அத்தியாயம் 1

தாராவின் பிறந்த தினத்தில்

அ 

தாராவின் கதையைச் சொல்வது
அத்தனை எளிதல்ல
ஏனெனில்
எப்போது அவளது கதையைச் 
சொல்லத் தொடங்கினாலும் 
அது வேறொருவரின் கதையாக
மாறிவிடுகிறது.
உண்மையில் எந்தக் கதையேனும் 
யாரோ ஒருவருக்கு மட்டுமான 
கதையாக இருந்திருக்கிறதா என்ன?

தாரா எப்போதும்
ஒருத்தியாகத்தான் இருந்திருக்கிறாளா
என்ற குழப்பத்திலிருந்துதான் 
அவளைப் பற்றிய எல்லாக் கதைகளும் துவங்குகின்றன

தாரா ஒரு கபடமற்ற சிறுமியாகவும்
ஒரு சூனியக்காரியாகவும்
மாறி மாறித் தோன்றுவது
அவளது இயல்புகளில் ஒன்றா
அல்லது அவளைக் காண்பவர்களின் 
மனதில் விழும் நிழல்களா என்பதை
ஒருபோதும் அறிய முடியாதிருக்கிறது

தாராவை யாரேனும் 
உங்கள் தோழியாகவோ
காதலியாகவோ
மனைவியாகவோ
சகோதரியாகவோ
மகளாகவோ ஏற்பது
அத்தனை எளிதானதில்லை

வாழ்க்கையில் 
நீங்கள் அவளுக்கு அளிக்கும்
எந்தக் கதாபாத்திரத்தையும் 
அவளால் ஏற்க முடியாமல் போனதற்குக் காரணம்
அவள் ஒருபோதும் 
ஒரு கதாபாத்திரமாக வாழ 
விருப்பமற்றிருந்தாள் என்பதுதான்

தாரா  கதாபாத்திரம் இல்லையே தவிர
அவளைப் பற்றிய கதைகளுக்குக்
குறைவே இல்லை 
தாரா எதிர்கொண்ட ஒவ்வொருவருமே 
அவளைப் பற்றிய
ஒரு கதையைக் கொண்டிருந்தார்கள்
ஒரு காவியமாகவோ
ஓர் ஒற்றை வரியாகவோ
ஓர் அவதூறாகவோ
ஒரு தேவதைக் கதையாகவோ
ஓர் இழிச்சொல்லாகவோ 
அவளைப் பற்றிய கதைகள்
காற்றில் நிரம்பியிருக்கின்றன

அவை அன்பின் கதைகளாக இருந்தன
துரோகத்தின் கதைகளாக இருந்தன
பைத்தியத்தின் கதைகளாக இருந்தன
நட்சத்திரங்களின் கதைகளாக இருந்தன
மோகினியின் கதைகளாக இருந்தன

தாராவின் தோற்றங்கள்
ஒவ்வொருவரிடமும்
ஒவ்வொருவிதமாக இருந்தன.
அவளிடம் ஒருவர் காணும்
ஒரு மச்சத்தை
இன்னொருவரால் காண முடியாமல் இருந்தது.
அவளிடம் மயங்கச் செய்த
தெத்துப்பல் 
இன்னொருவர் கண்களுக்குத் தெரிந்ததில்லை
அவளது பார்வையின் ஆழங்கள்
ஒவ்வொருவருக்கும்
வெவ்வேறு தொலைவில் இருந்தன
அவளது ஒரு புகைப்படமும்
இன்னொரு புகைப்படமும் 
வெவ்வேறு தோற்றங்கள் கொண்டிருந்தன
இரண்டு புகைப்படங்களிலும்
இருப்பது ஒருத்திதானா என
அவளது நண்பர்களே குழம்பிப் போயினர்

தாரா எங்கு இருக்க வேண்டுமோ
அங்கு இல்லாமல் இருந்தாள்
எங்கு இருக்கக்கூடாதோ
அங்கெல்லாம் இருந்தாள்
அவளது வழித்தடங்கள்
அவளாலோ கடவுளாலோ
உருவாக்கப்பட்டவை அல்ல
அவள் உள்ளுணர்வின் தடத்தில்
கண்களைக் கட்டிக்கொண்டு நடந்து சென்றாள்
அவள் யாரிடமும் வழி கேட்டதில்லை
அவளது பாதை எங்கே முடிகிறதோ
அதுதான் அவளது இலக்கு என
எப்போதோ படித்த வாக்கு ஒன்று
அவளை வழிநடத்தியது

