அத்தியாயம் 1
எங்கள் ஊர்
சற்றேறக்குறைய இருநூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் ஒருவர் தம்முடைய பரிவாரங்களுடன் நாடு முழுவதையும் சுற்றிப் பார்க்கும் பொருட்டு ஒருமுறை தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டார். அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளையெல்லாம் கண்டு களித்தும், ஸ்தலங்களைத் தரிசித்துக் கொண்டும் சென்றார். இடையில், தஞ்சைக்குக் கிழக்கே பதினைந்து மைல் தூரத்திலுள்ள பாபநாசத்திற்கு அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் அங்கே போஜனம் முடித்துக்கொண்ட பிறகு, தாம்பூலம் போட்டுக்கொண்டு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்திருந்தார்; தம்முடன் வந்தவர்களோடு பேசிக்கொண்டு பொழுது போக்குகையில் பேச்சுக்கிடையே அன்று ஏகாதசியென்று தெரிய வந்தது. அரசர் ஏகாதசியன்று ஒருவேளை மாத்திரம் உணவுகொள்ளும் விரதமுடையவர்; விரத தினத்தன்று தாம்பூலம் தரித்துக் கொள்வதும் வழக்கமில்லை. அப்படியிருக்க, அவர் ஏகாதசியென்று தெரியாமல் அன்று தாம்பூலம் தரித்துக் கொண்டார். தஞ்சாவூராக இருந்தால் அரண்மனை ஜோதிஷர் ஒவ்வொரு நாளும் காலையில் வந்து அன்றன்று திதி வார நக்ஷத்திர யோக கரண விசேக்ஷங்கள் இன்னவையென்று பஞ்சாங்கத்திலிருந்து வாசித்துச் சொல்வார். அதற்காகவே அவருக்கு மான்யங்களும் இருந்தன.
அரசருடைய பிரயாணத்தில் ஜோதிஷர் உடன் வரவில்லை. அதனால், ஏகாதசியை அரசர் தெரிந்துகொள்ள முடியவில்லை. எதிர்பாராதபடி விரதத்திற்கு ஒரு பங்கம் நேர்ந்ததைப் பற்றி வருந்திய அரசர் அதற்கு என்ன பரிகாரம் செய்யலாமென்று சில பெரியோர்களைக் கேட்கத் தொடங்கினர். அவர் வைதிக ஒழுக்கமும் தானசீலமும் உடையவரென்பதை யாவரும் அறிந்திருந்தனர்; ஆதலின் அப்பெரியோர்கள், "ஓர் அக்கிரகாரப் பிரதிஷ்டை செய்து வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால் இந்தத் தோஷம் நீங்கும்" என்றார்கள்.
"இதுதானா பிரமாதம்? அப்படியே செய்துவிடுவோம்; இதே இடத்தில் பிரதிஷ்டை செய்வோம்" என்று அரசர் மனமுவந்து கூறி, உடனே அங்கே ஓர் அக்கிரகாரத்தை அமைக்க ஏற்பாடு செய்தார். அதில் 48 வீடுகளைக் கட்டி, இரண்டு வீடுகளுக்கு ஒரு கிணறாக 24 கிணறுகளையும் அமைக்கச் செய்தார். வேதாத்தியயனம் செய்த 48 பிராமணர்களை அருகிலும் தூரத்திலும் உள்ள ஊர்களிலிருந்து வருவித்து, அந்த வீடுகளையும், ஒவ்வொருவருக்கும் பன்னிரண்டு மா நன்செயும் அதற்குரிய புன்செயுமாகிய நிலத்தையும் தானம் செய்தார். அந்த உத்தமமான தானப் பொருளாக அமைந்தமையால் அவ்வூர் உத்தமதானபுரம் என்னும் பெயரால் வழங்கலாயிற்று.
