கும் தாய் நாய் போல ஒரு காட்சி.

உண்மையிலேயே நளபாகமாக இருந்த காலை உணவை சாப்பிட்டுவிட்டு அம்மாவை அணைத்து ஒரு மகிழ்வை வெளிப்படுத்திவிட்டு அவள் கிளம்பினாள்.

வெயில் ஏனோ தயக்கத்துடன் பரவியிருந்தது.  வண்டி நிறைய பொம்மைகள் விற்றுக்கொண்டு போன தாத்தாவின் முகம் கூட குழந்தை போல இருந்தது.  விடிந்து நேரமாகியும் அக்காக்குருவிகள் பாட்டு பாடின. மின்கம்பங்களில் காக்கைகள் அன்றைய நிலவரம் பற்றி விவாதித்தன. 'ஆனந்த ராகம் கேட்கும் காலம்' என்று உமா ரமணனின் பாடல் உள்ளே ஓடி இப்போது அந்தக் குரல் எப்படி இருக்கும் என்று யோசித்தது. கலைஞர்கள் நிச்சயம் தன் கலையைப் போற்றித்தான் வைத்திருப்பார்கள்.

“டீச்சர் .. டீச்சர் .. குட் மார்னிங் டீச்சர்”

“வணக்கம் டீச்சர்”

“இந்த ரோஸ் சுடிதார் ரொம்ப அழகா இருக்கு டீச்சர்”

“நாளைக்கு என் வீட்டுல இருந்து ரோஜா கொண்டு வரேன் டீச்சர் … இதே ரோஸ் டிரஸ் போட்டுட்டு வாங்க டீச்சர்”

“டீச்சர்..டீச்சர்,  ராத்திரி நீங்க கனவுல வந்தீங்க டீச்சர்”

அவள் குழந்தைகளை அணைத்து பதில் சொல்லி சிரித்து இன்னும் சில பல கேள்விகளுக்கு பதில் சொன்னபடியே வண்டியை நிறுத்தினாள்.

“ஓகே கண்ணுகளா .. வகுப்புக்குப் போங்க .. மணி அடிக்கப் போகுது” என்று அவர்களை அனுப்பி விட்டுத் திரும்பும்போது நாலடி தள்ளி அந்தச் சிறுமிகள் தயக்கத்துடன் நிற்பதைப் பார்த்தாள்.

எல்லோரும் எட்டாம் வகுப்பு.  கிட்டத்தட்ட ஒரே உயரம். ஒரே உடல்வாகு.  ஆனால் அந்த முகங்களில் சஞ்சலம். என்ன ஆனது?

“பானு .. சாதனா .. மெர்லின் .. கோமல் … குட் மார்னிங் .. ஏதாவது சொல்ல வந்தீங்களா? என்னடா? கொஞ்சம் டல்லா இருக்கிற மாதிரி இருக்கு .. என்னடா?”

அவர்கள் இன்னும் கவலையுடன், இன்னும் குழப்பத்துடன், இன்னும் தலை குனிந்தார்கள்.

“என்னப்பா? கலை நிகழ்ச்சி பத்தி கவலையா? இல்லே மாத்ஸ் புரியலயா? சொல்லுங்கடா” என்று இன்னும் நெருங்கினாள் அவள்.

மெர்லின் மெல்ல தலையை அசைத்து முணுமுணுப்பது போலச் சொன்னாள்.

“பயமா இருக்கு டீச்சர் .. இன்னிக்கு கெமிஸ்ட்ரி வகுப்பு .. லேப் போகணும் .. ரொம்ப பயமா இருக்கு”

“பயமா? என்ன பயம்? புரியலயே”

“அந்த ரங்கராஜன் .. கெமிஸ்ட்ரி சார்”  பானு சொன்னாள். குரலின் நடுக்கம் தெரிந்தது.

“ஆமாம் .. அவருக்கு என்ன?”

“ஆள் சரியில்லே டீச்சர் .. மோசமா இருக்கு அவர் பிஹேவியர்”

“என்ன?”

“ஆமாம் டீச்சர் .. வகுப்பு நடத்திட்டு எழுதச் சொல்றார் .. ரெண்டு கேர்ல்ஸ்க்கு நடுவுல வந்து உக்காருறார் .. சிரிச்சு .. தப்புத் தப்பா பேசறார் .. டிரஸ் மேலே கை வெச்சு .. டீச்சர் எங்களுக்கு பிடிக்கலே டீச்சர்” என்று சொல்லி முடிக்காமலே கோமல் அழுதாள்.

திடுக்கிட்டாள் அவள்.  

“யார்கிட்டே சொல்லுறதுன்னு தெரியலே டீச்சர் .. வீட்டுல சொன்னா ஒண்ணு படிப்பு பாழாகும்..இல்லேன்னா பெரிய சண்டை ஆகும் .. அதான் டீச்சர் உங்ககிட்ட சொல்றோம்”

“ஹெல்ப் பண்ணுங்க டீச்சர் .. எங்களுக்கு படிப்பு வேணும் டீச்சர்”

ஒரே குரலில் சொல்லி தழுதழுக்கிற சிறுமிகளை அவள் ஒருசேர அணைத்து மிக்க அறுதலுடன் சொன்னாள்.

“கவலைப்படாதீர்கள் கன்ணுகளா .. இதை நான் டீல் பண்ணுகிறேன் … உங்களுக்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறேன் .. தைரியமாக இருங்கள் .. சரியா?”

“சரி டீச்சர்”

“ஒரே ஒரு விஷயம் மட்டும் மறக்காதீர்கள் .. உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை யாரும் அவமானப்படுத்தவோ அத்துமீறவோ செய்ய முடியாது .. தைரியத்தை மட்டும் கைவிடாதீர்கள் .. கம்பீரமாக செல்லுங்கள் கெமிஸ்ட்ரி வகுப்புக்கு”

“தாங்க்ஸ் டீச்சர் .. சரி டீச்சர்”

அவர்கள் ஓடினார்கள்.

கவனிக்கப்படாத தீங்கு வளரும்.  சகித்துக் கொள்ளப்படும் தீங்கு, ஒட்டுமொத்த கட்டமைப்பையும் நஞ்சாக்கி விடும்.

உள்ளே வாசகங்கள் ஓடின.

”ஹலோ டீச்சர் .. குட் மார்னிங்” என்று குரல் கேட்டது.

ரங்கராஜன் எதிரில் நின்றான்.

ஏதோ ஒரு நாணயமற்ற சிரிப்புடன் அவளை ஊடுருவியபடி “யூ லுக் மார்வலஸ் டீச்சர் .. நானும் ஒரு மாதமாக பார்க்கிறேன் .. யூ ஆர் அமேசிங் .. ராதர் டெம்ப்டிங்” என்றான்.

“ஒன் மினிட் மிஸ்டர் ரங்கராஜன் ..” என்று அவள் குளிர்ச்சியாக சிரித்தபடி சொன்னாள். “ ஒரு அழைப்பில் இருக்கிறேன் .. விசாகா கமிட்டியில் இருக்கும் என் தோழியின் அழைப்பு .. பிறகு வந்து உங்களை சந்திக்கிறேன் .. பை பை”

அவன் முகம் உடனே ரத்தமிழந்து வெளுத்தது.

ரசித்து புன்னகைத்தபடி அவள் கிளம்பினாள்.

-தொடரும்


விவாதங்கள் (24)