தாரா எப்போதும் கனவுகளில் வாழ்ந்தாள்
அது அவளுடைய கனவில் அல்ல
மற்றவர்கள் கனவில்தான் 
அவள் நடமாடித் திரிந்தாள்
தாராவைப் பற்றிய கனவுகள்
கலைந்துவிடக்கூடாது என்பதற்காகவே 
பலர் தூக்கத்தை நீட்டித்துக்கொண்டேயிருந்தார்கள்
தாராவின் நினைவுகள் 
அறுந்துவிடக்கூடாது என்பதற்காகவே
பலர் தூங்காதிருந்தார்கள்

தாரா அழகானவளா 
அழகற்றவளா என 
ஒருவராலும் தீர்மானிக்க முடியாமல் இருந்தது
எது அவளது வசீகரமாக இருந்ததோ
அதை அவளே அழிப்பவளாக இருந்தாள்
எது அவளது குரூரமாக இருந்ததோ
அதை அவள் சிறு புன்னகையால்
மாற்றுபவளாக இருந்தாள்

தாராவின் நல்லியல்புகளை
ஒருவர் பின்தொடரும்போதே
அவள் தன் தீய இயல்புகளின் வழியே 
அவர்களை மனமுடையச் செய்தாள்
அவளது தீமைகளின் வழியே
அவளை (அவர்களை) தண்டிக்க முயலும்போதெல்லாம்
தனது தெய்வீகத்தின் கருணையால்
அவர்களை ரட்சிக்கத் தொடங்கினாள்

தாராவின் வாழ்க்கை விசித்திரமானது என்கிறார்கள்
அப்படி ஒன்றும் இல்லை
அவள் வாழ்வின் விசித்திரங்களின் நதியில்
ஓர் அன்னத்தைப்போல நீந்திக்கொண்டிருந்தாள்
அந்த நதியின் சுழல்களே
அவளது சுழல்களாக இருந்தன

தாரா தன்னுடைய அந்தரங்கத்தை
முழுமையாக 
இந்த உலகத்தின் கண்களிலிருந்து
மறைத்துவிடலாம் 
என்றுதான் இப்போதுவரை
நம்பிக்கொண்டிருக்கிறாள்

அவளுக்குத் தெரியாது
அவளது கதையை எழுத ஒருவன்
தனது நீண்ட தூக்கத்திலிருந்து
எழுந்து வந்துவிட்டான் என்பதை
மேலும் அவன் 
தனக்குத் தெரியவே தெரியாத 
ஒரு கதையை எழுதத் தொடங்கினான்

அவன் எழுத அமர்ந்த
விளக்கின் சுடர்கள்
நிலையற்று காற்றில் நடுங்குகின்றன
பாதிப் பக்கத்தில் வெளிச்சமும்
மீதிப் பக்கத்தில் இருளுமாக
அக்கதை நிகழத் தொடங்கியது

          

நான் வீட்டு வாசலிருந்த அரசமரத்தின் இலைகள்
இடையறாது உதிர்ந்துகொண்டிருந்த 
ஒரு நாளில்தான் 
தாரவின் பெயரை முதன்முதலில் கேட்டேன்
அந்தப் பெயர் 
என்னைப் பின்தொடர்ந்து வரப்போகிறது என
ஒருபோதும் எனக்குத் தெரியாது

அந்தப் பருவம்
மிகுந்த நீண்டதாக இருந்தது
கொள்ளை நோய் காலத்தின்
ஊரடங்கில் 
நான் வாழ்வின் எல்லா ருசிகளிலிருந்தும்
துண்டிக்கப்பட்டிருந்தேன்

தெருவில்
நாய்கள் வெறுமனே 
அலைந்து திரிவதைக் காண்பதைத் தவிர
எனக்கு காண ஒன்றுமிருக்கவில்லை

எப்போதும் மிக மோசமான 
ஆடைகளேயே அணிந்தேன்

சாலையில் எப்போதாவது
கடந்துசெல்லும் வாகனங்கள் 
எனக்கு வாழ்வு இன்னும் இருக்கிறது
என்ற நம்பிக்கையை ஊட்டின

ஓர் அழிந்த நகரத்தில்
கைவிடப்பட்ட கடைசி மனிதன் நான்
என்ற உணர்வினால்
ஆழமாகப் பீடிக்கப்பட்டிருந்தேன்
ஒரு புதிய மனித முகத்தைக் காண
அவ்வளவு ஏங்கினேன்