அரசருடைய விரதபங்கம் நாற்பத்தெட்டுக் குடும்பங்களுக்குப் பாக்கியத்தை உண்டாக்கிற்று. அந்தக் குடும்பத்தினர் அனைவரும் உத்தமதானபுரத்தில் வைதிக ஒழுக்கம் பிறழாமல் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு குடும்பத்தினரும் பெற்ற நிலங்கள் இன்றும் தனித்தனியே ஒரு பங்கு என்று வழங்கி வருகின்றன. நாற்பத்தெட்டு பங்கு நிலமும், நாற்பத்தெட்டு வீடுகளும், இருபத்து நாலு கிணறுகளும் கொண்ட இந்த உத்தமதானபுரம் இன்னும் தன் பெயரை இழந்து விடாமல் தஞ்சாவூர் ஜில்லாவில் பாபநாசம் தாலூகாவில் ஒரு கிராமமாக இருந்து வருகின்றது.
இவ்வூருக்குப் பழைய காலத்தில் பழையகரமென்று பெயர். அகரமென்பதற்கு அக்கிரகாரமென்று அர்த்தம். பக்கத்திலுள்ள அக்கிரகாரங்களெல்லாவற்றையும் விட இது பழமையானமையின் இப்பெயர் பெற்றது போலும். இப்பொழுது உள்ள குடியானத் தெரு முன்பு பிராமணர்கள் குடியிருந்த இடமாக இருந்ததென்றும், அரசர் தானம் செய்த காலத்தில் அங்கிருந்தவர்கள் புதிய அக்கிரகாரத்திற் குடியேறினரென்றும் சொல்வார்கள். குடியானத் தெருவின் மேலைக் கோடியில் ஒரு பெருமாள் விக்கிரகமும் தென் கிழக்கில் கண் கொடுத்த பிள்ளையாரென்று ஒரு விநாயகரது கோயிலும் இருக்கின்றன. அக்கிரகாரமாக அது முன்பு இருந்த பாபநாசம் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கிழக்கே முக்கால் மைல் தூரத்தில் உள்ளது.
தென்பதற்கு உரிய அடையாளங்கள் இவை. பாபநாசத்திலுள்ள ஸ்ரீநிவாசப் பெருமாள் தமக்குரிய பிரம்மோத்ஸவத்தில் இந்தப் பெருமாளிடமும் உத்தமதானபுரம் புதிய அக்கிரகாரத்திலுள்ள பெருமாள் கோயிலுக்கும் வந்து செல்கின்றார்.
உத்தமதானபுர அக்கிரகாரம் இரண்டு தெருக்களை உடையது. ஒன்று கீழ் மேலாகவும், மற்றொன்று தென் வடலாகவும் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் இரண்டு சிறகுகள் இருக்கின்றன. கீழ்மேல் தெருவின் மேல் கோடியில் பெருமாள் கோயிலும் தென்வடல் தெருவின் தென்கோடியின் தென்புறத்தில் சிவாலயமும் இருக்கின்றன. பெருமாளுக்கு லக்ஷ்மீ நாராயணப் பெருமாளென்பது திருநாமம். சிவாலயத்தின் ஸந்நிதியில் ஒரு குளம் உள்ளது. அதற்கு லக்ஷ்மீ தீர்த்தமென்று பெயர். சிவாலயத்தில் எழுந்தருளியுள்ள ஸ்வாமியின் திருநாமம் கைலாசநாத ரென்பது; ஆனந்தவல்லி யென்பது அம்பிகையின் திருநாமம். இக்கோயிலில் உள்ள விநாயகமூர்த்தியிடம் இவ்வூரினர் மிக்க பக்தியுடையவர்கள். இவ்வூரில் வசிப்பவர்களும், இவ்வூரிலிருந்து வெளியூர் சென்று வாழ்பவர்களும் தங்கள் வீடுகளில் ஏதேனும் சுபகாரியம் நடைபெற்றால் அதற்கு முன்பு அந்த மகா கணபதிக்கு நிறைபணி செய்துவிட்டுப் போவார்கள். காது குத்துக் கல்யாணமாக இருந்தாலும் அந்த விநாயக மூர்த்தியை அவர்கள் மறப்பதில்லை. இவ்விரண்டு கோயில்களிலும் நித்தியபூஜையும் உத்ஸவங்களும் கிரமமாக நடைபெற்று வருவதுண்டு.
இதுதான் எங்கள் ஊர். இப்போது உள்ள உத்தமதானபுரத்துக்கும் 'எங்கள் ஊர்' என்று பெருமையோடு நான் எண்ணும் உத்தமதானபுரத்துக்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. என் இளமைக் காலத்தில் இருந்த எங்கள் ஊர் தான் என் மனத்தில் இடங்கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில் உள்ள பல சௌகரியமான அமைப்புக்கள் அந்தக் காலத்தில் இல்லை; ரோடுகள் இல்லை; கடைகள் இல்லை; உத்தியோகஸ்தர்கள் இல்லை; ரெயிலின் சப்தம் இல்லை. ஆனாலும், அழகு இருந்தது; அமைதி இருந்தது; ஜனங்களிடத்தில் திருப்தி இருந்தது; பக்தி இருந்தது. அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி நிலவியது; வீடுகளில் லக்ஷ்மீகரம் விளங்கியது.
இவ்வளவு ரூபா யென்று கணக்கிட்டுச் சொல்லும் ஆஸ்தி அந்தக் காலத்து உத்தமதானபுர வாசிகளிடம் இல்லை; ஆயினும் நீரும் நிழலும் தானியங்களும் இருந்தன. அவர்களுடைய வாழ்க்கையில் வேகம் காணவில்லை; அதனால் ஒரு குறைவும் வந்து விடவில்லை. அவர்களுடைய உள்ளத்தில் சாந்தி இருந்தது.
இப்போதோ அந்தச் சாந்தியை எங்கேயோ போக்கிவிட்டு வெகு வேகமாக ஓடிக்கொண்டே இருக்கிறோம். நம்முடைய வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்தச் சாந்திக்கும் நமக்கும் இடையிலுள்ள தூரம் அதிகமாகின்றதே யொழியக் குறையவில்லை.
எங்கள் ஊரைச் சுற்றிப் பல வாய்க்கால்கள் உண்டு. குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து வரும் பெரிய வாய்க்கால் ஒன்று முக்கியமானது. பெரியவர்கள், விடியற் காலையில் எழுந்து குடமுருட்டி யாற்றுக்குப்போய் நீராடி வருவார்கள். அங்கே போக முடியாதவர்கள் வாய்க்காலிலாவது குளத்திலாவது ஸ்நானம் செய்வார்கள். அந்நதி ஊருக்கு வடக்கே ஒன்றரை மைல் தூரத்தில் இருக்கிறது. அதற்கு ஒற்றையடிப் பாதையிற் போகவேண்டும்; வயல்களின் வரப்புக்களில் ஏறி இறங்க வேண்டும். சூரியோதய காலத்தில், நீர்க் காவியேறிய வஸ்திரத்தை உடுத்து நெற்றி நிறைய விபூதி தரித்துக்கொண்டு வீடுதோறும் ஜபம் செய்துகொண்டிருக்கும் அந்தணர்களைப் பார்த்தால் நம்மை அறியாமலே அவர்களிடம் ஒரு விதமான பக்தி தோற்றும். காயத்திரி ஜபமும் வேறு ஜபங்களும் முடிந்த பிறகு அவர்கள் சூரிய நமஸ்காரம் செய்வார்கள்.