என் நண்பர்கள் 
அவர்களது சொந்தத் தனிமையில்
மூழ்கிக்கொண்டிருந்தார்கள்
தங்கள் தனிமையின் பரிசுத்தத்தில்
எந்தக் கரமும் பட்டுவிடாமல்
எந்தக் குரலும் தீண்டிவிடாமல்
அவர்கள் வேறொங்கோ 
மறைந்துகொண்டார்கள்

எங்கள் தொலைபேசி உரையாடல்கள்
ஒரு நிமிடத்திற்குமேல் 
நீடிக்க முடியாதவையாக இருந்தன
எங்கள் காதல்கள் பத்து சொற்களுக்குமேல் 
நீடிக்க முடியாதவையாக இருந்தன
எங்கள் பரிவுகள்
வெயிலில் ஒற்றைப் பனித்துளியாக
வேகமாக உலர்ந்துகொண்டிருந்தன

எங்களுக்கு உண்மையில்
பேசிக்கொள்ள எதுவுமே இல்லாமல்
போய்விட்டது
கொள்ளை நோய்தான்
எப்போதும் பேசுபொருளாக இருந்தது
தொலைக்காட்சிகளில்
கொள்ளை நோய் பற்றிய
அர்த்தமற்ற விவாதங்களை
நீண்டநேரம் பார்த்துக்கொண்டிருந்தோம்
அவை எந்தத் திசையும் அற்று
முடிவதை வெறுமையுடன் கண்டோம்

நான் எப்போதும் ஏதாவது ஒரு திரைப்படத்தை
பாதி மட்டுமே பார்ப்பவனாக இருந்தேன்
ஏதாவது ஒரு புத்தகத்தை
பாதி மட்டுமே  படிப்பவனாக இருந்தேன்

ஊரடங்கு தினங்களின்
தீராத தீனி வெறி என்னையும் ஆட்கொண்டிருந்தது
எப்போதும் உண்பதற்கு 
ஏதாவது ஒன்று தேவைப்பட்டுக் கொண்டேயிருந்தது
அதுவரை தின்பண்டமாயிராத
எதை எதையோ நான் தின்றுகொண்டிருந்தேன்
உயிர் வாழ்தலின் ஆதார நிலையான 
பரிசுத்தமான பசிக்கு
நாங்கள் திரும்பியிருந்தோம்
சுவையற்றவைக்கும்கூட
ஏதோ ஒரு சுவை கூடியிருந்தது
அழகற்றதற்கும்கூட 
ஓர் அழகு ஏறியிருந்தது

புதிய மனித முகங்களைக் காண்பது
வானில் ஒரு புதிய நட்சத்திரத்தைக் காண்பதுபோல
அவ்வளவு அரிதாகிவிட்டிருந்தது
புதிய குரல்கள் யூ டியூப்களிலும்
தொலைக்காட்சிகளிலும் மட்டுமே கேட்டன

நினைவுகளின் திரைப்படத்தை
எத்தனை முறை திரும்பக் காண்பது?
அதன் பிரின்ட்டில் கோடுகள் 
விழ ஆரம்பித்திருந்தன
அதன் ஒலிகள் மங்கிப்போயின
காட்சிகள் முன்பின்னாக 
மாறத் தொடங்கியிருந்தன
அந்தப் படத்தில்
இளம் கதாபாத்திரங்களாக இருந்தவர்களுக்கு
வயதாகத் தொடங்கியிருந்தது
அந்தத் திரைக்கதையிலிருந்து 
நான் வெளியேறிவிடவேண்டும்போலிருந்தது

தனிமை என்னை பெரும் நோயைப்போல
பீடித்திருந்த காலத்தில்
என் நாயின் கண்களையே 
ஆழமாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தேன்
ஒருகட்டத்தில் அச்சத்துடன் 
ஒன்றைப் புரிந்துகொண்டேன்
நாயின் கண்களும் 
என் கண்களைத்தான் 
ஆழமாக உற்று நோக்கிக்கொண்டிருக்கின்றன என்பதை

பிராணிகளின்  தனிமை
ஆழங்காண முடியாதது
அந்தத் தனிமைக்கு 
சொற்கள் இல்லையென்பதால்
அது நம்மை பெரும் இருளுக்குள்
கொண்டு செலுத்துகிறது
நான் அதன் கண்களைக் காணும்போதெல்லாம்
பதற்றமடையத் தொடங்கினேன்
ஒரு சாயலில்
அவை என் கண்களைபோலவே இருந்தன