அதுவரையில் தவக்கோலத்தில் இருக்கும் அவர்கள் பிறகு வயற்காட்டை நோக்கிக் கிளம்பி விடுவார்கள். சிலர் மண்வெட்டியையும். சிலர் அதனோடு அரிவாளையும் எடுத்துக்கொண்டு புறப்படுவார்கள். தேக பலத்திற் சிறிதும் குறைவில்லாத அவ்வந்தணர்கள் நடுப் பகல் வரையில் வயற்காடுகளில் வேலை வாங்கித் தாமே வேலை செய்தும் பொழுது போக்குவார்கள். பிறகு வீட்டிற்கு வந்து பூஜைசெய்து உணவை உட்கொண்ட பின் இராமாயண, பாரத புராணக் கதைகளைப் படிப்பார்கள். தமிழ் ,ஸம்ஸ்கிருதம் என்ற இரண்டு பாஷைகளிலும் உள்ள நூல்களைப் படித்தும் படிக்கச் செய்தும் இன்புறுவார்கள்.
பிற்பகலில் மீண்டும் வயற்காட்டுக்குச் சென்று கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்து விட்டு ஆறு மணியளவுக்கு வீட்டுக்கு வருவார்கள். அப்பால் லக்ஷ்மீ தீர்த்தத்தில் ஸந்தியாவந்தனம் செய்துகொண்டு ஆலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம் செய்து தரிசனம் செய்வார்கள். பிறகு வீட்டுக்கு வந்து ஆகாரம் செய்து விட்டு ஒன்பது மணி வரையில் புராண சிரவணம் செய்வார்கள். வாரத்தில் சில நாட்கள் பஜனை செய்வதும் உண்டு.
காய்கறித் தோட்டங்கள் போட்டு அவற்றை நன்றாகப் பாதுகாத்து விருத்தி செய்வதிலும், பசுக்களையும் எருமைகளையும் வளர்த்துப் பாதுகாப்பதிலும் அவர்களுக்கு ஊக்கம் அதிகம்.
இளமை தொடங்கியே உழைக்கும் பழக்கம் அவர்களிடம் காணப்பட்டது. இவ்வாறு உழைப்பதிலும், நல்ல விஷயங்களைக் கேட்பதிலும் அவர்கள் பொழுது போக்கிக்கொண்டு இருந்ததனால் வேறு விதமான காரியங்களைக் கவனிக்க நேரமோ மனமோ இருப்பதில்லை.
எங்கள் ஊரில் அந்தணர்களுள் மாத்தியமர், வடமர், அஷ்ட ஸகஸ்ரத்தினர் என்னும் வகையினர் இருந்தார்கள். விஷ்ணுவாலய பூஜை செய்துவந்த நம்பியார் குடும்பம் ஒன்றும், சிவாலய பூஜகராகிய ஆதி சைவர் குடும்பம் ஒன்றும் உண்டு. அஷ்ட ஸ்கஸ்ரத்தினரில் ஏழெட்டுக் குடும்பத்தினர் வைதிகர்கள். அயலூரிலுள்ள அக்கிரகாரங்களுக்கு இவர்களே உபாத்தியாயர்கள்; அங்கங்கே சென்று வைதிக காரியங்களைச் செய்வித்து சுக ஜீவிகளாக வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் கவலையின்றியிருந்தமையால் தேக பலம் மிக்கவர்களாக விளங்கினார்கள். வியாதி இவர்கள் இருந்த திக்கிலே கூட வராது.
உத்தமதானபுரத்தில் அண்ணா ஜோஸ்யரென்ற ஓர் அந்தணர் இருந்தார். அவர் ஜோஸ்யத்தினாலும் வைதிக வாழ்க்கையினாலும் வேண்டியவற்றைப் பெற்றுக் கவலையின்றி ஜீவனம் செய்து வந்தார். நல்ல கட்டுள்ள தேகம் வாய்ந்த அவர் ஒரு நாள் எங்கோ ஒரு கிராமத்தில் பிராமணார்த்தம் (சிராத்த உணவு) சாப்பிட்டு விட்டு மார்பு நிறையச் சந்தனமும், வாய் நிறையத் தாம்பூலமும், குடுமியிற் பூவும் மணக்க உல்லாசமாக ஊருக்கு வந்து கொண்டிருந்தார். நடுவழியே பாபநாசத்தில் தஞ்சாவூர் கலெக்டர் 'முகாம்' செய்திருந்தார். அவ்வழியே வரும்போது கலெக்டரும் சிரஸ்தேதாரும் வெளியே நின்றுகொண்டிருந்தனர். கலெக்டர் வெள்ளைக்காரர்; சிரேஸ்தேதார் இந்தியர்.
கலெக்டர் துரையினுடைய பார்வை அண்ணா ஜோஸ்யர் மேல் விழுந்தது. அவருடைய அங்க அமைப்பையும் ரிஷபம் போன்ற நடையையும் முகத்தில் இருந்த ஒளியையும் கண்டபோது கலெக்டர் துரைக்கு மிக்க ஆச்சரியம் உண்டாயிற்று. திடீரென்று அவரை அழைக்கச் செய்து சிரஸ்தேதார் மூலமாக அவரைச் சில விஷயங்கள் கேட்கலானார்.
கலெக்டர் :- உமக்குப் படிக்கத் தெரியுமா?
ஜோஸ்யர் :- தெரியும்.
கலெக்டர் :- கணக்குப் பார்க்கத் தெரியுமா?
ஜோஸ்யர் :- அதுவும் தெரியும். நான் ஜோஸ்யத்தில் நல்ல பழக்கமுடையவன்; அதனால் கணக்கு நன்றாகப் போடுவேன். கலெக்டர் :-கிராமக் கணக்கு வேலை பார்ப்பீரா?
ஜோஸ்யர் :- கொடுத்தால் நன்றாகப் பார்ப்பேன்.
அவர் கம்பீரமாக விடையளிப்பதைக் கேட்ட துரைக்கு ஸந்தோஷம் உண்டாகி விட்டது. ஜோஸ்யர் நன்றாக அதிகாரம் செய்யக்கூடியவரென்றும், ஜனங்கள் அவருக்கு அடங்குமென்றும் அவர் நம்பினார். உக்கடை (உட்கிடை) யென்னும் வட்டத்தின் கர்ணம் தம் வேலையைச் சரியாகப் பாராமையால் கலெக்டர் அவரைத் தள்ளிவிட்டு வேறொருவரை நியமனம் செய்வதற்காக யோசித்துக் கொண்டிருந்த சமயம் அது. அந்த வேலையில் *அண்ணா ஜோஸ்யரை அவர் நியமித்து விட்டார். அக்காலத்தில் வேலைக்குப் போட்டி இராது. ஆளைப் பார்த்து, வாட்ட சாட்டமாக இருந்தால் உத்தியோகங்களைக் கொடுத்து விடுவது வழக்கம்.
கலெக்டருடைய கண்ணைக் கவர்ந்த தேகக் கட்டு அண்ணா ஜோஸ்யர் ஒருவருக்குத்தான் அமைந்திருந்ததென்று எண்ண வேண்டாம். ஒவ்வொருவரும் அவரைப் போலவே தேக வன்மை பொருந்தியவராக இருந்தனர். இரண்டு வேளைகளே உண்டாலும் அவர்கள் உண்ணும் உணவின் ஒவ்வோர் அணுவும் உடம்புக்குப் பலத்தைத் தந்தது.