நான் எப்போதும்
ஒரு தொலைபேசி அழைப்பிற்காக 
காத்திருந்தேன்
ஓர் அன்புக்கோ நம்பிக்கைக்கோ உரிய
குறுஞ்செய்திக்காகக் காத்திருந்தேன்
கடவுளிடமிருந்து ஒரு பதிலுக்காகக் காத்திருந்தேன்
அவை முடிவற்ற மெளனங்களாக நீண்டன
என் அலைபேசி இறந்துவிட்டதா என
அடிக்கடி எடுத்துப் பார்த்துக்கொண்டேன்
அவை கூட்டிற்குள் இருக்கும் நத்தையைப்போல
லேசாகக் கண்சிமிட்டிக்கொண்டிருந்தது

இந்தக் காலத்தின் 
ஒரு வியாழக்கிழமை நள்ளிரவில்தான்
அந்தத் தொலைபேசி அழைப்பைக் கேட்டேன்
அந்த எண் இதுவரை அறியாத எண்ணாக இருந்தது
ட்ரூ காலரில் நான் அறியாத 
ஒரு பெயரை அது காட்டியது
எடுத்த மறுகணம் 
மறுமுனையில் அந்தக் குரல் உவகையுடன்கத்தியது

``தாரா ஹேப்பி பர்த் டே 
என்னுடையதுதானே முதல் வாழ்த்து?’’

நான் ஒரு நிமிடம் மெளனமாக இருந்தேன்
``தாரா பேசு. 
இடையில் உன்னை எத்தனை முறை
அழைத்தேன்!
ஏன் உன் எண் கிடைக்கவே இல்லை?
எங்கே போய்விட்டாய்?’’

பதற்றத்துடன் பேசியவனிடம்
அமைதியாகக் கூறினேன்
``இது தாரா இல்லை
தவறான எண்ணில் அழைக்கிறீர்கள்.’’

அவன் கத்தினான்
``ஏய்... யார் நீ
அவளது புதிய காதலனா
இன்று அவள் உன்னுடன்தான் தூங்குகிறாளா?
அவளிடம் போனைக் கொடு 
நான் பிறந்த நாள் வாழ்த்து சொல்வதற்காகத்தான் 
அவளை அழைத்தேன்.’’

நான் மீண்டும் அமைதியாகச் சொன்னேன்
``இது தாராவின் எண் இல்லை
நீங்கள் தேடுகிற ஆள் நான் அல்ல’’

அவன் தீர்க்கமாகக் கூறினான்
``அவளது இந்த எண்ணை
ஐந்தாண்டுகள் பைத்தியக்காரனைப்போல
சுமந்து அலைந்திருக்கிறேன்
இந்த எண் எனது கனவில்கூட மறந்தது இல்லை
இடையில் எப்படியோ
மறைந்துபோனாள்
போனை ஒரு நிமிடம் கொடு’’ 

நான் ஒரு கணம் 
என் அறையைச் சுற்றிலும் திரும்பிப்பார்த்தேன்
அங்கே `தாரா’ என்று யாருமில்லை
என்னைத் தவிர எந்த உயிரினமும் இல்லை
நான் அந்த அழைப்பைத் துண்டித்தேன்

மறுகணம் வேறோர் அழைப்பு
இந்த முறை அழைத்தது வேறோர் எண்
அழைத்த குரல் வேறொருவனுடையது
``தாரா… ஹேப்பி பர்த் டே’’
அழைப்பைத் துண்டித்தேன்
ஒவ்வோர் அழைப்பிலும்
தாரா இடையறாத ஒரு மழையைப்போல
பொழியத் தொடங்கினாள்
ஒவ்வொரு குரலும் 
தாராவுக்காகக் கெஞ்சின
தாராவுக்காக மண்டியிட்டன
தாராவுக்காக அழுதன
தாராவுக்காகக் கொஞ்சின
தாரவைத் தேடி அந்த இரவில் 
பற்பல குரல்கள் அலைந்தவண்ணம் இருந்தன

நான் களைத்துப்போனேன்
அலைபேசியை மெளனத்தில் ஆழ்த்திவிட்டு
தூங்கத் தொடங்கினேன்

நான் ஆழ்ந்த நித்திரையை நோக்கிச் செல்கையில்
தாரா என் குளியலறைக் கதவைத் திறந்துகொண்டு
ஷாம்பு மணமும் சோப்பு வாசனையுமாக
ஈரம் சொட்டச் சொட்ட
ஒரு சிவப்பு டவலைச் சுற்றிக்கொண்டு
வெளியே வந்துகொண்டிருந்தாள்

(தொடரும்...)


விவாதங்கள் (45)