உத்தமதானபுரத்தில் தச்சர், கொல்லர், தட்டார், வலைஞர், நாவிதர், வண்ணார் என்பவர்களுக்கும் மான்யங்களுண்டு. அவர்கள் அவற்றை அனுபவித்துக்கொண்டு தத்தம் வேலைகளை ஒழுங்காகப் பார்த்து வந்தார்கள். நாவிதர்களில் வைத்தியத்திற் சிறந்தவர்களும் இருந்தார்கள். அவர்கள் அன்புடன் நோயாளிகளுக்கு மூலிகைகளாலும் வேறு சரக்குகளாலும் செய்த மருந்துகளைக் கொடுத்து நோயைப் போக்குவார்கள். இதற்காக அவர்கள் வாங்கும் 'பீஸ்' நாலணாவே. ஒருவர் ரண சிகித்ஸையிலும் பழக்கமுடையவராக இருந்தார், அவரிடம் வைத்திய நூல்கள் பல இருந்தன. பல வியாதிகளின் சிகித்ஸைகள் புஸ்தகங்களில் இருந்தனவேயொழிய அந்த மருத்துவர் அனுபவத்தில் கண்டு உணரும்படி அவ்வியாதிகள் மனிதர்களைப் பீடிப்பதில்லை.
மூப்பச் சாதியார் முதலிய குடியானவர்களிற் பலர் அந்தணர்களுடைய நிலங்களைக் கவனித்துக் கொண்டு அவர்களுடைய மனைக் கட்டுகளில் குடியிருந்து வந்தனர். அவர்கள் அந்த நிலங்களைக் கண்ணுங் கருத்துமாகப் பாதுகாத்து வந்தார்கள். தம் யஜமானர் வீடுகளில் அவசியமான வேலைகளையும் குறைவின்றிச் செய்து வந்தனர். இவற்றிற்காக அவர்களுக்கு அந்தணர்கள் எல்லா வசதிகளையும் கொடுத்து ஒரு கவலையும் ஏற்படாமல் பார்த்து வந்தார்கள். அதனால் அவர்கள் அடைந்த திருப்தி பெரிதாக இருந்தது. அவர்கள் வஞ்சகமின்றிப் பாடுபட்டனர். நிலத்தின் சொந்தக்காரரைவிட அவர்களுக்கே பூமியில் சிரத்தை அதிகமாக இருந்தது. இருசாராரும் மனவொற்றுமையும் அன்பும் உடையவர்களாகி ஒருவருக்கொருவர் இன்றியமையாத நிலைமையில் வாழ்ந்து வந்தனர்.
-------
அவர் பரம்பரையினர் இப்போது உத்தமதானபுரத்தில் கிராம முனிசீபாக இருக்கிறார்.
-----
வேறு சில குடியானவர்கள் தம்முடைய சொந்த நிலத்தைச் சாகுபடி செய்துகொண்டு வாழ்ந்தார்கள். இவர்களால் வணங்கப் பெறும் கிராம தேவதைகளின் கோயில்கள் சில உண்டு. எல்லாக் கோயில்களிலும் ஊராருடைய ஒற்றுமையினால் உத்ஸவங்கள் நன்றாக நடைபெற்றன.
இவ்வூரைச் சூழ மிகவும் சமீபமாக நான்கு அக்கிரகாரங்கள் உண்டு. தென்கிழக்கு மூலையில் கோட்டைச்சேரி யென்பதும், தென்மேற்கில் மாளாபுரமென்பதும், அதற்கு மேற்கே கோபுராஜபுர மென்பதும், வடமேற்கே அன்னிகுடி யென்பதும் உள்ளன. கோட்டைச் சேரியில் வேத சாஸ்திரங்களிற் பரிச்சயமுள்ள வடகலை ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்து வந்தனர். மாளாபுரத்தில் வித்துவான்களாகிய ஸ்ரீவைஷ்ணவர்களும், அஷ்டஸகஸ்ரம் வடமரென்னும் இருவகை ஸ்மார்த்தர்களும் இருந்தனர். கோபுராஜபுரத்தில் தஞ்சாவூர் அரச குருவின் உறவினரான மகாராஷ்டிரப் பிராமணர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களைப் பண்டிதர்களென்று வழங்குவர். அவர்கள் செல்லவர்களாதலின் அன்னதானம் செய்து வந்தார்கள், அன்னிகுடியில் தெலுங்கப் பிராமணர்கள் வசித்தனர். அவர்களிற் பலர் சங்கீதத்திலும் பரத சாஸ்திரத்திலும் மந்திர சாஸ்திரத்திலும் மிகுந்த திறமையுடையவர்களாக விளங்கினார்கள். சங்கச் செய்யுட்களில் அன்னியென்னும் பெயருடைய ஓர் உபகாரி கூறப்பெறுகிறான். இவ்வூர் அவன் பெயரால் அமைக்கப் பெற்றதென்று கூறுவர்.
உத்தமதானபுரத்துக்குக் கிழக்கே நல்லூரென்ற தேவாரம் பெற்ற சிவஸ்தலம் இருக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகிய அமர்நீதி நாயனார் அவதரித்த ஸ்தலம் அது அங்கே கோயில் ஒரு கட்டு மலையின் மேல் இருக்கிறது. எங்கள் ஊரிலிருந்து பார்த்தால் அந்தக் கோயில் நன்றாகத் தெரியும். வடமேற்கில் திருப்பாலைத்துறை என்ற தேவாரம் பெற்ற ஸ்தலம் உள்ளது. அங்கே பேஷ்வாக்களென வழங்கும் மகாராஷ்டிரப் பிராமணச் செல்வர்கள் இருந்தார்கள்.
இந்தக் கிராமங்களினிடையே, சோம்பலை அறியாத ஜனங்களை உடையதாய், நவீன நாகரிகத்தின் வாசனை சிறிதளவும் வீசாமல், நிலமகள் தரும் வளத்தை யாவரும் பங்கிட்டு உண்ணுவதற்கும் அமைதியான வாழ்க்கையை நடத்துவதற்கும் இடமாக விளங்கியது எங்கள் ஊர்.
உத்தமதானபுரம் ஒரு சிறிய கிராமந்தான்; ஆனாலும் அந்த ஊர் எங்கள் ஊர்; என் இளமைக் காலத்தின் இனிய நினைவுகளையும், விரிந்த உலகத்தை அறியாத என் இளங் கண்களுக்குக் கவர்ச்சியை அளித்த தோற்றத்தையும் கொண்ட என்னுடைய ஊர். வேறு எந்த ஊரும் நகரமும் என் உள்ளத்தில் அதன் ஸ்தானத்தைப் பெறுவதென்பது சாத்தியமா?
- தொடரும்
விவாதங்கள் (25)
- Venkatagiri Venugopal
அனைத்து இனத்தாரும்ஆதரவுடனும் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்என்ற குறிப்பு கவனிக்கத் தக்கது.
0 likes - Bhuvaneswari Lakshmanan
mmm....ellarukume avanga sontha oour sirapputhan illaiya????
0 likes - Bhuvaneswari Lakshmanan
ippovum appadi irunthal evvalavo nalla irukum.....😔😔😔😔😔
0 likes - Bhuvaneswari Lakshmanan
ithellam padikum viyakka vaikirathu...anal unmaiyavum irukirathenu ninaikamal Iruka mudiyala
0 likes - Bhuvaneswari Lakshmanan
appadiya!!!!????intha unmai ithuvaraikum theriyathu....appadiyanal munnadi ellam Brahmins vayalil velai seytharkala????
0 likes - Bhuvaneswari Lakshmanan
💯💯💯💯
0 likes - Bhuvaneswari Lakshmanan
appove ippadiya???appadiyanal NAGAREEKAM endra peyaril athavathu kalam marukirathu endra peyaril ellavaigaiyana AMAITHIYUM ilanthu vittomnu ippo varaikum varuthapadathan seyyanum.
0 likes - Bhuvaneswari Lakshmanan
👍👍👍👍👌👌👌👌
0 likes - Bhuvaneswari Lakshmanan
arambame nalla iruku....romba naala padikanumnu ninaichukittu iruntha book....vangurathuku rupee illainu vangala. ippo padukiren...
0 likes - Rajagobalan Sundararajan
nice starting story
0 likes